உழுதுண்டு வாழ்வோம்!

velanmai

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்ட கடந்த 24 வருடங்களில், இந்தியாவின் பொருளாதார நிலை, பெருமளவு மாறியுள்ளது. வறுமை குறைந்து, கல்வியறிவு பெருகி, சமூக வளர்ச்சியின் பெரும்பாலான குறியீடுகள் முன்னேற்றப் பாதையில் செல்கின்றன. ஆனால், இந்தக் கால் நூற்றாண்டில் மாறாத ஒரே விஷயம், வேளாண்மைத் தொழிலின் லாப நிலை. பணப்பயிர்களை உழவிட்டு, கடன் பட்டு, கடன் கழுத்தை நெருக்க, சுருக்குக் கயிற்றை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாததே!
இதே காலகட்டத்தில், ஒரு முக்கிய வேளாண் பொருளான பாலின் உற்பத்தி 55 மில்லியன் டன்னிலிருந்து, 140 மில்லியன் டன்னை எட்டியுள்ளது (கிட்டத்தட்ட 300%). இதற்கீடான ஒரு உணவு உற்பத்திச் சாதனை உலகில் அதிகம் இல்லை. பால் உற்பத்தியில் நஷ்டமேற்பட்டு, ஒரு உழவர் கூட தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தியில்லை.  பால் உற்பத்தி செய்யும் உழவர்களில் பெரும்பாலோனோர் 2-3 மாடு / எருமைகள் வைத்து பால் உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள்தாம்.
இந்த முரண்பாடு எப்படி நிகழ்ந்தது?
இந்தியாவின் மிகப் பெரும் பால்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல், இந்த ஆண்டு 20000 கோடி வியாபாரத்தை எட்டியுள்ளது. அமுல் ஒரு கூட்டுறவு நிறுவனம். 32 லட்சம் சம பங்கு (ஆளுக்கு 1 பங்கு) கொண்ட உரிமையாளர்களின் நிறுவனம். அதன் வியாபாரத்தில், கிட்டத்தட்ட 80% மதிப்பு திரும்பவும் பால் உற்பத்தியாளர்களிடமே சேர்கிறது. அதாவது, வருடம் கிட்டத்தட்ட16000 கோடி ரூபாய், வாரா வாரம் சீராக உற்பத்தியளாரைச் சென்று சேர்கிறது. கிட்டத் தட்ட இதே வியாபார மாடலில், கர்நாடகத்தின் நந்தினி 6000 கோடி வியாபாரம் செய்கிறது. தமிழகத்தின் ஆவின் 3000 கோடி இருக்கலாம்.
பாலுக்கும், மற்ற வேளாண் பொருட்களுக்கும் என்ன வேறுபாடு?
முதலில், பால், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே தரம். ஆனால், மற்ற வேளாண் பொருட்களில் அப்படியில்லை. கேரளத்தில் உண்ணப் படும் அரிசி தமிழகத்தின் உண்ணப் படுவதில்லை. அதனால், அவற்றின் உற்பத்தி, ஒரு சிறு புவியியல் paalஎல்லையத் தாண்டுவதில்லை. எனவே, அப்பொருட்கள், சிறு வியாபாரிகளின் கைகளின் மாட்டிக் கொண்டு, உற்பத்தியாளர்கள் அவர்களை நம்பி இருக்கும் சூழல் உருவாகிறது. அதே சமயம், மற்ற சில வேளாண் பொருட்கள் – எண்ணெய் வித்துக்கள்/ பருப்பு / முட்டை / ஊண் உணவுகளின் தரம் ஓரளவு பாரதம் முழுக்க ஒன்றுதான். ஏன், அந்தப் பொருட்களில், பாலில் நடந்தது போல் ஒரு லாபகரமான, நிலையான, உற்பத்திப் புரட்சி நடக்க வில்லை?  ஏன் பருப்பு உற்பத்தி ஒரு லாபகரமான வியாபாரமாக இல்லை. ஏன் முட்டை உற்பத்தியாளர்கள் சில ஆண்டுகளில் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள்?
இதற்கான விடை எளிதானதல்ல.
பால் பொருள் வியாபாரத்தின் அடிப்படைகளை ஓரளவு முழுமையாக அறிந்து கொண்டால், இதற்கான விடை புரியலாம்.

