பசுமைக் கட்டிடங்கள்

ஒரு யூ டியூப் காணொளிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“சிறிய வயதில் என் அம்மா என்னை ஒரு நூதனமான கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு யூத மதக் கோவில் – சினகாக். Synagogue. பறந்து விரிந்து சூரிய வெளிச்சம் நிறைய உள்ளே வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் கூரை வழியாக என்னால் மேலே பறக்கும் பறவைகளையும் பார்க்க முடிந்தது. அந்தக் கட்டிடத்தின் அழகும் இயற்கையை ஒட்டிக்  கட்டப்பட்ட அக்கறையும் என்னை மிகவும் கவர்ந்தது. முதன் முதலாக என் மனதில் கட்டிடங்கள் ஒரு பெட்டியைப் போன்று இருக்காமல் பல் வேறு டிசைன்களில் இருக்க முடியும் என்பதே அன்றுதான் எனக்குத் தெரிந்தது.  ஏன் கட்டிடங்கள் இதுபோல அழகுடனும், இயற்கை வளங்களைப் பாதுக்காக்கும் வகைய்ளும் கட்டப்படுவதில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்த வண்ணம் இருந்தது. நான் வளர்ந்த பின் இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டால், “அதெல்லாம் பல வருடங்களாக ஒரு முறையில் கட்டிடங்கள் கட்டி வருகிறோம். அப்படித்தான் செய்ய முடியும் என்று ஒரு பதிலில் மற்ற சிந்தனைகளை மூடி விடுகின்றனர். வளர வளர நானும் கட்டிடக்கலையில் மிகவும் ஆர்வம் கொண்டு இந்தத் துறையில் முழுதாக இறங்கினேன். இயற்கையின் பல அம்சங்களைக் கவனித்தேன். எனது கேள்விக்கு இயற்கையிலேயே பதில் இருந்தது. எப்படி கட்டிடங்களை வடிவமைக்கலாம் என்பதற்கு இயற்கையில் பலவித சாத்தியங்கள் இருந்தன. ” என்று தனது டெட்  டாக் (Ted Talk) ஒன்றில்  சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த  எரிக் கோரே ப்ரீட் (Eric Corey Freed) என்னும் இயற்கை கட்டிடக்கலை நிபுணர் பேசிக்கொண்டிருந்தார்.  நகைச்சுவையும் சுய விமரிசனமுமாக கட்டிடங்கள் ஏன் இயற்கையை ஒட்டி இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற அவரது விரிவான பேச்சு சுவாரசியமாக இருந்தது.அன்றைய தன பேச்சில், ப்ரீட் என் நினைவு அலைகளைத் தட்டி விட்டார்.
இயற்கை வளங்களை வீணாக்காமலும், அவற்றை மேலும் பாதுகாக்கும் வகையிலும் கட்டப்பட்ட கட்டிடங்கள் உலகமெங்கிலும் இன்று  கட்டப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி 2008 ல் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அது இங்கே.

Green-Building

வருடம் 2008

உலகெங்கிலும் தொய்மையான பழங்காலக் கட்டிடங்களை கவனித்தால்  அவை இயற்கையை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமாக இருக்கும். டில்லியின் மொகலாய காலத்து கட்டிடங்களில் உதாரணமாக, காற்றோட்டம், வெளிச்சம்  நன்கு வரும்படி அமைக்கப்ட்டிருக்கும். வெயில் காலத்தில் வெயில்  அதிகமாக தாக்கும் பிரதேசம் என்பதால் இயற்கையாகவே குளுமை கட்டிடங்களுக்குள் பரவும் வண்ணம் அரண்மனைகளில் உள்ளேயே ஒரு நீரோட்டம் இருக்கும். ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையிலும் இந்த நீரோட்ட அமைப்பு இருக்கும். இன்று அவற்றில் தண்ணீர் விடப்படுவதில்லை. ஆனாலும், உயர்ந்த  கூரையும் பரந்த அமைப்பும் பல வருடங்கள் கழித்து  இன்று நாம் உள்ளே  நடக்கும்போதும், வெளியில் இருக்கும் வெயில் உள்ளே தெரியாமல் ஒரு குளுமை பரவியிருக்கும்.
