மன அழுத்தம்

சென்ற வாரம்  நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. வேலை செய்யும் இடங்களில் நிலவும் பகை, எரிச்சல்கடுமை, மரியாதையின்மை, மன அழுத்தம் என்று பலவித எதிர்மறை மனோபாவங்கள் பற்றியும் அவை நம் உடல் நிலையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவரின் அப்பா ஒரு ஆஸ்பத்திரியில் மூக்கிலும் வாயிலும் டியூப்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து அவர் எழுதுகிறார். “எப்படி கம்பீரமாக, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த என் அப்பா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்? நிச்சயமாக அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று எனக்குப் புரிகிறது. இப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில் நிலவும் போட்டியும், கடுமையும், பிறர் உணர்வுகளை மதிக்காத மனோபாவமும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உடல் நிலையை மிகவும் பாதிக்கின்றனஎன் அப்பா ஒரு உதாரணம்….” என்ற ரீதியில் செல்கிறது அந்தக் கட்டுரை

stress-buster


ஜீப்ராக்களுக்கு  ஏன் அல்சர் போன்ற வியாதிகள் வருவதில்லை – Why Zebras don’t get Ulcers” என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் எம் சபோல்ஸ்கி (Robert M Sapolsky) என்ற ஸ்டான்போர்ட் யுனிவர்சிடி பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சியை இந்தக் கட்டுரையாளர் மேற்கோள் காட்டுகிறார். மன அழுத்தத்தினால் இதயக் கோளாறுகள், டயபடீஸ்நரம்புத்தளர்ச்சி, கான்சர் போன்ற உடல் உபாதைகள் வருகின்றன என்று இந்த ஆராய்ச்சி சொல்கிறது.  

அலுவலகத்தில் ஏற்படும் எரிச்சல் அல்லது தகாத வார்த்தைகள் போன்றவை நம் காதுகளில் விழுந்தவுடனேயே அவை மூளையில் உள்ள  செல்களை பாதிக்கின்றன. க்ளுகொகார்டிகாய்ட்ஸ் (Glococorticoids ) என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து  உபாதைகளை விளைவிக்கிறது என்றும் இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

இந்தக் கட்டுரையைப் படித்தபோது 1990 ல் இதே போன்று மன அழுத்தம் ஏற்படுத்தும் உடல் உபாதைகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. அன்று எழுதியதிலிருந்து சமூகம் மாறிப்போய்விடவில்லை. 25 வருடங்கள் கழித்தும்  இன்றைய சூழ்நிலைக்கும் இந்தக் கட்டுரை மிகப் பொருந்தும்

1990 – டில்லி

அந்தக் குடும்பத்தில் ஒரு காலை வேளை  அது. 7.30 மணிக்கு தெரு முனையில் ஸ்கூல்  பஸ்ஸில் குழந்தைகளை ஏற்றிவிட்டு, அவசரம் அவசரமாக திரும்பக் கிச்சனுக்குள் ஓடிவந்து பாக்கி சமையலை முடித்து தனக்கும் கணவனுக்கும் இரண்டு டிபன் பாக்ஸ்களை ரெடி செய்துவிட்டு என்று தொடர்ந்து அந்தப் பெண் ஓடி, பின்னர் ஒரு வழியாக ஆபீசில் தன் இடத்தில் வந்தமர்ந்தபோது அவளுக்கு மூச்சு  முட்டுவதுபோல் இருந்தது. பைக்குள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அன்றைய வேலைகளைப் பார்க்க ஆராம்பித்தாள் அவள்.

வீட்டிலும் வெளியிலும் ஓய்வில்லாது உழைக்கும் அந்தப் பெண்ணுக்கு  ஏகப்பட்ட மன அழுத்தம்இன்னும் சில நாட்களில் அவருக்கு இதய நோய்கள், அல்லது நரம்புத் தளர்ச்சி என்று வந்தால் அதன் காரணம் இந்த மன அழுத்தமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஆண்களும் பெண்களுமாக இவரைப்போல் இன்று பலர் மன அழுத்தத்தில் தவிக்கிறார்கள். இதற்கு பெரும்பாலும் வேலை செய்யும் இடங்களும் வேலைக்கான பளுவும்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.  பலர் வெளியே சொல்வதுமில்லை.  

