உழுதுண்டு வாழ்வோம்! – பகுதி 2

வேளாண்மையை வெற்றிகரமாக்க, நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது நாம் இயங்கும் பொருளாதாரச் சூழல். மன்னராட்சி காலம் தொட்டு, நிலபிரபுத்துவ ஆட்சிக்காத்தினூடே இன்றைய மக்களாட்சி வரை, வேளாண்மை, மிகக் குறைந்த ஆட்செலவில் செய்யப் பட்டு வந்தது. 80 களில் கூட இது இருந்தது. அந்தக் காலகட்டத்திலும் கூட, வேளாண்மை ஒரு லாபம் தரும் தொழில் ஆக இருந்தது இல்லை.
பரம்பரையாகச் செய்யப் பட்டு வந்த, வேறு வழியில்லாமல் செய்யப் பட்டு வந்த ஒரு தொழிலாகத் தான் இருந்தது. ஆனால். உலகமயமாக்கல் என்னும் ஒரு கருதுகோள் வந்தவுடன், பாரதத்தின் எல்லாத் துறைகளும் உலகப் பொருட்களுக்காகத் திறந்து விடப் பட்டன.
பாரதத்தின் பாரம்பரியமாக வலிமை கொண்ட துறைகளும் பொருட்களும் தப்பித்துக் கொள்ள, வலிமை குறைந்த துறைகளும், பொருட்களும் நசிந்தன.
எடுத்துக்காட்டாக – எண்ணெய்ப் பனை. ஒரு அலங்காரத் தாவரமாக, ஆப்பிரிக்காவில் இருந்து மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட அத்தாவரம், பெரும் எண்ணெய் வித்துத் தாவரமாக உருவெடுத்து, இன்று உலகின் மிகப் பெரும் ஏற்றுமதிப் பொருளாகியிருக்கிறது. மலேசியா / இந்தோனேஷியாவின் அதிக வெப்ப / மழை தட்ப வெப்ப சூழல், அதற்கு மிக அற்புதமாகப் பொருந்திவந்தது அதற்குப் பெரும் காரணம். (இதை இந்தியாவிலும், சீனாவிலும் வளர்க்க முயன்ற முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன).

