கிடா வெட்டு

kidaa

சித்திரை மாத கத்திரி வெய்யில் அனலாய் கொதித்துக்கொண்டிருந்தது. காய்ந்த சருகுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடக்க, அத்தனை வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஆடுகள் தேடித் தேடி மேய்ந்தன.காற்றின் மௌனம் தாங்காது சின்னா தன் மேல்துண்டை எடுத்து விசிறிக்கொண்டான்.அக்குளின் வியர்வை இடுப்புவரை வந்து கால் சட்டையின் மேற்பகுதியை ஈரமாக்கியது.தலையின் வியர்வை முன்நெற்றியில் வழிந்து புருவம் தொடுகையில், இடக்கையால் அதனை வழித்து எறிந்தான்.இருப்பினும் சில துளிகள் தப்பித்து கடைக்கண்ணிலும்,கன்னத்திலும் வழிந்து கடைவாயிலும் பட ஒருசேர கண்ணும் வாயும் முறையே எரிந்தது கசந்தது.கண்ணிமைகளைத் தன் துண்டால் அழுத்தித் துடைத்தான். வாயில் கரிப்புப் போகாததால் இரண்டுமுறை காறித் துப்பினான். மேலும் தனது அழுக்குத் துண்டால் உதட்டையும் நாக்கையும் துடைத்துக்கொண்டான்.
அண்ணாந்து மணி பார்த்தான்.உச்சி வேளையாகிவிட்டதை உணர்ந்தான். வயிறு மெல்லப் பசித்தது.காலையில் குடித்திருந்த நீராகாரம் ஆவியாகிவிட்டிருந்தது. அவன் அம்மா தூக்குவாளியில் எதையும் கொடுத்துவிட்டிருக்கவில்லை. காரணம் இன்று மல்லப்பிள்ளையார் கோவிலில் கிடாவெட்டு. யார் வீட்டு விசேஷம் என்று தெரியவில்லை. அம்மா காலையிலேயே சொல்லிவிட்டாள்.
“ எப்பா, இன்னக்கி மல்லவில்லையாக் கோயில்ல கெடாவெட்டு.ஆட்ட இன்னக்கி வேற எங்கயும் ஓட்டிக்கிட்டுப் போயிராத. அப்டியே ரோட்டோரமா மேச்சிக்கிட்டே குங்குனுகுன்னுகிட்ட மதியானம் மூணு மணியாவும்போ வந்தின்னா போதும். பந்தி முடிஞ்சவுடனே நாங் கூப்ட்ரேன். வந்து ரெண்டு எழும்பக் கடிச்சிட்டுச்சோறுதின்னுட்டுப் போய்ரலாம்.இன்னக்கி நாஞ்ச்சீக்கிரம் விசேஷ வீட்டுக்குப் போகனும். அதான் சோறு எதுவும் பொங்கல. சட்டில நீச்சத்தன்ணி வச்சிருக்கேன். குடிச்சிட்டு பட்டியக் கூட்டி சுத்தம் பண்ணு ” என்றுவிட்டு நடையைக் கட்டியிருந்தாள்.
சின்னாவுக்கு கிடாவெட்டு என்றதுமே நாக்கில் எச்சிலூறியது. கரிச்சோறு என்றதுமே கடைவாயில் எச்சில் ஒழுக ஆரம்பித்தது. சட்டியில் இருந்த நீராகாரத்தை முழுவதும் குடிக்காமல் அரை வயிறு காணுமளவு குடித்தான். சின்ன வெங்காயமும்,பச்சை மிளகாயும் இன்னும் கொஞ்சம் குடிக்கச் சொல்ல நாக்கையும் வயிறையும் கட்டுப் படுத்தினான்.
பேசாமல் நீராகாரத்தை வயிறு நிறையக் குடித்துவிட்டு வந்திருக்கலாமோ என்று இப்போது நினைத்தான் சின்னா. எனினும் அந்த எண்ணத்தைத் தூர வைத்து விட்டு, கறிச்சோறு தின்னப்போவதை நினைத்து சப்புக் கொட்டினான். அவனது அப்பா உயிரோடு இருந்தவரை இந்தமாதிரி சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டதில்லை. வீட்டில் நெல்லுச்சோறு இல்லைதான். ஆனால் எப்போதும் களியோ கம்மஞ்ச்சோறோ சட்டியில் நிறைந்திருக்கும். தினமும் மாலையில் காடை முட்டையோ,கௌதாரி முட்டையோ அப்பா கொண்டுவருவார். மாட்டுச் சாணத்தில் முட்டைகளைப் பொதிந்து சுட்டுத் தின்ன கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.
