பில்வமங்களர் என்னும் மகான் 11-12-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். இவர் பகவான் கிருஷ்ணன் மீது ‘ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்’ என்ற அற்புதமான நூலை இயற்றியுள்ளார். இது பால கிருஷ்ணனின் குழந்தை, வாலிபப் பருவ லீலைகளை விளக்கும் அழகான 328 ஸ்லோகங்களைக் கொண்ட நூல். ஏற்கெனவே நமக்குத் தெரிந்த கிருஷ்ணனின் கதைகளுடன் இன்னும் தனது கற்பனைகளையும் சேர்த்து செவிக்கு அமுதமான இந்த நூலை தனிச் சுவையுடன் இயற்றியுள்ளார் லீலாசுகர் என அறியப்படும் பில்வமங்களர். லீலாசுகர் என்பது இந்நூலை இயற்றும் போது அவர் தமக்கு வைத்துக் கொண்ட புனைபெயர்.
இந்த பில்வமங்களர் சிந்தாமணி என்னும் பெண்ணிடம் தீராத மையல் கொண்டிருந்தார். தினமும் மாலையில் அவளைச் சந்திக்க ஆற்றைக் கடந்து செல்வார். ஒருநாள் பெருத்த மழையும் புயலும்….. எப்படியாவது சிந்தாமணியிடம் செல்ல வேண்டும் என்ற ஆவலில் ஆற்றைக் கடக்க ஒரு மரக்கட்டையைப் பயன்படுத்தியவர், அக்கரையை அடைந்ததும் அதனை ஒரு கயிற்றால் மரத்தில் கட்டி விட்டுச் சென்றார். அவ்வாறு வந்து சேர்ந்த இவரைப் பார்த்து, “என்னிடம் நீர் வைத்த ஆசையில் ஒரு சிறிதேனும் பகவான் கிருஷ்ணனிடத்தில் வைத்தால் முக்தி அடையலாமே,” என்று சிந்தாமணி பழித்துக் கூறினாள். அடுத்த நாள் காலையில் தான் அவர் உபயோகித்த மரக்கட்டை ஒரு மனிதனின் இறந்த உடல் என்றும், உயிரற்ற ஒரு மலைப்பாம்பே அதனை மரத்தில் பிணைக்க அவர் உபயோகித்த கயிறு என்றும் தெரிய வந்தது! வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய உணர்வு ஆழமாக மனதில் பதிந்தது. அன்றிலிருந்து இவர் சன்னியாசம் மேற்கொண்டு, கிருஷ்ணனைப் போற்றி, அவனுடைய குழந்தை, வாலிபப் பருவ லீலைகளைச் சிந்தையில் ஆழ்ந்து அனுபவித்து ஸ்லோகங்களை இயற்றலானார்.
சிந்தாமணி எனும் பெண்ணின் மூலம் தன்னை ஆட்கொண்ட கிருஷ்ணனை வணங்கும் முகமாக, ‘சிந்தாமணிர் ஜயதி,’ என முதல் பாடலைப் பாடி இந்த நூலைத் துவங்கியுள்ளார்.
சிந்தாமணிர் ஜயதி ஸோமகிரிர்-குருர்-மே
சிக்ஷாகுருச்ச பகவான் சிகிபிஞ்ச மௌலி:
யத்பாத-கல்பதரு-பல்லவசேகரேஷூ
லீலாஸ்வயம் வரரஸம் லபதே ஜயஸ்ரீ: (1.1)
நினைத்ததை எல்லாம் அளிக்கும் சிந்தாமணி என்னும் ரத்தினம் போன்றவரும் ஸோமகிரி எனப் பெயர் கொண்டவருமே எனது குரு. (இவரே லீலாசுகருக்கு கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்த குரு ஆவார்.) என்னைத் தண்டித்து ஆட்கொண்டவரும் மயில்பீலியைத் தலையில் அணிந்தவருமான ஸ்ரீ கிருஷ்ணன் வெற்றியடையட்டும்; கற்பகத் தரு போன்ற அவருடைய பாதங்களைத் தம் தலையில் அணிபவர்களை வெற்றியை அளிக்கும் திருமகள் தானே தேடி வந்து ஸ்வயம்வரத்தில் தலைவனை மாலையிடும் இன்பத்தை அடைகின்றாள்.
சிந்தாமணி ரத்தினமான சோமகிரி யெனும் ஆசான் வாழ்க
எந்தனைக் கடிந்த குருவாம் கொண்டை மயிற்பீலிக் கிருஷ்ணன்
கற்பகத்தளிர் மென்பாதம் கருத்தாகத் தலைமேல் வைக்கப்
பொற்புடை வெற்றிமாது பொருந்தியே வந்தடைவ ளன்றோ!
இந்த ஸ்லோகங்கள் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளன. இவற்றில் சில ஸ்லோகங்களை அவற்றின் நயத்துக்காகவும், அழகான கதைப் பொருளுக்காகவும் கண்டு, படித்து, நமது மனங்களையும், செவிகளையும் இந்த ‘ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்’ என்னும் கிருஷ்ணன் பற்றிய அமுதமயமான பாடல்களால் நிறைத்துக் கொள்ளலாமே!