தென்னிந்தியாவில் செட்டிநாடு வீடுகளில் நடுவில்  பரந்த முற்றங்கள் இருப்பதால் தேவையான வெளிச்சமும் காற்றும் நாள் முழுவதும் கிடைக்கும். உயர்ந்த கூரை பழங்காலக் கட்டிடங்களில் சிறப்பு அம்சம். இந்த வீடுகளில்  வசித்த பழையத் தலைமுறையினர் எப்படி மழை நீர் சேமிக்கபட்டது என்பது பற்றி தங்கள் அனுபவங்களைக்  கூறக் கேட்டிருக்கிறேன்.  மழை பெய்யும்போது அந்த முற்றங்களில் சரிவாக இருக்கும் கூரையின் வழியாக தண்ணிர் கீழே விழுவதை சேமிப்பார்கள். அதுபோல், அப்படி வடியும் மழைத் தண்ணீர் குழாய்கள் மூலம் கிணற்றில் போய்ச் சேரும் வகையிலும் இருக்கும். இது நிலத்தடி நீர் வற்றிவிடாமல் பாதுகாக்கும்.
தென்னிந்திய கோவில்களிலும் இது போன்ற இயற்கையை ஒட்டிய கட்டிட அமைப்பு இருப்பதைப்  பார்க்கலாம். பூடானில் இன்றும் இப்படி இயற்கையை ஒட்டிய பழங்கால கட்டிட அமைப்புகளே புழக்கத்தில் உள்ளன. அந்தக் கட்டிடங்களில் இரும்புத் தூண்கள் அல்லது இரும்பு ஆணிகள் இல்லாமல் கட்டுவது அந்தப் பிரதேசத்தின் சிறப்பு அம்சம். மரம், கல், மற்றும் மண் இவையே பிரதான மூலப் பொருட்கள். கிராமப்புறங்களில் மூங்கில் வீடுகள் அதிகம். சரிந்த கூரையும் பாரம்பரிய ஓவியங்களும் கட்டிடங்களில் இருக்க வேண்டும் என்று அரசு சட்டமே இருக்கிறது.
ஜப்பானில் டோமா ப்ளோர் (Doma Floor) மற்றும் காயா ரூப் (Kaya Roof) போன்ற கட்டிட அமைப்புகள் கட்டிடத்தின் உள்ளே குளுமையாக இருக்கும்படி வகை செய்யும். டோமா ப்ளோர் என்னும் முறையில் கட்டிடத்தின் முன் பக்கம் வெற்றிடம் நிறைய இருக்கும். அது வெறும் கட்டாந்தரையாகவே இருக்கும். அதன் மேல் எந்தப் பூச்சும் அல்லது செயற்கையான எந்தக் கட்டமைப்பும் இல்லாமல் காலியாக இருக்கும். இந்த அமைப்பைப்பற்றி நிக்கேன் செக்கி என்கிற ஜப்பானிய கட்டிடக்கலை நிறுவனத்தின் உதவி தலைவர்  ஃபுமியோ நோஹாரா, விளக்குகிறார். “பொதுவாக பூமி உஷ்ணத்தை எடுத்துக்கொண்டு ஈரத்தன்மையை வெளிவிடும். காற்றடிக்கும்போது பூமிக்கடியில் இருக்கும் நீர் மேலே வந்து காற்றாகும்போது அந்தக் காற்று குளிர்ச்சியாக இருக்கும். உள்ளே குளிர்ந்த காற்று வீசும். காயா ரூப் என்கிற முறையில் இயற்கை சருகுகளில் வேயப்பட்ட கூரையில் மழைத் தண்ணீர் ஊறி, வடிந்துவிடாமல் நெடுநேரம் தங்கி இருப்பதால் குளிர்ச்சி உள்ளேயும் பரவும். அதுபோல் குளிர்காலங்களிலும் சூட்டை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இந்த வேயப்பட்ட சருகுகளுக்கு இருப்பதால், வெயில் சூட்டை உள்வாங்கி அறைக்குள் அனுப்பும்.”
இப்படி பலவிதங்களிலும் உலகெங்கும் இயற்கையை ஒட்டிய பலவித கட்டிட அமைப்புகள் பின்பற்றப்பட்டன. ஆனால் நாளடைவில் மனிதனின் பழக்கங்களும், வாழ்முறைகளும் மாறிப்போனதில் இது போன்ற பாரம்பரிய முறைகள் மறைந்து போயின. காலப்போக்கில் சுற்றுச்சூழல் அக்கறைகள் முழுவதும் காணாமல் போய், நகரங்கள் வெறும் கான்க்ரீட் காடுகளாக மாறிவிட்டன. இயற்கை சுழற்சி முறைகள் பெரிதும் அடிபட்டு, இன்று தண்ணீர் பற்றாக்குறை, புவி வெப்பம், என்று பல்வித சுற்றுச் சூழல் கேடுகள் நம்மை பயமுறுத்துகின்றன.
ஆனால் நல்ல வேளையாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பலரிடம் அதிகரித்து இன்று பலர் இயற்கையோடு இணைந்து செயல்பட  முனைகின்றனர். பாதை மாறி சென்று கொண்டிருந்த பயணத்தை சரியான வழியில் மாற்றிக்கொள்ளும் முயற்சிகள் இன்று ஆங்காங்கே நடைபெறுவது ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றம்.
