முத்ரா மூலமாக நிதிச்சந்தைகளை உள்ளிணைப்பது

முத்ரா வங்கி என்பது அவசியமா? அதன் வடிவமைப்பு என்னவாக இருக்கும்?

PM_Mudra_Bank_Finance_SBFC_Micro_Loans_R_Vaidyanathan_FM_Minister_Analysis_Modi

பிரதம மந்திரி நரேந்திர மோதி, முத்ரா (Micro Units Development and Refinance Agency) எனப்படும் மைக்ரோ அலகுகள் அபிவிருத்தி மற்றும் மறுநிதியளிப்பு முகமை நிறுவனத்தை சென்ற மாதத்தில் தடபுடலாகத் தொடங்கினார். முத்ரா வங்கி சிறிய நிறுவனங்களின் மீது தன் கவனத்தை செலுத்தும். சிறுதொழில் தொடங்குவோருக்கும் தொழில் முனைவோருக்கும் கடன் வசதியை அளிக்கும். நிதி நிறுவனங்களிடமிருந்து மறு நிதியம் பெறுவதன் மூலம் இதை சாத்தியப்படுத்தும். முத்ராவில் இருந்து ஐம்பதாயிரம் முதல் பத்து லட்சம் ரூபாய்கள் வரை கடனாகப் பெறலாம். நுண்-கடன் நிறுவனங்களை ஒழுங்குறுத்தும் முகமையகம் ஆகவும் முத்ரா இருக்கும்.
இந்த முயற்சி பரவலான விமர்சனத்தையும் சந்தேகத்தையும் பெற்றுள்ளது. ஆனால், முத்ரா திட்டத்தின் நோக்கத்தையும், அது சாத்தியமாக்கக் கூடிய அமைப்புகளையும் அந்த விமர்சனங்கள் புரிந்துகொள்ளவில்லை. அதோடு, சிறிய மற்றும் நுண் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான தீவிர சிரமங்கள் நிறைந்துள்ள சூழலில் முத்ரா அவசியமாகியுள்ள சூழலையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்தியாவில் 57.7 மில்லியன் (5.77 கோடிகள்) சிறிய மற்றும் நுண் நிறுவனங்கள் இருக்கின்றன. அரசாங்கமே ஒத்துக் கொண்ட ஒரு உண்மை இது- இவற்றில் வெறும் நான்கு சதவிகிதத்தினருக்கு (23 இலட்சம்) மட்டுமே நிதி நிறுவனங்களிடம் கடன் பெற வாய்ப்புகள் கிட்டுகின்றன. இது அவலமான நிலை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கூட்டுரு நிறுவனமாகாத அமைப்புகளின் பங்கு – தனி உரிமையாளர் மற்றும் கூட்டாளி நிறுவனங்கள் இந்த அமைப்புகள்- கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதமாகும். உற்பத்தித் துறையிலும் பொருள்களுக்கு மதிப்பு சேர்ப்பதில் (value addition) இவற்றின் பங்கு கிட்டத்தட்ட அரை பங்கு. இதே போல், பல்வேறு சேவைத் துறைகளை எடுத்துக் கொண்டால் தனிமனிதராலோ, கூட்டுரிமையாலோ இயங்கும் நிறுவனங்கள் கிட்டத்தட்ட எழுபது சதவீதத்தைத் தன்னகத்தே வைத்திருக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்குகள் சேவைத் துறையைச் சாரும். கடந்த தசாப்தத்தில் எட்டு சதவிகித வளர்ச்சியை சேவைத்துறை அடைந்தது. சேவைத்துறையின் ஒரு அங்கமான வர்த்தகத் துறை உள்நாட்டு ஒட்டுமொத்த‌ உற்பத்தியில் பதினேழு சதவிகிதமாக இருக்கிறது. அதே போல், உருவாக்க உற்பத்தித் துறையும் இந்தியாவின் ஜிடிபி-யில் பதினேழு சதவிகிதம் பங்கு வகிக்கிறது.