அப்பொழுது இன்னும் நிறைய ஆடுகளும் நான்கு பசுமாடுகளும் ஒரு காளை மாடும் இருந்தன.அப்பா எப்பொழுது எழுவார் என்று அவனுக்கு தெரிந்ததே இல்லை. அதிகாலையிலேயே எழுந்து வயலுக்குச் சென்று விடுவார்.ஏறு வெய்யிலில் திரும்பி வரும்போது ஆடு மாடுகளுக்குப் புல்லும், கூடவே அந்தந்த சமயத்திற்கு ஏற்ப சுக்கம்பழமோ,பயத்தங்காயோ, இரண்டு மாங்காயோ அல்லது வெள்ளி மலையில் கிடைக்கும் காட்டுப் பழங்களோ கொண்டு வருவார். ஒரு நாளும் வெறுங்கையோடு வந்ததில்லை.
பண்டிகைக் காலங்களில் ஆட்டுக்கறியோ, மாட்டுக்கறியோ, கோழிக்கறியோ கண்டிப்பாக வீட்டில் இருக்கும்.ஒன்றுமே இல்லையெனில் அப்பா மாலையில் வலையுடன் கிளம்பிப்போய் அடுத்த நாள் காலையில் காடை,கௌதாரி மற்றும் காட்டுக் கோழிகளைப் பிடித்துக்கொண்டு வருவார். சில சமயம் கறி மிகும் போது உப்புக் கண்டம் போட்டு, தினம் கொஞ்சமாக பொறித்துத்தின்றதும் உண்டு. இப்பொழுது அப்பா இல்லை. மாடுகள் இல்லை. வாங்கிய கடன் வயலைத் தின்றுவிட, எஞ்சியது ஆடுகள் சில உருப்படிகள் மட்டுமே. சின்னாவுக்கு சமீபத்தில் கறிக்குழம்பு தின்றதாக நினைவில்லை. கடந்த பொங்கலின்போது கறி நாளன்று மட்டும் ஆடோ கோழியோ தின்றதாக நினைவு.
மதியம் ஒரு மணிக்கான பேருந்து அவனைக்கடந்து சென்றது. மணித்துளிகள் மிக மெதுவாக ஊர்வதாகப் பட்டது அவனுக்கு. வயிற்றில் உலை கொதிக்க ஆரம்பித்தது.காது மெதுவாக அடைப்பதாகப் பட்டது. வயல் வரப்புகளெல்லாம் பொன்னிறமாக காய்ந்து சருகாக இருக்க, ஆடுகள் அதனையும் மிக ஆர்வமாக ஒரு கை பார்த்தன. சின்னாவுக்கு கறிச்சோறு ஞாபகம் வருவதுபோல், இந்த ஆடுகளுக்கும் பச்சைப்புல்லின் ஞாபகம் வருமோ? என்ற வினா மனதில் தோன்ற,மெல்ல அவனின் இதழ்க் கடையில் புன்னகை அரும்பியது.மெல்ல அவன் தேரைக் குட்டை நோக்கி ஆடுகளை ஓட்ட ஆரம்பித்தான்.
வெய்யிலின் உக்கிரம் மேலும் கூடியது. செருப்பணிந்திராது கரடு முரடுகளுக்குப் பழகிப்போன சின்னாவின் கால்களுக்கும் சூடு உரைக்க ஆரம்பித்தது. அவ்வப்பொழுது அளக்குத் தடியூன்றித் தாண்டிக் கொண்டான். காவட்டாங்காட்டை நினைத்து பயந்தான்.ஏனென்றால் ஒரு சில உசிலம் புதர்களைத் தவிர்த்து அங்கு மரங்களே கிடையாது. இந்த வெய்யிலில் எங்கு ஒதுங்குவது என்று யோசித்தான்.
முன்பொரு நாள் அப்பாவுடன் ஆடு மேய்க்க இதே காவட்டாங் காட்டிற்கு வந்தபொழுது பாதச் சூடு தாங்காமல் சின்னா அழுதே விட்டான். அப்பாதான் அவனைத் தோளில் தூக்கி வைத்துச் சமாதானப்படுத்தினார். அன்றுதான் காடை மற்றும் கௌதாரி முட்டைகளை சேகரித்து, அதனை எப்படிச் சுட்டுத் தின்பது என்பதையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்தார். இன்றும் ஏதேனும் கிடைத்தால் கிடாவெட்டிற்கு முன்னால் கொஞ்சம் சுட்டுத் தின்னலாமே என்றுகூட சின்னா யோசித்தான்.
