ஓகே கண்மணி: உரையாடல்

ok-kanmani-Bangaram_Kaadhal_Nitya_Menon_DK_Salman_Mani_Ratnam_Rehman

விதூஷகன் : வாட்ஸப் செய்தி!

தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் – அலைபாயுதே
தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் – ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் – மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் – ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் – கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் – நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் – அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் – திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் – ரோஜா
இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் – தளபதி
ரத்னம் ‘டா’ … ’மணிரத்னம்’ டா

தேவந்தி : இந்தப் படம் வந்து ஒரு மாசத்திற்கு மேல் ஆகப் போகிறதே! இணையம் இல்லாத காட்டில் இருக்கிறவ, போன வாரத்து டிவிட்டர் முகப்பை பார்க்கிற மாதிரி, பழங்கஞ்சியா இருக்கே…
பூதம் : மணி ரத்னம் மட்டும் புதுசாவா படம் எடுக்கிறார்? அவரும் பழங்கஞ்சிதானே ஊத்தறார்!
சிக்கி : நான் படம் பாத்துட்டேன். அலுவலில் அல்லது பள்ளிகளில் இரண்டு விதமான நபர்களைப் பார்க்கலாம். ஒரு சாரார் ஆண்டிராய்ட் திறன்பேசிகளே தெய்வம் என்பார்கள். இவர்களுக்கு எல்லா நுணுக்கங்களையும் முழுமையாக ஆராய வேண்டும். எல்லாவற்றையும் பிடுங்கி, உள் சென்று, ஆராய்ந்து, மாற்றிப் பார்க்க வேண்டும். மொத்த திறன்பேசியும் விதவிதமாக ஆக்க வேண்டும். இன்னொரு சாரார் என்னுடைய மகள் மாதிரி. ஐஃபோன் மட்டுமே பயன்படுத்துவார்கள். எளிமையாக இருக்க வேண்டும். எந்தவிதப் பிரச்சினையும் வரக் கூடாது. மின்கலம் எல்லாம் உருவி, தூசி தட்டாமல், அப்படியே மேனாமினுக்கியாக பளபளக்க வேண்டும்.
பேராசிரியர் கேசவன் : என்னப்பா… என்னை மாதிரி நீட்டி முழக்கிற! விஷயத்திற்கு வா.
சிக்கி : ஒ.கே. கண்மணி இரண்டாம் ரகம். ஐஃபோன் பிரியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி விஷயங்கள்தான் படம் முழுக்க உலா வரும். ஐஃபோனில் எல்லாமே வழுக்கிக் கொண்டு போகுமாறு அமைத்திருப்பார்கள். உயர்தர appகளை மூன்றாவது தரப்பைக் கொண்டு வழங்குவார்கள். ஓ… காதல் கண்மணியில் அந்த விஷயங்கள் எல்லாம் செமையாக உருவாக்க ஏ.ஆர் ரெஹ்மான், பி.சி. ஸ்ரீராம் போன்ற மூன்றாவது தரப்பு கட்டமைக்கிறது. காதுக்கினிய இசை, கண்ணுக்கினிய ஒளிப்பதிவு, சிந்திக்கவேத் தேவைப்படாத இடைமுகம் போல் ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு – எல்லாம் எளிமைவிரும்பிகளுக்கு, இந்தக்கால ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு சொர்க்கம்.
ஜேம்ஸ் : அப்படி எல்லாம் எளிமையாக்கத் தேவை இல்லை. படத்தில் பல அடுக்குகள் இருக்கின்றன. இந்தப் படத்தை பெண்ணியம் பேசும் படமாகப் பார்க்கலாம்.
பூதம் : நீங்க விட்டாக்க, ‘நிர்பயா’ விஷயத்தைத்தான் இந்தப் படம் முன்னிறுத்துகிறது என்று நிலை நிறுத்துவீர்கள் போல இருக்கிறதே! படத்தில் நிறைய பேருந்து காட்சிகள் வருகின்றன. தாரா (நித்யா மேனன்) மட்டும் தனியாகப் பேருந்தில் பயணிக்கிறாள். சில சமயம் ஆதித்யாவுடன் (துல்கர் சல்மான்) பயணம் செய்கிறாள். அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. டெல்லியை விட மும்பையில் பெண்ணுரிமையும் சுதந்திரமும் நன்றாக இருக்கிறது என்பதைப் படம் சுட்டுகிறதோ!?
