பாஸ்டனில் ஜெயமோகன்

பாஸ்டனில் ஜெயமோகனோடு ஒரு மாலை

ஜெயமோகன் தன்னுடைய கட்டுரை ஒன்றிற்கு ’காட்டை உற்று நோக்கும் காடு’ என்பதைத் தலைப்பாக வைத்திருப்பார். இதை ஒரு வாசகன் எழுத்தாளரின் படைப்புகளைப் பார்ப்பதற்கு ஒப்பிடலாம். எழுத்தாளர்கள் படைப்புகள் எழுதப்படும்போது அவர்கள் வசிக்கும் உலகம் வேறு; இதைத்தான் வாசகர் எழுத்தாளராகக் காண்கிறார். படைப்பு முடிந்ததும் எழுத்தாளர் சாதாரண உலகத்துக்குத் திரும்புகிறார்.
இதனால் எழுத்தாளர் நேர்காணல் என்பது எப்போதும் சுவாரசியமாக இருக்கும். எந்த உலகத்தின் எழுத்தாளர் நமக்குத் தெரிவார்? படைப்புலகம்? இவ்வுலகம்?
ஜெயமோகனை 2003-04-லிருந்து தொடர்கிறேன். திண்ணையில் ஆரம்பித்து, காடு, விஷ்ணுபுரம், கொற்றவை, ஏழாம் உலகம், வெண்முரசு, இன்றைய காந்தி, சிறுகதைகள், கட்டுரைகள், விவாதங்கள் என்று அசோகமித்திரனுக்குப் பிறகு இவரைத் தவறாமல் தொடர்கிறேன். தினமும் ஏதாவது ஒரு பக்கத்தை இவரின் தளத்தில் படிக்காமல் இருப்பதில்லை. கருத்து ஒற்றுமையும், மாறுபடும் இடங்களும் நிறையவே உண்டு.
ஜெயமோகன் 2011-ல் பாஸ்டன் வந்தபோது அவரை சந்திக்கமுடியவில்லை. இந்த முறை அவர் வருவது உறுதியானவுடன், பாஸ்டன் பாலா சந்திக்கும் தேதியை உறுதிப்படுத்தினார். வால்தம் நூலகத்தில் நண்பர் விக்ரம் அறையை முன்பதிவு செய்தார். 20-25 பேர் வரை கலந்துக்கொண்டார்கள்.
Greater பாஸ்டன் பகுதியின் பிரசித்திப் பெற்ற போக்குவரத்து நெரிசலால் மாலை 6:30 சந்திப்பு 7:30 மணிக்குத் தொடங்கியது. சினேகமான சிரிப்புடன் சுலபமாகக் கைகுலுக்கினார். அருண்மொழியை அறிமுகப்படுத்தினார்.
இயல்பாக குழுவைப் பார்த்து என்ன பேசலாம் என்று கேட்டார். நண்பர் நவீன் ‘நீங்கள் முதலில் பேசுங்கள்’ என்றவுடன், ‘இலக்கிய வாசிப்பு பற்றி பேசுகிறேன்’ என்று ஆரம்பித்து முக்கியமாக ஆறு கருத்துக்களைப் பேசினார்:
சுருக்கமாக:

  • இலக்கியம் அறிதலின் அடிப்படையை நம் கல்வி நிறுவனங்கள் சொல்லித்தர வேண்டும். இல்லையென்றால் நாமே கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.
  • கேரளாவில் நிறுவனங்கள் இதை செய்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இது நடப்பதில்லை. (இந்த வரிகளில் தொடர்பான கேள்விகள் பின்னால் அவரைக் கோபப்படுத்தப் போகிறது என்று நான் அப்போது நினைக்கவில்லை).
  • தமிழில் சுந்தர ராமசாமி, தேவதத்தன், சுரேஷ்குமார் இந்திரஜித், பிரமிள், ஞானக்கூத்தன், அசோகமித்திரன் என்று பல மையங்கள் இலக்கிய வாசிப்பின் அடிப்படைகளை சொல்லித் தருகிறார்கள்.

