[stextbox id=”info” caption=”துருக்கி, குர்துக்கள், அமெரிக்கா, மற்றும் மதவெறிக் கொலைகாரர்கள்”]
இந்த நான்கு குழுக்களிடையே நடக்கும் இழுபறியில் யார் வெல்வார்கள்? யாரெல்லாம் அணி சேர்ந்திருக்கிறார்கள்? யாரை யார் நம்புவார்கள்? உலக மக்களுக்கு எந்த அணியால் நற்பலன் கிட்டும் எது உலகை அழிக்கும் சக்தி? இப்படிக் கேள்விகள் கேட்கவோ, சரியான பதிலைப் பெறவோ முடியாத கலங்கல் புதைசேறு மேற்காசியாவின் பயங்கரப் போர்க்களங்கள்.
ஒரு கோணத்தில் உலக மக்களுக்குப் ‘ பெரும் அமைதி’ கிட்ட வேண்டும் என்று முயலும் அமைதி மார்க்கத்தினரின் படுகொலைப் பட்டாளங்களுக்கும், உலக மக்களுக்கு ஈடில்லாத ‘கருணை’ கிட்டவேண்டும் என்று முயலும் ஒரு திமிர்வாத ஏகாதிபத்தியத்தின் படைகளுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியின் விளைவு இதெல்லாம். இரண்டும் உலக மக்களையும் உலக மனித நாகரீகத்தையும் யார் இறுதியாகக் குழி தோண்டிப் புதைப்பது என்ற போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.
சிக்கி மடிபவர்களும் அப்படி ஒன்றும் புனிதர்களோ, அப்பாவிகளோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளையும், ஏராளமான பெண்களையும் விட்டு விட்டு நோக்கினால், உலகில் செமிதிய மதங்களில் தம் சார்புடைய மதமே ஆள வேண்டும் என்ற கொலைவெறி நோக்குக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் இந்த நிலப்பகுதிகளில் ஏராளம். முந்தைய ஆயிரம் ஆண்டுகளில், அவர்கள் ஆக்கிரமித்துக் கொன்று குவித்த இந்தியரும், இந்துக்களும் பல லட்சங்கள், அதுவும் சுமார் 600 ஆண்டுகள் போல இந்துக்களைக் கொன்றிருக்கிறார்கள்.
இன்று மடிபவர்கள் அன்றைய கொலைகாரர்களின் வாரிசுகள் என்பதாலேயே குற்றமுள்ளவர்களாக மாட்டார்கள் என்பது நியாயமான வாதம். இருந்தாலும் அதே செமிதிய மதங்களைச் சிறிதும் அடிப்படை மாற்றம் இல்லாது முன்பு போலவே கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசியல் நிலைக்கு இம்மக்களும், இவர்கள் அடிக்கடி தேர்ந்தெடுத்த தலைவர்களும் சொல்லி வந்திருக்கிறார்கள்.
அப்படிச் சொல்லிச் சொல்லி ஆதிக்க வெறியேற்றி வளர்க்கப்பட்ட ஓரிரண்டு தலைமுறை ஆண்கள்தாம் இன்றைய படுகொலைப் பட்டாளங்களில் கொலைஞர்களாகச் செயல்பட்டு கொல்வதோடு, தாமும் மடிகிறார்கள். அதனால்தான் இந்தப் பகுதி ரத்தப் புதைசேறு ஆகி வருகிறது.
துருக்கியின் எல்லை அருகே உள்ள, தால் அப்யாத் எனப்படும் ஒரு வட சிரிய நகரின் வழியே ஐஸில் எனப்படும் பயங்கர இயக்கத்தினருக்கு ஆயுதங்களும், பல நாட்டு ஏமாளிகளும் தொடர்ந்து கடத்தப்படுகிறார்கள். துருக்கியின் அரசு வழக்கமான பொய்களோடு ஒரு புறம் அமெரிக்காவின் நேச நாடு தான் என்ற பாவலாவைச் செய்து கொண்டு, இன்னொரு புறம் ஐஸில் கொலைப்படைக்கு உதவிகள் பாய்வதைச் சிறிதும் தடை செய்யாததோடு, மறைமுகமாக உதவுகிறது என்றும் யூரோப்பியர் கருதுகிறார்கள்.
