அரபு நாடு என்றவுடன் மாட மாளிகைகளும், துபாய் நகரத்தின் அங்காடிகளும், கேளிக்கை மையங்களும், கத்தார் நாட்டின் கால்பந்து உலகக் கோப்பை மைதானங்களும் பிரமிப்பில் ஆழ்த்தி நினைவிற்கு வரும். அந்த பிரும்மாண்டங்கள் உருவாகக் கோடிக்கணக்கான தினக்கூலிகள் இந்தியாவில் இருந்தும் பங்களாதேஷில் இருந்தும் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள். அரேபிய பாலைவனத்துக்கு நடுவே எழும் இந்தக் கட்டிடங்கள், கொத்தடிமைகளாக நடத்தப்படும் வெளிநாட்டு வேலையாட்களால் கட்டப்படுபவை. அப்படிப்பட்ட கட்டிடங்களில் விபத்து சகஜமாக இருந்தாலும் மனிதத் திரளை விழுங்கும் அளவில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இரண்டு நாள்களுக்கு ஒரு நேபாளியர் இறப்பு என்று கணக்குப் போடுமளவு உயிர் சல்லிக்காசானதை இங்கே பார்க்கலாம்.