இலக்கிய வாசிப்புக்கான விதிகள்

1) இலக்கியம் என்பது நேரிடையான அனுபவம் கிடையாது. கற்பனை மூலம் வளர்த்தெடுக்கப்படுவது.
2) இலக்கியத்தை புறவயமாகப் பார்க்க முடியாது. இலக்கிய வாசிப்பு படைப்பின் வழியே கற்பனையில் வாழவைப்பது.
3) படைப்பைக் கருத்தாக சுருக்கவேண்டாம். திரண்ட கருத்து, மையம் என்பது இலக்கியப் படைப்பில் கிடையாது.
4) எழுத்தாளனுடைய படைப்புகளில் அவரின் ஒட்டுமொத்தக் கருத்தையும் எடுத்துக்கொள்ள முடியாது. எழுத்தாளர் இலக்கியத்தைப் படைக்கும்போது இருக்கும் நிலையை அவரின் கட்டுரைகள் வழியே கிடைக்கும் கருத்துக்களோடு குழப்பக்கூடாது.
5) கதை மையம் (plot) முழு நாவலுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளமுடியாது. கதை மையம் என்பது ஒரு எலும்புக்கூடு போன்றது.
6) கதை மையத்தோடு தொடர்புடைய மற்றொரு கோடு இலக்கியக் கதையில் செல்வதை (திசைத் திரும்பல்) நல்ல இலக்கிய வாசகர்கள் கண்டுகொள்வார்கள்.
இதன் பிறகு கேள்வி பதில் தொடங்கியது. நண்பர்கள் அரவிந்த், நவீன், இன்னும் ஒரு நண்பர் (பெயர் நினைவில் இல்லை) ஜெயமோகனின் படைப்புகளிலிருந்து கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நான் இன்னும் படித்திருக்காத கன்னியாகுமரி நாவலில் இருந்து ஒரு கேள்வி வந்தது.
கேரளாவில் இலக்கிய இயக்கங்களை ஜெயமோகன் உயர்வாகப் பேசியது சந்திப்புக்கு வந்திருந்த சிலரை வருத்தப்படுத்தியிருக்கிறது. அவர்கள் தமிழிலும் இயக்கங்கள் இருக்கின்றன, கலைஞர், ஆதித்தனார் போன்றோரின் பங்களிப்பைப் பற்றி பேசினார்கள். ஜெயமோகன் சுருக்கமாக இன்று வரை தமிழில் சாதித்திருக்கும் எழுத்தாளர் எவருக்காவது இது வரை மரியாதை செய்திருக்கிறார்களா என்று கேட்க மற்றொருவர், கலைஞர் ஜெயகாந்தனுக்கு மருத்துவம் பார்த்த கதையை விளக்க, ஜெயமோகன் பொறுமை இழந்து, உங்கள் உலகத்தில் நான் இல்லை, என் படைப்புகளைப் படித்த வாசகர்கள் கேள்விகள் கேளுங்கள் என்று சொன்னார். அசௌகரியமான அமைதியை அரவிந்த் கலைத்து இலக்கியப் படைப்புகளில் சில கேள்விகளைக் கேட்டு சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்.
8:45-க்கு நூலகத்திலிருந்து வெளியேறி, ஜெயமோகன், அருண்மொழி, சொல்வனம் ரவியோடு நாங்கள் அருகிலிருந்த உணவகத்துக்கு சென்றோம். அங்குதான் நான் அவரோடு கொஞ்சம் பேச முடிந்தது, அரவிந்த் ‘ராஜேஷ், நிறையக் கேள்விகளோடு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன், பேசவேயில்லையே!’ என்றார். நான் அடக்கத்தோடு ‘ஜெயமோகனைத் தொல்லைப் பண்ணவேண்டாம் என்று பேசவில்லை’ என்றதும், ஜெயமோகன் சிரித்துக் கொண்டே ‘நீங்க கேள்வி கேட்கலைன்னா, மீட்டிங்கில் நடந்தமாதிரி கேள்விகள் வரும்’ என்றார்.
நாராயண குரு இயக்கம், மகாபாரதம், அது காட்டும் நிலப்பரப்பு, விஷ்ணுபுரம், வெண்முரசுவில் வரும் பாத்திரங்களும் அவர்களின் சூழல்களும் (உதாரணமாக சகுனி என்றால் பாலை நிலம்) பற்றியும் பேசினோம். இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும்போது அப்போதைய காலகட்டத்தில் உபயோகித்த வார்த்தைகளைத் திருத்துவது சரியா என்ற கேள்வி எழுந்தது. உதாரணமாக 1950-களில் தாழ்த்தப்பட்ட மக்களை தமிழ்நாட்டில் எப்படி அழைத்தார்களோ அது இன்று சட்டப்படி தவறு. இதனால் இன்று அந்தப் படைப்பில் அந்த வரிகளை மாற்ற வேண்டுமா? காந்தியின் தென் அமெரிக்க வரலாற்றிலும் இது போன்ற வரிகள் உண்டு, அதை மாற்றத் தேவையில்லை என்ற கருத்தில் எல்லோரும் உடன்பட்டோம்.
10:30 மணி போல் மனமில்லாமல் வெளியே வந்தோம். கைகுலுக்கி விடைபெற்றோம். 2003-04-லிருந்து இவரைப் படிக்கிறேன். தினம் ஏதாவது புதிதாக ஒன்றை இவரிடமிருந்து பெறுகிறேன். இந்த 4-மணிநேரங்கள் எப்படி போதும்? என்ற எண்ணத்தோடு நடக்க ஆரம்பித்தவன் மீண்டும் திரும்பி அவரிடம் கைகுலுக்கி, ‘உங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி’ என்று மட்டும் சொல்ல முடிந்தது.
உணவகத்தில் நான் கவனித்த ஒன்று: விஷ்ணுபுரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு கேள்விக்கு அருண்மொழி திருவடி பற்றி விளக்கம் கொடுத்தபோது தெரிந்தது: ஜெயமோகனின் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று.

