மொழியாக்கங்கள் குறித்த உரையாடல்- பகுதி 2

திரு ராஜ்மோஹன், சாகித்ய அகாதெமி செயல்திட்டங்களின் பொறுப்பாளராக இருக்கிறார். தனியார் பதிப்பகங்கள், மொழிவளர்ச்சி அமைப்புகள், மொழிபெயர்ப்பு மையங்கள் மற்றும் சாகித்ய அகாதெமி முதலான நிறுவனங்கள் பலவற்றிலும் இந்திய புனைவாக்கங்களுக்கான ஒருங்கிணைப்பாளராய் செயல்பட்டிருப்பதால், இன்று மொழிபெயர்ப்புகளுக்கான முன்னெடுப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புத்துறை ஆய்வாளர்களுக்கு மிகவும் முக்கியமான நபராக விளங்குகிறார். தற்போது அவர் “மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேசிய பதிவேடு” ஒன்றைத் தொகுக்கும் பணியிலுள்ளார்– இந்திய மொழி படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும் வேறு உலக மொழிகளிலும் மொழிமாற்றம் செய்பவர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பாக இது உருவம் பெற்று வருகிறது. இது தவிர, இந்திய இலக்கியத்தை ஆவணப்படுத்தும் பணி, சாகித்ய அகாதெமியின் பெல்லோஷிப் ப்ராஜக்ட் மற்றும் இந்திய எழுத்தாளர்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய இணைய தகவற்களஞ்சியம் முதலியவற்றையும் கையாளும் பொறுப்பில் உள்ளார். இவை தவிர, இந்தியன் லிடரேச்சர் ஜர்னலின் துணைப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றுகிறார்.

ind_scripts

நேர்முகத்தின் சென்ற பகுதியில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து சில துணைக்கேள்விகள் கேட்க விரும்புகிறேன். இது தவிர, பேட்டியை வாசித்த நண்பர்கள் சில கேள்விகளை அனுப்பியிருக்கின்றனர், இவற்றையும் பேசலாமா?

பேசலாம், சொல்லுங்கள்.

சாகித்ய அகாதெமி தமிழிலிருந்து சிந்தி, குஜராத்தியிலிருந்து கன்னடம் என்று பிராந்திய மொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறது என்று கூறினீர்கள். நேரடி மொழிபெயர்ப்புகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் உண்டா? ஆங்கிலம் போன்ற ஒரு பெருமொழியில் மொழிபெயர்த்து, அதிலிருந்து பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லக்கூடாதா? அது எளிதாக இருக்குமே.

ஒரு பண்பாட்டின் வேர் முதல் கனி வரை உள்ள அனைத்தும் மொழியாய் பேசும்போது ஒலி வடிவில் வெளிப்படுகின்றன. புரிதலாக இருக்கட்டும், கற்பனையாக இருக்கட்டும், தரிசனங்கள், ஏன் பிரமைகளும் மனமயக்கங்களும்கூட பண்பாடால் பதப்படுத்தப்பட்டவையே. எனவே பண்பாட்டு தாக்கமில்லாத தூய மொழி ஒன்று இருக்க முடியும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காக்களிலும் உள்ள பண்பாட்டு வேறுபாடுகள் மிகக் குறுகியவை. வேறுபாடுகள் உண்டு, ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையேயுள்ள பண்பாட்டு வேறுபாடுகள் அளவுக்கு அன்னியத்தன்மை இருப்பதில்லை. எனவே, ஒரு ஐரோப்பிய மொழி நூலை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்ப்பதில் சிக்கல் இல்லை – இங்கு நான் ஆங்கில மொழிபெயர்ப்பு என்று சொல்லவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஆனால் தெற்காசிய மொழிகளுக்கு வரும்போது அவற்றை ஆங்கிலத்திலோ ஐரோப்பிய மொழியிலோ மொழிபெயர்ப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம்.
ஓர் உதாரணம் சொல்கிறேன் – இதைப் பலர் விரும்பாமல் இருக்கலாம், சிலர் கோட்பாட்டுச் சாய்வுகள் காரணமாக இதை ஏற்றுக்கொள்ள மறுக்கவும செய்யலாம். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு சமயச் சரிதை ஶ்ரீ ராமகிருஷ்ணரின் உரையாடல்கள். அது வங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட  போது, ‘த காஸ்பெல் ஆஃப் ராமக்ருஷ்ணா’ என்று தலைப்பு.
இந்த நூலுக்கு மொழி பெயர்ப்புகளாக, பெரும்பாலான இந்திய மொழிகளில்  கிட்டியவை எல்லாம் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பெறப்பட்டவை என்பதால், ஆங்கில மொழிபெயர்ப்புக்காகச் செய்யப்பட்ட பல மாறுதல்களே இந்த மொழிகளுக்கும் சென்றிருக்கின்றன. தவிர அந்தந்த மொழிச் சூழலுக்குத் தக்க செய்யப்பட்ட மாறுதல்கள் வேறு சேர்ந்திருக்கின்றன. அது தவிர, நேரடியாக வங்க மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டவற்றிலும் கூட இந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் பாணியே பின்பற்றப்பட்டிருக்கிறது. இவற்றின் கூட்டு விளைவாக, எந்த இந்திய மொழியிலும் மூல நூலான வங்க மொழிப் புத்தகத்திற்கு நியாயம் செய்யும் மொழி பெயர்ப்பு என்று எதுவும் இல்லை.
நான் சொல்வதை தயவு செய்து தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நானும் ஆங்கில மொழிபெயர்ப்பை மிகவும் நேசிக்கிறேன். அது உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களை இந்தியா நோக்கியும் இந்து சமயம் நோக்கியும் ஈர்த்திருக்கிறது.
சில காலம் முன்னர், மார்க்கெஸ்ஸின் ‘One Hundred Years of Solitude’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஒரு நேர்முகம் அளித்திருந்தார். அதில் அவர், புத்தகம் நன்றாக விற்க வேண்டுமென்பதற்காக ஆங்கிலம் வாசிப்பவர்களின் நுண்ணுணர்வுக்கு ஏற்ற வகையில் தான் செய்த திருத்தங்களைச் சொன்னார். இந்த நூல் இப்போது பல டஜன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது- அந்த ஆங்கில நூலை அடிப்படையாகக் கொண்டே இதைச் செய்திருக்கிறார்கள், தமிழிலும் இப்படித்தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மொழியும் இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் மேல் தன் பண்பாட்டுச் சாயலை பதித்தவாறு இருக்கிறது.
கொடுக்கும் மொழி, கொள்ளும் மொழி ஆகிய இவற்றுக்கு இடையே கலாசார ஒற்றுமைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த ஒரு வேற்று மொழியிலிருந்தும் பிற மொழிகள் அனைத்தும் மொழிபெயர்ப்புகள் செய்யும்போது இந்த நிலை எழுவதைத் தவிர்க்க முடியாது.

உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் ஹரூகி முரகாமி, ஜப்பானிய மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்ய அனுமதிப்பதில்லை, ஆங்கில மொழிபெயர்ப்பையே மூல நூலாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்……

தனி மனிதத் தேர்வுகள் குறித்து விவாதிப்பது தேவையில்லை என்று நினைக்கிறேன். உங்கள் கேள்வி புரிகிறது, ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நிலை பிற இடங்களில் உள்ள நிலையைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ஆனால் இந்தியாவில் நீங்கள் சொல்வது போன்ற அணுகுமுறை கொண்ட எழுத்தாளர்கள் உண்டு. அதற்கான காரணங்களும் கட்டாயங்களும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தக்க வகையில் மாறும். அதனால் தனி மனித தேர்வுகளைப் பேசிப் பயனில்லை, எனவே இதை விட்டுவிடலாம். உங்களுக்கு நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன்…

சரி, இது தொடர்பாக வேறொரு கேள்வி கேட்கிறேன். உலகெங்கும் சந்தைப்படும் மொழி ஆங்கிலம். ஆனால், அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற தேசங்களில்கூட மூன்று சதவிகிதம்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வெளியாகின்றன – நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் நூல்களே பத்தாயிரம் பிரதிகள்தான் விற்கின்றன  ஆங்கிலத்திலேயே நிலைமை இப்படி இருக்கும்போது, மொழிபெயர்ப்புகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இந்தியாவிலும் தமிழகத்திலும் கூடுதல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முகாந்திரம் இருக்கிறதா? அப்படி கிடைக்கவில்லை என்றால் அதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்? இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கத்தான் முடியுமா?

