அம்பாஸடர்ஸ் க்ளப் – புத்தக அறிமுகம்

ambassador club

இருபதாம் நூற்றாண்டின், பாதியில் விடுதலை பெற்று, மக்களுக்குச் சோறிட முடியாமல் கையேந்தி நின்றது நம் பாரதம். அந்நிலையில் இருந்து வளரத் துவங்கி, இன்று, உலகின் மிகப் பெரும் பொருளாதாரச் சக்தியாகத் திகழ்கிறது.
இந்தப் பாதையில் பாரதம் சென்ற பயணத்தில், முக்கியமான  அங்கமாகத் திகழ்பவர்கள் நம் வெளியுறவுத் துறை அதிகாரிகள். பாதையில், இந்தியா பல சிக்கல்களைச் சந்தித்திருக்கிறது. உலக நாடுகளில் பலர் இந்தியாவைத் தூற்றியிருக்கிறார்கள். நெருக்கடிகளை அளித்திருக்கிறார்கள். உலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தியாவின் பல அதிரடி நடவடிக்கைகளை, உலக நாடுகளுக்கு அதன் பிண்ணனியைக் கொண்டு விளக்க வேண்டியிருந்திருக்கின்றது. இது போன்ற கடினமான பணிகளை எல்லாம், திரையின் பின் நின்று வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்கள் நம் வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
அவர்களில் சிலர் எழுதிய அனுபவக் குறிப்புகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். இந்திய வெளியுறவுத்துறையின் மிக வெற்றிகரமான, முக்கியமான அதிகாரியான ஷிவ் ஷங்கர் மேனனின் முன்னுரையோடு.
இந்திய அரசுப் பணியில், இரண்டு பணிகள் மிகச்சிக்கலானவை. வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை. இத்துறையில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும், சிக்கலான, இந்திய அரசுச் சட்டங்கள் செல்லுபடியாகாத இடங்களில் பணியாற்றுபவர்கள். பல முறை அவர்கள் செய்யும் வேலை, சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். சிக்கலான நேரங்களில், களத்திலேயே முடிவெடுக்க வேண்டியிருக்கும். வெற்றி பெற்றால், நாடும் மந்திரிகளும் பங்கேற்பார்கள். தோல்வியுற்றால், பலியாடாக வேண்டியிருக்கும். ஆனால், இந்தச் சிக்கலே, இவ்வேலையைக் கவர்ச்சிகரமானாதாக்குகிறது எனச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை இது. இந்திய நலன்களை உலக அரங்கில் பாதுகாக்கும் பணியில் வெளியில் தெரியாமல் பணியாற்றும் முக்கிய நபர்கள் இவர்கள்.
இந்திய சீன உறவுகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம், 1962ல் நாம் சீனப் போரில் தோல்வியுற்றது பற்றி மட்டுமே பேசுகிறோம். இந்தியா விடுதலை பெற்ற போது, இந்தியாவுக்கும் சீனத்துக்கும் இடையிலான எல்லைக் கோடு என்பது ஒரு தீர்க்கப் படாத பிரச்சினையாக இருந்தது. இந்திய சீன எல்லைக் கோடான, மக்மோகன் எல்லைக் கோட்டை சீனம் ஒத்துக் கொள்ள வில்லையென்பது மிக அதிகம் பேசப்படாத ஒன்று.
திபேத் மட்டுமின்றி, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், பூடான் எனப் பல பிரதேசங்களின் மீது, சீனாவின் கண் இருந்தது. இதில் முக்கியமான பிரதேசமான சிக்கிம் எப்படி வெற்றிகரமாக இந்தியாவோடு இணைக்கப் பட்டது எனப் பேசுகிறார் பி.எஸ்.தாஸ் என்னும் அதிகாரி. சிக்கிம்மின் அரசரான சோக்யாலுக்கு உதவ, தாஸ் அனுப்பப்படுகிறார்.  சிக்கிம்மின் அரசரின் வம்சாவளிகள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள், அதே சமயம் சிக்கிம்மில் பெரும்பான்மையினர் நேபாளி வம்சாவளியினர். அவர்கள் தெருக்களில் இறங்கி, ஜனநாயகம் வேண்டிப் போராட, சோக்யால் அதை மறுக்க, சிக்கல் முற்றுகிறது.