இத்தனை முக்கித்துவத்துடன் இயங்கும் கூட்டுருவாக்கப் பெறாத தொழிற்துணிபுகளுக்கு (unincorporated enterprises) கிடைக்கக் கூடிய வங்கி வசதிகள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் இவ்வளவு முக்கியமான அங்கம் வகிக்கும் பதிவுறாத வணிக நிறுவனங்களுக்கு கடன் எளிதில் கிடைப்பதில்லை. சிறுதொழில் பிரிவில் பற்றாளர்களிடமிருந்து கடன் கிடைக்காமல் 30 இலட்சம் கோடிகள் பற்றாக்குறை நிலவுவதாக தொழில் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
கீழ்க்கண்ட விவரவங்களைக் கருத்தில் எடுப்போம். மார்ச் 1990 முதல் 2012 வரை, தேசிய வருமானத்தில், வீட்டுத்துறையின் (கூட்டுருவாக்கப் பெறாத சிறிய மற்றும் நுண் நிறுவனங்கள்) பங்கு 58 சதவிகிதத்தில் இருந்து 36% ஆக குறைந்து விட்டது. நகைப்பூட்டும் முரண் என்னவென்றால், இந்த நிறுவனங்களின் கூட்டி இணைக்கப்பட்ட வருடாந்தர வளர்ச்சி (compounded annual growth rate – CAGR) எட்டு சதவிகித்திற்கு மேல் இதே காலகட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. வர்த்தகம், போக்குவரத்து, கட்டமைப்பு, உணவகங்கள், மற்றும் மற்ற வணிக சேவைகள் என்று அனைத்துப் பகுதிகளிலும், கூட்டுருவாக்கப் பெறாத நிறுவனங்களின் வளர்ச்சி கூடியது. ஒரு ஒப்பீடாக, தேசிய வருமானத்தில், தனியார் தொழில் துறையின் பங்களிப்பு 12 முதல் 15 சதவிகிதத்திற்குள்தான் இருக்கிறது. ஆனால், வங்கிகளிடமிருந்து கிடைக்கும் கடன்களில் நாற்பது சதவிகிதத்தை இவர்கள் பெறுகின்றனர்.
இன்னும் கொஞ்சம் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்: பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் இருக்கும் நிலுவையில் உள்ள கடன் எவ்வளவு? பத்து இலட்சம் வரை பாக்கி வைத்துள்ள பிரிவில் மொத்த நிலுவைக்கடன் தொகை மார்ச் 2000இல் இருந்த 32% இல் இருந்து 21% ஆக 2011ல் குறைந்து இருக்கிறது. ஒரு கோடி வரை பாக்கி உள்ள பிரிவை எடுத்துக் கொண்டால், 45% இல் இருந்து 32% ஆக இதே காலகட்டத்தில் குறைவாகி இருக்கிறது.
இது சோம்பேறித்தனமான வங்கி முறை மட்டுமல்ல, கட்டமைப்பிலேயே குறிப்பிடத்தக்க சிதைவுகளை உள்ளடக்கிய வங்கி முறை.
முறைசார் வங்கிகள் கூட்டுருவாக்கப் பெறாத தொழிற்துணிபுகளுக்கு உதவத் தவறிவிட்டன. இந்தத் தருணத்தில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை நாடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. சீட்டுப்பண அமைப்புகள், கந்துவட்டிக்காரர்கள், அமைப்பு சாரா பணக் கடன் தருவோர் போன்றோரிடம் அவர்கள் அடைக்கலம் அடைகிறார்கள்.
மற்றும் ஒரு புள்ளிவிவரத்தை கணக்கில் எடுக்கலாம். 2011-12க்கான தேசிய வருமானத்தில் 18 சதவிகிதம் வர்த்தகத் துறையின் பங்காக இருக்கிறது. ரூ. 13.5 லட்சம் கோடிகள் என்று இதைத் தற்போதைய விலையில் மதிப்பிடலாம். இதில் 76% பெருநிறுவனங்கள் அல்லாதவர்களின் பங்காகும். அதாவது ரூ. 10.1 லட்சம் கோடிகள். இவர்களுக்கு 75% நிதியுதவி தேவைப்படுகிறது. எனவே, ரூ. 7.6 லட்சம் கோடிகளுக்கு கடன் உதவிகள் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2012 வருடாந்திர அறிக்கையின்படி வர்த்தகத் துறைக்கான கடனுதவி ரூ. 2 லட்சம் கோடிகள் மட்டுமே ஆகும். இது வெறும் 28% தேவையை மட்டுமே நிரப்புகிறது. எழுபது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கடன்களை முறைசாரா வங்கிகளிடமிருந்தும் மற்ற சிட்ஃபண்டுகளின் மூலமாகவும் பெற்று இருக்கிறார்கள்.
