எண்ணெய்யும் தண்ணீரும்: கடவுள் பாதி, மிருகம் பாதி

மூன்று வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவில் நடந்த ஒரு கான்பரன்ஸ்சுக்கு ஒரு விரிவுரை வழங்கப்போயிருந்தேன். பிணையத்தின் போக்குவரத்தில்  அதிவேகமாக பயணம் செய்யும் விதம்விதமான குட்டி டிஜிட்டல் பொட்டலங்களை அடையாளம் கண்டுபிடித்து மேலாண்மை செய்வதை பற்றிய  என் பேச்சைக்கேட்க கூட்டம் ஒன்றும் அலை மோதவில்லை. ஆனால் அதே மாநாட்டில் இன்னொரு உரை வழங்கிய  ஈலோன் மஸ்க்குக்கு (Elon Musk) என்னையும் சேர்த்து நிறைய கூட்டம். டெஸ்லா மோட்டார்ஸ் என்ற முழுக்க முழுக்க மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்கும் கம்பெனியின்  உயர் அதிகாரியான அவர் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
மின்சாரக்கார்கள் எப்படி உலகையே எதிர்காலத்தில் மாற்றப்போகின்றன என்பதுதான் அவரது உரையின் சாராம்சம் என்றாலும், அவ்வுரையின்  இடையே  ஆற்றல் அடர்த்தி (Energy Density) என்ற கோணத்தில் இருந்து பார்க்கும்போது பேட்டரி தொழில்நுட்பம் பெட்ரோலை விட எவ்வளவு பின்னால் இருக்கிறது என்பது பற்றியும் அவர் பேசினார். வரைபடம் சுட்டிக்காட்டுவதுபோல், ஐம்பது கிலோ பெட்ரோலில் ஒளிந்திருக்கும் சக்தி அதே ஐம்பது கிலோ எடையுள்ள EDensityபேட்டரியில் உட்கார்ந்திருக்கும் சக்தியை விட பல மடங்கு அதிகம். அதனால் பெட்ரோல் பேட்டரியை  விட உயர்ந்தது என்று நான் பொத்தாம் பொதுவாக சொல்வதாக நினைத்து சண்டைக்கு வந்து விடாதீர்கள்!  கச்சா எண்ணெய், நிலக்கரி, மரம் முதலிய பல்வேறு பொருட்களை எரிப்பதன் மூலம் தேவையான சக்தியை  நாம் பெறுவதில் உள்ள இடர்பாடுகள் நமக்கு தெரிந்த விஷயம். எதிர்காலத்தில்  சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத முறைகளில் இருந்து பெறப்படும் ஆற்றலினாலேயே நமது தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பது ஒரு நல்ல லட்சியம்தான். ஆனால் ஆற்றலைக்கொடுக்கும் பல்வேறு பொருட்களின் குறிப்பிட்ட கொள்ளளவையோ (Volume) அல்லது எடையையோ, விலையையோ  ஒப்பிடும்போது, அல்லது எவ்வளவு விரைவில் ஒளிந்திருக்கும் ஆற்றலை விடுவித்து பயன் பெற முடிகிறது என்பதை ஒப்பிடும்போது, அல்லது எவ்வளவு விரைவில் வாகனங்களை ரீசார்ஜ் செய்ய முடிகிறது என்றெல்லாம் பார்க்கும்போது இப்போதைக்கு இந்த விஷயங்களில் பெட்ரோலை அடித்துக்கொள்ள வேறு எதுவும் கிடையாது என்பது எளிதாக புரியும் ஒரு தூரதிஷ்டவசமான நிதர்சனம்!  கடந்த நூறு நூற்றைம்பது வருடங்களில்  இத்துறை பெற்றிருக்கும் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கியக்காரணம். மஸ்க் போன்றவர்கள் இந்த சமன்பாடுகளை மாற்றி அமைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.
பெட்ரோலில் ஆற்றலின் அடர்த்தி அதிகம் என்றாலும், அதை எரிக்கும்போது 70 சதவீததிற்கு மேற்பட்ட சக்தி உபயோகம் இல்லாத வெப்பத்தை உருவாக்குவதில் விரயமாகிறது. ஆனால்  பேட்டரியில் இருக்கும் ஆற்றலை உபயோகித்து கார் ஒட்டும்போது 95 சதவீததிற்கும் மேற்பட்ட சக்தி விரயம் ஏதும் இல்லாமல் காரை நகர்த்த உபயோகப்படுகிறது. இப்படியாக செய்திறன் (work efficiency) கிட்டத்தட்ட அருகே வந்தாலும், பேட்டரி தொழில்நுட்பத்தின் விலை அதிகம் என்பது அடுத்த பிரச்சினை. எனவேதான் டெஸ்லா கம்பெனி  ஐந்து பில்லியன் டாலர்கள் செலவில் ஒரு பேட்டரி தொழிற்சாலையை  நெவாடா மாநிலத்தில் அமைத்து  தொழில் நுட்பத்தை முன்னேற்றி விலையை குறைக்க முயன்று கொண்டிருக்கிறது. நிறைய தயாரித்து பரவலாக உபயோகித்தால்தான் துறை முன்னேறும் என்பதால், வீடுகளிலும் பயன் படுத்துவதற்காக சுவற்றில் எளிதாக மாட்டி வைத்துக்கொள்ளும்படி வடிவமைத்து டெஸ்லா பவர்வால் என்ற பேட்டரி மாடலை போன மாதம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். விலை ரொம்ப அதிகம், எனவே ரொம்ப விற்காது என்று