  1. பால் இந்தியாவின் மிக முக்கிய அத்தியாவசியப் பொருள். அதன் விலை, கடந்த 70 ஆண்டுகளாக ஓரளவு சீராக இருக்கிறது. உற்பத்தி விலையேறும் அளவுக்கு, அதன் விற்பனை விலையும் அதிகரிக்கிறது. விற்பனை விலை வீழ்ச்சி என்னும் ஒரு விஷயம் பாலில் இதுவரை நடக்க வில்லை. கொள்முதல் செய்யப்படும் பாலில், 80 சதம் பாலாகவே விற்பனை செய்யப்படுகிறது. வருடத்தில் 2-3 முறை பாலின் விலை மாறலாம். அவ்வளவே. எனவே ஒரு சீரான விற்பனை விலை கிடைக்கும் சூழலில், விற்பனை விலையில் 80% உற்பத்தியாளரைச் சென்றடையும் போது, உழவர்கள், நஷ்டத்தைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. கிட்டத்தட்ட, சர்க்கரைத் தொழிலும் இவ்வாறே இருந்தது – உழவர்களுக்கான விலை, விற்பனை விலை எல்லாமே அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போது (ஊழல் மலிந்திருந்தாலும்), உற்பத்தி செய்த பொருளுக்கான விலை நிச்சயமாகக் கிடைக்கும் என்னும் சூழலில், உழவர்கள் அதில் முதலீடு செய்ய முன்வருகிறார்கள். பாலில் மட்டுமல்ல, கரும்பிலும், இந்தியா உலக உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு.

 

  1. கூட்டுறவு: தனி விவசாயி பெரும் உற்பத்தியாளரல்ல. தன் பொருளை, சந்தைக்குக் கொண்டு சென்று, தன் நுகர்வோரை கண்டு விற்று, காசாக்கி திரும்புதல், பொருளாதார ரீதியில் லாபமில்லாத செயல். ஆனால், லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேரும் போது, உற்பத்தி குவிந்து, அது, பதப்படுத்த, விற்பனை செய்யும் கட்டமைப்பை ஏற்படுத்தத் தேவையான ஒரு பொருளாதார அளவை எட்டுகிறது. அமுலில் நடந்தது இதுதான். தனியார் வியாபாரிகள், உழவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போது, சர்தார் பட்டேல் தலைமையில், உழவர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி, தங்கள் பொருட்களைத் தாங்களே விற்பனை செய்யும் ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்கள். அதனால் தங்கள் பொருட்களைச் சரியான விலையில் விற்று, அதில் கிடைத்த உபரியில் பதப்படுத்தும் நிலையங்களை ஏற்படுத்தி, உற்பத்தியை மேலும் பெருக்கினார்கள். இந்த மாடல், மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஓரளவு வெற்றிகரமாக நடத்தப்படுகிறது, சீரான பால் வினியோகமும், நுகர்வோர் விலையும், உற்பத்தி விலையும் இன்றும் அரசியல் ரீதியாக அத்தியாவசியம்.  எனவே அரசும் இதை ஆதரிக்கிறது.

 

  1. ஆனால், மற்ற வேளாண் விலைபொருட்கள் அப்படியில்லை. எடுத்துக்காட்டாக, எண்ணெய் – ஒரு நாளில் பல முறை விலை மாறுகிறது. உலகெங்கும் உள்ள சந்தைகளோடு, இன்று இந்திய எண்ணெய்ச் சந்தை தொடர்பு படுத்தப் படுகிறது. குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், சென்னை வருவதற்குள், மலேசியாவில் இருந்து பாமாயில் வந்து விட முடியும்.  உலகெங்கும், இதில் ஊக வணிகமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.  மலேசியாவின் எண்ணெய் ஊக வணிக நிலையமும், சிக்காகோவின் வேளாண் பொருள் ஊக வணிக நிலையமும் ஆடினால், ஈரோட்டில் எண்ணெய் விலை ஆடுகிறது. இப்படி ஒரு நிலையில்லா ஒரு விற்பனை விலை உள்ள சூழலில், உழவர்கள் ஒன்று சேர்ந்து அமுல் போல ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தினாலும், அவை லாபகரமாக இயங்குவது கடினம். 1980ளின் இறுதியில், சாம் பிட்ரோடா / ராஜீவ் காந்தி காலத்தில், தேசிய பால் வள வாரியம், அமுல் மாடலில், எண்ணெய் வித்துக்கள் கூட்டுறவை அமைத்து, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியைப் பெருக்கத் திட்டமிட்டார்கள். டாக்டர்.குரியன் தலைமையில், 7 மாநிலங்களில், எண்ணெய் வித்துக் கூட்டுறவு வியாபார நிறுவனங்களைத் துவக்கினார்கள்.  ஆனால், விலை ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க முடியாமல், கூட்டுறவு சங்கங்கள், தடுமாறி, மறைந்தன.

