“உள்ளே யாரு? கணபத்ஜி..! இந்தப் பக்கம் ஆபீஸ் ரூம் ஏன் ஒரே இருட்டா இருக்குது? லாந்தரை எடுத்துட்டு வாங்க.”
கணபத்துக்கு ஒரே வியப்பு. தோழர் பலராம் பட்னாவிலிருந்து எப்போ வந்தாரு? மற்ற தோழர்கள் ராலியிலிருந்து இன்னும் திரும்பவில்லை. பலராம்ஜி மட்டும் எப்படித் திரும்பி வந்துட்டாரு?
அவன் ஒரு தட்டை எடுத்து உருளைக்கிழங்கு பாத்திரத்தை மூடினான். பிறகு லாந்தருடன் வெளியே வந்தான். “லால் ஸலாம் காம்ரேட்! ராலியெல்லாம் நல்ல நடந்திச்சா?”
பலராமின் முகம் தொங்கிப் போயிருந்தது. இதை கண்டு கணபத்தின் மனமும் வாட்டமுற்றது. பலராமின் கடுப்பான முகத்தைக் கண்டு அவன் மனம் துணுக்குற்றது. வரப்போகும் சூறாவளியின் அறிகுறி அந்த முகத்தில் தெரிந்தது.
“ஆபீஸைத் திறங்க கொஞ்சம்.”
“கொஞ்சம் என்ன, முழுசாவே திறக்கிறேன்.” ‘எதுக்காக இந்த மாதிரி முகத்தைத் தூக்கி வச்சிட்டுப் பேசறீங்க?’ என்று கணபத் மனதிற்குள் எண்ணமிட்டான். ஒரு தடவை பட்னா சென்று விட்டால் இந்தத் தோழர்கள் எப்படி மாறி விடுகிறார்கள்..
அலுவலகம் எனப்படும் குடிசையின் கதவைத் திறந்தான் கணபத். வெகுநாளாகவே அடைத்துக் கிடந்த அறையிலிருந்து மக்கின வாடை அடித்தது. லாந்தர் ஒளி இரண்டு மூன்று முறை ‘பக் பக்‘ என்றுகண்சிமிட்டியபின்ஆடத்தொடங்கியது
பலராம் தன் முகத்தை இன்னும் அதிகமாகக் கோணிக்கொண்டு, “லாந்தரில் எண்ணெய் விட்டிருக்கிறாயா, இல்லே தண்ணியா? நல்ல சிம்னியா வாங்கிப் போடக் கூடாது?” என்றார்.
கணபத்துக்கு சாப்பாட்டு நினைவு வந்தது. ஆறின சோறு அவனுக்கு ஒத்துக் கொள்ளாது. ஆறிய சோற்றைச் சாப்பிட்டால் ‘வாயு‘ தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடும். அவன் அடுக்களையிலிருந்த விளக்கை ஏற்றியவாறு பலராமிடம் சொன்னான், “எண்ணெயைப் பற்றியும், சிம்னியைப் பற்றியும் கேக்குறீங்களா காம்ரேட், நான் முதல்லே சாப்பிடட்டும், அதுக்குப் பொறகு பதில் சொல்றேன்.. உங்களுக்கும் டீ–கீ குடிக்கணும்னா சொல்லுங்க, தண்ணி வைக்கிறேன். அடுப்பிலே இப்பக்கூட நெருப்பு இருக்குது. பொட்டலத்திலே டீத்தூளும், எலுமிச்சம்பழமும் கூட இருக்குது.’
கறுத்துப்போன அலுமினிய ஏனத்தை அடுப்பில் ஏற்றி விட்டு கணபத் அடுப்பை எரிய விட்டான். பிறகு உருளைக்கிழங்கை உரிக்கலானான். உருளைக்கிழங்கு மசியலும், சுடச்சுடச்சோறும் கணபத்தைப் பொறுத்தவரையிலும் இதைவிட மேலான பதார்த்தம் உலகில் வேறு எதுவுமே இல்லை. குஸூமி சில நேரங்களில் அவனை ‘சோற்றுப் பண்டாரம்‘ என்று கேலி செய்வாள். அதற்கு கணபத் சிரித்தவாறு ‘நீ கூடத்தான் சாப்பாட்டு ராமி‘ என்று அவளைக் கிண்டல் செய்வான். பலராம்ஜி இன்று எச்சரித்த நேரத்தில் குஸூம் மட்டும் உள்ளே இருந்தால் கணபத் தன்னுடைய கோபத்தை அவள் மீது காட்டியிருப்பான், “வேலை செய்ய விருப்பம் இல்லேன்னா உட்டுட்டுப் போறதுதானே. உன் மவனைப் போலவே நீயும் சோம்பேறிதான்,” என்று கூறியிருப்பான். அதைக்கேட்டு குஸூமி சிரித்துக் கொண்டே புடவைத் தலைப்பின் மறைவிலிருந்து பதிலுக்கு ஏதாவது சொல்லுவாள்.
மசியல் பண்ணிக் கொண்டிருக்கும்போது கணபத்துக்கு காலைப் பேப்பரில் படித்த செய்தி நினைவுக்கு வந்தது. “நம்முடைய ஜவான்கள் எதிரியின் டாங்குகளை நொறுக்கி மசியல் செய்துவிட்டனர்-“
வெங்காயம், மிளகாய், கொத்தமல்லியை அரிந்து எண்ணெயில் வதக்கி கிழங்கை அதனுடன் சேர்த்துக் கிளறினான். பளபளக்கும் பித்தளைத் தட்டில் சோற்றை இடும்போது அதிலிருந்து எழும் ஆவியின் நறுமணம் உடலிலும், உள்ளத்திலும் நிறைந்து உவகையளிக்கிறது. சுடுசோற்றின் இந்த நறுமணத்தை முதன்முதலாக அவன் தொண்டர்கள் முகாமில்தான் நுகர்ந்தான். அன்றிலிருந்து இன்று வரை எத்தனை முகாம்கள், ஆசிரமங்கள், ராலிகள், மாநாடுகள், சிறைச்சாலைகள் என்று எத்தனை இடங்களில் கணபத் சாப்பிட்டிருக்கிறான். ஆனால் இந்த நறுமணம் எங்கும் எப்போதும் கிடைக்குமா?
திருப்தியாக வயிறு நிறையச் சாப்பிட்ட பிறகு தட்டையும் அடுப்பங்கரையையும் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்தான். காலையில் குஸூம் வந்து அடுப்பை நன்கு மெழுகித்தருவாள். அவன் அடுப்பங்கரையிலிருந்தே குரல் கொடுத்தான், “சோபித்லால், சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போ!”
மரப்பெட்டியிலிருந்து டம்ளரை வெளியில் எடுத்து அதில் பலராம்ஜிக்காக எலுமிச்சம்பழ டீயை ஊற்றி கையிலே டீ டம்ளரை ஏந்தியவாறு அலுவலக அறையை அடைந்தான். சோம்புப் பொடியைத் தவிர வேறெந்தப் பழக்கமும் கணபத்துக்குக் கிடையாது. வெற்றிலை, புகையிலை கூடப் போடுவதில்லை.