இந்த நகரைச் சமீபத்தில் குர்து மக்களின் போராளிகள் கைப்பற்றி விட்டனர். ஐஸிலின் படைகளுக்கு ஆயுத உதவியும், போராளிகள் உதவியும் கிட்ட விடாமல் அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் இந்த பகுதிக்கு வரும் உதவியைத் தாக்கி அழித்ததால் குர்துப் படைகள் இந்த ஊரைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. துருக்கியின் கடும் வாத இஸ்லாமிஸ்டுகளுக்கு இந்த நகர் குர்துக்களிடம் சிக்கியது பிடிக்காததோடு, ஐஸில் இப்படித் தோற்கடிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லையாம். ஐஸிலுக்கு உதவ வேண்டும் என்று துருக்கியின் இஸ்லாமிஸ்ட் அரசுக்கு இப்போது நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் தெரிகிறது. செய்தியை இங்கு படிக்கலாம்.
http://www.thedailybeast.com/articles/2015/06/16/isis-is-losing-in-northern-syria-but-ankara-is-unhappy.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”வால்மார்டும் வரி ஏய்ப்பும்”]
உலகளாவிய முதலியத்துக்கும் தேசிய முதலியத்துக்குமிடையே உள்ள வேறுபாடுகள் குறைந்து வருகின்றன. இன்னொரு புறம் பல நாட்டு அரசுகளே தமது பினாமிகளாக முதலிய நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றன. இன்னொரு புறம் உலக முதலிய நிறுவனங்கள் பல நாட்டு அரசுகளைத் தம் பினாமிகளாகப் பயன்படுத்துகின்றன. பருப்பொருட்கள் எனக் கருதப்பட்டன எல்லாம் திரவப்பொருட்களாகும் என்று உலக இடது சாரியின் நபி ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் அறைகூவல் விடுத்தார், தெரிந்திருக்கும். நபி சொன்னது அனேகமாக ஏதும் பலிக்கவில்லை என்றாலும் இந்த விஷயத்தில் அவர் சொன்னது ஒருவாறாகப் பலிக்கும் போல் இருக்கிறது.
இப்படி அரசு, முதலிய நிறுவனங்கள், ராணுவம், அரசியலாளர், கட்சிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர், பல்கலை நிர்வாகிகள் என்று பலதரத்தினர், பலதரத்தவை எல்லாம் ஒன்றாக உருகி சுய முன்னேற்றம், சுயலாபம் ஆகியனவற்றை மட்டுமே தேட்டையாகக் கொண்டு இயங்கும் 21ஆம் நூற்றாண்டு முதல் இரு பத்தாண்டுகளில் பண்டை இந்துப் புராணத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விடும் போல் இருக்கிறது. இடது சாரி நபியின் ஆதர்சக் குழு எழுந்து போராடி உலக மக்களை உய்விக்க வாய்ப்பு மிகத் துர்லபம் என்பது நமக்குத் தெரிகிறது. இடது சாரி அறிவு சீவிகள் எல்லாம் இப்போது சிறிதும் வெட்க உணர்வு இல்லாமல் முதலியத்தின் உளவு நிறுவனங்கள் போல இயங்கும் முகநூல், ட்விட்டர் என்று பற்பல ‘சமூக ஊடகங்களில்’ தமக்குள் சிறு குழுக்களாகப் பிரிந்து கொண்டு கிச்சுக் கிச்சு மூட்டிக் கிளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள். தலையே இப்படி என்றால் வால் என்ன செய்து விடப் போகிறது? 🙁
அதே நேரம் இந்து சமுதாயம் தலையை ஏற்கனவே காலனியத்திடம் அடகு வைத்து விட்டுத் தடுமாறி நின்று கொண்டிருக்கிறது. கல்கி அவதாரம் தோன்றினாலும் அவராலும் தலையில்லாத மக்களை மீட்க முடியுமா என்பது ஐயத்துக்குரியது. மீட்டுத்தான் என்ன செய்யப் போகிறார் அவதாரம். மறுபடி மறுபடி செய்ததையே செய்து கொண்டிருக்க அவருக்குத்தான் சலிப்பு வராதா என்ன? ஏதோ பத்துத் தடவைகள் இப்படி மீட்பு வேலைகளைச் செய்திருக்கிறார். பின் மறுபடியும் இதையே துவங்கி, இதே போலப் பேரழிவிலிருந்து ஜீவராசிகளைக் காப்பது என்று ‘லீலை’ நடத்த அவர்தான் என்ன சிறு குழந்தையா?
