இறைவனின் இருப்பிடம்

மாறக்கேஷ் . தாகிசித் (பெர்பெர்) மொழியில் மாறகேஷ் என்ற சொல்லுக்கு இறைவனின் இருப்பிடம் என்று பொருள்.
சமீபத்தில் இறைவனின் இருப்பிடத்திற்கு ஐந்து நாள் சிற்றுலா சென்றிருந்தேன்.
மாறக்கேஷ், வட ஆப்ரிக்காவில் உள்ள மோர்ரோக்கோ நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். பெர்பெர், அரபி மற்றும் ப்ரெஞ்ச் மொழி சரளமாக புழங்கும் மோர்ரோக்கோ ப்ரான்ஸிடம் இருந்து 1956ல் சுதந்திரம் அடைந்தது. 99% சுன்னி முஸ்லிம் மக்கள் வாழும் மோர்ரோக்கோ தற்போது ஆறாம் முகமது மன்னரால் ஆளப்படுகிறது. அரபு வசந்ததிற்கு (Arab Spring) பிறகு மன்னராட்சி, ஜனநாயக முறையில் தேர்ந்து எடுக்கபட்ட அரசுக்கு உண்மையான அதிகாரம் வழங்க தொடங்கி உள்ளது. நாட்டின் மக்கள் தொகையே 3.5 கோடிதான். தமிழ் நாட்டின் மக்கள் தொகை ஆறரை கோடி, நம் மாநிலத்தின் பாதி ஜனத்தொகைதான் மொத்த நாடும். இவ்வளவு அறிமுகம் போதும் , மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியாவைச் சொடுக்கவும்.
இந்த கட்டுரை மாறக்கேஷில் என் அனுபவங்களை பற்றியது. என் அனுபவங்களைத் தாண்டி உங்கள் மனக்கண்ணில் மாறக்கேஷ் தெரிந்தால் அது உங்கள் அசாத்திய கற்பனை திறன்.

ஜெமா அல் ஃபனா

லண்டனிலிருந்து மூன்று மணி நேர விமான பயணத்தில் மாறக்கேஷ் சென்றடைந்தோம். லண்டன் குளிரில் இருந்து சென்றதால் மாறக்கேஷின் 25 டிகிரி வெப்பம் மிக இதமாய் இருந்தது.
சிறிதாக இருந்தாலும் மாறக்கேஷ் விமான நிலையம் மிகுந்த அழகுணர்ச்சியுடன் அரேபிய கட்டிட கலை நளினம் மிளிர கட்டப்பட்டுள்ளது . இஸ்லாமிய கட்டிட கலை என்று தற்போது அடையாளப்படுத்தப்படும் அரேபிய கட்டிட கலை நளினமான வளைவுகளும், அழகான வடிவ ஒருங்கமைப்பும் தன்னகத்தே கொண்டது. தங்கள் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கட்டிட முறையைச் சிறப்பாகப் பின்பற்றி விமான நிலையத்தை கட்டியிருக்கின்றனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை நினைத்து கொண்டேன். அந்தக் கட்டிடம் எந்த கலாசாரத்தை பிரதிபலிக்கிறது என யோசித்துப் பார்த்தேன், தமிழ்க் கலாசாரமா, மொத்தமாக இந்தியக் கலாசாரமா, இல்லை முற்றாக மேற்கத்திய பாணி கட்டிடமா… இது எதுவுமே இல்லை என்றுதான் எனக்குப்படுகிறது. நமது விமான நிலையத்தை கட்டும் போது இதையெல்லாம் கணக்கில் எடுத்து கொண்டது போல தெரியவில்லை. ஓர் ஏக்க பெருமூச்சுதான் விட முடிந்தது.
வாடகைக் காரில் எங்கள் தங்குமிடம் சென்று சேர்ந்தோம்.
சென்றவுடன் விடுதி மேலாளர் வரவேற்பறையில் எங்களை அமரச் செய்து புதினா இலைகளும், பச்சை தேயிலையும், சக்கரையும் கலந்த பெர்பெர் டீ சிறு கண்ணாடி கோப்பைகளில் பரிமாறினார். மெக்ரெப் (meghreb) எனப்படும் வடமேற்கு ஆப்பிரிக்க அரபு நாடுகளில் தேநீர் பரிமாறுதல் தலையாய விருந்தோம்பலாக கருதப்படுகிறது. தேநீர் அருந்த மறுத்தல் அவமதிப்பாக கொள்ளப்படும். தேநீர் அருந்தும் பழக்கமில்லாத நான் மறுக்க இயலாததால் வாங்கி அருந்தினேன். முதல் மிடறு தொண்டையை கடந்தவுடனே தெரிந்துவிட்டது இது நான் அறிந்த எந்த டீயும் அல்ல, இது அமுதம், அமுதமன்றி வேறொன்றும் இல்லை! வேண்டா வெறுப்பாக குடிக்க தொடங்கிய என்னை , ஐயய்யொ சீக்கிரம் தீந்துபோச்சே இன்னொன்னு கெடக்குமா என்று நோட்டம் விட வைத்துவிட்டது அதன் சுவை. மனசு கேட்காமல் இன்னொரு பெர்பெர் டீ கேட்டு வாங்கி அருந்திவிட்டு , எங்களுக்கு ஒதுக்கபட்ட அறைக்குச் சென்றோம்.
