எண்ணெய்யும் தண்ணீரும்: அவதாரங்கள்

சென்ற அத்தியாயத்தின் இறுதியில் சொன்னது போல் கட்டுப்பாட்டு அறையில், மின்னணு பேனலின் பின்புறம் அந்த விளக்கை பார்த்தபோது, அதிகம் சிவந்து ஒளிர்ந்தது அந்த ரிலேயில் இருந்த விளக்கா அல்லது என் குழுவில் இருந்த ஒரிசா மாநிலத்துக்காரரான அமுல்யகுமார் மொஹந்தியின் முகமா என்பது ஒரு பட்டிமன்றம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

Control-Room

என் குழுவினர் அனைவரும் உடனே மின்னணு பேனலுக்கு முன் பக்கம் சென்று அங்கிருந்த ப்ரொடக்க்ஷன் எஞ்சினீயரை உதைக்க தயாராகி விட்டார்கள். நான் அவர்களை சமாதானப்படுத்தி அவசரப்பட்டு ஏதும் செய்யவேண்டாம் என்று சொல்லி திரும்ப எங்கள் ஆய்வகத்துக்கு அழைத்து வந்தேன். சந்தேகம் இல்லாமல்  ப்ரொடக்க்ஷன் குழுதான் எங்களை மாட்டி வைக்கப்பார்க்கிறது என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருப்பதாக தோன்றியதால், அடுத்த அரைமணியில் என் குழு இன்னும் கோபத்துடன் பேசாமல் மும்பையில் இருக்கும் தலைமை அலுவலகத்தையே கூப்பிட்டு எங்கள் பிளாட்பார்ம் கண்ட்ரோல் அறை பொறியாளர்களைப்பற்றி புகார் செய்ய வேண்டும் என்று கூற ஆரம்பித்தனர். நிலைமை அவ்வளவு சூடேறியபோதும், என்னக்கென்னவோ  கண்ட்ரோல் அறை பொறியாளர்கள் அவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்று தோன்றவில்லை. அதிலும்
குறிப்பாக  அன்று பம்ப் அணைந்தபோது கண்ட்ரோல் ரூமில் பொறுப்பில் இருந்த முகர்ஜி என்னுடன் நன்றாகப்பழகும் நண்பர். அவர் போய் அப்படி ஒரு சதி செய்வார் என்று என்னால் நம்ப முடியாததால், என் குழு எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல், களத்தில் அந்த MOLnews_mdptransmitter (Main Oil Line) பம்ப்புக்கு பக்கத்தில் இருந்த அந்த உணர்வியை (high pressure sensor) மாற்றி புதிதாய் ஒன்றை பொறுத்திவிட்டு,  கட்டுப்பாட்டு அறை பொறியாளர்கள் மேல் பழி ஏதும் சுமத்தாமல், எங்கள் ஆய்வின்படி பம்ப்பின் எண்ணெய் வெளியேறும் பகுதியில் அழுத்தம் மிகவும் அதிகமாவதுதான் பம்ப் அணைந்து போவதின் காரணம் என்று மட்டும் ரிப்போர்டில் எழுதி அனுப்பினேன். என் குழுவிற்கு நான் அவர்களுடன் சண்டை போட்டு ஒரு பாடம் புகட்டும் வாய்ப்பை தப்ப விடுகிறேன் என்று கடுப்புதான்.
