இன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்

isis-controlled-area

ராக்கில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியாக்கள் என்ற ஒரு சமூகத்தைக் குறிவைத்துத் திட்டமிட்ட இன அழிப்பு நடந்துகொண்டிருக்கிறது. உலகம் அதைக் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்காக, கொல்லப்படும் கூட்டம் காந்தியின் சீடர்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டே வாழ்ந்துகொண்டிருக்கும் ஈராக்கிய ஷியாக்களுக்கு, மதத்தின் பெயரால் இன்னொரு மூர்க்க கும்பலால் வாழும் உரிமையை இழந்துகொண்டிருக்கும் ஓர் இனத்திற்கு, இன்றைய தேதியில் உதவிக்கு சக இனத்தவர் தவிர யாருமில்லை.
இஸ்லாமின் ஷியா, ஸுன்னி பிரிவு சண்டையின் உச்சமே இன்று ஈராக் மற்றும் சிரியாவை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நடந்துகொண்டுள்ளது. தினமும் ஈராக்கின் (குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் குர்திஸ்தான் நீங்கலாக) அரசுக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பகுதியில் ஏதேனும் ஒரு நகரை வன்முறைக் கும்பல் கைப்பற்றுகிறது. பின்னர் அந்த நகரத்தில் இருக்கும் ஷியாக்களில் ஆண்களைக் கொல்லுதல், பெண்களை அடிமையாக்குதல், பாலியல் வன்முறை, கூட்டுவன்புணர்வு செய்து கொடூரமாகக் கொல்லுதல் என நாகரிக உலகம் காண விரும்பாத, சரித்திரத்தில் எப்போதோ நடந்ததாக படித்த விஷயங்களை உலகம் இன்றைக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
சில மாதங்கள் முன்புவரை ஈராக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த ராணுவ முன்னேற்றங்களைக் கண்டு கொண்டிருந்தது. ஈராக்கின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பைஜி ரிஃபைனரியை ஐஎஸ்-ஸிடமிருந்து மீட்டது. ஆனால், அது ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை. உள்ளூர் ஸுன்னிகளின் துணையுடன் மீண்டும் பைஜி ரிஃபைனரியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது ஐஎஸ். மீண்டும் ஈராக்கிய ராணுவம், மீண்டும் ஐஎஸ் எனக் கண்ணாமூச்சி விளையாட்டு நடந்துகொண்டுள்ளது. இன்றைய தேதியில் பைஜி ரிஃபைனரி அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மை வேறாக இருக்கலாம்.
இதுவரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த முன்னாளைய சதாம் ஹுசைன் படையின் வீரர்களும், படையில் முக்கியப் பொறுப்பில் இருந்து தலைமறைவாக இருந்தவர்களும் ஐஎஸ்-உடன் கைக்கோர்த்துக்கொண்டுள்ளனர். இதுதவிர ஸுன்னி அரபுகள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளையே இதுவரை ஐஎஸ் பிடித்து வருகிறது. ஸ்லீப்பர் செல்களின் உதவியைக் கொண்டுதான் நகரங்களை எளிதாகப் பிடிப்பதாக ஈராக்கிய ராணுவமும், பிரதமரும் சொல்கிறார்கள். ஐஎஸ் மற்றும் ஸுன்னி அரபுகளுக்கு ‘ஸுன்னி இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை ஷியா அரசாங்கம் ஆள்வதா’ என்ற எண்ணம். ஈராக்கை மீண்டும் ஸுன்னி இனத்தவர் ஆளும் நாடாக மாற்ற ஐஎஸ் உடன் அவர்கள் கைக்கோர்த்துள்ளனர். முழு ஈராக்கை இப்போதைக்கு கைப்பற்ற முடியாவிட்டாலும், ஸுன்னி இனத்தவர்கள் அதிகமிருக்கும் வடக்கு பிராந்தியத்தை முழுதாகக் கைப்பற்றுவதே நோக்கம்.
ஷியாக்கள் 60%க்கும் மேலிருக்கும் ஈராக்கில் நாட்டை ஐஎஸ்-ஸிடமிருந்தும் ஸுன்னிகளிடமிருந்தும் காப்பாற்ற இப்போதிருக்கும் ஒரே நண்பன் ஈரான் மட்டுமே. ஈரானும், ஷியா மிலிஷியாவும், ஓரளவுக்கு ஈராக்கியப் படைகளுமே இப்போது களத்தில்.