 

  1. முட்டை மற்றும் கோழி இறைச்சியில், கரும்பு உற்பத்தி போன்ற ஒரு முறை கையாளப்பட்டது. சிறு பண்ணைகள் நிறுவப்பட்டு, உற்பத்தியாளர்களுக்கு, குஞ்சுகள், தீவனம் முதலியன கொடுக்கப் பட்டு, அவர்களிடம் இருந்து முட்டைகள் சீராகக் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப் பட்டன. இந்தத் தொழில் மாதிரியில், நாமக்கல் ஒரு பெரும் உற்பத்தி மையமாக உருவெடுத்தது. கிட்டத் தட்ட, இதே போல், பொள்ளாச்சியில், இறைச்சிக் கோழி வியாபாரம் நடத்தப்படுகிறது. இது உற்பத்தியாளர்களுக்குப் பெரும் லாபம் தரவில்லையெனினும், நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இங்கே, சந்தையில், விலையேற்ற இறக்கங்கள் இதில் ஈடுபட்ட தொழில் முனைவர்களைப் பாதிக்கும் பொழுது, அவர்கள் முட்டை, இறைச்சி கொள்முதல் சுணங்குகிறது. இவை பால் அளவுக்கு முக்கியமிலாததால், அரசின் ஆதரவும் குறைவு.

 

  1. வேளாண்மையில் இன்னொரு வகைப் பயிர்களுண்டு – கனிகள் / காய்கறிகள். இவற்றின் உற்பத்தி, வருடங்களில் சில மாதங்களில் மட்டுமே பெருமளவில் இருக்கும். மாம்பழம் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தான். அந்தச் சமயங்களில் உற்பத்தியாளருக்குச் சரியான விலை இல்லையெனிலும், உற்பத்தியாளர் அவற்றை விற்றுத் தான் ஆக வேண்டும். தக்காளி குளிர்காலத்தில் (உற்பத்தி அதிகம்) இரண்டு ரூபாய்க்கும், வெயில் காலத்தில் (உற்பத்தி குறைவு) ஐம்பது ரூபாய்க்கும் விற்பது இதனால்தான். உற்பத்தி மிகுந்த பருவங்களில் சில வருடங்களில், பறிக்கும் கூலி கூட உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்காமல், அவை அறுவடை செய்யப் படாமல் அப்படியே விடப்படுகின்றன. இந்த வகை வேளாண்மையில் சில வெற்றிகரமான உதாரணங்கள் உண்டு. எடுத்துக் காட்டாக, சுங்க வரிகள் விலக்கப் பட்டு, பழப் பதனிடும் நிலையங்களுக்கு மானியம் கொடுக்கப் பட்ட போது, சித்தூர் / கிருஷ்ணகிரிப் பிரதேசம் மாம்பழம் பதனிடும் பிரதேசமாக உருவெடுத்தது. உற்பத்தியும் பெருகியது. ஆனால், காய்கறிகள் – இன்றும் ஒரு பெரும் சூதாட்டமாகத் தான் இருக்கின்றன. சில வருடங்கள் ஓரளவு லாபமும், சில வருடங்கள் பெரும் நஷ்டத்திலும் முடிகின்றன.  ஏனெனில் இவை, உள்ளூர் சந்தைகளை நம்பியே உள்ளன.

