குணமும் குடிமையும் குற்றமும்

metro
முன் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் பெண்ணை கவனிக்க இன்று எனக்கு ஆர்வமே இல்லை.
பிதுக்கித் தள்ளப்பட்ட பற்பசை போலத்தான் ஒவ்வொரு நாளும் உணருவேன். இன்றும் அப்படித்தான், ஹால்பார்ன் தரையடி நிலையத்தை சென்ட்ரல் ட்யூப் அடைந்தபோது அந்த நீண்ட ப்ளாட்பாரத்தில் இருக்கும் ஒரே ஒரு வெளியே செல்லும் வழி என்னும் குகை, நிரம்பி வழியும் பற்பசை ட்யூப்பாக இருந்தது.
நான் வந்த ரயிலுக்கு ஒரு நிமிடத்திற்கு முந்தின ரயிலில் இருந்து வெளிவந்த கூட்டமே இன்னும் நடைமேடையை விட்டு வெளியே போகவில்லை. அந்தக் கூட்டத்துடன் நாங்களும் சேர்ந்துகொண்டு நாங்களாகவே மெல்ல மெல்லப் பிதுக்கப்பட்டு ஓர் இருபது படிகள் போல கீழே இறங்கி ஒரு தளத்தில் அடைந்தோம். பின் மறுபடியும் செங்குத்தாக எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிகள் மூலம் மேலும் ஐம்பது படிகள் இறங்கி…
நீண்ட குகை வழியாக அந்த தரையடி நிலையத்திலேயே இருக்கும் இன்னொரு ட்யூப் ரயிலான பிக்காடிலிக்கான ப்ளாட்பாரத்தை அடைய லண்டன் எனும் மகா நகரத்தை இயக்க வேகவேகமாக போய்க்கொண்டிருக்கும் அறுபதினாயிரம் புள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக போய்க்கொண்டிருந்தேன்.
அத்தனை கூச்சல், நெருக்கமான கூட்டத்தில் தூரத்தில் ஒருவர் மட்டும் தன் கையை குகைச் சுவரில் தேய்த்துக்கொண்டே நிதானமாக நடந்துகொண்டிருந்தார். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் அம்மாவை ஒரு கையால் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் சுவரைச் தேய்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் போல அந்த நபர் தோற்றமளித்தார்.
அந்தச் சுவரின் சுரசுரப்புத்தன்மைக்காகவோ அல்லது எதற்கோ அப்படித் தேய்த்துக்கொண்டு ரசித்துக்கொண்டு நிதானமாக நடந்துகொண்டிருந்தார்.
நான் மெல்ல நடைமேடையின் இன்னொரு மூலைக்கு நடந்துவந்து பெஞ்சில் அமர்ந்துகொண்டேன். ஷூ லேஸ்ஸை இன்னொரு தடவை அவிழ்த்துக் கட்டிக்கொள்ளும் போது மெல்ல நிமிர்ந்து தண்டவாளத்தைப் பார்த்தேன். சுண்டெலிகள்-குறைந்தது ஐந்தாறாவது இருக்கும்- குறுகுறுவென சுற்றிக்கொண்டிருந்தன.
நிலையச் சுவர்களில் மியுசியம், புத்தம் புது புத்தகங்கள், தியேட்டர் ட்ராமக்கள், சுற்றுலா பற்றிய போஸ்டர்கள் நிரம்பியிருந்தன. இன்றைய ஷெர்லாக் ஹோம்ஸ் பென்னிடிக்ட் அடுத்த தொடருக்குத் தயாராக உற்சாகமாகத் தெரிந்தார்.
என் முன்னே தொடை முழுவதும் சாக்ஸும் “ஏதோ இருந்துவிட்டுப் போகட்டுமே” குட்டைப் பாவாடை அணிந்த பெண்கள் நின்றுகொண்டிருந்தாலும் இன்று கவனம் அங்கில்லை.
இதற்கும் மெல்லிய தலைவலிக்கும் காலையில் வாட்ஸப்பில் வந்த ரமேஷின் தகவல்தான் காரணம்.
அரை மணி நேரத்திற்கு முன் சென்ட்ரல் ட்யூப் ஸ்ட்ராட்போர்ட் நிலையத்தை ஸ்டேஷனை நெருங்கும் முன் “Baski: Call me” என்பதை மொபைலில் படித்துவிட்டு அழைத்தேன்.
