வலையுலகில் ஆங்காங்கே உலகங்கும் பல முக்கியமான விஷயங்கள் குறித்துச் சர்ச்சைகள், உரையாடல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அப்படிச் சமீபத்தில் நடந்த ஒரு சர்ச்சை ஒரு புத்தகத்தைச் சார்ந்து நடந்தது. இது உலகளாவிய சர்ச்சையாக, உரையாடலாக இருந்தது அப்புத்தகத்தின் சிறப்பால் என்பது அறிஞர் கூட்டத்தின் முடிவு. அப்புத்தகம் உலகில் பன்னெடுங்காலமாகப் பல தொல்லைகளுக்கும், மனித நாகரீகத்தின் முற்படுத்தலுக்கும் காரணமான ஒரு பொருளைப் பற்றியது. அப்பொருள்- மூலதனம் என்று இக்காலத்தில் அழைக்கப்படுகிறது.
இன்று மூலதனம் என்பது பெரும் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதமாக, கருவியாக, பண்பாட்டுக் கூறாக, அரசியல் சக்தியாக, வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக, படைப்பு சக்திக்கெல்லாம் திறவுகோலாக, சூழலை அழிக்கும் பெரும் நாச சக்தியாக என்று பற்பல அவதாரங்களில் உலகெங்கும் இயங்குகிறது. ஒரே நிலப்பரப்பிலேயே தன்னுள்ளேயே எக்கச்சக்க முரண்பாடுகளுடன், பலவிதமாக பின்னமான அறிவுடன் செயல்படும் ஒரு அரக்க ஜீவன் என்று கூட இதை அழைக்கலாம். அப்படி இருக்க பல்வேறு நிலப்பரப்புகளில் இதன் செயல்பாடுகள் என்னென்ன விசித்திர, வக்கிர, மாறுபாடுகளை, முரண்களை, குழப்பங்களை மனிதர் நடுவே விதைக்கும், விதைத்திருக்கிறது என்பன எளிதில் சொல்லி முடிக்க முடியாத ஒரு பெருங்கதை. அதை இய ன்றவரை செய்ய முயன்றதே ஒரு சாகசச் செயல் என்று நாம் சொல்லக் கூடும்.
இந்த மூலதனத்தை மையமாகக் கொண்டு கடந்த சில நூறாண்டுகளில் மனித சமூகங்கள் எப்படி யோசித்திருக்கின்றன என்பதைக் கருதியும், முந்தைய சிந்தனையாளர்களின் கருத்துகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டும், தகவல்கள், புள்ளி விவரங்கள் போன்றனவற்றை இணைத்தும் சமீபத்தில் ஒரு பெரிய புத்தகத்தை ஃப்ரெஞ்சு பொருளாதார ஆய்வாளரான தாமஸ் பிக்கெட்டி என்பவர் எழுதிப் பிரபலமடைந்தார். அவருடைய ‘காபிடல்’ (மூலதனம்) என்கிற புத்தகம் இன்று உலகெங்கும் ஏராளமான பிரதிகள் விற்றிருக்கிறது என்பதோடு, அப்புத்தகம் பரந்த அளவில் உலகப் பல்கலையாளர்கள் நடுவிலும் ஒரு முக்கியமான புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். இது இன்றைய பொருளாதாரத் துறையில் ஏதேனும் மாற்றங்களைக் கொணருமா என்பதை அத்துறை சார்ந்த பல அறிஞர்களும் உலகெங்கும் கடந்த ஓரிரு வருடங்களாகப் பேசி வருகிறார்கள். அந்த உரையாடலில் ஒரு கட்டுரையை இங்கு கொணர்ந்திருக்கிறோம்.
இந்தப் புத்தகத்தை ஒட்டி மாற்றுச் சிந்தனையாக எழுதப்பட்ட ஒரு கட்டுரையைத் தழுவி, தமிழில் ஒரு கட்டுரையை அ.சதானந்தன் எழுதி இருக்கிறார். இந்தக் கட்டுரை மொழிபெயர்ப்பில்லை, முழுதும் அவருடைய சொந்தக் கருத்துகள் கொண்டதும் இல்லை. மாறாக க்ரிஸ்டீனா மக்ரோரி என்ற அமெரிக்க ஆய்வாளர் எழுதிய ஒரு கட்டுரையின் சாரத்தைக் கொடுக்க முற்பட்டிருக்கிறார். இதைப் படித்து வாசகர்கள் தம் மறுவினையைச் சொல்வனத்துக்குக் கட்டுரை வடிவிலோ, வாசகர் கருத்தாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மானுட இயல்பையொட்டி அற விழுமியங்களைப் பேச வேண்டும்
– கிறிஸ்டீனா மக்ரோரி
2014ஆம் ஆண்டு ஃப்ரான்ஸைச் சேர்ந்த பேராசிரியர் தாமஸ் பிக்கெட்டி, Capital in the Twenty-First Century என்ற நூலை எழுதினார். அது மகத்தான வர்த்தக வெற்றி பெற்றது, திகைக்க வைக்கும் அளவு அறிவுப்புலத்தில் விவாதிக்கப்பட்டது. ஆடம் ஸ்மித், ஜான் ஸ்டூவர்ட் மில், கார்ல் மார்க்ஸ் காலத்துக்குப் பிறகு அத்தனையையும் பேசும் கோட்பாடுகள் வழக்கொழிந்து போயிருந்தன, பிக்கெட்டி அத்தகைய சிந்தனையை உயிர்ப்பித்திருக்கிறார் என்பது அவரது நூலின் கவர்ச்சிகளில் ஒன்று. வரலாற்று ஆய்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், பிற சமூகவியல் துறைகளுடன் ஒருங்கிணைந்து இயங்காமல், பொருளாதாரத் துறை கணிதம் மற்றும் கொள்கை சார்ந்த விவாதங்கள் என்று சிறுபிள்ளைத்தனமான அக்கறைகளிலிருந்து இன்னும் வளரவில்லை என்று பிக்கெட்டி சொல்கிறார். பொருளாதாரச் சிந்தனையாளர்கள் அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று அவர் நினைத்ததால்தான் இப்படிப்பட்ட ஒரு நூலை எழுத வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.
வெற்றுச் சிந்தனையைத் தவிர்த்து நம்பத்தகுந்த தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை அடைய நினைக்கிறார் பிக்கெட்டி. உங்கள் நாற்காலிகளை விட்டு எழுந்து வந்து இந்த உலகத்தில் என்ன நடக்கிறது பாருங்கள், அதை விவரியுங்கள் என்று பொருளாதார நிபுணர்களை நோக்கி பிக்கெட்டி விடுக்கும் அழைப்பை, வாசிக்கும் பழக்கம் கொண்ட பொதுமக்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இருநூறு ஆண்டுகால பொருளாதார வரலாறு குறித்து அவர் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறார், அந்தத் தரவுகள் இல்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறுவதையொட்டி விவாதம் நடைபெற்றிருக்க முடியாது. பலரும் ஆடம் ஸ்மித், ஜான் ஸ்டூவர்ட் மில், கார்ல் மார்க்ஸ், தாமஸ் பிக்கெட்டி என்று ஒரே மூச்சில் பேசுகிறார்கள் என்றால் ஏதோ இருபதாம் நூற்றாண்டு இவருக்காகத்தான் காத்திருந்தது என்பது போலிருக்கிறது. பொருளாதாரம் இவர் பேசும் விஷயங்களைப் பேச வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தோன்றுகிறது.
