பெர்ஸோனா என்னும் பயனர் ஆளுமை

பயனர் அனுபவம் (User Experience) பற்றி எங்கெல்லாம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் பெர்ஸோனா (persona) என்கிற பதம் காதில் விழுந்துகொண்டேயிருக்கும். ரெக்ஸோனா சோப்பு தெரியும் அதென்ன பெர்ஸோனா என்று கேட்கிறீர்களா? இதோ இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.
பயனர்களை மையப்படுத்திய வடிவமைப்பில் (User Centered Design) பெர்ஸோனாக்கள் என்பது பயனர்களின் பல வகைகளை பிரதிநிதித்துவம் செய்யும் வெறும் கற்பனைப் பாத்திரங்கள் ஆகும். இதை இன்னும் எளிதாகப் புரியவைக்க முயற்சிக்கிறேன். எந்த ஒரு வலைத்தளம் ஆனாலும் அதை உபயோகிக்கிற பயனர்கள் பலவகைப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆகவே அந்த வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனர்கள் இப்படியிருப்பார்கள் என்று ஒரு கற்பனையான பாத்திரத்தை (fictional character) பயனர் அனுபவ வல்லுநர்கள் உருவாக்குவார்கள். அந்தக் கற்பனைப் பாத்திரம்தான் பெர்ஸோனா என்றழைக்கப்படுகிறது,
ஒரு உண்மையான பயனர் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தை இயக்கும்போது என்னெல்லாம் சிந்திப்பார், என்ன எதிர்பார்ப்பார், அவருக்கு என்னெல்லாம் தெரியும், அவரது கல்வி அறிவு என்ன, அவர் அந்த வலைத்தளத்தில் என்ன செய்ய விரும்புகிறார் என்பதையெல்லாம் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தப் பெர்ஸோனாவானது உருவாக்கப்படுகிறது. அம்மாதிரியாக உருவாக்கப்பட்ட ஒரு பெர்ஸோனா ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும்போது இந்த கருத்தாக்கம் உங்களுக்கு நன்றாகப் புரியும்.
persona1

(பட உதவி: http://ucgd.com.au/

மேலுள்ள படத்தில் உள்ள பெர்ஸோனாவானது மிக எளிமையானது. இதைவிட அதிக விரிவாக உருவாக்கப்பட்ட பெர்ஸோனாக்களும் உண்டு. இவ்வகை பெர்ஸோனாவில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் கற்பனைதான் என்றாலும், இது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்படுவது அல்ல. ஒரு வலைத்தளம் அல்லது ஒரு மென்பொருள் அல்லது ஒரு மொபைல் செயலியை உபயோகிக்கும் பயனர் விவரங்கள், அதை அவர்கள் உபயோகிக்கும் சூழ்நிலைகள், அதைப் பயன்படுத்தி பயனர் செய்யும் செயல்கள் ஆகிவற்றைப் பற்றிய ஆராய்சிகள் மூலமாகக் கிடைத்த விவரங்களுடன் கொஞ்சம் லேசான கற்பனை இரண்டு சிட்டிகை சேர்த்து உருவாக்கப்படுகிறது. கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக ஏதாவது புகைப்படம் ஒன்றையும் இத்தோடு இணைத்துக்கொள்ளலாம். (புகைப்படத்தைப் பார்த்தவுடனே பயனரின் சராசரி வயது பற்றிக் கணிப்பதற்கு அது உதவும்).
இந்த மாதிரியான பெர்ஸோனாக்களை உருவாக்குவது மிக சுவாரஸ்யமான விஷயம். பயனர்களைப் பற்றிய ஒரு பொதுவான புரிதலைத் தரும் இந்த பெர்ஸோனாக்கள் ஒரு பயனரின் வயது, தொழில், அவர் என்ன செய்கிறார், என்ன படித்திருக்கிறார், அவரது கணினி அறிவு என்ன? வாழ்க்கை பற்றிய அவரது பார்வை, அவரது பொழுதுபோக்கு என்ன? என பலவகையான விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த பெர்ஸோனாக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்று பார்ப்போம்.
வலைத்தளங்களுக்கு பயனர் அனுவத்தை வடிவமைத்தலில் மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால் அது பயனர்கள் பற்றிய ஆராய்ச்சியே.
யாரைக் குறிவைத்து ஒரு வலைத்தளம் உருவாக்கப்படுகிறதோ (Target Audience) அந்த உண்மையான பயனர்களில் குறிப்பிட்டத்தக்க அளவு நபர்களை நேர்முகம் கண்டு அவரைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த விவரங்கள்தான் பெர்ஸோனாக்களை உருவாக்குவதற்கான அஸ்திவாரம்.
பிறகு இப்படிச் சேகரிக்கப்பட்ட பயனர்களின் விவரங்களில் அவர்கள் பற்றிய பொதுவான அம்சங்கள் என்னென்ன என்பது அலசி ஆராயப்படும்,
பிறகு ஒரே மாதிரியான பயனர் வகைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் தனித்தனிக் குழுக்களாகப் பிரித்துக்கொள்வார்கள். இந்தக் குழுக்களை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பயனர் வகையும் தீர்மானிக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கென்று தனித்தனியாக பெர்ஸோனா கோப்புகள் உருவாக்கப்படும்.
persona2

