மொழியாக்கங்கள் குறித்த ஓர் உரையாடல் – பகுதி1

(திரு ராஜ்மோஹன், சாகித்ய அகாதெமி செயல்திட்டங்களின் பொறுப்பாளராக இருக்கிறார். தனியார் பதிப்பகங்கள், மொழிவளர்ச்சி அமைப்புகள், மொழிபெயர்ப்பு மையங்கள் மற்றும் சாகித்ய அகாதெமி முதலான நிறுவனங்கள் பலவற்றிலும் இந்திய புனைவாக்கங்களுக்கான ஒருங்கிணைப்பாளராய் செயல்பட்டிருப்பதால், இன்று மொழிபெயர்ப்புகளுக்கான முன்னெடுப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புத்துறை ஆய்வாளர்களுக்கு மிகவும் முக்கியமான  நபராக விளங்குகிறார். தற்போது அவர்மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேசிய பதிவேடுஒன்றைத் தொகுக்கும் பணியிலுள்ளார்இந்திய மொழி படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும் வேறு உலக மொழிகளிலும் மொழிமாற்றம் செய்பவர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பாக இது உருவம் பெற்று வருகிறது. இது தவிர, இந்திய இலக்கியத்தை ஆவணப்படுத்தும் பணி, சாகித்ய அகாதெமியின் பெல்லோஷிப் ப்ராஜக்ட் மற்றும் இந்திய எழுத்தாளர்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய இணைய தகவற்களஞ்சியம் முதலியவற்றையும் கையாளும் பொறுப்பில் உள்ளார். இவை தவிர, இந்தியன் லிடரேச்சர் ஜர்னலின் துணைப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றுகிறார்.)

 

Sahitya_Akademi_60_Years_Prizes_Awards_Translations_Academy

சாகித்ய அகாதெமியின் பிரதான பணி மொழிபெயர்ப்புகள்தான், இல்லையா?
ஆம், சாகித்ய அகாதெமியின் மையச் செயல்பாடு மொழிபெயர்ப்பே. இதை முழுமையாகப் புரிந்து கொள்ள, நாம் அறுபதாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தியாவின் தேசிய இலக்கிய மையமாக சாகித்ய அகாதெமியை தோற்றுவித்த அப்போதைய இந்திய அரசு, “தேசத்தின் கலாசார ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்,” என்பதை அதன் நோக்கங்களில் ஒன்றாக வரையறை செய்தது.  ஒரு மொழியிலும் அதன் மக்களிடத்தும் உள்ள இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்து பிறவற்றுக்குக் கொண்டு செல்வதே அதன் முக்கிய பணியாக இருக்கிறது.
ஆனால் ஏன் இதைச் செய்ய வேண்டும்? ஒரு மொழிமரபில் உள்ளதன் சிறந்த இலக்கியத்தைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லும்போது பிறர் குறித்த நம் அறிவு விரிவடைகிறது. பிற மக்கள் மீதான வெறுப்பு, காழ்ப்பு, வன்முறை போன்ற உணர்வுகளுக்குக் காரணம் பிறர் குறித்த அறியாமையும் பிழைபுரிதலுமே என்பது உற்று நோக்கத் தெரியும். எனவேதான் இந்த தேசத்தின் கலாசார ஒருமைப்பாட்டைக் காக்க அகாதெமி தன்னாலான முயற்சிகளைச் செய்து வருகிறது. ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல் என்ற வகையில் அமைதியும் ஒற்றுமையும் வளரும் என்பது எதிர்பார்ப்பு. மேலும், மொழிபெயர்ப்புகள் நம் திறனை வளர்த்துக் கொள்ள உதவுகின்றன.
மொழிபெயர்ப்புகள், ஒரு பண்பாட்டில் உள்ளதை வேறொரு பண்பாட்டுக்குக் கொண்டு செல்கின்றன. அடிப்படை மனித உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் புறச்சூழல்கள் மற்றும் வரலாறு சார்ந்த பல்வேறு காரணங்களால் வெவ்வேறு மக்களிடையே பல்வகைப்பட்ட பண்பாட்டு வேற்றுமைகளைப் பார்க்க முடிகிறது, அடிப்படை மானுட உணர்வுகளே வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஒரு பண்பாட்டின் செறிவு என்பது நுண்விவரங்களில்தான் இருக்கிறது. ஆனால், மனித மனம் எதையும் எளிமைப்படுத்தியே புரிந்து கொள்கிறது, பிற பண்பாடுகளைப் புரிந்து கொள்ள அது உதவாது. எனவே, சாகித்ய அகாதெமியின் பணி மொழிபெயர்ப்பு என்பது போலிருந்தாலும், இந்தியாவில் உள்ள முக்கியமான 24 மொழிகளையும், அதாவது வாழ்வனுபவங்கள் வெளிப்படும் கூறுமொழிகளையும், ஒன்றுக்கொன்று பரிச்சயப்படுத்துவது என்று சொல்லலாம். பிற பண்பாடுகளை அறிந்து கொள்வதால் இந்த மொழிகள் அனைத்தும் செறிவடைகின்றன. இந்திய பண்பாடு ஒருமைப்பாடு கொண்டதாக இருந்தாலும், பன்முகத்தன்மையே அதன் இயல்பு. ஆனால் இதை உணர்வதில் சில எளிமைப்படுத்தல்கள் ஏற்படுகின்றன. இந்தக் குறையைப் போக்கி, செறிவான புரிதலை அளிக்கவே சாகித்ய அகாதெமி செயல்படுகிறது என்று சொல்லலாம்.
 
