ஆங்கில மொழிபெயர்ப்பு – லூசி ஜான்சன்
ஒரு காலத்தில் ஒஸ்மான் பாதைதான் தேம்பும் சுனை செல்லும் ஒற்றைச் சாலையாய் இருந்தது. ஒஸ்மான் பத்திர் அல்டாய் பிரதேசத்தின் புகழ்பெற்ற கொள்ளைக்கூட்டத் தலைவன், சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவன். .அவன் “கஸக் மன்னன்” என்று அறியப்பட்டிருந்தான்.
அதுநாள் வரை பாதைகள் அனைத்தும் பரந்து விரிந்திருந்த கோபி பாலைவனத்தின் எல்லைகளைச் சுற்றி நீண்டு சென்றன. மலைத்தொடர்களின் மடிப்புகளினூடே துண்டிக்கப்பட்டும் தடம் மறைந்தும் சென்ற போக்குவரத்துச் சாலையை அவை உருவாக்கியிருந்தன. இந்தப் பாதைகள் அல்டாயின் தொலைதூர பாலைவனச்சோலையை புல்வெளிகளுடனும் தெற்கில் இருந்த பனிமலைகளுடனும் இணைத்தன. யாரும் பாலைவனத்தின் ஈரமற்ற மையத்தைக் கடந்து பயணிக்க முடியாது.. நீரின்றி, புல்லின்றி, குதிரைகள் பசியிலும் மனிதர்கள் தாகத்திலும் தவிக்க வேண்டியிருக்கும்; அது மரணத்துக்குரிய இடம். கட்டற்ற பாலை நெடுக விரைந்தோடிய மான்களும் காட்டுக் குதிரைகளும்தான் அங்கு நீரிருக்கும் இடத்தை அறிந்திருந்தன, ஆனால் தம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் சொற்களை அவை அறிந்திருக்கவில்லை. அவற்றுள் ஆழப் புதைந்திருந்த நீரின் மூச்சு, அவற்றின் கண்களுக்கு பேராழமும் தெளிவும் அளித்தது.
அப்போதுதான் தேம்பும் சுனையின் கதை தோன்றியிருக்கக் கூடுமோ? முதலில் அது ஒரு வதந்தியாய் துவங்கியது, மந்தை\ மேயத்துச் செல்பவர்களிடையே மெல்லப் பரவியது, கோபி பாலைவனத்தின் மையத்தில் ஓர் அதிசயச் சுனை இருக்கிறது, அது பாலையின் வரண்ட வெளிகளினுள் ஆழப் புதைந்து மறைந்திருக்கிறது. பாறைகளின் பிளவொன்றின் வழி நீர் சுரந்து அதன் கீழிருந்த மண்ணில் ஒவ்வொரு திவலையாய் விழுந்து தேங்குகிறது; பகலிலும் இரவிலும் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது, பருவங்கள்தோறும் நீர் சுரந்து கொண்டிருக்கிறது. சிறு பசும்புல் பரப்பொன்றும் செழிப்பான புதர்கள் சிலவும் அங்கிருக்கின்றன; அங்கே நீர் மின்னிக் கொண்டிருக்கிறது, புற்களினூடே வடிந்து செல்கிறது, அந்தச் சதுப்பின் பக்கங்களில் பாசி படர்ந்து செழித்திருக்கிறது. அது ஒரு சிறிய, ஆனால் நிலையான பாலைவனச்சோலை. இப்படிப்பட்ட ஒரு காட்சியைத் தன் இரு கண்களால் கண்டதாக ஒருவன் சொன்னான். அவன் வழிதவறிப் போயிருந்தான், பல நாட்கள் சொட்டுத் தண்ணீர் உட்கொள்ளவில்லை; மரணம் நெருங்கும் தருவாயில் அவன் மனம் மயங்கி புலன் மங்கத் துவங்கி விட்டிருந்தது,. அந்நிலையில் தேம்பும் சுனையைச் சுற்றியிருந்த ஈரப்புற்களில் பாதம் பதித்தபோது, அவன் மனமுடைந்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டான். சுனையின் தெள்ளிய இனிய நீரைத் தன்னால் கொள்ளும் மட்டும் அள்ளி அள்ளிக் குடித்துவிட்டு அழுதான்.