 

  1. அடுத்து பணப்பயிர்கள். இதில் மிக முக்கியமானது பருத்தி. பருத்தி, ஆந்திரம், மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெருமளவு விளைகிறது. இது பெரும்பாலும் மானாவரிப் பயிர். இதன் உற்பத்திச் செலவு மிகவும் அதிகம் – 6-8 முறை பூச்சி மருந்து அடிக்கப்படும் பயிர். இந்தத் தொழிலில், 3 நிச்சயமில்லாத விஷயங்கள் உள்ளன. நல்ல உற்பத்தி இல்லாமை – பல முறை பூச்சி மருந்துகள் பயன் தராமல் போவதால், பருவ மழை பொய்த்துப் போதல், மற்றும் விலைச் சரிவு. இதில் மூன்றில் ஒன்று பாதித்தாலும், உழவன் பூச்சி மருந்து குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. பெரும்பாலான உழவர் தற்கொலைகள், இந்தப் பிரதேசங்களில்தாம் நடக்கின்றன.  பி.டி (மரபணு மாற்றம் செய்யப்பட்ட) பருத்தி வந்து, பூச்சி மருந்து அடிப்பதன் தேவை குறைந்தது. (இதில் பெரும் லாபம் ஈட்டியவர்கள் விதை உற்பத்தியாளர்களே. ராசி சீட்ஸ் என்னும் ராசிபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம், எந்தப் பன்னாட்டு நிறுவனத்தை விடவும், லாபகரமாக இயங்கும் நிறுவனம்). ஆனாலும், மழையோடும் மற்றும் விற்பனை விலையோடும் ஆடும் சூதாட்டம் இன்னும் முடியாததால், தற்கொலைகள் இன்னும் தொடர்கதையாகவே உள்ளன.

 

  1. பருவமழை. வருடா வருடம் ஏப்ரல் மாத இறுதியில், இந்திய வானிலை நிறுவனம், பருவ மழை பற்றிய தனது ஊகத்தை வெளியிடுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளின் தட்ப வெப்ப நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, ஒரு புள்ளியியல் தேற்றத்தின் மூலம் இந்த ஊகம் முடிந்த அளவு அறிவியல் பூர்வமாக்கப் பட்டுள்ளது. இந்தியா அளவு உள்ள நாட்டின், பல்வேறு தட்ப வெப்ப பிரதேசங்களைக் கொண்ட ஒரு பூகோளப் பகுதியில், இப்படி ஒரு ஊகம் செய்வது, (இன்றைய அறிவியல் தொழில் நுட்பங்களின் படி) மிகக் கடினமான செயல். ஆனாலும், அதை ஓரளவு வெற்றிகரமாகச் செய்து வருகிறது இந்திய வானிலை நிறுவனம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை, வானிலை நிறுவனத்தின் தினசரி, வாரந்திர அறிக்கைகளை, செயற்கைக் கோள் புகைப்படங்களைக் கண்காணித்தால் இது புரியும்.

