குளக்கரை


[stextbox id=”info” caption=”சில்லறை வியாபாரி ஆன பெருநிறுவனம்”]

Att_Verizon_Spectrum_2G_3G_Wireless_DTV_Cell_Mobile_Phone_Data_Television_Satellite_Sales_Lease_Rights

எத்து வேலை செய்வது என்பது தனியார் துறையில் உள்ள பெரும் நிறுவனங்கள் எதற்கும், எல்லாவற்றுக்கும் தெரியும், முடியும், அவை செய்யவும் செய்யும். செய்யாத நிறுவனங்கள் என்று மிகச் சிறு அளவே இருக்கும். இது ஏதோ இந்தியா போன்ற மூன்றாம் உலக/ வளர்ந்து வரும் நாடுகளின் பிரச்சினை என்றில்லை. உலகத்தின் பெரும் நாடுகளாகக் கருதப்படும் ஒவ்வொரு நாட்டிலும், எந்த நாட்டிலும் உள்ள தனியார் துறைப் பெரு நிறுவனங்களின் போக்கு இதுதான். இதனால் அரசு நிறுவனங்கள் மேன்மையானவை என்று நம் நாட்டு இடது சாரிகளைப் போல பிதற்றவும் தேவையில்லை. அரசு அதிகாரிகள் என்ன மாதிரி வேலை செய்கிறார்கள் என்று உலக அனுபவம் உள்ள எந்த இந்தியருக்கும் தெரியும். அப்படி அனுபவம் எல்லாம் இருந்தும் பெருவாரி இந்திய இடது சாரிகளுக்கு எந்தப் பிரச்சினைக்கும் விடையாகத் தோன்றும் முதல் தேர்வு, அந்தப் பிரச்சினையை உடனடியாக அரசு எடுத்துச் செய்து தீர்க்க வேண்டும் என்பதுதான். அவ்வளவு தூரம் செயல் திறன் என்பது என்ன என்று துளிக்கூடச் சிந்திக்கத் தெரியாத தவளைகள் இந்திய இடது சாரிகள்.

அவர்களின் உளைச்சல்கள், பிரமைகள் எல்லாவற்றுக்கும் தீனி போடுவது போலத்தான் உலகத் தனியார் நிறுவனங்களின் ம் நடத்தையும் இருக்கிறது. இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து பற்பல பெரும் ஊழல்கள், வரி கொடாது ஏமாற்றுதல், லஞ்சம் கொடுத்தல், டெண்டர் விண்ணப்பங்களில் பொய், அரசியலாளர்கள்/ அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து அரசு ஒப்பந்தங்களைக் கைவசப்படுத்தல் என்று என்னென்னவோ விதங்களில் ஏமாற்ற முயல்கிறார்கள். 2ஜி அலைவரிசை ஊழல், கரி விற்பனை ஊழல், போர் விமானங்கள்/ பீரங்கிகள் வாங்குதலில் ஊழல், துறைமுகம் கட்டுதலில் என்று ஒரு புறமும், இன்று செய்திப்படி சிறுவர் விரும்பி உண்ணும் மாகி நூடில் உணவுப் பண்டத்தில் காரீயம் அளவு மீறிக் கலந்திருப்பதை அலட்சியம் செய்து விற்பது என்று இன்னொரு புறமுமாக எதில்தான் ஊழல் செய்வது என்றில்லாமல் எங்கும் ஊழல் செய்கின்றன இந்த நிறுவனங்கள். இதில் இந்திய நிறுவனங்களும் சரி, பன்னாட்டு நிறுவனங்களும் சரி போட்டி போட்டுக் கொண்டு எத்து வேலையில் ஈடுபடுகின்றன.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இந்தியாவில் நடந்தது போலவே அமெரிக்காவிலும் அலைவரிசை ஏலம் விடுவதில் ஒரு பெரும் நிறுவனம் திருட்டு வேலை செய்திருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. டிஷ் நெட் என்ற சாடிலைட் டெலிகாம் நிறுவனம் ஏலத்தில் அலைவரிசைகளை எடுத்துக் கொண்டு, பினாமி கம்பெனிகள் மூலம் அவற்றைச் சிறு நிறுவனங்களின் செயல்பாடு என்று கணக்கு காட்டி, சுமார் 3 பிலியன் டாலர்களை அரசுக்குச் சேராமல் தன் லாபமாக எடுத்துக் கொண்டு விட்டது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
வீட்டுக்கு வீடு வாசப்படி என்பார்கள், அது இதிலும் உண்மைதான் போலிருக்கிறது.

