வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்

vazukkuppaarai

சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக  கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே கூறுகிறார். “நூறுதரம் முன்பே கூவிச் சொன்னதுதான் முதலில் நான் கவிதை வாசகன்”.
எந்த ஒரு படைப்பாளியுமே முதலில் எழுதுவது பெரும்பாலும் கவிதைதான். அதன் பிறகுதான் கதை, கட்டுரை விமர்சனம் நாவல் எல்லாம். கருவிலேயே திருவுடைய ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அவர்கள் வாளை உருவி என்னுடன் போர் தொடுக்க வேண்டாம். என் அனுபவத்தை எழுதினேன் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ஏறக்குறைய 50 ஆண்டுகளாகக் கவிதை எழுதி வரும் அவர் “கவிதை எனக்கு என்றும் வழுக்கும் பாறைதான்” என்று சொன்னாலும் அவர் கவிதைகள் என்றும் கல்லின் மேல் எழுத்தாகத்தான் இருக்கின்றன.
நாஞ்சில் நாடனின் முதல் கவிதைத் தொகுதி ‘மண்ணுள்ளிப் பாம்பு’ எனும் பெயரில் கோவை விஜயா பதிப்பகத்தாரால் 2002-இல் வெளியிடப்பட்டது. பிறகு 2010-இல் ’பச்சை நாயகி’ எனும் அவரது இரண்டாம் தொகுப்பை திருச்சி உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டது. அவற்றுடன் அந்தத் தொகுப்புகளுக்குப் பின் எழுதிய கவிதைகளும் சேர்ந்து ஆக மொத்தம் 125 கவிதைகள் கொண்ட முழுத்தொகுப்பாக ‘வழுக்குப் பாறை’ எனும் பெயரில் இப்போது வெளி வந்துள்ளது. மிக நேர்த்தியான முறையில் இதனைக் கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இத்தொகுப்பில் சில கவிதைகள் கவிதை பற்றியே பேசுகின்றன. எது கவிதை, எதை எழுதவேண்டும், இப்போது எதைப் பற்றி எழுகிறார்கள் என்பனவெல்லாம் ஒரு சில கவிதைகளில் அடங்கியுள்ளன. ஒரு சில கவிஞர்கள் கவியரங்குகளுக்காக மட்டுமே கவிதை எழுதக் கூடியவர்கள். வெற்றுக் கைதட்டலின் மீது இவர்கள் கவிதைகளுக்கு ஆர்வம் அதிகம். இவர்கள் மண்ணைப் பார்க்காமல் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள். உடனே புரட்சி பூக்க வேண்டும் என்று கோபக்குரலில் வெற்றுச் சொற்களை அடுக்கி சூரிய வெப்பக் காற்றாய் குளிர் பதன அரங்குகளில் கவிதை வாசிப்பதோடு இவர்கள் கவிதை முடிந்து விடுகிறது. இதைத்தான் நாஞ்சில் நாடன்,

”புரட்சியின்  மின்னல் கொடியென
அக்கினிக் காற்றாய் வீசியது
குளிர்பதன அரங்குகளில் கவிதை”

என்று எழுதுகிறார். மேலும் வாசகன் இவை கண்டு மிரண்டு போகிறான். திகைத்த அவன் மனத்தில் இருந்த கவிதை பொசுங்கிப் போய் விடுகிறது. கவிதை என்பது நேயத்தைக்காட்ட வேண்டும். வெறும் கூக்குரல்கள் மட்டுமே கவிதையன்று. அதனால்தான் நாஞ்சில் கேட்கிறார்.

“உம்மில் எவர் எழுதக் காத்திருக்கிறீர்
பூவுலகைப் புதுக்கி எடுக்கும் அந்த
ஒப்பற்ற வரிகளை?

