ஆர் அபிலாஷின் நாவல்-'ரசிகன்'

Rasigan-Book-Abilash_Chandran_Yuva_Puraskar_Novel

ஆர். அபிலாஷின் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, வி.வி.எஸ் லக்ஷ்மன் ஒய்வு பெற்றபோது அவர் எழுதியது மற்றும் Ship of Theseus படம் பற்றிய கட்டுரை. சமீபத்தில் உயிர்மையில் வந்த அதிகாரம்,ஜெயகாந்தன் குறித்தது, மற்றும் பிராமணரும் பெரியாரும் பற்றிய கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவரது சிறுகதைகள் ஏதும் வாசித்ததில்லை. கால்கள் நாவலைப் படிக்கத் தொடங்கினேன். ஏனோ முழுமையாக படித்து முடிக்க முடியவில்லை. அதற்கு சாகித்ய அகடெமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டதால் மீண்டும் அதன் மீது கவனம் வந்தது. கால்கள் நாவலை மீண்டும் எடுத்துப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அவரது இரண்டாவது நாவல் ரசிகன் கிடைத்ததால் அதை படித்தேன்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு புது ஹீரோவும் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கான வளர்ச்சிப் பாதையில் ஒரு குறிப்பிட்ட ரோலை கட்டாயம் செய்திருப்பார். அது, தன் தாயைக் கொன்று தங்கையைக் கெடுத்து குடும்பத்தை அழித்தவனை பழிவாங்கும் பாத்திரம். இதற்கு விதிவிலக்குகள் உண்டு எனிலும், இதை ஒரு பொதுவிதியாகச் சொல்லுமளவு நம் நாயகர்கள் கணிக்கக்கூடிய பாதையில்தான் பயணித்திருக்கின்றனர். இதைப் போலவே தீவிர தமிழ் இலக்கியத்தில் அநேகமாக எல்லா எழுத்தாளர்களுமே ஒரு சீரழிந்த அறிவுஜீவி/ கலைஞன் குறித்த நாவலோ அல்லது சிறுகதையோ எழுத வேண்டும் என்று இருக்கிறது போல. சு.ரா ஆரம்பித்து, ஜெயமோகன் தொடர்ந்து, ராமகிருஷ்ணன் மற்றும் பலர் எழுதியது இப்போது அபிலாஷின் முறை (மிகச் சமீபத்தில் விநாயக முருகனும் உயிர்மையில் அப்படி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். உடனே இவர்கள் எல்லாரையும் சு.ரா. ஜெமோ வரிசையில் வைக்கமுடியுமா என்ற கேள்வி அவசியமில்லை, இது அப்படிப்பட்ட வரிசைப்படுத்தலில்லை- ரசிகன் குறித்துப் பார்க்கலாம்.
ரசிகன் கதைசொல்லியான கிருஷ்ணனின் நண்பரும், ஆசானுமான மிகப்பெரும் அறிவுஜீவி சாதிக்கின் ஆளுமையையும், அதன் சிதைவையும் இறுதி வீழ்ச்சியையும் சொல்லும் நாவல். தமிழ் அறிவுஜீவிகள் பலரின் இருப்பிடமான தமிழக கேரள எல்லைப்பகுதியான குமரி மாவட்டத்தில்தான் இந்த மகத்தான அறிவுஜீவியின் இருப்பிடமும். சென்ற நூற்றாண்டின் 90கள் ஆரம்பித்ததில் துவங்கி அநேகமாக 2005இலோ அல்லது 2008இலோ அவரது வாழ்க்கை தன் முழு வீழ்ச்சியை அடைந்து விபத்தா தற்கொலையா என்று அறிய முடியாத சூழ்நிலையில் அவரது மரணத்துடன் முடிகிறது நாவல்.
இந்தப் படைப்பின் இரு நேர்மறையான அம்சங்களை முதலில் சொல்லி விடலாம். ஒன்று அபிலாஷின் மிகச் சரளமான நடை. உரையாடல்களில் உள்ள யதார்த்தம். நாவல் முழுக்க வெளிப்படும் அவரது பரந்துபட்ட வாசிப்பு மற்றும் உலக சினிமா அறிவு.
துரதிருஷ்டவசமாக, இந்த நாவலில் சொல்லக்கூடிய நேர்மறை அம்சங்கள் இவை மட்டுமே. மகத்தான ஒரு இடதுசாரி அறிவுஜீவி இறுதியில் ரஜினி ரசிகனாக மாறி இறப்பதற்கான அழுத்தமான சூழ்நிலைகள் இல்லாமல், வீழ்ச்சியில் தவிர்க்க இயலாத் தன்மை என்று எதுவும் வெளிப்படாமல், அவனது செயல்கள் முழுக்க முழுக்க ஒரு சேதமடைந்த மனதின் செயல்பாடுகளாக மட்டுமே படைப்பில் பதிவாகியுள்ள காரணத்தால், நாயகனின் வீழ்ச்சி நம்மிடம் பெரிய சலனம் எதுவும் ஏற்படுத்துவதில்லை.
இந்த நாவலின் பின்னட்டையில் உள்ள வாசகங்களை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்-