தேரைக் குட்டை வந்ததும், ஆடுகள் அனைத்தும் வற்றிய குட்டையில் எஞ்சியிருந்த கலங்கிய சேற்றுநீரை உறிஞ்சிக் குடித்தன. ஆடுகள் ஆர்வமாய் மண்டியிட்டு குடிக்கும் அழகைப்பார்த்து ஏனோ சின்னாவுக்குப் பசி மறந்தது. ஆடுகளை அங்கிருந்த வேம்பின் நிழலில் மடக்கிப்போட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டான். காற்றின் இருப்பே தெரியவில்லை. வெய்யிலின் உக்கிரத்தில் செடி கொடிகளும் மரங்களும் மயங்கிச் செயலற்று நிற்க, பத்து அடி தூரத்தில் கானல் தெரிந்தது. பசி மயக்கமும் சேர்ந்து கொள்ள கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. தூக்கு வாளியில் கொஞ்சமாவது நீராகாரம் கொண்டு வராமலிருந்ததற்காக தன்னைத்தானே நொந்து கொண்டான். தரையில் துண்டை விரித்து அதில் படுத்து கையை தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மெல்லக் கண்ணை மூடி ஆசுவாசப்படுத்திக்கொண்டான். இதோ தேரைக் குட்டை அடுத்து குங்குனுக்குன்னு, அதனை அடுத்து காவட்டாங்காடு , காவட்டாங்காட்டிலிருந்து கூப்பிடு தொலைவுதான் மல்லப் பிள்ளையார்க் கோவில். பொடி நடையாக நடந்தாலும் கால் மணி நேரம் ஆகலாம். ஆனாலும் இந்த தூரத்திற்குள் இரண்டு மணி நேரத்தை கடத்தியாக வேண்டும். மலைப்பாக இருந்தது. மெல்ல கண் சொக்கிற்று.
அப்பொழுது புதருக்கடியிலிருந்து ஏதோ அரவம் கேட்டு சுதாரித்துக்கொண்டான். காரைப்பழ முட்செடிகளும்,காட்டு இலந்தைச் செடிகளும் பின்னிப் பிணைந்திருந்த அந்தப் புதரை நெருங்கி சத்தத்திற்கான காரணம் இன்னதென்று அறிய முயன்றான். உள்ளே ஒரு முரட்டு கௌதாரி ஒன்று இவனின் எதிர்த் திசையை நோக்கி முன்னேற முயன்று கொண்டிருந்தது.கௌதாரியின் இறக்கைகள் முள்ளில் சிக்கிக் கொண்டிருந்தன. முள்ளிலிருந்து விடுபட அது வேகமாக இறக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தது.அதனால் வந்த அரவம் கேட்டுத்தான் இவன் விழித்துக்கொண்டிருக்கிறான்.
சின்னா எதையுமே யோசிக்கவில்லை. அளக்குத் தடியை எடுத்தான். அளக்குத் தடியின் நுனியில் இருந்த ஈட்டியை கௌதாரியை நோக்கிக் குறி பார்த்தான்.அடுத்த சில வினாடிகளில் கௌதாரியின் மரண ஓலம் அந்தப் பிரதேசத்தையே நனைத்தது. எல்லாம் முடிந்தபொழுது சின்னாவின் துண்டில் ஒரு பெரிய முடிப்பொன்று முளைத்திருந்தது. அடுத்ததாக அவனது இலக்கு மாறியது. கௌதாரி எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்தான். செம்மண்ணும் குறு மணலும் நிறைந்த அந்த நிலத்தில் தெளிவில்லாமல் கௌதாரியின் பாதச் சுவடுகள் படிந்திருந்தன. அதனைப்பின் பற்றி அவன் குனிந்தும் தவழ்ந்தும் சென்றான். ஏனென்றால் கௌதாரிக்கும் முயலுக்குமான வசிப்பிடத் தொடர்புகளை அவன் அறிவான். கண்டிப்பாக இந்தப் புதருக்கு அருகில் ஒரு முயல் அகப்படக் கூடும். கௌதாரியின் பாதச்சுவடுகள் முடிந்த இடத்தில் ஒரு பெரிய கூடும், கூடு நிறைய முட்டைகளும் இருந்தன,அடுத்த சில விநாடிகளில் சின்னாவின் துண்டின் இன்னொரு முனையிலும் ஒரு பெரிய முடிப்பொன்று முளைத்திருந்தது.