இத்துடன் அவர் நிறுத்திவிடவில்லை. அந்த வரிகள் எவையென அடையாளம் காட்ட வேண்டுமன்றோ? அவர் சில வரிகளைக் காட்டுகிறார். தன்னை மதித்து மரியாதை செய்யாமல் நாட்டை விட்டு விரட்டும் போது கம்பன் பாடினானே அந்த வரி.  “உம்மை அறிந்தோ தமிழை ஓதினேன்”
அதே கம்பன் இராமகாதையில் மானிடரின் மேன்மையைக் காட்டும் விதமாகப் பாடினானே அந்த வரி.  “மற்றுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா”
பழைய புலவர்கள் அரசானது சரியாக இல்லாமல் மக்களை நேசிக்காமல் இருந்தாலோ அல்லது நல்லவர்களுக்குத் துன்பம் இழைத்தாலோ அவர்கள் எப்படி அதை மிகத் துணிவுடன் வசை பாடினார்கள் என்பதற்கு இரு வரிகளைக் காட்டி அவை போல இன்று யார் பாடுவீர்கள் என்று கேட்கிறார்.
”நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்”
“கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக”
இந்த வரிகளுக்குமுன் இந்தக் காலக் கவிஞர்கள் எப்படி அரசாங்கத்தில் உள்ளவர்கள், பெரிய பணக்காரர்கள், திரைப்படத் துறையினர், மற்றும் அரசுக்குச் சேவகம் செய்து வருபவர் எனப் பல அதிகார மையங்களின் முன்னால் அடி பணிந்து கிடக்கிறார்கள் என்பதை எழுதுகிறார். அவர்கள் எப்படிப் பணிந்து விழுகிறார்கள் என்பதற்கு சத்தி முற்றப் புலவரின் உவமையைக் கையாள்கிறார்.

“யாவரின் முன்பும் இடுப்பு வளைந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
அழுக்குப் பொதிபோல் சொந்தக் கவிதை
முதுகில் சுமந்து கூன்பிறை நெற்றி
நிலம்படப் பணிந்து கூசி ஒதுங்கி நிற்கும்”

என்ற வரிகள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமுமின்றி இருக்கும் கவிஞர்களைச் சாடுவதாகவே இருக்கிறது. இவ்வாறு எழுதவும் ஒரு துணிவு வேண்டும். அதுதான் நாஞ்சிலின் கூடவே பிறந்ததாயிற்றே?
இந்த வரிக்கவிதைகள் எழுதாமல் இன்னும் கூட சிலர் கவிதை எனும் பெயரில் பழைய கள்ளைப் புதிய மொந்தையில் அடைத்துத் தருகிறார்கள். வேறு சிலர் இன்னும் புரியாத கவிதைகளையே எழுதுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் எங்கள் கவிதைகள் இருண்மைத் தன்மை கொண்டவை என்று மார் தட்டுகிறார்கள்.  அதைவிட அவர்கள் சொல்வது எம் கவிதைகள் பற்றிப் புரிந்து கொள்ள உமக்கு இலக்கிய அறிவு போதாது என்பதுதான்.
சங்க காலத்தில் தெளிவாகப் புரிந்த கவிதைகளை இப்போது உரை இல்லாமல் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது உண்மையே. அதற்காகத் தான் பாரதியும் வள்ளலாரும் கவிதையை எளிமையான சொற்களால் ஆக்கி சாதாரண மாந்தருக்கும் விளங்க வைத்தார்கள். ஆனால் இவர்களோ கவிதைக் குழந்தையை மீண்டும் அந்தச் சங்க காலத்துக்குக் கொண்டு போகிறார்கள் என்பதை எண்ணும் போது சிரிப்பும் வேதனையும்தான் வருகிறது. உண்மையில் மனம் திறந்து சொல்ல வேண்டும் எனில் இன்றைக்கு நவீனச் சிற்றிதழ்களில் வெளி வரும் கவிதைகளில் பாதிக்கு மேல் புரிய வில்லை என்பதை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
இப்படி எழுதிக் குவிக்கப்படும் கவிதைகளை இவர்கள் யாருக்காக எழுதித் தள்ளுகிறார்கள் என்று கேட்க வேண்டியிருக்கிறது. மேலும் இந்தக் கவிதைகள் நிற்குமா என்றும் யோசிக்கத் தூண்டுகிறது. இப்படிப் பட்ட கவிதைகள் எழுதிக் கிடைக்கும் புகழ் என்ன ஆகும் என்றால் நாஞ்சில் நாடனின் இந்த வரிகள்தாம் அதற்குப் பதிலாகும்.