சிலர் யோசிக்கலாம். இதில் என்ன பிரச்சினை? பணம் எப்படியோ வந்து சேருகிறது அல்லவா… ஏதோவொரு நிதிமூலம். ஆனால், இதற்காக அவர்கள் கொடுக்கும் விலை என்ன?
சமீப காலகட்டங்களில் வட்டி விகிதங்கள் மெதுவாக இறங்கி வருகின்றன. வங்கிகளிடமிருந்து கடன் பெறும் பெருநிறுவனங்கள் ஆண்டிற்கு 12%க்கும் குறைவான வட்டியில் நிதிகளைப் பெற முடிகின்றன. ஆனால், என்னுடைய பழக்காரியும் காய்கறி விற்பவனும் நாளொன்றுக்கு அரை சதவிகித வட்டியில் கடன் வாங்குகிறார்கள். ஆண்டிற்கு 180% வட்டி கொடுக்கிறார்கள். என்னுடைய பெட்டிக்கடை முதலாளி ரூ. 50,000 என்று கடன் பத்திர ஒப்பந்தம் போட்டு ரூ. 45,000 பெறுகிறார். அதன் பிறகு நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வீதமாக நூறு நாளுக்குத் திரும்ப செலுத்துகிறார். 100 * ரூ. 500 = ரூ. 50,000. குறைந்த காலக்கடன் ஆன இதற்கு மூன்று மாதத்திலேயே பத்து சதவிகிதத்திற்கு மேல் வட்டி செலுத்துகிறார் (வருட வட்டி விகிதம் 40 சதவீதத்திற்கு மேல் ஆகும்.) என்னுடைய நாவிதர் சீட்டுப் பணத்தின் மூலம் நான்கு சதவிகிதம் மாதாமாதம் வட்டி கொடுக்கிறார். (வருட வட்டி 48 சதவீதமாகும்.)

ஒற்றை ஈட்ட வரை (Yield Curve) இல்லை

நமது பொருளாதாரத்தின் உற்பத்தியின் உருவாக ஒரு வளைகோட்டை அமைத்து, மதிப்பிடுவது மிகவும் கடினமான பணி. ஒரு பக்கம் பார்த்தால் பெருநிறுவனங்களுக்கு வருடத்துக்கு 12 முதல் 14% வட்டி விகிதம். எட்டாயிரத்து சொச்ச பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இது பொருந்தும். இந்த எட்டாயிரத்தில் 200/300 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தீவிரமாக வர்த்தகம் ஆகின்றன. பாக்கி உள்ள கூட்டுருவாக்கப் பெறாத தொழிற்துணிபுகள் மாதத்திற்கு 2% முதல் 6% வட்டியில் கடன் வாங்குகின்றன. (வருட வட்டி 24 சதவீதத்திலிருந்து 72%வரை போகும்). இவ்வளவு சிதறுண்ட சந்தையினால், நம் நிதி விநியோகத்தின் மீது நாட்டின் பணக்கொள்கையின் தாக்கம் பலவீனமாகவுள்ளது.
இதனால், ஒவ்வொரு சிக்கல்களாக தனித் தனியாகப் பிரித்துப் பார்க்காமல், கடன் சந்தையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கென ஒட்டு மொத்த அணுகுமுறைத் தேவையாகிறது.