“சட்டுனு விஷயத்தைச் சொல்லு மாப்ள, ட்ரயின் இதோ அடுத்த ஸ்டெஷனுக்கப்புறம் அண்டர் க்ரவுண்ட்ல போயிடும், சிக்னல் கிடைக்காது, அப்புறம்” என்றேன்.
“பெரிய காரியம் நண்பா”
எனது புலன் கள் சற்றே குவிவதற்குள்
“பாஸ்கி அப்பா தவறிட்டார்டா”
“என்னது”
“நடந்து இரண்டு வாரத்துக்கிட்ட ஆச்சு போல…அந்த பாஸ்கி ராஸ்கல் சொல்லவே இல்லை. இப்ப கூட செல்வராஜ்தான் சொன்னான், இல்லைனா எனக்கு தெரிஞ்சிருக்காது”…
சிக்னல் துண்டாகி அப்புறம் சிறிது நேரமும் காதிலேயே போனை வைத்துக்கொண்டிருந்தேன்…
பிக்காடிலி ட்ரெயின் அந்தக் குகையின் இருண்ட மூலையிலிருந்து நிமிட முள் போல உந்தப்பட்டு அடுத்த கணத்தில் வந்து நின்றது.
அனைத்துக் கதவுகளையும் திறந்து, சிலிர்த்து உண்ணிகளாய் சிலரை உதிர்த்தது.
நானும் பலரும் ஒட்டிக்கொண்டோம்…
பாஸ்கியின் அப்பா, பாஸ்கிக்கு மட்டுமல்ல எங்கள் எல்லாருக்குமே ஓர் உவப்பான மனிதர் அல்ல. பிஎஸ்ஸியில் பிரின்ஸ்பால் அறையிலேயே பாஸ்கியை செவிட்டில் ஒன்று விட்டார். “கணக்கு புத்தகத்திற்கு நடுவுல செக்ஸ் புத்தகம் கேக்குதோ” என்று அவர் விட்ட இரண்டாவது அறைக்கு பிரின்ஸ்பால் ஆடிவிட்டார்.
வாழ்க்கையில் தனது ஒவ்வொரு தோல்வி முடிவிற்கும் இவர்தான் காரணம் என்பதில் பாஸ்கி உறுதியாக இருந்தான்.
அப்பாவிற்கும் மகனிற்குமான உறவு love hate உறவுதான். எல்லாருடையதையும் போல….
எனது இன்றைய தலைவலிக்குக் காரணம் இப்போது நான் பாஸ்கியிடம் துக்கம் விசாரிக்க வேண்டும். கடைசியாக அவனிடம் பேசி கிட்டதட்ட மூன்று வருடங்களாகப் போகிறது.

***

அடுத்த ஸ்டேஷனிலேயே உட்கார இடம் கிடைத்தது. அனிச்சையாகப் போய் அமர்ந்துகொண்டேன். எதிரில் அமர்ந்தவர்களின் பின் மண்டைகள் பின்னால் இருக்கும் கண்ணாடியில் தெளிவாக நகர்ந்து கொண்டிருந்தன.
“உன்னைத்தான் நம்பியிருக்கேன் அழகு” என்று பாஸ்கி போனில் மூன்று ஆண்டுகளுக்கு முன் கேட்கும்போது எனக்கு அதிகம் தயக்கம் இருக்கவில்லை.
“சரி, உன் பாங்க் டீடெயில் எல்லாம் கரக்டா மெயில்ல அனுப்பு, இல்லைன்னா பிரச்சனை ஆகிடும்” என்று சொல்லி சற்று நேரத்தில் அவனும் வங்கி தகவல்களை அனுப்பிவிட்டான். பின், நானும் மூன்று லட்சத்தை பவுண்ட் மதிப்பில் அனுப்பிவிட்டேன்.