“நெடிது நாள் உழைத்தும், வளர்த்தும், சேர்த்தும்
செம்மாந்து நிற்பதாய்த் தோன்றும் உம்புகழ்
எதிர்காலத்து இளம் தலைமுறைக்கு
கொசுகள் ஆயும் சாக்கடையாக,
குவிந்து நாறும் குப்பைமேடாக
வெட்டிக் களைந்த மயிரது போல
வீதி தோறும் வெறிதே அலையும்
எழுதிக் குவித்த எல்லாம் ஒருநாள்
மலம் துடைத்த காகிதம் ஆகும்.

இன்று எழுத்தாளன் எதை எழுதினாலும் பிரச்சனைதான் அவனுக்கு வந்து சேர்கிறது. எங்கே ஒரு நூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு அதற்காகவே காத்திருக்கும் சாதிக்காரர்களும், கட்சிக்காரர்களும் முற்போக்கு பிற்போக்குக் காரர்களும் அந்த நூலைப்பிடித்துக் கொண்டு தடி தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள். நாஞ்சிலே முன்பு ஒருமுறை சொன்னது போல “உன் குழந்தை எனக்குப் பிடிக்க வில்லை: அதைக் கொன்று விடு” என்று கூச்சல் போடுகிறார்கள். எனவேதான் கோபத்தை மறைத்து அவருக்கே உரித்தான எள்ளல் பாணியில்  எதை எழுதலாம் என்று 2010-இல் வெளிவந்த தொகுப்பிலேயே எழுதுகிறார்.

”அம்மையின் அக்காவின் தாலியறுப்புச்
சடங்குகளை எழுது
மரணம் ஆன்மீக அனுபூதி
தத்துவப் புளிக்கறி, செண்பக
மலர் கொண்டு தொட்டதுபோல்
நேசமிகு காதலியின் மெய்தீண்டல்
நேற்றுச் சூடிய கசங்கியபிச்சிப்
பூவாய் அவள் கைக்கிடை வாசம்
என எழுது
சக மானுடச் சிக்கலது
கவிதை காலாகாலத்துக்கும் நிற்கும்
கடையூழிக் காலத்தில் வாசிக்க
கூன்பிறை சூடிய சடையாண்டி
கக்கத்துல வச்சுக்கிட்டு நடந்து திரிவான்

தொடர்ந்து கவிதை பற்றி அவர் ஆழ்ந்து யோசிக்கிறார். மரபுக் கவிதை சரியில்லை என்றுதானே நவின கவிதை எழுத வந்தனர். இங்கு மட்டும் அவர்கள் என்ன சாதித்தனர் என்று கேட்கிறது அவர் கவிதை.

“மரபெனப் பட்டது உடைத்துப் பார்த்தால்
ஒன்றுமே இலாத அப்பளம் என்றனர்
நவ கவிதை பூரண் போளியா
அடைப்பம் வைத்த இலைப் பணியாரமா
இங்கும் உடைத்துப் பார்த்தால்
நாலில் மூன்று பொக்காய் போனது.”

இன்றைக்குக் கவிதை படிக்கும் வாசகர்கள் குறைந்து போய் விட்டார்கள். எழுதிய கவிஞர்கள்தாம் அவற்றைப் படித்துக்கொண்டு ரசிக்க வேண்டியிருக்கிறது. பதிப்பக்கங்களும் கவிதைத் தொகுப்பா? வேண்டாம் என்கின்றன. இப்படியே போனால் தமிழ்க் கவிதையின்நிலை என்ன ஆகும் என்று கேட்கத் தோன்றுகிறதன்றோ? நாஞ்சிலின் வரிகளும் அதையே நினத்து அச்சப்படுகின்றன.

“தம்முயிர் பாதி எரிந்தது பார்த்தும்
இங்கே கவிதை
வாளாவிருந்தது
சாப்பிள்ளையாகத் தோன்றும் கவிதை
சுமையுமாகிப் போகும் விரைவில்
அதுவே எமது
அச்சமனதின் ஆணி வேராகும்.”