ஆனால் இது முழு உண்மையல்ல, பிக்கெட்டியின் நூல் ஒரு துவக்கம் மட்டுமே. அதை வைத்துக் கொண்டு அவர்தான் நாளைய ஆடம் ஸ்மித் என்று கூறிவிட முடியாது. சந்தைப் பெருவாழ்வைத் தம் வாசகர்களுக்கு விளக்கிய அந்நாளைய அரசியல்-பொருளாதாரச் சிந்தனையாளர்கள் வரலாற்றுத் தரவுகளில் மட்டும்தான் கவனம் செலுத்தினார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பொருளாதார விஷயங்களை அற, தத்துவ அக்கறைகளுடன் இணைத்துப் பேசினார்கள், அற மானுடவியல் என்றுகூட அவர்கள் பேசியதைச் சொல்லலாம். இந்த அக்கறைதான் அவர்களைக் கவனத்துக்கு உரியவர்களாகச் செய்தது.
எனவே ஸ்மித் காலத்து பொருளாதாரச் சிந்தனை மரபை மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு பிக்கெட்டியின் வரலாற்றுத் தரவுகள் மகிழ்ச்சி அளித்தாலும், பசி தீர்ப்பதாக இருக்காது. பொருளாதாரமும், அதைவிடப் பெரிய தத்துவ, அறச் சிக்கல்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து கறாரான ஆய்வையே அவர்கள் விரும்புகின்றனர். சந்தைக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்பதல்ல கேள்வி- பொருளாதார வாழ்வின் அறப் பரிமாணம் என்ன?
ஸ்மித் போன்ற முதற்கால பொருளாதாரச் சிந்தனையாளர்கள் அறம் பேசும் சிந்தனையாளர்களாகவும் இருந்தார்கள். இந்தக் கேள்வி அவர்களுக்கு இயல்பாகவே எழுந்தது. ஒரு பொருளை எந்த விலைக்கு விற்பது, இருப்பதை எவ்வாறு பகிர்ந்து கொள்வது, தேசிய வளம் எது என்பது போன்ற கேள்விகள், எது நீதி, நல்லதொரு சமூக அமைப்பு எது என்பது போன்ற கேள்விகளிடமிருந்து பிரித்துப் பேசப்பட முடியாதவை என்று நம்பியவர்கள் அவர்கள். இவை அனைத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பேசும்போதுதான் பொருளாதாரம் எனும் அறிவுத்துறை வளர முடியும் என்று நினைத்தார்கள்.
அறிவியலின் அதிகாரத் தோரணையில், புள்ளிவிவரங்களைக் கொண்டு இருண்மையான கணிப்புகளை அளிக்கும் “அவல அறிவியல்” என்று சொல்லப்படும் பொருளாதாரத் துறையின் வரலாறு இப்படியா இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அவல அறிவியல் என்று அன்று பொருளாதாரத் துறை வருணிக்கப்பட்டது அதன் தரவுகளையோ அல்லது முடிவுகளையோ வைத்து அல்ல, மனித இயல்பு எப்படிப்பட்டது என்பது குறித்து அன்றைய சூழலில் நடந்த தத்துவ விவாதம் காரணமாகத்தான். மனித இயல்பு குறித்து ஜான் ஸ்டூவர்ட் மில்லும் தாமஸ் கார்லைலும் மோதிக் கொண்டபோதுதான் பொருளாதாரம் ஒரு அவல அறிவியல் என்ற பேச்சு வந்தது. அப்படி அழைத்தவர் கார்லைல், ஆனால் அவர் மனித இயல்பு குறித்துக் கொண்டிருந்த கருத்தியலின்படி, அடிமை முறைக்கு ஆதரவு கொடுத்தார். மில்லும் இதரரும் அடிமை முறையை எதிர்த்து, மனிதர் சுதந்திரப் பிறவிகளாக வாழ வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள். அன்று கார்லைடைய கசட்டுப் பார்வை ஒட்டிய முத்திரை, பொருளாதாரத் துறைக்கு கௌரவத்தைத்தான் கொடுத்தது, ஆனால் இன்று வரலாற்று மறதியால், அதுவே ஒரு கிண்டலான அடைமொழியாகிவிட்டது.
சமகால அவல அறிவியல்
பொருளாதாரச் சிந்தனையையும், அறம் குறித்த தத்துவ ஆய்வையும் பிக்கெட்டி இணைக்கத் தவறுகிறார் என்றால் மற்ற யாரும் செய்யாத தவறை அவர் செய்கிறார் என்று சொல்ல முடியாது. அரசியல் பொருளாதார வரலாறு குறித்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் நான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மூன்று வாரங்கள் பங்கேற்றிருந்தேன். சமயத்துறை ஆய்வாளர்தான் நான், ஆனால் பொருளாதார நிபுணர்களை அவர்களின் புழக்கடையில் வைத்துப் பார்க்கும்போது நான் ஏதோ சமூகவியல் ஆய்வு செய்வது போலிருந்தது. அவர்கள் தங்கள் ‘தாய்மொழி’யில் உரையாடிக் கொள்வதைப் பார்க்க சுவாரசியமாகவும், ஏன், பயனுள்ளதாகவும்கூட இருந்தது. பொருளாதாரத் துறை குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். ஆனால் ஆடம் ஸ்மித் குறித்து நாங்கள் பேசிய வாரம் ஏனோ ஏமாற்றமளித்தது.
ஆடம் ஸ்மித்தின் சிந்தனையில் கால் நனைத்த எல்லாருக்கும் தெரியும், ஆடம் ஸ்மித் பற்றிய இலக்கியம், ஆழமானது, பரந்து விரிந்தது, ஒரு பெருங்கடலை ஒத்தது. பொருளாதாரம், அரசியல் சித்தாந்தம், பன்புல அறிவியல், உளவியல், சமயச்சிந்தனை என்று பல துறைகளில் அவரது எண்ணங்கள் தோய்ந்திருக்கின்றன. அது பற்றி நிறைய எழுதியுமாகி விட்டது. ஆனால் தங்கள் துறையின் தந்தை என்று பொருளாதார நிபுணர்கள் ஆடம் ஸ்மித்தைக் கொண்டாடினாலும், அவர்கள் யாருக்கும் பொருளாதாரம் தவிர்த்து வேறு எது குறித்தும் ஆடம் ஸ்மித் கூறியது குறித்து கொஞ்சம்கூட தெரிந்திருக்கவில்லை, அல்லது கவனத்தில் இல்லை.