(பட உதவி: https://www.pixelparlour.co.uk/wp-content/uploads/2013/07/cartoon-user-faces.jpg

இந்த பெர்ஸோனா கோப்பானது குறிப்பிட்ட வலைதள வடிவமைப்பில் சம்பந்தப்பட்டிருக்கும் வடிவமைப்புக்குழு (Design Team), மென்பொருள் உருவாக்கக்குழு (Software development Team) என அனைவருக்கும் பகிரப்பட்டு, விளக்கப்படும். பின்னர் அனைவராலும் இது மென்பொருள் / வலைதள உருவாக்கக் காலகட்டத்தில் இடைவிடாமல் பின்பற்றப்படவேண்டும். ஏனென்றால் பயனர் அனுபவத்திற்கான அடிப்படையானதும், இன்றியமையாததும் ஆன விஷயங்களில் இதுவும் ஒன்று.
சாதாரணமாக இந்த பெர்ஸோனா என்பது அதிகபட்சம் ஒரு பக்க அளவு கோப்பாக இருக்கும். பயனர் அனுபவ வடிவமைப்பாளர்கள் அவர்களுடைய தேவைகள் மற்றும் எண்ணங்கள் அடிப்படையில் அவர்கள் நினைக்கிற மாதிரியான பெர்ஸோனா கோப்பை உருவாக்கிக்கொள்ள இயலும் என்றாலும், இந்த பெர்ஸோனாக்களை உருவாக்க டெம்ப்ளேட்டுகளும் (Template) கிடைக்கின்றன. அவற்றை முன்மாதிரியாக வைத்து கூட பெர்ஸோனா கோப்பைத் தயாரித்துக்கொள்ள முடியும். இதற்கான ஒரு சாம்பிள் பக்கம் இங்கே -> https://creativecompanion.wordpress.com/2011/05/05/the-persona-core-poster/
ஒரு வலைத்தள வடிவமைப்பின் போதும், அதில் பயனர் அனுபவத்தை நயம்படக் கோர்க்கும்போதும், திரும்பத் திரும்ப இந்த பெர்ஸோனாவை மனதில் நிறுத்திக்கொள்வது, எந்த ஒரு குறிப்பிட்ட பயனர்களுக்காக அந்த வலைதளம் உருவாக்கப்படுகிறதோ, அவர்களுக்கான தேவைகளை, எதிர்பார்ப்புகளை, சிறந்த பயன்பாட்டுத்திறனோடு (Usability) அதில் தரமுடியும். உண்மையான பயனர்களும் மிகச் சிறந்த பயனர் அனுபவத்தைப் பெறுவார்கள்.
இந்த பெர்ஸோனாக்களை உருவாக்குதல் என்பது முதன் முதலாக மார்க்கெட்டிங் பயன்பாட்டிற்காகத்தான் செய்யப்பட்டது. ஒரு பொருளை சந்தைப் படுத்துதலின் போது அதை உபயோகிக்கிற பயனர்களின் பொதுவான தேவைகளும் ஆசைகளும் என்னென்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறபோது பயனரின் மாதிரி ப்ரொபைல் ஒன்றை இதுமாதிரி தயாரித்து உபயோகிப்பது வழக்கமாக இருந்தது. இன்று இப்போது பயனர் அனுபவத்திலும், பயனர்களை மையப்படுத்திச் செய்யப்படும் வடிவமைப்புகளிலும் (User Centered Design) இந்தப் பெர்ஸோனாக்களை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டதுடன் இந்த உத்தி மென்பொருள் துறையில் மிகவும் பரவலாகவும் ஆகிவிட்டது. இதற்கு பெர்ஸோனா என்று பெயரிட்டு அழைத்து இதைப் பரவலாக்கியவர் ஆலன் கூப்பர் என்பவர்.