பிரச்சினை எப்படி இறுதியில் முடிந்தது என்பதுதான் வினோதம். அன்றோடு என் ஷிப்ட் முடிந்ததால் மறுநாள் காலை ஹெலிகாப்டர் பிடித்து மும்பை திரும்ப காத்திருந்தேன். அப்போது நான் இல்லாத அடுத்த 14 நாள் ஷிப்டில் பணி புரியும்  வெங்கடாசலம் என்ற சீனியர் வந்து சேர்ந்தார். ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன் கிடைத்த ஐந்து நிமிடங்களில் கதையை அவரிடம் சொல்லிவிட்டு மேல் விவரங்களை ஆய்வகத்தில் Handover Registerல் எழுதி வைத்திருக்கிறேன் என்றும் தெரிவித்து விடை பெற்றேன். அப்போதெல்லாம் செல்போன், மின்னஞ்சல் எதுவும் கிடையாது. எனவே அடுத்த ஷிப்ட்டுக்கு  இரண்டு வாரம் கழித்து திரும்பியபோதுதான் கதை என்னவாயிற்று என்று எனக்கு தெரியவந்தது.  இறுதியில்  யாரும் என் காலை வாரிவிட எல்லாம் முயன்றிருக்கவில்லை. நான் கிளம்பி போனதற்கப்புறம் பம்ப் அணையவே இல்லை!
prtransmitterமுந்தைய குழப்பங்களுக்கு காரணம் அந்த பம்ப்பின் எண்ணெய் வெளியேறும் இடத்தில்
இருந்த மிக அதிக அழுத்தத்தை கவனிக்கும் பழைய உணர்வி (HIgh  Pressure Sensor) ஒரு அபூர்வமான விதத்தில் பழுதடைந்ததுதான். பொதுவாக ஒழுங்காக வேலை செய்யும் அந்த உணர்வி, இணைப்பு தளர்வினால் (Loose Connection) திடீரென்று சுமார் பத்து மில்லி செகண்டுகளுக்கு அழுத்தம் மிக மிக அதிகம் என்ற தவறான செய்தியை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். ஆனால் பதினோராவது மில்லி செகண்ட் பழைய சரியான நிலைக்கு திரும்பி அந்த தவறான செய்தியை அனுப்புவதை நிறுத்திவிடும். அவ்வளவு குறைவான நேரத்திற்கு மட்டுமே அந்த செய்தி வந்தாலும், அந்த பெரிய பம்ப்பை நிறுத்துவதற்கான கட்டுப்பாட்டு அமைப்பு (Control Circuitry) அந்த செய்தியை உணர்ந்து கொண்டு, உடனே செயல்பட்டு பம்ப்பை நிறுத்திவிடும். ஆனால் மின்னணு பேனலின் முன் பக்கம் சங்கு ஊதி சிவப்பு விளக்கு ஏற்றுவதற்கான கட்டுப்பாட்டு அமைப்பு அவ்வளவு குறுகிய காலத்திற்கு தோன்றி உடனே மறைந்துவிடும் சமிக்ஞையை உணர்ந்து செயல்படும் அளவுக்கு துல்லியமானதாக இல்லை. எனவே பேனலின் முன் பக்கத்தில் ஒரு விளக்கும் எரியாமல் பம்ப் மட்டும் நின்று போய் கண்ணாமூச்சி ஆடி இருக்கிறது. பேனலுக்கு பின்னே நான் உபயோகித்த எலிப்பொறி இணைப்பு அமைப்புகள் தேவையான அளவு சென்சிடிவ் ஆக இருக்கவே, அந்த ரிலேயில் இருந்த சிவப்பு  விளக்கு எரிந்து கண்ட்ரோல் ரூம் பொறியாளர்களுக்கும் எனக்கும் இடையே சண்டை மூட்டிவிடப்பார்த்தது. நல்ல வேளையாக என் கையில் அசைக்க முடியாத ஆதாரம் இருப்பது போல் தோன்றினாலும், பொதுவாக நண்பர்களாக பழகும் சக ஊழியர்கள் மோசமாய் நடந்துகொண்டு நமது முதுகில் கத்தி குத்தவெல்லாம் மாட்டார்கள் என்ற என் எண்ணத்தினால் நான் அவர்கள் மேல் பழி சுமத்த தயங்கியது சரியான முடிவாய் அமைந்து நாங்கள் பின்னால்  அசடு வழிய தேவையில்லாமல் மானத்தை காத்தது!