கூட்டுருவாக்கப் பெறாத தொழிற்துணிபுகளுகள் மாதந்தோறும் 2% முதல் 6% வட்டி கட்டுகிறார்கள். எவ்வளவு சீக்கிரம் பணம் வேண்டுமோ, அவ்வளவுக்களவு வட்டி அதிகமாகும். எவ்வளவு அதிகம் பணம் தேவைப்படுகிறதோ, அவ்வளவுக்களவு வட்டி குட்டி போடும்.
இந்தப் பக்கத்தில் முறைசார் வங்கிகளிடம் பெருமளவு பணம் தேங்கிக் கிடக்கின்றன. இன்னொரு பக்கத்தில் உள்ளூர் லேவாதேவிகளிடம் இருந்து, அநியாய வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு சிறுமுதலிய நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.
எது நிஜமாகவே தேவை என்றால், வங்கியல்லாமல் செயல்படும் கடன் கொடுக்கும் நிறுவனங்களை ஒவ்வொரு தனித்தனிப் பிரிவாகக் கருதாமல் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும். தற்போது, இந்தப் பிரிவில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களை விதவிதமான அரசு முகவாண்மைகள் நெறிப்படுத்துகின்றன. கூட்டுருவாக்கப் பெறாத தொழிற்துணிபுகளை மாநில அரசுகள் ஒழுங்கு செய்கிறது. நிதி நிறுவனக்களை மத்திய அரசின் கம்பெனி விவகாரங்கள் துறை கவனித்துக் கொள்கிறது. மாநில அரசின் சீட்டுப்பதிவாளரின் கட்டுப்பாட்டில் சீட்டு நிதியகங்கள் வருகின்றன. ஒருங்கிணைந்த நிதிச்சந்தை மூலம் இவை வளர வேண்டும் என்னும் கொள்கையை விட இந்த நிறுவனங்கள் விதிகளுக்குட்பட்டு நடக்கிறதா என்பதும், கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறதா என்பதே அரசுக் கண்காணிப்பின் முக்கிய குறிக்கோளாக இருக்கின்றன. இங்கேதான் முத்ரா வங்கி முக்கிய பங்கு வகிக்கும். தனிநபராக கடன் தருபவரையும் மைக்ரோ மற்றும் நுண் நிதியமைப்புகளையும் மைய நீரோட்டத்தில் இணைத்து சந்தைமயமாக்க முத்ரா கை கொடுக்கும்.
கடன் கொடுக்கும் மற்ற சாதாரண வங்கிகளைப் போல் முத்ரா இருக்காது என்பது நினைவில் இருக்கட்டும். எவ்வாறு கடனுக்கான வழிமுறை இயங்கும் என்பதை முத்ரா ஒழுங்கு செய்யும். நுண் நிதி நிறுவனங்களின் கெடுபிடியான செயல்பாடுகள் மூலம் சிறு முதலீட்டாளர்கள் கடன் தொல்லையால் சிக்கலுக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளும். அதே சமயம் வரவேண்டிய பாக்கியை திருப்பிச் செலுத்துவதையும் உறுதி செய்யும். பத்து இலட்சம் வரை கடன் பெறுவதற்கான வசதியை சிறு தொழில் முனைவோருக்கு முத்ரா சாத்தியமாக்கும். இது உற்பத்தித் துறை, கடை வியாபாரம், காய்கறி வியாபாரம், முடிதிருத்தகம் மற்றும் அழகு நிலையங்கள், வாடகை வண்டிகள், கைவினை என பலதரப்பட்ட தொழில் மற்றும் வாணிபம் செய்யும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நகரத்தில் இருப்போர், புறநகர்ப் பகுதியில் வசிப்போர், பெரிய வங்கிகள் இல்லாத கிராமத்தில் இருப்போர் என பாரபட்சம் இல்லாமல், அனைவருக்கும் உதவும். இவர்கள் அனைவருக்குமே முறையாக இயங்கும் தேசிய வங்கிகளின் வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த மாதிரி சிறுமுதலீட்டில் இயங்கும் வியாபாரிகளுக்கு நிறுவனம் சார்ந்த நிதி நல்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பது மட்டுமல்ல; மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளரவும் இவர்கள் ஊன்றுகோலாக இருப்பார்கள். அதே சமயம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவார்கள். இந்த அமைப்பின் கீழ் பல்வேறு திட்டங்களும் உருவாக்கங்களும் ஏற்கனவே உண்டாக்கப்பட்டு விட்டன. எந்தெந்த காலகட்டத்தில் என்ன முத்ரா திட்டங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்பதை, இந்தத் தலையீடுகளுக்கு ஷிஷு, கிஷோர் (இளமை), தருண் (கொழுந்து) என இடப்பட்ட பெயர்கள் தெளிவாக்குகின்றன.