– ராஜேஷ் சந்திரா

 

Boston_Jeyamohan_Arvind_White_Mountains_NH

oOo

ஜெயமோகன் சந்திப்பு – திராவிடத்தின் தாக்கம் பாஸ்டன் வரை

இரண்டு மாதம் முன்பு ஜெயமோகன் அமெரிக்கா வருகிறார் என்று தெரிந்தவுடனே மிகுந்த உற்சாகம் அடைந்துவிட்டேன். ஏனென்றால் நான் பெரிதும் சிலாகிக்கும் எழுத்தாளரை இதுவரை சந்தித்ததில்லையே என்ற குறை என்னுள் இருந்து வந்தது. காடு நாவலை படித்துவிட்டு என் அப்பா ஜெயமோகனை சந்தித்தே ஆக வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கான திட்டங்களை வகுத்தார். ஆனால், நாங்கள் கிளம்புவதற்குள் என் அப்பாவுக்கு உடல் நலம் கெட்டுவிட்டது. அதன் பிறகு அவரை சந்திக்கும் வாய்பே அமையவில்லை. நானும் இந்தியா வரும் போதேல்லாம் எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அதற்கான சூழல் அமையாது. இயல் விருது கிடைத்த விஷயம் தெரிந்தவுடன் கனடா செல்லலாம் என்றுதான் நினைத்தேன்.
பாஸ்டன் பாலா சென்ற புதன்கிழமை(24/06/2015) ஜெயமோகனுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வால்த்தம் பொது நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வு மாலை 6:30ற்கு, நான் ஜந்து முப்பதுக்கெல்லாம் முதல் ஆளாக அங்கு சென்று விட்டேன். பிறகு ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். பத்துப் பேர் வந்தால் பெரிது என்று நினைத்தேன் ஆனால் இருபத்தி ஐந்து பேருக்கு மேல் வந்திருந்தார்கள். அங்கு வந்திருந்த இரண்டு பேரை தவிர வேறு யாரையும் அதற்கு முன்பு நான் சந்தித்ததில்லை.
நிகழ்வு திட்டமிட்டப்படி 6.30ற்கு ஆரம்பிக்கவில்லை, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் ஜெயமோகன், அருண்மொழி, பாஸ்டன் பாலா, அரவிந்தன் அகியோர் 7.30க்குத் தான் வந்தார்கள். ஜெயமோகன் எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தவுடன் எனக்கு சிறிது பதற்றம் ஆகிவிட்டது. ஜெயமோகனை அறிமுகம் படுத்தி பாஸ்டன் பாலா இரண்டு நிமிடம் பேசினார். ”நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா இல்லை நான் பேசட்டுமா” என்றார் ஜெயமோகன். கூட்டத்தில் ஒருவர் நீங்கள் முதல் கொஞ்சம் பேசுங்க சார்” என்றார். எழுத்தாளனுக்கு முக்கியான ஆறு விதிகளை பற்றி விளக்கமாக பதினைந்து நிமிடம் பேசினார். அதில் மிக முக்கியமாக நேரடி அனுபவங்களை அப்படியே எழுத கூடாது. அப்படி எழுதினால் அவன் எழுத்தாளன் இல்லை வெறும் பத்திரிகையாளன் மட்டுமே என்றார்.
பிறகு கேள்வி கேட்கும் படலம் ஆரம்பித்தது. விக்ரம் முதல் கேள்வி கேட்டார் ”இங்கு (அமெரிக்காவில்) எழுத்தை வாசகர்களை மிக சுலபமாக வகைப்படுத்தி விடுகிறார்கள். உதாரணமாக இலக்கியம், வணிக எழுத்து என்று… ஆனால் தமிழ்நாட்டில் இப்படி இல்லை! எல்லாமே இலக்கியம் என்ற போக்கு உள்ளது. அது ஏன்?”
இதற்கு ஜெயமோகன் விளக்கமாக பதில் அளித்தார் . ”அசோகமித்திரன், தி.ஜா, பிரமிள், சுந்திரா ராமசாமி, லா.சா. ரா போன்ற எழுத்தாளர்கள் கவனிக்க படாமல் போனதற்கு இது மிக முக்கியமான காரணம். தமிழ்நாட்டில் பெரும்பாலான வாசகர்களுக்கு எது இலக்கியம், எது வணிக எழுத்து என்று பிரித்துப் பார்க்கும் தன்மை இல்லை. ஆனால் கேரளாவிலும் வங்காளத்திலும் இந்தப் போக்கு இல்லை. இதற்கு அங்கு ஆட்சி செய்த இடதுசாரி இயக்கங்கங்கள் மிக முக்கிய காரணம்” என்றார்.