http://goo.gl/EHcQKg
[/stextbox]


[stextbox id=”info” caption=”சண்டைக்குப் போகலாமே!”]

ISIS_Troops_Neocon

அமெரிக்காவின் பேனா பிடிக்கும் மாவீரர்கள், அமெரிக்க அரசிடம் துருப்புகளை அனுப்பினால்தான் ஐஸிஸை வெல்ல முடியும் என்று கூவத் துவங்கி இருக்கிறார்கள். மகெய்ன் போன்ற வழக்கமான போருக்கு ஆதரவு தெரிவிக்கும் கழுகுகள் 10,000 பேரை அனுப்பினால் ஐஸிஸை ஒழிக்கலாம் என்று பகல் கனவு காணுகையில், இந்தக் கட்டுரையாளர், அட வெத்து வேட்டுகளா, ஐஸிஸ் ஒரு முழு ராணுவம், பல நாடுகளில் உள்ளது, 50,000 த்திலிருந்து 100,000 பேர் போல இந்த ராணுவத்தில் உள்ளனர். உள் நாட்டில் மக்கள் ஆதரவும் உள்ளது இதற்கு. முழு படையெடுப்பு இல்லாமல் உங்கள் ராணுவம் கொஞ்சப் பேரை வைத்துக் கொண்டு இறங்கினால் தோற்கும், முழுப் படையெடுப்பு வேண்டும் என்று கதறுகிறார்.

ஆனால் தக்கியா நிபுணர்களாயிற்றா? ஐஸிஸை வெறுப்பது போலப் பாசாங்கு செய்து கொண்டு, ஐஸிஸ் எத்தனை நல்ல அமைப்பு என்பதையும் விளம்பரம் செய்கிறார், அதுவல்லவா திமிர், தைரியம், சாமர்த்தியம், திருகுதாளம். பொய் சொல்வதில் புடினும் புஷ்ஷும், கேஜிபியும், சிஐஏவும் மட்டும்தான் வல்லவர்களா? எவாஞ்சலியரும், இஸ்லாமிஸ்டுகளும் சொல்ல முடியாத பொய்களா?

http://www.thedailybeast.com/articles/2015/06/01/it-s-time-to-send-in-the-troops-to-kick-isis-s-ass.html

அமெரிக்காவில் போர் முரசைத் தட்டத் துவங்கி விட்டனர் கீபோர்ட் வீரர்கள். இதோ இன்னொருவர் அமெரிக்காவை ஐஸிஸை எதிர்த்துப் போருக்குத் தயாராகச் சொல்கிறார். ஏகாதிபத்தியம் இல்லாவிடில் பெரும் குழப்பமும் நாசமும்தான் மேற்காசியாவில் விளையும் என்பவர் ராபர்ட் காப்லான் எனப்படும் ‘நிபுணர்’.

http://foreignpolicy.com/2015/05/25/its-time-to-bring-imperialism-back-to-the-middle-east-syria-iraq-islamic-state-iran/
[/stextbox]


[stextbox id=”info” caption=”தீவிர இஸ்லாமும் வலைப்பதிவர்களும்”]

Ananta Bijoy Das_Bangaldesh_Blogger

வங்கதேசத்திலோ இஸ்லாமிஸ்டுகளின் கொலைவெறி அடங்காமல் எழுகிறது. பகுத்தறிவுவாதிகள்/ நாத்திகர்கள் ஆகியோரை வலைப் பதிவர்களாக இருந்தால் நடுத்தெருவில், கண்காட்சிகளில் என்று என்ன இடம் என்பது பற்றிக் கவலைப்படாமல் கொல்கிறார்கள் இஸ்லாமிஸ்டு வெறியர்கள். இது பற்றி இந்திய செகுலரிய அறிவு சீவிகள் ஏதும் குரலெழுப்பினாரா என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? தமிழகத்துப் பகுத்தறிவுவாதிகள்தான் ஏதும் எழுதியதாகத் தெரிகிறதா?