பண்டிதர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும், மிக நன்றாக ஓடிய ஆனால் லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்ட டெஸ்லாவின் முதல் காரான ரோட்ஸ்டர் போல இதுவும் சமூக சிந்தனையை சற்றே மாற்றும் வாய்ப்பிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திறனை இருமடங்காக்கி பிரமிக்க வைக்கும் சிலிக்கன் தொழில்நுட்பம் போலில்லாமல், பேட்டரி தொழில்நுட்பம் சுமார் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை  இருமடங்காகி வருகிறது. அந்த வளர்ச்சி தொடர்ந்தால், எதிர்காலத்தில் பேட்டரிகளை பயன் படுத்துவது  சௌகரியம், பொருளாதாரம், ரீசார்ஜ் செய்யும் வேகம் என்று எல்லாவிதங்களிலும் கச்சா எண்ணெய்யை முந்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. அதைப்போலவே, சூரிய ஒளியில் அல்லது காற்றில் இருந்து மின்சக்தியை பெறுவது போன்ற மற்ற பல பச்சை தொழில்நுட்பங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து வந்தாலும், 2040ஆம் வருடம் கூட உலகின் 90 சதவீத போக்குவரத்து தேவைகளை கச்சா எண்ணெய்தான் பூர்த்தி செய்யும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இஷ்டத்திற்கு திமிங்கிலங்களை கொன்று அவற்றின் கொழுப்பை எடுத்து விளக்கெரிப்பதிலிருந்து பல்வேறு விதமான வேலைகளுக்கு  உபயோகித்து கொண்டிருந்தார்கள். 1859 வாக்கில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் தலை காட்டியதும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கம் வழக்கில் இருந்து ஒழிந்தது. அடிக்கடி சுற்றுப்புற சூழலின் விரோதியாய் வர்ணிக்கப்படும் கச்சா எண்ணெய்தான் திமிங்கிலங்களை காப்பாற்றி வாழவைத்த தெய்வம் என்றும் கூட ஒரு வாதம் உண்டு!  அப்போதிலிருந்து இதுவரை  பெட்ரோலிய பொருட்களின் இடத்தை வேறு ஏதாலும் பிடிக்க முடியவில்லை.  திமிங்கிலங்களை மட்டும் என்ன, எட்டே மாதங்களில் அவசரப்பட்டு சீக்கிரம்  பிறந்துவிட்ட  குழந்தைகளை காப்பதில் கூட கச்சா எண்ணெய்க்கு பங்குண்டு. மூச்சு விட அந்த குழந்தை திணறும்போது கூடவே இருந்து அதற்கு வாழ்வு கொடுக்கும் பிளாஸ்டிக் கருவிகளில் எல்லாம் கச்சா எண்ணெய்  மூலப்பொருளாய் மறைந்திருப்பது பலருக்கு தெரியாது.
அந்த விவரிப்பின் எதிர்புறத்தில் வயிற்றை கலக்க வைக்கும் விபத்துக்களும் கண்ணீர் விடத்தூண்டும் சுற்றுப்புற சுகாதார சீரழிவு கதைகளும் ஏராளம். நான் பணி புரிந்த வருடங்களில் என் பிளாட்பார்மில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்ததில்லை. ஆனால் அந்த சமயத்தில் அங்கேயே இருந்த வேறொரு பிளாட்பார்மில் பணி புரிந்துவந்த கண்ணதாசன் என்ற புதிதாக திருமணம் ஆகியிருந்த ஒரு இளம் பொறியாளர் கால் தவறி கடலில் விழுந்த செய்தி நன்றாகவே நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் பிளாட்பார்ம்களில் பெண் பொறியாளர்களோ பணியாளர்களோ மருந்துக்கு கூட கிடையாது. ஆண்  பணியாளர்களுக்கும் கடலில் இறங்குவது, குளிப்பது போன்ற விஷயங்களுக்கு சுத்தமாக அனுமதி கிடையாது. தவறி விழுந்த சிலர் சாதாரணமாக  நீந்தி  திரும்பவும் பிளாட்பார்முக்கு ஏறி வந்து விட்ட கதைகளை கேட்டிருக்கிறேன்.  எங்கள் பிளாட்பார்ம் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அப்படி நீந்தி திரும்ப  பிளாட்பார்முக்கு வர முயன்று கொண்டிருந்த ஒரு தென் கொரிய பணியாளரை  சுறாமீன்  கடித்துக்குதறி கொன்று விட்ட கதையையும் கேட்டிருக்கிறேன். ஒரு மாலை நேரத்தில் கடலில் தவறி விழுந்த கண்ணதாசனுக்கு நீச்சல் தெரிந்திருந்தும், அருகில் இருந்த ஒரு ஹெலிகாப்டர்  உதவிக்கு விரைந்திருந்தும் இறுதியில் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடல் கூட கிடைக்கவில்லை என்று ஞாபகம். அந்த செய்தி எங்கள் பிளாட்பார்மை அடைந்து ஒரு சகோதரரை இழந்த சோகத்தில் எங்களை ஆழ்த்தியது. அப்போதாவது பாதிக்கப்பட்டது ஒரே ஒரு நபர்.

