நியூ மீடியாவின் தாக்கம் 

newmedia
சென்ற வாரம் ஒரு டிவி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.  நியூ மீடியா எனப்படும் இணைய சமூகத் தொடர்பு தளங்களையும் , பாரம்பரிய – அச்சு  ஊடக  அமைப்புகளையும்  பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள் நான்கு மீடியா புள்ளிகள். வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் பெண்களும் வெளியே வேலை செய்யும் பெண்களும் என்ற விவாதம் போல இந்த இணைய மீடியாவும், அச்சு  மீடியாவும் என்ற  விவாதமும் பல காலம் தொடரும் என்று தோன்றியது எனக்கு. பெண் உரிமை, மற்றும் பெண்கள் சமத்துவம் என்று பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் வேலைக்குப் போகும் பெண்கள் / போகாத பெண்கள் என்ற டாபிக் தொடர்ந்து இன்று வரை சுவாரசியமான அலசல்களாகத்தானே  இருக்கிறது? சமூகச் சிந்தனையை இது பிரதிபலிக்கிறது. அதுபோல், இன்று நொடிக்கு நொடி செய்திகள் பரப்பப்பட்டு, ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு செய்தியாளராக உருவெடுத்துள்ள  இன்றைய  சூழ்நிலையில் செய்திகளின் நம்பகத்தன்மை, டிவி,  மற்றும்  அச்சு ஊடகங்களின்  நிலை என்ன என்று பேசப்படுகிறது.
“என்னதான் டிவியில் செய்தியை அறிந்துகொண்டாலும் டிவிட்டரில் அலசப்பட்டாலும் காலை பொழுது விடிந்து தினம் படிக்கும் அந்த செய்தித்தாளில் என்ன வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டால்தான் அந்தச் செய்தியைப் பற்றி  ஒரு நிலைப்பாடே உருவாகிறது; அதனால் பாரம்பரிய செய்தி நிறுவனங்கள்தாம் நம்பகத்தன்மை கொண்டவை….” என்று அந்த விவாதத்தில் பங்கு கொண்ட ஒரு பத்திரிகையாளர் கூறினார். மற்றொருவரோ, இணையத்தில் செய்தி வெளிவர ஆரம்பித்தவுடனே அந்த செய்தி சூடாகப் பரவி மறுநாள் பாரம்பரிய செய்தி நிறுவனங்கள் வெளியிடும்போது செய்தியின் சுவாரசியம் அல்லது முக்கியத்துவம் மாறிவிடுகிறது என்றார். இப்படி பல விதங்களில் அலசப்படும் இந்த விவாதம் இன்னும் பல வருடங்கள்  தொடரும் என்று நினைக்கிறேன்.
இந்த விவாதத்தை டிவியில் பார்க்கும்போது 2008ல் இந்த இணைய மீடியாக்களின் தாக்கம்  பற்றி Power of New Media என்று கட்டுரை எழுதியது நினைவுக்கு வந்தது. அந்த சமயத்தில்  அச்சு ஊடகங்கள்தாம் ’நியூ மீடியா’ என்று இணையத் தளங்களிலிருந்து வரும் தகவல் மற்றும் செய்தி பரிமாற்றத்துக்கு பெயர் சூட்டியதே  தவிர, இணையத்தின் முக்கிய அங்கமான விக்கிப்பீடியாவில் நியூ மீடியா என்ற வார்த்தைக்கு அப்போது சரியான  விளக்கம் இருக்கவில்லை. “நாள்தோறும் மாறும் ஒரு ஊடகத்தை நியூ மீடியா என்று விளக்குவது சரியாகாது. ஏனென்றால் இன்று புதிதாக இருப்பது நாளையே பழமையாக மாறியிருக்கும்.  மாற்றம்தான் இயற்கை எனும்போது நியூ மீடியா என்று விளக்கம் கொடுப்பது வீண்.” என்று ஒரு விக்கிப்பீடியா கருத்தும் நிலவியது அப்போது. விக்கிப்பீடியாவே  அநேக மாற்றங்களை மேற்கொள்ளும் நிலையில், நியூ மீடியாவின் விளக்கமும் காலப்போக்கில் – தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப வித்தியாசமான விளக்கங்களும் விக்கிப்பீடியாவில் இடம் பெறலாம் என்று அன்று குறிப்பிட்டிருந்தேன். இன்று இந்தக் கட்டுரைக்காக மீண்டும் நியூ மீடியா பற்றி விக்கிபீடியா  விளக்கப் பக்கம் படிக்கும்போது அந்த மாறுதல்கள் இடம் பெற்றிருப்பது புரிந்தது!
