நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள்

8

 

அறம் செய்த அறம், தீமைகள் செய்த மொத்த தீவினை என்ற ஒரு கட்டமைப்பு புரிந்துவிட்டதால் பின் வரும் சீதை பிறப்பு பற்றிய பாடல்களில் அழகு தவம் செய்து பெற்றவள் சீதை என்று படிக்கும் போது ஒரு சின்னப் புன்னகையுடன் கடக்க முடிகிறது!

இராமனின் பிறப்பைப் பற்றி ஒரு பாடலை சென்ற பகுதியில் பார்த்தோம். இன்றைய பகுதியில் சீதையின் பிறப்பைப் பற்றி ஒரு பாடலாவது பார்க்கலாம். சனக மகராஜாவின் அரண்மனையில் சிவதனுசு மிகச் சிரமங்களுக்கு இடையில் சேவகர்களால் எடுத்துவைக்கப்படுகிறது.அந்த வில்லின் வரலாறை சொல்லத்துவங்குகிறார் சதானந்த முனிவர். இந்தப் பாடலில் நோக்கி என்ற வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

ஆமாம்…இல்லை, நீங்களும் நானும் எதிர்பார்ப்பது போல் ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு அர்த்தங்களில் இல்லை, அனைத்து இடங்களிலும் ஒரே அர்த்தம்தான், ஆனாலும் ஒரு மெல்லிய அழகு இருக்கிறது.

காண்டம்: பால காண்டம்
படலம்: கார்முகப் படலம்

போதகம் அனையவன்
பொலிவு நோக்கி அவ்
வேதனை தருகின்ற
வில்லை நோக்கித் தன்
மாதினை நோக்குவான்
மனத்தை நோக்கிய
கோதமன் காதலன்
கூறல் மேயினான்

போதகம் அனையவன் பொலிவு நோக்கி – குட்டி யானையைப் போன்ற இராமனின் அழகைக் கண்டு;
வேதனை தருகின்ற வில்லை நோக்கி – இவ்வளவு அழகான இராமனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விருப்பத்திற்கு இடையூறாக இருக்கும் இந்த வில்லைப் பார்த்து
தன் மாதினை நோக்குவான் தன் மனத்தை நோக்கிய – பின் தன் மகளைக் கலக்கத்தோடு பார்க்கின்ற ஜனகனது மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேயினான் – கௌதமன் மகனாகிய சதானந்தன், சிவதணுசின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான்.

முதலில் இராமனின் அழகை நோக்கி,
பின் வேதனை தருகின்ற வில்லை நோக்கி,
பின் தன் மகளை நோக்கும் வரை நேர்பாதையில் ஜனகனை காட்டும் காமிரா, சட்டென வலது பக்கம் திரும்பி அப்படி மகளை நோக்கிய ஜனகனின் மனதை சதானந்தன் நோக்குவதைக் காட்டுகிறது!

oOo

vr

சதானந்த முனிவர் சிவதனுசின் வரலாற்றைச் சொல்லி இதுவரை அந்த தனுசை நாணேற்றுவார் இல்லை. இப்போது இராமன் நாணேற்றினால் மலர் குழல் சீதையின் நலம் நன்றாகும் என்று சொல்லி முடித்தபின் விஸ்வாமித்திர முனிவர் இராமனைக் குறிப்பாகப் பார்க்கிறார். அதாவது இராமனே, நீ இப்போது சிவதனுசை நாணேற்றுவாயாக என்று.

அதைப்புரிந்து கொண்ட இராமன் எழுந்து வில்லை நோக்கிச் செல்கிற பாடலை இங்கு தேர்ந்தெடுத்தற்குக் காரணம், இராமன் எழுந்தததை ஒப்பிட்ட விதம்…

காண்டம்: பால காண்டம்
படலம்: கார்முகப் படலம்

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார்
மொழிந்தனர் ஆசிகள் முப் பகை வென்றார்

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி – நெய்யை மொத்தமாக பொழிந்த இடத்திலிருந்து
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான் – பொங்கி மேல் எழும் நெருப்புப் போல எழுந்தான்
‘அழிந்தது வில்’ என, விண்ணவர் ஆர்த்தார் –இராமன் வில்லை முறிக்கப்போகிறான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட தேவர்கள் (உம்பர்) உற்சாகமாக அழிந்தது வில் என ஆரவாரம் செய்கிறார்கள்
மொழிந்தனர் ஆசிகள், முப் பகை வென்றார் – காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று அகப்பகைகளை வென்ற முனிவர்களும் ஆசிர்வதித்தனர்.