mumbai

2005ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் மும்பையில் நல்ல மழை, மின்சாரவெட்டு. கடலில் அலைகள் அதிகமாக இருந்த நாள் அது. சமுத்ர சுரக்க்ஷா  என்ற ONGCயின் கப்பலில் பணிபுரியும் சமையற்காரர் ஒருவர் கை விரல்களில் பட்ட காயத்திற்காக மருத்துவ உதவி பெற BHN என்ற பிளாட்பார்முக்கு கப்பல் வந்திருக்கிறது. மாலை நான்கு மணியளவில் பிளாட்பார்மை நெருங்கிய கப்பல் பெரிய அலைகளின் காரணமாகவோ என்னவோ  சற்றே கட்டுப்பாடிழந்து  பிளாட்பார்ம் மேல் இடிக்க, எண்ணெய்யும் எரிவாயுவும் சிதறி பிளாட்பார்ம் தீப்பிடித்ததில்  இரண்டே மணி நேரத்தில் மொத்த பிளாட்பார்மும் எரிந்து அழிந்தது. பிளாட்பார்மில் பணி புரிந்தவர்களில் 362 பேர் காப்பாற்றப்பட்டிருந்தாலும் 22 பேர் விபத்தில் உயிரிழந்தனர். அதில் 11 பேரின் உடல்கள் கிடைக்கவேயில்லை. ONGCயின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்து இதுதான் என்று நினைக்கிறேன்.
தொழில்நுட்பம் வளர வளர பொதுவாக இந்தத்துறையில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்றாலும், உலகெங்கிலும் எண்ணெய்யின் தேவையும் அதனால் அதை வெட்டி எடுத்தலும் அதிகரித்து கொண்டே போவதால், விபத்துக்களும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.  1988இல் வட கடலில் (North Sea) நிகழ்ந்த பைப்பர் ஆல்ஃபா விபத்து அங்கு பணி புரிந்த 228 பேரில் 167 பேரை கொன்று உலகளவில் மிக மோசமான பிளாட்பார்ம் விபத்து என்ற  இழிவான பெயரைப்பெற்றது.  இன்சூரன்ஸ் நஷ்ட ஈடு விஷயங்களில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக  பணம் கை மாறி இருந்தாலும், ஆக்ஸிடெண்டல் பெட்ரோலியம் கம்பெனி சரியாக பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காததுதான் விபத்தின் காரணம் என்றெல்லாம் நிரூபணம் ஆகியிருந்தும் யாரும் சிறைக்கு சென்றதாய் தெரியவில்லை.
சுற்றுப்புற சூழலின் சுகாதாரத்திற்கு ஊறு விளைவித்த கதைகளில் டெக்ஸகோ நிறுவனம் (பின்னால் செவ்ரான் நிறுவனத்தின் ஒரு பகுதி) 1964 முதல் 1992 வரை ஈக்குவடார் என்ற தென் அமெரிக்க நாட்டில் செய்த வேலையை பற்றியது ஒரு பெரிய கதை. அங்கு மட்டுமில்லாமல் பிரேசில் நாட்டிலும் செவ்ரான் நிறுவனம் நடந்து கொண்ட விதம் பற்றி வலைத்தளங்களில்  நிறைய படிக்கலாம். அந்த வழக்குகள்/சம்பவங்கள்/விளைவுகள் எல்லாவற்றிலும் எது உண்மை/பொய் என்கிற சண்டை இன்றும் தொடருகிறது.
