எழுத்தும் மருத்துவமும்

being-a-doctor-Patient_Writer

மருத்துவம் பார்த்தலின் உச்ச கணங்களும் எழுத்துப் பணியின் உச்ச கணங்களும் எனக்கு ஒன்றே போலிருக்கின்றன. அவற்றின் கடின கணங்களும் நகைச்சுவை கணங்களும்கூட ஒன்றே போல்தான் இருக்கின்றன, பலமுறை அத்தகைய கணங்கள் ஒரே சமயத்தில் நிகழ்வதும் உண்டு. மருத்துவம் தனக்கென ஓர் அதிகாரம் உண்டென எத்தகைய புறக்குறிகளால் கோரிக்கொண்டாலும்- வெள்ளை அங்கிகள், “உள்ளே வராதே” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் கொண்ட இடைவழிகள், வலுவற்ற பல்வகை அதிசயங்கள் குறித்த உறுதிமொழிகள்-, இன்னும் தன்னிலை இழக்கவில்லையெனில், மருத்துவர்கள் பலகாலும் திக்குத் தெரியாதிருப்பவர்கள்தான், அல்லது, தொலைந்துபோனத்தனம் கொண்டவர்கள். எழுத்தாளர்கள் குறித்தும் இப்படிச் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன். மர்மம், நிலையாமை, மரணம், கடவுள்- இவற்றின் கதவடியில் ஒவ்வொரு நாளும் நடமாடிக் கொண்டிருப்பவர்கள்\, சிறிதேனும் குழப்பமடையாமல் இருப்பது எப்படி? அதனால்தான் பல மருத்துவர்களும், நன்மையாயினும் சரி கேடாயினும் சரி, மௌனத்தைச் சொற்களால் நிறைக்கிறார்கள் என்பதாக இருக்கலாம். சில சமயம், துயரரனின் கதையைக் கொண்டு செல்ல சொற்கள் உதவுகின்றன. சில சமயம், அவை மௌனத்தை நிரப்பி நின்று விடுகின்றன, மௌனம் தேவைப்படும்போதும். உண்மையில் இது ஆய்வே செய்யப்பட்டுள்ளது. ஒரு துயரரின் அறையில் மருத்துவர்கள் எத்தனை நேரம் அமைதியாய் இருக்க முடியும், உரையாடலைக் கைப்பற்றி தொடர்ந்து சொற்பொழிவாற்றுமுன் அவர்களுடைய பொறுமையின் எல்லை என்ன என்று ஆய்வாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். பதில்? கிட்டத்தட்ட பதினாறு நொடிகள்.

எழுத்தாளர்களும் இது போன்றவர்கள்தான். அருமையான நாவலாசிரியராய் உள்ள ஒரு நண்பர் சமீபத்தில் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார்- தன் மறைவுக்குப்பின் தான் எழுதியதைக் கையாளும் பொறுப்பு ஏற்றுக்கொள்பவருக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது என்றார் அவர்- தன் நாவல்களின் பல்வேறு வரைவு வடிவங்களால் அல்ல, நாட்குறிப்புகளில் ஒரு கோடி சொற்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு கோடி சொற்கள் எத்தனை எத்தனை மௌனங்களை நிறைக்கின்றன.

ஆனால் எழுத்துக்கும் மருத்துவத்துக்கும் தாக்கம் வேண்டுமெனில், அவற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள சொற்களின் விரிவுக்கு எல்லை வரைந்தாக வேண்டும். உலகில் ஏதோ ஒரு பணியில் பயன்படும் வகையில் அவை, கையாளத்தக்க வடிவம் கொண்டதாய்ச் செதுக்கப்பட வேண்டும். இந்த ஒரு வழியால்தான் சொற்கள் நாவலாய் மாறுகின்றன, நோய்மையுற்றவனுக்காகவும் இறந்து கொண்டிருப்பவனுக்காகவும் ஒரு மருத்துவர் முடிவெடுப்பதற்கான வழிகாட்டலை அளிக்கக்கூடிய கதையாய் சொற்கள மாறுவது இந்த ஒரு வழியால்தான். சொற்கள் இன்னும் பல சொற்களாக இல்லாமல் ஒரு கதையாகும் வகையில் அவற்றை நிறுத்துவது எப்படி என்ற புரிதல்தான் இந்த இரு துறைகளிலும் வெற்றியளிக்கிறது.