அடுத்த மூன்று நாட்களும் இருவரும் தொடர்ந்து டெக்ஸ்ட் அனுப்பிக்கொண்டே இருந்தோம். எதிர்பார்த்தது போலவே IFS எண் தவறு. தமிழ்நாடு மெர்க்கண்டைல் பாங்கிற்கு எனது பார்க்ளேஸ் பாங்கிலிருந்து நேரடியாக பணம் அனுப்ப முடியவில்லை. பின்னர் ரமேஷின் ஸ்டேட் பாங்கிற்கு அனுப்பி….எல்லா சொதப்பல்களையும் தாண்டி அவன் கையில் பணம் ஐந்து நாட்கள் கழித்துக் கிடைக்கும் வரை பதறிக்கொண்டே இருந்தான்.
“அப்பாடி, பணம் எடுத்திட்டேன் அழகு. மறக்கவே மாட்டேன் இதை. ஆறே மாசம்” என்ற ஆசுவாசக்குரல் கூட இன்னும் நினைவிருக்கிறது.
அப்புறம் ஒரு வருடம் கழித்து ராஜி சித்தி பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு “உடனே பணம் அனுப்பமுடியுமா?” என்று சித்தி கேட்டபோது கூட எனக்கு பாஸ்கி தரவேண்டியது நினைவிற்கு வரவில்லை.
ரமேஷிடம் ஏதாவது வழியிருக்கிறதா என்று கேட்டபோதுதான் அவனே நினைவுபடுத்தினான்.
“நீ அங்க இருந்து அனுப்பி பணம் ட்ரான்ஸ்பர் ஆக ரெண்டு மூணு நாள் ஆகும். பாஸ்கி உனக்கு கொடுக்கணுமே கொடுத்துட்டானா?”
“இல்லை மச்சி. கேக்க சங்கடமா இருந்ததால இதுவரை கேக்கலை…”
போனில் கூப்பிட்ட போது உடனே எடுத்துவிட்டான்.
“அய்யோ மச்சி, பணம் செக்யூரிட்டில லாக் ஆகியிருக்கு…இன்னும் ஒரு மாசம் ஆகும்டா…மன்னிச்சுக்க மாம்ஸ்”
பணம் கொடுக்கல் வாங்கல்களில் நடக்கும் வழக்கமான கதைதான், கொஞ்சம் கூட பிசகாமல் நடந்தது. போகப்போக போன் செய்தால் எடுப்பதில்லை. மாலை அல்லது அடுத்த நாள் போன் சார்ஜ்ஜில் இருந்தது, உன் காலை கவனிக்கவில்லை என்று பதில் டெக்ஸ்ட் வரும். அடுத்தடுத்த மாதங்களில் அதுவும் வருவது நின்றுவிட்டது.
ரமேஷிற்குதான் பொறுக்கவே இல்லை. புலம்பித்தீர்த்துவிடுவான்.
நானும் பாஸ்கியும் கல்லூரி மூன்றாம் ஆண்டிலிருந்து வேலையில்லாத அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை பேசிப் பேசித் தீரவே தீராது. சம்பத் நகர் ஆரம்பத்தில் இருந்த ஈரோடு பிஸ்கட் பேக்கரியில் மாலை ஐந்து மணிக்கு மாலைச் சிகரெட்டுடன் ஆரம்பிக்கும் சந்திப்பு, பின் இருள் நன்றாக கவிந்தபின்னும் வாட்டர் டாங்கின் கீழ் அரட்டை உச்சத்தில் போய்க்கொண்டிருக்கும். சில நாட்கள் அப்படியே நீல்கிரிஸ் தாண்டி கலெக்டர் அலுவலகம் வரை சைக்கிள்களை உருட்டிக்கொண்டே போய் வருவோம்.
பாஸ்கியின் ஒல்லி உருவத்திற்கும் அவன் பாடுவதற்கும் சம்பந்தமே இருக்காது. ஒல்லியா இருந்தால் பாட்டு நன்றாக வராது என்று எங்கும் இல்லை. இருந்தும் இரண்டிற்கும் ஏனோ ஒட்டாதது போல்தான் தோன்றும்.