இந்தப் பதிலை வைத்து ஒருவர் அடுத்தக் கேள்வியை கேட்டார் ( இப்போதுதான் நாம் தலைப்புக்கு வருகிறோம்). ” சார், நீங்க சொன்ன பதிலை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது, நான் தஞ்சாவூரில் பிறந்தவன் நான் சிறுவயதில் இருந்தே பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன் போன்ற உன்னதமான இலக்கியங்களை படித்து வளர்ந்தவன். எனக்குத் தெரிந்த நண்பர்களும் இது போன்ற இலக்கியங்களைப் படித்து வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும் போது எப்படி நீங்கள் தமிழர்கள் இலக்கியவாதிகளைக் கொண்டாடுவதில்லை, மலையாளிகள் தான் கொண்டாடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்?” என்றார்.
ஜெயமோகன் வருத்தம்ஆகி ”ஐயா நான் சொல்வது உண்மை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நீங்கள் சொல்லும் உன்னதமான ”பொன்னியின் செல்வன்” கூட ஒரு லட்சம் பிரதிகள் விற்று இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அங்கு தகழியின் புத்தகம் வருடத்திற்கு ஐம்பதினாயிரம் பிரதிகள் விற்கிறது. தகழியைவிட பத்து மடங்கு நன்றாக எழுதும் எழுத்தாளர்கள் தமிழில் பலர் உண்டு. ஒரு உதாரணம் தருகிறேன் லா.சா. ராவின் ”அபிதா” தமிழில் க்ளாசிக் என்று கொண்டாடப்படும் நாவல். அதன் முதல் பிரசுரம் முன்னூறு பிரதிகள் அச்சிடப்பட்டது. அந்த முன்னூறு பிரதிகள் விற்று முடிய இருபது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதுதான் தமிழ் நாட்டின் நிலை” என்றார்.
இந்த விவாதத்தால் அந்தக் கூட்டத்தின் ஒட்டுமொத்தச் சூழலும் மாறிவிட்டது. இதன் பிறகு அடுத்த கேள்வியை நான் கேட்டேன் ”நேரடி அனுபவங்களை எழுதக் கூடாது என்று சொன்னீர்கள் ஆனால் பஷீரின் எழுத்துகள் எல்லாமே எனக்கு நேரடி அனுபவங்களாகத்தான் தெரிகிறது” என்றேன். இதற்கு அவர் விளக்கமாக பதில் அளிக்கவில்லை. ”அவர் படைப்பை உன்னிப்பாகப் படித்தீர்கள் என்றால் அவை எதுவுமே நேரடி அனுபவங்கள் கிடையாது என்பதை அறிய முடியும்” என்றார்.
அடுத்தக் கேள்வியை அந்த தஞ்சாவூர்காரரின் நண்பர் கேட்டார் ”நீங்கள் என் நண்பருக்கு சொன்ன பதிலை என்னால் ஒத்துக் கொள்ளமுடியாது. கலைஞர் தமிழ் எழுத்தாளர்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்” என்றார். ஜெயமோகன் அதற்கு சுருக்கமாக ” கருணாநிதி கடந்த ஜம்பது ஆண்டு கால அரசியல் வாழ்வில் நான் குறிப்பிடும் எந்த எழுத்தாளரைப் பற்றியாவது ஒரு வரியாவது பேசியிருக்கிறாரா” என்றார். உடனே தஞ்சாவூர்க்காரர் ”ஏன் ஜெயகாந்தனுக்கு இருதயக் கோளாறு ஏற்பட்ட போது கலைஞர்தான் காப்பாற்றினார்! இவ்வளவு பேசும் நீங்கள் அந்த எழுதாளர்களுக்காக என்ன செய்தீர்கள்?” என்று ஜெயமோகனைப் பார்த்து கேட்டார். ”நான் அந்த எழுத்தாளர்களைப் பற்றி பல ஆயிரம் பக்கங்கள் என் இணையத்தளத்தில் எழுதியிருக்கிறேன்; இலக்கிய முன்னோடிகள், நவீனத் தமிழலக்கிய அறிமுகங்கள் என பல விமர்சன நூல்கள் எழுதி, மிக எளிமையாக, அந்தப் படைப்புகளை அணுகுவதற்கு நுழைவு வாயில் அமைத்திருக்கிறேன். ஒரு பைசா கூட வாங்காமல், உங்களைப் போன்ற ஆட்களை தெருவுக்கு பத்துப் பேரை பார்க்கிறேன். இனிமேல் உங்களோடு என்னால் விவாதம் செய்ய முடியாது. என் எழுத்தைப் படிக்கும் வாசகர்கள் மட்டும் கேள்விக் கேட்கலாம்” என்றார்.
இது போன்ற கேள்விகளால் நாற்பது நிமிடம் வீணானது. அதற்குள் நூலகத்தின் ஒலிப் பெருக்கியில் இன்னும் சில நிமிடங்களில் நூலகத்தை மூடிவிடுவோம் என்று அறிவிப்பு வந்தது. உலகில் எங்கிருந்தாலும் இது போன்ற ஆட்கள் வருகிறார்கள். ஜெயமோகன் எழுதியவற்றை ஒருவரி கூட படிக்காமல் எழுத்தாளரிடம் எவ்வாறு உரையாட வருகிறார்கள் என்பது தமிழர்களுக்குரிய அலட்சியமா அல்லது இந்தியர்களுக்குரிய தோரணையா என அறிய முடியவில்லை. எப்படி இது போன்ற கேள்விகளைக் கேட்கிறார்கள் என்பதும் தமிழுக்கு மட்டுமே உரிய எகத்தாள மனப்பான்மையா, அல்லது இந்திய மொழிகளுக்கேயுரிய அலட்சியம் கலந்த அவமதிப்பு சிக்கலா என்றும் தெரியவில்லை. ஜெயமோகனை கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து படிப்பவன், அவரை ஆதர்சமாக நினைக்கும் எனக்கு இது போன்ற சந்திப்புகளில் இவர்களைப் போன்ற மைக் பிடுங்கிகளின் பிரசங்க மனப்பான்மை அயர்ச்சியளித்தது. இதன் பிறகு அவரை எப்போது சந்திக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை.