ஆடம் ஸ்மித் 1759ஆம் ஆண்டு எழுதிய தர்மம் குறித்த தத்துவ விசாரணை நூலான ‘அற உணர்வுகளின் கோட்பாடு’ (The Theory of Moral Sentiments) என்பதைக் குறித்து அந்த வாரத்தில் விவாதித்தோம். அவர் சொல்ல வருவது எனக்கு ஓரளவு தெளிவாகவே புரிந்தது, ஆனால் அந்த விஷயத்தில் பொருளாதார நிபுணர்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுவாகவே, பொருளாதார சிந்தனையாளர்களுக்கு இந்த நூல் கடினமானதாக இருக்கிறது. ஸ்மித்தின் அரசியல் பொருளாதாரச் சிந்தனைக்கு தர்மமும் ஒரு பரிமாணமாக இருக்கிறது, ஆனால் அதைப் பற்றிய புரிதல் அவர்களிடம் கிடையாது. அற உணர்வுகளின் கோட்பாடு (The Theory of Moral Sentiments) மற்றும் ‘நாடுகளின் செல்வம்’ (The Wealth of Nations, 1776) என்ற இரு நூல்களுக்குமிடையே எவ்வளவு ஆழமான உறவு இருக்கிறது என்பது அவர்களுக்கு உறைக்கவில்லை.
வினோதமான இந்த அரைகுறை வாசிப்பு குறித்து நான் ஒரு குற்றப் பட்டியல் தயாரித்தேன். அதன் சாராம்சம் இதுதான் – பொருளாதார நிபுணர்கள் ஸ்மித்தின் சிந்தனை எழுந்த பின்புலம் எதுவோ அதைக் கணக்கில் கொள்ளத் தவறி விட்டார்கள். உண்மையில் ஸ்மித் ஸ்காட்டிஷ் புத்தொளி காலத்தில் தார்மீக அறம் குறித்துச் சிந்தித்த தத்துவவியலாளர். பொருட்பால் எழுதுவதற்கு முன்பே அறத்துப்பால் எழுதிவிட்டவர் அவர். அதையும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை, தார்மீக அறம் குறித்த அவரது சிந்தனைகளுக்கும் தர்மத்தின் உளவியல் குறித்த அவரது முடிவுகளுமே அவர் அரசியல் பொருளாதாரம் குறித்து முன்வைக்கும் கருத்துகளை நம்பச் செய்கின்றன. ஸ்மித் சொன்னதை இப்படிக் குறுக்கிப் புரிந்து கொண்டதைச் சரி செய்ய நான் சமய ஆய்வுகளில் எதுவும் விஷயம் இருக்குமா என்று யோசித்தேன். என் துறை இது என்பதால்தான் இந்தத் தேடல்.
ஆனால், சமயங்கள் தர்மம் குறித்து என்ன சொல்கின்றன என்று ஆய்வு செய்பவர்கள் மிகக் குறைவாகவே ஸ்மித் குறித்துப் பேசுகிறார்கள் என்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக, பொருளாதார நிபுணர்கள் ஸ்மித் குறித்து என்ன சொல்கிறார்களோ அப்படிதான் சமய ஆய்வாளர்களும் அணுகுகிறார்கள். ஸ்மித் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதன் முக்கியமான பகுதிகளை இவர்களும் தவற விட்டு விட்டார்கள், அல்லது குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சமயம் குறித்து பேசும் நமக்கு ஸ்மித்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவக்கூடிய கருவிகள் இருக்கின்றன, ஆனால் சமநிலை இல்லாமல்தான் அவரை அணுகுகிறோம். நிஜமான ஸ்மித் என்பவர் ஏதோ ‘த வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ எழுதிய வறட்டுச் சிந்தனையாளர், பொருளாதாரத்துறையின் பிதா மட்டும்தான் என்பது மெய்யல்ல. ஸ்மித்தின் சிந்தனைகளுக்கு சமயச்சார்போ அறச்சார்போ உண்டென்றாலும் அது என்னவோ அரைகுறையாக, கீழ்மையான வகையில் அப்படி இருக்கிறது என்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஆடம் ஸ்மித் சமயம் பற்றியும் தர்மம் பற்றியும் எழுதியுள்ளதை எல்லாம் அவர் பொருளாதாரம் குறித்து எழுதியதோடு இணைத்து வாசித்தால் கடவுள் உருவாக்கிய ஒழுங்கமைப்பில் நீதி உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் சக்தியே சந்தை என்பது போன்ற ஒரு சமய நம்பிக்கையை ஆடம் ஸ்மித் முன்வைப்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிவரும். இங்கு கடவுள் கொல்லப்பட்டு அவர் இடத்தில் சந்தை அமர்ந்து கொள்கிறது. எனவே, ஸ்மித்தை சமயம் சார்ந்து விமரிசிக்கும்போது, நவீன வாழ்க்கையிலிருந்து சமய உணர்வுகளை கள்ளத்தனமாக நீக்கிய சதிகாரர்களில் அவரும் ஒருவர் என்று குற்றம் சாட்டுகிறார்கள், அல்லது, சுயநலனுக்கு ஆதரவாகப் பேசி பொதுவெளியிலிருந்து கொடையை விரட்டியடித்தவர் என்று சொல்கிறார்கள். இப்படியெல்லாம் ஆடம் ஸ்மித்தைப் புரிந்து கொள்வது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
முதலில் பொருளாதார நிபுணர்கள் குறித்து எனக்கு அலுப்பாக இருந்தது என்று சொன்னால், சமயங்களின் தர்மநியாயங்களைப் பேசுபவர்களை அதே போலவே புரிந்து கொள்ள முடியாமலே போனது. ஸ்மித்தின் அரசியல் பொருளாதாரத்தின் அடித்தளம் சீரான, முரண்களற்ற தர்மத்தின் உளவியல் என்று நான் புரிந்து கொள்கிறேன். சமய அறம் பற்றிப் பேசுபவர்கள் ஏன் தாங்கள் விவாதிக்கத் தகுந்தவராக ஸ்மித்தை அடையாளம் கண்டு கொள்ளவில்லை?
நாம் ஏன் இப்படிக் குறுகிய, துறை சார்ந்த புரிதலை மட்டும் ஏற்றுக் கொள்கிறோம்?