நெய்யை பொழிந்ததும் அவ்விடத்திலிருந்து நெருப்பு எவ்வாறு சீறி மேலே வரும் என்பதை நம்மால் எளிதாக உருவகப்படுத்த முடிகிறது. அப்படி நெருப்பு மேலே வருவதற்கு “பொங்கி” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியது சிறப்பு. அப்படியாக பொங்கி எழுந்தான் இராமன்.

oOo

sps

சிவதனுசை தூக்கிவர ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். அதன் கனம் பூமித்தேவிக்குத் தாங்காமாட்டா பாரம். அவ்வளவு மிகப்பெரிய, பொன்மலையென்றெல்லாம் ஒப்பிடப்பட்ட அந்த வில்லைப்பற்றி நகர மாந்தர் பல்வேறு விதமாகப் பேசிகொள்கின்றனர். அதைப் பற்றிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் காற்று போலத் தாண்டி வில்லின் அருகில் நிற்கும் இராமனிடம் நாம் இப்போது போய் நிற்போம்.

இவ்வளவு பிரமாண்டமான , பிண்ணனி கொண்ட வில்லை இராமன் எடுத்தது… எதிர்பார்த்தது போலவே சுலபமாக எடுத்தாலும் எப்படி எடுத்தானாம்? மலர்ந்த பூ மாலையைப் போல் அவ்வளவு எளிதாக தரையிலிருந்து எடுத்தானாம்! மலர்ந்த பூக்கள் கொண்ட மாலையை எடுக்கும் போது எங்கோ உதிர்ந்துவிடுமோ என்று கவனமாக எடுத்தான் என்றும் கொள்ளலாம்! கொள்ளாம், கொள்ளாம்!

காண்டம்: பால காண்டம்
படலம்: கார்முகப் படலம்

தேட அரு மா மணி சீதை எனும் பொன்
சூடக வால் வளை சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான்

ஆடக மால் வரை அன்னதுதன்னை – மிகப்பெரிய பொன் மலையை போன்ற அந்த சிவ வில்லை
தேட அரு மா மணி – சீதை எனும் பொன் சூடக வால் வளை சூட்டிட – கிடைத்தற்கரிய சிறந்த இரத்திரனமாம் சீதை எனுப்படுபவளுமான பொன்னாலாகிய கை வளையல்களையணிந்த பெண்ணிற்குச் சூட்டும் பொருட்டு
நீட்டும் ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – மலர்ந்த பூமாலையே என்று எண்ணுமாறு எளிதாகத் தூக்கி எடுத்தான்.

சிவதனுசு சீதையை மணமுடித்தலுக்குக் காரணமாவதால் அதை சீதைக்குச் சூட்டுவதற்காக எடுக்கும் மணமாலையாக உருவகிக்கிறார். இது நேரடியாகப் புரிந்துவிடுகிறது. மலர்ந்த பூக்கள் கொண்ட மாலை எனவே உதிர்ந்துவிடக்கூடும் என்று கவனமாக எடுத்தான் என்று வாசிக்கும் போது ஒரு படி மேலே போகிறோம்.

oOo

இந்தத் தொடர் எழுத ஆரம்பிக்கும்போதே கம்பராமயணத்தில் அதிகம் பேசப்பட்ட புகழ்பெற்ற பாடல்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கொண்டிருந்தேன். அவற்றை விட அதிகம் கவனம் பெறாத பாடல்களைக் கவனப்படுத்தவேண்டும் என்பதால்.

இருந்தும் கீழ்வரும் பாடலை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை! சற்றே குறிப்பிட்டுக்கொள்கிறேன்!

இன்று பெரும்பாலோனோர் கிரிக்கெட் மாட்சை தொலைக்காட்சியிலாவது பார்த்திருப்பர். தவிர்க்க முடியாத இன்றைய நாகரிக வாழ்க்கையில் அதுவும் ஒன்றாகிவிட்டது. ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு போகும் போதே வரவேற்பறையில் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு கண்களில் பட்டுத்தொலைக்கும். பந்து வீச்சாளர் பந்து வீசும் முனை இல்லை, மட்டையாளர் எதிர் நோக்கும் முனையும் இல்லை. பக்கவாட்டில் மொத்த பிட்ச்சையும் பார்க்கும் இடத்தை மனதில் கொள்ளுங்கள்.