கடைசியாக இருந்த இருபது நிமிடத்தில் யாரும் கேள்வி கேட்கும் மனநிலையில் இல்லை. அவரும் காதில் கேட்டு மனதில் உள்வாங்கிக் கொள்ளாத கூட்டத்தினருக்கு பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. நான் பல கேள்விகளை அவரிடம் கேட்பதற்காக பல மணி நேரம் தயார் செய்திருந்தேன் . அதில் இரண்டை மட்டுமே கேட்டேன்.
1. ”கசாக்கின் இதிகாசம்” நாவலை எப்படி அணுகுவது?
2. எனக்கு அன்னியமான விஷயத்தை பற்றி எப்படி கதை எழுதுவது (உதாரணம்.) ஊமைச் செந்நாய் போன்ற கதையை எப்படி எழுதுவது. இந்த இரண்டு கேள்விக்கு சுருக்கமாக பதில் சொன்னார். அப்போது இருந்த மனநிலையில் அவர் சொன்ன பதில் கூட இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. பிறகு அரவிந்தன் ”வெள்ளையானை” நாவலை முன் வைத்து சில கேள்விகள் கேட்டார். அவர் கேள்வியின் பதிலோடு கூட்டம் முடிந்தது.
அந்த இருவரில் ஒருவர் கூட்டம் முடிந்தும் ஜெயமோகனை விடவில்லை. நூலகத்தில் வாசலில் மீண்டும் விவாதத்தை ஆரம்பித்தார் ” சார் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்.” என்று சொல்லி மீண்டும் ”கலைஞர் எழுத்தாளர்களுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் !” என்று முன்பு சொன்னதையேச் சொன்னார். ஜெயமோகன் உடனே ”என் எழுத்து எதையாவது படித்திருக்கிறீர்களா என்றார். ”ஜெயமோகன் என்ற ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றே நேற்று தமிழ்ச் சங்க இமெயி்ல் பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன்” என்றார். ”நீங்கள் என்னை ரொம்பவும் காயப்படுத்திவிட்டீர்கள். இனிமேல் உங்களுடன் என்னால் விவாதிக்க முடியாது!” என்று சொல்லி அவரிடம் இருந்து விலகினார்.
பிறகு அவர் கூட்டத்திற்கு வந்த ஒவ்வொருவரிடமும் தன் தரப்பு நியாத்தை சொன்னார். நான் எங்கள் தமிழ்ச் சங்கத்தில் மிகப் பெரிய இலக்கியவாதியான ”பர்வீன் சுல்தானவை” வைத்து எல்லாம் கூட்டம் நடத்தியிருக்கிறேன், எனக்கு எப்படி இலக்கியம் தெரியாது என்று ஜெயமோகன் சொல்கிறார் என்று ஆதங்கப்பட்டார். சுழற்சியில் என்னிடம் வந்து புலம்பினார், ”ஐயா, நீங்கள் சு. ப.வீரபாண்டியனிடம் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் ஜெயமோகனிடம் கேட்டால் பதில் கிடைக்காது. வேண்டும் என்றால் நான் மனுஷ்யபுத்திரன் மின்னஞ்சல் முகவரி தருகிறேன். அவரிடம் கலைஞரின் தமிழ்ச் சேவைப் பற்றி கேளுங்கள். கதை கதையாக சொல்லுவார்” என்றேன். அவருக்கு மனுஷ்யபுத்திரனும் யார் என்று தெரியவில்லை.
அவரை அங்கேயே விட்டுவிட்டு நாங்கள் இரவு உணவுக்கு சென்றுவிட்டோம். ஜெயமோகன் பழம் மட்டும்தான் சாப்பிட்டார். பிறகு கடைசியாக எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
ஜெயமோகன் அந்த இருவரிடமும் கேட்ட ஒரு முக்கியமான கேள்வியோடு இந்தப் பதிவை முடிக்கிறேன். ”இதே நூலகத்தில் ஒரு அமெரிக்க எழுத்தாளரின் கூட்டம் நடந்தால், அங்கு அந்த எழுத்தாளர் பற்றி தெரியாத யாராவது ஒருவர் வருவாரா? நீங்கள் இருவரும் கடைசி வரை நீங்கள் சொல்வதைத்தான் நான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் தவிர நான் சொல்வது எதையும் நீங்கள் கேட்க விரும்பவில்லை.”