இந்த நிலையில், இந்தியாவில் மொழிபெயர்ப்புத் துறை வளர்ச்சிக்கு சாகித்ய அகாதெமி என்ன செய்து வருகிறது?
ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதெமி 23 மொழிகளிலும் மொழிபெயர்ப்புக்கான பயிற்றரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெங்களூரு, புது தில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அதன்  மொழிபெயர்ப்பு மையங்கள் உள்ளன. இவை தவிர, அகமதாபாத், அகர்தாலா ஆகிய நகர்களிலும் மையங்கள் இருந்தன, ஆனால் பல்வேறு காரணங்களால் அவை தற்போது செயல்படுவதில்லை.
இவை போக சாகித்ய அகாதெமி வெளியீடுகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 23 மொழிகளிலும் பரிசு பெற்ற படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை வெளியிட சாகித்ய அகாதெமி முயற்சி செய்கிறது. பரிசு என்றால் ஒரு பரிசல்ல, நான்கு வெவ்வேறு விருதுகள்- சாகித்ய அகாதெமி விருது, யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார், மொழிபெயர்ப்புக்கான பரிசு.  24 மொழிகளிலுமே இந்தப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆக,  24 மொழிகளில் விருதுகள் பெற்ற 4 நூல்களை, பிற 23 மொழிகளுக்குக் கொண்டு செல்வது என்றால்,  4 X 24 X 23, ஒவ்வொரு ஆண்டும் 2208 நூல்கள் என்று கணக்காகிறது.  இத்தனை புத்தகங்கள் வெளிவருவதில்லை. இதற்கான காரணம், மணிப்பூரி, தமிழ், டோக்ரி, வங்காளம், மலையாளம், கன்னடம் போன்ற தொலைதூர மொழிகளை அறிந்தவர்கள் பிற மொழியினரிடையே குறைவாகவே இருக்கின்றனர்.
இந்த நூல்கள் அனைத்தையும் பிற 23 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சி செய்கிறோம். இரு மொழிகளும் அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்களா என்ன என்பதையும் இன்னும் வேறு சில காரணங்களையும் ஒட்டி, எந்த மொழியில் எந்த அளவு இது சாத்தியப்படுகிறது என்பது மாறுகிறது. மொழிக்கு மொழி இந்த எண்ணிக்கை மாறும்.
 
எல்லா நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதிலிருந்து பிற 23 மொழிகளுக்கும் கொண்டு செல்லலாமே?
முடிந்த வரை, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு நேரடியாகவே மொழிபெயர்க்க முயற்சிக்கிறோம், அதுதான் சரியானதும்கூட. தெலுங்கு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க முடியும், ஆனால் சிந்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கத்தக்கவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களிடம் எழுதி வாங்கி வெளியிடுவது கொஞ்சம் சிக்கலான பணி. பொதுவாகச் சொன்னால், போதுமான மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடையே இல்லை.
 