ஹா … நீங்கள் வேறொரு விஷயத்தைப் பார்க்கவில்லை. ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் நூல்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உலக அளவில் மொழிபெயர்க்கப்படும் நூல்களில் பாதிக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை. அவை நன்றாகவும் விற்கின்றன. இவை விற்கவில்லை என்றால் பதிப்பாளர்கள் இந்த மொழிகளில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவார்களா?
ஆங்கில மொழி நூல்கள் விற்பதில்லை என்பது அந்த மொழியின் பிரச்சினை. அதைப் பிற மொழிகளுக்கும் பண்பாட்டு மரபுகளுக்கும் நீட்சியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நோபல் பரிசு பெற்ற 120 பேரில் 20 பேர் மட்டுமே இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் நல்ல அளவில் விற்பனையாகின்றன. பிற நூறு பேரின் படைப்புகள் ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படுவதில்லை என்பது காரணமாக இருக்கலாம், அல்லது அவற்றின் விற்பனை குறைவாக இருக்கலாம் இது அந்த இரு தேசங்களின் பிரச்சினை, பிறருக்குப் பொருந்தாது.
இந்தியாவில் நிலைமை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. விலை ஒரு காரணம் என்று சொல்லலாம் என்றாலும், சாகித்ய அகாதமி வருமானத்தில் பெரும்பகுதி மொழிபெயர்ப்பு நூல்களின் விற்பனையால்தான வருகிறது.
சாஹித்ய அகடெமி வெளியீடுகளில், இந்தியாவெங்கும் விற்பனையாகும் புத்தகங்களைக் கணக்கில் கொண்டால், தமிழ் நூல்களின் வருவாய் அதில் 24 சதவிகிதம், தமிழ் மொழிபெயர்ப்புகளின் பங்கு 20 சதவிகிதம். இந்தியாவில் எத்தனை பதிப்பாளர்கள் இருக்கின்றனர், எவ்வளவு மொழிகளில் புத்தகங்கள் வருகின்றன என்று பார்த்தால், திகைக்க வைக்கும் எண்ணிக்கையில் நூல்கள் விற்பனையாகின்றன.
இன்று அனைவரும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்துகின்றனர். எழுத்தாளர்கள்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதை ஒரு கௌரவமாக நினைக்கின்றனர், ஆங்கில மொழிபெயர்ப்பு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆங்கில மொழிபெயர்ப்புக்கு என்று சாதகமான சில விஷயங்கள் உள்ளன, அவற்றை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாவிட்டால் அவரது எழுத்து அவ்வளவு உயர்ந்ததல்ல என்று நினைப்பது நகைக்கத்தக்கது- இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வள்ளுவரையும் பாரதியையும் தெரிந்து வைத்திருக்கின்றனர், அனால் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டா தமிழகத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனர்?

உண்மைதான். மொழிபெயர்ப்பு செய்வது குறித்து ஒரு நடைமுறை அணுகலைச் சென்ற பகுதியில் பரிந்துரைத்தீர்கள். அப்போது நீங்கள் கூறிய ஒரு விஷயம் இது- சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற அங்கீகாரம் பெறும்வரை, எந்த ஒரு நூலையும் முழுமையாக மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு பதிப்பகங்களை அணுகக்கூடாது. இதில் நடைமுறை சாதகங்களும் உண்டு. சமீப காலமாக, இன்னும் சரியாகச் சொல்வதானால், நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டுவந்த இந்த நடைமுறை மொழிபெயர்ப்பாளர்களாக வேண்டும் என்று விரும்பும் பலராலும் புறக்கணிக்கப்படுகிறது,” இது குறித்து இன்னும் விரிவான பதில் அளிக்க இயலுமா?

அது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிப்பிக்க விரும்பியவர்களுக்கு மட்டும் சொன்னது. பெரும் பதிப்பு நிறுவனங்கள் பலவற்றுக்கும் பதிப்புத் தொழில் என்று வரும்போது தமக்கென்று தனி  நோக்கங்கள், லட்சியங்கள், இலக்குகள், தடைகள், சவால்கள் என்று பல விஷயங்கள் இருக்கலாம். இது போன்ற விஷயங்களில் நீரின் போக்கை எதிர்த்து நீச்சல் போடுவதைக் காட்டிலும் நீரோட்டத்தின் திசையில் செல்வது நல்லது. தாங்கள் பதிப்பிக்கும் நூல்களின் தன்மை, அவற்றுக்கான விதிமுறைகள் போன்றவற்றை உங்களுக்காக ஒரு பதிப்பகம் மாற்றிக்கொள்ள வேண்டுமென எதிர்பார்த்துப் பயனில்லை. அதெல்லாம் வேலைக்காகாது என்று சொல்லவில்லை, சற்றே கடினமாக இருக்கும். எனவே பரஸ்பர ஒப்புதல் இருப்பது நல்லது. இது ஒரு உறவு போன்ற விஷயம், கூட்டுக்குழு செயல்பாடு.
ஒரு உதாரணம் சொல்கிறேன். புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதிய நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று அண்மையில் கிடைத்தது. அறுநூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட புத்தகம் அது. பதிப்பாளர் தன் நூல் விற்பனையையும் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா, அதனால் அவர் குறிப்பிட்ட நடையில், குறிப்பிட்ட பக்க எண்ணிக்கை வரும் வகையில் மொழிபெயர்க்கச் சொன்னார். பாவம், அந்த மொழிபெயர்ப்பாளர் மீண்டும் முதலிலிருந்து துவங்க வேண்டியிருந்தது. எனவே வழக்கமான, ஆனால் இப்போது மறக்கப்பட்டுவிட்ட இந்த நடைமுறையைப் பின்பற்றுவது நல்லது- ஆசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள், மூல நூலில் உள்ள பக்கங்கள்,  ஓர் அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு என்று பதிப்பகங்களுக்குக் கொடுக்கலாம்.
இது நடைமுறைப் பயன் சார்ந்த விஷயம். பல்வேறு பதிப்பகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் ஒரு எடிட்டருடன் இணைந்து செயல்படும்போது இது போன்ற சிக்கல்களைத் துவக்கத்திலேயே தவிர்க்க முடியும்.