ஒரு வலைத்தளமோ அல்லது வேறு ஏதாவது தயாரிப்பு சாதனமாகவே இருந்தாலும்கூட அதை உபயோகிக்கிற பயனர்களிலும் சில வகைகள் இருப்பார்கள். உதாரணத்திற்கு ஏதாவது ஒரு மென்பொருளை எடுத்துக்கொள்வோம். அதை உபயோகிக்கிற பயனர்களில் சாதாரண பயனர்களும் இருப்பார்கள். அல்லது அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் எனப்படும் அவ்வலைத்தளத்தை நிர்வகிப்பவர்களும் இருப்பார்கள். அவர்களும் ஒரு விதமான பயனர்கள்தான். ஆகவே ஒவ்வொரு வகையான பயனர்களுக்கும் ஒவ்வொரு விதமான பெர்ஸோனாக்களை உருவாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு வலைத்தளத்திற்கோ, மென்பொருளுக்கோ ஒரே ஒரு பெர்ஸோனாதான் இருக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. சிலசமயம் பெர்ஸோனாக்கள் ஒன்றுக்கு மேற்பட்டதாகவும் இருக்கலாம்.
அதேபோல ஒரு பெர்ஸோனாவை உருவாக்கும்போது, பயனர்கள் பற்றிய ஆராய்ச்சித் தகவல்களை ஊன்றிக் கவனித்து, நன்றாக அலசி, இதுதான் என்கிறபடி ஒரு உறுதியான அறுதியான பெர்ஸோனாவாக அதை உருவாக்கிவைத்துக்கொள்வது நலம் பயக்கும். இல்லையேல் அந்த வலைத்தளம் அல்லது மென்பொருளின் உருவாக்கப் பணிகளின் போது இடையில் குழப்பங்கள் ஏற்பட நேரிடும். ஆகவே கொஞ்சம்கூட மாற்றத்துக்கு இடமளிக்காதவாறு அந்த பெர்ஸோனாவானது உறுதியானதாக ஒரு உண்மையான பயனரை எல்லாவிதத்திலும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.
சுருங்கச் சொன்னால் இந்த பெர்ஸோனா என்பது ஒரு பயனரின் ஆளுமை. முந்தைய அத்தியாயத்தில் சொல்லப்பட்ட ’பயனரின் மனநிலை மாதிரி’ யுடன் (Mental model) எல்லாவிதத்திலும் தொடர்புடையது. ஒரு வலைத்தளத்தை உபயோகிக்கும்போது இருக்கும் பயனரின் மனோபாவத்தை இது கோட்டிட்டுக் காட்டும். அவர்களின் முடிவெடுக்கும் திறன், தொழில்நுட்பம் பற்றிய பயனரின் பார்வை மற்றும் அணுகுமுறை, வாழ்வியல் முறை பற்றிய தெரிவுகள், தெளிவுகள், அவர்களின் அன்றாட பொதுவான நடவடிக்கைகள், வழக்கங்கள் என எல்லாவற்றையும் தெளிவான முறையில் காட்சிப்படுத்துவதாக அது இருக்கும். அது தவிர பயனர்கள் வாழும் பிராந்தியம் பற்றிய குறிப்புகளையும் கொண்டதுதான் இந்தப் பெர்ஸோனா.
ஒரு பெரிய மென்பொருள் அல்லது வலைத்தள வடிவமைப்பில் இந்த மாதிரி பெர்ஸோனாக்களை உபயோகிப்பது ஒரு சிறந்த பயனர் அனுபவத்திற்கு பேருதவியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதும் அதே வேளையில் அனைவரும் வடிவமைப்புத் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சில வல்லுநர்கள் இதையெல்லாம் உபயோகிப்பது தேவையில்லாத விஷயம் என்றுகூட வாதாடி வருகிறார்கள். எது எப்படியோ பயனர் அனுபவத்திலும், பயனர் சார்ந்த வடிவமைப்பிலும் ஆக அதிகபட்சம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்துவருகிறது இந்த பெர்ஸோனா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.