யசோதை குழந்தை கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்க முயல்கிறாள்; எந்தக் குழந்தைக்குத் தான் கதை கேட்க ஆசை இருக்காது? கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? “கதை சொல்லு,” என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை:
யசோதை: “ராமன் என்று ஒருவர் இருந்தாராம்.”
கிருஷ்ணன்: “ஊம்”
யசோதை: “அவருக்கு சீதை என்று ஒரு மனைவி இருந்தாளாம்.”
கிருஷ்ணன்: “ஊம்.”
யசோதை: “தகப்பனார் சொல்படி அவர்கள் இரண்டு பேரும்
காட்டுக்குப் போய் பஞ்சவடி என்னும் இடத்தில் வசித்த போது
ராவணன் என்ற ராக்ஷஸன் சீதையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டானாம்.”
(அவ்வளவு தான்! கிருஷ்ணன் என்ற குழந்தைக்குத் தன் முன்பிறப்பின்
(ராம அவதாரத்தின்) நினைவு வந்து விடுகிறது. இந்தப் பிறவி மறந்தும்
போய் விட்டதோ!)
கிருஷ்ணன்: “ஹே! சௌமித்ரே! (லக்ஷ்மணா), எங்கே என்னுடைய
வில்? அதை எடு, என்னிடம் கொடு.” (“நான் ராவணனை வதம் செய்ய
வேண்டும்….”)
‘இவ்வாறு பரபரப்பாக விழித்து எழுந்து பேசும் கிருஷ்ணனின் இந்தச் சொற்கள் நம்மைக் காப்பாற்றட்டும்,’ என்கிறார் லீலாசுகர்.
ராமோ நாம பபூவ ஹூம் ததபலா
ஸீதேதி ஹூம் தௌ பிதுர்-
வாசா பஞ்சவடீதடே விஹரதஸ்
தாமாஹரத் ராவண:
நித்ரார்த்தம் ஜனனீ கதாமிதி ஹரேர்-
ஹூங்காரத: ச்ருண்வத:
ஸௌமித்ரே க்வதனுர்-தனுர்-
தனுரிதி வ்யக்ரா கிர: பாது ந: (2.71)
‘ராமனென்ற ஒருவனும் சீதையான மனையளும்
ராஜனான தந்தைசொல் ஏற்றுமே வனம்புகுந்து
சேமமாகப் பஞ்சவடியைச் சேர்ந்திருந்த நாளிலே
சோரனான ஓரரக்கன் இராவணன் வஞ்சமாய்
தாமரைசேர் மாதவளைத் தான்கவர்ந்தான்’ எனத்தாய்
கூறிடும்சொற் கேட்டபோதில் கீதையின் நாயகன்
‘சௌமித்ரா லட்சுமணா வில்லையெடு’ என்றெழுந்தான்
சீறியெழும் கிருஷ்ணன் சொல்செவ்வியதோர் காப்பன்றோ?
கதை கேட்ட குழந்தை கிருஷ்ணன் ஆயர்பாடியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான் (அவ்வாறு அன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள்). பக்கத்தில் அன்னை யசோதையும் சிறிது கண்ணயர்ந்திருக்கிறாள்.
திடீரென்று கிருஷ்ணன் யாரையெல்லாமோ தடபுடலாக வரவேற்கிறான். பெரிய மஹாராஜா போன்று குழந்தையான அவன் உபசரிப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
“சம்புவே! வருக, வருக! தங்கள் வரவு நல்வரவாகட்டும்; இங்கே வந்து உட்காருங்கள். பிரம்மாவே, வாருங்கள், இப்படி என் இடது பக்கத்தில் உட்காரலாமே! கிரவுஞ்ச மலையை அழித்தவனே (சுப்ரமண்யனே) சௌக்கியமா? தேவேந்திரனே, உம்மைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டனவே,” எனத் தூக்கத்தில் – ஆம், உறக்கத்தில் தான் கிருஷ்ணன் பேசுகிறானாம். இதைக் கேட்ட யசோதை, “குழந்தாய்! தூக்கத்தில் என்ன பிதற்றிக் கொண்டிருக்கிறாய்? உஷ்! பேசாமல் தூங்கு,” என்று அதட்டுகிறாளாம். ‘இந்த அதட்டல் நம்மைக் காக்கட்டும்,’ என்கிறார் லீலா சுகர்.