மொழிபெயர்ப்பில் ஒரு எடிட்டரின் பங்களிப்பு என்ன? அவரது இடம் என்ன?          

மொழிபெயர்ப்பு மட்டும்தான் என்றில்லை, எடிட் செய்யப்படாமல் எந்த ஒரு புத்தகமும் பதிப்பிக்கப்பட முடியாது. எடிட்டிங் என்றால் என்ன, எடிட்டரின் இடம் என்ன, புத்தகம் பதிப்பிப்பதில் எடிட்டரின் பங்களிப்பு என்ன என்பதை எல்லாம் வேறொரு சமயம்தான் பேச வேண்டும். ஆனால் மொழிபெயர்ப்ப்பில் எடிட்டரின் பங்களிப்பு என்ன என்ற கேள்வியைப் பொருத்தவரை, இலக்கணப் பிழைகளைத் திருத்துவதுதான் அவரது வேலை என்று பலரும் நினைப்பது தவறு. உங்களுக்கு மொழிபெயர்ப்பு அனுபவம் எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும், சொற்களுக்கும் கருத்துருகளுக்கும் இடையில் ஒரு பொருத்தமின்மை நேரிடுவது இயல்பானதே. இங்கு எடிட்டர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தருமொழி, வருமொழி இரண்டிலும் அவர்களுக்கு தேர்ச்சி இருப்பதால் அவர்களால் உங்கள் மொழிபெயர்ப்பை மேம்படுத்த முடியும்.  மூல மொழியின் தாக்கத்தை மொழிபெயர்ப்பாளர் தவிர்ப்பது மிகக் கடினம். எடிட்டரால் இந்த மனச்சாய்வைச் சரி செய்ய முடியும்.

எடிட்டிங் பற்றி வேறொரு சமயம் பேசலாம் என்று சொல்லிவிட்டீர்கள், இருந்தாலும் மொழிபெயர்ப்பின் தொழில்நுட்பம் குறித்து ஓரிரு அடிப்படை கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். பெயர்ச்சொற்களின் உச்சரிப்பு மொழிக்கு மொழி மாறுபடுகிறது, இதனால் இது சில சமயம் எழுத்திலும் மாறுகிறது.  இது சரியா? ஒரு நண்பர் சொன்னது இது- “வாஸந்தியை பாஸந்தி என்று வங்காளத்தில் மொழிபெயர்க்கப்போக, “தன் பெயருக்கு ஏற்ற இனிப்பான எழுத்துக்குரியவர் பாஸந்தி” என்று யாராவது மதிப்புரை எழுதக்கூடும்.” இந்த ஆபத்தைத் தவிர்க்க முடியாதா?

உங்கள் நண்பர் அஞ்சுவது போல் எதுவும் நடந்து விடாது என்று நினைக்கிறேன். ஆனால் உண்மையில் ஒவ்வொரு மொழிக்கும் அதற்கேயுரிய உச்சரிப்பு முறைமை உள்ளது, உச்சரிப்பு விதிகளும் உள்ளன. இது தெரியாதவர்கள்தான் பிற மொழிகளை ஏளனம் செய்கின்றனர். நவீன காலத்தில், குறிப்பாக இந்தியாவில் மொழிபெயர்ப்பாளர்களிடையே நிலவும் தாழ்வுணர்ச்சி காரணமாக மொழி விதிகளைக் கையாள அஞ்சுகின்றனர்- தமிழ்ப் புனைவு மொழிபெயர்ப்புகளில் இதைப் பார்க்க முடிகிறது.
சிலர், மொழிபெயர்ப்புகள் வருமொழியின் இயல்புக்கு ஏற்றது போல் சரளமான வாசிப்பு அளிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். வேறு சிலர், மூல மொழியின் syntaxக்கு முடிந்தவரை இணையாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
மூல மொழியில் உள்ளதைத் திரிக்காமல் இயல்பான, சுலபமான வாசிப்புக்கு உதவும் வகையில் மொழியாக்கம் செய்பவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக வெற்றி பெறுகின்றனர். அங்குதான் ஒரு மொழிபெயர்ப்பாளரின் மேதைமை இருக்கிறது. இதில் எனக்கு பிரச்சினை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று இல்லையெனில், எங்கோ தவறு நடந்திருக்கிறது, அதை மொழிபெயர்ப்பாளர் சரி செய்தாக வேண்டும்.
ஆனால், இன்றைய பண்பாட்டு மரபுகளிலிருந்து மிக விலகிய நூல்கள் இருக்கின்றன. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முந்தைய காலத்தவையாக இருக்கக் கூடும். இன்றைய மொழிபெயர்ப்பு என்பது, அவற்றின் மூலத் தன்மைக்கு விசுவாசமாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.

