ஈராக் விவசாயம் – போருக்குப் பின்

பாஸ்ரா – சீபா (Seeba)

iraq

பாஸ்ரா நகரம் ஈராக்கின் தென்கோடியில் இருக்கிறது, குவைத்தின் கடல் மற்றும் நில எல்லைகளை ஒட்டி அமைந்திருக்கிறது. பாஸ்ரா நகரிலிருந்து தெற்காகச் சென்றால் இடதுகைப் பக்கம் முழுக்க டைக்ரிஸ் நதியும், நதிக்கரையோர கிராமங்களும், சிறு நகரங்களும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும். நதியின் அக்கரையில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் ஈரானின் கிராமங்களையும், நதிக்கரையோர சிறு சிறு மீன்பிடித் துறைகளையும், மிகப் பெரிய ஈரானிய கொடியையும் பார்த்துக்கொண்டே செல்லலாம்.

ஈராக்கின் எல்லை ஃபாவ் (FAO or Faw) என்ற கிராமத்தில் முடியும். அதன் பின்னர் டைக்ரிஸ் நதியில் பாதி ஈரானுக்குச் சொந்தம். பாஸ்ராவுக்கும் ஃபாவ் கிராமத்துக்கும் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம். நடுவில் இருக்கிறது சீபா (Seeba) எனும் டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்த ஒரு கிராமம். துனிசியா நாடு அன்பளிப்பாய் அளித்த ஒரு மின் உற்பத்தி நிலையத்தில் (ஒரு படகையே மின் உற்பத்தி நிலையமாக மாற்றி இருக்கின்றனர்) இருந்து அந்தக் கிராமத்துக்கான மின்சாரம் கிடைக்கிறது. நம்மூரில் மாலையில் ஆற்றங்கரையில் சென்று அமர்வோமே, அப்படி அமர்ந்துவிட்டு வருவது இங்கிருப்பவர்களின் பொழுதுபோக்கு.
ஈரான் – ஈராக் போர் நடந்த எட்டு ஆண்டுகளும் இரு தரப்பிலும் மிக மோசமான சேதம். தினமும் யார் வீட்டிலாவது குண்டு வந்து விழும். தினமும் குறைந்தது இரணடு முதல் மூன்று மரணங்கள். சதாமின் பிடியில் இருந்த மக்கள் அங்கிருந்து இடம்பெயர அனுமதிக்கப் படவில்லை. மக்கள் குடியிருப்புமீது குண்டு வீசுகிறது என ஈரானைக் குற்றம் சாட்ட வசதியாக மக்களை இடம்பெயர அனுமதிக்கவில்லையாம்.
எனது வாகன ஓட்டுநரின் குடும்பமும் இந்த எல்லையை ஒட்டிய அபுல் கசீஃப் என்ற கிராமத்தில் இன்று இருக்கிறது. சீபாவுக்கும் இந்த கிராமத்துக்கும் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர். எனது ஓட்டுநரின் அப்பா பாஸ்ரா உரத் தொழிற்சாலையில் ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். லேசான பக்கவாதம் வந்து படுக்கையில் இருக்கிறார். ஆனாலும் இன்னும் வயது இருப்பதால் பெயருக்கு வேலை பார்க்கிறார். அவருக்கும் இந்த சீபா கிராமத்துக்கும் உள்ள தொடர்புதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.
போர் இறுதிக்கட்டத்தை அடைந்த நேரம் சீபாவின் கம்பெனி கொடுத்த குடியிருப்பில் 3 குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார். மூத்தவன் பையன், இளையவர்கள் ஒரு பெண்ணும், ஆணும். காலை வேலைக்கு கிளம்பும் முன்னர் எங்கோ ராக்கெட் வெடிக்கும் சப்தம். மீண்டும் கொஞ்ச நேரத்தில் இன்னொரு ராக்கெட் இவர்கள் வீட்டருகில் வந்து விழுந்து வெடிக்கிறது. யாருக்குமே காயம் இல்லை. ஆனால், அந்த வெடிச்சத்தம் தந்த அதிர்ச்சியில் இளைய மகனும், மகளும் இறந்துவிட்டனர். கண்முன்னாலேயே இரு குழந்தைகளும் இறந்து கிடப்பதைப் பார்த்த அவரால் இன்றுவரை அந்தக் கிராமம் பக்கமே போக முடியவில்லை. இப்போது இருக்கும் அபுல் கசீஃப் கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அந்த சீபா கிராமத்துக்கு இந்த 10 ஆண்டுகளில் மகனின் வற்புறுத்தலுக்காக ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறார். ஆனால், அன்று அப்பா அழுத அழுகையையும், அதைப்பார்த்து அம்மா அழுத அழுகையையும் கண்டு மிரண்டுபோன மூத்த பையன் (எனது ஓட்டுநர்) இன்றுவரை அந்தக் கிராமத்துக்குச் செல்லவே இல்லை. உறவினர்கள் இவர்களை வந்து பாக்கின்றனரே ஒழிய இவர் அந்தக் கிராமத்தில் அடியெடுத்தும் வைப்பதில்லை.