என் தாத்தா, எட்டாவது கிரேடு வரை படித்தவர், மிகச்சிறந்த கதைசொல்லியாக இருந்தார். ஆயிரக்கணக்கான கதைகளைச் சொல்லியும் கேட்டும் அவர் எது நல்ல கதை என்பதைக் கண்டறிந்திருந்தார். இயல்பு வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை கதை கேட்டுக்கொண்டிருப்பவனுக்கு உணர்த்தும் வகையில் சில நுண்விவரங்கள் சேர்த்து, “முன்னொரு காலத்தில்…” என்றுதான் சிறந்த ஒவ்வொரு கதையும், துவங்குகிறது என்பதை அறிந்திருந்தார் அவர். அந்தக் கதை சிறிதாவது சுவையானதாக இருந்ததெனில், சிறிது நேரத்திலேயே ஏதாவது ஒன்று நிகழ்ந்து இயல்பு வாழ்க்கை சீர்கெட வேண்டும். பெரிய, கெட்ட ஒரு ஓநாய் வந்தாக வேண்டும், அல்லது ஊரிலுள்ள அனைவரும் வார இறுதி நாட்களில் மீன்பிடிக்கும் நதிக்குள் பேராசைக்கார நிறுவனம் ஒன்று விஷங்களைக் கொட்டியாக வேண்டும். எது எப்படியானாலும் ஒரு போதுமான சிக்கலை உருவாக்கி அடுத்தடுத்த பிரச்சினைகளுகுக் காரணமாக வேண்டும். நிலைமை சீர்கெட்டது என்பதும் அதைத் தொடரும் பிரச்சினைகளும் ஏன் முக்கியமாக இருக்கின்றன என்பதை நீ புரிந்து கொள்ள கதையின் முதல் பகுதி உதவுகிறது. எது தொலைந்து போனது என்பது உனக்குத் தெரிந்தாக வெண்டும், இல்லையென்றால் என்ன நம்பிக்கையை வளர்த்துக் கொண்டது என்பது உனக்குத் தெரியாது.

ஒரு துயரரின் அறைக்குள் நான் நுழையும்போது, என் வேலையை ஒழுங்காகச் செய்கிறேன் என்றால், அவர்களின் “முன்னொரு காலத்தில்” என்ற கதையைக் கேட்கக் காத்திருக்கிறேன். அவர்கள் யார் என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். ஏனென்றால், நான்தான் அவர்கள் வாழ்வைச் சீர்குலைக்கப் போகிறவன். அதிலும் நான் புற்றுநோய் மருத்துவர் என்பதால் என்னால் ஏற்படவிருக்கிற சீர்குலைவு கொஞ்சம் கடுமையாகவே இருக்கப் போகிறது. “உன் மருத்துவர் பார்த்த அந்த வித்தியாசமாய்த் தெரியும் செல்கள்.. ஸாரி, .அவை லுகீமியா செல்கள் ” என்று நான் சொல்வதற்கு முன் ஒரு வாழ்விருக்கிறது, அதைச் சொன்னபின் ஒரு வாழ்விருக்கிறது- அவர்கள் விரும்பியிருக்காத பல சவால்கள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன- எப்படியாவது மீண்டும் வீடு திரும்ப வேண்டுமென்றால் அவற்றை அவர்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்றாக வேண்டும். முடிவில் துயரரின் நோய் நீங்குகிறது, அல்லது நீங்குவதில்லை. எது எப்படியாயினும் கதை முடிவதில்லை. மாற்றம் பெற்றுவிட்ட உலகை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கதையின் முடிவு வெளிப்படுத்தியாக வேண்டும்.

