நினைவுகளால் ஆனது

Tamil_Nadu_Classic_Houses_Old_Homes_India_Native_Nostalgia_Trees_Grow_Roots_Antique_Village_Rural

“அத்திம்பேர் வராராம் நாளைக்கு” என்றாள் அம்மா. நான் பார்த்த பார்வையைப் புரிந்து கொண்டு “சாரு அத்தை அத்திம்பேர்” என்றாள். சாரு என்றழைக்கப்படும் சரஸ்வதி அத்தை அப்பாவின் அத்தை. என் சொந்த ஊரில் இருக்கிறாள். நாங்கள் அந்த ஊருக்குக் குடி போகும் போது அந்த ஊரில் இருந்தாள். இப்போதும் இருக்கிறாள். அந்த அத்தையின் கணவர் தான் இவர்.ஊரிலிருந்து வந்திருக்கிறார். அத்தையின் பெயர் சேர்த்து அழைக்கப் படுவது அவரது அடையாளமாக மாறிப் போய் விட்டிருந்தது
தன் பெண் வீட்டில் தங்கியிருப்பவர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் வீட்டை விலைக்கு வாங்கிய பாய் பற்றிக் குறிப்பிட்டு ஏதொ சொல்ல, வீடு, இரவில் சப்தமின்றி அறைக்குள் புகும் சர்ப்பம் போல் எங்கள் பேச்சினூடே நுழைந்து விட்டது. “எங்காத்தைப் போய் பார்த்தேளா” என்று அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார். அந்தச் சிரிப்பு அவரைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண, சில நொடி மௌனத்தை நிரப்ப கேட்கப்பட்ட கேள்வி மட்டுமே என்று அறிவித்தது.
நான் பதில் எதிர்பார்த்து அத்திம்பேரின் முகம் பார்த்தேன். உதட்டை பிதுக்கியவர் “அந்தப் பக்கமே போறதில்ல” என்றார். பேச்சின் ஊடே நுழைந்த வீடு எனும் சர்ப்பம் அந்தப் பதிலில் சட்டென்று பேச்சினின்றும் வெளியேறி விட்டது. வெளியேறிய சர்ப்பம் என் தலைக்குள் புகுந்து கொண்டு நினைவுகளைக் கலைத்துப் புழுதியை மேலெழும்பச் செய்தது.
அதை என் சொந்த ஊர் என்று தான் எப்போதும் சொல்லிக் கொள்வேன். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் வேறு வேறு சொந்த ஊர்கள் எங்கள் வீட்டில்.
அப்பாவெல்லாம் பரம்பரை ஊரைத் தான் தன் சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்வார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் வளர்ந்த ஊர் தான் சொந்த ஊராகத் தோன்றியது.
ஒரு வேளை அதை சொந்த ஊராக நினைக்காதது தான் அப்பாவை அப்படி ஒரு முடிவை சுலபமாக எடுக்க வைத்ததோ என்று கூடத் தோன்றும்.அப்பா வங்கி ஊழியர். அதனால் தவிர்க்க முடியாத மாற்றலால் தான் அந்த ஊரில் குடியேறியதாக நினைவு. ரொம்பச் சின்ன வயசு என்பதால் சம்பவங்கள் பெருமழைக்குப் பிறகான குளத்து நீர் போல் கலங்கலாக இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஞாபகம் இருக்கின்றன.
சூழ்நிலைத் துரத்தல்களால் சென்னையில் குடியேறி சென்னையையே நிரந்தர வசிப்பிடமாக்கிக் கொண்ட பின் நீளமான வாரயிறுதிகளுக்கு ரயீல்களிலும் பேருந்துகளிலும் அடைந்து கொண்டு போனாலும் மனம் நிறைய மகிழ்ச்சியை சுமந்து கொண்டு சொந்த ஊருக்குப் போறேன் என்று சொல்லிக் கொண்டு போகிறவர்கள் மீது பொறாமைப் படாமல் இருக்க முடியவில்லை.
விவசாயத்தை விட்டொழித்து விட்டு நகரத்தின் நாவுகளுக்குத் தங்களைத் தின்னக் கொடுத்தும் உயிர் பிடித்து வைக்க வாட்ச்மேன்களாகவும், கணக்கெழுதுகிறவர்களாகவும் கட்டிடக் கூலிகளாகவும் வருபவர்களின் நிலை அளவு பெரும் சோகம் இல்லை என்றாலும் இதுவும் ஒரு வகையான இழப்பு தான்.