தமிழில் மட்டும்தான் இப்படியா, இந்தியா முழுதும் இதுதான் நிலையா?
தமிழில் மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது போலவே பிற மொழிகளிலும் இதற்கான ஆர்வம் குறைத்து வருவதைத்தான் பார்க்கிறோம்.
 
இதைச் சரி செய்ய சாகித்ய அகதெமி என்ன செய்கிறது?
முன் சொன்னது போல், அகாதெமி 24 மொழிகளில் மொழிபெயர்ப்புக்கான பயிற்றரங்குகள் நடத்துகிறது.  அண்மையில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிறு மொழிகளுக்கான பயிற்றரங்கு நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இத்தகைய பயிற்றரங்குகள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே இருக்கும் மொழிபெயர்ப்பாளர்களின் திறனும் இவற்றில் பங்கேற்பதால் உயர்கிறது.
இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ஒரு கை ஓசை சாத்தியமில்லை. தனியார் பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், பெரும் பல்கலைக்கழகங்கள் முதலானவை இந்த நிலை மாறுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். தன் தாய் மொழி தவிர பிற இந்திய மொழிகள் அறிந்த மொழிபெயர்ப்பாளர்களும் குறைவு. பலருக்கும் தாய் மொழி தவிர, ஆங்கிலம் அல்லது இந்திதான் தெரிந்திருக்கிறது.
தமிழில் நிலவும் சூழலைப் பற்றி மட்டும் பேசுவதானால், நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்களில்கூட என். கல்யாணராமன், பத்மா நாராயணன், சுபஸ்ரீ மற்றும் சிலர் தவிர தரமான மொழிபெயர்ப்பாளர்கள் இங்கில்லை. இதனால் தமிழ் இலக்கியத்துக்கே இழப்பு ஏற்படுகிறது. தமிழில் எழுதப்படும் சிறந்த படைப்புகள் தமிழ்நாட்டுக்கு வெளியே சிறிதும் வாசிக்கப்படுவதில்லை. இந்த நிலையை உடனடியாகச் சரி செய்தாக வேண்டும்.
 
இந்நிலை எவ்வளவு காலமாக நீடித்து வருகிறது?
உற்று நோக்கினால்,  எழுபதுகளின் துவக்க காலம் வரை வங்காளம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, உருது மற்றும் ஆங்கில மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் இருந்தனர்.
இன்று ஏன் இப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதற்கான காரணங்களை நான் பேச விரும்பவில்லை. அரசியலுக்கும் இதில் இடமிருக்கிறது. பொதுமக்களின் அக்கறையின்மைக்கும் இடமிருக்கிறது. பிற இந்திய மொழிகளில் உள்ள நிலவரத்துடன் தமிழின் நிலையை ஒப்பிட்டு நோக்கினால் நான் சொல்வது புரியும்.
ஆங்கிலம், ஹிந்தி, உருது, குஜராத்தி, மராத்தி, ஒடியா மற்றும் பல வடகிழக்கு மொழிகளிலிருந்தும் வங்க மொழிக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களின் எண்ணிக்கையே ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது.
ஒடியா, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஹிந்தி, உருது ஆகிய மொழிகளிலும் நிலைமை இதுபோல் நன்றாகவே இருக்கிறது. எங்குமே பிற மொழிகளின் செவ்வியல் படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கிறார்கள், மிகத் தொலைவில் உள்ள பிராந்திய மொழி நூல்களுக்கும் வரவேற்பு இருக்கிறது.
ஆனால், தமிழ் நாட்டில் மொழிபெயர்ப்புகளுக்கு மரியாதை குறைவாக உள்ளது. இதுபோன்ற ஒரு கீழ்மையான நிலை உருவாக எப்படி நாம் அனுமதித்தோம் என்று தமிழை நேசிப்பவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டாக வேண்டும்.
மொழிபெயர்ப்புகளை ஏன் மதிப்பதில்லை என்பதற்கான பதிலை நான் சொல்வதற்கில்லை.
 