கவிதை மொழிபெயர்ப்புகள் மிகவும் சிக்கலாக உள்ளன. இதில் எந்த அளவு சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம்?

தருமொழி, பெறுமொழி இரண்டிலும் ஆளுமை உள்ள கவிஞர்களே கவிதை மொழிபெயர்ப்புகளை முயற்சி  செய்ய வேண்டும் என்பது என் உறுதியான நம்பிக்கை. கவிஞராக அல்லாதவர்கள் கவிதை மொழிபெயர்ப்பு செய்யும்போது பிற விஷயங்களுடன் ஓசை நயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தருமொழியின் வாக்கிய அமைப்பு பெறுமொழியில் சாத்தியமில்லை, சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம். சங்கக் கவிதைகளின் சொல்லமைப்பை அதே வரிசையில் மொழிபெயர்க்க முடியும் என்று நினைப்பதே அபத்தமானது.

வட்டார வழக்கைப் பிற மொழிக்கு கொண்டு செல்வது மிகக் கடினமாக இருக்கிறது, குறிப்பாக ஆங்கில மொழிபெயர்ப்பில். இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும்?

நீங்கள் இந்திய மொழிகள் குறித்து பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரே மொழியைப் பேசும் பெரும்பாலான மக்களிடையே வட்டார வழக்குச் சொற்களுக்கு உரிய மாற்றுச் சொற்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கதையில் குறிப்பிட்ட இடத்தில் வரும் வட்டார வழக்கை, அந்த இடத்துக்கு உரிய அதே பொருளில் மொழிபெயர்க்க முடியாமல் போகும்போதுதான் பிரச்சினை வருகிறது. அப்போது, வட்டார வழக்குக்கு மாறாக அதே மொழியில் பொதுப் புழக்கத்தில் உள்ள வேறொரு இணைச்சொல்லை எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வட்டார வழக்கை முழுமையாக மொழிபெயர்க்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். சில வட்டார வழக்குகளின் சொலவடைகள் மொழிபெயர்க்கக் கடினமான அளவில், கூடுதல் எண்ணிக்கையில் இருக்கலாம். ஆனால் சற்றேறக்குறைய இணைபொருள் உணர்த்தும் சொற்களை அங்கு பயன்படுத்த முடியும்.

மொழிபெயர்ப்பு நூல்கள் பிற மொழிகளுக்குச் செல்வதில் விமரிசனங்களின் பங்கு என்ன?

அவற்றுக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு.  பிற கலாசார, இலக்கிய மரபுகள் குறித்த விழிப்புணர்வைத் தம் மக்களிடையே விமரிசகர்கள்தான் உருவாக்குகின்றனர். அதேபோல் பிற மொழிகளில் தேர்ச்சி கொண்ட விமரிசகர்கள் தம் மரபுகள் குறித்த விழிப்புணர்வை பிற மக்களிடையே உருவாக்குகின்றனர்.
ஆனால் துரதிருஷ்டவசமாக, அதிலும் குறிப்பாக தென்னிந்திய மொழிகளில், தற்காலத்தில் எதிர்வினையே விமரிசனம் என்று நம்பப்படுகிறது- இலக்கிய விமரிசனம், கலை விமரிசனம், திரைப்பட விமரிசனம் என்று எந்த விமரிசனமும் எதிர்வினையாற்றுவதுடன் முடிந்து போகிறது.
பண்பாடு, கலை, சமூகப் பிரச்சினைகள், சமயம், மரபுகள், மொழி, அறிவியல் என்று மானுட வாழ்வின் பல்வகை முனைப்புகள் குறித்தும் தொடர்ந்து விமரிசனம் செய்துவந்த அருமையான விமரிசகர்கள் இருந்த காலம் போய்விட்டது.  அந்த விமரிசகர்களின் கருத்துகளுடன் உடன்படாதவர்கள் பலர் இருந்தனர்- ஆனால் அவர்களும் உடனடி எதிர்வினையாக மறுப்பு தெரிவிப்பது, அவதூறு செய்வது என்றெல்லாம் செய்யாமல் தங்கள் புரிதலை அவற்றுக்கான ஆதாரங்களுடனும் விளக்கத்துடனும் அறிவார்ந்த வகையில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டனர்.
ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், தென்னிந்திய இலக்கிய வெளியில் இலக்கிய விமரிசனங்கள் செழித்திருந்தன. ஆனால் இன்று மிகச் சில இலக்கிய விமரிசகர்களே இருக்கின்றனர். பலரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதில்தான் ஈடுபாடு காட்டுகின்றனர்.

அப்படியானால் இவற்றைத் தவிர பிற மொழிகளில் ஆரோக்கியமாக நிலை உள்ளது என்று சொல்ல முடியுமா?