விளிம்பு நிலை மக்களின் இடப்பெயர்வுகளின் வலிகளை ஆவணப் படுத்தி சம காலத்தில் இலக்கியங்களும் சினிமாக்களும் சொல்லும் அளவு , விளிம்புக்குச் சற்றே மேலே இருக்கும் நடுத்தர வர்க்கத்துச் சாபங்கள் பற்றி அவைகள் பெரிதாகக் கவலை கொண்டு பார்த்ததில்லை.
சென்னை தான் என்று முடிவான பின் எனக்கென்று வேர்கள் இல்லாமல் போய் விட்டாற் போலொரு உணர்வு.எந்த ஒரு எதிர்பாராத நிமிடத்திலும் ஏதேனும் ஒரு சொல் அல்லது செயல் அல்லது காட்சி ஊரைப் பற்றியும் வீட்டைப் பற்றியுமான நினைவுகளைக் கிளர்த்து மேலெழும்பச் செய்யப் போதுமானதாக இருந்தது.
வீட்டுக்குப் பின்னிருந்த கிறித்துவ ஆரம்பப் பள்ளியில் சேர்ந்த பின் எல் கே ஜி யூ கே ஜி படித்த ஆரம்பப் பள்ளியின் ப்யூலா மிஸ் , சாந்தி மிஸ்ஸின் உருவங்கள் பின்னுக்குப் போய் பானு மிஸ் சுமதி மிஸ், கீதா மிஸ் ஆகிய உருவங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.
அப்போதைய என் வயதுக்கு நான் செய்த எல்லாச் செயல்களிலும் ஏதோ ஒரு வகையில் வீடோ வீட்டின் சுவடோ நினைவோ விரவி இருந்ததை இப்போது தான் உணர முடிகிறது. மதியச் சோற்றுக்கு வீட்டுக்கு ஓடி விடுவேன்.பள்ளியின் பின் பக்க வாயில் திறந்திருந்தால் என் வீட்டுக்குப் போவது இன்னும் சுலபம். ஆனால் அது எப்போதும் மூடியே இருந்தது எனக்குப் பெரிய குறை.
சிறிய கூடுகள் போன்ற வீடுகள் அமையப் பெற்ற நண்பர்கள் வாய்த்ததால் எல்லாரும் கூடும் இடமாக பள்ளிக் காலத்திலேயே என் வீடு ஆகிப் போனது ஆச்சரியமில்லாத விஷயம்.
வீட்டின் கீழேயோ மொட்டை மாடியிலோ எப்போதும் கிரிக்கெட். பரீட்சை இருந்தாலும் கிரிக்கெட். மூன்று தென்னை மரங்களும் ஒரு மருதாணி மரமும் ஒரு வாதாமி மரமும் என வீட்டின் முன் பக்கம் எப்போதும் குளுமை.
திடீரென்று வாதாமி மரத்தில் புழுக்கள் வைத்து விட்டதாகவும் வெட்டுவதைத் தவிர வேறெதுவும் வழியில்லையென்றும் அப்பா சொன்னார்.பின்னர் அந்த மரம் இருந்த இடத்தில் இன்னொரு வீடு கட்டப் போவதாக சொன்னார். இரண்டு விஷயங்களையும் முன் பின்னாக மாற்றிப் போட்டுக் குழப்பிக் கொண்டாலும் எதிர்த்துக் கேட்கும் வயதில்லை அப்போது.
மருதாணி மரமும் மூன்று தென்னைகளில் ஒன்றும் வாதாமி மரத்தோடு சேர்த்து வெட்டப் பட்ட போது அழவெல்லாம் தெரியவில்லை. ஆனால் மனம் கனத்திருந்தது. அந்த உணர்வை வார்த்தை கொண்டு விளக்கக் கூட இப்போது தான் தெரிகிறது.
வீடு கட்டப்பட்டதும் விளையாடும் இடம் சுருங்கிப் போனது. ஆனால் மேலே நாங்கள் இருந்த வீடு விஸ்தரிக்கப் பட்டது. பைசல் வீட்டை விட எங்கள் வீடு பெரிதாக ஆகியதில் பெருமை.அவனிடமே சொல்லித் தோள் தட்டிக் கொண்ட பெருமை. மரம் வெட்டுப்பட்ட சோகம் மறைந்து போனது.
நினைவுகளிலிருந்து தற்காலிகமாக மீண்டேன். பெருமூச்சு மட்டுமே மிஞ்சியது. வேறு வேலைகளில் கவனம் செல்ல,நேரம் கரைந்தது. இரவு படுக்கையை விரித்தேன். இந்தச் சென்னை வீட்டில் எனக்கென்று ஒரு அறை தனியே இல்லை.