என்றாலும், நுண்நிதி அமைப்புகளின் ஒட்டுமொத்த ஒழுங்கமைப்பாளராக முத்ரா வெளிப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்று பதிவு செய்துகொண்ட சிறு நிதி நிறுவனங்கள் (Micro Finance Institutions – MFIs) இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் தற்போது வருகின்றன. முத்ரா வங்கி மீதான மசோதா வரைவு செய்யும்போது இதற்கான முடிவு எடுக்கப்படும். முத்ரா வங்கிக்கான சட்டரீதியான ஒப்புதல் கிடைக்கும்வரை அது, இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் துணை நிறுவனமாக இயங்கும். வங்கி அல்லாத நிதி நிறுவனமாக (NBFC) பதிவு செய்யப்படும்.
விதிமுறைகளைப் பேணுவதொன்றையே தன் இலக்காகக் கொண்டு இயங்காமல், நிதிஉறவுகளைப் பேணுவதற்கு என்று இயங்குவதன் மூலம் தற்போதிருக்கும் அமைப்புகளிடம் இருந்து முத்ரா முற்றிலும் மாறுபட்ட வங்கியாக இருக்கும். விதிகளுக்காக நிரப்பவேண்டிய தாள்களைக் குறைவாகக் கொடுத்து, கிடைக்க வேண்டிய முதலீட்டுப் பணத்தை அடைவதைச் சுலபமாக்கும். முத்ரா வங்கி குறிவைக்கும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் சேவைத்துறையில் இருக்கிறார்கள். எனவே, சொத்தை அடமானம் வைத்து கைமாற்றுக் கொடுக்கும் பழக்கத்தைக் கைவிட்டு, அன்றாட வரவு-செலவைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கடன் கொடுக்கும்.
கடன் கொடுக்கும் நிறுவனங்களும் நஷ்ட அபாய எதிர்பார்ப்பையும், எதிர்பார்த்தபடி லாபம் ஈட்டாத சொத்துகளா என்று கண்காணிப்பதையும் முனைப்பாக வைத்துக் கொண்டு முதலீடு அளிப்பதில் கெடிபிடி காட்டுவதைக் கைவிடும். மாறாக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பண வசூலிப்பில் சுறுசுறுப்பைக் கொணர்வதை ஊக்குவித்து, வர்த்தகத்தில் பரிவர்த்தனைகளை எளிதாக்கும்.
துண்டு துண்டாகச் சிதறுண்டும், பலவேறு வகைக் கூறுகளாகவும் பிரிந்திருக்கும் நிதிச்சந்தையை ஒருங்கிணைக்கும் பாலமாக முத்ரா வங்கி உருவாகும். சிறு தொழில் நிதி மற்றும் வளர்ச்சிக்கான ஆணையகமாக (Small Business Finance and Development Authority – SBFDA) முத்ரா வங்கி அமைய வேண்டும். தேசிய வீட்டுவசதி வங்கியைப் போல் சிறுதொழில் முதலாளிகளுக்கான நிறுவனங்களைப் பதிவு செய்யவும், அவற்றின் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும், ஒழுங்குபடுத்தவும் – முத்ரா உதவ வேண்டும். இந்த அமைப்பின் துவக்கத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் 51% பங்குதாரர்களாக இருக்கும். பாக்கி 49% பங்குகள் நடுவண் அரசின் கையில் இருக்கும். அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பதற்கான உரிமம் இதன் கையகத்தே இருக்க வேண்டும். வெளிநாட்டு நிதியாதாரங்களும் உள்நாட்டு வங்கிகளும் நிரப்பாமல் துண்டு விழும் பாக்கி முதலீட்டை நீண்ட காலக் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிரப்ப வேண்டும்.