சோக்யாலுக்கு உதவ, தாஸ் அனுப்பப் படுகிறார். அதை, சிக்கிம்மை இந்தியா இணைத்துக் கொள்ளப் போகிறது என ஊடகங்கள் வர்ணிக்கின்றன.  சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் இதை வன்மையாகக் கண்டிக்கின்றன. சீன ராணுவம் நாதுலா பாஸின் அருகில் தயார் நிலையில் இருக்கிறது. இந்திய ராணுவமும் தயார் நிலையில்.
சோக்யாலின் மனைவி ஒரு அமெரிக்கர். இந்தியாவுக்கு எதிரான எண்ணம் கொண்டவர். சிக்கிம்மின் ராணி எனத் தன்னை எண்ணிக்கொண்ட இவர், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், இந்தியாவுக்கு எதிராகப் பேசுபவர்.  சிக்கிம் இந்தியாவோடு இணைந்தால், சிக்கிம்மின் ராணியாகும் கனவு நனவாகாது என்பதை உணர்ந்தவர். இவர் அமெரிக்காவின் கையாளாக இருக்கலாம் என்றொரு ஊகமும் அந்நாளில் இருந்தது.
இந்தப் பணிக்குப் போகும் முன், தாஸுக்கு, பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து ஒரு மேலோட்டமான அறிவுரை வருகிறது. “சிக்கிம் மக்களின் நலனும், எண்ணங்களும் பூர்த்தி செய்யப் பட வேண்டும்” என. இது பொதுவான அறிவுரை எனினும், இந்த சூழலில், சோக்யால் அகற்றப்பட்டு, சிக்கிம்மில் ஜனநாயகம் வரவேண்டும் என்பதாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்.  இதைப் பிரதமர் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அதிகாரி இதை நுட்பமாகப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இதுதான் அரசுப் பணியில் அடிப்படைப் பாடம்.
இப்பணி வெற்றி பெற்றால், சிக்கிம், ஜனநாயகப் பாதையில் செல்லும். இல்லையெனில், உள் நாட்டுக் கலவரம் உண்டாகலாம். இதை ஒரு சாக்காக வைத்து, நாத்துலாவில் தயார் நிலையில் இருக்கும் சீன ராணுவம் நுழைந்து சிக்கிம்மைக் கைப்பற்ற முயலலாம்.
இதை எப்படி, தான் மிகக் கவனமாகக் கையாண்டு வெற்றி பெற்றேன் என்று தாஸ் மிக அழகாக எழுதியிருக்கிறார்.  இறுதியில் 1975 ல், சிக்கிம், இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்தது. சிக்கிம் எனும் ஒரு தனித்துவ  நாகரீகம், சீனம் என்னும் ஆக்கிரமிப்புச் சக்தியின் பார்வையில் இருந்து காக்கப் பட்டது இப்படித்தான்.
இதே போன்று, பல அதிகாரிகளின் பங்கு – உகாண்டாவில் இடி அமீனின் காலத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட துயரம், ஃபிஜித் தீவுகள் பிரச்சினை, இலங்கை, நேபாள் எனப் பல நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளும் அதை வெளியுறவுத்துறை அதிகாரிகள் கையாண்ட விதமும் அழகாக எழுதப் பட்டிருக்கின்றன. இதில் லேசான விமர்சனப் பார்வைகளும் உண்டு. எப்படி, ஷிம்லா ஒப்பந்தத்தின் போது, புட்டோ நம்மை ஏமாற்றினார்.. பின்னர் வரலாற்றில் மீண்டும் முஷாரஃப் அதையே செய்தார் என்றும்.
ஜவஹர்லால் என்னும் மாமனிதர், தன் வசீகரமான ஆளுமையால், உலகின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அதன் விளைவுகள் பல நேர்மறையாகவும், சில எதிர்மறையாகவும் இருந்தன என்பதைப் புத்தகம் மிகச் சுவாரஸ்யமாக விளக்குகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், ரஷ்யாவுடனான தனது தொடர்புகளை உபயோகித்து, ரஷ்யாவை, ஆஸ்திரியா நாட்டை விட்டு விலகச் செய்தார் என்பது வியப்பூட்டும் தகவல். ஆனால், அதே சமயம், அவரின் ஆளுமையின் வசீகரத்தில் மூழ்கி, நேரு சொன்னால் எல்லாம் சரியாக இருக்கும் என்றடங்கி, சரியான பார்வைகளைச் சொல்லாமல் இருந்தது, சீனாவுடனான நம் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அலசுகிறார் ஜகத் மேத்தா. பாரதம் எல்லோருக்கும் சம உரிமை என்னும் குறிக்கோளில் இயங்கும் ஒரு தேசம். ஆனால், சீனம், ஒரு ஆக்கிரமிப்பு மனநிலை கொண்ட ஒரு தேசம் என்றும், இது பற்றிய ஒரு சரியான, நடைமுறைப் புரிதல் இருந்திருந்தால், சீனாவுடனான உறவு வேறு மாதிரி இருந்திருக்கும் எனக் கூறுகிறார் மேத்தா. உண்மை எனத் தோன்றுகிறது.
