பாஸனின் பதிமூன்று நாடகங்களில் உலக நாடகத்தின் தரத்தை ஸ்வப்னவாசவதத்தம் பெற்றிருப்பதாக இலக்கியத் திறனாய் வாளர்கள் குறிப்பிடுகின்றனர். விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டதாக உள்ளதை நாடகக் காட்சிகளும், போக்கும் பாத்திரங்களும் நாடக ஆசிரியனின் திறமான அணுகுமுறையும் மெய்ப்பிப்பதாக உள்ளன.
பாசனின் நாடகங்களை அக்னியில் போட்ட போது ஸ்வப்ன வாசவதத்தம் மட்டும் எரியாமல் நின்று தன் சிறப்பை வெளிப்படுத்தியது என்ற கருத்தை ஒரு பாடல் வடிவில் வடமொழி நாடக ஆசிரியர் ராஜசேகரா குறிப்பிட்டு உள்ளார்.
வாசவதத்தையின் தியாக மனப்பான்மை, அவளைத் தொடர்பு படுத்தும் கனவுக் காட்சி இரண்டும் உத்தி ரீதியாகவும், பாத்திர ரீதியாகவும் மிகச் சிறப்பு பெற்றவை. கனவையும் தத்தையையும் தொடர்பு படுத்தும் வகை யில் ‘ஸ்வப்னவாசவதத்தம் (கனவில் வாசவத்த்தை)’என்பது தலைப்பாகிறது பாஸன் காட்டியுள்ள இந்த வகையான கனவுக் காட்சி வேறு எங்கும் இல்லாதது. எல்லா மொழிகளுக்கும் புதியதான ஒன்றாகும். ஒரு பெரிய நாடகத்திற்குள் அடங்கிய சின்ன நாடகமாக இதைச் சொல்ல்லாம்.
இது நாயகியை மையம் கொண்ட நாடகம் என்பதால். ஆத்மரீதியான உறவு செயல்பாடுகள் ஆகியவை அவளை இந்த நாடகத்தில் மேம் படுத்திக் காட்டியுள்ளன. கனவுக் காட்சியிலும் கூட உதயணனை விட உயர்ந்திருப்பவள் தத்தைதான். உதயணன் கனவு காண்பவன். காண வைப்பவள் அவள். நாடகம் பார்ப்பவரின், படிப்பவரின் கவனம் கவர்பவளும் அவளே .
முதல் அங்கத்தில் வாசவதத்தை இறந்து விட்டதாக உதயணனை நம்ப வைக்கும் அமைச்சன் யௌகந்தராயனாவின் திட்டத்திற்குத் தத்தை உடன் படுகிறாள். எப்படியாவது உதயணன் தன் நாட்டைப் பெற்று முன் போல சிறபபாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுடையது. அதனால் அமைச்சனின் எந்த செயலையும் ஏற்றுக் கொள்கிறாள். தத்தை இறந்த செய்தி கிடைத்தால்தான் உதயணன் பத்மாவதியைத் திருமணம் செய்து அவள் உதவியோடு நாட்டைப் பெற முடியும் என்பது அமைச்சன் பார்வை. எனவே அவன் தான் நம்பப் பட வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகள் செய்கிறான். தன் இறப்பைத் தானே தீர்மானித்துக் கொள்வதான ஒரு நிலை இது. தத்தையோடு தானும் இறந்து விட்டதான எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு சூழல் ஒரு கிராமத்தில் தத்தை தங்கி இருந்த போது அங்கு தீப் பிடித்து விட்டது போன்ற ஒரு செயற்கைத் தீயை அவர்கள் உருவாக்குகினறனர். தத்தை தீ ஜுவாலை யால் தாக்கப் பட்டதாகவும் அரசியைக் காபாற்றப் போய் அமைச்சரும் சிக்கி இறந்ததாகவும் செய்தி கிடைக்கிறது. அப்போது அரண்மனையின் பணிப் பெண் ஒருத்தி தான் காடு எரியும் காட்சியைக் கண்டதாகச் சொல்கிறாள். இதை அடுத்து அமைச்சர் ஓர் அந்தணனைப் போலவும் தத்தை அவனுடைய சகோதரி போலவும் வேடமிடுகின்றனர். தத்தையை அரசி பத்மாவதியின் பாதுகாப்பில் வைத்திருப்பதுதான் சரி என்று அமைச்சன் தீர்மானிக்கிறான். அவளிடம் ஒப்படைக்கிறான்.