மேற்கிந்திய (முன்னாள்) பந்துவீச்சாளர் அம்ப்ரோஸ் – அவர் தோளில் இருந்து கை விரல்களை நோக்கி ஒரு எறும்பு பயணத்தை ஆரம்பிக்குமானால் வெகு தூரம், நேரம் பயணம் செய்துதான் கை விரல்களை அடையவேண்டும். மூன்று selfie stickகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கட்டிய தூரம். அந்த விரல்களின் நுனியில் சிவப்பு கிரிக்கெட் பந்து மஞ்சள் எலுமிச்சை பழம் போல் ஒட்டிக்கொண்டு இருக்கும்.

இவர் ஓடி வந்து பந்து வீசுவதை பிட்சின் பக்கவாட்டில் இருந்து பார்த்தால் என்னென்னவல்லாம் தெரியும்?

ஓடி வருவது தெரியும். கையைச் சுழற்றுவது தெரியும். சற்று நேரம் கழித்து (அதாவது கால் நொடிக்கும் மிகக்குறைவான நேரம்) விக்கெட் சரிந்திருப்பது புலப்படும். அவ்வளவுதான். வேறு ஒன்றும் தெரியாது. பந்தாவது, அது எங்கு விழுந்ததாவது. பேட்ஸ்மனாவது…மிகவும் அசட்டுத் தனமான உதாரணம் என்று தோன்றினால் சற்றுப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்!
இராமன் மலர்ந்திருக்கும் பூக்கள் கொண்ட மாலையை எடுப்பது போன்று சிவ தனுசை எடுக்கும் போது கூடியிருந்த மக்கள், கண் இமைக்காமல் உற்று கவனித்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேறு ஒன்றுமே தெரியவில்லை. இராமன் கையில் எடுத்தது தெரியும், அவ்வளவுதான். பின் வில் முறிந்த பேரொலியைத்தான் அடுத்துக் கேட்டார்கள். அந்தச் செயலின் மின்னல் வேகத்தை கம்பர் வேறு எதனுடனும் ஒப்பிட்டுச் சொல்லவில்லை, ஒப்பிட்டால் அசட்டுத்தனமாகப் போய்விடும் என்று நினைத்திருப்பாரோ(நான் நிரூபித்துவிட்டேன்!)

நான்கே நான்கு வார்த்தைகள்தான்.

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

அவ்வளவுதான்…மேட்ச் முடிந்தது!

 

காண்டம்: பால காண்டம்
படலம்: கார்முகப் படலம்

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

தடுத்து இமையால் இருந்தவர் – கண் சிமிட்டுவதை நிறுத்திவிட்டு இமையாமல் நடப்பதை பார்த்துக்கொண்டு நின்ற அவையோர் அனைவரும்
தாளில் மடுத்ததும் நாண் துதி வைத்ததும் நோக்கார்– இராமன் தன் திருவடியால் அவ்வில்லின் முனையை மிதித்ததையும், வளைத்து மற்ற முனையில் நாண் ஏற்றியதையும் பார்க்கமுடியவில்லை.

கடுப்பினில் யாரும் அறிந்திலர் – இச்செயலின் மின்னல் வேகத்தால் காணமுடியவில்லை
கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – இராமன் தன் கையால் அவ் வில்லை எடுத்ததை;
கண்டார்கள்; முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்.

oOo

திருமணப்பெண் அலங்கரிக்கப்படுவது உலகம் முழுவதும் ஓர் உற்சாகமான நிகழ்வு. சீதா தேவியை அலங்கரிப்பது என்பது எப்படியெல்லாம் கம்பர் குறித்திருப்பார் என்று நினைக்கவே மனம் துள்ளுகிறது!

எதிர்பார்த்தது போலவே ஏமாற்றவில்லை, அவர். நெற்றிச்சுட்டி, முத்து மாலை, குழலிற்கும் மாலை, கழுத்தணி, தோளணி, கையில் கடகம், சிலம்பு, விழிகளுக்குத் திலகம் என்று சொல்லிக்கொண்டே போகிறார். அனைத்தைப்பற்றியும் நான் இங்கு குறிப்பிடப்போவதில்லை என்றாலும் குழை அணிதலையும் இடை அலங்காரத்தைப் பற்றிய பாடலையும் பற்றி நிச்சயம் பின்னர் ஒரு பகுதியில் குறிப்பிடுவேன். அதிலும் இடை – அலுவலகத்தில் ப்ராஜக்ட்டின் ஸ்டேடஸ் பச்சையா (பச்சை- நன்று; பழுப்பு-கவலைக்கிடம்; சிவப்பு- அபாயம்!) என்று கேட்டால் yes and no என்று சொல்வது ஒரு சமாளிப்பு.