நவீன தமிழ் இலக்கியம் தமிழ் மொழிக்கு வெளியே அதிக அளவு அறியப்படவில்லை என்று சொல்கிறீர்களா?
நிச்சயமாக. பிற தென்னிந்திய மொழிகளை ஒப்பிட்டாலும்கூட நிலை இப்படிதான் இருக்கிறது. பிற இந்திய மொழிகளில் தமிழ் மொழி படைப்புகளை மொழிபெயர்க்கக்கூடிய மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்பது ஒரு குறை. அதைக் காட்டிலும் பெருங்குறை, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படும் தரமான நூல்கள் மிகக் குறைவாக இருக்கின்றன.
 
ஏன் இந்த நிலை?
தெரியவில்லை. தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்லும் மொழிபெயர்ப்புகளை விட்டுவிடுவோம். ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்களையே தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. பிற இந்திய மொழிகளை ஒப்பிடும்போது இந்த விஷயத்தில் தமிழர்களின் மெத்தனம் ஆச்சரியம் அளிப்பதாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.
ஆனால், இதைப் பற்றி புலம்புவதைவிட, என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இத்துறையில் அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். தனியார் பதிப்பகங்கள் ஆர்வம் காட்டினால் நிலைமை மாற வாய்ப்பிருக்கிறது.
 
வேறொரு விஷயம், தமிழறிந்தவர்களில் இந்த இருபத்து மூன்று பிற மொழி அறிந்தவர்களும் மொழிபெயர்ப்பு செய்ய முன்வருவது தேவையாக இருக்கிறது, இல்லையா?
ஆம். பொதுவாகச் சொன்னால், ஒரு நூல் எந்த மொழியில் எழுதப்பட்டு இருக்கிறதோ, அந்தப் பண்பாட்டை அறிந்து கொண்டவரது மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கும். எந்த மொழிக்கு அந்த நூல் கொண்டு செல்லப்படுகிறதோ, அந்தப் பண்பாட்டிலும் வாழ்ந்த அனுபவம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்தியாவின் அடையாளம் linguistic hetrogeneity என்று சொல்லலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் இது பொருந்தும்.
தமிழ் நாட்டில் வாழ்பவர்களில், இந்தியாவில் உள்ள பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பலர் தலைமுறை தலைமுறையாக இங்கிருக்கின்றனர். அதே போல், வேறொரு மாநிலத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்த அனுபவமும் இங்குள்ள தமிழர்களுக்கு இருக்கிறது. இவர்கள் போக, பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களும் இருக்கின்றனர். இவர்களில் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களை அடையாளம் காண வேண்டும், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து பதிப்பிக்க வேண்டும், இவர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாய் செயல்பட வேண்டும் – ஒவ்வொரு மொழிக்கும் இவையனைத்தும் செய்ய வேண்டும் என்பதே சாகித்ய அகாதெமியின் நோக்கம்..
தற்போது நான் தொகுத்து வரும் மொழிபெயர்ப்பாளர் விபரம் அடங்கிய குறிப்பேடு அதற்கு ஒரு துவக்கப்புள்ளியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 23 இந்திய மொழிகளிலும் தமிழ் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்யக்கூடியவர்கள் இதில் பதிவு செய்து கொண்டால், தமிழ் மொழி படைப்புகளை இந்தியாவெங்கும் கொண்டு செல்வது மிக எளிதில் சாத்தியமாகும். உலக மொழிகளுக்கும் இது பொருந்தும்.
தமிழறிந்தவர்களின் ஆர்வமே இந்த முயற்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும். எந்த விஷயத்திலும், “உள்ளத்தனையது உயர்வு” என்பதே பொருந்தும். தமிழும் பிற மொழிகளும் அறிந்தவர்கள், மொழிபெயர்ப்பு ஒரு பண்பாட்டுப் பங்களிப்பு என்பதை உணர்ந்து மொழிபெயர்க்க முன்வர வேண்டியது மிக அவசியம். இதற்கு தேவையான உதவிகள் செய்ய சாகித்ய அகாதெமி தயாராய் இருக்கிறது.
 