அடுத்த இரண்டு அங்கங்களும் ஆண் பாத்திர தலையீடு இன்றி பெண்களைக் கொண்டே அமைகிறது. இரண்டாம் அங்கத்தில் பத்மாவதி தன் தோழிகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறாள். பணிப் பெண்ணான தத்தையோடு மிக நெருக்கமாகிறாள். ஒரு பருவப் பெண்ணிற்கு உரிய இயல்புகளோடு விளையாடியும், சிரித்துப் பேசியும் நேரம் கழிக்கிறாள் மகசேனாவிற்கும், பத்மாவதிக்கும் திருமணம் பேசப் பட்டாலும் வத்ச அரசனான உதயணனின் பண்புகள் தான் அவளைக் கவர்கின்றன. உதயணனுக்கு அவளை மணம் முடிப்பது என்று இந்தக் காட்சியில் உறுதியாகிறது. அன்றே திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடக்கின்றன.
மூன்றாவது அங்கம் வாசவதத்தை மிக்க் குழப்பமான மனநிலை யில் இருப்பதில் தொடங்குகிறது. மனதில் உள்ள துன்பங்களை பிறர் அறியாமல் மறைத்துக் கொள்ள நினைத்து தனிமையைத் தேடுகிறாள். ஆனால் விதி அவளுக்கு எதிராக இருக்கிறது. தன் கையாலேயே பத்மாவதியின் திருமண மாலையைத் தயார் செய்ய வேண்டிய ஓர் அவலம் ஏற்படுகிறது. பத்மாவதியோடும் மற்ற பணிப் பெண்களோடும் அவளுக்கு ஏற்படும் நிகழ்வுகள் பாஸனால் புதியதான அணுகு முறையில் காட்டப் படுகின்றன. தத்தை பக்குவமான உணர்வுகளோடு தன்னை எந்தச் சூழலிலும் வெளிக் காட்டாதவளாகவே சித்தரிக்கப் படுகிறாள்.
உதயணனும், விதூஶகனும் நந்தவனத்தில் பேசிக் கொள்வதை பத்மாவதி தத்தையோடும் தன் பணிப் பெண்ணோடும் சேர்ந்து கேட்பதாக நான்காம் அங்கம் தொடங்குகிறது. தத்தை இறந்து விட்ட பிறகும் அவள் நினைவுகள் உதயணன் மனதில் இருப்பதை அந்தக் கணத்தில் பத்மாவதி அறிகிறாள். என்றாலும் எந்த பொறாமை உணர்வையும் அவள் அடைய வில்லை. அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் தத்தையும் தன்னை இன்னமும் அவன் நினைத்துக் கொண்டிருப்பதைக் கேட்டு ஓரளவு ஆறுதல் அடை கிறாள்.
ஐந்தாம் அங்கம் மிகச் சிறந்த இதுவரை எந்த நாடகத்திலும் இடம் பெறாத, எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு கனவுக் காட்சியை அடிப்படையாகக் கொண்டது. இது பாஸனின் நாடகத் திறனை, உயர்ந்த கற்பனையை அடையாளம் காட்டுவதாகிறது. பத்மாவதிக்குத் தலைவலி வந்த ஒரு சூழல். உதயணன் – வாசவதத்தை சந்திப்புக்கு இடம் தருவதாகிறது.