அன்று,  ஃபேஸ்  புக்கும், டிவிட்டரும் ஆரம்பித்துத்  தவழ ஆரம்பித்த நிலை. வலைப் பதிவுகளும், வலைத்தளங்களும்  அதிகமாக உபயோகிக்கப்பட்டாலும், 2008 அமெரிக்கத்தேர்தலில் பேஸ்  புக்கும் டிவிட்டரும்  தேர்தல் களத்தில் இறங்கிய காலக்கட்டம். இந்தியத் தேர்தலில் மோடியின் இணைய சூறாவளிக் காற்று வீச இன்னும் 6 வருடங்கள் இருந்த சமயம். அன்று இந்த நியூ மீடியா பற்றி என்ன கருத்து நிலவியது என்று பார்க்கலாம்……
இனி, ஓவர் டு 2008……

வருடம் 2008

வரப்போகும் அமெரிக்கத்தேர்தலில், ரிபப்ளிக்கன்  கட்சியின் உப ஜனாதிபதி  வேட்பாளாராக சாரா பாலின் அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன் அவருடைய விக்கிப் பீடியா பக்கத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. மாற்றங்களைச் செய்தவரின் பெயர் யங் டிரிக் (Young Trigg) என்று இருந்தது. அது அவருடைய குழந்தையின் பெயர் என்பதால் ஒரு வேளை அவரே அந்த விக்கிப்பீடியா மாற்றங்களை செய்திருக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் தான் செய்யவில்லை என்று அவர் சொல்லிவிட்டார். மற்றொரு பக்கம் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜான் மெகெயின் மகள் மெகெயின் பிளாகெட் என்ற வலைப்பதிவின் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். டெமாகிரெடிக் வேட்பாளரான ஒபாமாவுக்கு பேஸ்புக்கில்  எக்கச்சக்க “நண்பர்கள்” – மெகெயின் கணக்கில் இருப்பதைவிட கூடுதலாகவே. அவருடைய டிவிட்டர் கணக்கிற்கு உலகிலேயே அதிகம் followers என்று சொல்லப்படுகிறது. நாட்டின் மூலை முடுக்கில் இருக்கும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில்  ஒபாமாவின் கூட்டங்களைப் பற்றி எழுத 120 வலைப்பதிவுகளுக்கு கட்சி அனுமதி கொடுத்திருந்தது. மாநாடு நடக்கும் இடத்தில் வலைப்பதிவாளர்களுக்கென்று  பிரத்யேகமாக கூடாரமும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. சமூகத்  தொடர்பு தளங்களின் வீச்சின் மேன்மையை முழுவதுமாக இந்த உதாரணங்கள்   பிரதிபலிக்கின்றன.
இருக்காதா பின்னே…. இப்படி ஒருக் காட்சியை நினைத்துப் பாருங்கள். ஒருவர் ஹோட்டலில் அமர்ந்து காபி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.  காதில் ஹெட் போன். பாட்டு அல்லது ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது கையில் ஒரு செல்போன். அதில் ஏதோ குறுஞ்செய்திகள்  போய் வந்தவண்ணம் இருக்கிறன. அந்த போனிலேயே இணையத்தில் மேயலும் நடக்கிறது. இருக்குமிடமெல்லாம் எங்கும் நிறைந்த இணையம் இருக்கும் நிலையில் செய்திகளும் தகவல்களும் ஒவ்வொரு தனிமனிதரின் விரல் நுனியில் எப்போதும் இருக்கிறது. உலகம் முழுவதும் இன்று ஒரு நிரந்தர, பரந்த  தையலற்ற  – seamless – தொடர்பு நிலையில் உள்ளது – அதுவும் வினாடிகளில் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் நிலையில்.