மாறக்கேஷில் ஹம்மாம் (hammam) என்றழைக்கபடும் சமூக நீராவி குளியலறைகள் படு பிரசித்தம். மோர்ரோக்கோ குடிமக்கள் வாரம் ஒரு முறையாவது இந்த குளியலறைகளுக்கு செல்கின்றனர். நாங்கள் தங்கி இருந்த விடுதியிலும் ஒரு ஹம்மாம் இருந்தது.
ஒரு சொகுசு குளியல் போடலாம் என்று கிளம்ப ஆயத்தமானதும் நாங்களும் வருவோம் என எனது இரு மகன்களும் கிளம்பிவிட்டனர். இங்கிலாந்தில் நீராவி குளியலறைகளில் (spa) சிறுவர்களை அனுமதிப்பதில்லை. மாறகேஷும் அப்படித்தான் இருக்கும் என நெனைத்து “உள்ள விடலன்னா திரும்ப ரூமுக்கு வந்து படுத்துக்கணும் “ என ஒப்பந்தம் போட்டு விட்டு அழைத்துச் சென்றேன். மனைவிக்கு இதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை அதனால் அறையிலேயே தங்கிவிட்டார். மாறக்கேஷில் இங்கிலாந்து போல் தனி மனித சுதந்திரம் இன்னும் அமலுக்கு வரவில்லை! , குடும்பத்திற்கு ஏற்ற ஹம்மாம் உங்களுக்காக காத்திருக்கிறது என ப்ரெஞ்ச் கலந்த ஆங்கிலத்தில் குளியலறை மேலாண்மை அழகி குறு நகையோடு பகர்ந்தாள்.
சிறுவர்களுக்கு ஏற்ற அளவுக்கு மட்டும் குளியலறையில் வெப்பம் ஏற்றப்படும். அவர்களுக்கு தேனும் , பாலும் , எலுமிச்சையும் சேர்த்து செய்த இயற்கை தைலம் பூசப்படும், படும் படும் படும் என்று பல டும்களை அடுக்கி கொண்டே சென்றாள். அவள் சொல்லி முடிக்கும் முன்பே இளையவன் சட்டையை கழட்ட தொடங்கி விட்டான். இனி வேறு வழி இல்லை, இரண்டு பேரையும் உடை மாற்றும் அறைக்கு இட்டுச் சென்றேன்.
மாறக்கேஷ் நீராவி குளியலறைகளில் ஜட்டி/அரை நிஜார்/ குறைந்தபட்சம் லங்கோடு கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பப்பரக்கா கோலம் கட்டாயம் அனுமதியில்லை. அதிக பட்ச வெட்கத்தால் பீடிக்க பட்டவர்கள் முழு நிஜார் அணியலாம் , நக்கலான பார்வைகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
சுட்டு போட்டாலும் ஒற்றை வார்த்தை ஆங்கிலம் பேச வராத அரேபிய இளம்பெண்கள் இருவர் எங்களை நீராவி அறைக்கு செய்கையில் பேசி அழைத்து சென்றனர். இந்த விடுதியில் ஆண் பெண் அனைவருக்கும் பெண்கள் மட்டுமே மஸாஜ் செய்கின்றனர், மற்ற பொது குளியலறைகளில் ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் மஸாஜ் செய்வார்களாம். நல்ல ஆரஞ்சு மணம் கமழ்ந்த , எலுமிச்சை சுன்னம் பூசப்பட்டு மெலிதாக வெப்பமூட்டபட்ட நீராட்டறை திண்ணையில் எங்களை அமரச் செய்தனர். அருகில் இருந்த தொட்டியில் இரண்டு வாளிகளில் வெதுவெதுப்பான நீரை மொண்டு எங்கள் மேல் ஊற்றினர். படுக்க சொல்லி செய்கை செய்து விட்டு வெளியேறினர்.
சூழலில் சொக்கி போய் சற்றே கண் மூடினேன், சளார் என்று முகத்தின் மீது நீர் அடித்தது. பதறி எழுந்தமர்ந்தேன் , குரங்குகள் இரண்டும் வாளியும் கையுமாய் பேருவகையுடன் குதித்து கொண்டிருந்தன. சிரிக்காமல் இருக்க முடியவில்லை.நானும் ஒரு வாளியை எடுத்து அவர்கள் மேல் நீரள்ளி அடிக்க தொடங்கினேன். ஓரு பத்து நிமிடம் , அமைதி ததும்பும் அந்த நீராட்டறை எங்கள் மூன்று பேர் கூச்சலில் நம்மூர் பம்புசெட் ஆனது. சிறிது நேரம் கழித்து அதே பெண்கள் உள்ளே வந்தனர். ஒருவர் சிறுவர்களுக்கு தைலக்காப்பு செய்ய ,எனக்கு ஒருவர் வேறு ஒரு எண்ணெய் தேய்க்க தொடங்கினார். தேய்த்து முடித்தவுடன் கடல் பஞ்சும் கடல் பாசியும் கலந்த சொரசொரப்பான கையுறை அணிந்து உடலெங்கும் வேகமாக தேய்த்தார். இந்த “உப்பு காகித” தேய்ப்பு எனக்கு மட்டுமே செய்தனர், சிறுவர்களுக்கு கிடையாது. இந்த தேய்த்தல் இறந்த தோலை நீக்கி சரும மினுமினுப்பை கூட்டும் என்று நூற்றாண்டுகளாக மொர்ரொக்கொவில் நம்பப்படுகிறது.