இத்தொகுப்பில் சில அரசியல் கவிதைகளும் உள்ளன. அரசியல் என்றவுடன் கொடியையோ கோஷத்தையோ எண்ணிக் கொள்ள வேண்டாம். இன்றைய அரசியலின் சூழல், ஆட்சி மாறுதலால் சாதாரண மாந்தனுக்குக் கிடைக்கும் பயன், ஒரு சில அரசியல்வாதிகளின் வேடம் எல்லாம் விரவிக் கிடக்கும் கவிதைகள் சில உள்ளன. நம் நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. அத்தேர்தலில் சில சமயம் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் கிடைக்கிறது? ஒரு கட்சி ஆட்சி அகன்று வேறு கட்சியின் ஆட்சி  வந்தால் ஏதாவது மாற்றம் நிகழத்தானே வேண்டும் ஆனால் நம் நாட்டில் அவ்வாறு எப்போதாவது நடந்திருக்கிறதா? இல்லையே ஏன்? இங்கு எல்லாக்கட்சிகளும் ஒரே மாதிரிதானே உள்ளன. வணிக இதழ்களில் அட்டையை மட்டும் மாற்றி விட்டால் எல்லாம் ஒன்றுதானே என்று  தான் இந்த இடத்தில் நினைக்கத் தோன்றுகிறது. ஆமாம். இங்கு கட்சிகள் இடையே  வேறுபாடு இல்லாததால் வரும் ஆட்சி மாற்றங்களாலும் ஏதும் நிகழ்வதில்லை. இதைத்தான் நாஞ்சிலின் “நிறம் சுவை மாற்றம்” எனும் கவிதை காட்டுகிறது.

”பூசணி
மத்தன்
பரங்கி
அரசாணி
காய்தான் எல்லாம்!
கொடுங்கோல்
குடியரசு
மதச் சார்பற்ற மக்கள்ஆட்சிப் பனம்பழம்
யாவற்றின்
நிறம் சுவை
நாற்றம் ஒன்றே”

’மக்களாட்சி வதைப் படலம்’ என்றே ஒரு கவிதை இருக்கிறது. எப்படி நம் அரசியல்வாதிகள் மக்களாட்சியைப் பயன் படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அதில் பார்க்கலாம். ஏழையர் வாக்குகள், செம்மொழித்தமிழ், கருத்தெல்லாம் நஞ்சு, தித்திக்கும் தேன் போன்ற பேச்சு, அயல் நாட்டு வங்கியில் பணம், கடலோரச்சிலைகள், கறுப்புக்கொடி, பேரணி, ஒருவேளை உண்ணா நோன்பு, வெள்ளித்திரை இவையெல்லாம்தாம் இன்று நம் நாட்டின் மக்களாட்சியை நடத்துகின்றன என்பதை அக்கவிதை கோடிட்டுக் காட்டுகிறது.
நாம் பேசும்போது நன்றாகப் பேசுகிறோம். ஆனால் செயல் என்று வரும்போது திடமான மனம் கொள்வதில்லை. அச்சப்படுகிறோம். வீட்டில் பல தொல்லகள் செய்யும் எலிகளை ஊழல்களாக உருவகப்படுத்துகிறது ஒரு கவிதை. அந்த எலிகள் பல தொல்லைகள் கொடுக்கின்றன அந்த எலிகளைக் கொல்லவே நாம் துணிவதில்லை. அதுபோல ஊழலை தனிநபர் சார்ந்தே ஒழிக்க முடியாதபோது நாட்டளவில் எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்கிறது ”தன் திடம்’ என்ற கவிதை.
“எலிகளைக் கொல்லவும் தன்திடம் வேண்டும்/ அஃதுமக்கிருந்தால்/ உலகத்து எலிகளை ஒவ்வொன்றாகவோ/ ஒன்றாய் கூட்டியோ/ ஒழிப்பது பற்றி நாம்/ யோசனை செய்யலாம்”
”ஞானோபதேசம்” கவிதை நாட்டில் செய்யக்கூடிய எல்லாத் தீமைகளையும் செய் கிண்டல்  மொழியில் என்று கூறுகிறது. அப்படிச் செய்தால் உனக்கு என்ன கிடைக்குமாம்? கவிதை கூறுகிறது.

