வாசகர் மறுவினை

ஒரு தமிழ் எழுத்தாளரின் இறுதிச் சடங்கு – (ஜெயகாந்தன் அஞ்சலி)

இப்படி விரிவாக ஒரு வருகைப் பதிவேடு போட்டமைக்கு நன்றி. அதற்குள் ஒரு வரி சாகித்ய அகதாமி சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டதையும் சொல்லியிருக்கலாம். விளம்பரத்திற்காக அல்ல. ஒரு பதிவுக்காக. இதற்காக நான் உங்களைக் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் என் மகன் பெயரும் சுகன். அழைப்பது சுகா!
மாலன்

oOo

127ஆம் இதழ்

சொல்வனம் இவ்விதழில் தெருக்கூத்து பற்றிய வெங்கட் சாமிநாதன், உஷா கட்டுரை அக்கலை பற்றி நன்கு புரிந்து கொள்ள பயன்படுகிறது. எங்கள் பகுதிகளில் திரௌபதியம்மன் ஆலயங்களும் இத்தகைய கூத்துகளும், பாரதச் சொற்பொழிவுகளும் அதிகம். நான் சிறு வயதில் பார்த்த அர்ச்சுணன் தபசும், திரௌபதி கதையும் நினைவிற்கு வருகின்றன. கதையினூடாக வரும் கேலிகளும், கிண்டலான நாட்டுப்புறப் பாடல்களும் நினைவில் என்றும் உள்ளவை. தெருக்கூத்தில் நான் நல்லதங்காள் கதையையும் பார்த்துள்ளேன். கிராமங்களில் இவையெல்லாம் வாழ்வோடு இணைந்து நிகழ்ந்தவை. நல்ல பதிவு.
சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பற்றிய நேர்காணலும் நல்ல தகவல்கள். தமிழின் சிறந்த படைப்புகள் சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டால் நிச்சயம் கவனத்தைப் பெறும்.
சோழகக்கொண்டலின் ஆடிகள் பற்றிய கவிதை நல்ல அனுபவம். கலையும் பிம்மபங்களின் பின்னுள்ள மௌனம். சத்யானந்தனின் கவிதை நன்று. கு. அழகர்சாமியின் கவிதை தனிப்பட்ட அனுபவமாக மனதில் நிற்கிறது.
கிடாவெட்டு சிறுகதை ஏற்கனவே வாசித்த சில படைப்புகளை நினைவு படுத்தினாலும் சுவாரசியமானது. பந்தயக்குதிரை சமகால நிகழ்வில் மனதின் ஓட்டங்களை நன்றாகக் கொண்டு வந்திருக்கிறது.
நன்றி
மோனிகா மாறன்
வேலூர்.

oOo

கம்பராமாயணம் – சித்திரங்கள்

அருமையான கட்டுரை. கம்பன் கவி அமுதம் சிறிதேனும் பருக எங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. ’எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’ இந்த வரியை படிக்கும் பொழுது, திருவிளையாடல் புராணத்தில் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலத்தில் அவன் அந்த மலை போல் குவிந்திருந்த அன்னத்தை உண்டதை புலவர் வருணிக்கும் வரிகள் நினைவுக்கு வந்தது.

‘அடுத்து இருந்ததே கண்டனர் அன்ன மா மலையை
எடுத்து அயின்றது அடிசில் அங்கு இருந்தது காணார்.’

‘அதனை அவன் எடுத்ததையும் கண்டிலர், உண்டதையும் கண்டிலர்’. கம்பர் ‘இற்றது கேட்டார்’ என்கிறார். பரஞ்சோதி முனிவர் ’உண்டதைக் கண்டிலர்’ என்கிறார்.
என்னே கவி நயம், கற்பனை.
சுந்தரம் செல்லப்பா

oOo

மாயத்தோற்ற ஊக்கிகள்

இந்த பிரபஞ்சத்தை நான்கு விசைகள் (strong force, week force, electromagnetic force and gravitational force) இயக்குவதாக அறிவியல் கூறுகிறது. உயிரை இயக்கும் விசையாக இராசயான விசையை (chemical force) கருதலாமா?
பாலா சின்னராஜா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.