தேய்த்து முடிந்ததும் மீண்டும் நீராட்டிவிட்டு மெல்லிய வாத்திய இசை வழியும் , மிதமாய் ஒளியேற்றப்பட்ட ஓய்வறையில் எங்களை விட்டு சென்றனர். அங்கிருந்த திண்டில் படுக்கலாமா என யோசிக்கும் நேரத்தில் சரியாக உள்ளே வந்து நீங்கள் விரும்பினால் உடை மாற்றும் அறைக்கு செல்லலாம் உங்களுக்கான சேவைகள் நிறைவடைந்தது என சிரித்து கொண்டே சொன்னார் மேலாண்மை அழகி.

MK2

அறைக்கு வந்து சற்று ஓய்வெடுத்துவிட்டு , ஜெமா அல் ஃபனா (jema Al fanaa) எனப்படும் மாறக்கேஷின் புகழ்பெற்ற சதுக்கதிற்கு கிளம்பினோம். இந்த சதுக்கம் மெதினா என்றழைக்கபடும் புராதன மாறக்கேஷின் மையத்தில் உள்ளது. இன்றும் பழைய மாறக்கேஷை சுற்றி கோட்டை மதில் சுவர் நன்றாக பராமரிக்கபடுகிறது.
ஜெமா அல் ஃபனா ஒரு மசூதியின் முன்னால் விஸ்தாரமாய் விரிந்திருக்கும் ஒரு முக்கோண வடிவ திறந்த வெளி. நாங்கள் சென்ற வேளையில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாவாசிகளால் நிரம்பி வழிந்தது. அரபி மற்றும் பெர்பெர் மொழியில் கதைப்பாடல்கள் பாடும் கலைஞர்கள் , பாம்பாட்டிகள், குரங்காட்டிகள், பாரம்பரிய மருந்துகள் விற்கும் கடைகள், இசை கலைஞர்கள், மாந்தீரிகர்கள், மருதாணி போடும் பெண்கள் என பல விதமான விற்பன்னர்கள் தங்கள் தற்காலிக கடைகளை சதுக்கம் முழுக்க விரித்திருந்தனர்.
ஒரு வட்ட வடிவ கூட்டம் ஒவ்வொரு கடையை சுற்றியும் குழுமியிருந்தது. உள்ளூர் மக்கள் அதிகம் கூடியிருந்த ஒரு கூட்டத்திற்குள் நானும் தலையை நீட்டினேன். கூட்டத்திற்கு நடுவே நம்மூர் தப்பு போன்ற வாத்தியமும் , கிடார் போன்ற பெரிய நரம்பிசை வாத்தியமும் வாசித்து கொண்டு இரு பக்கமும் இருவர் அமந்திருக்க நடு நாயகமாய் அமர்ந்த்திருந்த பெரியவர் பெருங்குரலெடுத்து பெர்பெர் மொழியில் பாடி கொண்டிருந்தார். ஏதோ உருக்கமான கதை பாடல்; கூட்டம் கவனம் சிதறாமல் கவனித்து கொண்டிருந்தது. என்னுடைய இளம் வயதில் சேலம் போஸ் மைதானத்தில் உடுக்கடித்து கொண்டு ஒருவர் மம்மட்டியான் கதையை சொல்வதை கேட்டிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் நம் கிராமங்களில் கூட இது போன்ற கதை சொல்லிகளை காண முடியுமா என தெரியவில்லை.
பாரம்பரியமான நிகழ்த்து கலைகள் இன்றும் அதே உயிர்ப்புடன் இந்த சதுக்கத்தில் நிகழ்த்தபடுவதால் ,ஜெமா அல் ஃபனாவை ஐ. நா கலாசார நிறுவனம் (UNESCO ) பாதுகாக்கப்பட வேண்டிய கலாசார வெளியாய் அங்கீகரித்திருக்கிறது. சதுக்கத்தின் நடு பகுதி முழுக்க தற்காலிக உணவு கடைகளால் நிறைந்திருந்தது. நத்தை இங்கே ஒரு பிரபலமான நொறுக்கு தீனி. நம்மூர் வேர்கடலை போல ஒரு பொட்டலத்தில் கட்டி கொடுக்கின்றனர். கபாப், குஸ்குஸ் , டஜின் இவை பிரதான உணவு. டஜின் பிரசித்தி பெற்ற மோர்ரோக்கோ உணவு வகை. டஜின் என்பது உணவு சமைக்கப்படும் கூம்பு வடிவ பாத்திரத்தின் பெயர். அதில் சமைக்க படும் அத்தனை உணவுக்கும் டஜின் என்றே பெயர் (சிக்கன் டஜின், வெஜிடபிள் டஜின் …).டஜின் கரி அடுப்பில் நீண்ட நேரம் சமைக்கபட வேண்டிய உணவு. குஸ்குஸ் ஒரு வகை கோதுமை ரவை (durum wheat pellets) , பொன்னிறத்தில் இருக்கும். இதை இட்லி போல நீராவியில் வேக வைத்து உண்கின்றனர், குஸ்குஸ் சமைப்பதற்கு பிரத்தியேகமான நீராவி சமையல் சட்டிகள் கிடைக்கின்றன.