– சத்யமூர்த்தி

 

oOo

ஞானப் பழங்களும் பல ரசங்களும்

நல்ல அறை ஒன்று வால்தாம் (Waltham) என்ற ஊரின் நூலகத்தில் கிட்டி இருக்கிறது. கிட்டத்தட்ட 20 பேர் வந்திருந்தார்கள். ஜெயமோகனையும், அவர் மனைவி அருண்மொழியையும் பாஸ்டன் பாலா அழைத்து வந்தார். மாலை 6.30 மணிக்குக் கூட்டம் என்பதால் பாஸ்டனின் புறப்பகுதிகளில் எல்லா நெடுஞ்சாலைகளிலும் அபரிமிதமான போக்கு வரத்து நெரிசல் இருக்கும். (இது ஒரு பழைய காலத்து நகரம் என்பதால் இருக்கும் நெடுஞ்சாலைகள் நிறைய என்றாலும் உச்ச கட்டப் போக்கு வரவு நேரத்தில் கார்களின் அடைசல் அதிகம். ஒரு அரை மணி, முக்கால் மணியில் ஓரளவு சரியாகி விடும் என்றாலும், சில நாட்களில் நம் அதிர்ஷ்டம் போகும் வழியெல்லாம் அடைசல்/ நெரிசலாக இருக்கும்.) அவர்கள் மூவரும் வந்து சேர சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகி விட்டது.
பாலாஜி சுருக்கமாக ஜெ.மோவுக்கு அறிமுகம் தேவை இல்லை என்று துவங்கி ரப்பரிலிருந்து வெண்முரசு வரை நிறைய நாவல்கள் எழுதி இருக்கிறார். தான் அவர் புத்தகங்களைப் படித்து வந்தாலும், அவர் சமீபத்தில் எழுதுகிற வேகத்துக்குத் தன் படிப்பு வேகம் போதாது, சமீபத்துப் புத்தகங்களை அவ்வளவு படிக்கவில்லை என்கிற மாதிரி சில வார்த்தைகள் உபசாரமாகச் (Formal) சொன்னார்.
பிறகு ஜெ.மோ நான் ஏதாவது பேச வேண்டுமா, இல்லை உரையாடல் துவங்கலாமா என்றார். ‘பேசுங்க….’ கூட்டுக் குரல்கள். இலக்கியம் என்பதைப் பல நாடுகளிலும் பல இந்திய மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகளில் முறையாக அறிமுகப்படுத்துவதோடு, வாசிப்பு என்பது எப்படி இருப்பது நல்லது என்றும் சொல்லிக் கொடுக்கிற முறை பழக்கத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த முறை இல்லை, அல்லது வளரவில்லை.இதனால் கல்லூரிப் படிப்பு முடித்தவர்கள், பேராசிரியர்கள், பல துறை வல்லுநர்கள் இடையே கூட நல்ல இலக்கியம் என்பதை அறியவோ, படிக்கவோ முடிந்தவர்கள் மிக மிகக் குறைவு, என்று துவங்கி எப்படி சிறந்த எழுத்தாளர்கள் பலர் தமிழில் பல மொழி இலக்கியப் படைப்பாளர்கள் அளவுக்குச் சிறிதும் குறையாத தரத்தில் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களைத் தமிழ் வாசகர்களும், தமிழ் சமுதாயமும் அறியவும் இல்லை, அவர்களை கௌரவிக்கவும் இல்லை என்று பேசினார்.
பிறகு கிளை பிரிந்து, வாசிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதில் சில விதிகளே போன்ற நடைமுறைகள் உண்டு. அவை என்னென்ன என்று தான் கருதுபவற்றைச் சொல்லி ஒரு ஆறு விதிகளை முன்வைத்தார்.