இப்படிப் பல தத்துவ விசாரங்கள் நம்மை உறுத்தக் காரணம் என்ன என்று கேட்பீராயின், இந்தச் செய்தியைப் பாருங்கள். வால்மார்ட் எனப்படும் உலகக் காளானான ஒரு முதலியக் குப்பைகளை மலிவு விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனம், சுமார் 75 பிலியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை தன் நாட்டின் அரசுடைய பார்வையிலிருந்து மறைத்து வரி கொடுக்காமல் தப்பித்து, பல நாடுகளில் பதுக்கி இருக்கிறது என்று இந்தச் செய்தி சொல்கிறது. சொல்வதும் ஒரு முதலிய நிறுவனத்தின் ஊடகத் தளம்தான். ஆனால் இடது சாரி என்று ஒரு பிரமை இதற்கு உண்டு. இருந்து விட்டுப் போகட்டுமே. உலக மாந்தர் எல்லாமே பிரமைகளை நம்பித்தான் வாழ்கிறார் என்று ஃப்ரெஞ்சு சிந்தனையாளர்கள் சொல்கின்றனர். மேலே சொன்ன நபியுமே அதைத்தான் சொன்னார். அவர்களெல்லாம் மறைந்த பின்னரும் உலக மக்கள் அதே பிரமைகளையோ, புதுவிதப் பிரமைகளையோ நம்பித்தான் தம் தற்காலிக வாழ்வை வாழ்ந்து தொலைக்க வேண்டி இருக்கும்.
இந்தச் செய்தி அறிக்கை சொன்னதற்காக அமெரிக்க அரசோ, மேலை நாட்டு அரசுகளோ வால்மார்ட்டின் மீது ஏதும் நடவடிக்கை எடுத்து விடப் போகிறார்களா என்றால், இப்படி எல்லாம் கிச்சுக் கிச்சு மூட்டினால் கூடச் சிரிப்பு வராத நிலையில் நாம் ஏற்கனவே இருக்கிறோம் இல்லையா? கையிலிருக்கும் செல் ஃபோன் விடியோ கேமில் நம் இன்றைய ஸ்கோர் உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கையில் இப்படி வால்மார்ட், பணப்பதுக்கல் என்று உப்புப் பொறாத விஷயங்களைப் படிக்கச் சொன்னால் எப்படி?
[stextbox id=”info” caption=”சிபிஎம் கட்சியின் வன்முறை”]
வழக்கத்துக்கு மாறாக, தமிழ்ப் பத்திரிகை ஒன்றிலிருந்தே இந்தக் குறிப்புக்கான சுட்டி கொடுக்கப்படுகிறது. பொதுவாக மகரந்தம் பகுதியில் உலகெங்கும் கிட்டுகிற தகவல்கள்/ கருத்துக் கட்டுரைகள் போன்றனதான் பெரும்பாலும் கவனிக்கப்பட்டன. இந்தக் கட்டுரையும் தமிழ் மாநிலத்திலிருந்து எழுதப்பட்டதல்ல, தமிழில் எழுதப்பட்டதல்ல. இங்கிலிஷில் எழுதப்பட்ட கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் இணைய இதழ்களில் முன்னோடியும், முக்கியமான வார இதழுமானதிண்ணை வலைப் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரை இந்தியாவின் மாய்மால அரசியலில் முதலிடம் பிடித்துள்ள அரசியல் கட்சியான ஒன்றின் 30 ஆண்டுகால கொடூர அரசியல் பற்றி விரிவாக எழுதுகிறது. தமிழ் நாட்டில் உள்ள அறிவு சீவிகளில் பெரும்பாலானோருக்கு இந்திய அரசியலின் பெரும் வன்முறை எல்லாம் வலது சாரி வன்முறை என்று கட்டுரை, கவிதை எழுதிக் களிப்பதே பொழுது போக்கு. சமீபத்தில் தமிழில் பிரபலமான வார இதழ்கள், தினசரிகளில் எல்லாம் இந்தக் கருத்தியல் கோமாளிகள் ஆக்கிரமித்து வன்முறை, கொலை ஆகியன எல்லாம் புரட்சி என்ற பெயரில் செய்தால் முழுதும் ஏற்கப்பட வேண்டியன என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் மாவொ போன்ற உலகப் பெரும் கொலை பாதகர்களை நாயகர்கள் என்று கொள்ளச் சொல்லும் ஒரு அற்பக் கருத்தியலைத் தலைமேல் சுமந்து திரியும் அறிவிலிகள், இந்தியா மீதும், இந்துக்கள் மீதும் தினம் தம் வெறுப்பைக் கக்குவதே தொழிலாகக் கொண்டு இயங்கி காட்சி ஊடகங்களில் தினவோடு வலம் வருகிறார்கள்.