சம்போ ஸ்வாகத-மாஸ்யதாமித
இதோ வாமேன பத்மாஸன
க்ரௌஞ்சாரே குசலம் சுகம் ஸுரபதே
வித்தேச நோ த்ருச்யஸே
இத்தம் ஸ்வப்னகதஸ்ய கைடப-
ஜித: ச்ருத்வா யசோதா கிர:
கிம் கிம் பாலக ஜல்பசஸீதி ரசிதம்
தூதூக்ருதம் பாது ந: (2.58)
‘சம்புவே வந்திங்கே அமருக மலரயனே இடப்பக்கம் அமருகவே
வெம்பொறை வென்றவேலா நன்றோநீ கண்டு நாளயிற் றன்றோ
அமரர்கோ வே’யெனக் கனவிலே கண்ணன் கூறக்கேட்டா ளசோதை
‘இமைமூடிக் கண்வளராய் பிதற்றாதே குழந்தாய்’ என்பாள்.
ஆயர்பாடியில் காலைப்பொழுது மிக அழகாய் விடிந்து கொண்டிருக்கின்றது. புள்ளினங்கள் கலகலவெனத் தம் இன்னொலிகளை எழுப்புகின்றன. பசுக்கள் கன்றுகளை நாவால் நக்கியபடி கறவைக்குத் தயாராகி விட்டன. மலர்கள் செடிகொடிகளில் விரிந்து நின்றுகொண்டு, “இறைவனின் பூசனைக்கு எம்மைக் கொய்வீராக,” எனத் துடியாகத் துடித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அன்னை யசோதையும் உறங்கிக் கொண்டிருக்கும் தனது செல்லக் குழந்தையைத் துயிலெழுப்புகிறாள்:
“குழந்தாய்! கிருஷ்ணா, விழித்துக் கொள்; பொழுது விடிந்து விட்டது பார்! நூறு நூறாண்டுகள் (சரதம் சதம் சதம்) தீர்க்காயுசுடன் வாழ்வாயாக என் செல்லமே,”எனப் பல்லாண்டு கூறுகிறாள். இவ்வாறாக யசோதையால் தினம் தினம் நீண்ட நாட்களுக்கு தரிசிக்கப்பட்ட முகத்தைக் கொண்டவனான கிருஷ்ணனைப் பூஜிக்கிறோம்,’ என்கிறார் லீலாசுகர்.
வத்ஸ ஜாக்ருஹி விபாத-மாகதம்
ஜீவ க்ருஷ்ண சரதாம் சதம் சதம்
இத்யுதீர்ய ஸுசிரம் யசோதயா
த்ருச்யமான- வதனம் பஜாமஹே (2.67)
‘பொழுது புலர்ந்தது நீயும் கண்மலராய்! கருமணிக் குட்டனே
தொழுதே னுன்திரு வடியைநீ பல்லாண்டு வாழ்க’ வென்றே
அன்புடன் அசோதை யன்னை ஆசைமிகக் கண்டு நாளும்
இன்பமுடன் களிகொண்ட கண்ணனையே வந்திப்போம்.
துயில் நீங்கி எழுந்து விளையாடுகின்றான் குழந்தை கிருஷ்ணன். அவன் வளரும் ஆயர்பாடியில் எல்லாருக்கும் அவன் மீது கொள்ளைப் பிரியம். பாலையும் தயிரையும் வெண்ணையையு ம் அவன் இஷ்டப்படி எல்லார் வீடுகளிலும் புகுந்து தின்று மகிழ்கிறான்.
தெருவில் ஒரு அழகுக் காட்சி காண்பவரை மெய்மறக்க வைக்கின்றது. இடைப் பெண் ஒருத்தி இடை ஒசியத் தெருவில் தயிர், பால் இவற்றைக் கூடையில் நிரப்பிக் கொண்டு விற்கச் செல்கின்றாள். வியாபாரத்தில் கருத்தில்லை – அவளுடைய எண்ணம் எல்லாம் அந்த மாதவனின், மணிவண்ணனின், கிருஷ்ணனின் திருவடிகளில் பதிந்து இருக்கிறது. நேற்று அவளுடைய குடிலில் புகுந்து கோபாலன் தயிர் வெண்ணை திருடித் தின்றானாம். அந்த நினைப்பில், “தயிரோ தயிர், தயிர் வாங்கலையோ? பால், வெண்ணெய் வேணுமோ?” என்று கூவ மறந்து, “கோவிந்தா, தாமோதரா, மாதவா,” எனக் கூவுகிறாளாம்.
விக்ரேது-காமா கில கோபகன்யா
முராரி-பாதார்ப்பித-சித்தவ்ருத்தி:
தத்யாதிகம் மோஹவசா-தவோசத்-
கோவிந்த தாமோதர மாதவேதி (2.55)
கண்ணன் திருவடியில்தன் கருத்தினைத் தானிருத்தி
வெண்ணெய் பாலெனவே விற்கநினைப் பின்றியிடைப்
பெண்ணொருத்தி மாதவாதா மோதராகோ விந்தாவெனக்கூவி
கண்ணனையே விலைபேசி விற்பாள்போல் அலைகின்றாள்.
இந்தக் குட்டிக் கதைகளின் நாயகனான குட்டிக் கிருஷ்ணன் நம் அனைவரையும் காக்கட்டும்!
_
Exceptional. superb..