green-revolution

இது ஒரு ஹெக்டருக்கு கிட்டத்தட்ட 4-5 டன் எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஒப்பிடுகையில், சோயா மற்றும் கடலைப் பயிர்கள் ஒரு ஹெக்டருக்கு 1 டன்னுக்கும் குறைவாகத் தான் உற்பத்தி செய்ய முடியும். எனவே, இந்த எண்ணெயை, இலவசமாகவோ அன்றி 10-15% இறக்குமதி வரிகளோடு இறக்குமதி செய்ய அனுமதிக்கப் படும் போது, இந்தியாவில் அது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. பொருளாதாரத்தின் அடித்தட்டு மக்களுக்கு, இது ஒரு வரப்ரசாதம். அவர்கள் இந்த எண்ணெயை வாங்கி உபயோகிக்கத் துவங்கும் போது, கடலை எண்ணெய்க்கான நுகர்வோர் தேவை குறைகிறது. பொருளாதார விதிகளின் படி, உற்பத்தி அதே நிலையில் இருக்க, நுகர்வுத் தேவை குறைகையில், அதன் விலை சரிகிறது. அது கடலையின் சந்தை விலையைக் குறைக்க, உழவர், கடலை உற்பத்தியை நிறுத்துகிறார்.
இதனால், இந்தியக் கடலை மட்டுமல்ல – அமெரிக்க சோயாப் பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்திய அதிகார மட்டம் – விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.. உலக அளவில் போட்டிக்குத் தயாராக வேண்டும் என 2 ஏக்கர் உழவரை அறிவுறுத்துகின்றது. இதற்கிடையில் அமெரிக்கா, மலேசியாவில், எண்ணெய்ப்பனைத் தோட்டங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுகிறது. உராங் உடான் குரங்குகள் அழிகின்றன எனக் கண்ணீர்க் கதைகளை உருவாக்குகிறது. பனை எண்ணெய் போன்ற சாச்சுரேட்டட் கொழுப்பு உண்டால், உலகமே இதய நோயால் அழிந்து விடும் என அமெரிக்காவில் செய்யப் பட்ட ஆய்வுகளை உலகெங்கும் பரப்புகிறார்கள். (தமிழின் மிகப் பெரும் வார இதழ் ஒன்று – ஒரு மண்டையோட்டின் படத்தை அட்டையில் பதிப்பித்து, பாமாயில் பயங்கரம் என்னும் சிறப்புக் கட்டுரை வெளியிட்டது)
ஆனால், உண்மை நிலை இதுதான். எண்ணெய்ப் பனை உலகின் மிகத் திறன் வாய்ந்த எண்ணெய்ப் பயிர். இன்று, பாமாயிலுக்குச் சுதந்திரச் சந்தை வேண்டும் என உரக்கப் பேசும் மலேசியா, நாளை இதை விடத் திறன் வாய்ந்த ஒரு எண்ணெய் வித்து வந்தால், சுதந்திரச் சந்தைக் கொள்கையை வைத்திருப்பார்களா அல்லது கைவிட்டு விடுவார்களா என்பதன் விடை தெரிந்ததுதான். வேளாண் தொழிலாளர்களின் கூலி இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் மிகக் குறைவு, அதனால், மலேசியாவில் இந்திய / ஆப்பிரிக்க வேளாண் தொழிலாளர்கள் தடையின்றிச் சென்று தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்னும் ஒரு கோரிக்கையை, மலேசியா எவ்வாறு எதிர் கொள்ளும் என்பதை ஊகிக்கவும் அதிக அறிவு தேவையில்லைதான்.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில், இந்தியா தனது நலன்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? மிகத் துரதிருஷ்டவசமாக, இந்திய மனநிலையில், அரசு நிறுவனக் கொள்கைகளில், strategic Doctrine என்பது இல்லவே இல்லை. பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளின் சிறந்த நிபுணர்களான சுப்ரமணியம் போன்றோர் இதை வலியுறுத்திப் பேசி வந்திருக்கிறார்கள். இத்துறைகளில் மட்டுமல்லாது, வேளாண்மை, சுற்றுச் சூழல், மக்கள் நலம் போன்ற துறைகளிலும் இந்திய நலனைப் பாதுகாக்கும் ஒரு strategic Doctrine தேவை.
உதாரணமாக எண்ணெய் இறக்குமதியை எடுத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த அளவில் ஒரு strategic plan ஐ எழுதுகிறேன். இந்தியாவில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாகி வெளிவரும் காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை. அக்காலத்தில் எண்ணெய் உற்பத்தி, நுகர்வுத் தேவைக்கு அதிகமாக இருப்பதால், விலை மந்தமாக இருக்கும். மார்ச் முதல், இந்தியாவில் எண்ணெய் வித்து உற்பத்தி குறைந்து, விலையேறத்துவங்கும். ஜூன் மாதத்தில் மலேசியாவின் பாமாயில் உற்பத்தி உச்ச நிலையில் இருக்கும். இங்கே, இறக்குமதி வரி என்பதை ஒரு பலம் வாய்ந்த ஒரு அஸ்திரமாகப் பயன்படுத்தலாம்.
 