எந்த ஒரு மேய்ப்பனும் தன் மந்தையிலிருந்து தொலைந்த ஆட்டைத் தேடி பாலையின் ஆழத்தினுள் எப்போது செல்லும்போதும், தேம்பும் சுனை அருகில்தான் இருக்கிறது என்ற தீவிர உணர்வால் ஆட்கொள்ளப்படுவதுண்டு; அதோ, அங்கு சற்று தொலைவில் கண் முன்னிருக்கும் அந்தச் சாதாரண மணற்மேட்டின் பின்னிருக்குமா அது|? தன் மந்தையை அழைத்தவாறே அவன் ஒவ்வொரு குன்றாய்க் கடந்து செல்வதுண்டு, பசியும் தாகமுமாய் தொலைதூரத்தில் கண் வைத்து நடந்து செல்வான். பாலையின் பாழ்வெளி எல்லையற்ற வெறுமை கொண்டது, இருந்தாலும் அவன் தேம்பும் சுனை அங்கிருக்கிறது என்றே நம்பினான்.
தேம்பும் சுனை மண்ணின் தெய்வம். அதன் தண்ணீர் ஈடு இணையற்ற உயரத்திலும் தொலைவிலும் உள்ள ஓரிடத்திலிருந்து கீழிறங்கிற்று, அதன் ஒவ்வொரு துளியும் அதன் கீழ் வாழ்ந்த அத்தனைக்கும் உயிர்த்துடிப்பின் நாடியாய்த் தெறித்தது, அதன் ஒவ்வொரு துளியும் இறுக்கம் மிகுந்த வாழ்வின் யதார்த்தத்தில் பரவிப்பின் தூய, அழகிய தொன்மமாய் விரிந்தது.
ஆனால் போர்க்கலவரங்கள் மண்ணெங்கும் சூறாவளியென வீசிச் சென்றன, பாதிப்புக்குள்ளாகாத இடமே இல்லை. போர் முடிவுக்கு வந்தபோது, தேம்பும் சுனையின் அடையாளம்- பல தலைமுறைகளாய் அடுத்தடுத்த மேய்ப்பர்களுக்குக் கைமாற்றிக் கொடுக்கப்பட்ட ரகசியம்- வெளிப்பட்டது. அடையாளங்களற்ற கோபி பாலைவனத்தின் நெடுந்தொலைவில் அது உள்ள இடம் துல்லியமாய் குறித்து வைக்கப்பட்டது. காற்றிலாடும் பாலைப் பாதையில் ஒஸ்மானின் முரட்டுக் குதிரை கிளம்பிற்று, சுனையை நோக்கி மெல்ல முன்னேறியது. போர்ச்சுவாலைகள் பற்றிப் பரவிய அக்காலத்தில், மண் முழுதும் புகையும் மணல் துகளுமாய் படலமிட்டிருந்த அக்காலத்தில், மறைவிலிருந்த பாலைவனச் சோலைக்கு பல முறை தனியாய் அவன் பயணப்பட்டான். ஒரு கையில் குறுவாளும் மறு கையில் கடிவாளமுமாய் அவன் வந்திறங்குவான், தனக்குத் தேவையான நீரைச் சேகரித்துக் கொண்டு தன் உடல் வலுப்பெற அங்குத் தங்கியிருப்பான். அதன்பின் அவன் வடக்கு நோக்கியோ தெற்கு நோக்கியோ தன் பயணத்தைத் தொடர்வான், போர்க்களங்களுக்கு இடையில் முன்னும் பின்னும் விரைவான். மறைவிலிருந்த சுனைதான் “கஸக் மன்னன்” என்ற பெருங்கதையைத் தோற்றுவித்ததா? அப்போதிருந்த அதிகாரப்பூர்வ சாலைகளுக்கு அப்பால் வேறொரு பாதை இருந்தது என்பதும் பாலைவெளியில் தங்கு தடையற்று ஒருவன் பயணிக்கக்கூடிய வேறொரு பாதை இருந்தது என்ற நினைப்பும்- இதுதான் ஒஸ்மானின் பெருங்கதை; இதுதான் தேம்பும் சுனையின் தொன்மம்..