ஒருவாய் டீயை உறிஞ்சியவுடனேயே பலராம்ஜியின் கோணிய முகம் நேராகி விட்டது. தோல்பையில் காகிதங்களைப் போட்டுக் கொண்டே பலராம்ஜி கேட்டார், “நீங்களே ஏன் சமையல் பண்றீங்க? சோபித்தின் அம்மா என்ன செய்யுறா?”
பலராம்ஜி பொடி வைத்துப் பேசுவதை கணபத் புரிந்து கொண்டான். இதன் மூலம் பலராம்ஜி கேட்க விரும்புவது இதுதான்: ‘சோபித்துக்கு மாதம் மூணு ரூபாயும், குஸூம்க்கு ஏழு ரூபாயும் எதுக்காகக் கொடுக்கணும்?’
பலராம்ஜியின் அடுத்த கேள்வி, “அப்போ.. இங்கே ஏதாவது சந்தா–கிந்தா வசூலாச்சா?”
கணபத் ஏப்பம் விட்டவாறு பதிலளிக்க ஆரம்பித்தான், “அதான் சொல்லிக்கிட்டிருந்தேன்லெ காம்ரேட்-“
பலராம்ஜி குறுக்கிட்டார்,” இதப்பாருங்க, நீங்க எதுக்கு வாய்க்கு வாய் ‘காம்ரேட், காம்ரேட்‘னு சொல்றீங்க?”
“இதென்ன கூத்தா இருக்குதே! காம்ரேடைக் காம்ரேட்னு சொல்லாமல் எப்படிக் கூப்பிடணும்? இதிலே புதுசா என்ன வந்திட்டுது? 1930இல் பார்ட்டியிலே சேர்ந்ததிலிருந்து காம்ரேட்-“
“அந்தக் காலத்து விஷயத்தை உடுங்க. இன்னிக்கி யாரும் இப்படிக் கூப்பிடறதில்லை– நீங்க இந்த மாதிரி பேசறதைப் பார்த்துத்தான் எல்லாரும் சிரிக்கிறாங்க.”
“இதிலே சிரிக்கிறதுக்கு என்ன இருக்குது!”
“சரி, எதுக்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்றதே உங்க தொழிலாப் போச்சு. வாதத்திலே உங்களை எவனும் ஜெயிக்க முடியாது. ஆமாம், சந்தாவைப் பத்தி என்ன சொல்லிட்டிருந்தீங்க?”
“சொல்ல என்ன இருக்குது? ஆறு மாசமாச்சு, ஸாஹூ கடை பாக்கி அப்படியே நிக்குது. மாவட்ட அளவிலே ராலி நடத்தினப்ப, தேஷன் மார்வாடியின் ஐம்பது ரூபாய் நிலுவையும் அடைந்த பாடில்லை. சணல் அறுவடை சமயத்திலே சந்தா கிடைக்கும்னு எதிர்பார்த்தோம். ஆனா, பஞ்சத்திலே அரைப்பட்டினியும், முழுப்பட்டினியுமாகக் கிடக்கறப்ப, யாரு சந்தா கேட்க, யாரு கொடுக்க? இப்ப நெல் அறுவடைக்காலம் நெருங்கிக்கிட்டிருக்கு, ஆனா காம்ரேடு எல்லாரும் ‘அவுட்‘-“
பலராம்ஜி திடுக்கிட்டார்,”அவுட்டா? யாரு அவுட்டு?”
கணபத் புன்னகை புரிந்தவாறு, ” அவுட்டுன்னா அந்த அர்த்தம் இல்லே. எல்லா காம்ரேடும் ஊரிலே இல்லேன்னு அர்த்தம்,” என்று விளக்கினான்.
பலராம்ஜி முகம் மீண்டும் கடுப்பாகி விட்டது. எழுந்து கொண்டே, “கணபத்ஜி, நீங்க சொல்றது சரிதான். இனி எல்லாருமே ‘அவுட்’ ஆகவேண்டியதுதான்.” என்றார்.
“அதாவது!”
“அதைப் புரிஞ்சுகிட்டு நீங்க என்ன செய்யப் போகிறீங்க? ஹை லெவலிலுள்ள கொள்கைப் பூசல் உங்களுக்கு எங்கே புரியப் போவுது?”
கணபத்துக்கு எது புரியுமோ, புரியாதோ, எதிராளியின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தெரியும். பலராம்ஜியின் பேச்சில் ஒரு அலாதியான முத்தாய்ப்பைக் கண்டு கொண்டான். உருளைக்கிழங்கு மசியலில் காறல் எடுத்த எண்ணெய் வாசம் வீசுவதுபோல.
ஹை லெவல்! பலராம்ஜி இங்கிலீஷ் படிக்காவிட்டால் என்ன? நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சொற்கள் அவருக்கு அத்துபடி. அவரது வாயில் உருளும் இங்கிலீஷ் வார்த்தைகள் ஏராளம்– கேபிடலிஸ்டு, பூர்ஷூவா, ப்ரொலெடேரியட், ரியாக்ஷனரி, காந்தியைட், பார்ட்டி லிடரேச்சர், இன்னும் எத்தனையோ சொற்கள்.
பலராம்ஜி மட்டுமல்ல, எல்லா புது ‘காம்ரேட்’களும் கணபத்தை ஒரு காசுக்கும் பயனில்லாத ஆளாகவே கருதுகின்றனர். ஜியாவுதீன், சைலேந்தர், கோபால்ஜி இவர்களாக இருந்தால் ராலி அல்லது மீட்டிங்கிலிருந்து திரும்பி இதேபோல முகத்தை ‘உர்’ரென்று வைத்துக் கொண்டபிறகு, கண்ணையும் முகத்தையும் உருட்டி ஏதேதோ பேசியபிறகு, வீட்டை நோக்கி நடையைக் கட்டுவார்கள் –பெண்சாதிமார்களுடன் ஒட்டிக் கொண்டு உறங்குவதற்கு. ஆபிஸ் செக்ரடரி பலராம்ஜி முன்பெல்லாம்– அதாவது மணமான புதிதில்– சூரியன் மறையும் முன்பே ஆபீஸை மூடிவிட்டு வீட்டுக்கு ஓடிவிடுவார்.
இப்போது பலவருஷங்களாகவே எங்கும் ஒரு மௌடீகம் பரவியிருப்பதை கணபதி உணர்கிறான். எவர் மனதிலும் உற்சாகமின்மை. இந்த நோய் கணபத்தின் பார்ட்டியையும் பீடித்துக் கொண்டு விட்டதா என்ன? இந்தத் தடவை மாநாட்டில் இதைப்பற்றிக் கேள்வி எழுப்ப வேண்டியதுதான்.
அவன் இந்தக் கேள்வியை எழுப்பியதுமே இளவட்டத் தோழர்கள் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். சிலர் அவனைப் பார்த்து உரக்கக் கூவுவார்கள். “காம்ரேட் கணபத்! இந்தக் கேள்வியை நீங்கள் கல்ச்சுரல் ப்ரோக்ராம் நடக்கையில் மேடையிலே கேட்கலாம் இல்லே!”
“ஹூம், மேடையிலே கேட்கணுமாம், மேடையிலே-“
விரலை மடக்கி வருஷக்கணக்கு போடத் தேவையில்லை. கணபத் ஏற்கனவே கணக்குப் போட்டு வைத்திருக்கிறான். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் முதன்முதலாக அவன் ஆரியசமாஜ் மேடைகளில் கஞ்சிரா அடித்துக்கொண்டு ‘தீண்டாமை எதிர்ப்பு’ப் பாடல்களைப் பாடத் தொடங்கினான்.