“வையத் தலைமை கொள்
வாழ்வாங்கு வாழ்வாய் காண்”

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற பழமொழிதான் இப்போது நினைவுக்கு வருகிறது.
ஒரு பரந்த திறந்த வெளியில் நின்றுகொண்டு நெடுந்தொலைவைப் பார்த்தால் இறுதியில் வானமும் மண்ணும் தொட்டுக்கொண்டு இருப்பதுபோல் தோன்றும். இதைத்தான் தொடுவானம் என்பர். ஆட்சித் தலைவரிடம் தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டு மனுகொடுக்கிறான் சாதாரண மனிதன். அது நிறைவேறும் என்று எண்ணுகிறான் அவன். அந்த மனு என்ன ஆகிறது என்பதைக் கவிதை இப்படிக் காட்டுகிறது.

“தொடும் தூரத்தில் நின்றதை
சிறு கண் ஒளிர
சிலம்பித் திரிகையில்
மடித்த மனுவோ
கீழ் நோக்கிப் பயணமாய்
தரைதொடாமல்

மனு மேலே செல்ல வேண்டிய துறைக்குப் போகாமல் கீழே உள்ள தொட்டிக்குப் போகிறது. இக்கவிதையில் சாதாரண மனிதன் இருட்டுக்கு உருவகப் படுத்தப்பட்டுள்ளான். அவனுக்கு பட்டறிவு தோன்றி சிந்தனை வளர்ந்து வரும் காலத்தில்தான் தொடும் தூரம் வரை நின்றது போலி என்பது புலனாகும். இதைத்தான் ’தொடுவானம்’ கவிதை இப்படி காட்டுகிறது.

“இருட்டுக்கு அறிவு விடியும்
அகாலத்தில்
சின்ன இருட்டின்
சிந்தனையில்
தொடுவானம் துலங்கும்”

ஆனால் இன்று ஆட்சித் தலைவர்கள் நடத்தும் குறை தீர்க்கும் நாளில் ஒரு சில நன்மைகளும் ஒரு சிலர் அடைகிறார்கள் என்பதையும் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
“பயன் மரம்” என்ற பெயரில் ஒரு கவிதை. வள்ளுவர் ஆண்ட சொல் இது. உள்ளூர் நடுவே பயன் மரம் பழுத்தால் எல்லார்க்கும் பயன் தருமாம் அப்படித்தான் எதிர்பார்த்தோம். நம்மை ஆண்ட அன்னியர் அகன்றபின் நாடு நமக்குரியதாயிற்று. எல்லாப் பயனும் கிடக்கும் என்றே இருந்தோம். ஆனால் ஆட்சி செய்ய வந்தவர் எல்லாரும் கனிகள் பறித்துண்டனர்; உடல் உரம் மிக்கவர் காய்களைப் பிஞ்சுகளைக் கவர்ந்து சென்றனர்; எல்லாம் போனபின் என் தலைமுறைக்கு என்ன கிடைக்கும்? அவர்களுக்கு வெறுத்தே போய் விட்டது. சலிப்பும் வந்துவிட்ட்து. அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? இதோ கவிதை வரிகள்;

பயன்மரம் உள்ளூர் பழுத்தும் பயனென்
கிளைகளைத் தறித்து
விறகாக்கென்றனர்
எமது விடலைகள்

இலக்கிய உலகைக் கிண்டல் செய்கிறது ஒரு கவிதை. படைப்பிற்காக இல்லாமல் படைப்பாளியின் பெயருக்கும், அவரைச் சிபாரிசு செய்வோரின் தரமறிந்தும்தான் இன்றைக்குப் பரிசுகளும் விருதுகளும் அளிக்கப்படுகின்றன. இதிலும் சில அத்திப் பூப்பது போல இருக்கலாம். மறுப்பதற்கில்லை. பரிந்துரைக்க ஆள் இருக்கும் போதே பரிசு வாங்கி விட வேண்டும் என்று துடிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் என்ன செய்தான் என்று சொல்கிறது இந்தக் கவிதை.