என்னளவில் நான் தரும் ப்ளான் இதுதான்:

நுண்ணறிவு சார்ந்த தந்திரமான வழிகள் (Tactical)

  1. மார்ச் முதல் செப்டம்பர் வரை, பாமாயில் இறக்குமதி வரி மிகக் குறைவாக இருக்க வேண்டும். (8-10%).
  2. அக்டோபர் முதல், இந்த இறக்குமதி வரி 50-60 % வரை உயர்த்தப்படலாம்.
  3. இதனால், உற்பத்திக் காலங்களில் வரும் எண்ணெய் விலை வீழ்ச்சி தவிர்க்கப் படும். உழவர்களின் பொருளுக்கு ஒரு நல்ல விலை கிடைக்கும்.
  4. அதிகமாக வசூலிக்கப் படும் இறக்குமதி வரிப் பணத்தை, எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க, உற்பத்தி காலங்களில் அரசே கொள்முதல் செய்ய, பயிர்களுக்கான இலவசக் காப்பீட்டுத் தொகை என உபயோகித்துக் கொள்ளலாம்.
  5. மலேசியாவின் உச்ச உற்பத்திக் காலமான ஜூன் – செப்டம்பரில் இறக்குமதி வரி குறைவாக இருப்பதால், இது அவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும்.
  6. இந்தியா உலகின் மிகப் பெரும் பாமாயில் இறக்குமதியாளர். இது ஒரு பெரும் பலம். இந்தப் பலத்தை உபயோகித்து, இந்தியாவின் மற்ற நலன்களையும் மலேசியாவிடம் பேசிப்பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 

தொலைதூர உத்திசார்ந்த திட்டங்கள் (Strategic)

நீண்டகால அடிப்படையில் எண்ணெய் வித்து உற்பத்தியை எப்படி சீராக வைத்திருப்பது, அதை எப்படி ஒரு லாபம் தரும் தொழிலாக மாற்றுவது என்பதற்கான நீண்ட காலத் திட்டங்கள் செயல்படுத்தப் படவேண்டும். 80களில், கச்சா எண்ணெய் உற்பத்திக்கு அடுத்தபடியாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, எப்படி, உற்பத்தியை மேம்படுத்தலாம் என்னும் ஒரு நீண்ட கால நோக்குடன் துவங்கப் பட்டதுதான் “எண்ணெய் வித்து உற்பத்தித் தொழில் நுட்ப மிஷன்”. இவை போன்ற திட்டங்கள் தூசு தட்டப் பட்டு, காலத்துக்கேற்ப மாற்றங்கள் செய்யப் பட்டு, அமுல் படுத்தப் பட வேண்டும்.
அதை விடுத்து, எளிதாகச் சுதந்திரச் சந்தை வசனங்கள் பேசிக் கொண்டு வாளாவிருந்ததுதான் இன்றைய வேளாண் வீழ்ச்சிக்கு ஒரு பெரும் காரணம்.
இங்கே ஒரு முக்கியமான கருத்தை மீண்டும் வலியுறுத்த வேண்டும். தொழில் முனைப்பு நசுக்கப் பட்டு, வறுமை சூழ்ந்த பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரச் சீர்திருத்தங்களினால்தான் உருவானது என்பதில் ஐயமில்லை. ஆனால், கட்டுப்பாடுகளே இல்லாத சுதந்திரச் சந்தை என்று ஒன்று இல்லவே இல்லை. அதனால், இறையாண்மையைப் பாதிக்கும் விஷயங்களான, உணவு உற்பத்தி. சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் நலன் போன்ற துறைகளில் கட்டுப் பாடுகள் கொண்ட, மற்ற துறைகளில் சுதந்திரமான சந்தை என்பதே நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டிய பாதை.
இதைத் தாம் வெற்றிகரமான நாடுகள் அனைவரும் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் பலரும், தங்களுக்கென ஒரு கொள்கையும், மற்றவருக்கென ஒரு கொள்கையையும் கொண்டு, அதைத் தங்கள் பொருளாதார பலத்தினூடே நிலை நிறுத்த முயல்கிறார்கள். ஆனால், இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு. 120 கோடி மக்கள் (நுகர்வோர்) என்பது உலகின் மிகப் பெரும் பலம். அதைக் கொண்டு நாம், நமது நலனை எப்படி நீண்ட கால அடிப்படையில் பாதுகாத்துக் கொள்வது என்பதே நம் முன் இருக்கும் இலக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.