http://foreignpolicy.com/2015/05/29/cut-down-in-their-prime-bangladesh-atheist-bloggers/
[/stextbox]


[stextbox id=”info” caption=”திறக்கப்பட்ட பூட்டுகள்”]

Love_Locks_Paris_France_Keys_Bridge

உலகின் பகுத்தறிவுகளுக்கெல்லாம் ஊற்றுக் கண் மட்டுமல்ல, கொழுந்து விட்டெரியும் எரிமலையும் அதுதான், உலகப் புரட்சிக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமும் அதுதான். ​அதுவும் வோல்டேர், ரூஸோ என்று காலை எழுந்ததும் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டுதான் தமிழக அறிவு சீவிகள் எல்லாம் பகுத்தறிவுப் புத்துணர்வு பெற்று வந்திருக்கிறார்கள். இன்னமும் கூட டெரிடா, பாத்ரியோ, போர்டொ என்று தமிழகத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு இடது கரை அறிவாளிகள் பெரும் சரிவில் இருக்கிறார்கள். புத்தம் புதுக் காலை என்று தினம் எழுச்சியோடு சாலைக் கடைகளின் வாயிலில் அமர்ந்து காஃபியும், சிகரெட்டும், புது ரொட்டியுமாக அமர்ந்து உலகைப் புரட்டக் கூடிய புதுக் கருத்துருக்களை உருவாக்கும் காலமெல்லாம் மலையேறி விட்டதாம். சுதீர் ஹஸாரெசிங் எழுதிய புத்தகம் ஒன்று இந்த ஃப்ரெஞ்சு கருத்துலக ஊற்று வற்றி விட்டது என்று மிக இரங்குகிறது. ஃப்ரெஞ்சு மக்கள் அறிவாளிகளைப் பூசித்த காலம் போய்விட்டது. ஃப்ரான்ஸ் மதியொளி காலத்தால் தமக்கு அதிக பட்சம் கிடைத்ததெல்லாம், இருக்கிற வீடே பறி போகும் போல இருக்கிறதுதான் என்று கருதத் துவங்கி விட்டனர். குடியேறிகளை நாட்டை விட்டுத் துரத்துவோம் என்று சொல்கிற தீவிர ஃப்ரெஞ்சு நேஷனல் கட்சி படிப்படியாக முன்னேறி வருவதோடு, சமூக ஜனநாயகக் கட்சியை இரண்டாமிடத்தில் கூடத் தள்ளி விடும் போலிருக்கிறது.

