விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், அமுதசுரபி எனத் தமிழின் முன்னணி வார இதழ்கள் அனைத்திலும் கோபுலு வரைந்தார். ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், தேவனின் துப்பறியும் சாம்பு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், சுந்தாவின் யாருக்கு மாலை, சாவியின் வாஷிங்டனில் திருமணம், நா.பார்த்தசாரதியின் நித்திலவல்லி, ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் உள்ளிட்ட படைப்புகளுக்கு கோபுலு வரைந்த ஓவியங்கள் வாசகர்களின் மத்தியில் கதாபாத்திரங்களை மனதில் பதித்து, அவருக்கென்று தனி செல்வாக்கை உருவாக்கின. நகைச்சுவைத் துணுக்குகள், கேலிச்சித்திரங்கள், புராணத் தொடர்களுக்கான ஓவியங்கள் என 60 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார் கோபுலு. தன்னுடைய வாழ்நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தவர் கோபுலு என்பது குறிப்பிடத்தக்கது. 1991-ஆம் ஆண்டு ஓவியர் கோபுலுவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.