பிற மொழி இலக்கியங்கள் தமிழுக்கு வர அது உதவும். ஆனால் தமிழ் இலக்கிய படைப்புகள், ஆங்கிலத்துக்குச் செல்வது பற்றி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.. இப்போது நான் ஒரு நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
எதை மொழிபெயர்க்க வேண்டும் என்பதை நீங்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஒன்று, அந்தப் புத்தகம் உங்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய காரணத்தால் அதை நீங்கள் உங்கள் தாய் மொழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கலாம். அல்லது, அதன் தாக்கம் குறைவாக இருந்தாலும், அதில் சொல்லப்பட்ட பல விஷயங்களில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், முக்கியமான நூல் என்பதால் அது உங்கள் தாய் மொழியினர் பிறருக்கு பயன்படும் என்று நினைத்து நீங்கள் மொழிபெயர்க்க முன்வரலாம்.
ஆனால் மொழிபெயர்ப்பு என்று வரும்போது, இரு மொழிகளையும் அறிந்திருப்பது மட்டும் போதாது.  எதுவொன்றையும் எழுதுவது என்பது ஒரு கலாசாரச் சூழியலில் இடம்பெறும் நிகழ்வே. அது தன்னுள் பண்பாட்டுக் கூறுகளைப் பொதித்து வைத்திருக்கிறது.  ஒரு பிரதி எழுதப்பட்ட மொழியில் உள்ளது போலவே, அது மொழிபெயர்க்கப்படும் மொழியின் மொழிமரபும் ஒரு குறிப்பிட்ட கலாசார சூழலில் நிலவுகிறது. இந்த இரு கலாசார சூழியல்கள் குறித்தும் போதுமான அளவு பரிச்சயம் இருந்தால்தான்,  ஒரு பிரதியை மொழிபெயர்ப்பதில் வெற்றி பெற முடியும்.
இதை, கலாசாரம் மொழிபெயர்க்கப்படக்கூடியதா இல்லையா என்ற கேள்வியுடன் இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
மொழிகளின் உள்ளடக்கமாய், சொற்களுக்கும் அதன் பொருளுக்கும் அப்பால், அதன் பேசாமொழியாய் விளங்கும் பண்பாட்டுப் பின்புலத்தை மொழிபெயர்க்கும்போது கணக்கில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.
நீங்கள் தமிழில் எழுதுபவர் என்று வைத்துக் கொள்வோம், உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நீங்கள் விரும்புகிறீர்கள், அல்லது உங்கள் பதிப்பாளர் விரும்புகிறார், அல்லது உங்கள் நண்பர், வாசகர் என்று யாராவது விரும்புகிறார்கள். நீங்கள் நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளரைத் தேட வேண்டும். இங்குதான் உங்கள் பிரச்சினை துவங்குகிறது.
 
என்ன பிரச்சினை?
சிறந்த முறையில் மொழிபெயர்ப்பவர்கள் ஒரு பத்து பேர் இருப்பார்கள் என்று சொன்னேன், இல்லையா? அவர்களில் சிலர் வரிசையாக அடுத்தடுத்து இரண்டு மூன்று புத்தகங்களை மொழிபெயர்க்க ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பார்கள், இவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் வேறொரு புத்தகம் மொழிபெயர்ப்பதை நினைத்தே பார்க்க முடியும். வேறு சிலர் கொள்கை அடிப்படையில் மொழிபெயர்ப்பு செய்பவர்கள், கொடுப்பது எல்லாவற்றையும் செய்ய மாட்டார்கள். பத்தில் இந்த மாதிரி இருப்பவர்கள் போக மிச்சம் இருப்பவர்களிடம்தான் நீங்கள் பேச வேண்டியிருக்கும்.
 
அப்படியானால் ஆண்டுக்கு பத்து பதினைந்து புத்தகங்கள்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாதே?
அதுதான் இன்றைய நிலை. ஒவ்வொரு ஆண்டும் தமிழிலிருந்து நல்ல முறையில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்கள் என்று பார்த்தால் இவ்வளவுதான் இருக்கும்.
 
