சிதைந்த கணம்
கண்ணனுக்குக் காத்திருந்த
மிதக்கும் ஆலிலைமேல்
நித்யா தவழ்ந்தாள்
என
நினைவு தப்பிப் போன நினைவு
oOo
எருதின் வலி
அவள் பறந்து போனாள்
அவன் சிதைந்து போனான்
வீட்டைக் காலி செய்தபின்
மாடிப்படியிலிருந்த குளவிக்கூட்டை
ஒட்டடைக் குச்சியால்
லேசாகத் தட்டி உடைத்தாள்
வீட்டு ஓனர்
oOo
திகைத்த கணம்
ஷூ மேல் இருந்த
குளவிக் கூட்டை கலைத்தபோது
எதிர்பார்க்கவில்லை
அறைகளுள் ஒன்றில்
புழு இருக்குமென்று
விதிர்விதிர்த்து கூசிப் போனேன்
குளவி அடுக்காய்க் கூடு வைக்கும் வீட்டில்
பெண் குழந்தை பிறக்குமாம்
மாலையில்
ப்ளாஸ்டிக் கவரின் மேல்
அமர்ந்த குளவி
என்னைப் பார்த்தது
பார்த்துக்கொண்டே இருக்கிறது
oOo
இளைப்பாறும் இடம்
நீ அறிந்தால் என்ன
அறியாவிட்டாலும்தான் என்ன
மனம் நசிந்த
உடல் நலிந்த
பொழுதுகளிலெல்லாம்
உன் வார்த்தைகளில்தான்
தோள் சாய்ந்துகொள்கிறேன்
oOo
எஞ்ஞானம்
மணலில் புதையும் நுரைக்கும்
கரையொதுங்கி
மீண்டும் கடல்சேரும் அலைக்கும்
அலைக்கழிக்கும் கரைக்கும்
இடையே
அலையும்
காலி ப்ளாஸ்டிக் பாட்டில்
நான்
oOo
அயருங் காலமில்லை
தலை காட்ட முடியாத வெயிலில் தவித்துக் கால் மாற்ற முடியாமல் நெருங்கி நிற்கும் சரக் கொன்றை மரங்கள்.
வெயிலின் வியர்வையாய் அவற்றின்
மஞ்சள் பூக்கள் உதிரும்.
தன் துயர் தீர இது தான் சமயமென்று தள்ளி தென்னையின் ஒரு மட்டை இற்று விழும்.
மன்றத்தில் மகுடி வாசிக்கும் காற்றும்
காணோம்.
பறவைகளொன்றும் பறக்காமல் இறைந்திருக்கும் வெளியில் புழுக்கம் பரத்திக் கிடக்கும்.
இரவெல்லாம் இரவை உறங்க விடாது குரைத்துத் தீர்த்த தெரு நாய் பகலைக் கனவிலும் விழிக்க விடாது பகலெல்லாம் உறங்கித் தீர்க்கும்
சாலை யாரும் நடமாட்டமில்லாதது கண்டு ஓய்வில் சற்று புரண்டு கிடக்கும்.
ஈரம் சற்றுமில்லாமல் மனம் வெறிச்சோடிப் போனாலொழிய இப்படி வெயில் காயாதென்று அலைந்து திரியும் மேகங்கள் உளவு சொல்லும்.
அயர்ந்திருப்பேன் வெக்கையில் தலை சாய்த்து தகிக்கும் காலத்தின் மேல்.
அயருங் காலமில்லை என்று உலகு நகர்த்தி ஊரும் அணி அணியாய் எறும்புகள் ஏழு குதிரைகள் பூட்டிய இரதமேறி வரும் சூரியனைத் தோற்கடித்து.
oOo
அழுத்தம்
அவனும் நானும் ஒரு பூரண மெளனத்தில் சந்தித்தோம்.
ஒரே அறையில் இருவரும் இருப்பதென்பது
நிர்ணயிக்கப்பட்டு விட்டது.