கேள்விகள் கேட்டவர்களில் பாதிப் பேர் ரொம்ப அப்பாவிகள். ஜெ.மோ தெளிவாக கல்கி, அகிலன், நா.பா. போன்றார் இலக்கிய எழுத்தாளர்கள் இல்லை என்று சில முறை தன் பேச்சில் சொல்லி இருந்தும், ’நாங்கல்லாம் சின்ன வயசிலே பள்ளிக் கூடத்திலே இருக்கச் சொல்லவே பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதமெல்லாம் படிச்சிருக்கோம். இப்பவும் அப்படிப் பட்ட சிறப்பான இலக்கியத்தை ஏராளமான பேர்கள் தமிழகமெங்கும் வாங்கிப் படிக்கிறாங்க, அப்படியிருக்கையிலே தமிழர் இலக்கியம் வாசிக்கிறதில்லைங்கிறீங்க, இதை எப்படி ஏற்க முடியும்’ என்று ஒருவர். இங்கிலீஷில் mowed down என்று கனரக பீரங்கியால் சரமாரியாகச் சுடப்பட்டு படையணிகளை அழிப்பதைச் சொல்வார்கள். அவருக்கு அது நடந்தது. ஆனால் அவருக்குத் தான் அழிக்கப்பட்டது புரியக் கூட இல்லை. ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கர் த டெர்மினேட்டர் படமொன்றில் ‘I will be back’ என்று நமக்கெல்லாம் எச்சரிக்கை விடுத்துப் போவாரே அது போல அவர் திரும்பத் திரும்ப எழுந்து வர முயன்றார்.
அவர் ஒரு தலைவலி போதாதென்று ’நம்ப கலைஞர் தமிழ்நாட்டுக்கு எத்தினியோ செய்திருக்கார், அவர் எத்தனை புத்தகம் எழுதி இருக்கிறார், அவர் செய்த பணியால தமிழ் நாட்டுல படிப்புப் பழக்கம் ஏராளமானவர்களுக்குப் பரவி இருக்கிறது, அதை எல்லாம் ஒண்ணுமில்லேன்னு சொல்றீங்களா’ ங்கிற மாதிரி ஒரு கௌரவமான மருத்துவர் தோற்றம் கொண்ட சற்றே மூத்த பிராயத்தினர் கேட்டார்.
ஐயோடா சாமி என்றிருந்தது.
இருவரும் ஜெமோ மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இலக்கிய வாசம் எப்படி அடித்தள மக்களிடமும் பரவி இருக்கிறது என்று சொல்லி இருந்தாரா அதைப் பிடித்துக் கொண்டு தொங்கினார்கள். ராஜர் ஃபெடரரிடம் நம் தெரு முனை சீமாச்சு ஒரு சர்வ் செய்தால் என்ன நடக்குமோ அது நடந்தது.
Game set and match ஒரு சில கணங்களில் முடிந்தது.
தன் வலைப்பக்கங்கள் ஒரு சில ஆயிரங்கள் இருக்கும் (30 ஆயிரம் சொச்சம் என்று சொன்னதாக நினைவு); அப்பக்கங்களை தினசரி 50 ஆயிரம் பேர் போலப் படிக்கிறார்கள். பொதுவாகச் சொன்னால் இணையம் வந்த பிறகு வாசக நிலை முன்னேறி இருக்கிறது. ஆனால் புத்தக விற்பனை ஒன்றும் முன்னேறவில்லை. கலைஞர் போன்றவர்களுக்கும் இலக்கியத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. முதலில் இலக்கியம் என்று நான் சொல்வது எது, அந்த மாதிரி எழுத்தாளர்கள் யார், அவர்கள் எழுதியவை என்ன என்று தெரிந்து கொண்டு பிறகு கேள்விகள் கேட்பது மேலாக இருக்கும் என்று முடித்தார்.
எனக்கு கருத்துகளை விட அவர் அவற்றைச் சொன்ன விதம், கேள்விகளுக்குப் பதில் அளித்த விதம் ஆகியன பார்க்க, கேட்க சுவாரசியமாக இருந்தன. கருத்துகள் ஏற்கனவே படித்து, இணையத்தில் பேசப்பட்டு இத்தியாதி விதங்களில் பழகியவை.