அமெரிக்கா ஈராக்குக்கு நிறைய உதவிகள் அளிக்கிறது. ஆனால். ஐஎஸ்-ஸிடமும் அமெரிக்கத் துப்பாக்கிகளும், ஆயுதங்களும் இருப்பது ஈராக்கிய ராணுவத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எப்படி அவர்கள் கைக்கு வந்து சேர்கிறதோ அமெரிக்க ஆயுதங்கள்! இதற்கு முன்னர் சவுதி அரேபிய நாட்டின் ஆயுதக்குவியல்கள், ஐஎஸ் கைவிட்டு ஓடிய இடங்களில் கிடைத்தன. இப்போது அமெரிக்காவின் தயாரிப்புகளும் கிடைக்கின்றன.
ஈராக் பிரதமரும் அமெரிக்கா, ரஷ்யா எனப் பயணம் செய்து ராணுவத் தளவாடங்களுக்கான சப்ளைகளுக்காக கையேந்திக்கொண்டிருக்கிறார். பயங்கரவாதிகள் கையில் லேட்டஸ்ட் தயாரிப்புகள். ஈராக்கிய ராணுவம் போதிய ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இல்லாமல் தவிக்கிறது.
சமீபத்திய நிலவரம் அன்பார் மாநிலத்தின் ரம்மாதி என்ற நகரத்தையும் சிலநாட்களுக்கு முன்னர் ஐஎஸ் பிடித்துள்ளது.  ரம்மாதியிலிருந்து பாக்தாத்தின் முக்கியச் சாலையை அடைய ஒருமணி நேரம் போதும். அதன்பின்னர் பாக்தாத்தை ஒருபக்கத்திலிருந்து தனிமைப்படுத்தி விடலாம். ரம்மாதியின் எல்லையில் இருந்து பாக்தாத் மீது தாக்குதல் தொடுக்கலாம். இதையெல்லாம் தடுக்க இயலாமல்தான் ஈராக்கிய ராணுவம் திண்டாடிக்கொண்டிருக்கிறது. ஷியா மிலிஷியா என்ற ஷியா இனப்பிரிவின் உதிரி ராணுவப்பிரிவுதான் இன்றைய தேதிக்கு உண்மையில் ராணுவத்தின் வேலையை செய்துகொண்டிருக்கிறது.
ரம்மாதி நகரம் வீழ்ந்தது ஈராக்கிய ராணுவத்தின் வரலாற்றில் மிகமோசமான பக்கமாக இருக்கும். ஐஎஸ் படைகள் வந்ததும் ஒரு சிறு சண்டைகூட நிகழாமல் ரம்மாதி வீழ்ந்திருக்கிறது.  ஈராக்கிய ராணுவம் எந்த அளவுக்குப் பயந்திருக்கிறார்கள் என்றால், கையில் சிவில் ட்ரெஸ் ஒன்று வைத்துக்கொண்டு சுற்றும் அளவுக்குப் பயந்திருக்கிறார்கள். ஐஎஸ் படையை எதிர்கொள்ள நேர்ந்தால் அப்படியே ஈராக்கிய ராணுவ உடையைக் கழற்றிவிட்டு சிவில் உடைக்கு மாறித் தப்பித்துக்கொள்ள வசதியாகக் கையில் சிவில் துணியுடன் திரிகிறார்கள்.
பாக்தாத் வீழ்ந்தால் அதன் பின்னர் மொத்த ஈராக்கும் ஐஎஸ் கையில் விழ அதிக நாட்களாகாது. அதை மீட்க நடக்கும்போரில் இன்னும் லட்சக்கணக்கானோர் கொல்லப்படுவார்கள். சதாம் செய்ததைவிட மிக மோசமான இன அழிப்பு ஐஎஸ்-ஸால் செய்யப்படும்.
கடந்த சில நாட்களாக தீவிரச் சண்டை நடந்து வருகிறது, ரம்மாதி நகரத்தை மீட்க. ஆரம்பத்தில், அதாவது அன்பார் மாநிலத்தின் பகுதிகள் கைவிட்டுப் போக ஆரம்பித்தபோது, அன்பார் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுதல் என்பதே இலக்காக இருந்தது. இன்றைக்கோ ரம்மாதி நகரத்தை மீட்பதே இலக்காகச் சுருங்கியுள்ளது.
