ஜெயகாந்தன்-ஓங்கி ஒலிக்கும் யதார்த்தத்தின் குரல்

8_Jeyakanthan
தமிழ் இலக்கிய உலகின் எழுத்தாளனென்றால் கம்பீரமும்,அறச்சீற்றமும் கொண்டவன் என்ற அடையாளத்தை உண்டாக்கிய ஜெகெயின் மறைவு ஊடகங்களில் இலக்கியம் பற்றிய பேச்சிற்கு வழிகோலியிருக்கிறது.
சமூகத்தின் மீதும், மனிதத்தின் மீதும் நம்பிக்கையை விதைத்த அவரின் உரத்த குரல் ஒரு தலைமுறையையே உலுக்கியது. இளவரசிகளின் கன்னி மாடங்களையும், குதிரையில் பறந்த வீரன்களையும், அலுவலகம் செல்லும் அம்மாஞ்சிகளையும், ஏழ்மையில் வெம்பிப்போன நடுத்தர மக்களையும் மட்டுமே சுற்றியிருந்த இலக்கியத்தை , யதார்த்த வாழ்வின் உன்னதங்களை எளிய மக்களின் மேன்மைகளைப் பற்றி பேச வைத்தவர் ஜெயகாந்தன். ரிக்ஷாக்காரர்களும்,சித்தாள்களும்,வண்டி ஓட்டிகளும்,விபச்சாரிகளும்,திருடர்களும் மட்டுமின்றி சுந்தர கனபாடிகளும்,என்ன செய்யட்டும் என்று கேட்கும் மாமிகளும் அவர் எழுத்துகளில் உண்மையாய் வந்தார்கள். யதார்த்தத்தை ஓங்கி ஒலிக்கும் குரல்களாக அவர்கள் பேசினார்கள்.
காலங்காலமாய் சமூகத்தில் வைத்திருந்த சம்பிரதாயமான அசட்டுத் தனங்களை ,போகிற போக்கில் இவையெல்லாம் எதுவுமில்லை,வாழ்க்கை எல்லாவற்றிற்கும் பதில் கூறும் என்று உடைத்தார். பெண்களின் மேன்மையை

“பெண் என்பவள் அவளே சில வேளைகளில் எண்ணி மயங்குவது போல் தனிப்பிறவியல்ல, சமூகத்தின் அங்கமே”