இல்லை, இதில் நகைச்சுவை இல்லை என்றாலும் சொல்லச் சிரிப்புதான் வருகிறது.  சமஸ்கிருதத்தைத் தவிர்த்தால், தமிழும் கன்னடமுமே மொழிவரலாற்றில் பழம்பெரும் மொழிகள். ஆனால் இன்று ஹிந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில்தான் மிக அருமையான இலக்கிய விமரிசனங்கள் எழுதப்படுகின்றன. அதேபோல் வங்காளத்தில் மாபெரும் விமரிசகர்கள் இருக்கின்றனர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஹஸாரி பிரசாத் துவிவேதி, நம்வார் சிங் ஆகிய இருவரின் விமரிசனங்களும் நியாயமாகப் பார்த்தால் தமிழிலும் கன்னடத்திலும் தோன்றியிருக்க வேண்டும். ஏன், மலையாளமும் மராத்தியும்கூட மிகச்சிறந்த விமரிசனங்களைக் கண்டிருக்கின்றன.
தமிழில் “தூஸ்ரி பாரம்பரா கி கோஜ்” (இரண்டாம் மரபை நோக்கி) என்ற பிரசித்தி பெற்ற நூலுக்கு ஒப்புடையதாக, அல்லது அது போன்ற நல்ல விமர்சன நூல்களுக்கு ஈடாகச் சொல்லத்தக்க  எதுவும் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். ஷம்பா ஜோஷியும் அவரது சமகாலத்தவர்களும் கன்னட மொழியில் ஓரளவு சுதாரித்துக் கொள்ளத்தக்க பிரயத்தனங்கள் செய்தனர். ஆனால் தமிழில் அதுபோல்கூட எதுவும் இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இப்படிச் சொல்வது மிகையாகத் தெரியலாம். மாற்றுப்பார்வை என்ற ஒன்றை காத்திரமாய் நிலைநிறுத்தக்கூடிய எதுவும் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. சமீப காலத்தில் இதன் இழப்புகளை ஈடு செய்ய சா.கந்தசாமி மற்றும் ஜெயமோகன் போன்றார் முயற்சித்துக் கொண்டிருக்கிறனர். இம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பது என் அவா.

அண்மையில் வாசித்த சில சிறந்த தமிழாக்கங்களைச் சொல்ல முடியுமா?| அதே போல் ஆங்கில மொழியாக்கம் உண்டா?

மகாலிங்கம் என்பவர் சினுவா அச்செபேவின் “Things Fall Apart” என்ற நாவலை மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். கடந்த காலத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதெமியினர் இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துப் பதிப்பித்த பல நூல்களும் தரமாக இருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி வங்க மொழி நூல்களை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலம் என்று பார்த்தால், N. கல்யாணராமனின்  “Farewell to Mahatma” மிக நன்றாக வந்திருக்கிறது. அடுத்து பதிப்பிக்கப்படவிருக்கும் பூமணியின் வெக்கை நாவல் மொழிபெயர்ப்பு மிக உயர்ந்த தளத்தைத் தொட்டிருக்கிறது. பத்மா நாராயணன் லா.ச. ராவின் அபிதா நாவலை மிக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இவர்கள் இருவர் பெயரையும் சொல்லக் காரணம், இவர்கள் ஒரு வகையில் முன்னோடிகளாக இருக்கின்றனர்- பூமணியையும் லா.ச. ரா வையும் வாசிக்கத்தக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாது என்ற மூடநம்பிக்கையை இவர்கள் தகர்த்திருக்கின்றனர். ரசித்து வாசிக்கப்படக்கூடிய சரளமான ஆங்கில மொழியாக்கங்களை அளித்திருக்கின்றனர். அவசியம் படித்துப் பார்க்க வேண்டிய நூல்கள் இவை.

நல்ல மொழிபெயர்ப்பு என்பதன் இயல்பு என்ன?