அந்த மேடைகளின் நினைவுடன் பர்வதியா நினைவும் கூடவே வந்தது. பர்வதியா கீழ்சாதிப் பெண். அவள் கையால் தண்ணீர் குடித்தாலே அந்தக் காலத்தில் சாதியிலிருந்து விலக்கி விடுவார்கள். அப்படிப்பட்ட பர்வதியாவின் இதழ்களில் அவன் முத்தம் கொடுத்தான். எப்பேர்ப்பட்ட தியாகங்கள் செய்ய வேண்டி வந்தாலும் சரி, அவளை விட்டுப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான். சாதி இனத்தினர் மட்டுமல்ல, குடும்பத்தினரும் அவனைப் பாடாய்ப் படுத்தினர். கணபத் ஆரியசமாஜ் செயலரிடம் புகார் செய்தான். ஆனால் அதற்குள்ளாக பர்வதியாவின் தகப்பன் குடும்பத்துடன் கிராமத்தை விட்டே ஓடிப் போய்விட்டான்.
கணபத் பிறகு அந்தக் கிராமத்துப் பக்கம் திரும்பவே இல்லை. தாய் தந்தையர், அண்ணன், தங்கை, குடும்பம், கிராமம் எல்லாவற்றையும் துறந்து அறப்பணியிலும், சமூக சேவையிலும் ஈடுபட்டான். ஆரிய சமாஜ் பொதுக்கூட்டம் எங்கே கூடினாலும் சரி, கணபத் கையில் கஞ்சிரா எடுத்துக் கொண்டு ஆரம்பித்து விடுவான். “இந்து சகோதரரே, சிந்திப்பீர் சற்றே-“
இந்தப் பாட்டைப் பாடிய குற்றத்துக்காக 1930இல் அவனைப் போலீஸ் பிடித்தது. சிறைத்தண்டனையும் கிடைத்தது. சிறையில் சர்மாஜியைச் சந்தித்தான். விளைவு? ஆரிய சமாஜத்தை விட்டு அவன் கம்யூனிஸ்டு ஆகி விட்டான்.
மீசை மயிரை வெட்டும் தன்னுடைய கத்திரிக்கோலினால் சர்மாஜி அவனுடைய உச்சிக்குடுமியைக் கத்திரித்து விட்டார். பிறகு பூணூலை அறுத்து அதைப் பைஜாமா நாடாவாகக் கட்டி விட்டார். பிறகு, “இன்றிலிருந்து உன்பெயர் காம்ரேட் கணபத். சரியா? சிங்கு–கிங்கு எதுவும் கிடையாது. வெறும் காம்ரேட். தெரிஞ்சுதா?”
பாவன்தாஸும் நண்பர்களும் சேர்ந்து கணபத்தை இதற்காக நையாண்டி செய்தனர். ஆனால் கணபத் அசைந்து கொடுக்கவில்லை. சர்மாஜி சொல்லிக் கொடுத்த கேள்வியை கிளிப்பிள்ளை போல பாவன்தாஸிடம் கேட்டான்– “ஏன்ய்யா, ராட்டையைச் சுத்தினா, ஆட்டுப்பாலைக் குடிச்சா சுயராச்சியம் கெடச்சிடுமா? சொல்லுங்க-“
சிறையிலிருந்து வெளிவந்த சத்தியாக்கிரகத் தொண்டர்களில் “பார்ட்டி காம்ரேடு” அதாவது ‘கம்யூனிஸ்டு’ ஆனது கணபத் ஒருவன்தான். மாவட்டத்திலேயே அவன் ஒருவன்தான் கம்யூனிஸ்டு. ஒரே வருஷத்துக்குள் பீகார் மாநிலத்தில் பல ‘விவசாயிகள் மாநாட்டிலும்’, ‘தொழிலாளர் முன்னணிகளிலும்’ உற்சாகமாகக் கலந்துகொண்டு கணபத் உரக்கக் கோஷமிட்டான்; மறியல்கள் செய்தான், பாடல்கள் பாடினான். ‘தீண்டாமை ஒழிப்பு’ கீதத்துக்குப் பதிலாக சர்மாஜி கற்றுத்தந்த சர்வதேசியப் பாடலை இசைத்தான்– ‘செங்கதிர் தோன்றுது வானத்திலே, செம்மை படருது வானத்திலே! விவசாயிகளே! பாட்டாளிகளே! எழுவீர், எழுவீர் தோழர்களே!”
கணபத் சுத்த சைவமாகத்தான் இருந்தான், பிறந்ததிலிருந்தே தீவிர சைவம். ஏன், கருப்பையிலிருக்கும்போதே சைவம் தவிர எதுவும் தெரியாதவன். அப்பேர்ப்பட்ட கணபத், சர்மாஜி வைத்த தேர்வில் அமோக வெற்றி பெற்றான். கோழிமுட்டை என்ன, முகத்தை ஒரு சற்றும் கோணாமல் கோழிக்கறியை அல்வா சாப்பிடுகிற மாதிரி விழுங்கி விட்டான். சர்மாஜிக்கு ஒரே குஷி, “சபாஷ் காம்ரேட்! நீதான் பிறவிப் புரட்சிக்காரன்,” என்று தட்டிக் கொடுத்தார்.
பள்ளித் தேர்விலே திரும்பத் திரும்பத் தோற்று விட்டு, கட்சி வேலைக்கு வரும் இன்றைய பிள்ளைகளுக்கு ‘காம்ரேட் பயிற்சி’ பற்றி என்ன தெரியும்– அந்தக் காலத்திலே கட்சி ஆபீஸிலே ஏழு தோழர்களுக்குச் சேர்த்து பொதுவாக இரண்டு பைஜாமா, மூணு அரை நிஜார், ஒரே ஒரு எட்டு முழ வேட்டி இருக்கும். மாறி மாறி உடுத்துக் கொண்டு எத்தனை சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். வாரம் பூரா சத்துமாவைத்தான் தோழர்கள் கரைத்துக் கரைத்துக் குடிப்பார்கள். இப்போதோ – ஒவ்வொரு ராலியிலும் இலை போடும்போதே புரட்சிக்கொடியை உயர்த்தி விடுவார்கள் தோழர்கள். “என்ன அநியாயம் இது, அவங்க பூரியும், அல்வாவும் சாப்பிடுவாங்களாம், எங்களுக்கு மட்டும் அவல்பொரியா, இதெல்லாம் இங்கே நடக்காது, இது அக்கிரமம், அநியாயம்!”