நமக்கு அரிசி போல வட ஆப்பிரிக்காவில் குஸ்குஸ் முக்கிய உணவு. கபாப் வட இந்திய கபாபே தான் , ஆனால் என்னுடைய அவதானிப்பில் இந்திய கபாபை விட சுவை சற்று குறைவு. கையை பிடித்து இழுக்காத குறையாக தங்கள் உணவகத்திற்கு வாடிக்கையாளர்களை அழைக்கின்றனர். நாங்களும் ஒரு உணவகத்தை தேர்ந்து உணவருந்தினோம, நன்றாகவே இருந்தது. இரவு பதினொன்று மணி வரை சதுக்கத்தில் சுற்றி கொண்டிருந்துவிட்டு வாடகை காரில் அறைக்கு திரும்பினோம்.

அரண்மனை

மறு நாள் காலையில் ஊர் சுற்ற கிளம்பினோம். அரபி/பெர்பெர்/ப்ரெஞ்ச் தெரியவில்லை என்றால் மாறக்கெஷில் தனியாக சுற்றுவது சற்று சிரமம் என ஜெமா அல் ஃபனாவில் கண்டு கொண்டோம். அதனால் ஒரு வழிகாட்டி அமர்த்தி கொண்டோம். எங்கள் வழிகாட்டி அல் ஹசனி வரலாறு படித்துவிட்டு ஆலிவ் தோட்டம் வைத்திருக்கிறார். ஓய்வு நேரத்தில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிகிறார். அல் ஹசனி மொரோக்கோவின் தலை நகரமான ரப்பத்தில் வசிக்கிறார், பிரெஞ்சு, ஆங்கிலம் சரளமாக பேசினார். அவரது மனைவி அங்கு அரசாங்க அலுவலகத்தில் பணி புரிவதால் மாறக்கெஷில் இருந்து ரப்பத்திற்கு குடிபெயர்ந்திருக்கின்றனர். முந்நூறு கிலோமீட்டர் வண்டி ஓட்டி கொண்டு மாறகெஷ் வந்து வழிகாட்டியாக பணிபுரிவது வெறும் பணத்திற்காக அல்ல என்று அவரிடம் பேசுவதில் இருந்தே தெரிந்தது. மிகுந்த ஈடுபாட்டுடன் ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கிச் சொன்னார்.
முதலில் மாறக்கேஷை ஆண்ட் சத்தாஃபிட் மன்னர்களின் கல்லறை தோட்டத்தில் இருந்து தொடங்கினோம். மன்னர்களின் கல்லறைகள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கராரா பளிங்குக் கற்களினால் அழகு செய்யப்பட்டுள்ளது. மொர்ரொக்கொவில் கரும்பு சக்கரை உற்பத்தி அதிகம். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு கிலோ கராரா கல்லுக்கு ஒரு கிலோ சக்கரை பண்டமாற்றாக கொடுத்திருக்கின்றனர். அவர்கள் பளிங்கு உபயோகித்திருக்கும் பரப்பளவை கணக்கிட்டால் அக்காலத்தில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருக்க வேண்டும்! பளிங்குடன் மாறக்கேஷ்க்கு அருகில் இருக்கும் அட்லஸ் மலைகளில் விளையும் சிடர் மர பலகைகளில் வேலைபாடுகள் செய்து அதையும் உபயோகப்படுத்தியுள்ளனர். பளிங்கை விட மர வேலைப்பாடு மிக அழகாக இருந்தது. உள்ளுர் கலைஞர்களுக்கு மர வேலைப்பாடு பழகிய விஷயம் என்பதால் அதன் தரம் சற்று அதிகமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
மெதினா என்றழைக்கப்படும் பழைய மாறக்கேஷ் முழுக்க சாலை இரு மருங்கிலும் ஆரஞ்சு மரங்கள் நடப்பட்டுள்ளன. நாங்கள் சென்ற மாதம் (மார்ச்/ஏப்ரல்) இம்மரங்கள் பூக்கும்/காய்க்கும் சமயம் என்பதால் சாலைகள் எங்கும் ரம்மியமான ஆரஞ்சு மணம் வீசிக்கொண்டிருந்தது.
அங்கிருந்து அரண்மனையை பார்க்க சென்றோம். இஸ்லாமிய கட்டிட கலை அடிப்படையில் கட்டப்பட்டது இவ்வரண்மணை. இதன் படி நிலத்தில் மூன்றில் ஒரு பங்கில் மட்டும் கட்டிடம் கட்ட பட வேண்டும் , இரண்டு பங்கு தோட்டமாகவும் திறந்த வெளியாகவும் இருத்தல் வேண்டும். கோர்ட்யார்ட் எனப்படும் நாற்புறமும் அறைகளால் சூழப்பட்ட தோட்டம் ஒரு அழகிய இஸ்லாமிய கட்டிட கலை பங்களிப்பு. வீட்டில் உள்ள பெண்கள் அந்நிய ஆண்கள் பார்வையில் படாமல் ஒரு தோட்ட சூழலை அனுபவிக்க வேண்டும் என்ற தேவையால் உருவான இப்பாணி இன்று அதன் எழிலுக்காக உலகின் பல பகுதிகளிலும் பின்பற்றபடுகிறது. வரவேற்பறை , விருந்தினர் சந்திப்பு கூடம், அலுவல் அறை,தோட்டம் அதை தாண்டி மனைவியர் அறைகள் இவ்வளவே அரண்மனை. சமயலறை, பணியாள் தங்குமிடம், ஹம்மாம் எல்லாம் அரண்மணைக்கு பின் புறம் உள்ளன.