இந்த இறுதிப் பகுதியில் அத்தனை வெளிப்படுகிறது- இப்போது துயரர்கள் (பாத்திரங்களும்) முன்னர் நிகழ்ந்த அனைத்தின் பின்விளைவுகளையும் வாழ்ந்து தீர்க்க நேர்கிறது. பலபோதும் இந்தக் கதைகள் யாரும் எதிர்பார்த்திருக்காத அளவு குறுகியதாய் இருக்கப் போகிறது, எனவே பிணை வைக்கப்பட்டதன் விலை மிக அதிகம். இது போன்ற விலைமிகுந்த கதைகள் உருவாவதன் நுட்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் மருத்துவன் கதைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதைக் கற்றுக் கொள்கிறான். முதலில் ஒரு துவக்கம், பின்னர் ஒரு இடைப்பகுதியும் முடிவும் ஒவ்வொரு உயிருக்கும் உண்டு. கதைகளைப் போலவே சில உயிர்கள் நீண்டு தொடர்கின்றன, சில மத்திமகாலம் நீடிக்கின்றன, சில மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வருகின்றன. எவ்வளவு நீண்டதாய் இருக்கிறது அல்லது குறுகியதாய் இருக்கிறது என்பது எதுவும் பொருட்டல்ல, அதற்கொரு பொருளுண்டு. என் துயரர்கள் தங்கள் முடிகளை இழக்கின்றனர், வாந்தி எடுக்கின்றனர், அவர்களுடைய கைகால்கள் வெட்டப்படுகின்றன, அவர்கள் மலடாகின்றனர். பலபோது அவர்கள் குணமடைகின்றனர். ஆனால் ஒவ்வொரு துயரரின் கதையும் முழுமையான ஒரு கதை, துன்பத்தின் மையத்தில் பிரமிக்க வைக்கும் அழகு உண்டென்பதன் சாட்சியாய் நான் இருந்திருக்கிறேன்..

என் நெருங்கிய நண்பரும் அருமையான எழுத்தாளருமான சாம் வெல்ஸ், “மகிழ்ச்சியளிக்கும் கதையாகக முடியாது என்றால், அழகிய கதையாக்கு” என்று எழுதினார். எழுத்தாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அது நல்ல அறிவுரை. மருத்துவர்களும் எழுத்தாளர்களும் முக்கியமான விஷயங்களைப் பெயரிட்டு அழைக்கின்றனர், துயரரின் அனுபவத்தைக் கட்டமைப்பதால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் சொற்கள் முக்கியமானவை. நான் ஒரு நாவலிலோ குடும்ப உரையாடலிலோ “பிரச்சினையை” பெயரிட்டு அழைக்கும்போது, முன்னர் இல்லாத இருப்பையும் முக்கியத்துவத்தையும் அதற்கு அளிக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையேயான உரையாடல்களில் பேச்சுப் பொருளாக இருக்கும் வகையில் அதன் உருவத்தைச் சித்தரிக்கிறேன். “என்ன ஆயிற்று என்பது டாக்டருக்குப் புரிந்து விட்டது…. இதுதான் விஷயம்”. எந்தக் கதையையும் போலவே வில்லனின் பெயரைச் சொன்னதும் அதன்பின் வரும் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

சொற்கள் செயலின் காரணமாகின்றன. அவை ஒரு வாழ்க்கையை மேம்படுத்தலாம், அல்லது சீரழிக்கலாம். அவை மனித இதயத்தில் வீரத்தை உணர்த்தலாம், அல்லது, சோகம், அல்லது ஆனந்தம், அல்லது நம்பிக்கை அளிக்கலாம். அவை ஒரு மனிதனைப் பயனற்றவனாய் உணரச் செய்யலாம், அவை ஒருவனின் மீட்சியாகலாம். மருத்துவ உலகம் அதன் பிரகாசிக்கும் இயந்திரங்களாலும் கத்திகளாலும் உட்செலுத்தும் திரவங்களின் இலத்தினிய பெயர்களாலும் கட்டப்பட்டதல்ல. அவை மருத்துவ அங்கங்கள், ஆனால் அதன் உலகம் கதைகளால் ஆனது- அது ஒரு மனிதனை அவனது சூழ்நிலத்தில் இருத்துகிறது, அவனது கடந்த காலத்தின் கணக்கு தீர்க்கிறது, எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துகிறது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்த முன்வருகிறது.