“இரவெலாம் விழித்து
அடர்மழை பொழியும்
காலையில்
எழுதி முடித்தான்
நோபல் பரிசின் ஏற்புரை
படைப்பை இனிமேல்
யோசிக்கலானான்”

உவமைகள் எல்லாம் நாஞ்சிலுக்கு இயல்பாக வந்து விழுகின்றன. “வழிபாடு” கவிதையில் உடலுக்கு உள்ள இடர்ப்பாடுகளைச் சொல்கிறார். சுரைக்காய் போன்ற கழுத்து, உடல் பூராவும் எலுமிச்சை இலந்தை நெல்லிப் பழம் போல் உண்ணிகள், தொலிக்காத தேங்காய் போல் ஓதம், தேங்காய் சவரிபோல் சடைத்த முடி, என்றெல்லாம் அடுக்கி வந்துள்ள உவமைகள் சிறப்பாக உள்ளன.
நாஞ்சில் சொற்கள்மீது தீராக் காமம் கொண்டவர். ஒரு புதுச் சொல்லைக் கண்டால் மிகவும் மகிழ்ந்து அதைத் தம் படைப்பில் பயன்படுத்தி வெளிக்கொணர்பவர். அதே நேரத்தில் நிறைய சொற்கள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டனவே என்று  வருத்தமும் கொள்பவர். அந்தச் சொற்களெல்லாம் வீணாய்க் கிடக்கிறதே என்று வருந்தித்தான் இப்படி எழுதுகிறார்.

“போர் அறியாக் கைகருவி போல
குக்கல் உருட்டும் நெற்றுத்தேங்காய் போல
பாழாய்க் கிடக்குதடா!”

மேலும் கூறுகிறார்.

“அவை
ஊரான் முதலல்ல தம்பி
உன்மொழியின்  வெள்ளாமை”

‘மாற்றிச் சூடு’ எனும் தலைப்பில் புதிய ஆத்திச் சூடி ஒன்றை எல்லாமே எதிர்மறைப் பொருளில் வரும்படி எழுதி உள்ளார். அதில் ஊகாரத்துக்கு எழுதும்போது “ஊரார் கைப்பணம் ஊச்சாளி பைப்பணம்” என்கிறார். ஊச்சாளி என்பது நமக்குப் புதிய சொல். அக்கவிதையின் அடிக்குறிப்பில் ஊச்சாளி என்பதற்கு வன்னெறியாளன் என்று பொருளும் கூறுகிறார்.
பிலம்’, ’நகை’ என்பன தொகுப்பின் முக்கியமான கவிதைகள். தேடல் எனும் கவிதையை நாஞ்சில் நாடனின் சுயசரிதை என்று கூட எண்ணலாம்.
ஈழம் பற்றிய கவிதைகள் எல்லாமே அவரின் அடிமன ஆழத்திலிருந்து எழுந்தவை என்று தெரிகிறது. “சலோ சென்னை” எனும் கவிதைக்கு அடிக்குறிப்பாக “கவிதையின் தலைப்பு தமிழில் இல்லாத காரணத்தால் இதற்கு வரிவிலக்கு மறுக்கப்படுகிறது” என்பதைக் காணும்போது நாஞ்சிலுக்கே உரிய எள்ளலை அனுபவிக்க முடிகிறது. ”ஓவியத்து எழுத எண்ணா உருவத்தோய்” ”நட்ட கல் பேசுமோ” ”இளையதாக முள்மரம் கொள்க” “கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது” என்பன போன்ற பழைய இலக்கிய அடிகள் மின்னலாக ஆங்காங்கே பளிச்சிடுவது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். மொத்தத்தில் இளைய தலைமுறை படித்து அறியவும் மூத்த இலக்கிய வாதிகள் படித்து சுவைக்கவும் கூடிய தொகுதி இது. நேர்த்தியாக வெளியிட்டுள்ள பதிப்பகத்துக்குப் பாராட்டுகள்.

வழுக்குப்பாறை
நாஞ்சில்நாடன் கவிதைகள்
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை
பக் :208
விலை : ரூ 130

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.