இன்றைக்கு எந்தத் தோழரிடமாவது போய், ‘இதப்பாருங்க, ஜீப் கிடையாது, மைக்கும் கிடையாது, கூட்டம் நடத்தணும்’ அப்படீன்னு சொல்லிப் பாருங்கள். பொட்டில் அடித்தாற்போல திருப்பிக் கேட்பார்கள், “எங்களை என்ன ‘வாலண்டியர்’னு நெனச்சீங்களா?” சொந்தக் கட்சியின் கொடியைத் தோளில் தூக்கிச் செல்லத் தயக்கம். ஏதோ மானம் போகிற மாதிரி நினைப்பு. அந்தக் காலத்தில் கணபத் ஒண்டியாகவே தண்டோராப் போட்டுக் கூப்பாடும் போட்டிருக்கிறான், ‘சகோதரர்களே, நாட்டின் வறுமையை விரட்டியடிக்க, முதலாளித்துவ சக்திகளை முறியடித்து விவசாயிகள்–பாட்டாளி மக்களின் ஆட்சியைக் கொண்டு வர, இன்று மாலை நான்கு மணிக்கு– “
கணபத் மட்டும் இல்லாமலிருந்தால் இன்று அந்த கிராமத்தில் ‘ஷஹீத் கிஸான் ஆசிரமம்’ நிறுவப்பட்டிருக்குமா? ஈவிரக்கம் இல்லாமல் மூன்று ஜமீன்தார்கள் அடக்குமுறை தர்பார் நடத்தும் இந்தப் பிரதேசத்தில் கட்சித் தொண்டர்களுக்கு ‘இம்’ என்று தும்முவதற்குக் கூட அச்சம். பட்டப்பகலில் கொலை செய்து சடலங்களையே காணாமல் அடித்த மூன்று ஜமீன்தார்களையும் எதிர்க்க பார்ட்டி என்ன செய்தது தெரியுமா? அவர்களுடைய எண்ணூறு ஏக்கர் நிலத்தை உழவிடாமல் மறியல் செய்வோம் என்று முடிவெடுத்து விட்டுத் தூங்கப் போய்விட்டது. எட்டு மாதங்களாகியும் அசையவே இல்லை. அந்த நிலங்களில் போராட்டம் நடத்த எந்த வீர சூர காம்ரேடும் ஓரடி எடுத்து வைக்கவில்லை. ஒரு புரட்சிக்கார விவசாயியும் முன்னே வரவில்லை. கடைசியில் இந்த கணபத்தான் சவாலை ஏற்றுக் களத்தில் இறங்கினான்.
ஜமீன்தாரின் ஆட்கள் அவனை நையப் புடைத்துத் தூக்கி எறிந்து விட்டார்கள். அவர்கள் நினைப்பில் கணபத்தின் கதை முடிந்து விட்டது. ஆனால் கணபத் செத்துப் பிழைத்து விட்டான். மருத்துவ மனையில் நினைவு திரும்பிய உடன் கோஷமிடலானான்,”உழவு நிறுத்தப் போராட்டம் வாழ்க! பிஸன்பூர் விவசாயிகள் போராட்டம் வாழ்க!” அன்று கணபத் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தது. எண்ணூறு ஏக்கர் நிலமும் விவசாயிகளுக்குச் சொந்தமாகவே, அதிலிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை எல்லா விவசாயிகளும் சேர்ந்து ஆசிரமம் அமைப்பதற்கு அளித்தார்கள். வற்புறுத்தல்கள், ஏசல்களுக்குப் பிறகுதான்.
ஆசிரம் ஆரம்பித்தபிறகு மாவட்டத் தோழர்களுக்கு ஒரு புது வேலை. தைமாத அறுவடையானதும், கோணிப்பைகளுடன் கிளம்பி தானிய வசூல் செய்வது. பிறகு அவர்களுடைய தேவைகள்.. ‘தங்கைக்குத் திருமணம் வருகிறது. உதவி வேண்டும்’, ‘குடும்பச் செலவுக்குக் கட்டவில்லை, பணம் வேண்டும்!” கணபத் தன்னந்தனியாக நின்று மாவட்டத் தோழர்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வான்.
லாந்தர், ‘குபுக்,’ ‘குபுக்’ என்று குதித்து விட்டு பொசுக்கென்று அணைந்து விட்டது. சித்தர் பாடல் ஒன்று நினைவுக்கு வரவே கணபத் பாடலானான் – ‘வாழ்வே பொய்யடா – மாயனார் குயவன் செய்த மண்பாண்டம் தானடா.”
கணபத் கனவு கண்டான் – திருடன் ‘பார்ட்டி’ ஆபிஸ் பணப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான்! கணபத் ஓலமிட எண்ணுகிறான் – ‘திருடன், திருடன்! விடாதே பிடி! என்று ஓலமிட நினைக்கிறான். குரல் எழும்பவில்லை.
கணபத் கண்டது சொப்பனமில்லை; மெய்யாகவே நடந்துவிட்டது.
காலையில் தோழர் சந்திரிகா பாபு அந்த அவலச் செய்தியைத் தெரிவித்தார், ‘கட்சி இரண்டாகப் பிளந்து விட்டது!”
இந்தச் செய்தியைக் கேட்டதும், கணபத்துக்குத் தலையில் இடி விழுந்தது போல ஆனது. பார்ட்டி ஆபிஸிலிருந்த காகிதம், சந்தா ரசீது, வவுச்சர் எல்லாம் அபேல். கணபத் சொன்னான், “நேத்து ராத்திரி ஒன்பது மணி போல தோழர் பலராம் வந்தார்-”
கணபத் வாயை மூடவில்லை, பளார் என்று கன்னத்தில் ஓர் அறை விட்டார் தோழர் சந்திரிகா பாபு. அதிர்ந்து போன கணபத் ஏதோ சொல்ல யத்தனித்தான். அதற்குள் சந்திரிகா கூச்சலிட ஆரம்பித்து விட்டார், “ஏன்ய்யா, மூளை இருக்குதா? உம்மை எதுக்காக இங்கே வச்சிருக்கு? சும்மா சந்தா வசூல் பண்ணி வயித்தை நிரப்பவா? பலராம் இப்பவெல்லாம் அதிருப்தியாளர் குழுவில் சேர்ந்திருக்கிறார்னு தெரியாதா?”
கணபத் பாவம் உள் கட்சிப் பூசலைப் பற்றி என்ன அறிவான்? அப்பாவித்தனமாகப் பதிலளித்தான், “எனக்குத் தெரியாது காம்ரேட். யார் எதிர்ப்பாளர், யார் அடாவடிக்காரன் என்பதையெல்லாம் நான் என்ன கண்டேன்?”
சந்திரிகா பாபு கைத்துப்பாக்கிபோல சுட்டுவிரலை கணபத்தை நோக்கி நீட்டியவாறு, ‘நீ துரோகி, கட்சிக்கு எதிரி, கயவாளி!” என்றார்.
ஒவ்வொரு சொல்லும் கணபத்தின் உடலில் கூரம்புபோலத் தைத்தன. இந்தச் சண்டையை வேடிக்கை பார்க்கக் கிராமத்து ஜனங்கள், ஆண்களும், பெண்களுமாகக் கூடினர். “துரோகி, கட்சியின் எதிரி, உளவாளி, கயவாளி-”
காம்ரேட் சந்திரிகா பாபு எச்சரித்து விட்டுச் சென்றார். “நீங்க செய்த துரோகத்துக்கு கட்சி நிச்சயமா நடவடிக்கை எடுக்கும். இப்ப உடனடியா நான் உம்மை டிஸ்மிஸ் செய்யறேன். வெளியே போம்-!”