வெற்றிபெற்ற மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வாசிக்கும்போது அதில் நம்மை தொடர்புபடுத்திக் கொள்ள முடியாததாகவோ அர்த்தமற்றவதாகவோ நினைக்கும் வகையில் உள்ள  அந்நியத்தன்மை இருக்காது.  புனைவு, அபுனைவு, கவிதை, நாடகம்- எதுவாகவும் இருக்கட்டும். என்ன சொல்ல வருகிறது என்பதையே விளங்கிக்கொள்ள முடியாத எத்தனையோ மோசமான மொழிபெயர்ப்புகளை வாசித்திருக்கிறேன். அதன்பின் எப்போதாவது மூல நூல் கைக்குக் கிடைக்கும்போது மொழிபெயர்ப்பை ஒப்பிட்டு நினைவுகூர்ந்தால் சிரிப்புதான் வருகிறது.
பல மொழிபெயர்ப்புகளும் ஏதேதோ கற்பிதம் செய்து கொண்டு எளிய விஷயத்தைக் கோட்டை விட்டுவிடுகின்றன- கதையோட்டம், மூல மொழியின் ரிதம், சில நன்மைகள் என்று பலவும் தவறிப் போகின்றன.
உதாரணமாக, அண்மையில் நான் வாசித்த ஒரு கதை, “I am well” என்று துவங்கிற்று. இந்த முதல் வாக்கியத்தை மூல மொழியறியாத பல நண்பர்களிடம் காட்டி கதை எதைப்பற்றி இருக்கக்கூடும் என்று ஊகிக்கச் சொன்னேன். அனைவரும் இது ஒரு கிணற்றைப் பற்றிய கதை என்றுதான் சொன்னார்கள். முதல் பத்தி முழுதும் அது போன்ற வாக்கியங்களே இருந்தன- அவர்களிடம் முழு பத்தியையும் காட்டினேன், அவர்களுக்கு அப்போதும் எதுவும் புரியவிலல்லை.  இத்தனைக்கும் இதைச் செய்தது புகழ் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர்.  “நான் நலம்” என்பதைத்தான் அவர் அப்படி மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்படும் பல மொழிபெயர்ப்புகளும் வாசிப்பதற்கு பாடநூல்கள் போல் இருக்கின்றன.  மூல மொழியின் வாக்கிய அமைப்பையொட்டியே பல மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்ப்பதுதான் இதற்கு காரணம்.
இந்தக் குறைகளை மொழிபெயர்ப்பாளர் தவிர்க்க முடியும் என்றாலும், சில சமயம் மூல மொழியில் எளிய நடையாக இருப்பது தமிழாக்கத்தில் கடினமாக மாறிவிடுகிறது. “Your idea is good” என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதைத் தமிழாக்கம் செய்யும்போது, “உன் கருத்துருவாக்கம் மிகச் சிறப்பாக இருக்கிறதுஎன்று மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது, இதனால் ரிதம் தாறுமாறாகச் சிதறிவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை, என்ன செய்வது?. 
இந்தச் சிக்கல் அனைத்து இந்திய மொழிகளிலும் உண்டு.அண்மைக்காலத்தில், தெலுங்கு இந்தி போன்ற மொழிகளில், தீவிர இலக்கியத்திலும்கூட, மொழிபெயர்ப்பாளர்கள் ஐடியா என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர்- மொழிபெயர்ப்பு சரளமான வாசிப்புக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம்தான் இதற்கு காரணம்.
ஆனால் இந்த இரு தீவிர நிலைப்பாடுகளும் மொழி வளர்ச்சிக்கு ஆபத்தானவை. கட்டுப்பாடு ஏதுமின்றி தோன்றியபடி பிற மொழி ஓசைகளைப் பயன்படுத்தும் காரணத்தால் இந்த இரு மொழிகளிலும் தீவிர இலக்கியம்கூட சீர்குலைந்திருக்கிறது. ஆனால் இதற்கு நேரெதிர் நிலையாக, சமஸ்கிருதம் போன்ற ஒரு அழகிய மொழி அதன் அற்புதமான இலக்கண விதிகளோடு மிக இறுக்கமாக இருப்பதால் சாமானிய மனிதன் அணுக முடியாத தொலைவுக்குப் போய்விட்டது.
மொழிபெயர்ப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கத் தவறும் இன்னொரு விஷயம் அலங்கார மொழிநடையைப் பயன்படுத்துவது. இந்திய மொழி நூல்கள் பலவற்றில் படிப்பறிவு இல்லாத ஆட்டிடையர்கள் மிக உயரிய மொழியில், அலங்காரமும் ஆர்ப்பாட்டமுமாகப்  பேசிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. இதனால் பிரதி முழுமையுமே செயற்கையாய் தெரிகிறது, இது போல் செய்வது அதன் தரத்தைத் தாழ்த்தி விடுகிறது.
எனவே நடைமுறைக்கு ஏற்ற அணுகல்தான் நல்லது. சென்னையில் நடப்பதாய் ஒரு கதை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது வட சென்னையைச் சேர்ந்த ஒருவன் பேசும்போது கொஞ்சம் சுதந்திரமாக கொச்சையான மொழியைப் பயன்படுத்தலாம். அது இயல்பாக இருக்கும். ஆனால் மொழிபெயர்ப்பில் எதுவும் இழப்பு நேரிட்டுவிடக் கூடாது என்ற அக்கறையும் அதனுடன், தன் மொழிபெயர்ப்பு வாசிக்க சுலபமாகவும் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வும் தேவை. மரபார்ந்த தமிழில் எழுத விரும்புபவர்கள் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும்- நம்மில் எத்தனை பேர் அப்படி பேசுகிறோம்? எடுத்துக்காட்டுக்கு, ஆங்கில மொழி கதை ஒன்றில்  ட்ரெயின் டிரைவர் ஒருவன் இருக்கிறான் அவன் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டபின் சேரியில் உள்ள தன் காதலியுடன் செந்தமிழில் உரையாடுகிறான்.
இது போல் பல உதாரணங்கள் சொல்ல முடியும், இதில் பல கோணங்கள் இருக்கின்றன. பின்னொருமுறைதான் இதைப் பேச வேண்டும்.

