சீன மொழிக் கவிதை உலகம் : ஓர் அறிமுகம்     

libai
கவிதை என்ற வடிவம் சீன மொழியில் தொடக்க காலம் முதலே இருந்து வந்திருக்கிறது.குறிப்பாகச் சொன்னால் சீன கவிதை வரலாறு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது என அதன் வரலாறு விரிவாக்கத்தை  இலக்கியத் திறனாய்வாளர்கள் வெளிப் படுத்துகின்றனர். சீனக் கவிதைகள் பாரம்பரியம்,நவீனம் என்ற இரு பெரும் வகைகளில் வகைப் படுத்தப் படுகின்றன.நாட்டுப் புறப் பின்பிலம் கொண்டவையாக உள்ளன.தொடக்க காலக் கவிதைகள் ஶி சிங் என்ற பெயரில் அமைந்தன.ஶி கிங் என்பதுதான் அங்கு முதலில் அறியப் பட்ட வடிவமாகும்.இதற்கு பாரம்பரியக் கவிதைகள் என்பது பொருளாகும்.ஶி சிங் என்பதை ஆங்கிலத்தில்  Book Of Songs   என்று அழைக்கின்றனர். அவை அளவில் தமக்குள் மாறுபட்டவை
சீன மொழியின் கவிதைகள் பல ஆயிரக் கணக்கான ஆண்டு பழமையானவை என்றாலும் அவை இன்றும் புதியதாகவும், நவீனமாகவும் உள்ளதன் காரணம் அம்மொழியில் மாற்றம் என்பது மிகச் சிறிய அளவில் நிகழ்ந்து இருப்பதுதான் என்கின்றனர் திறனாய்வாளர்கள்..
சீனக் கவிஞர்கள் பெரும்பாலும்  சுருக்கம், பாத்திரங் களின் சிந்தனை அபிப்ராயம்,  ஆகியவற்றைத் தம் கவிதைகளின் கூறுகளாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கவிதையின் முறையான இலக்கணம் முக்கியமில்லை. சீர் பிரமானம், மற்றும் பாத்திரங்களின் உருவாக்கம் ஆகியவற்றுக்கு முதன்மை தந்திருக் கின்றனர்.
.க்யு,யுவான், வாங் வீ, லி பை, டியு ப்பூ, சு ஶி, பாய் ஜுயி என்று கவிஞர் பரம்பரை நீண்ட வரிசை உடையது.
 

சீன மொழிக் கவிதைகள்:
மூலம்             :  லி பை
ஆங்கிலவழி       :  விக்ரம் சேத்
தமிழில்           :  தி.இரா.மீனா
லி பை சீன மொழி இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக மதிப்பிடப் படுபவர்.ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதியவர்.கவிதைகளின் மிக உயர்ந்த கறபனைத் திறத்திற்காக எல்லோராலும் அறியப் பட்டவர். நட்பு,இயற்கையின் செறிவு,தனிமையின்  தன்மை என்று பல  கருக்களை கவிதைப் பொருளாக்கிக் கொண்டவர்.  டாங் வம்ச கால கட்டம்  சீன இலக்கியத்தின் ’ பொற்காலம் ’என்று மதிப்பிடப் படுகிறது. லி பை அக்கால கட்டத்தைச் சேர்ந்தவர். என்பது குறிப்பிடத் தக்கது
 

நிலவோடு தனிமையில் குடிக்கிறேன்…

பூக்களின் மத்தியில் ஒரு குவளை திராட்சைரசம்
நான் தனியாகக் குடிக்கிறேன் ; எந்த நண்பனும் அருகில் இல்லை
கோப்பையை உயர்த்தி நிலாவை அழைக்கிறேன்
நிலா என்நிழல் நான் என்று மூவராக்கினேன்,
 
நிலாவுக்கு எப்படிக் குடிப்பதென்று தெரியாது
என்நிழல் துள்ளி என்னைப் பார்த்து அபிநயிக்கிறது
ஆனால் நான் இருவரையும்  மகிழ்ச்சிப் படுத்துவேன்
அங்கு  விரைவில் வசந்தம் வரும்.
 
நான் பாடுகிறேன் நிலா வந்தும் போயுமாய்..
நான் ஆடுகிறேன் என்நிழல் பாய்ந்தும் தள்ளாடியும்..
இன்னமும் மயக்கம் இல்லாமல் ..மகிழ்ச்சியைப் பகிர்கிறோம்
குடித்தபிறகு அவரவர் பாதையில் நாங்கள்..
 
மனிதக் கட்டுமானங்களை மீறி நண்பர்களாக  இருக்க
உறுதியெடுப்போம்
பால்வீதி முடியும் இடத்தில் சந்திப்போம்
 

oOo

 ஓர் அமைதி இரவில்…

படுக்கைக்கு முன்னால் உள்ள தரை பிரகாசமாய் இருக்கிறது
நிலா வெளிச்சம் உறைந்த பனியாய் என் அறையில்
தலை தூக்கி நிலாவைப் பார்க்கிறேன்
தலைகுனிந்து வீட்டிற்காய் ஏங்குகிறேன்.
 

oOo