இன்று இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் ஒரு நாடு. இன்று இந்தியப் பிரதமர் உலகின் முக்கியமான தலைவராக மதிக்கப் படுவது இயல்பு. ஆனால், 40-50களில், இந்தியா உணவுக்காக உலகில் கையேந்தி நின்ற தேசம். அதன் பிரதமர் உலகின் முக்கிய தலைவராக இருந்ததும், உலக அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்தியதும், அந்த ஆளுமையின் மேன்மையே அன்றி அவர் முன்னேடுத்துச் சென்ற அரசியலா?  எதுவாயினென்ன, இப்புத்தத்தின் ஊடாக வெளிப்படும் ஜவஹர்லால், மனதுக்கு இன்னும் அண்மையானவராகிறார்.
ஆஸ்திரியாவுக்குத் தூதராகச் செல்லும் தலாலுக்கு, தனக்கு முக்கியமான மூன்று பணிகளைச் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார் பிரதமர் இந்திரா காந்தி. ஒன்று காந்தியின் அணுக்கத் தொண்டரான மீரா பென், ஆஸ்திரியாவில், முதுமையில் தனியாக வாழ்கிறார். அவரைத் தொந்தரவு செய்யாமல், அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். இரண்டு நேதாஜியின் துணைவி,  எமிலியும் தனியே வசிக்கிறார். அவருக்குத் தேவையான உதவிகள், வெளியில் தெரியாமல் செய்ய வேண்டும் (ஏனெனில், நேதாஜியின் உறவினர்கள், எமிலியுடனான உறவை விரும்பவில்லை. தெரிந்தால் பிரச்சினைகள் வரும்). மூன்று, ஆஸ்திரியாவின் பிரதமர், நேருவின் நண்பர். நெருக்கடி காலத்தில், மனக் கசப்பு கொண்டு இந்திராவுடனான தொடர்பைத் துண்டித்து விட்டார். அவரிடம் பிரதமரின் தன்னிலை விளக்கத்தை சொல்லி, சூழல் மாறிவிட்டது என்பதையும் சொல்ல வேண்டும். மூன்றையும் செவ்வனே செய்து முடிக்கிறார் . கட்டுரை முடிவில், இந்திரா காந்தி என்னும் ஆளுமையின் மென்மையான பக்கம் நமக்குக் காணக் கிடைக்கிறது.
இப்புத்தகத்தில், சுதந்திரம் பெற்ற பின் நடந்த மிக முக்கியமான பல நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும், பங்களா தேஷ் விடுதலை, ரஷ்யா சிதறிய வரலாறு போன்ற நிகழ்வுகள் இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. இவை இரண்டுமே  இந்திய வரலாற்றுக்கு மிக நெருக்கமான  நிகழ்வுகளாகும். ரஷ்யா சிதறிய போது, இந்தியாவும் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. பாரதத்தின் இறையாண்மைக்கு மிகப் பெரும் ஆபத்து இருந்த காலம். ரஷ்யா வீழந்ததை, பாரதம் எவ்வாறு எதிர் கொண்டது என்பது தெரிய வேண்டிய வரலாறு.
புத்தகத்தின் இறுதிக் கட்டுரை – உண்மையான சினிமா உச்ச கட்டக் காட்சி போல இருக்கிறது.  பி.வி.நரசிம்ம ராவின் வழிகாட்டுதலில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் ப்ரபாகர் மேனனின் கட்டுரை.  1991 ல் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் துவங்கி வைத்தவர் – அதை செய்ய மன்மோகன் சிங்கிற்கு முழு ஆதரவையும், அதிகாரத்தையும் அளித்தவர் என்பதான ஒரு பிம்பம் மட்டுமே இருக்கிறது. மிகச் சமீபத்தில்,  மன்மோகன் சிங்கின் முன்னாள் பத்திரிகைத் தொடர்பாளர் – அந்தச் சீர்திருத்தத்தை, தொழில் மந்திரியாக (அப்போது தொழில்துறை அவரின் கீழ் இருந்தது) முன்னின்று செய்தவர் நரசிம்ம ராவ் என்பதைச் சொல்லும் ஒரு முக்கியமான கட்டுரை வனைந்திருந்தார்.