காம்ரேட் சந்திரிகா அந்தப்பக்கம் போனாரோ இல்லையோ, இந்தப் பக்கத்திலிருந்து காம்ரேட் பலராம் தன் புதிய சகாக்களுடன் வந்தார். கணபத்தின் கண்களில் நிரம்பியிருந்த நீர் பொலபொலவென்று உதிர்ந்தது.
பலராம் அவனைத் தேற்றினார், “காம்ரேட் கணபத், இதற்கெல்லாம் போய் வருத்தப்படலாமா? இந்த மாதிரி தான்தோன்றி தலைவர்களைத் தைரியமா எதிர்க்கணும். இந்த அற்ப் பூர்ஷ்வா குள்ள நரிகள் கட்சியைத் தன் சொந்த சொத்துன்னு நெனச்சு ஆட்டம் போடுது.”
கணபத் கரகரத்த குரலில் பேசினான், “காம்ரேட் பலராம், நீங்க ஏன் இந்த மாதிரி காரியம் செஞ்சீங்க? நீங்க ராத்திரி பார்ட்டி பேப்பர்களை எடுத்திட்டுப் போவீங்கன்னு தெரிஞ்சா நான்…”
பலராமுக்குப் பதிலாக அகானு மெஹ்தோ சட்டைக் கையைச் சுருட்டியவாறு முன்னுக்கு வந்தான், “கணபத்ஜி, நீங்க தண்ணியிலே மூழ்கி தண்ணி குடிக்கிறீங்க. அப்புறம் விசயம் யாருக்கும் தெரியாதுன்னு நெனக்கிறீங்க, இது பார்ட்டி ஆபீசு, தெரியுமா? துலுக்கச்சி கம்மனாட்டியோடு கொஞ்சற இடம் இல்லை.”
கணபத்துக்கு கட்டின துணியை யாரோ உரித்த மாதிரி இருந்தது. ஊரார் முன்னிலையில் மானம் போய் விட்டது. அவன் துரோகி, கட்சியின் எதிரி, கயவாளி.. இவ்வளவும் போதாது என்று ஒழுக்கம் கெட்டவன் அப்படீன்னு புதிய பட்டம். இன்னும் மீதி என்ன இருக்கிறது கேட்க?
பலராம் போகும்போது சிவப்பு நிற நோட்டீஸ் கட்டு ஒன்றைக் கையில் கொடுத்து, ‘இன்னிக்கே இதை எல்லா இடத்திலேயும் விநியோகம் செய்யணும். கடைத்தெரு, ஸ்டேஷன் ஒரு இடம் விடக் கூடாது, தெரிஞ்சுதா?” என்றார்.
கணபத் குடிசைக்குள்ளே சென்றான். வெட்டிச் சாய்த்த மரம் போலப் படுக்கையில் விழுந்தான். ஒவ்வொரு மயிர்க்காலையும் வசவுகள் தாக்கிக் கொண்டிருந்தன. சிவப்பு நோட்டீஸைப் படிக்கலானான். கட்சியின் பெருந்தலைவர்கள் மக்களை எச்சரிக்கின்றனர் – “பாட்டாளி மக்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்களின் பணப்பையினால் கட்சி நடத்தும் ஏமாற்றுக்காரர்களிடம் ஜாக்கிரதை..!”
இதற்குமேலே ஒருவரி கூடப் படிக்க முடியவில்லை. வசவுகள், திட்டுகள், சேற்றை வாரி எறிந்தாற்போல.. எல்லாமே பாழ்.
கணபத்தின் வயிற்றில் பித்தம் அதிகரித்தது. வாயுத்தொல்லையும் சேர்ந்து கொண்டது. எட்டு வீட்டுக்குக் கேட்கும்படி ஏப்பம் வரும். வாந்தி– குமட்டலும்…
யார் அசல், யார் போலி? காம்ரேட் சோர்கடேயா, காம்ரேட் ஜாதவா? சென்ற வருடம் மாநில விவசாயிகள் மாநாட்டில் தலைமை வகிக்க வந்தவர் சோர்கடேஜி. அவரை வரவேற்றுப் பேசும்போது ஜாதவ்ஜி அவரைப் புகழ்ந்து தள்ளினாரே– எல்லாம் பொய்யா? இப்போது சோர்கடேஜி பீகார் கட்சியை தேசத்துரோகிகளின் கும்பல் என்று சொல்கிறார் இந்த நோட்டீஸில்.
கணபத் மனதிற்குள்ளேயே திட்டமிட்டான், பட்னா போகணும், டில்லி போகணும், எல்லா இடத்திலும் பார்ட்டிக்காரர்கள், தலைவர்களையெல்லாம் பார்த்துப் பேசணும், வயிற்றெரிச்சல் தீர கதறியழுது மக்களின் நிலைமையைப் புரிய வைக்கணும், கஞ்சிரா தட்டிப் பாடணும், ‘பையா ஜகட் ந ஜாஹூ கசஹரியா..” (அண்ணன் தம்பிமாரே, குடுமிப்பிடிச் சண்டை வேண்டாம், கோர்ட்டுக்கும் போக வேண்டாம்)
ஜாதவ்ஜியும், சோர்கடேஜியும் கட்சிக்கட்டடத்தின் முன் வாளை வீசிப் போரிடுகின்றனர். கணபத் நடுவிலே பாய்ந்து விலக்குகிறான்– ‘அமைதி, அமைதி’. இருவரின கைவாள்களும் கணபத்தின் கழுத்தில்.
கணபத்திற்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு நாடகத்தின் காட்சி விரிந்தது; பின் மறைந்தது. அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கியது. மலேரியாக் காய்ச்சல் வருவதற்கு முன் இப்படித்தான் உடலெங்கும் நடுக்கம் எடுத்துத் தூக்கித் தூக்கிப் போடும்.
கணபத் கம்பளியைப் போர்த்திக் கொண்டான். எழுந்து வாந்தியெடுத்தான். பெருஞ்சீரகத் தூளை மென்றுகொண்டே படுத்தான். குளிர்நடுக்கம், கடுங்காய்ச்சல், வாயுத்தொல்லை வேறு! பிறகு புலம்பல்.நாற்பது வருடம் கழித்து– அரசாங்கம் மலேரியாவை ஒழித்த பிறகு– முதல் தடவையாக சுரம் பிடித்துக் கொண்டது. கடந்த நாற்பது வருடங்களில் அவனுக்கு ஒரு தலைவலிகூட வந்தது கிடையாது. வாயிலிருந்து ஈனக்குரல் எழும்பியது-‘அம்மா-! பார்வதீ..ஈ..ஈ!”
கண் விழித்தான். அதோ சர்மாஜி. கையில் சிவப்பு ஆப்பிள், கமலா ஆரஞ்சு, பழச்சாறு பிழிந்து கணபத் கையில் தருகிறார். “காம்ரேட் குடிங்க! உள்ளே குளிர்ச்சி தரும்.” கணபத் ஒருவாய் அருந்துகிறான். அவனுடைய தொண்டை புண்ணாக எரிகிறது. கசப்பான நஞ்சு!
பர்வதியா வந்தாள். கால்மாட்டில் அமர்ந்து காலைப் பிடித்து விட்டாள். ஆனால் கணபத்தின் அண்ணனும், அப்பாவும் கையில் ஈட்டியுடன் வந்து கண்களை உருட்டி விழித்தனர்.