சரி, இவர்களில் ஒருவரை அணுகுகிறேன் என்று வைத்துக் கொள்வோம், அப்புறம் என்ன?
இல்லை, இன்னும் நீங்கள் இவர்களை அணுகுவது குறித்து ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொள்ளவே இல்லை. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு கணிசமான தொகை அளிக்க வேண்டியிருக்கும். ஆனால் பொதுவாக, மொழிபெயர்ப்பாளர்கள் அதை ஒரு முழுநேரத் தொழிலாக வைத்துக் கொள்ள முடியாது என்பதுதான் நிலை. எனவே, ஓரளவுக்கு அதிக அளவில் மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தால் இன்னும் பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் அச்சாக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலை ஏற்பட இன்னும் பலருக்கு பயிற்சி அளிக்க வேண்டும், தொடர்ந்து அவர்களின் மொழிபெயர்ப்பை மேம்படுத்த வேண்டும்.
மொழிபெயர்ப்பு ஒரு கலை. ஆங்கிலம் தெரிந்த எல்லாரும் அதைச் செய்ய முடியாது. திறமை இருப்பவர்களும்கூட ஒரு ஐந்து வருடமாவது நல்ல ஒரு எடிட்டரிடம் பயிற்சி பெறுவது அவசியம்.
மொழிபெயர்ப்பாளராக பயிற்சி எடுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்றாலும்கூட, நீங்கள் தொடர்ந்து சிறுகதைகளை மொழிபெயர்த்து அவற்றை பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு இதை நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். அது மிக முக்கியம்.
இன்று மொழிபெயர்ப்புத்துறையின் உச்சத்தில் உள்ள எழுத்தாளர்களைப் பார்த்தீர்களானால், அவர்கள் தொடர்ந்து தம் திறன்களை வளர்த்துக் கொண்டிருப்பதைக் காண முடியும், மொழிபெயர்க்கத் துவங்கி ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குப்பின் அவர்களின் மொழிபெயர்ப்பு நுட்பமான வகையில் மேம்பட்டிருப்பதை நாம் காணத் தவற முடியாது. யாருமே எழுத ஆரம்பித்ததும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஆகிவிட முடியாது.
 