 
இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரில் இருந்தும், தினமும் இருவேளை தட்ப வெப்பப் புள்ளி விவரங்கள் சேகரிக்கப் பட்டு, தில்லியில் குவிக்கப் பட்டு, கண்காணிக்கப் படுகிறது. வாரா வாரம், மழையின் அளவு கண்காணிக்கப் பட்டு, மழை பெய்தலின் விவரம் சொல்லப் படுகிறது. இதை வைத்துத் தான் வறட்சி, வெள்ளம் போன்றவை அரசால் முடிவு செய்யப் படுகின்றன. ஆனால், இதில் ஒரு பெரும் சிக்கல் இருக்கிறது. மழை பெய்வதை கவனிக்கும் ஒவ்வொருவருக்கும் இது புரியும். கோவை மாவட்டக் கலெக்டர் அலுலவலக மழை மானியில் பதிவாகும் மழை பொள்ளாச்சியிலும் பெய்ய வேண்டிய அவசியமில்லை.  அவினாசியில் பெய்யாமலேயே போகலாம். இரண்டாவது, சீராக, பயிருக்குத் தேவையான பொழுது பெய்ய வேண்டிய மழை. நான்கு வாரங்கள் பெய்யாமல், ஒரே வாரத்தில் கொட்டும் போது, கலெக்டர் அலுவலகப் புள்ளி விவரங்கள், மழை அளவு சராசரி என்றுதான் சொல்லும்.  மழை பெய்யாத அவினாசி உழவருக்குப் பூச்சி மருந்தே கடவுள்.
சரி இந்தப் பிரச்சினைக்கான தீர்வுகள் என்ன? மிகத் துரதிருஷ்டவசமாக, வேளாண் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சபைகளில், உழவர்களின் பங்கு இருப்பதில்லை. பொதுவாக உழவர்களுக்கு அதிகம் எழுதப் படிக்கத் தெரியாது. அவர்களின் தலைவர்களும் சிறு பூகோளப் பகுதியில் இயங்குவதால், மாநிலத் தலைநகர் /தில்லி வரை அவர்கள் குரல் எட்டுவதில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், மேற்கு உ.பி, ஹரியானா உழவர் தலைவர்கள் தாம் அறியப் படுகிறார்கள். இக்குறைபாட்டினால், மரபான பொருளாதார மற்றும் வேளாண் அறிஞர்களே இத்துறை தொடர்பான முடிவுகளை எடுக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, 80 களில், எண்ணெய் வித்து உற்பத்தி ஒரு முக்கியமான தேவையாகக் கருதப் பட்டு, அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. இறக்குமதி வரி 90% ஆக இருந்தது (பன்னாட்டு வேளாண் பொருட்கள் ஒப்பந்தப் படி, இந்தியா 300% வரை இறக்குமதி வரி விதிக்கலாம் என்ற போதும்). அதனால், எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரித்தது. உழவர்களுக்கும் நல்ல விலை கிடைத்தது. ஆனால், அடுத்து வந்த அரசியல் சூழலில், பண வீக்கம் குறைய வேண்டுமென்பதற்காக, இறக்குமதியைத் தளர்த்தி, வரியைக் குறைத்தார்கள். இறக்குமதி வரி 90 சதத்தில் இருந்து, 30 சதமானது.  எண்ணெய் விலைகள் குறைந்தன. வாலாட்டிய பண வீக்கத்தை நறுக்கி விட்டோம் என்று மார்தட்டினார் ஒரு நிதி மந்திரி. ஆனால், எண்ணெய் வித்து உற்பத்திக்கான ஒரு தொலைநோக்குத் திட்டம் தொலைந்து போனது. இன்று இந்தியா உலகின் இரண்டாவது பெரும் எண்ணெய் இறக்குமதியாளர். எண்ணெய் வித்து உற்பத்தி வீழ்ந்து கொண்டே இருக்கிறது.
மரபான பொருளாதார மற்றும் வேளாண் அறிஞர்கள் வைக்கும் தீர்வுகளை இப்போது பார்ப்போம்.

  1. வேளாண்மையை நிறுவனமாக்கல்: வேளாண் பொருளாதார அறிஞர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பரிந்துரைக்கும் ஒரு தீர்வு இது. அதற்கான வலுவான வாதங்களை முன் வைக்கிறார்கள். பெரும் நிறுவனங்களிடம் நிதி ஆதாரங்கள் இருக்கும். வேளாண்மைக்குத் தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பங்களில் அவர்களால் முதலீடு செய்ய முடியும் என்பது அது.

இந்த வாதம், வேளாண்மை பெருமளவில் செய்யப்படும் போது, இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள், வேளாண் உற்பத்தியை அதிகரித்து, வேளாண்மையை லாபமாக்கும் தொழிலாக மாற்றும் என்னும் அடிப்படையை வைத்துச் சொல்லப்படுவதாகும். ஆனால், இதில் சொல்லப்படாத ஒரு விஷயம் உள்ளது. உற்பத்தி விலை – உலகின் பல நாடுகளில், வேளாண்மை ஓரளவு இயந்திரமாக்கப் பட்டுள்ள நாடுகளில் கூட, இந்தியா போன்ற நாடுகளை விட மிக மிக அதிகம். எடுத்துக்காட்டாக, உலகின் மிக அதிக நெல் உற்பத்தித் திறன் கொண்ட ஜப்பான் நாட்டின், ஒரு ஏக்கர் நெல் உற்பத்திச் செலவு இந்தியாவை விட பல மடங்கு அதிகம்.  பொருளாதார விதிகளின் படி, அங்கே நெல் விளையவே கூடாது. ஆனால், உணவு என்பது ஒரு நாட்டின் அடிப்படைத் தேவை. உணவுக்காக, இன்னொரு நாட்டைச் சார்ந்திருப்பது, அதன் இறையாண்மையையே பாதிக்கும். எனவே எந்த நாடும், வேளாண்மையில் பொருளாதார விதிகளையோ, சுதந்திரச் சந்தை விதிகளையோ பின்பற்றாது. ஐரோப்பிய நாடுகளில் பால் உற்பத்தி தொடர்வதற்கும் இதுவே காரணம்.
இந்தியாவில், பணப் பயிர் உற்பத்தியில் சில நல்ல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன – டாட்டா டீ, இந்துஸ்தான் லீவர் போன்ற நிறுவனங்கள். 90 களுக்கு அப்புறம், அவர்களால், இதைத் தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாமல், உற்பத்தியை விட்டு விட்டு, இன்று கொள்முதல் மற்றும் சந்தைப் படுத்துதலை மட்டும் செய்கிறார்கள். பணப்பயிர் வேளாண்மை கூட, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு லாபகரமானது இல்லையென்பதுதான் உண்மை.
மட்டுமல்லாமல், நெல், கரும்பு, காய்கறிகள் போன்ற வகைப் பயிர்களை இயந்திரமாக்குதல் கடினம்.   நூறு கோடி ரூபாய் வியாபாரத்தை எட்ட, ஒரு நிறுவனம் கிட்டத் தட்ட 1000 ஏக்கரில் வேளாண்மை செய்ய வேண்டும்.  சென்னை ரங்கநாதன் தெருவில், ஒரு கடையில் வியாபாரம் செய்யும் அண்ணாச்சியின் வியாபாரம் இதை விட அதிகம். இன்று கூவி அழைத்தால் கூட, ஒரு தொழிலதிபரும் வேளாண்மை செய்ய, நிலத்தில், தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முன் வர மாட்டார்கள் என்பதும் உண்மை. நிலத்தின் விலையை முதலீட்டில் சேர்த்தால், வேளாண்மை நஷ்டமான தொழில்.