ஒரு முறை இரவு ஒன்பது மணி இருக்கும். நீல்கிரிஸ் தாண்டி புதர் காடாகத்தான் இருந்தது. நீதிமன்ற கட்டிடங்கள் இன்னும் வந்திருக்கவில்லை. மழை நன்றாகப் பெய்து விட்டிருந்தது. அன்று, அவனிடம் சைக்கிள் இல்லை. என்னவோ தோன்றி, “ஓ சாத்தி ரே” என்று மெல்லியதாய் இழுத்துப் பாடினான். அடிக்கடி இது போல் ஏதாவது ஹிந்திப் பாடல்களைப் பாடுவது வழக்கம்தான். எனக்கு ஒன்றும் புரியாதது என்றாலும் கேட்டுக்கொண்டு வருவேன்.
அன்று மழை விட்ட இரவில் தவளைகள் சத்தத்துடன் அந்தக் குரலின் சோகம் என்னைத் திகைக்க வைத்தது இன்றும் என்னால் ஹால்பர்ன் ஸ்டேஷனில் வைத்து நினைவு கூற முடிகிறது.
வழக்கமான, திருப்பூரில் பனியன் கம்பனி வைத்து வாழ்ந்துகெட்ட குடும்பக் கதைதான் அவனிடமும் இருந்தது. சி ப்ளாக்கில் இருக்கும் அவனது ப்ளாட்டிற்கு போகும் போது அவனது அப்பா, பிசினெஸில் தோற்றவர் முகம் போலவே இல்லாமல் சிரித்த முகத்துடன் “வாங்க தம்பி” என்னும் போது சங்கோஜமாக சற்றே குனிந்து கொள்வேன்.
தனது பிற்காலத் தோல்விகளுக்கு எல்லாம் அவர் முன்னொரு காலத்தில் தோற்றதே காரணம் என்று முழுமையாக நம்பினான்.
“என்ன எதுக்கு கான்வென்ட்ல படிக்க வைக்கணும்? எதுக்கு பாட்டு க்ளாஸுக்கு அனுப்பணும்?”
“அதுக்கும் இப்ப உன் பிசினெஸ் சரியாக வராததுக்கும் என்னடா சம்பந்தம்?” என்று பல முறை கேட்டுப் பார்த்தாகிவிட்டது.
பின் நாட்களில் எனக்கு சென்னையில் வேலை கிடைத்து இரு வாரங்களுக்கு ஒரு முறை ஈரோடு வந்து போகும் போது ராயல் தியேட்டர் எதிரில் இரவு பத்து மணி ஆம்னி பஸ்ஸின் ஜன்னலுக்குக் கீழே இருந்து இப்படியே புலம்புவான்.
என்னென்னவோ பிசினெஸ்கள். திருச்சியில் ஏதோ ஒரு இடத்தில் சிந்தெடிக் ஜெம்ஸ் ஸ்டோன்ஸ் , ஆபிஸ்களில் மினரல் வாட்டர் கேன் டிஸ்ரிபியூட்டர், இன்டர்நெட் ப்ரவுஸிங்க் செண்டர் என்று பற்பல வருடங்களில் பல பிஸினெஸ்கள்.
ஆனால் வீடு ஓடிக்கொண்டிருந்ததே அவனது அப்பாவின் பாவாடை ஹோல்சேல் வியாபாரத்தில்தான் என்று எனக்குத் தோன்றியது…
சவுத் கென்ஸிங்டன் ஸ்டேஷன் வந்ததும் பெரும்பாலும் பெட்டி காலியாகி விட்டது. இன்னும் இரண்டு மூன்று ஸ்டேஷன்கள் தாண்டியதும் ட்யூப் மேலே தரைக்கு வந்துவிடும். மொபைல் சிக்னல் கிடைத்துவிடும்.
கால்களை இறுக்கிக்கொண்டு தரையோடு தரையாக அழுத்தினேன். ட்யூப் நகர ஆரம்பிப்பதை நிறுத்த முயற்சிப்பவன் போல.
ஹாமெர் ஸ்மித் ஸ்டேஷனில்தான் இன்றைய இண்டர்வியுக்கான அலுவலகம் இருக்கிறது. சின்ன க்ளையண்ட்தான். என்னவாக இருந்தாலும் கிடைக்கவேண்டும்…. இரண்டு மாதங்களுக்குப்பின் வந்த முதல் இண்டர்வியு.
எர்ல் கோர்ட் தாண்டியதுமே சிக்னல் கிடைத்துவிட்டது…
இப்போது என்னவென்று பேச ஆரம்பிப்பது? பேசித்தான் ஆகவேண்டும்.