இந்தச் சூழ்நிலையில் – கையடக்கமான  சாதனங்களில் பல்வேறு செயல்களையும் செய்துகொண்டும் சமூகத்தில் சுற்றம் நட்புகளுடனும் தகவல்கள் பரிமாறிக்கொண்டும் வளையவரும் இன்றைய சூழ்நிலையில்  2008ம் வருடத்து அமெரிக்கத் தேர்தல் முழுக்க முழுக்க தகவல் தொழில் நுட்பத்தின் தாக்கத்தை – குறிப்பாக இணைய  சமூகத் தொடர்பு தளங்களை உபயோகப்படுத்துவதில் ஆச்சரியமில்லைதான்.
“ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள விழையும் மனிதனின் இயற்கையான  குணத்தின் அடுத்தகட்ட  பரிணாம வளர்ச்சிதான் இது.” என்கிறார்,  Social Media Club எனும் சமூகத் தொடர்பு தளங்களின் கூட்டு தளத்தை அமைத்த கிறிஸ் ஹயர் (Chris Heuer). “செய்திகள் மற்றும் தகவல்கள் பரிமாற்றம் செய்யும் முறையே இன்று மாறிவிட்டது. இன்று உலகின் எந்த மூலையிலிருந்தும் தகவல்கள் வினாடிகள் வேகத்தில்  பரவுகின்றன – பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, ” என்கிறார் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள New Media Consortium  என்கிற மற்றொரு சமுக வலைத்தளங்களின் மன்றத் தலைவர், லேரி ஜான்சன் (Larry Johnson).
பாரம்பரிய செய்தி நிறுவனங்களும் இன்று இந்த சமூக வலைத்தளங்களின் உதவியை நாடுகின்றன என்பதுதான் இன்றைய உண்மை என்கிறார் இவர். “காமிரா பொருத்திய ஒரு செல்போனை வைத்துக்கொண்டு ஒருவர் தெருவில்,தன் முன்னே நடக்கும் எந்த நிகழ்வையும் ஒரு நொடியில்  உலகமனைத்துக்கும் போய்ச் சேரும்படி அனுப்ப முடியும். தொழில் நுட்பம் அத்தனை வேகமாகவும் பரவலாகவும் செயல்படுகிறது இன்று.
வாஷிங்டனில் உள்ள  EIN News செய்தி நிறுவனத்தின் தலைவர், டேவிட் ரொத்ஸ்டீன்  ( David Rothstein), இணையம் இன்று செய்தி பரிமாற்றத்தில்  எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் தகர்த்துவிட்டது என்கிறார். “100 டாலர் இருந்தால் போதும் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கிவிடலாம். முன்பெல்லாம் செய்தி நிறுவனங்களோ அல்லது ரேடியோ நிறுவனங்களோ   பெரிய தனவந்தர்களிடமோ  அல்லது உயர் மட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமோதான் இருக்கும். அவர்கள் கொள்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் கட்டுப்பட்டே செய்திகள் இருக்கும் நிலையும்  இருந்தது. ஆனால் இன்று ஒரு மாட்  ட்ரட்ஜ்  (Matt Drudge) தன்  Drudgereport.com என்கிற வலைத்தளத்தை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் செலவாகும் CNN போன்ற நிறுவனங்களை விட  அதிக நேயர்களை எளிதில் பெற முடியும்.” என்கிறார் இவர். இந்த EIN News, ஒரு நாளைக்கு 5000 செய்தித் தளங்களை  அலசி சுமார்  80000 கட்டுரைகளை வகைப்படுத்தித் தன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறது.