துண்டு முடிப்புகளை முன்னொன்றும் பின்னொன்றும் தொங்குமாறு கவனமாகப் போட்டுக் கொண்டு மெல்லக் காவட்டாங் காடு நோக்கி ஆடுகளை ஓட்டலானான். அவனுக்குத் தெரியும், எப்படியும் கௌதாரி இட்ட கூக்குரலில் சுற்றிலும் முயல் ஏதேனும் பதுங்கியிருந்தால் உஷாராகித் தப்பித்து ஓடியிருக்கும். எனவே முயலைத் தேட அவன் தயாராயில்லை. காவட்டாங் காட்டில் நிறையவே காவட்டைப்புற்கள் அறுக்கப் பட்டிற்க, இவனது உறவினர்கள் சிலர் கால் நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் சற்று முன்புவரை கிடாவெட்டிற்கான ஏற்பாடுகளைக் கவனித்தவர்கள். ஏற்பாடுகள் என்றால் அடுப்புக் குழி வெட்டுவது, சமையலுக்கு நீர் நிரப்புவது, விறகு பிளப்பது, பாத்திர பண்டங்களை மாட்டு வண்டியில் ஏற்றி வந்து இறக்குவது மற்றும் இன்ன பிற பணிகள். அவனைப்போலவே அனைவரது பார்வையும் மல்லப் பிள்ளையார் கோயில் நோக்கியே இருந்தது. கூப்பிடு தொலைவில் இருந்த மல்லப் பிள்ளையார்க் கோயிலில் பூஜைக்கான மும்முரங்கள் தெரிந்தன. இன்னும் பூஜை ஆகவில்லை ஆதலால் பந்தி தொடங்க ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்று தோன்றியது.
அநேகமாக அதன் பிறகுதான் அம்மா அவனைக் கூப்பிடுவாள்.சின்னாவிற்கு இப்பவே ஏதேனும் வயிற்றில் போட்டால்தான் உண்டு. எச்சில் விழுங்குவதற்கே சிரமப்படுமளவிற்கு பசி அதிகரித்திருந்தது. சின்னாவிற்கு ஏதோ ஒன்று மனதில் உதித்தது.உடனே அவன் கெட்டியான மாட்டுச் சாணம் தேடலானான். கிடைத்தது.கெட்டியாக, ஜீரணமாகாத சோள உமிகளுடன் சாணத்தை எடுத்துக் கொண்டு அவன் காவட்டை குத்து ஒன்றின் மறைவிற்கு போனான். துண்டின் முட்டை முடிப்பை மட்டும் அவிழ்த்து, ஒவ்வொரு முட்டையாக எடுத்து சாணத்திற்குள் பொதியத் தொடங்கினான். கையளவு உருண்டைகள் எட்டுத் தேறின.துண்டின் கௌதாரி முடிப்பினை அவன் காவட்டை குத்துக்குள் ஒழிய வைத்தான் (இவனின் உறவினர்கள் பங்கு கேட்பார்களென). எட்டு உருண்டைகளையும் காவட்டை சீவுகள் பரப்பி, அதன் மேல் ஒவ்வொன்றாகப் பரப்பி வைத்தான்.அதன் மேல் மீண்டும் காவட்டை சீவுகள் பரப்பி, பெரண்டைக் கொடியெடுத்து ஒரு கட்டு போல் கட்டினான்.அந்தக் கட்டை எடுத்து ஒரு ஓரமாக வைத்து விட்டு, இவனது ஆடுகளை ஓட்டிக்கொண்டுபோய் கங்காணியிடம் (எப்பொழுதோ சிலோனில் வேலைப் பார்த்தவராம், அதிலிருந்து இந்தக் காரணப் பெயர்) விட்டுவிட்டு, “ எப்போ, பெரியப்போ, செத்த நேரம் என் ஆட்டையும் பாத்துக்கோ. நாம்போய் அம்மாவப் பாத்துட்டு வந்திர்றேன், ” என்று பதிலைக் கூட எதிர்பாராமல் கட்டை மறைத்து வைத்திருந்த குத்து நோக்கி ஓடினான்.இவனுக்குத் தெரியும் எப்படியும் கங்காணி இவனது ஆடுகளையும் கவனித்துக் கொள்வார் என்று. அதனால்தான் அவர் ஏதோ பரிகாசமாகச் சொன்னதையும் பொருட்படுத்தவில்லை.