கொடுத்த எனக்கே இவ்வளவு சங்கடம், அவனுக்கு எப்படி இருக்கும்?

***

அவனுக்கு இருந்ததோ என்னமோ குரலில் தெரியவில்லை. இரண்டாவது ரிங்கிலேயே எடுத்துவிட்டான்.
“சொல்லு அழகு…இன்னிக்கு பத்தாவது நாள். இன்னிக்குத்தான் போன் செய்ய முடிஞ்சுதா?”
“இல்ல பாஸ்கி. எனக்கு நேத்துதான் விஷயம் தெரியும். அதுவும் முழுசா தெரியாது. அப்பா நல்லாதானே இருந்தாப்படி?”
என்னால் சரளமாக பேச முடிகிறது என்ற எண்ணம், கொஞ்சம் சந்தோஷமாக கூட இருந்தது.
அவன் அப்பாவை கடைசியாக, மூன்றரை வருடங்களுக்கு முன் பாஸ்கி வீட்டில் பார்த்த போது அத்தனை உயரத் தோள்கள் குவிந்து கைகளை கூப்பினார்.
ஒரே முன் பல் மட்டும் தெரிய “அந்த அழகு மலை பசங்க கூட இன்னி உன்னப் பார்த்தேன்? ” என்று நான் பக்கத்தில் சைக்கிளை வைத்துக்கொண்டு நிற்கும் போதே பாஸ்கியை நோக்கி உறுமிய குரலை ஒரு காலத்தில் கேட்டு கேட்டுப் பழகிவிட்டு இப்போது,
“நல்லா இருக்கிங்களா தம்பி?” என்ற குரலைக் கேட்கும் போது அத்தனை சங்கடமாக உணர்ந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டேன்.
நன்கு குழைந்த சாதம் போலிருந்தது.
கண் பூளையை துடைத்தபடியேதான் கொஞ்சமாகப் பேசினார்.
“இப்ப எங்கயும் அதிகம் வெளிய போறதில்ல தம்பி. காலைல சுருக்க ஒரு வாக் பக்கத்துல இருக்கற கார்ப்ரேஷன் ஸ்கூல் க்ரவுண்ட்ல. அப்புறம் சாயந்திரம் முடிஞ்சா இன்னொரு நடை. இல்லேன்னா செவனேன்னு படுத்துக்குவன். முடியறதில்லைங்க”
“தாத்தாக்குன்னு தனி டிவி” பாஸ்கியின் பெரியவன் வந்து கத்திவிட்டு அறைத் திரையில் மறைந்து போனான்.
அவர் இவ்வளவு மரியாதை கொடுத்து பேசுவது பாஸ்கிக்கே சங்கடமாக இருக்கவேண்டும். என்னை சகஜமாக்குவதற்காக “அப்பா, இது நம்ம அழகுமலை, ஏ ப்ளாக்குல எங்க்கூட பிஎஸ்ஸி படிச்சானே, ஞாபகமிருக்குதா?”
அவர் தலையை ஆட்டியவிதம் இன்னும் குழப்பத்தை கொடுத்தது. யார் வந்திருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.
“மேட்டூர் டேம் படியெல்லாம் எப்படி வேகமா ஏறுவேன் ஒரு காலத்துல. அப்பல்லாம் போட் சர்வீஸ் இருந்துச்சு”
ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் சந்திக்கும் மாமாக்கள், அத்தைகள் எல்லாரிடமும் இது போன்ற நோஸ்டால்ஜியா பேச்சுகள் கேட்டு பழகிவிட்டுருந்தது.
“இன்னும் அப்பப்ப கனவுல அப்படி ஏறுவேன்” என்றார்.
பாஸ்கியின் மனைவி பெரிய ட்ரேயில் பிரித்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அட்டைப்பெட்டியை வைத்துவிட்டுப் போனார்.
ட்யூப் லைட் சுவிட்ச் போட்டுக்கொண்டே, “காப்பி குடிக்கிறிங்களா? இல்ல டீ கொண்டு வரட்டுமா?”