அது மர்மமான கனவுலகம் பத்மாவதியின் தலைவலி தீவிரம் தெரிந்த பிறகு அவள் வெம்மையைத் தடுத்து படுக்கையைக் குளிர்ச்சியாக்கி வலியின் தீவிரத்தைக் குறைக்க உதயணனும், வாசவதத்தையும் தனித் தனியாக விரைகின்றனர். உதயணன் முதலில் அவ்விடத்தை அடைகிறான். பத்மாவதியின் அறையின் குளிர்ந்த் தன்மை, அறை வசதி, அழகு ஆகியவற்றில் தன்னை மறந்து, செய்ய வந்த்தை விட்டு விட்டு அங்கேயே கட்டிலில் சாய்கிறான். தன்னை மறந்து தூங்கியும் போகிறான். விதூஶகன் வந்து பார்த்து விட்டு குளிர்ச்சியை உணர்ந்து போர்வையை உதயணனுக்குப் போர்த்தி விட்டுப் போகிறான். அந்த நேரத்தில் வாசவதத்தை பணிப் பெண்ணோடு அங்கு வருகிறாள். தான் மருந்து எடுத்து வர மறந்து விட்டதைச் சொல்லி விட்டு பணிப் பெண் அதை எடுக்க ஓடுகிறாள்.
அறையின் குளிர்ச்சியால் உதயணன் தன்னை முழுவதுமாகப் போர்த்திக் கொண்டு தூங்குகிறான். அங்கு வந்த தத்தை வலி குறைந்து பத்மாவதி தூங்குகிறாள் என நினைத்துக் கொண்டு படுக்கையில் உட்கார் கிறாள். படுக்கையின் ஒரு பகுதி காலியாக இருப்பதைப் பார்க்கிறாள் தன்னருகில் தத்தையை படுத்துக் கொள்ள பத்மாவதி பல முறை வேண்டியதையும் அப்போது நினைத்துப் பார்த்து அங்கு படுக்க நினைக் கிறாள். அப்போது வாசவதத்தையைப் பற்றிய கனவில் இருக்கும் உதயணன் அவள் பெயரை முணு முணுக்கிறான்.
அதுதான் நாடகத்தின் உச்சகட்டம். அந்தக் காட்சி அவள் இயல்பை இழக்கச் செய்கிறது. மிக வேகமாக படுக் கையை விட்டு எழுகிறாள். தங்கள் திட்டம் அவனுக்குத் தெரிந்து போய் விட்டதோ என்று பயம் எழுகிறது. கண்களை மூடி இருந்த அவன் நிலை கனவுதான் என்பதைக் காட்டுகிறது. தன் பெயரை மட்டும் தான் கனவில் சொல்லிக் கொண்டு இருக்கிறான். வேறு எதுவும் நடந்து விடவில்லை என்று தனக்குள் சமாதானம் சொல்லிக் கொள்கிறாள். அவளுக்கு அங்கிருந்து போவதா வேண்டாமா என்ற குழப்பமான எளிதில் தீர்மானிக்க முடியாத கேள்வி.
என்ன செய்ய முடியும் அவளால்?
ஆத்மாவில் ஊடுருவி இருப்பவனை,உணர்வில் கலந்தவனை, பக்கத்தில் இருப்பவனை தூரப் படுத்தி விட்டு எப்படிப் போக முடியும் என்பது உணர்வின் பின்னணியிலான சிக்கல். அதே நேரத்தில் அரசன் பேச்சைத் தொடர்கிறான். “அன்பே ! ஏன் பதில் சொல்ல தயங்குகிறாய்? பேசு ! பேசுவதா வேண்டாமா என்ற குழப்பதில் இருந்து வெளிப்பட இந்தக் கேள்வி உதவுகிறது.
தத்தை :ஆமாம். தலைவனே இங்கேதான் இருக்கிறேன்.
உதயணன்: என் மீது உனக்குக் கோபமா?
தத்: இல்லை.கண்டிப்பாக இல்லை. நான் மகிழ்ச்சியாக இல்லை. அவ்வளவுதான்.
உதய: உனக்குக் கோபம் இல்லை என்றால் நீ நகைகளை ஏன் அணியவில்லை?