அரண்மனையின் உத்திரம் மர செதுக்கு வேலைபாடுகளால் நிறைக்கப்பட்டுள்ளது. அரண்மனை உபயோகத்தில் இருந்த சமயம் உள்சுவர்கள் பெர்பெர் கம்பளங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாம். கம்பளங்கள் பெர்பெர் கலாசாரத்துடன் பின்னி பிணைந்த ஓர் அம்சம். கம்பள தொழிற்சாலைகள் வருவதற்கு முன் கம்பளம் பெண்கள் மட்டுமே நெய்வதாக இருந்துள்ளது. திருமணத்திற்கு நெய்யப்படும் கம்பளம் , அன்றாட தேவைகளுக்காக நெய்யப்படுபவை , பரிசாக நெய்யப்படுபவை என பலத்தரப்பட்ட கம்பளங்கள். மொராக்கிய கம்பளங்களின் சிறப்பம்சம் அதன் வேலைபாடு பழங்குடி தன்மை மாறாமல் அப்படியே இருப்பதுதான். பாரசீக கம்பளங்களை போல் அழகுக்காக நெய்யப்படாமல் உபயோகத்திற்காக மட்டுமே நெய்யப்படுவதால் இக்கம்பளங்கள் நீடித்து உழைக்க கூடியவை.
இக்கம்பளங்களின் பழங்குடி வேலைபாடுகள் மினிமலிஸ்டிக் எனப்படும் தற்சமயம் பிரபலமாக இருக்கும் மேற்கத்திய நவீன அலங்கார கோட்பாட்டுடன் இயைந்து வருவதால் ஐரோப்பா முழுக்க இவை விரும்பப்படுகின்றன. ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் நல்ல விலைக்கு வாங்குவதால் போலிகளும் பெருகிவிட்டன!
அரண்மனையில் இருந்து கடை வீதி மிக அருகில். சிறிது நேரம் உலாத்தி விட்டு விடுதி அறை வந்து சேர்ந்தோம்.
அன்றிரவு பாண்டஸி எனப்படும் அரேபிய குதிரையேற்ற சாகச நிகழ்ச்சிக்கு சென்றோம். பாண்டஸி என்பது நம்மூர் கிராம திருவிழா போல எல்லா மொராக்கோ கிராமங்களிலும் இன்றும் நடக்கும் ஒரு நிகழ்வு. சுற்றுலா பயணிகளுக்காக மாறகேஷ் போன்ற நகரங்களில் நடித்துக் காட்ட படுகின்றது. ஒரு பெரிய மைதானத்தை சுற்றி பல வண்ணக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக்கூடாரங்களில் அற்புதமான டஜின் விருந்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. உணவுண்ணும் பொழுது மொராக்கிய கிராமிய கலைஞர்கள் ஒவ்வொரு கூடாரமாய் சென்று பாடலும் , ஆடலும் நிகழ்த்துகின்றனர். எனக்கு நம்மூர் தப்பும் குரவையும் காதில் ஒலித்து கொண்டே இருப்பது போல் இருந்தது. அது எனது பிரமையாகவும் இருக்கலாம்! விருந்து முடிந்தவுடன் அனைவரையும் மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் படிகளில் அமர செய்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டு துப்பாக்கிகள் சகிதம் மொர்ரொக்கிய சாகச கலைஞர்கள் படு வேகமாக ஓடும் அரபி குதிரைகள் மேல் அமர்ந்தும் , தொங்கியும், நின்றும் நிகழ்த்திய சாகசங்கள் அபாரம். முத்தாய்ப்பாக ஒரு அரேபிய பெல்லி டான்ஸுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

ஹை அட்லஸ்

ஹை அட்லஸ் மலை தொடர் மாறக்கேஷுக்கு மிக அருகில் உள்ளது. மறுநாள் காலையில் அட்லஸ் மலையையும் அதன் கிராமங்களையும் சுற்றி பார்க்க கிளம்பினோம். ஹுசேன் என்ற பெர்பெர் ஓட்டுனர் மற்றும் வழிகாட்டி எங்களை அவருடைய SUV ல் ஏற்றி கொண்டார். போகும் வழியில் இரு பிரெஞ்சு பெண்மணிகளும் (அம்மா – மகள்) எங்களுடன் இணைந்தனர்.
ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து மாறக்கேஷ் மற்றும் அதன் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு பாசன நீர் கொண்டு வரும் அகன்ற கால்வாய்களை கடந்து அட்லஸ் மலை ஏற தொடங்கினோம். இக்கால்வாய் மிக சமீபமாக கட்டப்பட்டுள்ளது.
ஒரு மணி நேர மலைப்பாதை பயணத்தின் முடிவில் ஒரு மலை கிராமத்தை அடைந்தோம். அக்கிராம சந்தை தான் முதல் சுற்றுலா தலம். கழுதை முதல் ஆரஞ்சு வரை , சவரம் முதல் பாரம்பரிய மருத்துவம் ( புத்தூர் கட்டு வகையறா) வரை ஒரே இடத்தில் ஒரே நாளில் கிடைக்கும்.