அந்த ஸ்வீட் பெட்டியையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அப்பா “கனவுல இருந்து முழிச்சிப் பாக்கும்போதுதான் இன்னும் கொஞ்சம் நேரம் கனவுலயே இருந்திருக்கலாம்னு தோணும்”
வெண் ட்யூப் லைட் வெளிச்சத்தில் அவரது வாத்சல்யமான சிரிப்பு துல்லியமாக இருந்தது.
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லக் கேட்காமல் வாசல் வரை வந்து கை கூப்பினார். திரும்ப அவனது புது ஸ்விப்ட் காரில் காந்திபுரம் பஸ் நிலையம் கொண்டு வந்து என்னை விட வரும் வரை பாஸ்கி பேசிக்கொண்டே வந்தான்.
“நேரு, காந்தின்னு அம்மாவை கடைசி வர வெள்ளை கதர் ஜாக்கெட்டெத்த தவிர வேற எதையும் போடவிடலையே…மன்னிக்கவே முடியாதுடா இவரை”
நான் ஒன்றும் சொல்லாமல் வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தேன். கோவையின் இரவு எட்டு மணிக் காற்று கொஞ்சம் கூட குளிரவில்லை. வெக்கையாக, எதிரில் விரையும் வாகனச் சத்தங்களுடன் முகத்தில் அறைந்தது.
கல்லூரி கால, பயந்தே பழகிய சித்திரம் இப்போது கிழிந்துவிட்டதை மனம் ஒப்பவில்லை. பார்த்திருக்கவே கூடாது என்று தோன்றியது…

***

“அழகு…அழகு. கேக்குதா? சத்தமே இல்ல?”
“ஆங்…இப்ப கேக்குது சொல்லு பாஸ்கி”
சகஜமான குரலில் சொல்ல ஆரம்பித்தான். துக்கம் கேட்டவர்களுக்கு திரும்பத் திரும்பச் சொல்லிப் பழகியிருக்கவேண்டும்.
“அப்பா நல்லாத்தான் இருந்தாரு. ஒரு இருபது நாளுக்கு முன்னாடி வாக்கிங் போய்ட்டு அவர் ரூம் கதவை தொறந்து உள்ள வர்ரப்ப பெரியவன் வேகமா கதவை தள்ளிருக்கான் போல. அப்படியே கதவோட சாஞ்சிருக்காரு. பின் மண்டைல தட்டியிருக்கு. ஒன்னும் இல்லன்னுட்டாரு.”
பாஸ்கி சொல்லச்சொல்ல என்னுள் தயக்கம் அதிகமானது.
“அப்புறம் ஒரு வாரம் இருக்கும். மத்தியானம் சாப்டுட்டு படுத்தவர் சாயங்க்லாம் எந்திருக்கவே இல்லை. ராத்திரி ஏழு மணி போல பெரியவன் போய் லைட்டைப் போட்டுட்டு தாத்தான்னு கூப்டுருக்கான். பதிலே இல்லை. அப்புறம் எனக்குப் போன போட்டு நான் வந்து ஆஸ்பத்திரிக்கு கார்ல தூக்கிட்டு போய்…”
மெல்ல ஹேமர்ஸ்மித் ஸ்டேஷன்விட்டு வெளியே வந்தேன். காலையில் ஹால்பர்ன் ஸ்டேஷனின் அத்தனைக் கூட்டத்திலும் சுவரை கைகளால் தேய்த்துக்கொண்டே மெதுவாக சென்றவர் நினைவு வந்தது.
“அப்புறமென்ன, செலவுதான். எங்கயாச்சும் கீழ வுழுந்தாரான்னு கேட்டாங்க. தலைல பின்னாடி தடவிப் பாத்தா பொடச்சிருக்கு, ரொம்ப பெருசால்லாம் இல்லை. ப்ளட் க்ளாட் அது இதுன்னாங்க…அடுத்த நாள்….கண் முழிக்காமலே…”
சற்று மவுனம். என் பதற்றம் அதிகமானது. கால் மாற்றி நின்று கொண்டேன். மழை தூற ஆரம்பித்தது. இன்னொரு தினம், இன்னொரு மழை.
“ஒரு நிமிஷம் பாஸ்கி, அந்த பஸ் ஸ்டாப் ஷெல்டர் கிட்ட போய்டறன். மழை தூறுது”
ஷெல்டரை நெருங்க நெருங்க எனக்குத் தயக்கம் அதிகமானது.
