கவிதைகள்

முகநூல்

Tribal-Expressions-Faces-317
முகம்
நூல்தான்
திறந்தே
இருக்கும்
ஆனால்
திறந்த நூல்
அல்ல
எப்போதும்
படிக்கலாம்
எளிதில்
படிக்கமுடியாது
புரிவதுமாதிரி
இருக்கும்
புரிந்தது
குறைவாக இருக்கும்
ஆழமானவற்றின்
அறிகுறிகள் தெரியும்
மறைத்தாலும் முடியாது
மறைபொருளை
அறிந்துகொள்ளமுடியும்
பக்கம் மாறுவதில்லை
பாடங்கள்
மாறிக்கொண்டே இருக்கும்
மையிட்டு
எழுதுவதில்லை
மனமிட்டு எழுதுவது
நாடக ஓவியங்களை
ஓவிய நாடகங்களை
ஒருசேரக் காணலாம்
அலங்கார நூல்களும்
அமைதியான நூல்களும்
ஆழமான நூல்களும்
வெறுமையும் வறுமையும்
வறுத்தெடுத்த
வாட்டி எடுத்த
நூல்களும் உண்டு
பளிங்குபோல் காட்டும்
சில
பதுங்கிக்கொண்டும்
இருக்கும்
முகநூல்கல்வி
அனைவருக்கும்
முக்கியம்
நயத்தக்க நாகரீகத்திற்குக்
கைகொடுக்கும்
முகம் நூல்தான்
அது
ஒருநூல் அல்ல
திறந்தே இருக்கும்
அது
திறந்த நூல் அல்ல
பிச்சினிக்காடு இளங்கோ
 

oOo

புத்தனைத் தேடி

download

தியானமே திசைவெளியில் குவிந்து அடுக்கி அடுக்கிக் கட்டமைத்தது போல் காட்சியளிக்கும் பொன்னினொளிர்ந்து பகோடா.
தியான அறைக்குள் நான் நுழைவதற்கு முன்னமேயே
மெளனம் எத்தனையோ ஆண்டுகளாய்க் காத்திருப்பது போல் காத்திருக்கும்.
ஊதுபத்தி மணம் நிறைந்தது போல் அறையில் மெளனம் நிறைந்திருக்கும்.
விட்டு விட்டு ஒரு பறவை ஒலித்து மெளனத்தை
விசிறி விடும்.
சிறிது வெளிச்சம் ஒரு குட்டித் தவளை போல் அறைக்குள் குதித்திருக்கும்.
உள் ஒளிக்க என்ன இருக்கிறது
என்பது போல் அறையில் தாழ்ப்பாளுமில்லை; பூட்டுமில்லை.
’உன் கால் நீட்டப் போதும் வா’ என்று வரவேற்கும் அறை.
மெளனம்
முகம் நெருங்கும்.
உட்செவியில் அதிரும்
மூச்சினொலி.
உள்மூச்சும் வெளிமூச்சும் விடாது
உடலைப் பின்னும்.
‘இது வரை கழற்றிப் போடாத உன் சட்டையைக் கழற்றிக் கொக்கியில் மாட்டி விட்டு உட்கார்’ என்று மெளனம் சொல்லும்.
உள் உறங்கியிருக்கும் நச்சரவு கண்
விழிக்கும்.
‘எதற்கு வந்தாய்
இங்கு?’
புத்தனைத் தேடி
என்பேன்.
ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கி நிற்கும்
மெளனம்.
எதிரே
வெறும் நெட்டைச் சுவர்.
‘நச்’சென்று தும்மும்
என் மேல்.
கு.அழகர்சாமி

oOo

சதுரங்கத் தனிமை

இசை ஞானம்
காரணமில்லை
மற்றொரு பறவைக்கான
ஒலி சமிக்ஞையே
ஒரு பறவையின்
சீழ்கை
இருப்பைத் தாண்டாத
பரிமாற்றங்களில்
பறவையின் உலகு
இருப்பு பற்றிய
முரண்கள்
எதிரும் புதிருமான
சதுரங்கம்
உனக்கும் எனக்கும் தான்
அதன் கட்டங்களுள்
யாரும் தனியனே
மின்மொழியாடலில்
கவனமில்லாமல்
வாசித்த பேசிய
பரிமாற்றங்கள்
கூரேற்றும்
தனிமையின் முள்முனைக்கு
தனிமையை நீக்கத் தேடி
உள்வாங்கும்
காட்சி ஒலி
தீராப்பசியில்
தகிக்கும்
உள்ளே
மேலும் கிடைக்க
மேலும் பசிக்கும்
சங்கிலியின் கண்ணிக்குத்
தனியே இல்லை
முக்கியத்துவம்
கண்ணிகள்
பிணைந்து நீளாமல்
தனிமையும்
தொலையவே
குகையிலே
ஓவியம்
எழுதினான்
ஒரு பிட்சு
சத்யானந்தன்

oOo