பயனர் அனுபவம் – 2 : தகவல் கட்டமைப்பு

ஒரு எளிய வலைத்தளமானாலும் (Website) சரி, அல்லது ஒரு பெரிய பயன்பாட்டு வலைத்தளமாக (Web application) இருந்தாலும் சரி, அல்லது பெரும்பாலான மக்கள் புழங்கும் ஒரு மின் வர்த்தக வலைத்தளமாகவோ (E-commerce Portal), இண்ட்ராநெட் (Intranet Application) எனப்படும் நிறுவனத்துள்ளே மட்டும் உபயோகிக்கப்படும் வலைத்தளமாகவோ இருந்தாலும் சரி, அதில் வழங்கப்படும் தகவல்களை எப்படி சிறந்த முறையில் கட்டமைக்கிறார்கள் என்று பார்ப்போம். மேற்கண்ட வலைதளங்களில் பயனர் அனுபவத்துக்கு (User Experience) முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனில் அவைகளின் தகவல் கட்டமைப்பும் பயனர் அனுபவத்தின் ஒரு கூறாக கருதப்பட்டு வடிவமைக்கப்படும்.
ஒரு வலைத்தளத்துக்கு வரும் பயனர்களுக்கு (Users) அவர்கள் தேடுகிற விஷயங்களை, அறிந்துகொள்ள விரும்புகிற தகவல்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி, வகைப்படுத்தி, சரியான முறையில் அளிக்கவேண்டும். இதையே தகவல் கட்டமைப்பு (Information Architecture) எனச் சொல்கிறோம்.
சிறிய நிறுவனங்களுக்கான அல்லது ஒரு சிறிய வியாபாரத்துக்கான ஒரு எளிமையான வலைத் தளத்தை உருவாக்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் என்னவெல்லாம் அடிப்படை விஷயங்கள் இருக்கும்? ஒரு முகப்புப் பக்கம், (Home) வியாபாரத்தைப் பற்றிய, அதை நடத்துபவர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் (About us), அவர்கள் அளிக்கும் சேவை (Services), அவர்களுடைய வியாபாரக் கட்டுமானம் (Infrastructure), அல்லது அவர்களுடைய தயாரிப்புகள் (Products). இவைகளுடன் தகவல் தொடர்புக்கான ஒரு பக்கத்தையும் உருவாக்கிவிட்டால் வலைத்தளம் ரெடி. இதில் தகவல் கட்டமைப்பை வடிவமைப்பதற்கு பெரிதாக சிரமப்படவேண்டியதில்லை. இருக்கும் ஐந்தாறு பக்கங்களுக்கான உள்ளடக்கத்தைத் தயார் செய்து அந்தந்த சுட்டிகளுடன் இணைத்துவிட்டால் தீர்ந்தது. (இந்த மாதிரியான சிறிய வலைத்தளங்கள் இப்போதெல்லாம் ஒரே பக்கத்துக்குள் அடங்கிவிடும் படியாக Single Page – Responsive – Parallax Scrolling டைப்பில் வந்துவிட்டது. இதில்  வலைத்தளத்தில் மற்ற பக்கங்களுக்கான சுட்டிகள் இருந்தாலும் பயனருக்கு வேண்டிய தகவல்கள் எல்லாமே ஒரே பக்கத்திலேயே காட்டப்படும்.)