platformwater

இன்னொரு முறை வேறொரு நிகழ்வில் தேவையே இல்லாமல் எனக்கு எக்கச்சக்கமாய்  நல்ல பேர் கிடைத்தது இன்னும் வேடிக்கை! முன்னொரு அத்தியாயத்தில் எண்ணெய் /எரிவாயு குழம்பு பிளாட்பார்முக்கு வந்தபின், அதை பெரிய தொட்டிகளில் சிறிது நேரம் தேக்கி, அதிலிருக்கும் சிறிதளவு தண்ணீரை பிரித்தெடுத்து, சுத்தம் செய்து கடலில் கொட்டிவிடுவோம் என்று சொன்னது ஞாபகம் இருக்கலாம். அந்த தண்ணீரின் தரத்தை தினமும் பரிசோதனை செய்து மும்பையில் இருந்த தலைமை அலுவலகத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிப்பது பிளாட்பார்மில் பணி புரியும் கெமிஸ்டின் (Chemist) வேலை. இது போன்ற சில சோதனைகளை செய்வதைத்தவிர கெமிஸ்டுகளுக்கு பிளாட்பார்மில் அப்படி ஒன்றும் நிறைய வேலை இருக்காது. ONGC தரும் சம்பளம், படிகள் எல்லாம் நன்றாக இருக்கும் என்பதால், அந்தக்காலத்தில் முனைவர் பட்டம் பெற்ற கெமிஸ்டுகள் பிளாட்பார்மில் இந்த பணிகளை செய்து விட்டு நிறைய நேரம் ஈ ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.
வேறு ஒரு பிளாட்பார்மை சேர்ந்த ஒரு கெமிஸ்ட் அவருடைய பணி முடிந்து மும்பை திரும்ப ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் வழியில் இருந்த எங்கள் பிளாட்பார்மில் யாருக்கோ உடம்பு சரியில்லாமல் போகவே, அந்த கெமிஸ்டை எங்கள் பிளாட்பார்மில் இறக்கி விட்டுவிட்டு ஹெலிகாப்டர்  நோயாளியை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக மும்பைக்கு பறந்து விட்டது. வேறு ஒரு சாப்பரை பிடித்து அவரை ஊருக்கு அனுப்பி வைக்க இன்னும் நாலைந்து மணி நேரம் ஆகலாம் என்று ரேடியோ ஆபிசர் சொல்லிவிடவே, அவர் பொழுது போகாமல் எங்கள் பிளாட்பார்ம் கெமிஸ்டுடன் அறிமுகம் செய்துகொண்டு சும்மா அரட்டை அடிக்கலாம் என்று ஒரு கப் காஃபியுடன் எங்கள் கருவியியல் ஆய்வகத்துக்கு (Instrumentation Lab) அடுத்து இருந்த ரசாயன ஆய்வகத்துக்கு (Chemistry Lab)  வந்தார். எங்கள் பிளாட்பார்ம் கெமிஸ்ட் வழக்கம் போல் தண்ணீர் பரிசோதனைகளை செய்யும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த விருந்தாளி கெமிஸ்ட் அவர் பணி புரியும் பிளாட்பார்மில் அதே பகுப்பாய்வை (Analysis) செய்ய அவர் உபயோகிக்கும் ஒரு ஜெர்மன் இயந்திரம் சில மாதங்களாக பழுதாகி சரிவர இயங்காமல் போனதை குறிப்பிட்டிருக்கிறார். உடனே எங்கள் பிளாட்பார்ம் கெமிஸ்ட் பக்கத்து அறையில் இருக்கும் கருவியியல் இஞ்சீனியர்களிடம் வேண்டுமானால் கேட்டுப்பார்போம் என்று கூறி அவரை எங்கள் ஆய்வகத்துக்கு அழைத்து வந்தார்.