அச்சு ஊடகங்களைப் போலவேதான் இந்த இணைய ஊடகங்களும் செய்திகளையும் தகவல்களையும் பரப்புகின்றன. ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் இங்கே செய்திகள்  பயனீட்டாளர்களே  செய்திகள் கொடுப்பவர்களாகவும் இருக்க முடியும். அநேக இணையத் தளங்கள் சாதாரணக்  குடிமகனின் பிரச்சனைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் வடிகாலாக  இருக்கின்றன. சமீபத்தில் நேபாளத்தில் ஜனநாயகத்துக்காக நடந்த  போராட்டத்தில் இணையம் பெரும் பங்காற்றியது. வலைப் பதிவாளர்கள் பலர் தங்கள் எண்ணங்களை தங்கள் பதிவுகளில் பகிர்ந்து கொண்டனர். இணையத்தின் வழியாகத்தான் நேபாளத்தின்  போராட்டம் வலுப்பிடித்தது என்று சொன்னாலும் அது மிகையாகாது. அதுபோல், 2004 ல் ஆசியாவில் ஏற்பட்ட சுனாமி, பின் சீனாவின்  பூகம்பம், மற்றும் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் காத்ரீனா  புயல் என்று பல பேரிடர்களிலும் இணையம் சக்தி வாய்ந்த செய்தி  சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது.
தகவல் பரிமாற்றம் விரைவாக இருந்ததால் தேவைப்பட்ட இடங்களுக்கு உதவிகள் விரைவில் சென்றடைய முடிந்தது.
மனிதனின் தகவல் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தை லேரி ஜான்சன் விளக்குகிறார். ” லாட்டின் அமெரிக்காவில் ஒரு முறை ஒரு இடத்தில் இணையத் தொடர்பில் ஏதோ பழுதாகிவிட்டது. ஆனால் எல்லோரும் அவரவர் செல் போனை உபயோகித்து தகவல்களும் படங்களும் பரிமாறிக்கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் தகவல் பகிர்ந்து கொள்வதில் இயற்கையிலேயே  நமக்கு அவ்வளவு ஆர்வம். நாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்பது இயற்கையான குணம். இன்று நியூ மீடியா இதற்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது,” என்கிறார் இவர்.
இப்படிப்பட்ட இணைய மீடியாக்கள் செய்திகளை அளிப்பதற்கும் பெறுவதற்கும் இணையத்தை அலசுகின்றன என்றால், அச்சு ஊடகங்களும் இன்று பெரும்பாலும் இணையம் வழியாக பயனீட்டார்கள் மூலமாக  செய்திகள் பெறுகின்றன. நிதி புரட்ட crowd financing என்ற முறை இருப்பதுபோல், செய்திகள் பெறவும்  crowd sourcing என்ற முறை பின்பற்றப்படுகிறது. “சிறு சிறு துளிகளாக பொது மக்களிடமிருந்து பணம் பெற்று இன்று, சினிமா, ஊடகம், கால்பந்தாட்டம், மென்பொருள் என்று  பல துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது” என்று தன்  கட்டுரை ஒன்றில் சொல்கிறார்,  “Wired” பத்திரிகையின் ஆசிரியரும், “Crowd Sourcing: Why the Power of the Crowd is Driving the Future of Business” என்கிற புத்தகத்தை  எழுதியவருமான ஜெஃப் ஹோ  – Jeff Howe. தன்  தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு மில்லியன் வாக்காளர்களிடமிருந்து பணம்  வசூல் செய்த பராக் ஒபாமாவை சுட்டிக் காட்டும் இவர், இன்று ஒபாமாவின் பிரசாரத்திற்கு ஒரு மில்லியன் சொந்தக்காரர்கள் என்று குறிப்பிடுகிறார்.