“தமிழகத்தின் எண்பது 90களின் தீவிர லட்சியவாத சிறுபத்திரிக்கை மரபைச் சேர்ந்த ஒருவன் இன்றுள்ள கேளிக்கை கலாச்சாரத்துக்கு வந்து சேர்கையில் என்னவாகிறான் என்பதே இந்த நாவல். அத்தகையவன் இன்றுள்ள மாற்றத்தை எதிர்க்கலாம் அல்லது அதைப் புறக்கணித்து தனது கனவுலகில் வாழலாம். அல்லது இதன் பகுதியாகி சந்தர்ப்பவாதி ஆகிவிடலாம். இந்தப் போராட்டம்தான் இந்த நாவலின் ஆதாரம். கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாக தன்னைத் தானே தண்டித்துக் கொள்பவனின் கதை இது.
“இன்னொருபுறம் இந்நாவல் முழுமையான தன்னுணர்வு பெற்ற மனிதன் தன் வாழ்வின் நன்மை தீமைகளைத தீர்மானிக்கும் நிலைமைக்கு வருகையில் எப்படியான பதற்றத்தை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான் என்பதையும் சித்தரிக்கிறது. கேளிக்கை என்பது வலி மிகுந்த வெறுமையான தப்பித்தல்தானா, தனிமனிதனின் இருப்பு அவனுக்கு அப்பாலான ஒன்றா ஆகிய கேள்விகளை கேட்கிறது.”