பலர் நினைப்பதுபோல் மன அழுத்தம் என்பது ஒரு மன நிலையோ அல்லது ஒரு உணர்ச்சியோ அல்ல. தாங்கள் எதிர்நோக்கும் சவால்களையும் சந்திக்கும் சூழ்நிலைகளையும் ஒருவர் மனதால் அணுகும் முறையும்எதிர்கொள்ளும் முறையும்தான் இப்படி மன அழுத்தமாக வெளிப்படுகிறது என்று மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர்

மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன.” என்று குறிப்பிடுகிறார் பி.பி. பக்ஷி என்ற மன நல மருத்துவர். ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இந்தக் காரணங்கள் வேறுபடும். “ஒவ்வொருவரும் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை அல்லது மனத்  திண்மை போன்றவற்றை பொறுத்து ஒரே விதமான காரணம் பலவித வித்தியாசமான விதங்களில் விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாகக் காலை வேலை அவசரம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று கட்டாயம் போன்றவை சிலருக்கு அழுத்தம் கொடுக்கும். “ஆனால் இது போன்ற அழுத்தங்கள் எனக்கு ஒரு பொருட்டே அல்லஎன்கிறார் நிர்வாகத்துறையில் ஆலோசகராக இருக்கும் ஒரு பெண். “இது போன்ற அழுத்தங்கள் ஒரு சவால் போல. நம் மூளைக்கும் சுறுசுறுப்பு கிடைக்கும். தவிர இவை ஆக்கப்பூர்வமான அழுத்தங்கள். ஒரு குறிக்கோளை நோக்கி செல்கிறோம் என்று மனதில் ஒரு ஆர்வம் அல்லது கடமையுணர்வு இருக்கும். சாதிக்கும் உணர்வும் இருக்கும். அதனால் இது போன்ற அழுத்தங்கள் உடல் நிலையை பாதிக்கும் என்று கூற மாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் மன அழுத்தம் என்பது எந்த ஒரு முடிவும், என்ன ஆகும் என்று தெரியாத ஒரு சூழ்நிலை. ஒரு  uncertainty அல்லது vagueness நிலை எனக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தைக் கொடுக்கும்.” என்கிறார் இவர். இவரது தந்தை சமீபத்தில் காலமானபோது மிகுந்த மன அழுத்தம் இருந்தது என்கிறார் இவர்

தினசரி வாழ்க்கைக்கே வருமானம் போதாமல் இருக்கும் குடும்பத்தில் ஒருவித அழுத்தம் என்றால், வியாபாரத்தில் போட்டி, நஷ்டம் என்று வேறுவிதமான அழுத்தம் செல்வந்தர்களுக்கு

வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தம் தற்காலத்தில்  அதிகமாகத்தான் இருக்கிறது. உலகில் நிலவி வரும் வியாபாரப் போட்டியே காரணம். ” சின்னதாக சறுக்கினாலும் அதள பாதாளத்தில் விழுவோம் என்ற நிலையில்தான் இன்றைய வேலை செய்யும் இடங்கள் இருக்கின்றன. இதற்கு முன்னால் எவ்வளவு திறமையாக வேலை செய்தோம் என்பதெல்லாம் காணாமல் போய்விடும்,” என்கிறார் ஒரு கணினிப் பொறியாளர். “குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்கிற அழுத்தமும், செய்யும் வேலையைத் திறமையாக முடிக்க வேண்டுமே என்ற அழுத்தமும் எனக்கு சற்று அதிகம்தான் என்று ஆமோதிக்கிறார் ஒரு அரசு அதிகாரி