சிறு வணிக நிதி நிறுவனங்களுக்கு (Small Business Finance Institutions – SBFIs) உண்டான குறைந்த பட்ச முதலீட்டிற்கான வழிகாட்டுதல்களை முத்ரா இயற்றும். அந்த நிறுவனங்களுக்கான போதிய மூலதன விதிமுறைகளையும் கட்டமைக்கும். புதிதாக உருவாகப் போகும் சிறுவணிக நிதியகங்களுக்கான சட்டதிட்டங்களையும் நல்கும். இதுவரை இயங்கிவரும் அமைப்புகளையும் பதிவு செய்து, புதிய சட்டங்களின் கீழ், ஒரு குடையின் அடியில் கொண்டு வரும்.
சிறுவாணிபம் என்பதற்கான புதிய வரையறை இப்பொழுது தேவையாகிறது. இந்தப் புதிய வரையறையின் கீழே, உற்பத்தி வரும்; வர்த்தகம் வரும்; சேவையும் வரும். தனியொருவர் நடத்தும் தொழில்களும் அடங்கும்; குடும்ப முதலீட்டில் இயங்குபவர்களும் வருவார்கள்; பங்குதாரர்களாக ஓரிருவரை முதலாளிகளாகச் சேர்த்திருக்கும் நிறுவனங்களும் உள்ளடங்கும். எல்லாவற்றையும் நிறுவனங்களுக்கான சட்டத்தின் (Companies Act) கீழ் கொண்டு வரலாம். சொத்துக்களைக் கொண்டோ, முதலீடுகளைக் கொண்டோ, கொள்முதல்களை அடிப்படையாகக் கொண்டோ பிரிப்பதை விட இந்த மாதிரி வரையறை செய்வது தற்காலத்திற்குப் பொருந்தும். சிறுதொழில் முனைவோருக்கான நிதிவசதி என்பது தவணைக் கடன்களைக் கிடைக்க வைப்பதும், புரளும் மூலதனத்தை அடைய வைப்பதும், புதிய கால்கோல்களில் துணிந்திறங்குவோருக்கான முதலீடுகளைப் பெற வைப்பதும் ஆகும்.
பலவகை சிறு வணிக நிதி நிறுவனங்கள் (எஸ்.பி.எஃப்.ஐ.கள் – SBFIs) சிறு வணிக நிதி மற்றும் அபிவிருத்தி முகமை (எஸ்.பி.எஃப்.டி.ஏ. – SBFDA) அடியே வருகிறார்கள். அவர்கள் எஸ்.பி.எஃப்.டி.ஏ.விடம் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
சிறு வணிக நிதி நிறுவனங்கள் – சிறுதொழில்களுக்கான நிதியைத் தருவதில் இவை ஈடுபடுகின்றன. இவற்றின் மொத்தக் கடன் கொடுக்கும் தொகையில் 60% ஆவது சிறுவணிகர்களுக்குச் செல்கிறது. வங்கியற்ற நிதி நிறுவனங்கள் எல்லாம் இதில் அடங்கும். இது சீட்டு நிறுவனங்கள், குழுமமாக இணைந்த தொழில்கள் என பலதரப்பட்ட சிறுவணிக முதலீட்டாளர்களை உள்ளடக்கும்.
தேசிய சிறு வணிக நிதி நிறுவனங்கள் : (National Small Business Finance Institutions – எஸ்.பி.எஃப்.ஐ.கள் – NSBFIs): இவை பல மாநிலங்களில் செயல்படுவன. சிறு வணிக நிதி நிறுவனங்களுக்கு நேரடியாக கடன் கொடுப்பவையும், சிறுதொழில் முதலாளிகளுக்கு மொத்தமாக பணம் கொடுப்பவையும் இதில் அடங்குவன. வங்கி அல்லாத நிதி நிறுவனமாக (NBFC) செயல்படுவோர் புதிய வழிமுறைக்கு மாறி, தேசிய சிறு வணிக நிதி நிறுவனமாக பதிவு செய்து கொள்ளலாம். ஒரேயொரு நிபந்தனை மட்டுமே – மூன்று வருட காலகட்டத்தில் 60 சதவிகிதமாவது சிறுதொழில்முனைவோருக்குக் கடனாகக் கொடுக்க வேண்டும்.