மொழிபெயர்ப்பின் நோக்கம் பண்பாட்டு பரிமாற்றம் என்றாலும் சிலவற்றை மொழிபெயர்க்க முடியாது,  இல்லியா?

ஆமாம் உண்மைதான் சில வகை கவிதைகளை மொழிபெயர்க்கவே முடியாது என்று சொல்லலாம் – அதற்கு காரணம் மூலத்தில் உள்ள பல சுட்டல்கள் அதன் மொழி பெயர்ப்பில் விரிவான விளக்கங்களில்லாதபோது அர்த்தமாகாமல் போகும்.
பல கலாச்சாரங்களிலும் தனித்தன்மை கொண்ட ஒலிகள் உள்ளன, அவற்றுக்கு இணையொலி பிற மொழிகளில் கிடையாது. சில மொழிகளின் வாக்கிய அமைப்பு விநோதமாக இருக்கும் – வேற்று மொழியில் அதைப் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டுமானால் மேலும் விளக்கமாக எழுத வேண்டியிருக்கும்.
பொருட்படுவது இன்னொரு முக்கியமான விஷயம். ஆண்டாள் திருப்பாவையை வ்ரஜ பாஷையில் மொழிபெயர்க்க முயற்சி செய்ததை நான் எப்போதும் சுட்டிக் காட்டுவதுண்டு. உற்று நோக்கினால் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் வ்ரஜ பூமிக்கும் பண்பாட்டு வெளியில் தூரம் அதிகமில்லை, அதே தொன்மங்கள்,  இரு இடங்களிலும் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் ஒன்றோடு சேர ஏங்கும் பெண். ஆனால் திருப்பாவையில் சிற்றம்சிறுகாலை பாடல் போன்ற ஒன்றில் அதிகாலை மூன்று மணிக்கு விழித்து, அருகிலுள்ள குளத்தில் அந்த வேளையில் குளித்து, மாலை தொடுத்து வழிபடுவது பற்றியெல்லாம் இருக்கிறது, ஆனால் இது எதுவும் அவர்களுக்குப் புரியாது. ஏன்? அவர்கள் பண்பாட்டில் இது போன்ற ஒன்றும் கிடையாது. எனவே, எளிய கவிதை வாசிக்க வேண்டிய இடத்தில் அவர்கள் பல விஷயங்களைக் கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இது தொடர்பாக, எனக்கு ஒரு சந்தேகம். இந்தியாவின் பிற மொழிகளில் பரவலாக அறியப்படும் தமிழ் இலக்கியங்கள் என்ன, அவை எப்படிப்பட்ட வரவேற்பு பெற்றுள்ளன? செவ்வியல் இலக்கியம், சமகால இலக்கியம்இவற்றைப் பிற இந்திய மொழிகளில் அறிந்திருக்கிறார்களா, பொதுவாக, பிற மொழிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ் குறித்து என்ன நினைக்கிறார்கள்

அண்டை மாநிலங்களைத் தவிர்த்தால், தொலைதூர இந்திப் பிரதேசங்களிலும் சங்க இலக்கியத்தையும்  திருவள்ளுவரையும் அறிந்திருக்கின்றனர். படித்தவர்கள் மத்தியில் ஆழ்வார்களும் கம்பனும் ஓரளவுக்கு நன்றாகவே பரிச்சயமானவர்கள். இதில் ஒரு விந்தையான விஷயம், பிற மொழி மக்களில் ராஜஸ்தானியர்களும் வங்காளிகளும் தமிழ் கலாசாரம் மற்றும் அதன் இலக்கியம் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கின்றனர். இதற்கான காரணம் ஊகிக்க முடியாததல்ல.
நவீன இலக்கியம் என்று பார்த்தால் பாரதியார் பிரபலமாக இருக்கிறார். ஜெயகாந்தன், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், ஜானகிராமன், மற்றும் சமீப காலமாக சிவகாமி, பாமா போன்ற தலித்திய எழுத்தாளர்கள் கல்விப்புலத்தில்தான்  மிகவும் பிரபலமாக இருக்கின்றனர்.
தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டால்- எவ்வளவு அற்புதமான கோயில்களை கட்டியிருக்கின்றனர், எவ்வளவு இனிய மொழியில் பேசுகின்றனர், தங்கள் மொழி, இலக்கியம், வரலாறு, சமூகம் குறித்து எவ்வளவு விபரமாகப் பதிவு செய்து வருகின்றனர் என்ற வியப்புணர்வைப் பார்க்க முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.