ஆணி புடுங்கும் கொறடு போல ஒன்றை வைத்து கொண்டிருந்த பல் வைத்தியரை பார்ப்பதற்கு சற்று பயமாகத்தான் இருந்தது. கழுதை , பல் டாக்டர், எலும்பு டாக்டர் முதலியவற்றை விட்டுவிட்டால் நம் உழவர் சந்தைக்கும் இவற்றிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. பிரெஞ்சு அம்மணிகள் மாய்ந்து மாய்ந்து புகைப்படம் எடுத்துகொண்டிருந்தனர். கண்டிப்பாக அவர்களுக்கு இது சுற்றலா ஸ்தலம்!
வளையல்கள் விற்கும் ஒருவர் சந்தை முழுக்க விடாது என்னை துரத்திக்கொண்டிருந்தார். என் மனைவிக்கு வளையல் வாங்கச் சொல்லி ஒரே நச்சரிப்பு. நான் கண்டு கொள்ளாமலே இருப்பதை பார்த்து எரிச்சலுடன் நீ எவ்வளவு பாக்கியசாலி என்று உனக்கு தெரியவில்லை என்றார். ஏதேனும் தீர்க்கதரிசியாய் இருந்து தொலைக்க போகிறார் என்று அவரை பயபக்தியுடன் திரும்பி பார்த்தேன். ஓங்கிய குரலில் உன் மனைவியின் அழகிற்கு எங்கள் ஊரில் ஐந்தாயிரம் ஒட்டகங்கள் மஹர் கொடுக்க வேண்டும், உங்கள் ஊரில் அந்த வழக்கம் கிடையாது என்று எனக்கு தெரியும் , ஒன்றும் தராமல்தான் மணந்திருப்பாய். இவ்வளவு அதிர்ஷ்டசாலி அவளுக்கு ஒரு வளையல் வாங்கி தர மாட்டாயா என்றார். அருகில் நின்ற என் இல்லாளின் முகத்தில் சூரியகோடி ப்ரகாசம். ஒன்றிற்கு இரண்டாய் வளையல்களுக்கு மொய் எழுதினேன் என்று சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. வளையல்காரர் மிக அற்புதமான வியாபாரி. அதை அவரிடமே சொல்லி விட்டு நடையை கட்டினேன்.
ஹுசேன் போகும் வழியில் வரும் குக்கிராமங்களில் நிறுத்தி அவருடன் கொண்டு வந்திருந்த ரொட்டி மற்றும் இதர திண்பண்டங்களை மலை கிராம குழந்தைகளுக்கு கொடுத்துகொண்டே வந்தார். வறுமை இக்கிராமங்களில் கண்கூடாக தெரிகிறது. “ராஜாக்கள் எதுவும் எங்களுக்கு செய்யவில்லை , புதிய ஜன நாயக அரசாங்கம் செய்கிறதா பார்ப்போம்” என்றார் ஹுசேன் நக்கலான சிரிப்புடன். “உங்களைப்போன்ற பயணிகள் வராவிட்டால் ஒரு வேளை உணவு கூட இம்மலைப்பகுதி மக்களுக்கு கிடைக்காது, உங்கள் சுற்றுலாவிற்கு மொரொக்கொவைத் தேர்ந்த்ததற்கு நன்றி” என்றார். சங்கடத்தில் சற்றே நெளிந்தேன். எனக்கு என் சந்தோஷத்தை தவிர மொரோக்கொவை தேர்ந்த்ததற்கு வேறெந்த உயரிய நோக்கமும் இல்லை , அதுவே சங்கடத்திற்கு காரணம்.
நான் நெளிவதை பார்த்தாரோ என்னவோ , வண்டியை ஓரமாக நிறுத்தி , நீங்கள் வேண்டுமானால் இறங்கி நடக்கலாம், இது நடப்பதற்கு ஏற்ற பகுதி, நான் பின்னால் வந்து உங்களை ஏற்றி கொள்கிறேன் என்றார். வயதான பிரெஞ்சு அம்மாவை தவிர பிற அனைவரும் இறங்கி நடந்தோம். மிதமான வெயிலில் பின்னிரவு பெய்திருந்த பனிக்கட்டிகளை பந்தாக்கி ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடிக்கொண்டே சென்றோம். அரை மணி நேரத்திற்கும் மேல் நடந்தவுடன் , பின்னால் ஹுசேனின் வண்டி ஹாரன் சத்தம் கேட்டது.
ஒரு விடுதியில் உணவருந்திவிட்டு ஒளரிக்கா பள்ளத்தாக்கு (Ourika valley) நோக்கி சென்றோம். மொரொக்கோ நாட்டினருக்கே இது ஒரு சுற்றுலா மையம். செந்நிறமாய் ஓடும் ஒளரிக்கா நதிக்கரை ஓரத்தில் ,கிடைத்த இடத்தில் எல்லாம் டஜின் உணவகங்கள் வ்யாபித்திருந்தன. நதியின் ஒரு கரையை ஒட்டி சாலை, மறு கரையில் இவ்வுணவகங்கள். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மரப்பாலத்தை கடந்தே இவ்வுணவகங்களை அடைய முடியும். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் மிதக்கும் ஒரு மரப்பாலத்தை இக்கரைக்கும் அக்கரைக்கும் கடந்து , மரப்பாலத்தில் நடக்க வேண்டும் என்ற என் நெடு நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டேன்.