பசுமைக் கட்டிடங்கள் என்று அழைக்கப்படும் இந்த வகைக் கட்டிட அமைப்புகள் உலகெங்கிலும் இன்று கட்டிடக்கலையில் ஒரு புரட்சியை கொண்டுவந்துள்ளன. பல ஆப்பிரிக்க பள்ளிக்கூடங்களில் இன்று இயற்கை சக்திகளை புதுப்பித்து உபயோகிக்கும் முயற்சி இருக்கிறது. மும்பையில் 882000 சதுர அடி கொண்ட 74 மாடிக் கட்டிடம் ஒன்று இந்தியா டவர் என்ற பெயரில் எழும்பிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க கட்டிடக்கலை நிறுவனமான FxFowle Architects, என்ற நிறுவனம் அமைக்கும் இந்தக் கட்டிடம்  முழுக்க முழுக்க சுற்றச் சூழல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் கொலோரோடோ மாநிலத்தில் உள்ள கட்டிடக்கலைக் கல்லூரியில், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் (Children, Youth, Environment) என்று ஒரு பிரிவு இருக்கிறது. இந்தப் பிரிவு மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியில், 14 நாடுகளிலிருந்து மாற்று சக்திகள் உபயோகிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்  23 உதாரண முயற்சிகள் ஆராயப்பட்டன. இதில் ஒரு சுவாரசியமான உதாரணம் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் ஒரு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் குடை ராட்டினம் விளையாடுகின்றனர். அந்த சுழற்சியில் உற்பத்தியாகும் சக்தியைக் கொண்டு மேலே இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் நிரம்புகிறது. தண்ணீர் ஏற்றும் இயந்திரம் ஏதும் கிடையாது. குழந்தைகள் விளையாடும்போதே, அந்தத் தண்ணீர் தொட்டியில் இருக்கும் சுற்றுச்சூழல் வாசகங்களும் அவர்கள் மனதில் பதிந்து விடுகின்றன. என்ன மாதிரியான ஒரு  புதுமையான முயற்சி!
அந்த இந்தியா டவர் 74 மாடிக்கட்டிடத்திலும் பலவகை சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சூரிய சக்தி, மழை நீர் சேமிப்பு, இயற்கையாக சூரிய வெளிச்சம் உள்ளே வரும்படியான அமைப்புகள் என்று பலவித அம்சங்கள் மேற்கொள்ளப்படுகின்றன்.
இது கட்டி முடிந்தவுடன் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பசுமை கட்டிடமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பசுமைக் கட்டிடம் என்றால் என்ன? எதை வைத்து ஒருக் கட்டிடத்திற்கு  இந்தப் பெயர் அளிக்கப்படுகிறது? டில்லியில் உள்ள மார்போஜெனிசிஸ் ஆர்கிடெக்சர் எனும் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மணித் ரஸ்தகி  கூறுகிறார்: “வடிவமைப்பு மற்றும் செயல்பாடு என்று அனைத்திலும் ஒரு கட்டிடம் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் முறையில் அமைந்திருக்க வேண்டும். குறைந்த அளவு சக்தி உபயோகிக்க வேண்டும். கட்டிடத்தின் அமைப்பினால் அல்லது செயல்பாட்டினால் வெளியே சுற்றுச்சூழல் நிலைக்கு எந்தவித ஆபத்தும் வரக்கூடாது.” சுதிர் ஜாம்பேகர் என்கிற மற்றொரு கட்டிடக் கலை நிறுவனத்தின் அதிகாரியைப் பொறுத்தவரையில் பசுமை கட்டிடம் என்பது உள்ளும் புறமும் சூழ்னிலையில் ஒரு பாசிடிவ் விளைவை ஏற்படுத்தும் அமைப்பு பசுமைக் கட்டிடம். “இப்போதெல்லாம் நாம் இயற்கையிடமிருந்து தேவைப்பட்டதை எடுத்துக்கொண்டு, மற்ற குப்பைகளை இயற்கையின் மீது திணிக்கிறோம். பசுமைக் கட்டிட முயற்சிகள் மூலமாக இயற்கையின் சக்திகளை வீணாக்காமலும், திரும்பவும் உபயோகிக்கும் விதமாகவும் பயன் படுத்திக்கொண்டு அதேசமயம் இயற்கை அல்லது சுற்றுச்  சூழல் மீது பாதகமான பாதிப்புகள் இல்லாமலும் கவனமாக இருக்கிறோம்.” என்று இவர் விளக்குகிறார்.
ஃபுமியோ நோஹாரா மூன்று முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறார்.