பாகல்புர் பட்டுத்தொழிலாளர்கள் ஹர்த்தால்! கணபத் கஞ்சிரா அடித்து ஊர்வலத்தின் முன்னே பாடிக்கொண்டு போகிறான், “ உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்..!”
போலீஸ் கண்ணீர்ப்புகை வீசுகிறது. குதிரைப்பட்டாளம் வேலை நிறுத்தக்காரர்கள் மீது சவுக்கை வீசுகிறது. அவர்கள்மேல் குதிரையை ஏற்றி மிதித்துக்கொண்டு பாய்கிறது.
கணபத் சிறையின் ஓர் அழுக்கடைந்த அறையில் கிடக்கிறான். தலையில் கட்டு. பர்வதியா– பர்வதியா– பாரோ– ஓ–ஓ-!
ஏழு நாள் காய்ச்சல். ஏழுநாள் தொல்லை தந்தபிறகு விட்டது. ஆஸ்பத்திரி டாக்டர் கருத்தாக சிகிச்சையளித்தார். “ஒரே நேரத்தில் இரண்டு ஊசி போட்டாராக்கும்” என்று குஸூம் சொன்னாள். பலராம் சொன்னாரென்று கணபத் இந்த டாக்டரைப் பற்றி என்னென்னமோ அவதூறுகளை அச்சடித்து சுவரில் ஒட்டினான்– அரசாங்கமே! பிஸன்பூர் ஆஸ்பத்திரி கொடுமைக்கார டாக்டரை வேலை நீக்கம் செய்!
காய்ச்சல் இறங்கியதும், தன்னை விட்டது ஏழுநாள் சுரமல்ல, முப்பத்தைந்து வருஷமாகப் பீடித்திருந்த கட்சிக்காய்ச்சல் என்று கணபத்துக்குத் தோன்றியது. இத்தனை காலமாக அவன் ஒரு இருட்டுக் குகையில் அல்லவா கழித்தான்– தம்படிக்குப் பிரயோசனமில்லாமல்!
குஸூமி சூடான பாலில் நெல்பொரி போட்டுக் கொண்டு வந்தாள். “பத்தியச் சாப்பாட்டில் ‘மாங்குர்’ மீன் சேர்க்கணும்னு டாக்டர் அய்யா சொன்னாங்க. சோபித் கிட்ட சொல்லி இருக்கேன். அந்திக்குள் ஒருசேர் மீனாச்சும் கொண்டு வந்துடுவான்.”
அப்புறம் குஸூமி சொன்னாள், “இந்த ஏழு நாளிலே கிராமத்திலே ஒரு குஞ்சு குளுவான் பாக்கி இல்லே, எல்லாரும் வந்து பாத்துட்டுப் போனாங்க. ஆனா, கட்சித் தோழருங்க ஒருத்தன் கூட எட்டிப்பாக்கலே. நேத்து பலராம்பாபு வந்தாரு, கணபத்தை உன் ஊட்டுக்கு நாளைக்குக் கூட்டிட்டுப் போயிரு. கட்சி ஆபீஸைக் காலி பண்ணிடணும் நாளைக்குள்ளாற– அவனைக் கட்சியிலிருந்து நீக்கியாச்சு– அப்படீன்னாரு-“
குடும்பம், சாதி–மதம், சமூகம், அரசு அநியாயம் எல்லாவற்றையும் தொடர்ந்து எதிர்த்த சூரப்புலி கணபத் இன்று குத்துச் சண்டை மைதானத்தில் தோற்றுப் போன பயில்வானைப் போலச் சோர்ந்து கிடந்தான். வருவோர் போவோர் எல்லாம் அவன் முதுகில் உதைத்து திட்டிவிட்டுச் செல்கின்றனர்– முப்பத்தைந்து ஆண்டுகளாக அவன் ஒரு துறவியைப் போல கோவணம் மட்டும் உடுத்து வாயையும், வயிற்றையும், மனதையும் கட்டி மக்களுக்காக சேவை செய்தான். எவருடைய சொத்தையும், ஒரு புல்லைக் கூடத் திருடவில்லை. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி சாதி–இனம், பர்வதியாவை விட அதிகமாகக் கட்சியையும், கட்சிக் கொடியையும் நேசித்தான். எல்லாம் பா..ழ்!
சூரியனும் சந்திரனும் இரண்டாகப் பிளந்துவிட்டது போல, உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் இரண்டாகப் பிளந்து விட்டது போலத் தோன்றியது. ஒவ்வொரு மனிதனும் இரண்டாக– இரண்டு முகங்கள், பிளந்து விட்டது இதயம் இரண்டாக…
இதுவரையிலும் கண்டும், காணாமலும், கேட்டும் கேளாமலும் விட்ட பல விஷயங்கள் நினைவிற்கு வந்து சிந்தையைக் கிளறின.
கணபத், உன்னுடைய தலைவர்கள் மதம் ஒரு போதை, சாதி என்பது சாக்கடைக் குப்பை என்றெல்லாம் வாய்கிழியப் பேசுகிறார்கள். உன்னுடைய கட்சி சாதி–மதங்களைச் சாடுகிறது. ஆனால் உன்கட்சித் தலைவர்கள் தங்கள் வீட்டில் மட்டும் கலப்புத் திருமணத்தை ஆதரிப்பதில்லை. வேறு சாதியிலிருந்து பெண் எடுப்பதும் இல்லை. மகனின் திருமணத்தின்போது காம்ரேட் ராம்லகன் சர்மா இருபத்தையாயிரம் ரூபாய் கறந்து வாங்கவில்லையா? உன்னுடைய தலைவர்களின் குழந்தைகள் டார்ஜிலிங்கிலும், டேராடூனிலும் படிக்கிறார்கள். கட்சிச் செயலரின் துணைவியார் காங்கிரஸ் மந்திரி பதவியை அடைய சாதிக்குத் துணை போகிறாள். உன்னுடைய தூபான்ஜி, மில் முதலாளியுடன் சேர்ந்து கொண்டு ஏழைத் தொழிலாளர்களின் கழுத்துக்குக் கத்தி-!
கணபத் மனக்கண் முன்னால் ஆனானப்பட்ட காம்ரேடுகளின் உருவங்கள் தெரிகின்றன– சோர்கடேஜி, ஜாதவ்ஜி, கோபால்ஜி, சின்ஹா சாகேப், டாகுர்ஜி, ‘தூபான்ஜி’ எல்லா உருவங்களும் ஒரே ராகம் பாடுகின்றன; ‘நாங்கள் வழிதவறிப் போனோம்-“
கணபத் இருள் மண்டிய சுரங்கப்பாதைக்கு வெளியே வந்து கிடக்கிறான். ஆனால் அவன் உடலில் எழுந்து நிற்க வலுவில்லை. வெளிறிப் போன முகத்தில் கறுப்பும் வெள்ளையுமாக பாதி நரைத்த மீசை– பச்சாத்தாபத்தினால் குமுறிக் கொண்டிருந்தான். முப்பத்தைந்து வருடங்களாக தவறான வழியில், தவறான திசையில் அல்லவா போய்க் கொண்டிருந்தேன். செய்த தவறுகள் எத்தனை? எத்தனை இளைஞர்களை வழி தவறச் செய்தேன்!