ஆங்கிலத்தில் சிறந்த தமிழ் படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதற்கு இது மட்டும்தான் காரணமா?
சற்று பொறுங்கள், அதற்குள் அவ்வளவு தூரம் போக வேண்டாம். புதிய மொழிபெயர்ப்பாளர்கள் பதிப்பகங்களை அணுக சம்பிரதாயமான வழிகளை மேற்கொள்வதே நல்லது. எந்த ஒரு மொழியிலும் எவை சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன என்பது குறித்து பதிப்பகங்களுக்குத் தெரியாது. அங்கு, அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட எவரேனும் இருந்தால் ஓரளவு இது தெரிந்திருக்கலாம். ஆங்கில பதிப்பகங்கள் ஆங்கில மொழியில் நூல்கள் வெளியிடுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு மேற்கொள்வது குறித்து இந்தியாவின் பிற மொழியினர் பெருமிதம் கொள்ள வேண்டும், பொறாமைப்பட அவசியமில்லை.
நிலைமை இப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, மொழிபெயர்ப்பாளர், தன தாய் மொழி படைப்பு எழுதியவர் குறித்த ஒரு விவரக்குறிப்பு ஒன்றைத் தொகுக்க வேண்டும். மொழிபெயர்ப்பதற்கான முன் அனுமதியை எழுத்தாளர் அல்லது அவரது பதிப்பகத்திடமிருந்து பெற வேண்டும். தான் மேற்கொள்ளவிருக்கும் மொழிபெயர்ப்பு குறித்து சுருக்கமாக ஒரு குறிப்பு எழுத வேண்டும். தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஓர் அத்தியாயம், அல்லது சில கவிதைகளை இணைத்து பதிப்பகத்துக்கு அனுப்ப வேண்டும். இதைச் செய்தால் பதிப்பகங்கள் விரைவாக முடிவெடுக்க முடியும். மொழிபெயர்ப்பில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து தன் பரிந்துரைகளை அளிக்க முடியும்.
சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற அங்கீகாரம் பெறும்வரை, எந்த ஒரு நூலையும் முழுமையாக மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு பதிப்பகங்களை அணுகக்கூடாது. இதில் நடைமுறை சாதகங்களும் உண்டு. சமீப காலமாக, இன்னும் சரியாகச் சொல்வதானால், நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டுவந்த இந்த நடைமுறை மொழிபெயர்ப்பாளர்களாக வேண்டும் என்று விரும்பும் பலராலும் புறக்கணிக்கப்படுகிறது.
ஒரு மொழிபெயர்ப்பைப் பதிப்பிப்பதில் பல விஷயங்கள் இருக்கின்றன. தமிழில் ஒரு புத்தகத்தைப் பதிப்பிப்பதானால், அதன் ஆசிரியருடன் சன்மானம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து ஒப்பந்தம் செய்து கொண்டால் போதும். ஆனால் மொழிபெயர்ப்பு என்று வரும்போது அதன் மூலமொழி ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் இருவருடனும் ஒப்பந்தம் செய்து கொண்டாக வேண்டும். சில சமயம், மூல மொழி பதிப்பாளரிடமும்கூட ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.
தன் நூலை வாசிப்பவர்கள் பல்வேறு வகையில் மாறுபட்ட கலாசார, மொழி பின்புலம் கொண்டவர்கள் என்பதை மனதில் கொண்டு தேய்வழக்குகளையும் மூல மொழியின் ஓசையையும் இயன்ற வரை தவிர்க்க வேண்டும். ஆங்கிலத்தில் வாசிக்கும்போது இயல்பான மொழியில் இருக்கும் வகையில் மொழிபெயர்க்க வேண்டும்.
பெரும்பாலும் இதில் கவனம் செலுத்தப்படுவதில்லை, அதிலும் குறிப்பாக தென்னிந்திய, மேற்கிந்திய மொழிகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்போது இந்தப் பிழை நேர்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் மொழிபெயர்ப்புகள் அதிக அளவு நிராகரிக்கப்படவும் இதுவே காரணமாக இருக்கிறது.
 
நன்றி, தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிப்பது என்றால் மொழிபெயர்ப்பாளர் எண்ணிக்கை கூட வேண்டும், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று புரிந்து கொள்கிறேன்.
இதற்குதான் மொழிபெயர்ப்பாளர்களின் விபரங்கள் கொண்ட கையேடு தயாரித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் நூல் ஆங்கில மொழியில் இரண்டாயிரம் பிரதிகள் விற்பனையாவது போலவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் விற்பனையாகும் சாத்தியம் உள்ளது, இல்லையா? ஆங்கிலத்தில் விற்றால் எவ்வளவு ராயல்டி கிடைக்குமோ, அது இதிலும் கிடைக்கப் போகிறது. ஆனால், உலகளாவிய ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கும் பண்பாடு சார்ந்து பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு தமிழ் எழுத்தாளரின் படைப்புகள் பிரஞ்சு அல்லது ஜெர்மன் மொழியில் செய்யப்பட்டு வாசிக்கப்படுவதைவிட, ஒரிய மொழியில் அல்லது சிந்தி மொழியில் வாசிக்கப்படுவதில் ஓர் அழகும் பொருளும் இருக்கிறது என்று சொல்லலாம் இல்லையா?
சர்வதேச அங்கீகாரம் என்பது முக்கியம்தான், ஆனால் உங்கள் எழுத்து ஆங்கிலத்துக்குச் சென்றாலும் ஒரிய மொழியோ சிந்தி மொழியோ வாசிப்பவனை அது சென்று சேர்வதில்லை. இந்தியாவினுள் பரவலான அறிமுகம் தேடாமல் இந்தியாவுக்கு வெளியே போக ஆசைப்படுவது காலனியாதிக்கத்துக்கு பலியானதன் மனநிலை. ஆங்கில மொழிபெயர்ப்புகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒரிய, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி மொழிபெயர்ப்புகளும் தமிழ் எழுத்தாளனுக்கு முக்கியம் என்பதுதான் சாகித்ய அகாதெமியின் எண்ணமாக இருக்கிறது.
 
(தொடரும்…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.