இந்த சிறு துளி பெரு வெள்ளம் யுக்தியை உபயோகித்து இன்று ஊடகத்துறையில் செய்திகள் பெறப்படுகின்றன. ஸ்பாட் அஸ் (Spot Us) என்கிற இணைய தளத்தை தொடங்கியவர் டேவிட் கோன் (David Cohn). The Knight Foundation என்கிற நிறுவனத்தின் மூலம் 3,40,000 டாலர்கள் முதலீடு பெற்று இந்த “கூட்டு சேகரிப்பு” ( crowd sourcing) முறை மூலம் ஊடகத்துறையில் புதிய பரிணாமங்களை பரிசீலனை செய்தார். பொதுவாக ஊடகங்களில் செய்திகள், அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் மூலமும் சுயேச்சை செய்தியாளர்கள் மூலமும் பெறப்படும். இந்த கூட்டு சேகரிப்பு முறையில் செய்தி என்று தோன்றும் எந்த ஒரு யோசனையையும்  யார் வேண்டுமானாலும் இந்த ஸ்பாட் அஸ் என்ற  ஊடகத்திற்கு கொடுக்கலாம். அந்த ஐடியாவிற்காக  செய்ய வேண்டிய நம்பகத்தன்மை, செய்தித்தன்மை, மற்றும் பின்புலம் போன்றவற்றை செய்வதற்கான ஆராய்ச்சிக்காக  ஆகும் செலவில் 20 சதவிகிதம்  யோசனை கொடுத்தவர் ஊடகத்துக்கு கொடுக்க வேண்டும். யோசனை கொடுத்தவரே ஆராய்ந்து எழுதும் பட்சத்தில் ஊடகம் அவருக்கு  கொடுக்கும். இப்படி இருபுறமும் கொடுக்கல் வாங்கல் இருக்கும். இதுபோல் வால்  ஸ்ட்ரீட் ஜர்னல்  (Wall Street Journal) பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியரான பால் ஸ்டைகரும்  (Paul Steiger) இப்படி ஒரு கூட்டு சேகரிப்பு அமைப்பு ஒன்றை ஆரம்பித்தார்.
சாதாரண பொது மக்களுக்கும் ஊடகத்துறையில் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது டேவிட் கோனின் குறிக்கோள். தவிர, பல வாசகர்கள் / நேயர்கள் பிரபல ஊடக நிறுவனங்களின் செய்தியளிப்பு முறையில் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்ற கருத்தும் நிலவி வந்தது.  ஆனால் இந்த  கூட்டு சேகரிப்பு முறையில் யார் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான அல்லது சாதகமான  “செய்திகளை ” பிரசுரிக்க முடியும் என்ற சங்கடமும் இருந்தது. இருந்தாலும் பரவலாக பொது மக்களிடம் இந்த ஐடியா சூடு பிடித்துள்ளது. சுய லாபத்துக்காக இல்லாமல், பொதுவாக நல்லது நடக்க வேண்டும் என்று விழையும் பலர் இப்படிப்பட்ட கூட்டு சேகரிப்பு ஊடகங்களை நாடுகின்றனர்.
இது போன்று பொது நன்மையை விரும்பும் எண்ணம்தான் கிரிஸ் ஹையர் தன்னுடைய சோஷியல் மீடியா க்ளப் தொடங்க உந்துதல்.  ‘90 களில் டாட். காம் புரட்சி தொடங்கியபோது பல சிக்கல்கள் சவால்கள் இருந்தன. அப்போது நானும் ஒரு இணையத் தளம் ஒன்றைத் தொடங்கினேன். ஆனால் ஏகப்பட்ட சிக்கல்கள். சின்ன சின்ன வேலைகளுக்கும் தொழில் நுட்ப வேலை செய்பவர்கள் எக்கச்சக்கமாய் பணம் வசூலித்தார்கள். இந்த சமயத்தில்தான் ஒரு பார் காம்ப் (Bar Camp) போனேன். (வலைப்பதிவாளர்கள் சேர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது பார் காம்ப் .) அங்கே என்னைப்போல் நிறைய ஆர்வலர்கள் பல விதங்களில் ஒருவருக்கொருவர் உதவவும், தொழில்  நுட்ப விஷயங்களையும்  பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தார்கள். எல்லோருக்குமே ஒரு பொது ஆர்வம் – தொழில் நுட்பம் வளர வேண்டும் என்பது. 2006ல் இப்படி ஒத்த சிந்தனையாளர்கள் சேர்ந்து இந்த சோஷியல் மீடியா க்ளப் உருவாக்கினோம்.” என்று விளக்குகிறார் கிரிஸ்.
இந்த நியூ மீடியாக்களின் வருமானம்? “எங்கள் க்ளப் மெம்பர்ஷிப் கட்டணம் உண்டு. 100 டாலரிலிருந்து 2500 டாலர் வரை தனி மனிதர் அல்லது கார்பொரேட் என்று  அவரவர் தேவைக்கேற்றார்போல் இருக்கும். பல்கேரியா, லண்டன் சிங்கப்பூர் என்று உலகளாவி எங்கள் மெம்பர்கள் உள்ளனர். ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைவிட சமூக இணைப்பு, மற்றும் தொழில் நுட்ப  பரிவர்த்தனை  எங்கள் முதல்  நோக்கம். ” என்கிறார் இவர்.