ஆனால் ஏதாவதொரு மிகப்பெரிய நிறுவனத்தின் வலைத்தளத்தை எடுத்துக்கொள்வோம். மேற்சொன்ன வகையில் எளிதாக இந்த வலைத்தளத்தை வடிவமைத்துவிட முடியாது. உதாரணத்துக்கு IBM கம்பெனியின் வலைத்தளத்தைப் பார்த்தீர்களானால் அவர்கள் அளிக்கும் தொழில்நுட்பத் தீர்வுகள், சேவைகள், மென்பொருள் தயாரிப்புகள், இதர தகவல்கள் எல்லாம் சேர்ந்து நூற்றுக்கணக்கான பக்கங்களை உள்ளடக்கியது அது. ஆகவே இந்த வலைத்தளத்தில் எந்த சுட்டியின் கீழ் என்னவெல்லாம் கிடைக்கும் என்றறிய அவ்வலைத்தளத்தின் மொத்த உள்ளடக்கத்தையும் பிரித்து வகைப்படுத்தி கோப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. இவ்வலைத்தளத்துக்கு வருகை தருகிற பயனரை கைப்பிடித்துக் கூட்டிச் சென்று அவர்கள் எதிர்பார்க்கிற தகவல்கள் இருக்கிற இடத்திற்குக் கொண்டு சென்று விடவேண்டிய வேலையை இந்த தகவல் கட்டமைப்புக் கோப்பு (Information Architecture Document) செய்யவேண்டும். அதாவது சுருங்கச் சொல்லவேண்டுமென்றால் ஒரு பயனர் ஒரு வலைத்தளத்திற்குள் இப்போது எங்கு இருக்கிறார். அவர் எங்கே செல்ல வேண்டும்? எப்படி அங்கே செல்வது? அங்கிருந்து எப்படி திரும்ப வரவேண்டும் என்பதை சரியாக எடுத்துச் சொல்லும் ஒரு நேவிகேஷன் அமைப்பை அருமையாக வடிவமைக்க இது உதவும்.
ஒரு வலைத்தளத்திற்கான சிறந்த நேவிகேஷன் அமைப்பை உருவாக்குவதுதான் ஆகச் சிறந்த பணி. அதை மட்டும் சரியாகச் செய்துவிட்டால் பிறகு எல்லாமே மிக எளிது. சுட்டிகளைச் சொடுக்கச் சொடுக்கத் தேவையான தகவல்கள் வந்து விழுந்துகொண்டேயிருக்கும்.

P1
மாதிரி தகவல் கட்டமைப்பு (க்ரெடிட்: http://www.sccc.premiumdw.com/)

இதுபோன்ற தகவல் கட்டமைப்புக்கான மிக முக்கிய அம்சம் வகைப்படுத்துதல்தான். வலைத்தளத்தின் எந்தெந்தப் பக்கங்களை எந்தெந்த சுட்டிகளின் கீழ் வகைப்படுத்துவது என்று கண்டறிவது தலையாய பணி. இதற்கென கார்டு ஸார்ட்டிங் (Card sorting) போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
உதாரணமாக ஒரு பல் பொருள் அங்காடியை எடுத்துக்கொள்வோம். நிச்சயம் அந்த அங்காடியில் நிறைய பகுதிகள் இருக்கும். அங்கே கிடைக்கிற பொருள்கள் எல்லாவற்றையும் தனித் தனியாகப் வகை பிரித்து வெவ்வேறு பகுதிகளில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என்று அதற்குரிய பெயர்ப் பலகைகளோடு அடுக்கப்பட்டிருக்குமல்லவா? இப்போது பழங்கள் என்று பெயரிடப்பட்ட பகுதிக்குள் நீங்கள் நுழைகிறீர்கள் என்றால், அங்கே எல்லாப் பழவகைகளும் வரிசையாக இருக்கும். அந்தப் பழவகைகளில் நீங்கள் வாங்க விரும்புவது ஆப்பிள் என்று வைத்துக்கொள்வோம். ஆப்பிள் செக்‌ஷனில் காஷ்மீர் ஆப்பிள், ஃப்யூஜி ஆப்பிள், வாஷிங்டன் ஆப்பிள் என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கக்கூடும். ஆகவே நீங்கள் விரும்பும் பழவகையை சிரமப்பட்டுத் தேடி எடுக்காமல் எளிதாகக் கிடைப்பதற்கு இது வழி வகுக்கும். இதுவே ஒரு வலைத்தளத்துக்கும் பொருந்தும். இந்த மாதிரி வகைப்படுத்தி கட்டமைப்பதையே Information Architecture என்கிறோம். இன்னொரு உதாரணம் சொல்லப்போனால் அலுவலகப் கோப்புகளை பொருள்வாரியாக, தலைப்புவாரியாக, வரிசைப்படுத்திப் பெயரிட்டு எளிதாகத் தேடி எடுக்கும் வண்ணம் கேபினேட்டுகளில் அடுக்கி வைப்பதைச் சொல்லலாம்.