Iraq

உலகிற்கே நாகரிகத்தையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்த மெசபடோமியா நாகரிகம் இன்றைக்கு உணவுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமாய் இறக்குமதி செய்கிறது. இன்று ஈராக்கின் விவசாய நிலங்களாக இருப்பவை சுமேரியர்கள் உருவாக்கியது. ஒருகாலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். இன்றைக்கு நிச்சயம் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாய் இருக்கும் என்றே நினைக்கிறேன். சரியான கணக்கு ஏதும் அரசால் எடுக்கப்படவில்லை. ஈராக்கின் வடபகுதி முழுக்க நல்ல விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் குறிப்பாக இன்றைய தேதிக்கு ஈராக்கில் குர்திஸ்தானில்தான் தரமான விவசாயம் செய்யப்படுகிறது. கால்நடை வளர்ப்பும் மிக முக்கியமான தொழிலாக உருவெடுத்துள்ளது.
1980க்கு முன்னர்வரை அதாவது ஈரான் – ஈராக் போருக்கு முன்னர்வரை விவசாயம் நன்றாக நடந்துகொண்டிருந்தது. இப்போதும் ஈராக்கிய தூதரகங்களில் இவற்றைச் சித்திரிக்கும் நிழற்படங்களைப் வைத்திருக்கிறார்கள், கவனமாக சதாம் ஹுசைன் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். போர் ஆரம்பித்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் விவசாயம் நலிவடைய ஆரம்பித்தது. அடுத்து வந்த ஈராக் – குவைத் போர், அமெரிக்க ஊடுருவுதல், அதன்பின்னர் அமெரிக்கர்கள் வெளியேறியதுவரை ஈராக் விவசாயத்தில் கவனமே செலுத்தவில்லை. இதற்கு நடுவில் இந்த இரு நதிகளும் (யூஃப்ரடிஸ் மற்றும் டைக்ரிஸ்) பாய்ந்துவரும் துருக்கி, இந்த நதிகளின் குறுக்கே ஏராளமான அணைகளைக் கட்டியதும் நதியின் நீர்வரத்து பெருவாரியாக குறைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் சொல்வதானால் அறுபதுகளில் இந்த நதிகளில் வந்த நீர்வரத்தில் ஐந்தில் ஒருபகுதியே இன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவும் கச்சா எண்ணெயை வங்கிக்கொண்டு நிறைய உணவுப்பொருட்களைக் கொடுத்துக்கொண்டிருந்தது. நமது முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நட்வர்சிங்கும், அவரது மகனும்கூட இந்த Food for Oil திட்டத்தில் ஊழல் செய்து மாட்டினர். போரினால் விவசாயம் படுத்ததும், வேகமான மக்கள்தொகைப்பெருக்கமும் உணவை வெளியே இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு ஈராக்கைக் கொண்டுவந்துவிட்டன. ஈராக்கின் கர்நாடகாவான துருக்கி ஏகப்பட்ட அணைகளை யூஃப்ரடிஸ், டைக்ரிஸ் நதியின் குறுக்கே கட்டியதும், நதியின் நீர்வரத்து குறைந்து கடலில் உள்ள உப்பு நதியில் கலந்து உவர் நீராக மாறியதும் பாஸ்ரா மாநிலத்தின் நிலமெல்லாம் உப்பரிந்து போனதற்கும், விவசாயம் குறைந்ததற்கும் காரணம் என்கிறது ஓர் அறிக்கை.
கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் கொண்ட நதிக்கரையை ஒட்டி, போர் நடக்கும்போதும், அதற்கு முன்னரும் மிக அருமையான விவசாயம் நடந்திருக்கிறது. நெல், காய்கறிகள், பழங்கள், கீரைகள் என கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்ற கிராமங்களாக அந்த சுற்றுவட்டாரமே இருந்திருக்கிறது. பாஸ்ரா நகரத்துக்கு விவசாய விளைபொருட்களை அனுப்பி வைக்கும் மையமாக இருந்திருக்கிறது. தொடர்ச்சியான போர்கள் இன்றைக்கு விவசாயத்தை அடியோடு ஒழித்திருக்கின்றன. விவசாயம் செய்யத்தெரியாத தலைமுறைதான் இன்றைக்கு இருப்பது. மிக சொற்பமான மக்களே தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், கீரைகள் எனப் பயிரிடுகின்றனர். மீதமுள்ள நிலமெல்லாம் தரிசாகவே கிடக்கிறது. கலப்பினப் பசுக்கள் நிறைய தென்படுகின்றன. இரு மாட்டுப் பண்ணைகளுக்குச் சென்று வந்தேன். எல்லாப் பாலும் பாஸ்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சாலையோரத்தில் பழைய தண்ணீர்ப்பாட்டிலில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பால் ஐந்து டாலர். உள்ளூர் மக்கள் குழந்தைகளுக்காக அன்றி பால் வாங்குவதில்லை என்பதால் நகரத்தில்தான் விற்றாக வேண்டும். குவைத் டேனிஷ் டெய்ரி எனப்படும் கேடிடி பிராண்ட் பால் பொருட்கள்தான் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பால் பொருட்கள்.
பாஸ்ரா நகரத்தைச் சுற்றி நிறைய விளையும் பொருட்கள் என்றால், தக்காளியும், கலப்பின வெங்காயமும், உருளையும், கொஞ்சம் இதர காய்கறிகளுமே. நெல்லும் கொஞ்சம் விளைகிறது. இங்கும் நம்மூரைப் போன்றே ’நீ கத்தரிக்கா போடுறியா, நானும் கத்தரிக்கா போடுவேன், நீ தக்காளி போடுறியா, நானும் தக்காளி போடுவேன்’ என ஒரே சமயத்தில் எல்லா விவசாயிகளும் ஒரே விளைபொருள்களை பயிரிடுகிறார்கள். கடைசியில் எல்லாம் ஒரே சமயத்தில் அறுவடையாகி நம்மூர் காசில் கிலோ 5 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நல்ல சீசனில் 15 கிலோ கொண்ட கூடை நம்மூர் பணத்தில் 120 ரூபாய்க்கு கிடைக்கும். சீசனில்லா நேரங்களில் கிலோ 300 ரூபாய்க்குக் கிடைக்கும்.
iraqAMHameedFarmer08
இதேதான் வெங்காயத்துக்கும், உருளைக்கிழங்குக்கும். கொஞ்சம் நெல்லும் பயிரிடுகிறார்கள். எப்போதோ ஈராக்கின் விவசாயப் பல்கலை கண்டுபிடித்த ரகம் மற்றும் உள்ளூர் ரகமும் பயிர் செய்யப்படுகிறது. ஆனால், நெல் விவசாயம் என்பது பாக்தாத் முதல் பாஸ்ராவரை கிட்டத்தட்ட 600 கிலோமீட்டரில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கெல்லாம் பயிர் செய்யப்படுகிறது. பாஸ்ராவில் இருந்து பாக்தாத் செல்லும்போது விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் பெரும்பாலும் பசுமையாக இருக்கும். ஆனாலும் உணவுப்பொருட்கள் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. சதாமின் காலகட்டத்தில் அரிசி, கோதுமை, பருப்புகள் தவிர்த்து இதர பொருட்களில் தன்னிறைவு அடைந்திருந்தது. இன்றைக்கு ஈரானும், குவைத்தும் இதர நாடுகளும் அனுப்பினால்தான் உணவுப்பொருட்கள் என்ற அளவில் வந்து நிற்கிறது.
பாஸ்ரா மாநிலம் தவிர்த்த இதர பகுதிகளில் விவசாயம் செய்யமுடியாமைக்கு காரணம், நிலம் முழுக்க உப்பரிந்து போயுள்ளது, கிட்டத்தட்ட களர் நிலங்கள் போல. இதற்கு முக்கியக் காரணம், நிலத்தை உழுவதே இல்லை. மழைத்தண்ணீரோ, ஓடைத்தண்ணீரோ வெளியேற வாய்ப்பே இல்லை. இதனால் தரையின் கீழிருக்கும் உப்பு தண்ணிரில் கரைந்து மேல்மண்ணுடன் கலந்துவிடுகிறது. அதை சரிசெய்யும் அளவு தொழில்நுட்பமோ, களர் நிலத்தை விவசாய நிலமாக மாற்ற செலவழிக்கும் அளவு வசதியோ இல்லை. நம்மூரில் இத்தனை தண்ணீர் இருந்தால் நிச்சயம் முப்போகம் விளைவித்துவிடுவார்கள் நம் விவசாயிகள்.
salinization in iraq
பெரும்பாலான இளைஞர்களுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. செக்யூரிட்டி வேலைக்கும், வாகன ஓட்டுநர் வேலைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை. சும்மா வீட்டில் இருந்தாலும் இருப்பார்களே தவிர விவசாயத்துக்கு வரமாட்டார்கள். ஆனால், இந்தக் கிராமங்களில் இருக்கும் பெரியோர்கள் நம்மூரைப்போல புலம்புவதில்லை. ’அவனுகளுக்கு என்ன தெரியும், வேலையும் செய்யாம, சிகரெட்டை பிடிச்சிகிட்டு, மொபைலை நோண்டிட்டு 30 ஆயிரம் ஈராக்கி தினார் (20 டாலர் கிட்டத்தட்ட) சம்பளத்தையும் வாங்கிட்டு போயிருவான், அவனுக்கெதுக்கு கொடுக்கணும்’ என்பதே அவர்கள் கொள்கை.