ஜேம்ஸ் : அப்படி இல்லை. மூன்று விஷயங்களை எடுத்துக்கலாம். பெண்ணியத்தின் முக்கியமான பேசுபொருள் ‘குழந்தைகளைப் பெற்றெடுப்பது’.
சிக்கி : அட… ஆமாம். இந்தப் படத்தில் கணபதி (பிரகாஷ்ராஜ்) – பவானி (லீலா சாம்ஸன்) தம்பதிக்கு பிள்ளைகள் இருப்பதாகக் காட்டவில்லை. சேர்ந்து வாழ விரும்புவது கூட மகவுகள் இல்லாத சுதந்திர உலகத்தைக் குறிப்பதாக நினைக்கிறேன்.
பேராசிரியர் கேசவன் : குழந்தை வளர்ப்பு என்பது அம்மாக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட தொகுதி. இந்தப் படத்தில் கூட தாராவின் தாயார் மட்டுமே, தாராவை வளர்க்கிறார். தனக்கு விவாகரத்து ஆனாலும், மகளை வளர்ப்பது தாயுடைய பொறுப்பாக இருந்திருக்கிறது.
சிக்கி : பெயர்களில் கூட சூட்சுமம் இருக்கிறது. ’தளபதி’ திரைப்படத்தில் அர்ஜுன் (அர்விந்த்சாமி) – சூர்யா (ரஜினி) என்பது புகழ்பெற்றது. அதே போல், இங்கே மகன் கணபதி, தாய் பவானியைப் பார்த்துக் கொள்கிறார். வயதான காலத்தில், மூப்படைந்த அன்னையை, மகன் கவனித்துக் கொள்வது என்பது இந்து மதத் தொன்மம். இங்கே, அந்தத் தொன்மத்தை கணவன் கணபதிக்கும் மனைவி பவானிக்கும் பொருத்தி இருக்கிறார்கள்.
தேவந்தி : நீங்க சொல்லுறது பல்லி உச்சுக் கொட்டினவுடன் பல்லியை விரட்டத் தெரியாத வீரன், பல்லி ஜோசியம் கண்டுபிடிச்ச கதையா இருக்கு. குறியீடு என்று செமையா டகால்டி விடறீங்க.
பேராசிரியர் கேசவன் : நீங்க சொல்லுறது உண்மை. பெண் என்றால் தனியாக இருக்கலாம். கொழுகொம்பு தேடாமல் சுயம்புவாக விளங்கலாம். அதை விட்டுட்டு, ’உன் கூட இருக்கிறேன்… நீ இல்லாம வாழ முடியாது’ என்பதெல்லாம் ஐ.எஸ்.ஓ. போல் பழைய அக்மார்க். இதை ஒட்டிய All the Single Ladies என்னும் அட்லாண்டிக் கட்டுரையை வாசிக்கலாம்.
பூதம் : இது என்ன கொடுமை! ஆண்கள் இரண்டு வகைப்படும் என்கிறார்கள். எப்பொழுது பார்த்தாலும் வீடியோ விளையாட்டுகளில் மூழ்கிக் கிடப்பவர் ஒரு புறம் என்கிறார்கள். இன்னொரு புறம் பெண்களின் சம்பாத்தியத்தில் காலந்தள்ளும் வேலையற்ற புருஷர்கள் என்கிறார்கள்.
தேவந்தி : ஒகே கண்மணி படத்தில் கூட சொத்திற்கு ஆசைப்படும் காதலர்களைக் கண்டு தாரா மணவாழ்வை வெறுப்பதாகச் சொல்கிறார்கள். பொறுப்பற்ற தந்தையைப் பார்த்தும் கொஞ்சம் போல் ஆண்கள் மேலும் திருமணம் மீதும் கடுப்பும் ஏமாற்றமும் அசூயையும் வந்திருக்கலாம்.
பூதம் : அப்படியெல்லாம் பார்த்தால் தற்பால் விரும்பியாகத்தான் மாறி இருக்க வேண்டும்!