இதுதான் அவரை முதல் தடவை பார்த்திருக்கிறேன் என்பதால் அவர் பேச்சுப் பாணியைக் கவனித்தேன். கல்லூரி உரையாசிரியர் போல பாடம் நடத்திப் பழகி இருக்கிறார் என்று தெரிந்தது. அவர் எடை போடுவது போலவே பார்வையாளரில் பாதிக்கு மேல் பாடம் கேட்கத் தக்கவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது ஓரளவுக்கு நம்பிக்கையை அழிக்கும் நிலை. ஆனால் பழகி விட்டதால் இதை எப்படி மீறி உற்சாகத்தைக் காப்பாற்றி வைத்துக் கொள்வது என்பது அவருக்கு இத்தனை நேரம் தெரிந்திருக்கும்.
பாஸ்டனில் அத்தனை திராவிடியர்கள் இல்லையா, அல்லது அவர்களுக்கு விவரம் தெரியாததால் வரவில்லையா என்று தெரியவில்லை. மற்ற தமிழ்ச்சங்கங்களுக்குப் போகையில் தனித்தமிழ் வாதிகள், புலி ஆதரவுக் கூட்டம், ஈவெராவியர்கள், சிலப்பதிகாரத்திலே என்று ஆரம்பித்து கற்பு கத்தரிக்காயை எல்லாம் இன்னும் கட்டிப்பிடித்து அழும் பழம் பெருச்சாளிகள் என்று ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. அங்கே ரத்த அழுத்தம் வராமல் வெளி வருவார் என்று நம்புவோமாக. இன்னும் சில தினங்களில் அங்கே போகவிருக்கிறார்.
பிறகு இரவு 9.40 வாக்கில் அருகே இருந்த ஒரு இந்திய உணவகத்துக்குப் போனோம். ஜெயமோகன் சாப்பிடவில்லை (பழம் மட்டும் அவ்வப்போது ஒன்றை எடுத்து உண்டார்) என்பதால் நிறையப் பேசினார். தமிழகத்தில் ஏன் இடது சாரியினர் இருந்த போதும் படிப்பறிவு வளரவில்லை, அறிவொளி இயக்கங்கள் வேரூன்றாதது ஏன், நாராயண குரு பற்றி ஜெமோ எழுதியதைப் படித்த பின்னரே கேரளா எப்படி இவ்வளவு இலக்கிய வாசனை உள்ள நிலமாக ஆயிற்று என்று தனக்குத் தெரிந்தது, தமிழகத்தில் வள்ளலார் இருந்தார் அது போல, ஆனால் அவர் இயக்கம் அவரைச் சாமியாக ஆக்குவதில் முனைந்திருக்கிறதே தவிர கருத்துப் பரவல் இயக்கமாக ஏன் வளரவில்லை இத்தியாதி கேள்விகள். பிறகு வெண் முரசு போன்ற புத்தகங்களில் வரும் பாத்திர அமைப்புகள், பாத்திரக் குரல் வேறுபட்ட இடை textual presentation, point of view writing, என்று எழுதுவது குறித்த தொழில் நுட்பக் கேள்விகள் நிறைய இருந்தன.
அப்புறம் நாய்கள் பற்றியும், ‘உயர்’ரக நாய்கள் எதிர் நாட்டு நாய்கள் பற்றியும், இந்தியப் பசுக்கள் எதிர் கலப்பினங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்ததில் சில கருத்துகள் எனக்குக் கேட்டன.
பிறகு உணவகத்துக்கு வெளியே வந்து சில படங்களை எடுத்தார்கள்.

பரஞ்சோதி

 

2 Replies to “பாஸ்டனில் ஜெயமோகன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.