மிகப்பெரிய வலைத்தளம் என்று வரும்போது இந்தத் தகவல் கட்டமைப்பை சரிவர செய்வதற்கு, அதில் இருக்கும் அத்தனைப் தகவல்களையும் வகைப்படுத்த அந்த வலைதளத்துக்கான சைட் மேப் (Site Map) ஒன்றை உருவாக்கிக்கொண்டால் எளிதாக இருக்கும். இந்த சைட் மேப்பை உருவாக்க ஆன்லைனில் கிடைக்கும் ஏதாவதொரு வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம். அல்லது மைண்ட் மேப் (Mind Map) போன்ற மென்பொருளை வைத்து உருவாக்கலாம். இல்லையேல் மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் (Microsoft Excel) கருவியைக் கூடப் பயன்படுத்தலாம்.
ஒரு பயனர் அனுபவ வல்லுநர் தாமாகவே இந்த மாதிரி சைட் மேப்பையோ, அல்லது தகவல் கட்டமைப்பையோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிறுவனம் எந்த நோக்கத்திற்காக ஒரு வலைதளத்தை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு அந்த நிறுவனத்துடன், அவர்களின் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களுடன் (Stakeholders) கூடி ஆலோசித்து, பயனர் பிரதிநிதிகளை (User representatives) வைத்துதான் இதைச் செய்யமுடியும். ஆனால் ஒரு விஷயம். இந்த தகவல் கட்டமைப்பு என்பதை பயனர் அனுபவ வல்லுநர்தான் (User Experience Expert) செய்யவேண்டும் என்பதும் கிடையாது. இது ஒரு சிறப்புத் திறமை என்பதால் சில நிறுவனங்களில் இதற்கென Information Architects என்ற கட்டமைப்பு வல்லுநர்கள் இருப்பார்கள். அப்படி இருந்தால் இந்தப் பணியை அவர்கள் மேற்கொள்வார்கள். இந்த தகவல் கட்டமைப்பானது சுருக்கமாக IA எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தகவல் கட்டமைப்பு முறையைக் கண்டுபிடித்தவர் ரிச்சர்ட் சால் வுர்மன் Richard Saul Wurman என்பவர்.
 
மேலே சொன்னமாதிரி ஒரு நிறுவனத்தின் வலைத்தளத்தில் இருக்கும் தகவல்களை தலைப்பு வாரியாக வகைப்படுத்த கார்டு ஸார்ட்டிங் என்கிற முறை உபயோகிக்கப்படுகிறது. இந்த முறையில் பயனர் அனுபவ வல்லுநர் (User Experience Expert), அல்லது தகவல் கட்டமைப்பு வல்லுநர் (Information Architect) அவ்வலைத்தளத்தில் இருக்கும் தகவல் பக்கங்களுக்கான அத்தனை தலைப்புகளை சின்ன சின்ன அட்டைகளில் எழுதியோ அச்சிட்டோ வைத்துக்கொள்வார். பிறகு அவ்வட்டைகளை நிறுவன பங்குதார்களிடமோ அல்லது நிறுவனப் பிரதிநிதிகளிடமோ வழங்கி அவ்வட்டைகளை வெவ்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தச் சொல்வார்.