பர்வதியாவின் கருவைக் கலைக்காமல் இருந்தால் அவன் குழந்தைக்கு இன்று 35 வயதாகியிருக்கும். மகனாக இருந்தால் வளர்ந்து பலராம் போல பெரியவனாக இருப்பான்.
பர்வதியாவை அவன் மோசம் செய்தான். முதல் தவறு அது. இன்றளவும் அந்தப் பாவத்தின் பலனை அனுபவிக்கிறான்.
கடந்த ஐந்து வருடங்களாக குஸூமி அவனுக்குப் பணிவிடை செய்து வருகிறாள். கணபத் இதை அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கிறான். விதவையான குஸூமி பத்தினிப்பெண் போல் அவனை வைத்தகண் வாங்காமல் பார்க்கிறாள். அன்று அகாலு மெஹ்தாவின் குடிகாரப் பையன் நாக்கில் நரம்பில்லாமல் திட்டவில்லையா? – அந்தத் துலுக்கச்சிக் கம்மனாட்டியோடு கொஞ்சல் ஒரு கேடா-?
குஸூமி பார்த்து நாவிதனை அழைத்து வந்தாள். அவன் முகச் சவரம் செய்யும்போது சொன்னாள், “அண்ணே, அந்த மீசையையும் ஒட்ட வெட்டி விடுங்க. இல்லேன்னா, பார்லி கஞ்சி குடிக்கறப்ப மீசையிலே கஞ்சிப் பசை ஒட்டிக்குது.”
உருளைக்கிழங்கு மசியலும், சுடுசோறும் சாப்பிட்டபோது வாய்க்கசப்பு நீங்கியது. வறுத்த பெருஞ்சீரகப் பொடியை மென்று கொண்டு கணபத் கண்ணாடிமுன் நின்று பார்த்தான். வேடிக்கையாக இருந்தது. மூஞ்சி நல்ல நீளமாகத் தெரிந்தது. நோஞ்சான் குதிரையின் வற்றிப் போன முகம் போல. (35 வருடம் முன்பு) அடையாளச் சூடு போட்ட எஜமானர் செமை வேலை வாங்கினார். அதன் முன்னங்கால்கள் இரண்டும் ஏலாமற் போய் விடவே தெருவில் இறக்கி விட்டார். உடம்பெல்லாம் காயம். காகங்கள் கொத்தி காயங்கள் பெரிதாகவே, பாவம் குதிரை காலைப் போட்டு அடித்துக் கொண்டு கீழே கிடக்கிறது. அப்போது பர்வதியா ஓடி வந்தாள்– கையில் அரிவாளுடன். கால் கட்டுகளை அவிழ்த்து விடவே சாகப் போகிற குதிரை மெதுவாக எழுந்து தலை குனிந்து அமர்ந்தது. பிறகு மெதுவாகத் தரையை முகர்ந்து பார்த்தது.
கணபத் மெல்லக் காலை நீட்டினான்.
வெளியே காம்ரேட் சந்திரிகா பாபுவின் குரல் கேட்டது. சிவப்புத் தொப்பி போலீஸ் எட்டிப் பார்த்தது. “திருவாளர் பியூன் பாயிலே ஹாய்யா காலை நீட்டிப் படுத்திருக்காரு,” என்றது.
காவல் நிலைய அதிகாரியையும், போலீஸ்காரரையும் பார்த்து கணபத் துணுக்குற்றான். அவனுடைய நரம்புகள் புடைத்தன. காம்ரேட் சந்திரிகாவை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான். ‘இதப்பாரு கணபத், நீ ஆசிரமத்துப் பியூன் தானே!” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“அதென்ன ஏகவசனத்திலே ‘நீ’ போட்டுப் பேசறீங்க. நான் யாருக்கும் பியூன் இல்லே.”
சந்திரிகா ஆரம்பித்தார், “இதப்பாரு கணபத், இன்ஸ்பெக்டர் ஆசிரமத்திலே 144 போட வந்திருக்காங்க. நீயானா_!”
கணபத் இதற்குள் சுதாரித்துக் கொண்டு விட்டான். அவன் தெளிவான குரலில் பட்டென்று பதில் சொன்னான். “இதை எப்படி ஆசிரமம்னு சொல்றீங்க? இது என்னுடைய வீடு. என் நிலம். இது பொதுச்சொத்தல்ல, கட்சி நடத்தும் இடமும் அல்ல.”
“உன்– உங்ககிட்டே அத்தாட்சி ஏதும் இருக்கா?” இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“அத்தாட்சியா… எழுத்து மூலமான அத்தாட்சி, ஆதாரம் வேணுமா? சோபித் அம்மா..என் பையக் கொஞ்சம் எடுத்தா_”
சோபித் அம்மா, அதாவது குஸூமி, தலையைச் சேலைத்தலைப்பால் மறைத்துக் கொண்டு வெளியே வந்தாள். கணபத் பையிலிருந்து ஏதேதோ புத்தகம், காகிதங்களை எடுத்தான்– ‘மார்க்ஸியம்– ஒரு விளக்கம்’, ‘பாட்டாளி மக்களுக்கான பாடல்கள்’, ‘கொடுமைக்காரப் பண்ணையாரே_” பாட்டுப்புத்தகம், ‘பைஜ்வாடா தீர்மானங்கள்’, ‘தெலுங்கானா செங்காளியம்மன்’, ‘நாட்டின் துரோகிகள்’ – ஆங், இதோ எழுத்து மூலமான ஆதாரம்– வாய்மொழியா சாட்சியம் வேணுமா? கிராமத்துல யாரை வேணும்னாலும் கேட்டுப் பாத்துக்கலாம்.-“
இன்ஸ்பெக்டர் பத்திரத்தைப் பிரித்து ஆதியோடந்தமாகப் படித்துப் பார்த்தார். பிறகு சந்திரிகாவைப் பார்த்து “இந்த ஆளு– இவரு சொன்னது சரிதாங்க. இந்த நிலம் பூரா இவர் பேருக்குத்தான் பதிவாயிருக்கு.”
சந்திரிகா பாபு கூச்சல் போட்டார், “மானங்கெட்டவனே, துரோகி! பொதுச்சொத்தை முழுங்கி ஏப்பம் விடலாம்னு நெனப்பா? நானும் பாக்குறேன்-“
கணபத் எழுந்து நின்றான். “மக்கள் பெயரை நீங்க சொல்ல வேண்டியதில்ல. மக்களை ஏமாத்த முடியாது. மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டுத்தான் இருக்காங்க. சுயநலத்துக்காக கட்சியைத் துண்டாடறவங்கதானே நீங்க!”
“எதுக்கு இவங்க கிட்டப் பேசப் போகிறீங்க? டாக்டர் அய்யா சொல்லியிருக்காங்க இல்லே-“ உள்ளேயிருந்து குஸூமி சொன்னாள்.
ஆனால் கணபத் விடுவதாக இல்லை. வீராவேசமாகக் கோஷமிடலானான். “இன்குலாப் சிந்தாபாத்! கலகக்காரர்கள் ஒழிக! கட்சித் துரோகிகளை விட மாட்டோம்.”
குழுமியிருந்த மக்களும் ஆவேசமடைந்து கணபத்துடன் சேர்ந்து கோஷமிடலானார்கள். நிலைமையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் நடையைக் கட்டினார். சந்திரிகாவிடம் ஆங்கிலத்தில் ஏதோ கூறினார்.