அதே நேரம் ஃப்ரான்ஸின் சில சின்னங்கள் ஃப்ரெஞ்சு மக்கள்  கதோலிக்கம், வெள்ளை இனப் பார்வை, ஏகாதிபத்திய விழைவு, பிற மதங்கள்- இனங்கள் பற்றிய சகிப்பின்மை ஆகியவற்றோடு வேறு பல சராசரி குணங்களையே கொண்டிருக்கின்றனர், பகுத்தறிவு ஜோதியாக அவர்கள் இருக்கவில்லை என்று சுட்டுகின்றன. அப்படி ஒரு சின்னம் ஃப்ரான்ஸில் உள்ள ஒரு பாலம். அந்தப் பாலத்தின் இரு மருங்கும் உள்ள கிராதிகளில் பூட்டுகளைப் பூட்டுவது தம் காதலுக்கு உடையாத நிரந்தரத்தைக் கொடுக்கும் என்று அம்மக்கள் நம்புகின்றனர். ஃப்ரெஞ்சு மக்கள் மட்டும்தான் இப்படிப் பூட்டுகளைப் பூட்டுகிறார்கள் என்று நாம் நினைக்க வேண்டாம், ஃப்ரான்ஸ் பல நாட்டுச் சுற்றுப் பயணிகளின் மையக் கவனத்தை ஈர்க்கும் நாடு. பயணிகளும் உள் நாட்டு மக்களுமாகப் பூட்டும் பூட்டுகளின் கனம் தாங்காமல் பாலம் இற்று விடும் அளவுக்கு அந்தப் பூட்டுத்தொகை பெருத்து விட்டதாம். சமீபத்தில் அரசு பாலத்தைக் காப்பாற்றுவதற்காக பூட்டுகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
பூட்டுகளை அரசு வெட்டுவது ஃப்ரான்ஸ் இன்னும் பகுத்தறிவு ஜோதியாக இருப்பதைக் காட்டுகிறதா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பூட்டு பூட்டுவோருக்கு வேறு பாலங்கள் கிட்டாமலா போய்விடும்? ஏற்கனவே அருகிலிருக்கும் சில ஊர்களுக்கும், உலக நகரங்கள் என்று கருதப்படும் நியுயார்க், லண்டன், சோல் (Seoul) நகரங்களில் இந்த வழக்கம் துவங்கி இருக்கிறதாம். மனிதர் முன் தீர்மானித்த கருத்துருக்களுக்குள் சிறைப்படுவார் என்று எதிர்பார்ப்பதுதான் என்னவொரு பேதமை?

http://www.huffingtonpost.com/2015/06/01/paris-love-locks-bridge_n_7483952.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”பாதிக்கப்பட்டோருக்கு செல்லாத நிவாரண நிதி”]

haiti-red-cross-fundraiser

நியு யார்க் நகரத்தைப் பெரும்புயல் தாக்கிய பின் செஞ்சிலுவைச் சங்கம் என்ன மாதிரி தொண்டாற்றியது என்பதை ஏற்கனவே அறிவோம். புயலினால் வீடிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதை விட தன்னுடைய மக்கள் தொடர்பு மேலும் மின்னவே செஞ்சிலுவை (ரெட் கிராஸ்) சங்கம் முயன்றதாக, அவர்களுடைய ஊழியர்களே தெரிவித்திருந்தார்கள். உடல்நிலை சரியில்லாதவர்களுக்காகச் செலுத்த வேண்டிய முதலுதவி வண்டிகளை, மருத்துவ வசதிக்காகப் பயன்படுத்தாமல், தொலைக்காட்சிப் பேட்டிகளுக்கு பின்னணியாக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்து கோடி கோடியாக நன்கொடையைப் பெற்றாலும், அவற்றை அரசியல் ஆதாயங்களுக்காகவும், பதவியில் இருப்போர் பணித்ததின் படி உபயோகிக்கவும் ரெட் க்ராஸ் சுணங்கவேயில்லை.

அதன் தொடர்ச்சியாக இப்பொழுது ஹைத்தி பூகம்ப நிவாரண நிதிக்காக ஐநூறு மில்லியன் (கிட்டத்தட்ட மூவாயிரத்து இருநூறு கோடி ரூபாய்) நன்கொடை பெற்ற செஞ்சிலுவைச் சங்கம், அந்த நாட்டில் வெறும் ஆறே ஆறு வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், கணக்கு காட்டும்போது ஒரு இலட்சத்தி முப்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்ததாக செஞ்சிலுவைச் சங்கம் சொல்லி இருக்கிறது. அப்படியானால், ஆயிரக்கணக்கான வீடுகளும், மருத்துவமனைகளும், பள்ளிகளும், இன்ன பிற கட்டமைப்புகளும் உருவாக்குவதற்காக சேகரித்த அரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்னவாயிற்று? ரெட் கிராஸ் நிறுவனம் பதில் சொல்ல மாட்டேன் என்று மறுத்து இருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்தைப் போலவே நிதி திரட்டிய பிற அமைப்புகள் 9,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருப்பதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

https://www.propublica.org/article/how-the-red-cross-raised-half-a-billion-dollars-for-haiti-and-built-6-homes
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.