துறைகளின் பகுப்புகளைத் துடைத்துப் போட்டு, ஸ்மித்தின் மானுடவியல் தர்மத்தை இன்னும் ஆழமாக விசாரித்தால் மிகச் சிறந்த பயனுண்டு என்பது கண்கூடான உண்மை. வர்த்தகச் சமூகம் நல்லதா கெட்டதா என்பது குறித்து ஸ்மித்துக்கு ஒருவித இரட்டை நிலை இருந்தது. இதற்கான காரணம் நடைமுறை யதார்த்தம் சார்ந்தது மட்டுமல்ல, தர்மம் குறித்த அக்கறையும்தான் என்பதை பொருளாதார நிபுணர்கள் அடிக்கோடிட முடியும். சமய ஆய்வாளர்கள் ஆடம் ஸ்மித் குறித்து சிந்தித்தால், மனிதரின் பொருளாதார வாழ்வின் அறப் பரிமாணங்கள் குறித்து பரவலான உரையாடல்கள் நடைபெறும்போது, அவற்றில் பங்கேற்கும் தகுதியை நிறுவிக் கொள்ள அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இது அனைத்தையும்விட ஒன்று உண்மை. பொதுவாகவே, பொருளாதார உரையாடல்களில் தத்துவ விவாதங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிய காலம் இது. எப்போதும் இது தேவைதான். வழக்கமான பொருளாதாரச் சிந்தனையின் வேலியை உடைத்துக் கொண்டு வந்த பிக்கெட்டிக்குக் கிடைத்திருக்கும் ஆரவார வரவேற்பைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது- பொருளாதாரக் கோட்பாடுகளில் காத்திரமான ஏதோ ஒன்று இல்லாமல் இருந்தது என்று பொதுமக்கள் இத்தனை காலம் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
பொருளாதாரத் துறையின் நிறுவனர் முன்வைத்த கோட்பாடுகளை மீண்டும் கையகப்படுத்திப் பரிசீலனை செய்தால் சமகாலப் பொருளாதார நிபுணர்கள் எதைத் தொலைத்திருக்கின்றனர் என்பதைக் கண்டெடுக்கும் தேடலில் முன்னேற்றம் கிடைக்கலாம். இன்னொன்று. ஸ்மித்தைத் திரும்பிப் போய் பார்ப்பதில் வேறொரு நன்மை உண்டு- இப்போது துறை துறையாக முட்டிக் கொண்டு நிற்கிறோம், இந்தச் சுவர்களை உடைக்க ஸ்மித் உதவலாம். இப்படிப்பட்ட துறைப் பகுப்புகள் ஸ்மித்துக்கு வினோதமாகவே இருந்திருக்கும்.
ஸ்மித் முன்வைத்த மானுடவியல் தர்மம்
முதலில், மனித இயல்பின் அறப் பரிமாணங்கள் குறித்து ஸ்மித் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
கருணை என்ற இயல்பின் அடிப்படையில் அமைந்த மனோதர்மமே அவரது மானுடவியலின் மையம். கருணை என்றால் தர்மசிந்தனை, இரக்கம் போன்ற பரோபகார உணர்வுதான் வழக்கமாகப் பேசப்படுகிறது. ஆனால், ஸ்மித்துக்கு இது ஒரு ஆபரேடிங் சிஸ்டம் போன்ற வடிவமைப்பாக இருந்தது.
எந்த ஒரு குறிப்பிட்ட நிலையிலும் பிறர் உணர்வுகள் எப்படி இருக்கும், நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்று அவர்களிடத்தில் நம்மை வைத்து கற்பனை செய்து புரிந்து கொள்ள உதவும் அனிச்சைத் திறனே இது. பிறர் உணர்வுகள் நமக்கு நேரடியாக அனுபவப்படாது என்பதால், அவர்களிடத்தில் நாம் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறோம் என்றார் அவர். நல்லொழுக்கம் கொண்ட ஒருவர் இந்தத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும், ஆனால் இதற்கும் ஒழுக்கத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மிக மோசமான்வனும்கூட கருணை உணர்வுகளின் சுவடுகளாவது கொண்டவனாகதான் இருக்கிறான். கருணையே அறம் சார்ந்து நன்மை தீமையைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
பிறரைக் குறித்து, நியாய அநியாயங்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் செய்வது சரியா தவறா என்பதை அவர்களோடு நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அவர்கள் இடத்தில் நாம் இருந்தால் எப்படி நடந்து கொள்வோம் என்று நினைத்துப் பார்த்த பின்னரே முடிவு செய்கிறோம். நாம் பிறராய் இருந்து நம் நடத்தையையும் நோக்கங்களையும் பிறர் கண்களால் பார்க்கிறோம் என்றார் அவர்.
இவ்வாறாக வேறொருவரின் பார்வையைக் கற்பிதம் செய்து கொள்வது மட்டுமலாமல், விருப்பு வெறுப்புகளற்ற பார்வையாளனின் பார்வையையும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம்- இப்படிப்பட்ட ஒருவனின் பகுத்தறிவே நம் மனச்சாட்சியாகச் செயல்படுகிறது, அதன் குரல் கேட்கப்படும்போது, அது தற்காதலின் மிகைகளை மட்டறுக்கிறது. இந்தக் குரல் அப்பழுக்கற்றது அல்ல. சரியான கோணம் இல்லாமல் இருக்கலாம், தன்னையே ஏமாற்றிக் கொண்டதாக இருக்கலாம், அதன் நீதி வழுவாமை குறித்து நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்பவர்களாக இருக்கலாம். இருந்தாலும்கூட மிகக் கொடூரமான குற்றவாளியின் உள்ளத்திலும் இந்தக் குரல் ஒலிக்கிறது, எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறது, உணர்வுகளாய் வெளிப்படுகிறது.
நன்மையையும் தீமையும் சுரக்கும் சுனையாக இந்தக் காருண்யமே இருக்கிறது என்று கருதினார் ஸ்மித்- மனிதர்கள் எப்போதும் பிறர் அங்கீகாரத்தில் நாட்டம் கொண்டிருக்கின்றனர். இந்த ஆசை இயல்பான ஒன்று என்று குறிப்பிடுகிறார் அவர். கௌரவமானவர்களாக இருக்கவும், மதிக்கப்படுபவர்களாகவும் இருக்க நாம் எல்லாருமே விரும்புகிறோம். பிறர் மதிப்பைப் பெறும் வகையிலும், தனக்குள் உள்ள நடுநிலை தவறாத பார்வையாளனைத் திருப்தி செய்யும் வகையிலும், நாம் நம் நடத்தையையும் உணர்வுகளையும் பக்குவப்படுத்தி, பிறர் புகழ வேண்டும் என்ற இந்தப் பசியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒழுக்கமானவர்களாக நடந்து கொள்கிறோம்.
பிறர் அங்கீகாரத்துக்கு ஆசைப்படுகிறோம் என்பது மட்டுமே நம்மை ஒழுக்கம் தவறாதவர்களாக மாற்றி விடாது என்பது உண்மைதான். நாம் நம்மை நேசித்துக் கொள்கிறோம் என்ற களங்கம் எப்போதும் இருக்கவே செய்கிறது. எது நமக்கு மதிப்பை ஈட்டும் என்பது குறித்து தவறான முடிவுக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. அதே போல், தவறான ஆட்களின் மதிப்பைப் பெறவும், தவறான ஆட்களுக்கு மரியாதை அளிக்கும் பிழையையும் நாம் செய்யக்கூடும்.