தத்: எனக்கென்று இப்போது என்ன இருக்கிறது?
உதய: ஏன் ? நீ இப்போது விராசிகாவைப் பற்றி கவலைப் படுகிறாயா? (விராசிகா உதயணனின் முன்னாள் காதலி)
தத்: (கோபமாக) விராசிகாவா ? இங்குமா அவள் ?
இந்த இடத்தில் அவர்களின் உரையாடல் முடிந்து விடுகிறது. நாயகன் தூக்கத்திலும், நாயகி விழிப்பான மயக்கத்திலும் பேசுவதான காட்சி இது. இம்மாதிரியான உரையாடலை நீண்ட நேரம் நீட்டிக்க முடியாது. வாசவ தத்தையின் பார்வையில் விராசிகாவை நினைத்துக் கொள்வதான போக்கில் பாஸன் இந்த உரையாடலை இங்கு நிறுத்தி விடுகிறான். இல்லையெனில் தத்தை நடப்புச் சூழலை மறந்து விடுவாள் .இந்தக் காட்சி நிச்சயமாக அவள் அறிந்து நடந்தது இல்லை.
ஒரு கட்டாயமான மனச் சுழலில் இம்மாதியான ஒரு வெளிப்பாடு. தத்தையை அணைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்பது போல உதயணன் கைகளை விரிக்க கனவு கலைகிறது. ஒரு பெரிய நாடகத்திற்குள் சின்ன நாடகம், தான் நீண்ட நேரம் அங்கிருந்து விட்டதை உணர்ந்து தத்தை அங்கிருந்து போக முயற்சிக்கிறாள். கால்கள் பின்னுக்கு இழுக்க உதயணனைத் தொட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. தொங்கிக் கொண்டிருக்கும் அவன் கைகளைச் சரி செய்து விட்டுப் போக வருகிறாள். அவள் தொடு உணர்ச்சி அவனை முழுவதுமாக விழிக்கச் செய்து விடுகிறது. கனவில் கண் டது உண்மையாகி விட்டதை உணர்கிறான். அவள் அங்கிருந்து விரைவாகப் போக அவள் பெயரைச் சொல்லியபடி படுக்கையில் இருந்து எழுந்து ஓடுகிறான். வேகத்தில் கதவில் மோதிக் கொள்கிறான். அதற்குள் அவள் போய் விடுகிறாள். வாசவதத்தை உயிரோடு இருப்பதாகவும், தான் அவளைப் பார்த்ததாகவும் உதயணன் மகிழ்ச்சியோடு விதூஶகனிடம் சொல்கிறான். அவள் இறந்து போய் பல நாட்களாகி விட்டன என்கிறான் விதூஶகன். அப்போது மகத நாட்டு அரசனிடம் இருந்து அறிவிப்பு வர, சூழலே மாறிப் போகிறது.
அரசனின் தொலைந்து போன வீணையைக் கண்டு பிடித்த செய்தியோடு ஆறாம் அங்கம் தொடங்குகிறது. கோசவதி என்ற அந்த வீணை மூலம் தான் தத்தை அவனுக்கு இசை கற்றுக் கொடுத்தாள். அந்த நினைவில் அவன் இருந்த போது தத்தையின் அரண்மனைப் பணிப் பெண் தன் அரசன் தந்ததாகச் சொல்லி வாசவத்த்தை — உதயணன் திருமணப் படத்தைக் கொண்டு வருகிறாள். உதயணனோடு இருக்கும் பத்மாவதி அந்தணன் தன்னிடம் ஒப்படைத்த அவந்திகாவின் சாயலைப் படத்தில் இருக்கும் வாசவதத்தையிடம் பார்க்கிறாள். அதே அந்தணன் வேடத்தில் இருந்த யௌகந்தராயன் தனது சகோதரி அவந்திகாவை அழைத்துப் போக வருகிறான். அவனிடம் விசாரிக்க உண்மை தெரிகிறது. தன் நன்மைக்காக யௌகந்தராயன் நடத்திய நாடகம் என அனைவரும் உணர்வதாக நாடகம் முடிகிறது.