இதை எழுதியவருக்கு ஒரு தனி பரிசு வழங்கலாம்.
ஆனால் அப்படியொரு இலட்சியவாத சிறுபத்திரிக்கை கலாச்சாரத்தில் இருந்து வரும் ஒருவன் ஏன் இப்படி ஒரு சீரழிவு கேளிக்கை கலாச்சாரத்தை வந்தடைய வேண்டும் என்ற கேள்வியை இந்நாவல் எழுப்புவதில்லை. அப்படியானதொரு வீழ்ச்சிக்குச் செலுத்தக்கூடிய எந்த ஒரு நிகழ்வுமே இந்நாவலின் நாயகனின் வாழ்வில் இல்லை. ஒரு சிறுபத்திரிக்கையாளனாகவும், ட்யுடோரியல் கல்லூரி ஆசிரியராகவும், மிக மரியாதையுடனேயே அவன் நடத்தப்படுகிறான். இந்த நாவலில் அவனைச் சுற்றி வரும் பெண்களே அதிகம். ஏறக்குறைய ஒரு எம்.ஜி.ஆர். போல அவன்தான் பெண்களிடமிருந்து தனித்து நிற்கிறான். கனவு காண்பவர்கள் அவர்களே. அவன் காதலிக்கும் இரு பெண்களையும் கைவிடுவதற்கான எந்த அழுத்தமான காரணங்களும் நாவலில் சொல்லப்படுவதில்லை. கதாநாயகனின் குண நலனை, சொல்லப்போனால் குணக்கேட்டினைத் தவிர. அவன் எந்த லட்சியத்துக்குகாக வாழ்கிறான் என்ற ஒரு தெளிவான பார்வையும் இல்லை.
தவிர நாயகன் தன் குடும்பத்தினரிடம் நடந்து கொள்ளும் முறைக்கு எல்லாம் எந்தவிதமான தர்க்கரீதியான காரணங்களும் அளிக்கப்படுவதில்லை. மீண்டும் அவனது குணாம்சம் அப்படி என்பது தவிர. இப்படியொரு வீழ்ச்சியினை நியாயபடுத்தும் எந்தவொரு சம்பவமும் இல்லை. “A man’s character is his fate”, என்று ஹெராக்லைட்டஸ் சொன்னதாக ஒரு குறிப்புண்டு. ஆனால் ஒருவனின் சூழலே அவனது குணத்தை தீர்மானிக்கிறது என்ற மார்க்சிய அணுகுமுறையை ஒரு முற்போக்கு சிந்தனையாளருக்கு நினைவூட்டாமல் இருக்க முடியாதல்லவா? ஒருவனது இயல்பு உருவாகிப் படிவதற்கும் சில சம்பவங்களாவது நடந்திருக்க வேண்டும். ஆனால் ரசிகனில் அப்படி ஒன்றிரண்டுகூட இல்லை.
இது போக இந்த நாவலில் மிக முக்கிய குறையாக நான் காண்பது அதன் நிகழ்வுகளில் உள்ள காலவரிசைக் குழப்பம் மற்றும் அதை பதிவு செய்வதில் உள்ள அலட்சியம்.
நாவலின் துவக்கத்திலேயே ஒரு இந்திய பிரதமர் கொல்லப்படும் சம்பவம் தெளிவாகச் சொல்லப்படுகிறது. அது ராஜீவ் காந்தி என்பதிலும் ஆண்டு 1991 என்பதிலும் எந்த ஐயமும் இல்லை. அந்தச் சம்பவத்தினூடாக பயணம் செய்யும் கிருஷ்ணன் சாதிக்கின் வீட்டில் உள்ள ஒரு குழந்தைக்கு தாலாட்டாக அவனுக்குப் பிடித்த பாடலான “உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு” என்ற பம்பாய் படப் பாடலைப் பாடுகிறான். பம்பாய் படம் வெளியானது 1995ல். இது போல பல பிழைகளைச் சொல்லலாம். கடைசியில் சிகரமாக ஒன்று. சாதிக் ஒரு ரஜினி படத்தின் 150வது நாள் விழாவின்போது இறக்கிறான். அது சந்திரமுகி என்பது அத்திந்தோம் பாடல் ஒலிப்பதிலிருந்து அறிய முடிகிறது. சந்திரமுகி வந்தது 2005ல். அதற்கு முன்னால் சில பக்கங்களில் சாதிக் வாடகை கேட்டு வரும் வீட்டு உரிமையாளரிடம் மன்மோகன் சிங் அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் அணு ஒப்பந்ததின் மோசமான விளைவுகள் குறித்து ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றுகிறான். அணு ஒப்பந்தத்தின் ஆண்டு 2008. மேலும், 90களின் துவக்கத்தில் ஒரு ட்யுடோரியல் கல்வி ஆசிரியனாக இருந்தவன் 2000ங்களில் ஆரம்பத்தில் எப்படி ஒரு மென்பொருள் விற்பன்னன் ஆகிறான் என்பது குறித்து எதுவும் விவரிக்கப்படவில்லை.

தமிழ் படைப்புகளுக்கு கவனமான எடிட்டிங் வேண்டியிருக்கிறது என்று பலமுறை உணர்ந்திருக்கிறேன். அந்த எண்ணத்தை உறுதி செய்த படைப்பு இது.
 
அபிலாஷ் தான் இரண்டு நல்ல நாவல்களை தந்திருப்பதாக சமீபத்தில் ஒரு கட்டுரையில் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கெல்லாம் இன்னும் காலமிருக்கிறது. தனக்கு அமைந்திருக்கும் சரளமான நடையையும், பரந்த வாசிப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஒரு நல்ல நாவலைத் தருவார் என்று நம்ப இடமிருக்கிறது என்று மட்டுமே நான் வாசித்த அளவில் அவர் எழுத்து குறித்து சொல்ல முடியும். 

பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975763
பக்கங்கள் : 400
பதிப்பு : 1
வெளியான ஆண்டு : 2014
விலை : ரூ.350
சுட்டிகள்:
1. அபிலாஷ் சந்திரன்: வி.வி.எஸ் – ஒரு நடனத்தின் முடிவு
2. மின்னற் பொழுதே தூரம்: “தீஷியஸின் கப்பல்”: கலகக்காரர் கோக் குடிக்கலாமா?