நான் மிகமிகச் சிறு பெண்ணாய் இருக்கும்போது தடம் 216ம் 217ம் அமைக்கப்பட்டிருக்கவில்லை, பூயூன் மாகாணத்துக்கும் உரும்கிக்கும் இடையில் நேரடி பேருந்துகள் கிடையாது (ஆனால் அப்போது அதிக அளவில் பூயூன் செல்பவர்கள் இருக்கவில்லை, அங்கு வாழ்ந்தவர்களுக்கும் வேறு இடங்களில் பிழைப்பில்லை). உரும்கி செல்வதற்கான ஒரே வழி கனிமங்கள் அல்லது மரக்கட்டைகள் கொண்டு செல்லும் லாரிக்களில் ஏறி, பல நாட்கள் குலுங்கிக் குலுங்கிப் பயணப்படுவதுதான். வடகிழக்கில் உள்ள கிராமங்களைக் கடந்து கோபி பாலைவனத்தின் எல்லையைச் சுற்றிச் செல்ல வேண்டும். அந்தச் சாலைகளில் கழிந்த இரவுகளை என்னால் மறக்க முடியாது- பாலைவனத்தின் பனிவெண்மை பாழ்வெளியில் தனியாய் நின்றிருந்த மண் சுவர்கள் கொண்ட அழுக்கு உணவகங்கள், அவற்றின் மேலே உயரே பளிச்சிடும் நட்சத்திரங்கள் நிறைந்த வானம்.
பல முறை நான் பெரியவர்களால் டிரக்கில் இருந்து தூக்கி எடுத்து இறக்கப்பட்டு, எங்கோ அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறேன்; இனம் புரியாத பரபரப்பில் என் இதயம் துடிக்கும், இந்த இடத்தில்தான் நான் இனி எப்போதும் இருக்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது போல். ஆனால் அப்போது என் பயணம் இன்னும் முடிவுக்கு வந்திருக்கவில்லை.
“கிழக்கு வழிப்பாதை” என்று அழைக்கப்பட்ட முடிவற்ற அந்தச் சாலை கோடையில் மட்டும்தான் பயணத்துக்கு உதவும். குளிர்காலத்தில் அதைப் பனி மூடியிருக்கும், அப்போது உரும்கி செல்லும் ஒரே வழி தேம்பும் சுனை வழிச் செல்லும் சாலைதான்.
அந்தச் சாலையில் பயணம் செய்த ஓட்டுனர்களுக்கு தேம்பும் சுனையில் தங்கிச் செல்வது ஒரு மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை; அவர்கள் காலையில் வந்தாலும் சரி, மாலையில் வந்தாலும் சரி, இரவெல்லாம் தங்கியிருந்துச் சென்றனர். குளிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்தனர், தேநீர் குடிக்கவும் உணவு சமைக்கவும் நெருப்பு மூட்டிக் கொண்டனர். சுனை கடந்ததும் அவர்களது பயணம் முடிவற்ற, பொட்டல்வெளியில் பல இரவு பகல்கள் நீண்டு செல்லப் போகிறது.
சில காலம் சென்றபின் மணமான ஒரு தம்பதியர் தேம்பும் சுனை வந்தடைந்தார்கள். அவர்கள் மத்திய சீனாவிலிருந்து நெடுந்தூரம் பயணித்து சின்ஜியாங் வந்திருந்தார்கள். அங்கு ஒரு கூடாரம் எழுப்பி எளிய உணவகம் ஒன்று துவக்கினார்கள். காய்கறிகள், அரிசி பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் முதலியவை அனைத்தும் அவ்வழிச் சென்ற வாகன ஓட்டுனர்களால் அவர்களுக்குத் தருவித்துக் கொடுக்கப்பட்டன. சிறிய இந்த உணவகம் வாகன ஓட்டுனர்களுக்கு சுவர்க்கம் போலிருந்தது. கோபி பாலைவனத்தின் குறுக்கே செல்லும் தங்கள் நீண்ட பயணத்தின் ஒரு நாளை நாகரிகச் சமூகத்தில் கழிக்கும் வாய்ப்பை அது அவர்களுக்கு அளித்தது.
வாழ்க்கை மிகக் கடினமாய் இருந்தது, ஆனால் நிச்சயம் தனிமைதான் தம்பதியர் எதிர்கொண்ட மிகப்பெரிய சோதனையாய் இருந்திருக்க வேண்டும். அவர்கள் இருந்த இடத்தின் முன் செல்லும் மண் சாலையில் எந்த வாகனமும் தோன்றாமல் பல நாட்கள் செல்லும். அவ்வப்போது அந்த ஆடவன் வழியாய்ச் செல்லும் காரொன்றில் ஏறிச் சென்று சில நாட்களுக்குப்பின் திரும்பி வருவான்..