சில உணவகங்கள் சீறிக் கொண்டு கொட்டும் அருவியின் மேல் ப்ளாஸ்டிக் டேபிள் சேர் போட்டு வைத்திருந்தனர். அசாத்திய மன உறுதி கொண்ட சிலர் அதில் அமர்ந்து உணவருந்திக்கொண்டும் இருந்தனர். சில க்ளிக்குகள் மட்டும் சரசரவென க்ளிக்கி விட்டு காரில் ஏறிக் கொண்டேன், பார்ப்பதற்கே அவ்வளவு தொடை நடுங்கியது!. மேலும் சில கிராமங்களை காரில் இருந்தே பார்த்துவிட்டு , மலை இறங்கினோம். எங்கள் விடுதியை அடைய மாலை ஆகிவிட்டிருந்தது. சிறிது நேரம் விடுதி நீச்சல் குளத்தில் விளையாடிவிட்டு அந்நாளை முடித்துக்கொண்டோம்.
கடை வீதி காலையில், பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளர் Yves Saint Laurent (YSL) நினைவாக பராமரிக்கப்படும் மொஜரில் தோட்டத்திற்கு (Jardin Mojarelle) சென்றோம். மொஜரில் என்னும் பிரெஞ்சு ஓவியரின் நாற்பதாண்டு உழைப்பு இந்த தோட்டம். YSL நிறுவனத்தால் மிக அழகாக பராமரிக்கப்படுகிறது. புகைப்படம் எடுக்க மிகச்சிறந்த இடம் என்பதால் காலையிலேயே பெரும் கூட்டம். நாங்களும் சலிக்கும் அளவுக்கு க்ளிக்கி விட்டு மதிய உணவுக்கு அமால் என்ற உணவகத்திற்கு சென்றோம்.
அமால் சமூகத்தில் பின் தங்கிய , கை விடப்பட்ட பெண்களுக்கு இலவசமாக சமையல் வேலை கற்று கொடுக்கும் அமைப்பு. இவர்களுக்கு ரியாத் எனப்படும் சிறு விடுதிகளில் வேலையும் வாங்கி கொடுக்கின்றனர். வேலை பழகும் பெண்கள் சமைத்திருந்தாலும் உணவு நன்றாகவே இருந்தது.
சுன்னி பெரும்பான்மை மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் பெண்களுக்குக் கண்டிப்பாக நிறைய சுதந்திரம் இருக்கிறது. தெருக்களில் சிறுமிகள் சிறுவர்களோடு சேர்ந்து கால் பந்தாடிக்கொண்டிருப்பதைச் சாதாரணமாகக் காணலாம். ஹிஜாப் எனப்படும் தலை மற்றும் மார்பை மறைத்து போடப்படும் துப்பட்டா கணிசமான பெண்கள் அணிந்திருந்தனர். பர்தா எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு . பள்ளி, கல்லூரிகளில் கணிசமானவை இரு பாலர் கல்வி நிலையங்கள். எங்கள் விடுதிக்கு முன் இருந்த மருத்துவக் கல்லூரி பேருந்து நிலையத்தில் நம்மூரை மிஞ்சும் அளவுக்கு கடலை வறுபட்டு கொண்டிருந்தது. பெண்கள் கார், ஸ்கூட்டர் என பல ரக வாகனங்களில் தனியாக பயணிக்கின்றனர். நான் பார்த்த வரையில் எல்லா விதமான வேலைகளிலும் அவர்கள் ஈடுபடுவது போல்தான் தெரிகிறது. நான் வழி கேட்ட எல்லா பெண்களும் அந்நிய ஆணிடம் பேசுவது பற்றி எந்த தயக்கமோ பயமோ இல்லாமல் மிக இயல்பாக வழிகாட்டினர். இங்குள்ள மக்கள் தங்களை ஐரோப்பாவிற்கு மிக நெருக்கமாக உணர்கின்றனர், இந்தளவிற்கான பெண் சுதந்திர மனப்பான்மைக்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். கிராமங்கள் வறுமையின் பிடியில் இருந்தாலும் மாறக்கெஷில் கணிசமான நடுத்தர வர்க்கத்தினரை காண முடிந்தது. வெளிப்படையாக அரசியலும் பேசுகின்றனர். அரபு வசந்ததிற்கு பிறகு அரசாங்கத்தின் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக எங்களுக்கு அரண்மனையை சுற்றி காட்டிய வழிகாட்டி அல் ஹசனி அபிப்பிராயப்பட்டார்.