மாநில சிறு வணிக நிதி நிறுவனங்கள் : (State Small Business Finance Institutions – எஸ்.எஸ்.பி.எஃப்.ஐ.கள் – SSBFIs): ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே இயங்குவன, இந்தப் பிரிவிற்குள் வரும். ஒரு மாநிலத்திற்குள்ளேயே இயங்கினாலும், தேசிய சிறு வணிக நிதி நிறுவனங்கள் ஆகவும் இவை பதிவு செய்து கொள்ளலாம்.
பிற சிறு வணிக நிதி நிறுவனங்கள் : (Other Small Business Finance Institutions – அ.எஸ்.பி.எஃப்.ஐ.கள் – OSBFIs): ஒரு மாநிலத்தில் சில பகுதிகளில் மட்டுமே இயங்குவன, இந்தப் பிரிவில் கீழே வரும்.
சிறு வணிக நிதி நிறுவனங்களைப் பதிவு செய்வதோடு, இவை எத்தனை குறைந்த பட்ச வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்பதையும் சிறு வணிக நிதி மற்றும் அபிவிருத்தி முகமை (எஸ்.பி.எஃப்.டி.ஏ. – SBFDA) மூலமாக நிர்ணயிக்கலாம். அதே போல், பொது மக்களிடமிருந்து வைப்புத் தொகைகளாகவும், கடன் பத்திரங்களாகவும் நிதி திரட்டும் முயற்சிகளில் விளம்பரங்கள் வெளியிடுவதைத் தவிர்த்து வேறு என்ன வழிகளில் ஈடுபடலாம் என்பதை ஒழுங்குபடுத்தலாம்.
இப்போது இருக்கும் கடன் வழங்கும் அமைப்புகளை ஒருங்கிணைக்க ஒரு பெருமுயற்சி தேவை. இதற்கு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இந்தப் பட்டியலில் இருக்கும் நிதி நிறுவனம் அனைத்தையும் தரமதிப்பிட வேண்டும். இதில் அடிமட்ட கைமாற்று மையங்களையும் கணக்கெடுக்க வேண்டும். அப்படி ஒரு முயற்சி, ஒவ்வொரு சிறுகடன் கொடுப்போருக்கும் முக்கியத்துவத்தைக் கொடுத்து, இணைந்த நிதி சட்டகத்தின் கீழ்க் கொணர்ந்து ஒழுங்கைத் தரும். ஒவ்வொரு நிதியாளரின் தரத்தை நிர்ணயிப்பதன் மூலம், இதற்கு நம்பகத்தன்மை கிடைத்து, இடர் மதிப்பீட்டையும் கிட்டச் செய்யும். இதன் மூலம் கடன் பெறுவதற்குக் கொடுக்கும் அடக்கவிலையின் சுமையை ஓரளவு குறைக்கவும் முடியும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த மறு நிதி / மதிப்பீடு / சீராக்கும் அமைப்பு, முதலீடு கிடைப்பதற்கான செலவைக் குறைக்கும். சிதறுண்டு கிடக்கும் நிதிச் சந்தையை ஒருங்கிணைக்கும். நிதியாதாரமற்றவர்களுக்கு நிதி நல்கும் வழிமுறையை அமைத்து, தெருவில் பார்த்து கைமாற்றுக் கொடுப்பவர்களையும் அமைப்புக்குள் கொண்டு வரும். இந்த மசோதா நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நம்புவோம்.

Professor_R_Vaidyanathanஆங்கிலத்தில் எழுதியவர்: ஆர். வைத்தியநாதன்
மூலக் கட்டுரை: Integrating Financial Markets Through MUDRA
பேராசிரியர் (நிதித்துறை), இந்திய மேலாட்சிப் பல்கலை (IIM),பங்களூரு
கட்டுரை அவரின் தனிப்பட்ட கருத்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.