என்றார்.
கம்யூனிசத்தையும் ஆன்மீகத்தையும் ஒரே தளத்தில் இணைக்க எண்ணினார். இந்திய மரபின் மேன்மைகளை உணர்த்தினார். தனிமனித சுதந்திரம் பற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பே உரத்துப்பேசினார். ஏனென்றால் அக்காலகட்டத்தில் மனிதர்கள் சமூகத்தில், சாதியில், குழுக்களில் கட்டுப்பட்டே இருந்தனர். சமூகத்தின் பார்வையில் தனிமனித ஒழுக்கங்களும்,கட்டுப் பாடுகளும் எத்தனை அபத்தமான கோணத்தில் நோக்கப்படுகின்றன என ஓங்கித் தலையிலடித்துக் கூறினார். கம்யூனிச சித்தாந்தங்களையும்,காந்தியின் எளிமையையும் ஒன்றாகக் கொண்டவராகவே வாழ்ந்தார்.
ஜெயகாந்தனைப் பற்றிக் கூறப்படும் விமர்சனங்களில் அவர் சங்கர மடத்தை இறுதியில் ஆதரித்தார் என்பதும்,வர்ணாசிரமத்தையும், இந்துத்துவாவையும் ஆதரித்தார் என்பதும். பாரத தேசத்தின் மரபை ,தொன்மத்தை அது உலகின் எந்த மரபையும் விட உன்னதமானது என்றே வலியுறுத்தினார். ஜெயஜெய சங்கர நூலிலும் அவர் வலியுறுத்தியது அடிப்படையான அறத்தை, மானிட தர்மங்களையே. தன்னை ஒதுங்கிப்போ, ஒதுங்கிப்போ என்று கூறிய சமூகத்தைப் பார்த்து ஆதியின் குரலாக அவர் கூறும் என்னை விலகிப்போகச் சொல்லுமிடத்திற்கு நான் வரமாட்டேன் என்பது அவன் மனமேன்மையை வலியுறுத்துவதே.
பொய்யான பகுத்தறிவு வாதங்களையே அவர் எதிர்த்தார்.மேம்போக்கான வாதங்களை அவரைப்போன்றதொரு கம்யூனிஸ்ட்டால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் வலியுறுத்திய நாத்திக வாத அபத்தத்தை இன்று தமிழ் மண்ணில் கண்கூடாகக்  காண்கிறோம். பகுத்தறிவை மக்களைச் சிந்திக்கச் செய்யாமல் சும்மா மேடைகளில் அபத்தமாகப் பேசியதன் விளைவே இன்றைய சாதீய மோதல்களுக்கும், கீழ்மைகளுக்கும் காரணம். இதைத் தான் ஜெகெ தனித்து நின்று வலியுறுத்தினார்.
நம் மரபின் யோகங்கள்,சித்தர்களின் ஞானத் தேடல்கள் பற்றிய அவரின் உண்மையான மதிப்பீடுகள் மிகச்சரியானவையே. இன்றைய கார்ப்பரேட் உலகம் தியானம்,யோகா என்றெல்லாம் செல்வதைத் தான் அவர் அன்றே ஓங்கூர்ச்சாமி போன்ற உண்மைத் துறவிகளின் பாத்திரங்கள் மூலம் வலியுறுத்தினார். அப்படி காலங்களைத் தாண்டி சிந்திப்பவனே உண்மையான படைப்பாளி.
அவரின் சில தனிமனித பலவீனங்களைச் சொல்பவர்கள் அவரின் ஒரு படைப்பையேனும் உணர்ந்து உள் வாங்கியிருக்கமாட்டார்கள். இத்தனை சிந்தனை மனமும், படைப்பூக்கமும் கொண்ட ஒரு கலைஞனின் மனநிலைக்கு அவையெல்லாம் தேவைப்பட்டிருக்கலாம். அவரே கூறியது போல படைப்பாளியின் படைப்பைப் பாருங்கள், அவன் அந்தரங்கத்திற்குள் எட்டிப் பார்க்க எண்ணாதீர்கள் என்பதே நிதர்சனம். அவர் படைப்புகளில் பிரச்சாரப் போக்கு இருக்கலாம், சில தட்டையான சொல்லாடல்கள் இருக்கலாம்.ஆனால் இலக்கிய அனுபவங்களை அவை என்றும் தருபவையே.
ஒரு சன்னலில் அமர்ந்து உலகை நோக்கும் பெண்ணின் மனமும், ஆணின் உண்மைத் துணையை நாடும் அபலைப் பெண்ணின் மன ஓட்டங்களும், அப்புவாக ஒரு தலைமுறையின் வீழ்ச்சியை நோக்கும் சிறுவனின் உள்ளமாக, எல்லோராலும் விரட்டப்படும் திருட்டுமுழி சோசப்பின் அசட்டுச்சிரிப்பாக, உலகின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமான ஹென்றியின் உலகமாக, பெண்களே உங்களை இராமன்களும், இராவணன்களும் அடிமை கொள்கிறார்கள், பொருளாதார விடுதலை என்ற பெயரில் சம்பாதித்தளிக்கும் எந்திரங்களாகவே மாற்றுகிறார்கள் எனச் சீதாவின் உள்ளமாக, வீட்டைவிட்டு இமயமலைக்கு ஓடிப்போக எண்ணும் சோமு நாவல்பழம் தின்ன ஆசை கொள்வதும், பேபியைக் குழந்தையாகவே நோக்கும் துரைக்கண்ணுவின் பாசமும், மாமாவையோ, அம்மாவையோ யாரும் டைவர்ஸ் பண்றதில்ல, புருஷன் மட்டுந்தான் டைவர்ஸ் பண்ணாலும் வேற ஒண்ணத் தேட வைக்கிற உறவு, எனக்கு புருஷன் இல்லாததால வேற எந்த உறவுமே இல்ல என்ற கங்காவின் தனிமையையும், ரோஜாச் செடியிடம் கூட நிறைவடையும் கல்யாணியின் உயர்வும், இடுகாட்டின் அக்னியை நோக்கும் ரிஷிமூலம் கதாநாயகனின் உளச்சிக்கல்களுமாய் அவர் படைப்புகள் அளிக்கும் அந்தரங்க அனுபவங்களே உண்மையான இலக்கிய வெற்றி.

” காதல் என்ற பெயராலும்,கணவன்,தந்தை என்ற பெயராலும் உங்களை மதிக்கத் தெரியாத இவர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள். மண்ணோடும்,தெய்வத்தோடும் வணங்கி லட்சுமிகரமாக்கித் தொழுவார்கள். நேரம் வரும்போது தெரியும் இந்த கசாப்புக்காரர்களின் காதல் லட்சணம்.”

இத்தகையத் தெளிவான வாதங்கள் இன்றைய மாய ஊடக காலகட்டத்தில்,பாலியல் ஈர்ப்புகளால் அலைக்கழிக்கப்படும் இளைஞர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறதல்லவா? ஆம் அது தான் இலக்கியவாதியின் வெற்றி.
காலங்களைக் கடந்து நிற்கும் அக்கலைஞனின் படைப்புகள் இன்றைய தலைமுறைக்குச் சரியான முறையில் அடையாளம் காட்டப் படுவதே அவருக்கு அளிக்கும் அஞ்சலி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.