மதியம் சற்று வெயில் இறங்கியவுடன் மாறக்கேஷின் மார்க்கெட்டுக்கு சென்றோம். பேரம் பேசாமல் மாறக்கெஷ் மார்க்கட்டில் புல் கூட வாங்க முடியாது. அவர்கள் கேட்கும் விலையில் பாதியில் இருந்து தான் பேரமே ஆரம்பிக்கவேண்டும். மொரோக்கோவில் திருட்டு குறைவு ஆனால் பேரம் பேச தெரியாவிட்டால் உங்கள் பணம் உங்களுடையதில்லை. பேரம் பேச மனதளவில் தயாராகவே சென்றேன். ஆனால் பேரம் பேசுவது ஒரு கலை , எனக்கு அது கை வருவது கடினம் என ஒரிரு அனுபத்திலேயே தெளிவாகிவிட்டது. முழு பொறுப்பையும் மனைவி கையில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மற்றவர்கள் பேரம் பேசுவதை பார்த்து சற்றே புரிவது போல் இருந்தது. கீதையின் “பற்றற்று இரு “ என்ற கோட்பாடு பேரத்திற்கு நன்றாக கை கொடுக்கும். வாங்க போகும் பொருள் மேல் நம் விருப்பத்தை வெளிக்காட்டவே கூடாது, நாம் கேட்கும் விலைக்கு தரவில்லையென்றால் கடையை விட்டு இறங்கி விடுவிடுவென்று நடக்க வேண்டும். கடைக்காரன் பின்னால் ஓடிவந்தால் பேரம் படிந்து விட்டது, இல்லையெனில் வேறு கடை. மிகுந்த ஆர்வத்துடன் ஒரு கூஜா கடையில் என் புதிதாய் பெற்ற ஞானத்தை செயல்படுத்த துணிந்தேன். பேரம் முடிந்து, கூஜாவை வாங்கி கொண்டு வெற்றி களிப்புடன் என் மனைவியிடம் கொண்டு போய் காட்டினேன். குட்டி கூஜாவை தூக்கி பார்த்து விட்டு “இதுக்கா இவ்வளவு” என்பது போல பார்த்தாள். பக்கத்தில் இருந்த இன்னொரு கடையில் இதே போன்ற கூஜாவை விலை கேட்டாள், முதல் விலையே நான் வாங்கிய விலையை சொன்னான். பேரம் பேசினால் பாதி விலைக்கு கொடுத்துவிடுவான்! மீண்டும் என் பழைய அறிதலுக்கே சென்று சேர்ந்தேன், பேரம் ஒரு கலை அது எனக்கு கை வராது. இந்த ஞானம் சித்தித்தவுடன் வாங்குவதை மறந்துவிட்டு வாங்குபவர்களை பார்க்க ஆரம்பித்தேன்.
படு சுவராசியமாய் பொழுது போனது. சுற்றிலும் மனிதர்கள் , குறுகலான கடைத்தெரு , உற்சாகமான பேரம் பேசும் குரல்கள் எல்லாம் சேர்ந்து இந்தியா சென்றது போன்ற ஒரு பிரமை. நிறைய பேரம் பேசி, குறைவாக வாங்கி , களைத்து , ஒரு பிரெஞ்சு உணவகத்தின் மொட்டை மாடியில் சென்று இளைப்பாற அமர்ந்தோம். அங்கிருந்து பார்த்தால் மொத்த கடை வீதியும் , ஜமா அல் ஃபனா சதுக்கமும் ஒரே பார்வைக்கு காணக்கிடைத்தது. நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இருள் கவியும் வரை அங்கே அமர்ந்திருந்துவிட்டு விடுதி சென்று சேர்ந்தோம்.

லண்டன்

ஐந்தாம் நாள் குழந்தைகள் இருவரும் களைத்து விட்டதால் வெளியில் எங்கும் செல்லாமல் விடுதியில் உள்ள நீச்சல் குளம், டென்னிஸ் என்று பொழுதை கழித்தோம். விடுதி உணவக வாசலில், ஒரு கை வினை கலைஞர் சதுரங்க காய்கள் , மரப்பாச்சி பொம்மைகள் போன்றவற்றை பழங்கால வில் போன்ற ஒரு மரகடைசல் சாதனத்தை உபயோகித்து செய்து காட்டினார். பொம்மைகளை கையிலும் செய்வார்கள் என்பதே என் பிள்ளைகளுக்கு பெருத்த ஆச்சரியமாய் இருந்தது.
அடுத்த நாள் அதிகாலை விமானத்திற்கு எழவேண்டும் என சற்று முன்னரே அறைக்கு சென்று விட்டோம். ஆரஞ்சும், ஆர்கானும் மணக்கும் இந்த சிகப்பு நகரம் வெறும் ஐந்தே நாட்களில் மனதுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்டது. மாறக்கெஷ் வாசிகளின் விருந்தோம்பல், இந்தியாவை நினைவுபடுத்தும் அம்சங்கள், அருமையான தட்ப வெட்ப நிலை அனைத்தும் அதற்கு காரணமாக இருக்கலாம். அடுத்த முறை வரும் போது சஹாரா போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

0 Replies to “இறைவனின் இருப்பிடம்”

  1. முதுகலை பட்டப்படிப்பு வருடங்களில் மொராக்கோவில் இருந்து வந்து படித்துக்கொண்டிருந்த ஓரிரு மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தபோது கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை மொராக்கோவில் அடியெடுத்து வைத்ததில்லை. உங்கள் பயண அனுபவமும் எழுத்தும் மொராக்கோவை வாளிப்பட்டியலில் (Bucket List 🙂 ) சேர்க்கத்தூண்டுகிறது. பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி.
    அவ்வளவு படங்களை கிளிக்கி தள்ளியவர் ஒரு டஜின், I mean, ஒரு டஜன் படங்களையாவது இணைத்திருக்க வேண்டாமோ? 🙂
    -சுந்தர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.