ஜேம்ஸ் : பிள்ளைப் பெற்றுக் கொள்வதை எதிர்ப்பது பெண்ணியம் என்றால், பெண்ணியத்தின் அடுத்த கட்டம் என்பது காமத்தை எதிர்கொள்வது. பாலுறவு வைத்துக் கொள்வதற்காகவே திருமணம் செய்து கொள்கிறோம் என்று கருதினால், பாலுறவும் சிகரெட் போல், தண்ணியடிப்பது போல், போதைப் பழக்கம் ஆகி விடுகிறது. அதை மீறி, அந்தப் பழக்கத்தை விட்டு விலகுவது எப்படி? இதைக் குறித்து மேலும் இங்கே படிங்க – Vivian Gornick’s Odd Woman and The City: Review | The New Republic | Vivian Gornick and the pursuit of an uncoupled life
பூதம் : நீங்க எல்லாம் தேவையில்லாம யோசிக்கறீங்க. மணி ரத்னம் இந்த மாதிரி சிந்தித்து படம் எடுக்கிறவர் கிடையாது. அவருடைய மனதில் ‘இதுதான் பெண்! இப்படித்தான் காதலி இருக்கணும்!!’ என்று ஒரு ஆதர்சம் இருக்கிறது. அதுதான் திரும்ப திரும்ப, சாக்லேட் பிரியமாய், ஐஸ் க்ரீம் மழையாய், ராசாத்தியாக (திருடா திருடா – ஹீரா), ஷக்தியாக (அலைபாயுதே – ஷாலினி), இந்திராவாக (கன்னத்தில் முத்தமிட்டால் – சிம்ரன்) விதவிதமான நாயகிகளாக வெளிப்படுகிறது. இந்த மாதிரி சூட்டிகையான, செல்லமாகக் கொஞ்சும் பெண்களைப் படைப்பதால் ஆண்களுக்கும் மணி ரத்னத்தைப் பிடித்தே இருக்கிறது.
ஜேம்ஸ் : கடைசியாக ‘தனியாக வாழ்வது’. ஒகே காதல் கண்மணி படத்தின் முக்கிய விஷயமாக ‘லிவிங் டுகெதர்’ அடிபடுகிறது. ஆனால், நம்மால் தனிமையிலே இனிமை காண முடியுமா? அதுவும் பெண்ணால் தனியா வாழ்ந்து விட முடியுமா? இந்திய சமூகத்தில் இன்றும் வுமன்ஸ் ஹாஸ்டல் என்கிறார்கள்; பேயிங் கெஸ்ட் என்கிறார்கள். நாலைந்து பெண்கள் சேர்ந்து வீட்டை வாடகை எடுக்கிறார்கள். என்றாலும், பொருளாதார சுதந்திரம் அடைந்த பெண் ஒருத்தி, தனியாக வாழ இயலுகிறதா? தாராவின் தாயார் வாழ்வை வைத்துக் கூட இதைப் பார்க்கலாம். இதைப் பற்றி, இந்தக் கட்டுரை அலசுகிறது: Living Alone as Feminist Empowerment | Kate Bolick’s ‘Spinster’ Tackles the Gender Divide in Single Life | The New Republic
சிக்கி: நீங்க சொல்வதெல்லாம் பொதுவான பிரச்சினைகள்தான். பெண்களுக்கு மட்டும் தனிப்பட்டதாக எதுவுமே பார்க்க முடியாது. குழந்தை வளர்ப்பது, பாலுறவு இச்சையைத் தீர்த்துக் கொள்வது, தனியாக வாழ்வது என்பது எல்லோருக்கும் பொதுவானது.
விதூஷகன் : விட்டால், சோஷலிச சமநிலைச் சமரச சமுதாயமே இந்தியாவில் மலர்ந்து இருக்கிறது என்பீர்கள் போல் இருக்கிறதே!
சிக்கி : இந்தப் படம் ரொம்ப சுளுவானது. பாரம் சுமக்க விரும்பாத தலைமுறையைச் சொல்கிறது. நம்முடைய முந்தைய தலைமுறையிலும் அந்த மாதிரி தந்தையர்கள் இருந்து இருக்கிறார்கள். பதினெட்டு தொழிற்சாலைகளை நிர்வகிக்கத் திராணியில்லாத தாராவின் தந்தை வீட்டை விட்டு பயந்தோடி விடுகிறார். ஆனால், இந்தத் தலைமுறை அப்படி இல்லை சாதிக்க விரும்புகிறது. பணம் + புகழ் + அந்தஸ்து, என மூன்றும் தேவைப்படுகிறது.