சமூக சூழ்நிலைகளில் அழுத்தம் உண்டாக்கும் காரணங்களில், இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது ஆசைப்படுவதெல்லாம் கையில் கிடைக்க வேண்டுமென்ற மனோபாவமும் மிக முக்கியமான ஒன்று என்று கருதப்படுகிறது. பாண்டிச்சேரி ஜிப்மேரில் உளவியல் துறையில் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற திரிவேதி சொல்கிறார், “தங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொண்டு, இன்னும் வேண்டும்; அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசை பேராசையாக உருவெடுக்கும் இந்நாட்களில் இதுபோன்ற ஆடம்பர பொருட்களின் பின்னால் ஓடும் மனோபாவத்தால் பலர் மன அழுத்தத்தில் விழுகின்றனர்.” 

ஒரு கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் டாக்டர்  சரஸ்வத்போட்டி மனப்பான்மை மன அழுத்தத்திற்கு வெகுவாக காரணம் என்கிறார். ஆனால் பொருள் திரட்டுவதற்காக, விரும்பியதை வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி உடல் உபாதைகளை வரவழைத்துக்கொள்ள வேண்டுமா

கட்டாயமாக. வேற வழி? என் மகளுக்கு நல்ல வாழ்க்கையை நான் கொடுக்க வேண்டாமா? நாளைக்கு அவளுக்கு என்று நான் ஏதாவது விட்டுச் செல்ல வேண்டாமா?” என்கிறார் நிர்வாக ஆலோசகரான தாய்

மன அழுத்தத்தினால் சில சமயம் நல விளைவுகளும் உண்டு. “இன்று மிகவும் பிரபலாமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் பலர் இப்படி ஒரு அழுத்தத்தின் உந்துதலில்தான் பல வெற்றிப்படிகளைத் தாண்டியுள்ளார்கள்“, என்கிறார் டாக்டர் பக்ஷி. இந்த மாதிரி மனோபாவம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஒரு தூண்டுகோல். இது இல்லையென்றால் இவர்கள் வேலை செய்யும் திறன் குறைந்துவிடும்.” என்று இவர் விளக்குகிறார். வீட்டில் மந்தமாக உணரும் சில பெண்கள் வெளியே வேலை செய்யப்  பிரியப்படுவார்கள். அதில் எதிர்கொள்ளும் அவசரமும், டென்ஷனும் அவர்களுக்கு இன்னும் ஊக்கம் கொடுக்கும். Adrenaline ஓட்டத்தை விரும்பும்  மனிதர்கள் இவர்கள். சிலருக்கு ஒய்வு என்பதே பிடிக்காது. அதேபோல் வேலை செய்யும் இடங்களில் இவர்களது ஆர்வத்துக்கும், மனத் தேவைக்கும் சவால்கள் இல்லாமல் இருக்கும்போது இவர்கள் விரைவிலேயே சலித்து விடுவார்கள். அதுவே கூட அவர்களுக்கு வேறுவிதமான மன அழுத்தத்தைக் கொடுக்கும்என்கிறார் பக்ஷி. மலையேறுவது, பந்தயங்களில் பங்கு பெறுவது போன்ற வீர சாகச செயல்கள் செய்பவர்கள் இது போன்ற அழுத்தம் விரும்பிகள் என்கிறார் இவர். workaholic எனப்படும் வகையைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட அழுத்தத்தை விரும்புவார்கள்சவால்களும், சாகசங்களும் சிலருக்கு விருப்பமாக இருப்பதற்கு காரணம், அந்த சவால்களைத் தீர்க்கும் ஆர்வமும், சாதிக்கும் ஆர்வமும்தான். நமக்குப்  பிடித்த எதையும் செய்யும்போது அது டென்ஷனாக இருந்தாலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது

ஆனாலும் சில சமயம்  அப்படிப்பட்ட பாசிட்டிவ் மன அழுத்தங்களும் கூட உடல் நிலையை பாதிக்கும் என்கிறார் டாக்டர்  திரிவேதி. அழுத்தம் நம்மை முன்னேற்றுகிறது என்று வைத்துக்கொண்டாலும், உடல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.” என்கிறார் இவர். இந்த மாதிரி நபர்களுக்கு வேலையிலிருந்து ரிடையர் ஆனவுடன்சும்மாஇருக்கும் மன அழுத்தம் பாதிக்கும். இது பல விதத்தில்  உடல் நலத்தை பாதிக்கும் என்பதோடு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பின்மையையும் உண்டாக்கும். மன அழுத்ததிற்காக வேலையைத் தேடித் தேடி செய்து பழகியவர்கள் ரிடையரானவுடன் தங்கள் காலுக்கடியில்  கம்பளம் உருவப்பட்ட உணர்வில் தவிப்பார்கள்

தனக்கு வரும் நோயாளிகளில் இப்படி பலவித மன அழுத்தத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருபவர்கள் அதிகம் என்று  குடும்ப மருத்துவர் டாகடர் பி. எம்வர்மா சொல்கிறார்

எப்படி இந்த மன அழுத்தம் உடல் நிலையை பாதிக்கிறது? Fight or Flight என்ற முறையில்  நம்முள் இயற்கையாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. ஏதோ ஒரு அழுத்தம் என்ற நிலை மூளையில் பதிவு செய்யப்பட அடுத்த நொடியில் இந்த பாதுகாப்புப் படை இயங்க ஆரம்பிக்கிறது. இதற்கு முக்கிய சேனாதிபதி, மூளைக்கு அடியில் இருக்கும்  பிட்யூட்டரி சுரப்பி. ஹார்மோன்கள் உற்பத்தி செய்தபடி இருக்கும் என்டாக்ரின் (Endocrine) சுரப்பிகள் இப்போது இன்னும் வேகமாகவும் அதிகமாகவும் சப்ளை செய்ய ஆரம்பித்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். Stress Harmones எனப்படும்  cortisol, epinephrine என்ற ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்போது அவை நமது உடலில் பல செயல்பாடுகளை பாதிக்கும். அல்சர், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் வர ஆரம்பிக்கும்.” என விளக்குகிறார் டாக்டர் வர்மா

டாகடர் ஹான்ஸ் செல்யே என்ற ஹங்கேரியைச் சேர்ந்த மருத்துவர் இந்த ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். இவை மூன்று நிலைகளில் வேலை செய்கிறது என்று இவர் குறிப்படுகிறார். ஒரு மன அழுத்த சூழ்நிலை அறிவிப்பு மூளைக்கு வந்தவுடனேயேஒரு ராணுவத்தடவாளம் போன்று பிட்யூட்டரி சுரப்பிகள் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. இது ஒருஅபாய அறிவிப்புபோன்று முதல் கட்டம். Somatotrophic harmone (STH), மற்றும் Adrenocriticotropic ()ACTH  என்பவை இதில் சுரக்கும்   முக்கியமான இரண்டு ஹார்மோன்கள்.

இதில் எஸ் டி ஹெச் எனும் ஹார்மோன் உடனடி விளைவுகளை வெளிப்படுத்தும்அதாவது காய்ச்சல், உடல் வலி, அசதி என்று முதல் அறிவிப்புகளை வெளிப்படுத்தும். ஏ சி டி ஹெச் ஹார்மோன் அடிரிலின் சுரப்பியை ஊக்குவித்து கார்டிசோல்  என்கிற ஹார்மோனை சுரக்க செய்யும். இந்த ஹார்மோன் எஸ் டி ஹெச் விளைவுகள் சமன் செய்யும். இப்படி நம் உள்ளுக்குள்ளேயே தாக்குதலும் தானாகவே சமாதானமும் ஆகிக்கொண்டிருக்கும். இது இரண்டாவது கட்டம். மன அழுத்த நிலை தற்காலிகமாக உருவாகும்போது இப்படி நம் உள்ளே இருக்கும் பாதுகாப்பு படைகள் நிலையை சரி செய்துவிடும்.