அது போலத்தான் சீதையின் இடையைப் பற்றி இல்லை உண்டு என்ற இடை! பின்னர் பார்ப்போம்.
இன்று, அவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட சீதையை தோழியர்கள் அவைக்கு அழைத்துவருகிற ஒரு பாடலைப்பற்றி எழுத ஆசையாக இருக்கிறது!

இத்தனை பார்த்து பார்த்து அலங்கரிக்கப்பட்ட சீதை சபைக்கு நடந்து வருகிறாள்.

காண்டம்: பால காண்டம்
படலம்: கோலங் காண் படலம்

வல்லியை உயிர்த்த நிலமங்கை இவள் பாதம்
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும்
பல்லவ மலர்த் தொகை பரப்பினள் என தன்
நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள்

வல்லியை உயிர்த்த நிலமங்கை – மென்மையும் அழகும் வாய்ந்த சீதையைப் பெற்ற சீதையைப் பெற்ற மண்மகள் (சனகன் பொன் ஏர் பூட்டி உழுதபோது கொழுமுகத்தில்தான் சீதை தோன்றினாள். எனவே சீதை மண்மகளின் மகள் என்பது இங்கு பொருத்தமாகப் பொருந்துகிறது)
இவள் பாதம் மெல்லிய உறைக்கும்’ என அஞ்சி வெளி எங்கும்பல்லவ மலர்த் தொகை பரப்பினள் – சீதையின் மென்மையான பாதங்கள் வெறும் தரையில் நடந்தால் உறுத்தி அவளை வருத்தக்கூடும் என்று என்று அஞ்சி, சீதை நடந்து செல்லும் தடம் முழுவதும் மென்மையான தளிர்களையும் மலர்களின் தொகுதிகளைப் பரப்பிவைத்தாளோ என்று தோன்றும் அளவிற்கு
தன் நல் அணி மணிச்சுடர் தவழ்ந்திட நடந்தாள் – தான் அணிந்திருக்கும் சிறந்த அணிகலன்களில் பதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு இரத்தின, மாணிக்க மணிகளின் வேவ்வேறு வண்ண ஒளிச்சுடர்கள் முன்னே பரவிச் செல்ல சீதை நடந்தாள்.

இந்தப்பாடலில் நேரான, பொருத்தமான உவமை – நிலமங்கையின் மகள் சீதையை வல்லி, அதாவது கொடி என உருவகிப்பது நன்று.

பின்னர், தரையில் அவளுடைய அணிகலன்களிலிருந்து தரையில் தெறிக்கும் பல்வேறு மணிச்சுடர்களை தரையில் பரத்தி இருக்கும் பல்வேறு வண்ண மலர்களாக சொல்வது…அழகு.
சீதையின் தோழிகளை அச்சுடர்களாக கருதிக்கொள்வது…இன்னமும் அழகு.

அந்த மணிச்சுடர்கள் அவளுடன் தவழுவதாகப் படிப்பது…இன்னுமொரு இன்னும்…
இந்த வாக்கியத்தை மனதில் ஓடவிட்டபடியே இருந்த போது அனைத்து வண்ணச் சுடர்களோடு சீதையே ஒருச் சுடராகத் தவழ்ந்து வருவதாகத் தோன்றியது. அத்தனை அணிகலன்களையும் அலங்காரங்களையும் பூண்ட மணப்பெண் நடக்கும் போது மெதுவாக மேகம் மலைப்பாதையில் தவழ்ந்து போவது போல, ஒரு கனவு போல…

முதல் படியில் நாம் கம்பருடன் நிற்கும்போது அடுத்த படி தெரிகிறது. அதில் கால் வைத்து ஏறினால் இன்னொன்று தெரிகிறது…அடுத்தது, பின் அடுத்த அடுத்தது…

நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள்

இந்த வாக்கியம் மனதில் தவழ்ந்துகொண்டே இருக்கிறது…