தேவந்தி : சொந்த வாழ்க்கையைத் தவிர! ஜெனரேஷன் ’ஒய்’ எனப்படுபவர்களுக்கு மணமுடித்து, ஒரே ஒருத்தருடன் வாழ்நாள் முழுவதும் கழிக்க அச்சமாக இருக்கிறது.
சிக்கி : அதுவும் ஆதி கதாபாத்திரத்திற்கு, ஆண்களுக்கு நாளொரு பெண்டிரும், பொழுதொரு வர்த்தகமும் பிடித்து இருக்கிறது.
தேவந்தி : கட்டிடக் கலைஞராக தாரா விரும்புகிறாள். இரத்தமும் சதையுமாக என்பது போல், செங்கலும் சிமெண்டுமாக அடுக்கங்களைக் தரையின் மேல் கட்டுகிறாள். ஆதியோ விளையாட்டுகளை உருவாக்குபவன். சாகஸம் செய்கிறான்… எங்கே? நிஜத்தில் அல்ல! கற்பனை உலகில். கணினியில் கட்டுமானம் செய்கிறான்; கலைக்கிறான்; புதியதாக இன்னொரு விளையாட்டை ஆடத் துவங்குகிறான். எல்லாம் அநித்தியம் என்னும் வர்க்கம்.
பூதம் : என்னப்பா இது! ஜெயமோகன் எழுதிய ‘கடல்’ படத்திற்கு விமர்சனம் எழுதும் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட செயலாளர் போல் மணி ரத்னம் படத்தை இப்படி ஆராயறீங்களே!
விதூஷகன் : இந்தப் படத்தில் அவருடைய மகன் அஜிதன் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார் அல்லவா… அதனால்தான்.
தேவந்தி : எனக்கு இந்தப் பாடல் கூட ரொம்பப் பிடித்து இருந்தது:

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்

பூதம் : சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகையர் அவர்களே, இந்தப் பாடலையும், அதை எழுதிய வைரமுத்துவையும் பாராட்டி உள்ளதாக குமுதம் இதழில் கடிதம் வெளியானாலும் வெளியாகும்.
விதூஷகன் : (பாடுகிறான்) வந்தது தெரியும்! போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது!
தேவந்தி : ஓகே கண்மணி படம் முழுக்கவே வருவதும் போவதும் என்பதே மையக்கருத்தாக இருக்கிறது. ஆதியின் அண்ணன் குடும்பம் வருகிறது. தாராவின் தாய் வருகிறாள். ஆதி அமெரிக்கா போகிறான். தாரா ஃபிரான்ஸ் போகிறாள். பவானி எங்கே போகிறாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. அதனால், எல்லோரும் வீடு திரும்புகிறார்கள்.
ஜேம்ஸ் : பவானி என்றவுடன் நினைவிற்கு வருகிறது. இசையால் நினைவு தப்புவதை ஓரளவு தடுக்க முடியும். வீட்டிற்கு வந்தவுடன் தாரா தம்பூராவை எடுத்து மீட்டிக் கொண்டு பாடுகிறாள். அதைக் கேட்டவுடன் மூளைக்குறைவு நோயால் பாதிப்பட்டுக் கொண்டிருக்கும் பவானிக்கு பாந்தம் ஏற்படுகிறது. இதன் பின்னால் அறிவியலையும் மனிதவியலையும் அறிய: Can Music Help Keep Memory Alive? | Greater Good வாசிக்கலாம்.
பூதம் : ஒரு இத்துப் போன காதல் கதையில் அறிவியல் எல்லாம் கண்டுபிடிக்க உங்களால்தான் இயலும். இரண்டு அப்பழுக்கற்ற அட்டகாசமான இளைஞர்கள், live-in relationship-இல் இருப்பது ஒரு கதையா? கடைசியில், பிரியக் கூட இல்லை! துல்கர் சல்மானை அரவிந்த்சாமி v. 2.0 ஆக்கியதும் வருத்தத்திற்குரிய விஷயம். லிவ்-இன் தமிழ் சினிமாவிற்கு அப்படிப் புதிய விஷயம் இல்லை. ‘பிஸ்ஸா’ படத்தில் சாதாரணமாக கதை துவக்கத்திலேயே ஆர்ப்பாட்டமில்லாமல் காட்டிவிட்டார்கள். ‘ஜபோங்க்’ இணையதள விளம்பரத்தில், 20 நொடிகளில் காட்டுகிறார்கள்.