இந்தச் சூழலில் இப்படி ஒரு தகவல் கட்டுரையை வெளியிட்ட திண்ணை இதழ் செய்தது ஒரு நற்பணி. கட்டுரை, சிபிஎம் என்ற இந்தியப் பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்டு), 30 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை பல பத்து ஆண்டுகளாக ஆண்டு, அந்த மாநிலத்து மக்களை முழு வறுமையில் ஆழ்த்திப் போன கொடுஞ்செயலோடு சேர்த்து, எதிர்ப்பாரை இல்லாது ஆக்குவதற்கென அந்த ஆட்சியில் என்னவொரு விரிவான அளவில் வன்முறை நிகழ்த்தப்பட்டது, எத்தனை கொலைகள் நடத்தப்பட்டன என்று விளக்குகிறது.
http://puthu.thinnai.com/?p=29592
[/stextbox]
[stextbox id=”info” caption=”குற்றமற்ற பறிமுதல் சட்ட சீர்திருத்தம்”]
அமெரிக்கக் குடிமையுரிமைகளில், சொத்துரிமை என்பது ஓர் அசைக்க முடியாத அடிப்படை உரிமை. எனவே சொத்துப் பறிமுதல் என்பது அத்தனை சுலபமாக அரசால் நடத்தப்பட முடியாததாக இருக்க வேண்டும் என்பது பரவலான புரிதல். இருப்பினும் நடைமுறையில் நிலைமை எப்படி இருக்கிறது?
சட்டப்படி அமெரிக்காவின் சில மாகாணங்களில் குற்றம் சாட்டாமலேயே , சந்தேகத்தின் பேரில், தனிநபர் சொத்துகளை போலீசாரால் பறிமுதல் செய்ய இயலும். பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருந்துவரும் இச்சட்டத்தைத் திருத்தும் மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி தனியாரது சொத்துகளை குற்றம் சாட்டப்படாத நிலையில், வெறும் சந்தேகத்தின் பேரில் கேள்விக்குள்ளாக்கி இருக்கும் நிலையில் உள்ள ஒருவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடியாது.
மேலும், அமெரிக்க குடியுரிமைச் சட்ட அமைப்பும், வருமான வரித் துறை நிபுணர்களும் ஒருங்கிணைந்து செயல்படாது தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் சம்பந்தமான சொத்துகளை போலீசார் பறிமுதல் செய்ய இயலாது. கடந்த பத்து ஆண்டுகளில் பலவிதமான தனிமனித துவேஷங்களால் இச்சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை எதிர்த்து இந்த நிபுணர் குழு திருத்தங்களை அமைத்து வருகிறது. குறிப்பாக, நிரூபிக்காத குற்றங்களுக்காக காவல் துறையினர், தான்தோன்றித்தனமாக குடிமக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதைத் தடுக்கும் பொருட்டு ‘சொத்து பறிமுதல் சட்டத் திருத்தம்’ ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழியாகப் பல திருத்தங்களைக் கொண்டுவருகிறது.
http://www.huffingtonpost.com/2015/06/23/fix-forfeiture-police_n_7647028.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”டிராண்ட்ஸ் பசிபிக் ஒப்பந்தம்”]
பன்னிரெண்டு அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகள் இணைந்து தங்களுக்குள் நடத்தும் வர்த்தகங்களுக்கு உதவும் ஒப்பந்தமான டிரான்ஸ்- பசிஃபிக் ஒப்பந்தம் உலக முதலீட்டில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதத்தைக் கையாளப்போகிறது. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை எதிர்த்தும், ஆதரித்தும் பல ஆண்டுகளாக சர்ச்சைகள் நடந்துவருகின்றன என்றாலும் கையெழுத்தாவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. வியட்நாம், அமெரிக்கா, தாய்லாந்து போன்று தேச வருமானத்தில் பலபடிநிலைகளில் இருக்கும் நாடுகள் பங்கு பெறும் இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வர்த்தகச் சங்கங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாது, லாப நோக்கை மட்டுமே முன்வைத்து வரையப்படும் இந்த ஒப்பந்தத்தினால் நச்சுத்தன்மையும், மாசுகளும் அதிகம் உள்ள வகை உற்பத்தி முறைகளையும், தொழிற்சாலைச் சூழல்களையும் கொண்ட கிழக்காசிய நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளிகளின் உடல் மற்றும் மனநலம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வளமான சூழியல், மக்கள் நலம் என்பனவற்றைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாது முதலியத்தின் மூலம் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளும் நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தை முன் நிறுத்த கட்சிகளுக்குப் பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றன. அதன் விபரங்கள் கீழுள்ள கட்டுரையில்.
http://www.theguardian.com/business/2015/may/27/corporations-paid-us-senators-fast-track-tpp
[/stextbox]