விருப்பு வெறுப்பில்லாத இந்தப் பார்வையாளனின் இருப்பும், நமக்கு தார்மீக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற இயல்பான மானுட ஆசையும், அனைத்துக்கும் ஆதாரமாய் நிற்கும் சமநிலை தவறான சாட்சி மீதான நேசத்தால் அமைத்த செயல்திட்டம். ஆமாம், கடவுள்தான் அது, அதுவே கடவுளாகவும் ஆகி விடுகிறதோ? ஸ்மித்தின் சொற்களில், “நம் இயல்பைப் படித்தவர்” எவரோ, அவரது திட்டம்தான் இது- நம் புரிதலோடும் உணர்வுகளோடும் வினையாற்றும் வகையில் அற விழுமியங்கள் மானுட மனதோடு ஊடாடுவதும், இந்த அற விழுமியங்கள் குறித்து நமக்குத் தன்னுணர்வு இருப்பதும் இறைவன் ஆக்ஞையால்தான். இவ்வாறு இருப்பதால்தான் தார்மிக விதிகளை தம் ஒவ்வொருத்தருக்கும் நம் உணர்வுகளுக்கும் நாம் பொருத்திப் பார்ப்பது தக்க செயலாக இருக்கிறது. இறைவனின் அமைப்பு இவ்வாறு உள்ளது, நாம் வெவ்வேறு அளவு அதனோடு ஒத்துழைக்க இயலும்; புற அறச் செயல்பாட்டை முன்னிலைப்படுத்தி வலியுறுத்தாமல், அதற்கு துணை செய்யும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ளது.
தர்மம் குறித்துப் பேசும்போது அறிவையும் உணர்வையும் இவ்வாறு பிணைப்பதில் ஸ்மித் தன் சமகாலத்தவர்களில் ஒருவராகதான் இருக்கிறார். இதில் கிரேக்கப் பொறுமைப் போக்கையும் (ஸ்டாய்ஸிசம்), ஸ்காட்டினக் கால்வினியக் கிருத்தவத்தின் தாக்கத்தையும் நாம் காண இயலும். இறைவனின் சித்தமே மானுட இயல்பைக் குறிப்பிட்ட வகையில் படைத்திருக்கிறது என்றும் இந்தக் கட்டமைப்பு படைப்பாக்கத்தின் இயல்பான ஒழுங்கமைவில் பங்கேற்கிறது என்றும் சொல்லும் அக்காலச் சிந்தனையும்கூட மேற்கண்ட தாக்கங்களின் விளைவே. ஆனால் இதனாலெல்லாம் இத்தகைய இயற்கை ஒழுங்கமைவு தனிமனித அளவிலோ, முழுமையான சமூக தளத்திலோ எப்போதும் நன்மையே பயக்கும் என்ற முடிவுக்கு ஸ்மித் வரவில்லை. சமநிலை குலையாத சாட்சிக்குரலின் முடிவுகளை தனிமனிதர்கள் பல நேரம் நிராகரிக்கவே செய்கின்றனர், அவர்கள் ஒழுக்கம் தவறாத நெறியைக் கடைபிடிக்கத் தவறுவதையும் செய்கின்றனர் எனபதை ஸ்மித் ஏற்றுக் கொண்டார். இறைச் செயல் அனைத்தும் நன்மையே என்று சொல்வது இதற்கு முரணாக இருக்கும். அவரது சமகாலத்தவராக இருந்த பெர்னார்ட் மான்டெவில் பதினெட்டாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நிலவிய பொருளாதார உறவுகள் குறித்து எழுதும்போது, “அந்தரங்க ஒழுக்கக்கேடுகளில் பொது நன்மைகள் விளைகின்றன,” என்று சொன்னதை மிகவும் தீவிரமாக கண்டித்தார். அநியாயங்களைக் களைந்து நீதி வழங்கப்படுவதில்லை என்பதை அவர் மிகவும் ஆழமாக உணர்ந்திருந்தார், நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையும் அவருக்கு கிடையாது.
மான்டெவில், ஃப்ரான்ஸிஸ் ஹட்செஸன் போன்றவர்கள் அக்காலத்தில் சற்றே நம்பிக்கை அளிக்கும் மாற்றுச் சிந்தனையாளர்களாய் இருந்தனர். செயல்கள் அனைத்தின் ஆணிவேராகவும் பரோபகாரமே இருக்கிறது என்று தார்மிக உணர்வுகள் குறித்து அவர்கள் கோட்பாடுகளை உருவாக்கினர். அவர்களைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போது ஸ்மித் சித்தரிக்கும் அற உளவியல் ஓரளவுக்கு மிகைகளற்றதாக இருக்கிறது, யதார்த்தமாகத் தெரிகிறது, இரட்டை மனநிலை கொண்டதாகக்கூட புரிந்து கொள்ளப்பட இடம் கொடுக்கிறது. ஸ்மித்தைப பொறுத்தவரை, மனிதர்கள் அறவுணர்வு கொண்டவர்களாக இருக்கும் வகையில் படைக்கப்பட்டிருக்கின்றனர். தார்மிக ஒழுக்கங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியும், அவற்றுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் படைக்கப்பட்டிருப்பதில், அறிதல் மற்றும் உணர்தல் குறித்து இருவேறு பரிமாணங்கள் உள்ளன- பிறரோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் நாம் கற்பிதம் செய்து கொள்கிறோம் என்றால், நாம் இவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதால்தான்.
சுயநலம் மட்டுமல்ல
‘தேசங்களின் செல்வம்’ நூலில் ஸ்மித் முன்வைத்த அறம் சார்ந்த உளவியல், தன் பங்களிப்பைத் தீர்மானமாகத் தந்திருக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு அவர் பொருளாதாரம் குறித்து எழுதியதை வாசிப்பது நல்லது. அப்போதுதான் தற்காலப் பொருளாதார ஆய்வாளர்களான ஜார்ஜ் ஸ்டிக்லர் போன்றவர்கள், “சுயநலம் என்ற கிரானைட் கல்லின் மீது எழுப்பப்பட்ட மகோன்னதமான அரண்மனை” என்று ஸ்மித்தின் பொருளாதாரச் சிந்தனைகளைப் புரிந்து கொள்வதைக் கேள்வி கேட்க முடியும். ஸ்மித்தின் சிந்தனையின் இவ்வாறான புரிதல் அதிகார பூர்வமானதாகக் காட்டப்படுவதைக் கேள்வி கேட்கும் அறிவுப்புல வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்திருக்க்றது. ஸ்டிக்லர் மட்டும்தான் இப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார் என்றில்லை. இது போன்ற பிழையான புரிதல் காரணமாகதான் அரசாங்கங்கள், சட்டதிட்டங்கள், மனித இயல்பு போன்றவற்றைக் குறித்து நம்பிக்கையற்றவராக ஸ்மித் இருந்தார் என்ற பரவலான பிம்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயம், கண்ணுக்குத் தெரியாத கரம் போல் செயல்பட்டு, தனிமனித சுயநலனைக் குற்றம் சொல்வதற்கில்லாத வகையில் பெருமளவு மக்களுக்குப் பயன்படக்கூடிய பொதுநலனாக மாற்றக்கூடிய ஆற்றல் சந்தைக்கு உண்டு என்ற நன்னம்பிக்கையுடன் பிரகடனம் செய்தவராகவும் அவரைப் பற்றிய பிம்பம் இருக்கிறது. சந்தைப் பொருளாதாரத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆற்றல் வேலை செய்து சுயநலனைப் பொதுநலனாக மாற்றுகிறது என்ற நம்பிக்கை சமகால அரசியலில் அவரது பெயருடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலருக்கும் உண்டு.