ஏற்கெனவே ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் மோசுல் மற்றும் அதைச் சுற்றியுள்ள  நகரங்களை மீட்பதெல்லாம், இனி புதிதாய் தளவாடங்களும், வெடிமருந்துகளும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அனுப்பிய பின்னரே சாத்தியம்.
ரம்மாதி நகரத்திலிருந்து இரு நாட்களுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாதிகள் 200 பேரை ஈராக்கியப் படைகள் சுற்றிவளைத்துப் பிடித்திருக்கின்றன. ரம்மாதி நகரமீட்பில் இது ஒரு முக்கியமான முன்னேற்றம்.
நகரத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது 200 பேர்களுக்குள்தான். கிட்டத்தட்ட 2000 ராணுவ வீரர்களுக்கும் அதிகமாக இருந்தபோதிலும் ஐஎஸ்-ஸால் ரம்மாதியைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் உள்ளூரிலிருக்கும் ஐஎஸ் ஆதரவாளர்கள்.
பொதுஜன ஈராக்கியர்கள் மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொள்வதும், இழப்பதுமாக இருக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு எங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அரசாங்கம் தரைவழி மற்றும் வான்வழித்தாக்குதல் நடத்திய வீடியோக்களை தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறது.
இதுவரை ஒரு சில பகுதி ஸுன்னி இஸ்லாமியர்கள் தவிர எல்லோரும் ஈராக் நாட்டுக்கே தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்ற நிலை மாறி, நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. அதெப்படி, உள்ளூர் ஸுன்னி இஸ்லாமியர்களின் ஆதரவின்றி இவர்கள் இப்படி உள்ளே நுழைய முடியும் என்ற குரல் இன்னும் பலமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. உண்மையில், ஐஎஸ் இதுவரை நுழைந்து பிடித்த நகரங்களெல்லாம் ஸுன்னி இனத்தவர்கள் அதிகம் இருக்கும் நகரங்களும் பகுதிகளுமே. நியாயமாகப் பார்த்தால் ஐஎஸ் நுழைந்ததும் ஸுன்னி மக்கள்தான் மகிழ்சியுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால்,  ஐஎஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான ஸுன்னி குடும்பங்கள் கிடைத்ததை அள்ளிக்கொண்டு, அரசாங்கப்படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கும் ஓடி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம்  ஐ எஸ் பயங்கரவாதிகளை அரசாங்கத்திற்காக எதிர்த்தோம். ஆனால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் நம்பிக்கை துரோகிகள், எங்களைக் கைவிட்டு விட்டார்கள். எங்கள் நிலப்பகுதிகளில் ஐஎஸ் தாக்குதல் நடத்த வந்தபோது அரசாங்கப் படைகளை அனுப்பி வைக்க வேண்டியும் ஒரு படையும் வரவில்லை. நாங்களே எதிர்த்து நின்று உயிர்களைப் பலிகொடுத்ததுதான் மிச்சம் எனவும் ஒரு குழு புலம்புகிறது. இதன் விளைவு, ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்த்த இனக்குழுக்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கின்றனர். இவர்களைக் குறித்த கணக்கு ஏதும் இருக்குமா எனத்தெரியவில்லை.
ஈராக்கிய மிலிட்டரியும், ஷியா மிலிஷியாவும் சேர்ந்து எத்தனைதூரம் காப்பாற்ற முடியும் எனத் தெரியவில்லை. உண்மையில் 2 மாதங்களுக்கு முன்பு இருந்த நேர்மறை எண்ணங்கள் ராணுவத்திடமோ, பொதுமக்களிடமோ இருப்பதாக தெரியவில்லை. ஹைதர் அல் லப்பாதியும் அமெரிக்காவிற்குச் சென்று வான்வழித்தாக்குதலைத் தீவிரப்படுத்தக் கோருகிறார். வான்வழித்தாக்குதல் கொண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளைத் தடுத்த நிறுத்தவில்லையெனில் எந்த ராணுவத்தாலும் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறார். திக்ரித் நகரை மீட்டபோது இருந்த நம்பிக்கை இன்றைக்கு ரம்மாதி நகரம் வீழ்ந்ததில் கலைந்துவிட்டிருக்கிறது. சமீபத்திய நம்பிக்கை ஊட்டும் செயலென்றால், ரம்மாதியை மீட்க முழுவீச்சில் போர் நடைபெறுகிறது என்பதுதான்.