மீண்டும் பல்பொருள் அங்காடியை வைத்து இதை விளக்குவோம். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை போன்ற பெயர்கள் அட்டைகளில் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இவைகளை ஒன்றாக்கி “பழங்கள்” என்ற ஒரு தலைப்புக்கு கீழாகவும், கத்திரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட் போன்றவைகளை “காய்கள்” என்று தலைப்புக்குக் கீழாகவும் வகைப்படுத்துதல் போலத்தான். இதில் பழங்கள், காய்கள் என்று தலைப்பிட்ட அட்டைகளை பயனர் அனுபவ வல்லுநர் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்தால் அது க்ளோஸ்டு கார்டு ஸார்ட்டிங் (Closed Card Sorting) எனவும், அதற்குப்பதிலாக நிறுவனப் பிரதிநிதியையே ஏதாவது பெயரிட்டு வகைப்படுத்தச் சொன்னால் அது ஓப்பன் கார்டு ஸார்ட்டிங் (Open Card Sorting) எனவும் அழைக்கப்படுகிறது.
p2

Image Credit: http://www.uxmatters.com/

தேவைக்குத் தகுந்தாற்போல இதில் எந்த முறையை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். நிறுவனப் பிரதிநிதிகளே கொடுக்கப்பட்ட அட்டைகளை ஏதாவது பெயரிட்டு வகைப்படுத்துவது, அவர்களின் வர்த்தகம் பற்றி அவர்கள் மூலமாகவே புரிந்துகொள்ள உதவும்.
இம்முறைகளின் மூலம் செய்யப்படும் தகவல் கட்டமைப்பு துல்லியமாக இருக்கும். பயனர்கள் அந்த வலைத்தளத்தில் தங்களுக்கு வேண்டிய தகவல்களை துரிதமாக, எளிதாகத் தேடி எடுக்கமுடியும்.
வலைத்தளத்திற்கான மாதிரி (Prototype) தயார் செய்யப்பட்டதற்குப் பிறகான பயன்பாட்டுத்திறன் சோதனையின்போது முன்பு கட்டமைக்கப்பட்ட நேவிகேஷனில் எங்காவது குழப்பமாக உள்ளது எனில் அப்போது (Reverse Card Sorting) என்றொரு முறையும் கையாளப்படுகிறது. இங்கேயும் நிறுவனப் பிரதிநிதிகளையே இதில் பங்கேற்க வைப்பார்கள். உதாரணத்திற்கு, மாங்காய், மாம்பழம் இரண்டுமே ஆங்கிலத்தில் Mango என்றுதான் அழைக்கப்படுகிறதல்லவா. ஆகவே இதை வகைப்படுத்த வேண்டியது பழங்களுக்குக் கீழேயா அல்லது காய்களுக்குக் கீழேயா என்று நிச்சயம் குழப்பம் வரும். இதுபோன்ற குழப்பங்கள் ரிவர்ஸ் கார்டு ஸார்ட்டிங் செய்யும்போது நீங்கும். எந்தத் தகவல் எந்தத் தலைப்பின் கீழ் கொண்டுவந்தால் பொருத்தமாக இருக்குமோ அதை முடிவு செய்ய இந்த முறை உதவும். பிறகு திருத்தப்பட்ட தகவல் கட்டமைப்பை வைத்து வலைத்தள மாதிரி மீண்டும் மாற்றத்துக்குள்ளாக்கப்படுகிறது.
இந்த முறைகளையெல்லாம் உபயோகித்து சிறந்த முறையில் தகவல் கட்டமைப்பு செய்யப்பட்ட வலைத்தளம் பயனர்கள் எதிர்பாக்கும் தகவல்களை எளிதாக, விரைவாக தரமுடியும் என்றால் நிச்சயம் அது பயனர்களின் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டுவந்து நிறுத்தும். இதன்மூலம் நிறுவன வர்த்தகமும் மேம்பட்டு லாபமடையும் என்பது நிச்சயம்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.