(1) இயற்கை சக்தியை அதிகம் வீணடிக்காமல் குறைவாக உபயோகிப்பது,
(2), நீண்ட காலம்  நிலையாக இருப்பது,
(3) இயற்கையாக கிடைக்கும் பொருட்களை உபயோகிப்பது போன்ற அமசங்கள் பசுமைக் கட்டிடத்தை அடையாளம் காட்டும்.
பசுமைக் கட்டிடங்கள் அதிக அளவில் வெற்றிகரமாக இருப்பதற்கு அரசு ஒத்துழைப்பும், அரசுக் கொள்கைகள் மற்றும் நகரின் இதரக் கட்டமைப்புகளும் இதுபோல் சுற்றுச்சூழல் அக்கறையுடன் இருப்பதும்  மிக அவசியம்.
ஆனால் இது போல் பசுமைக்கட்டிடங்கள் – முழுக்க இயற்கையை ஒட்டி தொடர்ந்து அமைப்பது சாத்தியம்தானா?
FxFowle நிறுவனத்தைச் நேர்ந்த ரான் ஜேட்டூனியன் சொல்கிறார். “நெடுநாள் பயனளிப்பு பற்றி நாம் யோசிக்க வேண்டும். நாம்  80 சதவிகித நேரத்த்தை பெரும்பாலும் கட்டிடங்களின் உள்ளே செலவழிப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இது நமது உடல் நிலையை பாதிக்கும். மாறாக, கட்டிடங்களில் இதுபோல இயற்கையின் வசதிகள் கட்டிடங்கள் உள்ளே கிடைக்கும்படி பார்த்துகொண்டால் உடல் நலம் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம்.” என்கிறார் இவர்.
நியூயார்க்கில் நியூயார்க் டைம்ஸ் தினசரியின் கட்டிடம் சுற்றுச்சூழல் அக்கறையுள்ள பசுமைக் கட்டிடத்திற்கு நல்ல உதாரணம். FxFowle கட்டிய இந்தக்கட்டிடத்த்தில் இருக்கும் இரண்டு லிப்ட்டுகளும் ஒன்றுக்கொன்று அருகில் இல்லாமல் தூரத்தில் உள்ளன. இரண்டுக்கும் இடையே நிறைய இடைவெளி இருப்பதால் கால் வீசிபோட்டு நடக்க வசதியாக இருக்கும்; அடைசலாக இருக்கும் நிலை இருக்காது. தவிர, இந்த 52 மாடிக்கட்டிடத்தில் நட்ட நடுவில் மிகப்பெரிய முற்றமும் தோட்டமும் உள்ளது. கட்டிடத்தில் நடுவே இருப்பதால் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் குளிர்ந்த தோட்டத்தின் பார்வை கிடைக்கும். இயற்கை வெளிச்ச்சம் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து தானாகவே அதிகமாகவோ, குறைவாகவோ கட்டிடத்தில் உள்ள அனைத்து பல்புகளும் வெளிச்சம் தரும்படி அமைக்கப்பட்டிருக்கும். நிறைய  கண்ணாடிகள் இருப்பதால் வெளிச்சமும் நிறைய கிடைக்கும்.
தரைக்கு அடியே ஏசியின் குளிர்ந்த காற்றை செலுத்துவது இன்னொரு நல்ல முறை. “ஏசியின், காற்று மேலிருந்து வரும்போது அந்தக் காற்று சில சமயம் மிக அதிகமாக குளிர்ந்த காற்றை செலுத்தும். தரையிலிருந்து வரும்படி அமைத்தால் குளிர் காற்று சீராக மேலெழும்பும். தவிர சராசரி மனிதனின் உயரம் 6 அல்லது 7 அடி. மேலெழும்பும் குளிர் காற்றின் அதிக பட்ச உபயோகம் கிடைக்கும்.” என்று ரான் விளக்குகிறார்.
பசுமைக் கட்டிடங்கள் நிறைய எழும்ப ஊக்கமளிக்கும் வகையில் LEED எனப்படும் ( Leadership in Energy and Environmental Design ) விருது இந்திய Indian Green Building Council அளிக்கிறது. இந்தியாவில் பல மாநில அரசுகளும் இப்படிப்பட்ட பசுமைக் கட்டிடங்களுக்கு நிறைய ஊக்கமளிக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மழை நீர் சேமிப்பு கட்டிடங்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் சுற்றுச் சூழல் அழிவுகள் வருத்தமளித்தாலும் பசுமைக் கட்டிடங்கள் போன்ற முயற்சிகள் எதிர்காலம் பற்றி நம்பிக்கையளிக்கிறது.

One Reply to “பசுமைக் கட்டிடங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.