அதே காலகட்டத்தில், ராவ்,  Look East  என்னும் மிக முக்கிய கருதுகோளை முன் வைத்து, பர்மா, மலேசியா, கொரியா, தாய்லாந்த், வியத்நாம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடனான உறவை மேம்படுத்தினார். முள்ளின் மேல் நடப்பது போல் நடந்து, அரபு நாடுகளைப் பகைத்துக் கொள்ளாமல், இஸ்ரேலுடனான உறவை ஏற்படுத்தினார். அதற்கு முன்பு, அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தின் அனுபவங்களோடு, தனது ஆழ்ந்த அரசியல் அறிவையும், உலகம் செல்லும் போக்கையும் கணித்த ஒரு பெரும் ராஜதந்திரியாக நரசிம்ம ராவ் இந்தக் கட்டுரையினூடே வெளிப்படுகிறார். நேருவுக்குப் பின்னான காலகட்டத்தில், உலக அரங்கில் பாரதத்தின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரும் பாய்ச்சல் இக்காலகட்டத்தில் நடந்திருக்கிறது. நுட்பமாக வெளிப்படும் அவரது புத்திசாலித்தனதையும், நகைச்சுவை உணர்வையும் கண்டு வியந்த சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான்,  நரசிம்ம ராவ் போன்ற பெருந்தலைவர்கள் உலகில் மிக அரிது எனக் குறிப்பிட்டார்.
1991 ல் பாரதம் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்த காலத்தில், உலகில் பல நாடுகள் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டன. அர்ஜெண்டினா போன்ற நாடுகள் பெரும் பண வீக்கத்தால் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தின. ரஷ்யா பல சிறு நாடுகளாக வெடித்துச் சிதறி, உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்தது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம், மக்களை நேரடியாக அவதிக்குள்ளாக்கவில்லை.  படிப்படையாக ஏழ்மை குறைந்து, நாடு வளமுற்றது.  இதை ”மத்திமப் பாதை” என்னும் பெயரில், டாவோஸில் நடந்த வருடாந்திரப் பொருளாதார உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் முன் வைத்தார்.  அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து பொருளாதாரத்தை விடுவிக்கும் அதே சமயம், சுதந்திரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களில் சிக்கி பெரும்பாலான மக்கள் அவதிப்படாமல் இருக்க, பின்புலமாக அரசின் அணைத்துச் செல்லும் கரம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குப் பொருத்தமான வழியாக இதை முன் வைத்தார்.
தனது முன்னோடிகளான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் போன்ற ஆளுமைகளின் பால் மதிப்பும், அவர்களின் பணியை முன்னெடுத்துச் செல்லும் ஒரு ஆளுமையாகவும் நரசிம்மராவ் இக்கட்டுரையின் வெளிப்படுகிறார். இந்தியாவின் அரசியல், பொருளாதார வெளியுறவுத் துறைகளில், இதுகாறும் செய்யப் பட்ட பணிகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைக் காலத்திற்கேற்ப நவீனமாக மாற்றி, ஆனால் அதே சமயம், அந்தப் பாதையின் இறுதி இலக்கை மாற்றாமல், வெற்றிகரமாக, நுட்பமாக, அமைதியாகச் செயல்பட்டவர் ராவ்.  அதன் மீது வெளியுறவுத்துறை அதிகாரிகள் மிகுந்த மரியாதை வைத்திருப்பதன் வெளிப்பாடாக இந்தக் கட்டுரை வந்திருக்கிறது.  இந்தப் புத்தகத்தின் மிகச் சிறந்த கட்டுரை இது.

புத்தகத் தலைப்பு:  Ambassadors’ Club (ஆங்கிலம்)
தொகுப்பு:  க்ருஷ்ணா ராஜன்
முன்னுரை: ஷிவ் ஷங்கர் மேனன்
வெளியீடு:  ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இந்தியா
விலை: 599