ஸ்மித்தின் தத்துவப் பார்வையையும் அவரது பொருளாதாரச் சிந்தனையையும் இணைத்துப் பேசும்போது அவரைப் பற்றிய இத்தகைய கேலிச்சித்திரம் கலைகிறது- வர்த்தகச் சமூகத்தைப் பற்றிய அவரது மதிப்பீட்டில் அதன் தர்மநியாயங்கள் குறித்து அவருக்கு இரட்டை மனநிலை இருக்கவே செய்தது. “மனித இயல்பில்… பண்ட மாற்றம் செய்யவும், கொண்டு கொடுக்கவும், கைமாற்றிக் கொள்ளவும் ஒரு உந்துதல் இருக்கிறது,” என்று அவர் கூறியதை எடுத்துக் கொள்வோம். இரு நாய்கள், “முன்யோசனைக்குப் பின் நியாயமான பண்டமாற்றம்,” செய்து கொண்டதைப் பார்த்தவர்கள் யாருமில்லை என்று சுட்டிக் காட்டும் ஸ்மித், இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் தனித்துவமிக்க மானுட இயல்பை கவனப்படுத்துகிறார்: “கறிக்கடைக்காரர், சாராயம் காய்ச்சுபவர், ரொட்டிக்கடைக்காரர் ஆகியோரின் தயாள குணத்தால் அல்ல நமக்கு சாப்பிட உணவு கிடைப்பது, அவர்கள் தங்களுக்கு எது நல்லதோ அதைச் செய்து கொள்வதால்தான் நம் தட்டில் சோறு விழுகிறது. நாம் அவர்களது மானுட நேயத்தை நம்பி அவர்களிடம் விலை பேசுவதில்லை, அவர்களது தன்நாட்டத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம், அதனால்தான் நாம் நம் தேவைகள் என்னவென்று அவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதில்லை, மாறாய் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளைச் சொல்கிறோம்.”
ஸ்டிக்லர் என்ன சொன்னாலும் சரி, இதைப் படிக்கும்போது, சுயநலம் அல்ல, நம் புரிந்துணர்வுதான் இந்தப் பரிமாற்றங்களுக்கு அடிப்படையாய் இருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. புரிந்துணர்வைக் கொண்டு பிறருக்குக் கிட்டக்கூடிய சாதகங்களை அறிவதுதான் பேரம் பேசுவதைச் சாத்தியப்படுத்துகிறது. கறிக்கடைக்காரரின் தன்நாட்டத்தை நாம் உணர்ந்து, அதைக் கணக்கில் கொள்ள முடியாதென்றால், பேரம் பேசுவதில் அதற்கு என்ன இடம் இருக்க முடியும்? தர்க்கம், பகுத்தறிவு என்ற இந்த இரண்டினோடு நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும் என்பதுதான் நம்மை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது, இருவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் பேரம் பேசுவதைச் சாத்தியப்படுத்துகிறது. நாய்களுக்கு இல்லாத சுயநலமா, ஆனால் அவைகளுக்கு இது போன்ற கற்பனை செய்யத் தெரியாது.
இந்தப் பரிமாற்றம் தன்னளவிலேயே யாருக்கும் சாதகமாக இருப்பதற்காக அமையவில்லை, இதற்கு காரணமாகும் இயல்பும் யாருக்கும் சாதகமானது அல்ல- ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர்களது தயாள குணமும், சுயநலமும் வெவ்வேறு விகிதத்தில் இருக்கலாம். எனவே, இத்தகைய பரிமாற்றங்களில் ஒருவர் மற்றவரை ஏமாற்றி லாபம் பார்க்க முடியும் என்பதை ஸ்மித் அறிந்திருந்தார்.
எனவே எந்த அளவுக்கு சுயநலம் இருக்கிறதோ, அதே அளவுக்கு புரிந்துணர்வும் இருக்கிறது. ஆனால் சுயநலன் என்றால்தான் என்ன? “நம் நிலை முன்னேற வேண்டும் என்ற அவா,” என்று அவர் தன் வெல்த் ஆப் நேஷன்ஸ் என்ற நூலில் திரும்பத் திரும்ப சொல்வதும்தான் என்ன, இது, “நம்மோடு கருவில் பிறந்து வளர்ந்து நாம் கல்லறை புகும்வரை நம்மைவிட்டுப் பிரிவதில்லை,” என்று சொல்கிறார். இங்கேயும் புரிந்துணர்வு எட்டிப் பார்க்கிறது. நாம் பணம் காசு சேர்க்க வேண்டும் என்று நினைக்கும்போது, பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம், இங்கே சுயநலத்துடன் புரிந்துணர்வும் சேர்ந்து கொள்கிறது.
‘த தியரி ஆப் மாரல் செண்டிமெண்ட்ஸ்’ எனும் புத்தகத்தை எழுதும்போதே ஸ்மித் இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைத் தொட்டுவிட்டார்: “மானுட வாழ்வின் மிகப்பெரிய நோக்கமாகிய, நம் நிலையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற உந்துதலைப் பேசும்போது அதில் சாதகமான விஷயங்கள் என்று எவற்றைச் சொல்கிறோம்? நம்மை நாலு பேர் கண்டுகொள்ள வேண்டும், நாம் சொல்வதைச் செய்ய ஆள் இருக்க வேண்டும், நம்மைப் பரிவோடு பிறர் கவனிக்க வேண்டும், சௌக்கியமாக இருக்க வேண்டும், புகழோடு இருக்க வேண்டும்.” செல்வம் சேர்க்கும் ஆசையை தர்மத்தைக் கடைபிடிக்கும் வாழ்வோடு இவ்வாறாகவே ஸ்மித் இணைத்து விடுகிறார். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு நேரடியானது அல்லதான், ஆம். ஆனால், பணக்காரர்களுக்கு பரிவாக மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள் எனபதை ஸ்மித் கவனித்திருக்கிறார். அவர்களது அந்தஸ்துக்கு ஏற்ப அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் தளர்வதை அவர் கவனித்திருக்கிறார். அதே சமயம், ஏழை ஒருவனின் மகன் பணக்காரன் ஆக வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றும் அவனுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டு இதைச் சொல்கிறார்- “புகழும் செல்வமும் ஒன்றுக்கும் உதவான அற்ப பொம்மைகள்.” எனவே ஸ்மித்தின் மதிப்பீட்டில், ஒருவன் தன் வாழ்வில் வளம் சேர்க்க வேண்டும் என்று சொல்வதில் சிக்கல் இருக்கிறது. அந்தஸ்துக்கு ஆசைப்படும் அற்பப் பகட்டும், பிறர் நம்மை மதிக்கக்கூடிய நிலைக்கு நாம் உயர வேண்டும் என்ற உயர்ந்த லட்சியமும் கலந்த விஷயம் இது.