  1. தொழில் நுட்பமும் வீரிய விதைகளும்: வழக்கமாக வேளாண் அறிஞர்கள் பாடும் பல்லவி. உழவர்கள் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் வீரிய விதைகளை முன் வந்து ஏற்றுக் கொள்வதில்லை என்பது. இன்று 25-30 லிட்டர் கறக்கும் ஒரு பால் மாடு, 35-40 ஆயிரம் வரை விலை போகிறது. தரமான மாடுகளுக்கு பெரும் சந்தை இருக்கிறது. ஒரு மாட்டுக்கு அந்த விலை கொடுக்கத் தயாராக இருக்கும் உழவர், வீரிய வித்துக்கோ / தொழில் நுட்பத்துக்கோ ஏன் செலவு செய்ய முன்வர மாட்டேன் என்கிறார் என யோசித்தால் புரியும். பாலுக்கும் ஒரு சீரான விலையும், சந்தையும் உண்டு.  அதனால் முதலீடு செய்யத் தயங்குவதில்லை. முதலீடு நிச்சயமாக வரும் எனத் தெரியாத மானாவாரி விவசாயி நிச்சயம் தயங்கத் தான் செய்வார்.

பால் உற்பத்திச் சரித்திரத்தின் துவக்கத்தில், பதப்படுத்துதலில், ப்ளேட் பாஸ்ட்யூரைஸர் என்னும் தொழில் நுட்பம் மிகப் பெரும் தீர்வாக வந்து அமுலின் வியாபாரத்தை அதிகரிக்கச் செய்தது. ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக பால் வியாபாரத்தை லாபகரமாக நிறுத்தியது, கூட்டுறவென்னும் கொள்கையும், சரியான மேலாண் தலைமையும், அரசின் ஆதரவும் தான்.
எனவே, தொழில்நுட்பம், வேளாண்மைக்குப் பெரும் உதவி. ஆனால், அதுவே இறுதியான தீர்வல்ல.  வேளாண்மை லாபகரமாக இருக்க வேண்டும். அதற்குச் சரியான தொழில் நுட்பம் உதவும். ஆனால், வால் நாயை ஆட்ட முடியாது.