ஆனால், ஹார்மோன்கள் சரியாக தேவையான அளவு மட்டுமே சுரக்கும் போது பிரச்சனையில்லை. மன அழுத்த நிலை தொடர்ந்து,  தேவைக்கதிகமாக கார்டிசால் சுரக்கும்போது  அயர்ச்சி என்ற மூன்றாவது கட்டத்தைத்  தொடும்.  இந்த மூன்றாவது கட்டத்தில்தான் அல்சர், டயபெடீஸ், ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் ஆரம்பிக்கின்றன

சில சமயம் இந்த மன அழுத்தம் உடலில் வலிகளைத் தோற்றுவித்து தசை மற்றும் நரம்புக் கோளாறுகளும் வர ஆரம்பிக்கும். தலைவலிக்கு பெரும்பாலும் இந்த அழுத்தமே காரணம். இது மன அழுத்தமாக இருக்கலாம் அல்லது உடலில் வேறு எந்த அவயத்தின் மீதும் அழுத்தம் ஏற்படலாம். தலை மற்றும் கழுத்து தசை நார்கள் தொடர்ந்து சுருங்கி விரிந்து வேலை செய்யும்போது அவைகளில் ஒரு இழுப்பு (spasm) வரக்கூடும். இந்த தசை இழுப்பு ரத்த நாளங்களையும் இழுத்து அதனால் வலி ஏற்படலாம். அளவுக்கதிகமாக வேலை செய்பவர்கள், அழுத்தம் நிலவிய சூழ்நிலையில் வேலை செய்பவர்கள்அல்லது பிடித்தமில்லாத வேலையைச் செய்பவர்களுக்கு இப்படிப்பட்ட வலிகள் வரும். மற்றொரு வகை டென்ஷன் தலைவலி வாஸ்குலர் தலைவலி எனப்படும். இதில் ரத்த நாளங்களில் சுருங்கி விரியும் வேலை மிக விரைவாக நடக்கும். இந்த சமயத்தில் ரத்த நாளங்களில் படபடப்பும் (throbbing) கசிவும் இருக்கும். மைகிரைன் வித தலைவலி இந்த வகை

வயிற்றுக்கும், நம் உணர்வுகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. வயிற்றைக் கலக்கும் டென்ஷன்களும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வுகளும் நமக்கு மிகப்  பழக்கமானவையே. அதேபோல், ரொம்ப பசியாகவோ அல்லது வேறு ஏதோ உடல் உபாதையில் இருந்தால்கூட, ஒரு சந்தோஷமான விஷயம் காதில் விழுந்தவுடன், அல்லது நமக்குப்  பிடித்த நபரின் வருகை என்ற நிகழ்வுகள் நடக்கும்போது பசியோ உடல் உபாதையோ காணாமல் போய்விடும். இதனால், வயிற்றுப்புண் வியாதிக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு

ஜீரணம் ஆகும் வகையில் நம் வயிற்றில் ஜீரண திரவங்கள் உற்பத்தியாகிக்கொண்டிருக்கும். மன அழுத்தம் ஏற்படும்போது ஸ்டிரெஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரந்து, வயிற்றின் சுவர்களில் ரத்த சப்ளையை தாமதப்படுத்தும். இந்தச்  சுவர்களில் மெல்லிய திரை போன்ற ஒன்று படர்ந்து இருக்கும். ரத்த ஓட்டம்  குறையும்போது இந்தத் திரைகளுக்கு ஜீரண அமிலத்தை எதிர்க்கும் சக்தி குறைந்துவிடும். அழுத்த சூழ்நிலையில் ஜீரண திரவங்கள் அதிகமாக உற்பத்தியாகும். ஒரு  பக்கம் ரத்த ஓட்டம் குறைந்து ஜீரண அமிலங்களை எதிர்கொள்ளும் சக்தி குறைகிறது. மறு பக்கம் இந்த அமிலங்களின் உற்பத்தி அழுத்த சூழ்நிலையால் அதிகமாகி, வயிற்றுக் சுவர்களின் மேல் இருக்கும் மெல்லிய திரைக்கு மேலும் சோதனை. முடிவில் அவை பிய்ந்து, வயிற்றில் புண்கள் ஆரம்பிக்கும்