கண்ணோடு கண்
பேசவில்லை.
அப்படி அவன் எனைக் கண்ணோக்குங்கால் நான் கண்ணைக் கீழே தாழ்த்துவதும் நான் அவனைக் கண்ணோக்குங்கால் அவன் கண்ணைக் கீழ் தாழ்த்துவதுமாய் இருந்தோம்.
சைகைகள் கூடச்
செய்யவில்லை.
சேர்ந்து நடக்காமல் முன் பின் நடப்பதில் இருவருக்கும் வசதியாயிருப்பதை உணர்ந்தோம்.
இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கவில்லையாகி விடக் கூடாது என்ற கவலையில்லாமல் இல்லை.
அவன் அறையுள் நுழையுங்கால் நான் படுக்கையில் சாய்ந்து கொள்வதும் நான் அறையுள் நுழையுங் கால் அவன் படுக்கையில் சாய்ந்து கொள்வதும் சங்கடத்தைக் குறைக்க உதவியது.
நான் மட்டும் அறையில் இருக்கும் போது அவன் தன் விழிகளை கண்காணிக்க விட்டுச் சென்றதையும் அவன் மட்டும் அறையில் இருக்கும் போது நான் என் விழிகளைக் கண்காணிக்க விட்டுச் சென்றதையும் அறிகுறிகள் உணர்த்தின.
அவன் குளியலறைக்குச் சென்ற வேளையில் அவன் பொருட்கள் எனைப் பார்த்து வெறித்தன.
நான் குளியலறைக்குச் சென்ற வேளையில் என் பொருட்கள் அவனை வெறித்ததை என்னிடம் உணர்த்தின.
ஒரு வார சகவாசத்திற்குப் பின்
இப்போது நானும் அவனும் அறையைக் காலி செய்ய வேண்டும்.
அவன்
இன்னும் என்னை விசாரிக்கவில்லை.
நான்
இன்னும் அவனை விசாரிக்கவில்லை.
கூடிக் கொண்டேயிருக்கும் அழுத்தத்தில் கடைசி நிமிடம் காத்திருக்கும் வெடித்துச் சிதறுவதற்குள் ஒரு வார்த்தையை யார் சொல்வாரென்று.
– கு.அழகர்சாமி
oOo
புத்தனின் உறக்கம்
காற்று நின்று எழுப்புகிறது
மின்சாரம் இல்லை
நொடிக்கு நொடி
புழுக்கம் அதிகமாகிறது
உடலெங்கும்
வியர்வையின் ஈரம்
கொசு என்னை உணவாகக்
கொள்கிறது
ஆழ்ந்துறங்கும்
மனைவியை,
குழந்தையை
இந்தக் கணம் நேசிக்கிறேனா?
அற்ப வாழ்வில்
எனக்கேன் இத்தனைப்
பொறுப்புகள்?
என்னை புத்தனாகாமல்
தடுப்பது எது
என்ற கேள்விகளை
முடிவுக்குக் கொண்டுவருகிறது
சுழலத் தொடங்கும் மின்விசிறி
oOo
அழுக்காகப்
பொங்கிவரும்
ஆற்றுப் புதுவெள்ளம்
வருடா வருடம்
படித்துறையிலிருந்து
வெள்ளத்துடன் வரும்
எழவுச் செய்தி.
குளிக்கப் போனவர்களில்
இறந்தவன்
இளசாக இருப்பான்
உடலைத் தேடியெடுக்க
இருபது கிலோமீட்டர்
போய் வருவார்கள்
புதுவெள்ளத்தில் எப்போதும்
பெண்கள் சாவதில்லை
தண்ணீரோடு அவர்கள்
அகங்காரம் கொள்வதில்லை
oOo
மிக அருமையான கவிதைகள். மனதை தொட்ட வரிகள். எழுதியவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்வகுமார் கணேசனின் கவிதை வரிகள் நெஞ்சம் கீறும் உண்மைகள் சுமந்தது.