தர்மம் இன்னதென்று சொல்ல முடியாத சிக்கல்களைப் பேசும்போது, சந்தைப் பொருளாதாரத்தின் விளைவுகளையும் அவர் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார். கண்ணுக்குத் தெரியாத கரம் என்று ஸ்மித் சொன்னதாக எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், அவர் சந்தையின் இயல்பு என்று ஒரு பொதுத் தத்துவமாக அப்படிச் சொல்லவில்லை- ஏற்றுமதிகளுக்குத் தடை விதிப்பது பற்றி பேச்சு வரும்போது அதற்கு எதிராகவே இந்த உவமையைப் பயன்படுத்தினார். த வெல்த் ஆப் நேஷன்ஸ் புத்தகத்தில் இந்தக் கண்ணுக்குத் தெரியாத கரம் ஒரே ஒரு முறைதான் பேசப்படுகிறது- ஆனால் சந்தையில் உள்ள இந்தக் கண்ணுக்குத் தெரியாத கரம், தெய்வத்தின் சித்தமாகவோ அல்லது தானாய் தோற்றம் கொள்ளும் ஒழுங்கு நடவடிக்கையாகவோ, சுயநலனைப் பொதுநலமாக எப்போதுமே மாற்றிக் கொண்டிருக்கிறது என்று ஸ்மித் நம்பியது போல் சந்தைப் பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத கரம் தெய்வச் சித்தம் என்றால், தெய்வம் சிலரை மட்டுமே நெறிப்படுத்துகிறது, அது ஏன்?
தன்னலமிக்க நபர்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு அநீதிகளைப் பட்டியலிடும் ஸ்மித், பொது நலனுக்கும் சுய நலனுக்கும் முரண்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத எண்ணற்ற சூழ்நிலைகளைக் கவனமாக முன்னிலைப்படுத்துகிறார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையைச் செய்வது என்ற நிலையில் ஏற்படும் எதிர்மறையான சந்தை விளைவுகளைத் தவிர்க்கவே முடியாது என்கிறார் அவர்.
திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்ய வேண்டிய உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் அறிவிலும் அறவுணர்விலும் சக்தி குறையும் என்று அஞ்சினார் அவர். அரசு தரும் இலவசக் கல்வி இதற்கு ஓரளவு பரிகாரமாய் இருக்கும் என்று நினைத்தார். அப்போதுதான் வளர்ந்து வந்த வர்த்தக சமூகத்தில் எந்த அளவுக்குப் பொது நலம் கூடுமோ அதே அளவு ஊழலுக்கும் சமூக சீரழிவுக்கும் வாய்ப்பு உண்டு என்பதால் உழைப்பு, ஒழுக்கம், மகிழ்ச்சி என்று அனைத்தையும் ஒரே சமயத்தில் நாடுவது கடினம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவேதான், எச்சரிக்கையான மனிதன் எப்படி நடந்து கொள்வான், அவனது குணம் எப்படி இருக்கும் எனபதை விளக்கமாகவே ‘த தியரி ஆப் மாரல் செண்டிமெண்ட்ஸி’ல் எழுதினார்.
மொத்தத்தில் இந்த இரு தளங்கள்- மனிதன், சமூகம்- இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று கண்டார் ஸ்மித். அவர் வாழும் காலத்தில் மானுட இயல்பு குறித்து எதிரெதிர் நம்பிக்கைகள் இருந்தன. ‘த தியரி ஆப் மாரல் செண்டிமெண்ட்ஸி’ல் இரண்டையும் அவரால் கணக்கில் எடுத்துக் கொள்ள முடிந்த காரணத்தால்தான் பின்னர் ‘த வெல்த் ஆப் நேஷன்ஸி’ல், வர்த்தக சமூகத்தைப் பரந்துபட்ட பார்வையுடன் அணுக முடிந்தது. அந்த அணுகலில் ஒரு யதார்த்தம் இருந்தது. சந்தையின் நன்மைகள், நடைமுறைப் பயன்களைப் பேசும்போதே அவரால், சந்தை மனித இயல்பைச் சீரழிக்கிறது, மனித வாழ்வில் எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது என்று அங்கலாய்க்கவும் முடிந்தது. ஆனால் மறந்தும் முந்தைய முடியாட்சி/சர்ச் ஆட்சிக்குத் திரும்புவதை அவர் ஒரு விடையாக முன்வைக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். திரும்பத் திரும்ப ஜன நாயகத்தைச் செழுமைப்படுத்துவது பற்றித்தான் பேசுகிறார்.
மானுட விரிவைம் மீட்டெடுத்தல்
ஆதம் ஸ்மித்தின் பொருளாதாரச் சிந்தனைகளின் அறப்பரிமாணத்தை அங்கீகரித்து என்ன ஆகப் போகிறது? அவரைச் சரியாக புரிந்து கொள்கிறோம் என்பது மட்டும்தானா? சுயநலனை வலியுறுத்தியவர் என்ற ஒரு பிம்பம் மாறி அவரைக் குறித்த செறிவான புரிதலுக்கு அது உதவும்தான். ஆனால், பொருட்பாலுக்கும் அறத்துப்பாலுக்கும் இடையே தத்துவ தளத்தில் ஓர் உரையாடல் நடைபெற்றாக வேண்டும். இன்று இந்த இரண்டுக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லாதது போல் இருக்கிறது, முற்றிலும் முரண்பட்ட அடிப்படைகளையும் ஆய்வு முறைகளையும் கொண்ட துறைகளாக அறியப்படுகின்றன.
ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஸ்மித் தான் என்று சொன்னால் விநோதமாக இருக்கும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜார்ஜ் ஸ்டிக்லர், “போட்டி நிறைந்த சூழலில் தன்னலம் பாராட்டும் தனிமனித விழைவை,” கண்டறிந்த ஆதம் ஸ்மித்தின் நியூட்டனிய கண்டுபிடிப்பின் அடித்தளத்தில்தான் நியோகிளாசிகல் பொருளாதாரம் எழுப்பப்பட்டிருக்கிறது என்று கூறினார். ஏறத்தாழ அனைவரும் அதை ஒப்புக் கொண்டது போலிருந்தது. இன்றும் அந்த நிலைதான் நிலவுகிறது. பொருளாதாரம் இன்று ஒரு அறிவியல் போல் தோற்றம் பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் ஸ்மித்தின் சிந்தனைதான். அதனாலேயே தத்துவத்துறையும் பொருளாதாரத் துறையும் உரையாட வேண்டிய தேவையில்லை, அது சாத்தியமுமல்ல என்று தோன்றுகிறது.