இதுபோல், மன அழுத்தத்தால் கோபம் ஏற்பட்டு மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து உயிருக்கு ஆபத்தான உதாரணங்கள் அநேகம். எக்கச்சக்கமாக ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் வேலையைச் செய்தால், கொரோநரி ஆர்டரீஸ் எனப்படும் இதயத்துக்கு ரத்தம் கொண்டு போகும் ரத்த நாளங்கள் சுருங்கிப்போகும்

சுருங்கிய ரத்த நாளம் வழியாக இதயத்துக்கு ரத்தம் செல்லும் அளவு குறைந்துவிடும். நாளடைவில் இந்த ரத்த நாளம் மிகவுமே சுருங்கும்போது அது அந்த மனிதரின் முடிவில் கொண்டுவிடும்

நாம் உண்ணும் உணவில் இருக்கும் சக்தியை புரதச் சத்தாகவும், க்ளுகோசாகவும்  மாற்றும் ஸ்டிரெஸ் ஹார்மோன்கள் அளவுக்கதிகமாக சுரக்கும்போது சக்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகி டயபடீஸ் உருவாகிறது

பொதுவாகவே மன அழுத்தம் பலவித நோய்களை விளைவிக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரிந்தாலும் நம்மையறியாமலேயே ஏதோ ஒரு ஓட்டத்துக்குள் நுழைந்துவிடுகிறோம்ஆசைகள், ஆர்வங்கள் நிறைவேற்ற வேண்டிய குறிக்கோள்கள் என்று நம்மை ஓட வைக்கும் இந்த லிஸ்ட் வெகு நீளம். ஆனால் ஒரு நிமிடம் நின்று நிதானித்து மன அழுத்த சுழல் காற்றில் சிக்காமல் படிப்படியாக நமது குறிக்கோள்களையும் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளலாமே

கட்டாயம் முடியும்மனது வைத்து ஒருமுகமாக செயல்பட்டால். நமது வாழ் முறையையும் உணவுப் பழக்கங்களையும்  இன்னும் இயற்கையோடு ஒத்ததாகவும், உடல் நல கேடுகள் வராமலும் இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். நம் ஓட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாததா? பரவாயில்லை. அவ்வப்போது நின்று நிதானித்து பயணப்படலாம். இளைப்பாறி, பயணத்தைத் தொடரலாம். மனதுக்கு பிடித்த விஷயங்களில்இசை, நண்பர்களுடன் அரட்டை, அல்லது வழக்கமாக செய்யும் வேலையிலிருந்து  ஏதும் வித்தியாசமான ஆர்வம், என்று பல வித மாற்று வழிகளில்  நடுநடுவே மனதை செலுத்தலாம்.

American Heart Association செய்த ஒரு ஆராய்ச்சியில் atherosclerosis என்ற இதய நோயை வாழ் முறையை மாற்றிக்கொள்வதன்  மூலமும் உணவுப் பழக்கத்தில் மாறுதல் செய்வதன் மூலமும்  மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதுமருந்தே அவசியமில்லை

உடல் பயிற்சிகளும் ஒரு அருமையான Stress busters. நாம் முன்பு பார்த்த நிர்வாக ஆலோசகர் பெண் கூறுகிறார். “சில சமயம் வீட்டில் தரையை நன்றாகத் துடைப்பது என் மன அழுத்தத்திற்கு சரியான வடிகாலாய் உணருகிறேன்.” என்கிறார். யோகா, தியானம், ஏரோபிக்ஸ் என்று உடல் பயிற்சிகளும் பலவகை. ஒன்றுமேயில்லாமல் வெறுமே நடைப் பயிற்சி கூட சிறந்த பலனையளிக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.