ஈராக்கின் நண்பனான இந்தியா விவசாயத்தில் நிறைய உதவ முடியும். ஏகப்பட்ட விளைநிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன, பயன்படுத்த முடியாமலும், பயன்படுத்தக்கூடிய நிலங்கள் ‘என்னத்த விவசாயம் செய்றது’ என்ற எண்ணத்தாலும் தரிசாகக் கிடக்கின்றன. அவர்களுக்கு மாற்றுப்பயிரும், உப்பு நிலத்தில் விளையும் பயிர் ரகங்களும், நெல் ரகங்களும், விவசாயத் தொழில்நுட்பமும் கொடுக்கலாம். நீண்டகாலத் திட்டங்களை வகுத்துக்கொடுத்து செய்ய வைக்கலாம். குறைந்தது சாப்பாட்டுக்காவது அவர்கள் சம்பாதித்துக்கொள்வார்கள். இன்றைய நிலவரப்படி ஒருகிலோ பாஸ்மதி அரிசியின் விலை 4 முதல் 6 டாலர். 15 டாலர் வரையும் அரிசி இருக்கிறது. உள்ளூர் அரிசி கிலோவுக்கு 2 முதல் 3 டாலர் வரை போகிறது. அதற்கு சரியான மார்கெட்டோ, அரசு கொள்முதலோ இல்லை. அவரவர்கள் விளைவித்ததை பையில் கட்டி (5 கிலோ பொதிகளாக) சாலையில் வைத்து விற்கின்றனர். அதுதான் இவர்கள் விற்க இருக்கும் வாய்ப்பு. சில கடைகள் தவிர்த்து வேறு கடைகளில் ஈராக்கிய அரிசியை விற்பனைக்கு எடுத்துக்கொள்வதில்லை.
பருப்பு வகைகள், மசாலாப்பொருட்கள், எண்ணெய் வகைகள் எல்லாம் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷிலிருந்தும், எகிப்திலிருந்தும் வருகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பருப்பு வகைகள் எல்லாம் நம் நாடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் இருந்து மத்திய கிழக்குக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு பாக்கெட்டில் அடைத்து ஈராக்கிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
ஈராக்கில் கிடைக்கும் இன்னொரு சுத்தமான உணவுப்பொருள் எனில் மீன்கள் மட்டுமே. டைக்ரிஸ் நதியும், யூஃப்ரடிஸ் நதியும், ஃபராத் நதியும் அள்ள அள்ளக்குறையாத மீன்களைக் கொண்டிருக்கின்றன. எனவே ஈராக் முழுக்க எங்கு சென்றாலும் மீன்தான் முதன்மையான உணவு. மீனுக்கு அடுத்தபடியாக ஆடு, மாடு உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன. வான்கோழி, கின்னிக்கோழி, புறாக்கள் போன்றவை சாலைகளில் விற்கப்படுகின்றன. நம் ஊர் போல வாரச்சந்தைகள் கண்ணில் படவில்லை. சூக்குகள் என்ற பெயரில் மிகப்பெரிய வளாகத்தில் நிரந்தர விற்பனை நிலையங்கள் உள்ளன. சிறிய, பெரிய, நடுத்தரக்கடைகளில் பலசரக்கு, துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், சீருடைகள், எலக்ட்ரானிக்ஸ் என கலந்துகட்டி அங்கே விற்பனை செய்யப்படும். சில கடைகளில் பேரமும் பேசி வாங்கலாம். இந்திய மசாலாக்களை நாம் சொல்லும் பதத்தில் அரைத்தும் தருவார்கள். இவ்வளவுதான் இவர்களால் முடியும்.
சரியான தொழில்நுட்பமும் ஆலோசனையும் இருந்தால் ஈராக் விவசாயத்தில் பெரிய அளவில் சாதிக்கமுடியும். தங்கள் இயற்கை வளத்தைப் பாதுக்காக்கத் தெரியாதவர்களாகவும் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள் இங்குள்ள விவசாயிகள்.