தேவந்தி : கதை அவர்கள் சேர்ந்து வாழ்வதைப் பற்றி இல்லை – அந்த மாதிரி ஏன் நினைக்கிறீர்கள்? முந்தைய தலைமுறையில் தோற்றுப் போன அல்லது அர்த்தமற்ற தாம்பத்தியங்களைப் பார்த்து பயம். அப்புறம் இந்தத் தலைமுறைக்கே இருக்கிற பிரச்சினைகள். கெரியரும் வேணும், ரொம்ப அனுசரணையான திருமண வாழ்க்கையும் வேணும். வேலைன்னா சும்மா சம்பளத்துக்காக இல்லை – அதிலும் முந்தி இருக்கணும். அப்போ டிஸ்டண்ட் தாம்பத்தியத்தின் பிரச்சினைகளையும் சமாளிக்கணும். ஆனால் perfectly happy marriage and understanding வேணும். ஆகவே commit பண்ண பயம். சுதந்திரம் போயிடும். ஆனால் commitment இல்லாமல் hormone needsகளை சமாளிக்க இதை ஒரு solution னு ஆரம்பிக்கறாங்க. அப்புறம் பிரம்மச்சாரி பூனை வளர்த்த கதைதான். ஆனால்முந்தையத் தலைமுறையின் ஒரு ஆதர்ச உதாரணம் அவர்களை திருமணம் பத்தின பாஸிடிவ்களையும் யோசிச்சு அப்படியும் இருக்க முடியும்னு கலியாணத்துக்கு யெஸ் சொல்ல வைக்குது.
விதூஷகன் : இத்திரைப்படத்தைப் பற்றி ஒரு பேட்டியில் மணிரத்னம் இப்படி சொல்கிறார் : “காலத்திற்கேற்ப நாம் ரொம்பவும் மாறிவிட்டதாக வெளியே காட்டிக் கொண்டாலும், அடிப்படையில் ஒரு சில விழுமியங்கள் நம்மை விட்டு விலகுவதில்லை. முந்தைய காலத்தின் விழுமியங்களை நமக்கு இன்னும் தேவைப்படுகின்றன.அதைத் தான் இந்தப் படத்தில் நான் சொல்லியிருக்கிறேன்.”
சிக்கி : கணபதி சாரின் அலமாரியில் டி.எம் கிருஷ்ணாவின் A Southern Music : The Karnatik Story புத்தகம் இருந்ததை யாராவது பார்த்தீர்களா?
பூதம் : எனக்கு கெட்ட கோபம் வருது! மும்பையில் அவ்ளோ பெரிய வீடு எங்கோ இருக்கிறது என்பதே எனக்கு இன்னும் புரியலே… நீங்க என்னடான்னா… பெண்ணியம்கிறீங்க! பொஸ்தவ ப்ரொடக்‌ஷன் டிஸைன்றீங்க! யாராவது, அந்தப் பொண்ணு நித்யா மேனன் எம்புட்டு அழகா, தேவதை போல, கனவிலேயே இருக்கா…
விதூஷகன் : கிரேக்கத்து ஆர்ஃபியஸ் கதை மாதிரியே… இல்லியா? யாரை வேண்டுமானாலும் தன்னுடைய இசையால் மயங்க வைக்கக் கூடியவர் ஆர்ஃபியஸ். அவருடைய இனிமையான குரலினால் மரங்களையே தன் கூட நடக்க வைத்தவர். தன் காதல் மனைவியை அந்தத் திறமையால் உயிர்ப்பிக்க இயலாமல், பயத்தால் சாகடித்தவர். இங்கே தாரா என்பது ஆர்ஃபியஸ். ஆதியைத் திரும்பிப் பார்க்க வைக்கிறாள்.
பூதம் : அப்படின்னா… ஆர்ஃபியஸ் என்பது சுகாசினியைக் குறிப்பிடவில்லையா?!
—end—