evspillஅந்தக்கதைகளையும், 1989இல் இரண்டு லட்சத்து அறுபதாயிரம் பீப்பாய் எண்ணெய்யை அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்கா மாநிலத்தில் கொட்டிய எக்ஸான் வால்டீஸ் விபத்தையும் பழைய கதைகள் என்று  நினைத்தால், 2010இல் நிகழ்ந்த மெக்ஸிகோ வளைகுடா “Deep Water Horizon” விபத்து மிக சமீபத்திய செய்தி.  இது நிகழ்ந்தது அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஒன்றான லூயிசியானாவின் கடற்கரையில் இருந்து சுமார் 40 மைல் தெற்கே உள்ள கடல் பகுதியில். நான் அந்த மாநிலத்தில் 12 வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். எனவே லூயிசியானாவின்  பொருளாதாரத்திற்கு குறிப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தி, மீன் பிடித்தல், மற்றும் சுற்றுலா  ஆகிய மூன்று துறைகளும் எவ்வளவு முக்கியம் என்று நன்றாக உணர்ந்திருந்தேன். முன்னொரு அத்தியாயத்தில் சொன்னது போல், இந்த ரிக் (Rig) 5000 அடி ஆழமுள்ள தண்ணீரின் மேல் மிதந்தபடி கடற்படுகையின் கீழ் 5 கிலோமீட்டருக்கு மேலாக ஆழமாக தோண்டி ஒரு கிணறை அமைத்துக்கொண்டிருந்தது. ஏப்ரல் 20, 2010 அன்று இரவு பத்து மணிவாக்கில், கடலுக்கடியில் இருந்து வந்து கொண்டிருந்த மெத்தேன் எரிவாயு  கட்டுக்கடங்காமல் வெளியேறி தீப்பிடித்ததில், அங்கே பணி புரிந்து கொண்டிருந்த 126 பணியாளர்களில் 11 பேர் உயிரிழந்தனர்.

bpoilspill

அது மட்டும் இல்லை. நாம் முன் அத்யாயங்களில் பார்த்த பல்வேறு பாதுகாப்பு  அமைப்புகளும்  வெவ்வேறு காரணங்களால் வேலை செய்யாமல் போக, கடலுக்கு அடியிலிருந்து  எண்ணெய் கடலுக்குள் பீய்ச்சி அடித்து கடலை பாழ் செய்ய தொடங்கியது.  கடலின் ஆழம் அங்கே 5000 அடிக்கு மேல் என்பது வேறு அந்த கிணறை அடைக்கும் வேலையை கடினமாக்கியது. முதலில் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்ட BP நிறுவனம் வீடியோ எதையும் வெளியிட மறுத்து, ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பீப்பாயில் இருந்து 5000 பீப்பாய் வரை எண்ணெய் கடலில் கலப்பதாக சொல்லிக்கொண்டிருந்தது. பின்னால் அரசாங்க, ஊடக வற்புறுத்தல்களுக்கு பணிந்து எண்ணெய் கடலில் கலக்கும் வீடியோவை வெளியிட்டபோது அதை அலசிய நிபுணர்கள் ஒரு நாளைக்கு சுமார் 60,000 பீப்பாய் எண்ணெய் கடலில் கலந்து கொண்டிருப்பதை கண்டு பிடித்தார்கள்! ரிக்கின் தீ அணைந்து அது கடலுக்குள் மூழ்கி விட்டாலும், இந்த கிணற்றை அடைக்க 87 நாட்கள் பிடித்தது! அதற்குள் சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் கடலில் கலந்து லூயிசியானா, அலபாமா  முதலிய மாநிலங்களின் கடற்கரைகளை அசுத்தப்படுத்தியது. விபத்து நடந்து பல மாதங்களுக்கு சம்பந்தப்பட்டநிறுவனங்களும், மாநில, மத்திய  அரசாங்கங்களும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தவித்தவிதம் கேலிகுரியதாய் போனது. வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணெய்க்கசிவை ஏற்படுத்திய விபத்து என்ற இழிபெயர் இந்த சம்பவத்துக்குதான்.