மனிதனின் அற இயல்பு என்னவென்று ஸ்மித் கொண்டிருப்பதாக நான் எழுதியது ஏற்றுக்கொள்ளத் தக்கது என்றால், தனிமனித சுயநலமே அவர் பொருளாதார துறைக்கு அளித்த பெருங்கொடை என்று சொல்வது மிகப்பெரிய பிழையான வாசிப்பாக இருக்கும். ஸ்மித் என்னவோ பொருளாதாரத் துறை உருவாவதற்கு முன் அது குறித்த ஆயத்த ஆய்வுகள் செய்து கொண்டிருந்தார் என்பதல்ல. அவர் பல துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார், அவற்றுக்கிடையே இருந்தே வேலிகளைத் தாண்டி சர்வசாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருந்தார். அறம் குறித்த தத்துவ ஆய்வில் சமூகவியலும் பொருளாதாரமும் பேசுவதற்கான உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயங்களாகவே இருந்தன. எனவே, மனிதனின் இயல்பு என்ன என்று அக்காலத்தவர்கள் வகுத்திருந்த வரையறைகளை ஆதாரமாகக் கொண்டதாகவே அவரது பொருளாதாரச் சிந்தனைகளும் இருந்தன. இதை எல்லாம் பிரித்துப் பார்க்கும்போது நாம் ஸ்மித் சொன்னதை தவறாகப் புரிந்து கொள்வோம் என்பது மட்டுமல்ல, விவாதம் துவங்குவதற்கு முன்பே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம். எவ்வளவுதான் மோசமாக ஸ்மித் கூறியதைப் புரிந்து கொண்டாலும்கூட அதுவும் அற மானுடவியலைக்\ கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும். கட்டுப்பாடுகளற்ற சந்தைப் பொருளாதாரத்தை ஸ்மித் வலியுறுத்தினார் என்று சொல்பவர்களும்கூட, அவர் மனிதன் சுயநலம் மிகுந்தவன் என்று சொன்னதாகவே புரிந்து கொண்டாக வேண்டும். எது எப்படியானாலும் மானுட தர்மம் என்ன என்பதைப் பேசாமல் இருக்க முடியாது.
பொருளாதாரத் துறையின் மையத்தில் ஸ்மித் இருக்கிறார் என்கையில், இது அறிவுப்புல வரலாற்றோடு நிற்கும் விஷயமல்ல. அரசியல் பொருளாதாரம் பற்றிய அறிவுலகம் ஸ்மித்தால் உருவாக்கப்பட்டது, அவரது வழித்தோன்றல்களால் நிறைந்தது, அது முழுக்க முழுக்க மானுட தர்மம் குறித்த ஊகங்களால் பொத்தலாக்கப்பட்டிருக்கிறது. இது நவீன பொருளாதார ஆய்வாளர்களுக்குப் பிடிபடாத விஷயமாக இருக்கிறது.
மானுட தர்மம் குறித்து ஸ்மித் என்ன சொன்னார் என்பதில் அக்கறை இல்லாத பொருளாதார வல்லுனர்களும்கூட, அதை அடிப்படையாய்க் கொண்ட உலகின் கேள்விகளைத் தவிர்க்க முடியாது. பொருளாதாரத்தின் டிஎன்ஏவில் மானுட தர்மம் குறித்த தத்துவங்கள் பொதிந்திருக்கின்றன. இதை கவனிக்க மறுப்பவர்கள், பொருளாதாரம் குறித்த விவாதங்களில் எது விலை பேசப்படுகிறது என்பது குறித்து முழுமையாய் புரிந்து கொள்ளாதவர்கள்.
மனிதர்கள் அனவைரும் சுயநலமிகள்தானா? அப்படியானால், தானாகவோ அல்லது தெய்வ சித்தத்தின்படியோ இது பொதுநலனாக மாறுகிறதா? தமக்கு வாய்த்த நலன்களை அறிவுப்பூர்வமாக பெருக்கிக் கொள்பவர்கள் மட்டும்தானா நாம்? அல்லது, நம் அகத்தின் சிக்கலான தர்மத்தையும், நம் நடத்தையின் புரிந்து கொள்ள சிக்கலான வெளிப்பாட்டையும் இது கைப்பற்றத் தவறுகிறதா? இது எல்லாவற்றையும்விட மனிதர்களுக்கிடையே உள்ள பயன்பாடுகளை ஒப்பிடுவது அசாத்தியமானதும் அர்த்தமற்றதுமானது என்று சொல்ல முடியுமா?
இந்தக் கேள்விகளைப் புறக்கணிக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. சந்தையின் ஒழுங்கு, செல்வ ஏற்றத்தாழ்வுகள், முதலியத்தின் எதிர்காலம் என்றெல்லாம் பேசும்போது இவையனைத்தும் நம் முன்னும் பின்னும் நம்மைச் சூழவும் மிதந்து கொண்டிருக்கின்றன. ஆதம் ஸ்மித் இறந்து நூறாண்டுகளுக்குப் பின்னரும் இது குறித்த ஆழமான புரிதல் இருக்கவில்லை. 1890ஆம் ஆண்டு ஆல்பிரட் மார்ஷல் தன் பொருளாதாரத்தின் அடிப்படைகள் என்ற பாடநூலை இவ்வாறு துவக்கினார்-
“பொருளாதாரம் என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கை விவகாரங்களில் அவனை அறிந்து கொள்வது; நலவாழ்வுக்குத் தேவையான பொருளாதாரத் தேவைகளை அடைவதிலும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதிலும் மிகவும் நெருக்கமான தனிமனித, சமூகச் செயல்பாடுகளை அது ஆய்வு செய்கிறது. ஒரு புறம் அது செல்வத்தை ஆய்வு செய்கிறது என்றால், மறுபுறம், அதைக் காட்டலும் முக்கியமான பக்கம், மனிதனை ஆய்வு செய்கிறது.”
இப்படிப்பட்ட ஆய்வுகளில் கேட்க வேண்டிய பெருங்கேள்விகளை இன்றைய பொருளாதாரத் துறை புறக்கணிக்கிறது. இதனால் அதன் மையத்தில், இத்தனைக்கும் என்ன அர்த்தம், என்பது குறித்து ஒரு மிகப்பெரிய வெறுமை இருக்கிறது. நிஜ மனிதர்களின் வாழ்வில் உள்ள மிகப் பெரும் கேள்விகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்ப முற்படும் பிக்கெட்டியின் நூல் இந்த வெறுமையை நிறைக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் அதுவும் கூட துவக்க காலப் பொருளாதார ஆய்வுகளில் இருந்த அளவுக்கு மானுட விரிவை முழுமையாய் மீட்டேடுப்பதில்லை. பொதுநலம் என்றும் நம் பொருளாதார ஏற்பாடுகளின் எதிர்காலம் என்ன என்றும் நாம் பேசத் துவங்கியிருக்கிறோம், இப்போதுதான் இந்த விரிவு மிகவும் அவசியப்படுகிறது.
(மூலம்: க்ரிஸ்டீனா மக்ரோரி; தமிழில் தழுவலாக எழுதியவர்: அ. சதானந்தன்.)