ஊர் வீட்டின் ஞாபகம் அலைக்கழிப்பாக இருந்தது. அங்கே எனக்கென்று தனியறை இருந்தது. மொட்டை மாடித் தண்ணீர்த் தொட்டிக்கு நேர் கீழே அமைந்த அறை அது. எப்போதும் குளிர்ச்சி படர்ந்திருக்கும் சுவர்களைக் கொண்டது.அந்த அறை இப்போதும் என் நினைவுகளைச் சுமந்தபடி இருக்கக் கூடும். முதன் முதலில் வயதுப் பிராயத்தில் கனவுகளின் காரணமாய் மறக்க முடியாத ஈரமான இரவொன்றை அனுபவித்தது அந்த அறையில் தான்.
கிராமத்துக் கல்லூரியான என் குருகுலத்தில் இருப்பதிலேயே செக்கச் செவேலென்று இருந்த அந்த அந்தியூர் பெண்ணைப் பார்த்து மயங்கி சிவப்பே அழகு என்று அவள் பின்னால் சுற்றிய நாட்களில் இரவு தோறும் கனவுகளில் தவறாமல் வந்தவளைக் கண்டு ஜொள் விட்டதும் சிலிர்த்துக் கிடந்ததும் அந்த அறையில் தான்.
கல்லூரியின் பசுமைக் காலங்களில் மாணவக் கோஷ்டியுடன் ஊர் சுற்றிக் கொண்டு படிக்காமல் விட்டாலும் இயல்பாக கிரகிக்கும் தன்மை சற்றே அதிகமிருந்ததால் பாஸ் பண்ண முடிந்ததைக் கண்டு பரீட்சை சமயங்களில் மொத்த வகுப்பின் ஆண் பிள்ளைகளும் என் வீட்டில் குழுமிக் கிடந்ததும், வாத்தியார் மாதிரி வகுப்பெடுத்து அவர்களைத் தேற வைத்ததும் கல்லூரியில் சதீஷ் சார் “என்னப்பா இலவச ட்யூஷனெல்லாம் எடுக்கறியாமே” என்று குத்தலாய்க் கேட்டதுமான நினைவுகள் மழைச் சேற்றின் மீது படர்ந்து காய்ந்த புல்டோசர் தடங்கள் போல் மனதில் கிடக்கின்றன.
என் குடும்பம் பெரிய குடும்பம். அதை விடவும் முக்கியமான விஷயம். அணுக்கமான பெரும்பாலும் ஒருவர் மீது ஒருவர் புகார்களற்ற குடும்பம். தாத்தாவின் கூடப் பிறந்த பத்துப் பேரும் அவர்களது வாரிசுகளும் ஒற்றுமை பாராட்டும் குடும்பம்.யார் குடும்பத்து விசேஷமாயிருந்தாலும் “ராஜேந்திர அண்ணா வீட்ல வெச்சுடலாம்“ என்னும் அளவுக்கு பேர் பெற்றிருந்தது எங்கள் வீடு.
அத்தனை சொந்தங்களும் விசேஷம் என்று வீட்டில் கூடும் போது சந்தோஷமாக இருக்கும். அதையும் தாண்டி என் வீடு என்கிற பெருமை எட்டிப் பார்க்கும்.
அப்படி இருந்த வீட்டைத் தான் அப்பா விற்க வேண்டுமென்றார். எங்களுக்காக. அந்த ஊரில் பிழைப்போ எதிர்காலமோ இல்லை என்பது அப்பாவின் அழுத்தமான நம்பீக்கை. அது ஓரளவு உண்மையும் கூட. பிடித்த வாழ்க்கையும் வளமான வாழ்க்கையும் பெரும்பாலும் ஒன்றாக இருப்பதில்லையே. நான் ரூமெடுத்து தங்கிக்கிறேம்பா. வீட்டை விற்க வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். உனக்கு சரி. உங்கண்ணனுக்கு? உடம்பு சரியில்லாத பையனை தனியாவெல்லாம் விட முடியாது.என்று முற்றுப் புள்ளி வைத்தார்.
எத்தனையோ பேர். எத்தனையோ சொந்தங்கள். அந்த வீட்டில் விழாக் கொண்டாடிய நினைவுகளைச் சுமந்தவர்கள். யார் சொல்லியும் அப்பா முடிவில் மாற்றமில்லை.