DWHcleanup

ஒரே விபத்தால் மெக்ஸிகோ வளைகுடாவை சேர்ந்த மாநிலங்களில் எண்ணெய், மீன் பிடித்தல், சுற்றுலா ஆகிய மூன்று துறைகளுக்கும் கெட்டகாலம் வந்தது! தன் மீன் பிடிப்பு தொழில் அழிந்ததாலும், பொருளீட்ட வேறு வழியின்றி விபத்திற்கு காரணமான BP Allen-Kruseநிறுவனதிற்கே கடலை சுத்தம் செய்ய பணி புரிய வேண்டியிருந்ததாலும் மனமுடைந்து போன ருக்கி என்றழைக்கப்படும் படத்திலுள்ள ஆலன் க்ரூஸ் 2010 ஜூன் 23 அன்று, தன்னுடைய க்லோக் கைத்துப்பாக்கியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி இன்னொரு பரிதாபம். இதனை அந்த விபத்தின் பனிரெண்டாவது மரணம் என்று பலர் விவரித்தனர்.  எனக்கென்னவோ அவர் தேவையின்றி மனமுடைந்து அவசரப்பட்டு விட்டார் என்றே தோன்றியது. ஊடகங்களும், அரசாங்கங்களும், நீதிமன்றங்களும் விடாமல் “BP நிறுவனத்தின் கழுத்தை நெருக்கியதால்” (இந்த சொற்றொடர் அமெரிக்க அதிபர் ஒபாமாவினுடையது)  கடந்த ஐந்து வருடங்களில் பெரும்பாலும் நிலமை சரி செய்யப்பட்டு  மூன்று துறைகளும் பழைய நிலைக்கு திரும்பி  வளர்ந்து கொண்டிருக்கின்றன.  bird2ஆனாலும் அமெரிக்காவிற்குள்ளேயே கூட விபத்துகள் சுத்தமாக நின்று விடுவதில்லை. இந்த மாதம் கூட கலிபோர்னியாவில் ஒரு கச்சா எண்ணெய்  குழாய் அமைப்பு உடைந்து போய்  ஒரு லட்சம் காலன் எண்ணெய் கடற்கரையை பாழடித்து பறவைகளை கொன்று  அமெரிக்க தொலைக்காட்சி திரைகளில் பவனி வந்து கொண்டிருக்கிறது!
இப்படிப்பட்ட பல்வேறு செய்திகளை படிக்கும்போது பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தனியே நிற்கும்  எண்கள் ஒவ்வொன்றும் நம்மை விதம்விதமாக சிந்திக்க/குழம்ப வைக்கும். உதாரணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் இன்னும் நடந்து வரும் வழக்குகளின் விளைவால் செவ்ரான் நிறுவனம் 30 பில்லியன் டாலர்கள் வரை அபராதங்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஒரு செய்தி இருக்கும். இது ஒரு லட்சத்து  எண்பதாயிரம் கோடி ரூபாய்க்கு சமம். அட, போட்டு தீட்டி விட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைக்கவைக்கும் இந்த எண்ணை பற்றி சிந்திக்கும் போது, இதில் எத்தனை ரூபாய் பல்வேறு உயர் நீதிமன்ற முறையீடுகளுக்கு அப்புறம், கடைசியில் நேர்ந்த தவறுகளை சரி செய்ய நிஜமாகவே போய் சேருகிறது, எத்தனை வருடங்களில் அந்த பணம் வசூலித்து சரியாக விநியோகிக்கப்படும், அந்த கம்பெனியின் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும்போது இறுதியில் கொடுக்கப்படும் பணம்  எவ்வளவு பெரிய தொகை, இடையே புகுந்து பொய் சொல்லி பணம் பண்ண விழையும் கும்பல்கள் எத்தனை போன்ற பல எண்களையும் சேர்த்துப்பார்க்க வேண்டும்.  ஈக்குவடார் மாதிரியான நாடுகளில் செவ்ரானுடன் இறுதிவரை சண்டையிட்டு அபாரதங்களை வாங்கி  நிவாரப்பணிகளை சரியாக செய்யும் வலுவான அரசாங்கமோ, தேவையான எண்ணிக்கையில் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ கூட கிடையாது.