“ஆங், இப்ப சொல்லுப்பா” தயங்கித் தயங்கித்தான் அவனுக்கு கேட்டிருக்கும்.
“இல்ல அழகு. இருக்கற வரைக்கும் அவர் இருக்கறது தெரில. மாசம் மாசம் அவருக்கு மாத்திரை வாங்கிட்டு வர அன்னிக்கெல்லாம் கடுகடுன்னுதான் இருப்பேன். அப்பல்லாம் என் பக்கத்துலேயே வரமாட்டார். அவர் ரூமுக்குள்ளயே இருந்துக்குவார்”
“மூடு சரியில்லாத போதெல்லாம், பணப் பிரச்சன போதெல்லாம் அவர்கிட்டதான் காட்டுவேன்”
இதுதான் சரியான சந்தர்ப்பம். கேட்டுவிடலாம். லேசாக செருமிக் கொண்டேன்.
பாஸ்கியை நிறுத்த முடியவில்லை. நிமிர்ந்து பார்த்தேன். ஷெல்டருக்குள் ஒரு பெண் புஷ் சேரைத் தள்ளிக்கொண்டு வந்தார். நான் மூலையில் ஒண்டிக்கொண்டேன்.
“காரியம் எல்லாம் முடியறவரைக்கும் கூட ஒன்னும் தெரியல. இப்பதான் வரவர, அய்யோ, தனியாய்ட்டமோன்னு நடுராத்திரில, காலைல முதல் முழிப்புல பகீருன்னு தோணுது…”
அவன் குரல் வேறு மாதிரியானது.
பாஸ்கியின் இந்தக் குரல் எனக்கு நன்றாக தெரிந்த குரல். நடிக்கவில்லை, உண்மையிலேயே மிகுந்த குழைந்த, உணர்ச்சிவசப்பட்ட உண்மையான குரல்.
ஷெல்டருக்குள் இப்போது மேலும் சில பள்ளி மாணவிகள் ஓடி வந்து சேர்ந்துகொண்டார்கள். உற்சாக வீரிடல்கள்.
“கஷ்டமாயிருக்குடா அழகு. அவரோட ரூமை, சேரைப் பாக்கும் போதெல்லாம்…”
அப்புறம் கேட்டுக்கொள்ளலாமா? இப்போது விட்டால் மறுபடியும் போனை எடுப்பானோ மாட்டானோ?
“ஒரு நாள், அவர் மெட்ராஸ் போறார்னு ஸ்டேஷனில் போய் விட்டுட்டு நாம நைட் ஷோ போனோமே ஞாபகமிருக்கா?”
“அ..ஆமா…Willows”
“அன்னிக்கு படம் முடிஞ்சு வரும் போது அவர் மெட்ராஸ் போகாம வீட்டுல இருந்தாரே…”
அன்றைக்கு அவர் அவனை வீட்டிற்கு உள்ளேயே விடவில்லை. இரவு முழுவதும் ப்ளாக் காம்ப்வுண்ட் கேட்டிற்கு பின்னால் டிவிஎஸ் மேலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான்.
இது போல் அப்பாவைப் பற்றி வேறு யாரிடமும் பாஸ்கியியால் பேசியிருக்க முடியாது. பேசிக்கொண்டே போனான்.
நிச்சயம் மூன்று வருடங்களுக்கு முன்னர் வாங்கிய மூன்று லட்ச ரூபாயை இன்று பாஸ்கியிடம் கேட்க முடியாது என்று எனக்குத் தெரிந்துவிட்டது. அவன், எங்கள் மூவருக்கும் மட்டுமே தெரிந்த உலகத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தான். இந்த கசகச மழையில் கூட்டத்தில் நெருக்கிக் கொண்டு…இன்னொரு சந்தர்ப்பத்தில்தான் கேட்க வேண்டும்.
பாஸ்கியும் நான் இப்போது கேட்கப்போவதில்லை என்றுதான் நினைத்திருப்பான். அவனது சகஜ குரலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
ஆனால், நானும் அவனும் எதிர்பாராத ஒரு கணத்தில், எதற்கோ அவன் சற்றே பேசுவதை நிறுத்திய இடைவெளியில் நான் கேட்டுவிட்டேன்.
 

*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.