அதன்பின் ஏதோ ஒன்று நடந்தது, அந்தப் பெண் அவனைப் பிரிந்து இளம் வாகன ஓட்டி ஒருவனுடன் போனாள். ஆடவன் அவள் திரும்பி வரக் காத்திருக்கவில்லை, சில நாட்களில் அவனும் அந்த இடத்தைவிட்டுப் போய் விட்டான். தேம்பும் சுனையில் அமைதி திரும்பியது.
சில நாட்கள் சென்றபின்னர் இந்தக் கதையில் இன்னொரு திருப்பம் ஏற்பட்டது. இளவேனில் பருவத்தில் அந்தப் பெண்ணும் வாகன ஓட்டியும் சுனைக்குத் திரும்பினர். மீண்டும் அங்கொரு கூடாரம் எழுந்தது, அதன்கீழ் அவர்கள் அறையொன்று அமைத்தனர். அங்கு மீண்டும் உணவகம் துவங்கப்பட்டது. சுனையருகில் அவர்கள் கோழிகள் சில வளர்த்தார்கள். அவர்கள் அளித்த எளிய உணவுக்கு அவை இறைச்சியும் முட்டைகளும் கொடுத்தன.
புதிய உணவகம் உறங்குவதற்கு ஓரிடமும் அளித்தது- கீழறையில் இருந்த பெரிய கட்டிலைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது என்றாலும். வாகன் ஓட்டிகள் தங்கள் குறுகிய காபின்களில் தூங்குவதை தற்காலிகமாக தவிர்க்கலாம்.
ஏற்கனவே ஏற்பாடு செய்து கொண்டது போல் அவ்வப்போது ஒரு பெருங்கூட்டம் திடீரென்று வந்து சேரும், அப்படி நேரிடும்போது, மேஜைகளுக்கு முன்னிருந்த பெஞ்சுகளும்கூட அனைவருக்கும் போதாமல் போகும். சிலர் தரையில் குத்துக்காலிட்டு உணவுண்ண வேண்டியிருக்கும். உறங்குவதற்கான இடம் இன்னும் அரிதாய் இருக்கும்; உணவக முதலாளி தன் படுக்கையை விட்டுக் கொடுப்பாள், மேஜைகளை இழுத்து ஒன்று சேர்ப்பாள், படுக்கை விரிப்புகளையும் போர்வைகளையும்கூட தரையில் விரித்துக் கொடுப்பாள். உறக்கத்தில் இப்படியும் அப்படியுமாய் கிடக்கும் உடல்களால் வீடு நிறைந்திருக்கும்.
அந்த ஆண்டு உரும்கிக்கும் பூயூன் மாகாணத்துக்கும் இடையே நேர்த்தட பேருந்துப் பயணம் துவக்கப்பட்டது, வாரம் ஒரு முறை பேருந்து வந்து சென்றது. தம்பதியருக்கு அமோக வருமானம் கிட்டியது; தேம்பும் சுனை அதுபோல் என்றும் பரபரப்பாய் இருந்ததில்லை. உணவகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர்.
கோடைப்பருவத்தில் போக்குவரத்துத் தடம் மலைவழித் திருப்பி விடப்பட்டது, தேம்பும் சுனை ஆளரவமற்றுப் போனது. இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதிய சில கட்டிடங்களை எழுப்புவது என்று தம்பதியர் முடிவு செய்தனர்.
சுனையின் கீழிருந்த ஊற்றுவாயை அகழ்ந்து அங்கு ஓர் ஆழமான குளம் அமைத்தனர், அதன்பின் ஒரு கால்வாய் வெட்டி, நீரை உணவகத்தின் கதவடிக்குக் கொணர்ந்தனர்.
சுனை சிறிது; அதன் துளிகளால் குளம் நிரம்ப கோடைக்காலம் முழுதும் காத்திருந்தனர். அதன்பின் தண்ணீரை மண்ணில் குழைத்து செங்கற்கள் செய்தனர். செங்கல் காய்ந்ததும் சுவர்கள் எழுந்தன. ஒரு ட்ரெயிலர் எடுத்துக்கொண்டு சில நூறு கிலோமீட்டர்கள் பயணித்து சட்டங்களும் விட்டங்களும் செய்வதற்கான மரம் கொண்டு வநதனர். புல்லும் தடித்த களிமண்ணும் கொண்டு கூரை அமைக்கப்பட்டது.