analysis_drawer

அவர் விவரித்த பிரச்சினைப்படி, அந்த ஜெர்மன் இயந்திரத்தில் தண்ணீரை பரிசோதிக்கும்போது, ஒரு அளவீட்டு எண் 100லிருந்து 1000திற்குள் வர வேண்டும். இயந்திரத்தில் உள்ள ஒரு மீட்டரில் (Display) அந்த எண் சரியாக எப்போதும் தெரிகிறது. ஆனால் பரிசோதனைகள் முடிந்து அறிக்கை தயாரித்து அதை அச்சிடும்போது அந்த இயந்திரத்திலேயே இருந்த ஒரு பிரிண்டர் சில சமயம் சரியாக அச்சிடும், பல சமயங்களில் எண்ணின் மதிப்பை குறைத்து அடித்து வைக்கும்! கெமிஸ்ட் தினமும் அறிக்கையை அச்சிட்டு மும்பைக்கு அனுப்ப வேண்டி இருந்ததால், இது அவருக்கு பெரிய தலைவலி. அதுவே அச்சிடப்படும் எண் சரியாக இருந்து மீட்டரில் தெரியும் எண் தவறாக இருந்திருந்தால், அது பெரிய விஷயமாக இருந்திருக்காது. ஆனால் அச்சிடப்படும் எண் அவ்வப்போது தவறாக போய் விடுவதால், கெமிஸ்ட் மீட்டரில் தெரியும் எல்லா எண்களையும், தன் புத்தகத்தில் கையால் எழுதி வைத்துக்கொண்டு, அச்சிடப்பட்ட அறிக்கையை வரிவரியாய் படித்து, தவறான எண்களை எல்லாம் அடித்து கையால் திருத்தி மும்பைக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். எங்கள் பிளாட்பார்மில் உபயோகத்தில் இருந்தது வேறு கம்பெனி இயந்திரம் என்பதால், நான்  பழுதான இயந்திரம் எப்படி இருக்கும் என்று பார்ப்பது கூட இயலாத விஷயம்.
மேலும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டு ஓரிரு வருடங்களே ஆனதும், அதன் பராமரிப்புக்கான காண்ட்ராக்டர் இந்தியாவில் அப்போது கெல்டிரான் (கேரளா எலக்டிரானிக்ஸ் நிறுவனம்) என்பதும் தெரிய வந்தது. இயந்திரம் சரியாக வேலை செய்யாததை பற்றி அந்த கெமிஸ்ட் புகார் கொடுத்திருந்ததால், கெல்டிரான் நிறுவனம் பிளாட்பார்முக்கு ஒரு பராமரிப்பு பொறியாளரை  இயந்திரத்தை சரி செய்ய அனுப்பி இருக்கிறது. வந்து பார்த்த இஞ்சீனியர் ஊருக்கு போய் இதை சரி செய்ய தேவையான உதிரி பாகங்களை எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பப்போய் ஒரு மாதம் கழித்து பிளாட்பார்முக்கு திரும்ப வந்திருக்கிறார். இப்போது அவர் கொண்டுவந்திருந்த பெட்டியில் ஒரு டஜன் இணைப்பு பலகைகள் (Circuit Boards). இயந்திரத்தை திறந்து அதிலிருந்த முதல் இணைப்பு பலகையை எடுத்துவிட்டு, தான் கொண்டுவந்திருந்த மாற்று பலகையை அதில் பொறுத்தி, இயந்திரத்தை இயக்கிப்பார்த்தால்..பிரச்சினை, இன்னும் இருந்தது. உடனே, அதை திரும்பவும் திறந்து, இரண்டாவது பலகையை மாற்றிப்பார்த்தால்.. ஹூஹூம், ஒரு மாற்றமும் இல்லை.