  1. உலகத் தரம் வாய்ந்த கட்டுமானம்: வேளாண் உற்பத்தி அதிகரிக்க ஒரு தீர்வாக வைக்கப் பட்டுள்ளது. இது ஓரளவு உண்மை. பால் பதப் படுத்தும் கட்டுமானம் இன்று இந்தியாவின் பெரும் பால் உற்பத்தி மாநிலங்களில், பால் உற்பத்தியைப் பெருமளவு அதிகரிக்க உதவியுள்ளன.  இம்மாநிலங்களில், 25 கிலோ மீட்டர் சுற்றளவில், பால் குளிரூட்டும் சிறு நிலையங்கள் (5000 – 10000 லிட்டர் கொள்ளளவு) இன்று பெருமளவில் நிறுவப்பட்டுள்ளன. இவை, மிகக் குறைந்த செலவில், பாலைச் சேகரித்து, பதப் படுத்தும் நிலையங்களுக்கு அனுப்ப உதவுகின்றன. அதே போல், கிருஷ்ணகிரி பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பழப்பதன தொழிற்சாலைகள் யாவும் சிறு அளவிலானவையே. (பெரும்பாலும் ஒரு நாளைக்கு 20 டன் கொள்ளளவு தொழிற்சாலைகள்). துவக்கத்தில் தேங்காயெண்ணெய் பதனிடும் நிலையங்கள் யாவும் ஒரு நாளைக்கு 10 டன் எண்ணெய் உற்பத்தி செய்யும் (அர்ஜெண்டினாவில், பெரும் எண்ணெய் நிறுவனமாக கார்கில் தொழிற்சாலை, அமேஸான் நதிக்கரையில் உள்ளது. அதிலிருந்து நேராக, எண்ணெய் கப்பலில் ஏற்றப்படுகிறது. அதன் கொள்ளளவு, ஒரு நாளைக்கு 5000 டன்), 40 தொழிலாளர்கள் வேலை செய்யும் அலகுகளாக இருந்தன. இன்று, நிலத்தின் விலை, தொழிலாளர் கூலி உயர்வு போன்றவை காரணமாக, அவை ஒரு நாளைக்கு 30 டன் எண்ணெய் உற்பத்தி செய்யும், 25 தொழிலாளர்கள் வேலை செய்யும், அதிக இயந்திரமாக்கப் பட்ட அலகுகளாக மாறி வருகின்றன. உலகத் தரம் வாய்ந்த கட்டுமானம் என்பதை விட, சூழலுக்குத் தகுந்த கட்டுமானம் என்பதே சரியான பார்வையாக இருக்கும்.

மரபான பொருளாதார, அறிவியல் அறிஞர்கள் வைக்கும் தீர்வுகளான, இயந்திரமயமாக்கல், தொழில்நுட்பம், உலகத் தரம் (அளவு) வாய்ந்த தொழில்நுட்பம், – இவை யாவும், இந்திய வேளாண் பொருளாதார அலகை உணராமல், மேற்கத்திய நில, பொருளாதார அலகுகளைக் கருத்தில் கொண்டு வைக்கப் படும் தீர்வுகள்.
அமெரிக்கா, இந்தியாவை விட ஆறு மடங்கு பெரிதான ஒரு நாடு.  நான்கு மடங்கு மக்கள் தொகை குறைவான நாடு. அங்கே, வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகை 6-7 சதம். அங்கே வேளாண் நில அலகுகள் பெரிது. மிகச் சிறிய உழவர் 100 ஏக்கர் நிலம் வைத்திருப்பார். அதிலும் வேலை செய்ய ஆள் வைத்துக் கட்டுபடியாகாது. எனவே இயந்திர மயமாக்குதல் அவசியம்.  வேறு வழியில்லை.
ஆனால், தலைக்கு 2-3 ஏக்கர் அளவே இருக்கும், குடும்பத்தில் 4 பேர் வேலையில்லாமல் இருக்கும், 50 சதம் மக்கள் நம்பியிருக்கும் இந்திய வேளாண் அலகு வேறு. இதற்கான தீர்வுகள் இந்தப் பொருளாதாரச் சூழலை முன்வைத்து, எழும்போதுதான், அவை நிலையானவையாக இருக்கும்.
இப்படி இருக்கும் இன்றையச் சூழலிலுமே, உழுதல், அறுவடை போன்ற வேலைகளுக்கு இன்று இயந்திரங்கள் வந்து விட்டன.  இன்றையச் சூழலுக்கேற்ற பரிமாண வளர்ச்சி என்று கொள்ள வேண்டும்.
வேளாண்மையில், மண்ணுக்கேற்ற பயிர் என்னும் சொல் உண்டு. அதாவது, மண்ணின் குணங்களுக்கேற்ப, ஒவ்வொரு மண்ணிலும் மிக நன்றாக விளையும் பயிர்கள் உண்டு. கரிசலில் பருத்தியும், செம்மண்ணில், கடலையும் – ஒரு உதாரணம். அதே போல் வேளாண்மையில் சூழலுக்கு ஏற்ற தீர்வே மிகச் சரியான தீர்வாக இருக்க முடியும்.
அவை யாவை?

(வளரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.