இது ஒருபுறமிருக்க, செவ்ரானை விட இன்னும் பெரிய நிறுவனமான எக்ஸான் மொபிலின் 2014 வருடத்திய லாபம் மட்டும் 32 பில்லியன் டாலர்களுக்கு மேல்!  இரண்டு லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் இந்த எண் வருவாய் (Revenue) அல்ல, லாபம் (Earnings) மட்டும் என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் இந்த வருவாய் முழுதும் ஏதோ ஒரே ஒரு வெள்ளைக்கார கிழவரின்  பாங்க் அக்கௌண்டுக்கு போய் சேருகிறது என்று நினைப்பதும் முற்றிலும் தவறு. இந்த பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இவை பொதுநிறுவனங்களாக இருப்பதால், பங்கு சந்தையின் வழியே இந்த லாபத்தில் சந்தோஷமாக பங்கு பெறுபவர்களில் உலகில் பல நாடுகளில் வாழும் ஏழை ஆசிரியர்களின் ஓய்வூதிய நிதி, பல லட்சக்கணக்கான  நடுத்தரக்குடும்பங்கள், போன்ற பலவும் உண்டு!
வேலை வாய்ப்பு என்ற நோக்கிலிருந்து பார்த்தால், ரஷ்ய நிறுவனமான கேஸ்ப்ரோம் (Gazprom), சீனாவின் பெட்ரோசைனா (Petrochina) இரண்டும் மட்டுமே சேர்ந்து சுமார் பத்து லட்சம் பேரை பணியில் அமர்த்தி இருக்கின்றன. யாருடைய புள்ளி விவரங்களை நம்புகிறோம் என்பதை பொறுத்து  உலக அளவில் இந்தத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணி புரிபவர்களின் எண்ணிக்கை தொண்ணூறு லட்சத்தை தொடலாம்.  பல லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு, அதனால் அவர்கள் குடும்பங்களை சேர்ந்த சில கோடிப்பேருக்கு வாழ்வு, போக்குவரத்தில் இருந்து ஆரம்பித்து, நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள், மனிதன் விண்ணிற்கும், நிலவுக்கும் பயணிப்பது எல்லாம் சாத்தியமாவதில் கச்சா எண்ணெய்க்கு எக்கச்சக்க பங்குண்டு.
மனித வாழ்வில்  பல விஷயங்கள்  “கடவுள் பாதி, மிருகம் பாதி” மாடலில் நல்ல/கெட்ட குணங்களை  சேர்த்து வைத்துக்கொண்டு வந்து சேரும். அணு ஆயுதங்கள், கடன்,  மது, பெட்ரோலியப்பொருட்கள் என்று பல விஷயங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். ஒருமுறை அவற்றை அடைந்து சொந்தக்காரர்களாகி விட்டோம் என்றால், பின்னால் அவற்றின் தீய குணங்களை மட்டும் மனதில் கொண்டு அவற்றை வெறுத்து  மனித வாழ்வில் இருந்து முற்றிலும் ஒதுக்கி விடுவது அவ்வளவு சுலபம் இல்லை.  ஜெ.ஆர்.ஆர். டோல்கினின் “Lord of the Ring” கதைகளில் வரும் மோதிரம் இப்படி சொந்தக்காரர்களையே அடிமைப்படுத்தி பைத்தியமாய் அடிக்கும்  விஷயங்களை கதை வழியே  நமக்கு புரிய வைக்கும் ஒரு அழகான உவமானம் என்று நிச்சயம் சொல்லலாம்.

LOTRings

(தொடரும்)

0 Replies to “எண்ணெய்யும் தண்ணீரும்: கடவுள் பாதி, மிருகம் பாதி”

  1. இவ்வளவு விஷயங்களையும் எவ்வளவு அழகாக எழுதி விட்டீர்கள்!
    உங்களைப் போன்றவர்களே உண்மையான தமிழ் காவலர்கள்.
    இன்பமாய் இருக்கிறது உங்கள் தகவல்களும் அதைச் சொல்லும் அழகும்!
    வாழ்க வாழ்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.