ஈராக் ராணுவம் இப்படியே ஒவ்வொரு நிலமாகப் பறிகொடுத்துக்கொண்டிருந்தால் ஷியா மிலிஷியாவும், ஈராக்கிய ராணுவமும் போரிடுவதே கெர்பலாவையும், நஜஃபையும் காப்பதற்காகத்தான் என்ற அளவில் வந்து நிற்கும். கெர்பலாவும், நஜஃபும் அழிக்கப்படுவது ஷியாப்பிரிவின் இஸ்லாத்தையே அழிப்பதுபோல. அதைக்காக்க உயிரையும் கொடுப்பார்கள்.
கடந்த மூன்று நாட்களாக (மே 25 முதல் 27 வரை) வேலை விஷயமாக பாக்தாத்தில் இருந்தேன். ஒவ்வொரு அரசு அலுவலகம், விமான நிலையம், ஹோட்டல்கள் என எல்லா இடங்களிலும் ஈராக்கிய சேனலே ஓடிக்கொண்டிருக்கிறது, அவர்களின் போர்க்கால பாடல்போன்ற ஒன்றை பின்னணியில் ஓடவிட்டு ஈராக்கிய ராணுவத்தினரின் சாகசங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அணிஅணியாக ராணுவ கவச வண்டிகள் புழுதி பறக்கச் செல்வதையும், ஐஎஸ் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி பீரங்கிகளால் தாக்குவதையும் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, ஐஎஸ் பிடியில் இருக்கும் யசிதி இனப்பெண்கள் படும் கொடுமைகளைத்தவிர. குர்துகள் குறித்து சமீபத்தில் செய்திகள் எதையும் படித்திருக்க மாட்டோம், ஏனெனில் குர்திஸ்தானின் பெஷ்மெர்கா படைகள், ஐஎஸ் படைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். அவர்களின் பகுதிக்குள் (குர்திஸ்தான்) நுழைய முயலும் எந்த ஐஸ் படையும் சுத்தமாக அழிக்கப்படுகிறது. ஐஎஸ் செய்த அத்தனை கொடூரங்களையும் பெஷ்மெர்காவும் தன்னிடம் சிக்கும் ஐஎஸ் படைகளுக்குச் செய்கிறது. அதனால், குர்திஸ்தானை ஒட்டிய பகுதிகளில் எந்த புது நிலப்பகுதியும் இழக்கப்படவில்லை. ஓரளவுக்கு ஈராக்கின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன பெஷ்மெர்கா படைகள்.
இனி யார் வந்து எப்படி இந்தப் போரை மடைமாற்றுவார்கள், யாருக்குச் சாதகமாக முடியும் என்பது சொல்லுக்கு லட்ச ரூபாய் பெறும் கேள்வி. உண்மையில் இது ஓர் இழுபறி போராகவே நீண்டு செல்ல வாய்ப்புகள் அதிகம். போரை விரும்பும் நாடுகளும், ஆயுதம் விற்க விரும்பும் நாடுகளும்கூட இந்த சதியில் இருக்கலாம். இல்லையெனில் உலகநாடுகளால் ஐஎஸ்ஸை ஆரம்பத்திலேயே அழித்திருக்க முடியும்.  அதைச் செய்யாமல் வளர விட்டுவிட்டு இன்றைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா “ஐஎஸ் குறித்து தப்புக்கணக்கு போட்டுவிட்டேன்” என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அதையும் நம்பும் அப்பாவி அமெரிக்கர்களும் இருக்கக்கூடும்.
உலக நாடுகளின் விளையாட்டில் ஈராக் இன்னொருமுறை பகடைக்காயாகி இருக்கிறது. சாதாரண ஈராக்கியன்தான் பாவம். பார்க்கலாம், உலகம் இந்தக் கொடூரத்தைத் தடுத்து நிறுத்த முயல்கிறதா, இல்லை, முழுவதும் அழிய விட்டுவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கப்போகிறதா என.
போர் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் எவ்வளவு சீரழிக்க முடியும் என்பதற்கு நாம் இன்று காணும் ஒரு சாட்சி ஈராக்.

0 Replies to “இன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.