பாஸனின் மற்ற நாடகங்களைப் போல இல்லாமல் இது பெண்ணை முக்கிய பாத்திரமாகக் கொண்டதாகும். வாசவதத்தையே – இங்கு முதன்மைப் படுத்தப் படுகிறாள். தவிர உதயணன் இடம் பெறும் பிற நாடகங்களிலும் அவன் முன்னணி பாத்திரமாகக் காட்டப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
தத்தையின் அழகு, ஆத்மாவின் அழகாக, அந்த வெளிப் பாட்டில் பக்குவம் அடைந்த காதலாகவே அவள் உணர்வு வெளிப்பாடு இடம் பெற்றிருக்கிறது. தனக்கு எதிரியாக அமைந்த போதும் பத்மாவதியின் நலம் குறித்த அவளது எண்ணம், அணுகுமுறை ஆகியவை உதயணன் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்பதாகத் தான் இருக்கிறது. இதை விட அன்பை எப்படி வெளிப்படுத்த முடிகிற காட்சி இருக்க முடியும்? கவிதானுபவமும், நாடகக் காட்சிச் செயல்பாடும் ஒருங்கிணைந்த நிலையுடையதாக உள்ளன. எல்லா இடத்திலும் முன்னதும், பின்னதும் சரி சம்மாகவே இடம் பெற்றிருக் கிறது. முதல் அங்கத்தில் சந்நியாசினியினியின் அறிமுகம், நான்காம் அங்கத்தில் திருமணப் படம், ஐந்தாம் அங்கத்தின் கனவுக் காட்சி, வாசவதத்தையின் உருவ மாற்றம் தரும் எண்ணங்கள் ஆகியவை எல்லாம் சிறப்பானவை என இலக்கிய விமரிசகர்கள் கூறுகின்றனர்.
நாடகத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் எந்த இடத் திலும் வார்த்தை விரயம் இல்லை. உத்தி அணுகுமுறையும் புதியது. பாத்திரங்கள் அதீத உயர்வடையதான செயற்கை தன்மை உணர்வு கொண்ட வையாக இல்லை எனவே பாத்திர வெளிப்பாட்டுச் சமநிலையும் குறிப்பிடத்தக்க அம்சமாகிறது.
நாடகத்தின் முதல் காட்சியில் சந்நியாசினி தத்தை, பத்மாவதி இருவருக்கும் வழங்கும் ஆசி நாடகத்தின் பின் செயல்பாடுகளைக் காட்டு வதாகிறது. பத்மாவதி தன்னை வணங்கும் போது “உனக்குப் பொருத்தமானவன் கணவனாகக் கிடைப்பான்!” என்று வாழ்த்துகிறார். தத்தைக்கு ஆசி வழங்கும் போது “ கால தாமதமின்றி பிரிந்த கணவனோடு இணைவாய்” என்கிறார். எதிர்கால நிலையைக் காட்டுவது போல முதல் அங்கத்தில் இந்த வாழ்த்து இடம் பெறுகிறது.
இந்நாடகத்தில் பதினாறு பாத்திரங்கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு வகையில் முக்கியம் பெறுவது குறிப்பிடத் தக்கது. பாஸனின் எல்லா நாடகங்களிலும் விதியின் விளையாட்டு என்ற அமைப்பு கண்டிப்பாக இடம் பெறும். தன் கணவன் மணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்கு திருமண மாலை தொடுக்கும் பணி வாசவ தத்தையிடம் விடப் படுகிறது. அவள்தான் அதைச் செய்ய வேண்டும் என்று பத்மாவதியின் விருப்பம் என நாடகக் காட்சி அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
இப்படி ஒவ்வொரு நிலையிலும் புதியதான பார்வையை ஸ்வப்ன வாசவதத்தம் கொண்டிருப்பதுதான் பாஸனை உலக நாடக ஆசிரியனாக்கி இருக்கிறது.