இன்று இணைய ஊடகங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பொழுது போவதற்காக வெட்டியாக எழுதப்படுபவை  பதிவுகள் என்று ஒதுக்கப்படுவதில்லை. சமூக சிந்தனைகளுக்கு அவை ஒரு அளவு கோள்  என்று இன்று கருதப்படுகிறது. இணைய ஊடகங்களின் மிகப் பெரிய பலம் அவற்றின் நுண் வீச்சு. Micro reach என சொல்லும் வகையில் ஒவ்வொரு தனி மனிதரையும் இந்த ஊடகங்கள் தொடுகின்றன.
டிப்பிங் பாயிண்ட் எழுதிய மால்கம் க்ளாட்வெல் தன்  புத்தகத்தில் கூறியுள்ளதுபோல் ஒரு ஐடியா, ஒரு சிந்தனை, அல்லது எண்ணம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தாண்டினால் காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்துவிடும். இந்த நியூ மீடியா இன்று அந்த எல்லையைத் தொட்டுக்  காட்டுத் தீயாக மாறிவிட்டது. “தன் எண்ணம் / குரல் வெளியே கேட்கப்பட  வேண்டும் என்று ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் புதைந்துள்ள ஆசைதான் இன்று இப்படி நியூ மீடியாவாக உருவெடுத்துள்ளது” என்று கூறுகிறார் நியூ மீடியா கன்சார்ஷியத்தின் லேரி ஜான்சன்.
“We Media” என்ற அதிகார பூர்வமான அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும்படி அமெரிக்கன் பிரஸ் சென்டர், ஷேய்ன் போமேன், க்ரிஸ் வில்லிஸ் என்ற  இரு பத்திரிகையாளர்களிடம்  பணித்திருந்தது.  செய்திகள் பரவும் அல்லது  அளிக்கப்படும் முறைகளில் நுகர்வோரில் ஒவ்வொருவரும் பங்களித்துக்கொண்டிருக்கின்றனர் என்று இந்த பேப்பர் கூறுகிறது. ஆன்லைன் ஜர்னலிஸம் ரெவ்யூ ஆசிரியர் ஜே. டி.லசிகா எடிட் செய்த இந்தப் பேப்பர், பொது மக்களின் பங்களிக்கும் ஜர்னலிஸம் இன்று மக்களின் வாழ்வுமுறையையும் மாற்றி வருகிறது என்று குறிப்பிடுகிறது. இன்றையத் தலைமுறையின் வாழ்க்கையும் இணையத்தைச் சுற்றியே பிணைந்திருந்து பயனீட்டாளரே பங்களிப்பவராகவும் மாறிவிடும் காலக்கட்டத்தை இந்த ஆராய்ச்சி  விளக்குகிறது.
வாழ்க்கையில் பெரும்பாலான பொழுதை  இணையத்தில் கழிக்கும் சமூகத்தைக் கவரும் விதமாக பல நிறுவனங்கள் பலவித உத்திகளைக் கையாளுகின்றன. ஹோட்டல்களில் இணையத் தொடர்பு கொசுறாகக் கொடுக்கப்படுகிறதென்றால், பல அமைப்புகள் “Women executive social network” போன்ற  சமூகத் தொடர்பு  வசதிகளை செய்து கொடுக்கின்றன.
ஹாட் மெயில் ஆரம்பித்த சபீர் பாட்டியா ஒரு டெலிகான்பிரன்ஸ் தளம்  ஆரம்பித்துள்ளார்.
“இந்த இணைய  சமூகத் தொடர்புகள் அதிகமாக உருவாவதில் அநேக புதிய  பிரச்சனைகளும் எழலாம். ஆனால் பொதுவாக நேர்மறையாகவே இந்த ஊடகத்தை அணுக விரும்புவோரும் அதிகம்” என்று ஜான்சன் கூறுவது இந்த சமூக நீரோட்டத்தைச சரியாக கணிப்பது போல் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.