நீ அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவ அறையில் இருப்பதாக நினைத்துக் கொள். ஒருவரை ஸ்ட்ரெட்சரில் கொண்டு வருகிறார்கள். அவன் பின்னால் அழுதுகொண்டே ஒரு பெண் வருகிறாள்- அவள் தன் கையில் மஞ்சள் ரோஜா ஒன்றும் சொம்ப்ரெரோ என்று சொல்லப்படும் தொப்பி ஒன்றும் வைத்திருக்கிறார்.

என்ன நடந்தாலும் சரி, நீ எப்படியும் அந்தப் பெண் தன் கையில் மஞ்சள் ரோஜாவும் சொம்ப்ரெரோவும் வைத்திருக்கிறார் என்ற விஷயத்தில் ஆர்வம் காட்டியாகவே வேண்டும். நீ மெய்யாகவே அவசர சிகிச்சைப் பிரிவில் அவனது உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறாயோ அல்லது அவசர சிகிச்சைப் பிரிவு பற்றி நாவல் எழுதிக் கொண்டிருக்கிறாயோ எதுவாயினும் இது உண்மையாகவே இருக்கும். மருத்துவனாய் இருப்பதும் எழுத்தாளனாய் இருப்பதும் ஏன் ஒன்று போலிருக்கிறது என்பதற்கு நான் சொல்லும் சரியான பதில் இதுவாகவே இருக்க முடியும். யார் இவர்கள்? ஏன் மஞ்சள் ரோஜாவும் சொம்ப்ரெரோவும்?

“எப்படிப்பட்ட துயரர் நோய்மைப்பட்டிருக்கிறார் என்பதை அறிவது துயரின் நோய் என்ன என்று அறிவதைக்காட்டிலும் முக்கியமானது,” என்றார் வில்லியம் ஆஸ்லர். சிறந்த மருத்துவர்களாக வேண்டும் என்று விரும்பினால் உங்கள் துயரர்களின் வாழ்வு குறித்து அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள் என்று என்னிடம் துவக்க நிலை மருத்துவர்களிடம் சொல்கிறேன். நான் என் அறையின் தனிமையில் எழுதிக் கொண்டிருக்கும்போது இதைத்தான் செய்கிறேன். எழுத்துக்கும் மருத்துவத்துக்கும் உள்ள உறவு பற்றிய கேள்விகள் எனக்கு இப்போதும் உண்டு. உதாரணத்துக்கு, நான் மருத்துவராய் இருக்க என் எழுத்து உதவுவது எவ்வாறு என்பது இன்னும் விளங்கவில்லை, அல்லது, எழுத்தாளராய் இருக்க நான் மருத்துவராய் இருப்பது உதவி செய்கிறது, அது எப்படி என்று புரியவில்லை. என் துயரர்களுக்கு, கதைசொல்லல் என்பது நிஜமாகவே வாழ்வா சாவா என்ற பிரச்சினைதான். அவர்களது கதைகள் சரியாகச் சொல்லப்படாவிட்டால் அத்தனை விதமான பயங்கரங்களும் நடக்கக்கூடும். ஆனால் ஏதோ ஒரு காரணம், நான் என் அறையில் கதை எழுதிக் கொண்டிருப்பதும் எனக்கு வாழ்வா சாவா என்ற கேள்வியாய் இருக்கிறது. ஏன் இது அப்படி என்பதை என்னால் சரியாய்ச் சொல்ல முடியாவிட்டாலும், இதைப் பொருட்படுத்தாதிருக்க நான் ஒரு முட்டாளாய் இருக்க வேண்டும்.

மூலம்: The Life of the Doctor as Writer :: A Pediatric Oncologist Writes a Novel – By Ray Barfield

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.