wateranalysis

இப்படியே ஒவ்வொன்றாக ஒரு டஜன் பலகைகளையும் மாற்றி பார்த்தாலும், பிரச்சினை என்னவோ கல்லுப்பிள்ளையாராய்  உட்கார்ந்திருக்கவே, அந்த இஞ்சீனியர், “உங்கள் இயந்திரத்தின் மெயின் போர்டு பழுதுதாகிவிட்டது. அதெல்லாம் வாரண்டியில் வராது, எனவே, நீங்கள் வேறொரு மெஷின் வாங்கி விடுவதுதான் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி” என்று திருவாய் மலர்ந்தருளிவிட்டு, இரண்டு நாட்கள் இலவசமாக பிளாட்பார்ம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு  திரும்பப் போய் விட்டார்!
இங்கேதான் அந்த கெமிஸ்ட் வேலைக்கு தேவையான தகுதிகளை விட மிகவும் அதிகமான தகுதிகள் கொண்ட ஒருவர் அந்த இடத்தில் பணியாற்றியது உதவியாய் இருந்தது. அவர் அந்த இயந்திரத்துடன் பல மாதங்களாக மாரடித்துக்கொண்டு இருந்ததால், எப்படி எந்த விதத்தில் அச்சிடப்படும் எண்கள் தவறாக போகும் என்று இன்னும் விளக்க முடியுமா என்று நான் கேட்டபோது, அந்த கெமிஸ்டால் எனக்கு உதாரணங்களை கொடுக்க முடிந்தது. அதன்படி அச்சிடப்படும் எண்கள் 100லிருந்து 255 வரை சரியாக இருக்கும். அடுத்து 256, 257 என்று உயர்வதற்கு பதில், 0, 1 என்று அச்சிடும். திரும்பவும் 255ஐ அடைந்தவுடன், ஒரு ஜம்ப் அடித்து அடுத்த எண்ணாக 512, 513, 514 என்று 767 வரை போகும்.அதாவது 255ஐ தாண்டியவுடன் 512க்கு போகும் வரை அச்சடிக்க வேண்டிய சரியான எண்ணிலிருந்து 256ஐ கழித்துவிடும்!  512இல் இருந்து 767 வரை எல்லாம் நார்மல். அதற்கப்புறம் 768க்கு பதில் திரும்ப 512, 513. அவர் சொல்லச்சொல்ல ஒரு வெண்பலகையில் இந்த எண்களின் தொடரை  100, 101, 102,…, 253, 254, 255, 0, 1, 2, 3, .., 253, 254, 255, 512, 513, 514,.., 767, 512, 513, 514, .., 767,… ,1024 என்று எழுதிப்பார்த்த அடுத்த நிமிடம் அந்த இயந்திரம் அச்சிடுவதற்கு தேவையான எண்களை இருமை மொழியில் (Binary Language) அச்சிடும் இயந்திரத்திற்கு  அனுப்புகிறது என்பது எளிதாக புரிந்தது. மீட்டரில் எண்கள் எப்போதும் சரியாக தெரிவதால் இயந்திரத்தின் பகுப்பாய்வில் ஏதும் குறைபாடில்லை. எண்களை பிரிண்டர் பகுதிக்கு அனுப்புவதில் மட்டுமே பிரச்சினை.
binary_powers
இது புரிந்தவுடன் அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரிண்டருக்கு போகும் கேபிள் இணைப்பில் இருக்கும் பின்கள் (Pins) ஒவ்வொன்றும் 20, 21, 22, 23 என்று ஒரு  எண்ணை குறிப்பதும் புரிந்து விடவே, அந்த கேபிளின் ஒன்பதாவது பின் மடங்கியோ உடைந்தோ போயிருக்கிறது என்று ஊகிக்க முடிந்தது. எனவே அந்த ஒன்பதாவது பின் தரும் இணைப்பு வழியே மின்சாரம் வரவேண்டிய சமயம் எல்லாம், மின்சாரம் எதுவும் வராததால், பிரிண்டர் எண்களை நடுநடுவே நழுவவிடுகிறது என்று அந்த கெமிஸ்டுக்கு விளக்கினேன்.
அவருக்கு அது சரியாக புரிந்ததால், அடுத்த முறை அவர் தனது பிளாட்பார்முக்கு போனவுடன் அந்த கேபிளை அவரே கழற்றி பார்த்திருக்கிறார். சரியாக அந்த 9ஆவது பின் வளைந்து இருந்தது! அவரே அந்த பின்னை நேராக்கி திரும்ப கேபிளை செருகவும், இயந்திரம் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்து அறிக்கைகளை  தவறில்லாமல் அச்சிட ஆரம்பித்து விட்டது! அந்த கெமிஸ்டுக்கு ஒரே சந்தோஷம். அவர் மும்பையில் இருக்கும் அவர்களது தலைமை அதிகாரிக்கு ஃபோன் போட்டு சொல்லவும், மறுநாள் தலைமை அதிகாரி பிளாட்பார்மில் இருந்த என்னை கூப்பிட்டு நன்றி தெரிவித்து பாராட்டு மழை பொழிந்தார். அப்போது முதல் முன்பின் பார்த்தே இராத, வேறு பிளாட்பார்மில் இருந்த,  கெல்ட்டிரான் இஞ்சீனியரால் ஒரு மாதம் முயன்றும் சரி செய்ய முடியாத  ஒரு இயந்திரத்தை இரண்டே மணி நேரத்தில் எங்கள் பிளாட்பார்மில் இருந்தே நான் சரி செய்துவிட்டேன் என்று நான் ஈட்டாத என் புகழ் பரவியது! நான் கொஞ்சமும் பெருமை பட்டுக்கொள்ள இந்தக்கதையில் காரணம் ஏதுமில்லையென்றாலும் இதிலிருந்து நான் கற்ற பாடம், கண் தெரியாதவர்கள் மட்டுமே வாழும் ஊரில் ஒற்றை கண் உள்ளவன் ராஜா என்பது போல், வேறு யாருக்கோ (i.e. இந்தக்கதையில் கெல்ட்ரான் இஞ்சீனியர்) தெரிய வேண்டிய சாதாரண  விஷயம் தெரியாமல் போனால், குருட்டு அதிர்ஷ்டத்தில், நமக்கு தேவை இல்லாமல் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதுதான்! விஷயம் புரிந்த நண்பர்கள், “நேரண்டா உனக்கு” என்று பல வருடங்கள் என்னை கிண்டலடித்துக்கொண்டு இருந்தார்கள்!
(தொடரும்)

0 Replies to “எண்ணெய்யும் தண்ணீரும்: அவதாரங்கள்”

  1. இந்தத் தொடர் அருமையாக் உள்ளது. நிறையப் பொறியியல் மாணவர்களுக்கு இந்தத் தொடரையும், சொல்வனத்தின் மற்ற தொழில்நுட்பத்தொடர்களையும் பரிந்துரை செய்கிறேன்{அவர்கள் படிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடினும்}.
    அடுத்த இதழுக்காகக் காத்திருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.