இருவரும் கோடைக்காலம் முழுதும் முதுகொடிய வேலை செய்தபின் வீடு நிறைவு பெற்றது, புதிய மேஜைகள் செய்யப்பட்டன, புதிய படுக்கைகள் இரண்டு சேர்க்கப்பட்டன. அங்கு அவர்கள் அமர்ந்திருந்து பனிக்காலம் வரவும் அதன் முதல் வாகனம் தன் ஹாரன் ஒலித்து வாசல் வந்து நிற்கவும் காத்திருந்தனர். கதவு அறைந்து திறக்கவும் மக்களின் ஆரவாரப் பேச்சொலி தேம்பும் சுனைக்கு மீண்டும் உயிரூட்டவும் காத்திருந்தனர்.
அவர்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.
அவர்கள் வீடு கட்டி முடித்த மறு ஆண்டு, கோபி பாலைவனத்தின் வேறொரு பகுதியின் குறுக்கே புதிய சாலை அமைக்கப்பட்டது. சுனை செல்லும் சாலை கைவிடப்பட்டது.
மலைகளின் வழி தொடரும், கோபி பாலைவனத்தின் ஏறி இறங்கும் நிலப்பரப்பின் ஊடே செல்லும், குண்டும் குழியுமாய் வளைந்து நீளும் அந்தப் பாதை முழுதும்; காலங்கள்தோறும் விரியும் அந்தச் சாலை; பண்டை தாகங்களோடும் துயரங்களோடும் ஊடுருவிச் செல்லும் பாதை; காலத்தின் மந்தகதியோடும் அச்சத்தின் ஆழத்துடனும் சுயமரியாதையின் ஆழத்துடனும் செல்லும் அந்தப் பாதை, கைவிடப்பட்டது. பாலைவெளியில் அது யாருமற்று திறந்து கிடக்கிறது, முடிவற்ற பசியாலும் தாகத்தாலும் நிறைந்து கிடக்கிறது. தொலைகாலத் தடங்கள் அதன் மேற்பரப்பில் ஒரு கனவு போல் பதிந்து கிடக்கின்றன், மனிதன் பயணித்தேயிராத பிரதேசங்களைக் காட்டிலும் வெறிச்சோடிக் கிடக்கிறது அந்தச் சாலை.
ஒரு கத்தியின் கூர்முனைபோல் கோபி பாலைவனத்தின் இதயத்தை நேராய்க் கிழித்துச் செல்கிறது புதிய பாதை. ஓரிரு நாட்களில் அவ்வழிப் பயணம் முடிவுக்கு வந்து விடும், பாலைவெளியில் கணப்பொழுதும் நில்லாமல் உயர்ந்து கடந்து விட முடியும். புரிந்து கொள்ளவும் குற்றம் சொல்லவும் முடியாத தன் அச்சில் இந்த பூமியின் மையம் இயல்பாகவும் நுட்பமாகவும் திரும்பி அதன் மறுபுறம் உள்ள பாழ்வெளி நோக்கி நிற்கிறது.
தேம்பும் சுனையின் கதை முடிவுக்கு வந்து விட்டதா? தொலைதூரத்தில் மெல்ல அமைதியாய் விழும் நீர்த்துளிகளுக்கு இனியும் உணர்த்துவதற்குப் பொருளுண்டா? மீண்டும் இவ்வழியாய் ஒரு பாதை வருவதற்கொரு காரணம் தோன்றுமா? கடின பயணத்துக்கும் போராட்டம் நிறைந்த வாழ்வுக்கும் மாற்றாய் அது அளிக்கும் ஒரு சிறு அளவு ஈரத்தைக் கைமாற்றிக் கொள்ள மீண்டும் ஒரு காரணம் இல்லாமலே போகுமா? அனைத்தும் நமக்குரியதென்றெண்ணி பொருட்படுத்தத் தவறுகிறோமா, தற்போது நமக்குரியவை அனைத்தையும்?