“சார், இது கட்சிக்குள்ளே நடக்கிற உட்பூசல். நாம இனிமே இங்க நின்னிட்டிருந்தா நெலமை கெட்டுப்போயிரும்,” என்று போலீஸ் சிப்பாய் கூறினான்.
இன்ஸ்பெக்டரும் சந்திரிகாவும் போனபிறகு மக்கள் வெற்றி முழக்கமிட்டனர். “தோழர் கணபத் வாழ்க! விவசாயிகளின் தலைவர் கணபத்ஜி! பாட்டாளி மக்கள் தலைவர் – கணபத்ஜி! வாழ்க!”
முப்பத்தைந்து வருடங்களில் இன்று முதல்தடவையாக மக்கள் தன் பெயரைச் சொல்லி வாழ்த்தக் கேட்டு கணபத் நன்றிப் பெருக்கில் மூழ்கித் திணறினான்.
ஆரவாரத்திடையே ஒருவர் எழுந்து உரையாற்றத் தொடங்கி விட்டார்– “சகோதரர்களே, அடுத்து வரும் பஞ்சாயத்துத் தேர்தல்லே, தலைவர் தேர்தல்லே பைஜாமா குர்த்தா ஆசாமிகளுக்கு, ஒட்டுண்ணிக் கும்பலுக்கு ஆதரவு தராதீர்கள்_ இன்றிரவு இங்கே பாட்டாளி மக்கள் பாட்டு கோலாகலமாக நடக்கும்.”
அனைவரும் விடைபெற்றுச் சென்று தனிமை கிடைத்ததும், கணபத் குடிசைக்குள்ளேயிருந்து குரல் கொடுத்தான், ‘சோபித் அம்மா! கொஞ்சம் இங்கே வா.”
குஸூம் உள்ளே வந்தாள். கணபத்தின் முகத்தைப் பார்த்து பயந்து விட்டாள்– திரும்பியும் சுரம் வந்து விட்டதா? அவள் கணபத்தின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். கணபத் அவள் கையைப் பிடித்துக் கொண்டு நடுங்கும் குரலில் கூறினான், “குஸூமி– இது பாவச்செயல், அநியாயம், பொதுச்சொத்து, கட்சியின் இடத்தில்– ஆசிரமத்தில்– இது பெரிய பாவம்-!”
கணபத் பேசுகையில் பெருஞ்சீரகத்தின் வாசனை வந்தது. குஸுமுக்கு அந்த வாசனை மிகவும் பிடித்திருந்தது. செல்லமாகக் கடிந்து கொண்டாள், “பாவமாவது, புண்ணியமாவது. சந்திரிகா பாபு கட்சிச் சந்தாவை வைத்து புரைனியாவிலே வீடு கட்டியாச்சு. ராம்லகன் பாபு பண்ணையாருகிட்டேயிருந்து லஞ்சம் வாங்கிட்டு விவசாயிகள் வாழ்வைக் கெடுக்கவில்லையா? அதெல்லாம் சரின்னா-“
“குஸூம், மத்தவங்க எதை வேணா செய்யட்டும். நான் இந்தப் பாவத்திலே போக மாட்டேன். நான் உயிரோடிருக்கணும்னு நீ விரும்பினா என்னை உன் குடிசைக்கு இட்டுட்டுப் போ!”
குஸூம் கணபத்தின் குளமாக நிறைந்த கண்களை, ஜிவ்வென்று சிவந்த முகத்தை ஒரு கணம் பார்த்தாள். தயங்கிய குரலில் “அப்ப, இந்த ஆசிரமம்?” என்று கேட்டாள்.
“நான் இதை மக்களுக்கே திருப்பிக் கொடுத்துருவேன். பத்துபேர் சேர்த்துவைத்த நிலம் ‘தர்மச் சொத்து’தானே. தர்மச் சொத்தை ஓராள் மட்டும் அனுபவிச்சா நிம்மதியா இருக்க முடியாது– அப்புறம் முன்ன மாதிரி மக்களுக்குச் சேவை செய்ய உடம்பிலே தெம்பு இல்லை. கட்சியும் உடைஞ்சி போச்சு-!”
அவன் சிறுகுழந்தை போல அழலானான்.
குஸூமி தன் அழுக்கு முந்தானையால் அவன் கண்ணீரைத் துடைத்தாள். “அளுவாதீங்க” என்று சமாதானப்படுத்தினாள்.
கணபத் குஸுமை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்– ! ஆகா! முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு பெண்ணின் மார்புச் சூடு! இதமாகத் தெரிந்தது. அவளுடைய இதழ்களை முத்தமிட நினைத்தவன் அப்படியே நின்று விட்டான்.
“வேண்டாம் குஸூமி; இங்கே கூடாது. நம்ம வீட்டுக்குப் போகலாம் வா. இங்கே ஒரு கணமும் இருக்க எனக்கு உரிமையில்லை.”
குஸூமி எழுந்தாள். கைத்தாங்கலாக அவனை எழுப்பி, ‘வாங்க போகலாம்.” என்றாள்.
“அம்மா, அண்ணே! எத்தனை மீன் கொணாந்திருக்கேன் பாருங்க!”
சோபித் மூங்கில் கூடையை முன்னே வைத்தான். கன்னங்கரேலென்ற ‘மாங்குர்’ மீன்கள் பளபளத்தன.
“மீன் வந்தா நல்ல சகுனம் அப்படீம்பாங்க” என்றாள் குஸூமி.
கணபத் சிரித்தான்.
குஸூம் தன் வளர்ந்த மகனைப் பார்த்துக் கூறினாள், ‘மகனே, அண்ணனைக் கூட்டிட்டுப் போ. நான் படுக்கையை மடக்கி எடுத்தாறேன்.”
சோபித் தாயின் முகத்தை நோக்கி,’எங்கே?’ என்று கேட்டான்.
“உன் விருப்பம் மகனே!” என்றான் கணபத்.
சோபித்தின் தோளில் சாய்ந்தவாறு சென்று கொண்டிருந்த கணபத் திரும்பிப் பார்த்தான். வெளிறிப் போயிருந்த கட்சிக் கொடி காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. கணபத் தன்னை அந்தக் கொடியாகவும், சோபித் அந்தக் கொடியை ஏந்திச் செல்வதாகவும் உருவகப்படுத்திக் கொண்டான்.
(1965)
[நேஷனல் புக் ட்ரஸ்ட் அமைப்புக்கு நன்றி.]
இந்தக் கதை கீழ்க்கண்ட புத்தகத்திலிருந்து பெறப்பட்டது.பனீஷ்வரநாத் ரேணு கதைகள்மூல மொழி: ஹிந்திமூலக் கதைகள் தொகுப்பாளர்: பாரத் யாயாவர்தமிழாக்கம் செய்தவர்: டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்மூலப் புத்தகத்தின் தலைப்பு: பனீஷ்வர்நாத் ரேணு கி ஸ்ரேஷ்ட கஹானியான்வெளியிட்ட வருடம்: 1997வெளியீட்டாளர்: நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியாஇந்தப் புத்தகத்துக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புப் புத்தகம் என்ற சாஹித்ய அகதமி பரிசு 2002 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.