நினைவுகளின் ஊஞ்சலிலிருந்து விடாப் பிடியாகக் காலைக் கீழே ஊன்றி இறங்கினேன். வீட்டின் நினைவுகளை வலுக்கட்டாயமாக ஒதுக்கும் போதெல்லாம் பெருமூச்சுக்கள் வெளிப்படுவது வழக்கமாகிப் போய் விட்டிருந்தது. இப்போதும் வெளிப்பட்டது. சுய நினைவுக்கு வந்த போது வீட்டு வாசலில் நின்றிருந்தேன். திரும்பிப் பார்த்தேன்.
திரையரங்கின் ஆரவாரத்தில் பெரும் திரையைப் பார்த்த பிரமிப்போடு வீடு திரும்பியதும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கும் போது ஏற்படுமே ஒரு சலிப்பு. அது போல் இப்போதைய வீட்டைப் பார்த்ததும் இருந்தது எனக்கு.
அடுத்த நாள் சொல்லி வைத்தாற் போல் ஊரிலிருந்து பிரபுவின் போன். “மச்சி , திருவோட கல்யாணத்துக்கு கூப்டானாடா?”
“கூப்டாண்டா”
“வந்துருவல்ல? எப்ப வர்ற?”
சிறிய யோசனை. எதற்கென்றே தெரியாத யோசனை. “சரி டா. வந்துர்றேன். அன்னிக்கு நைட்டுக்கு ரிட்டன் டிக்கட் மட்டும் போட்டு வச்சிரு எனக்கு”
“சரிடா. அதெல்லாம் பாத்துக்கலாம். வந்துரு. வச்சிடறேன்” என்று சொன்னவன் வைக்கவில்லை. ஒரு சின்ன இடைவெளி. நானும் வைக்கவில்லை. “கண்டிப்பா வா மச்சி. பாத்து நாளாச்சு” என்று அடிக்குரலில் சொல்லி விட்டு வைத்தான்.
அந்த சில நொடி இடைவெளி ஆயிரம் அர்த்தங்கள் சொன்னது.கிளம்பி விட்டேன்.
அப்பா வேறு பாய் வீட்டை இடித்துக் கட்டப் போவதாகத் தான் கேள்விப்பட்ட சேதியை சொல்லி அனுப்பியிருந்தார் கிளம்பும் போது. உறுத்திக் கொண்டே இருந்தது. கல்யாணம் கோலாகலமாக முடிந்தது. எதையோ பிடிக்கப் போகும் பரபரப்புடனே கல்யாணத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். பிரபுவிடம் ஒரு நான்கைந்து முறை கேட்டிருப்பேன் . ஒரு மாதிரியாகப் பார்த்தான். கோபிக்கவில்லை.
“இன்னாடா அவசரம்? எங்க போவணும்?”நிதானமாகக் கேட்டான். சிறு இடைவெளி.
“எங்க வீட்டைப் போய் பாத்துட்டு வந்துடலாம்டா. வர்றியா?”
எதுவும் சொல்லவில்லை. சரி வா என்றவன் சட்டென்று கிளம்பி விட்டான்.
பைக்கில் வீட்டை நெருங்க நெருங்க ஏதோ வயிற்றில் நெஞ்சிலெல்லாம் உணர்வு. இத்தனை வயதாகியும் இந்த உணர்வுக்குப் பெயர் வைக்கத் தெரியவில்லை.
தெரு முனையீலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி விட்டு இறங்கி விட்டேன். ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையைப் பார்த்தேன். அந்தத் தெரு முடிவில் இருக்கும் கட்டைச் சுவரைத் தாண்டிக் குதித்தால் ஸ்டேஷன்.ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நண்பர்களுடன் கதையடித்த நினைவுகள். பெருமூச்சு..
நினைவுகள் மூச்சு வாங்க என்னைப் போட்டு அழுத்தின. அதிலிருந்து தப்பிக்க மேலும் அதில் அமிழ்ந்து கொண்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.மெல்லக் கண் விழித்தேன். வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்தேன். மெல்ல நடந்து வீட்டு முன்னால் நின்றேன். அப்பா சொன்னது போலில்லை. வீடு அப்படியே இருந்தது. பாயைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல் அபத்தமாகத் தோன்றியது.
நிமிடங்கள் நழுவ வீட்டைப் பார்த்துக் கொண்டே நின்றேன். பிரபு எல்லாம் தெரிந்து அமைதியாக நின்றான். மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தேன்.
“இந்த ஏரியாவுல சதுர அடி இப்ப எவ்ளோ போவுது மாப்ள?” கேட்டு விட்டு அவனையே உற்றுப் பார்த்தேன்.
புரிந்தவனாகப் புன்னகைத்தான். நானும்.