அந்தச் சிறிய பாலைவனச் சோலையின் திட்டில் இருவர் தங்கியிருக்கின்றனர். இப்போதும் அவர்கள் சுனைக்கரையில் இரவு பகலாய் செங்கற்கள் செய்து கொண்டிருக்கின்றனர், செங்கல் உலரக் காத்திருக்கும்பொது அவர்கள் இளமையின் சிரிப்புடன் வான் நோக்குகின்றனர். அவர்கள் அங்கிருக்கும்வரை, முடிவற்று காத்திருப்பில் உள்ள வரை, அந்த அழகிய கனவு கலைவதில்லை. இந்தப் பாலைவெளியில் நான் பயணித்தபோது, தேம்பும் சுனைக்குச் செல்லும் பழைய சாலையை நோக்கி என்னையறியாமல் ஈர்க்கப்பட்டேன். பாலைவெளியில் சாலையின் தடம் அவ்வளவு அழுத்தமாய் இருந்தது, போகுமிடமும் இல்லாமல் போக்கிடமும் இல்லாமல் அவர்கள் இருவரும் இருந்தபோது அந்தப் பெண் தன் காதலனிடம் துணிந்து பேசுவதை என்னால் அத்தனை தெளிவாய் கேட்க முடிந்தது. “தேம்பும் சுனைக்குப் போகலாம்,” என்று அவள் சொல்லக் கேட்டேன், பேசும்போது அவள் அழுது கொண்டிருந்தாள்.
oOo
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு – இந்த மொழிபெயர்ப்பு தோல்வியடைந்த முயற்சி என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்தக் கதையைப் பதிப்பித்தவர்கள், கதைக்கு வெளியே, நியூ யார்க் டைம்ஸ் விமரிசனத்தின் ஒரு சிறு பகுதியை மேற்கோள் காட்டியிருக்கின்றனர். அதில், கதையில் முக்கியமாய் உள்ள wildernessஐ எப்படி புரிந்து கொள்வது என்பதற்கான குறிப்பும் உள்ளது- “சீன எழுத்தாளர்களில் அமைப்புக்கு வெளியே எவ்வளவு தொலைவில் இருந்தும் பதிப்பிக்கப்பட இயலுமோ அவ்வளவு தொலையில் இருப்பவர் என்று லி யூவானைச் சொல்ல முடியும். அவர் நாடோடி வாழ்க்கை முறைகள் மற்றும் பருவ மாற்றங்கள் குறித்துச் சிந்தித்தவாறு மேற்கு சீனாவின் அல்டாய் பிரதேசத்தில் எழுதி வாழ்கிறார். அவரது இலக்கிய வாழ்வு, “காட்டுவழிப் பாதையில்” செல்கிறது என்று அவரே சொல்லிக் கொள்கிறார்- “காடு” என்பது வழக்கமாய் சீன மொழியில் அதிகார அமைப்புக்கு வெளியில் உள்ள விஷயங்கள் குறித்துச் சொல்லப்படுவது,” என்று எரிக் அப்ரகாம்சன் கூறியுள்ளதாய் இந்த மேற்கோள் தெரிவிக்கிறது (ஆங்கில மேற்கோள் அடிக்குறிப்பில் உள்ளது).
இதில் என் துரதிருஷ்டம்,, கோபி பாலைவனத்தின் wildernessஐ உணர்த்த தமிழில் நேரடிச் சொல் எதுவும் எனக்குப் புலப்படவில்லை. கதையோ, திருத்தப்படாத, அமைப்புகளுக்கு அப்பால் உள்ள வனாந்தரத்தின் அழகையும் துயரையும் ஒருங்கே பேசுகிறது. ஆனால் பாலையின் பாழ்வெளியைப் பேச வனாந்தரம் எத்தனை பொருத்தமாய் இருக்கும், வெறுமையை நிரப்ப காடுகளா உதவும்?
அடிக்குறிப்பு – Li Juan… may be as far outside of the system as Chinese writers are able to get and still publish. She lives and writes in the Altay region of Xinjiang, in western China, musing on nomadic lifestyles and the turning of the seasons. Her literary career has taken what she calls the “wild path”—“wild” being traditionally used in Chinese to refer to things outside the establishment.’ – Eric Abrahamsen in “The Real Censors of China” (New York Times, June 17 2015)
நன்றி – The Road to the Weeping Spring, by Li Juan, Translated by Lucy Johnston