முட்டை உருண்டைகள் உள்ள கட்டினை எடுத்துக் கொண்டு மிக விரைவாக இவன் மல்லப் பிள்ளையார்க் கோயிலை நோக்கி ஓடினான்.அங்கே அம்மா பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.கையில் தேங்காய் நாரும், முழங்கை வரை இலுப்பிய கரியுமாக அவள் மிக விரைவாகப் பாத்திரம் தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்தாள்.இவன் அருகில் வந்ததைக் கூட சிறிது தாமதமாகத்தான் உணர்ந்தாள். அவளும் எதுவும் இன்னும் சாப்பிடவில்லை என்பது கண்ணில் தெரிந்தது. இவனது கையிலிருந்த கட்டினை அவள் கவனத்தில் கொள்ளவில்லை.
இவனைப் பார்த்ததும் மிகவும் சோர்வாக
“என்னப்பா, பசிக்கிதா? செத்த நேரம் இரு. இந்தா பூசப் போடப்போறாங்க. பூசப்போட்டவுடன வந்துருக்கிறவங்களுக்கு பந்தி நடக்கும். அதுக்கப்புறம் உன்னக் கூப்பிடுரன்.அதுவரக்கும் போ, போய் ஆட்டப் பாத்துக்க,” என்றாள். சொல்லி முடிக்கையில் அவளின் கண்களிலிருந்து இரண்டு துளிகள் உதிர்ந்தன.
யாரோ அம்மாவை வேகமாக வரும்படி அழைக்க,கழுவிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, இவனை ஒருமுறை திரும்பிப் பார்த்த கையோடு விரைந்தாள்.அம்மா நிரந்தரமாக வேலை செய்யும் வீட்டில் தான் விசேஷம் போலும். அந்த வீட்டு அம்மாதான் அதோ நிற்கிறாள்.அம்மாவிடம் அவள்தான் கேட்கிறாள்.
“ யார்டி அது?”
“ எம்புள்ளம்மா ”
“ அய்யய்யே. இன்னும் பூசயேப் போடல.அதுக்குள்ள வந்துகிட்டு. அவனப் போய்ட்டு அப்புறமா வர சொல்லு.”
“ இல்லமா.சும்மா என்னப் பாத்துட்டுப் போலாம்னு வந்தான். அப்புறமா வான்னு சொல்லிட்டேன்.சின்னப் பையன்தான, ” என்றதும்
“ எதயும் கொடுத்து கிடுத்து வக்காத,” என்றபடியே வேறு வேலையைப் பார்க்கப் போனாள் அந்த அம்மா.சின்னாவின் அம்மா அங்கிருந்தே பிறகு வரும்படி சைகை செய்தாள்.
சின்னா மெதுவாக வடக்குப் புறமாக நகர்ந்தான்.அங்கே பெரியப் பெரிய அடுப்புக் குழி வெட்டி அதில் சமைத்து இறக்கி இருந்தார்கள்.சமைத்த உணவுகளை சிறிது தூரம் தள்ளி வரிசையாக வைத்திருக்க,மூன்று பேர் காக்கை,பருந்து மற்றும் நாய் நரிகள் அண்டாமல் காவலிருந்தார்கள்.அடுப்புக் குழிக்குள் நெருப்புக் கனல் தக தக வென்றிருந்தது.அருகில் நெருங்கையிலேயே அனல் சுட்டது.பூஜைக்கான அழைப்பு கேட்க,அனைவரும் கோயில் சுற்றுச் சுவருக்குள் போக,உணவுப் பண்டங்களைக் காவல் காப்பவர்கள் அவர்கள் வேலையிலேயே கண்ணாக இருக்க, சின்னா தனது கட்டை அவிழ்த்து,உருண்டைகள் ஒவ்வொன்றையும் எடுத்து கனன்று கொண்டிருந்த நெருப்பிற்குள் போட்டான்.
ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த சின்னாவின் அம்மா,இவனின் செய்கையைப் பார்த்து அருகில் வந்தாள்.பாவம் சின்னப் பையன்தானே தின்றுவிட்டுப் போகட்டும் என்றெண்ணியவள் எட்டு உருண்டைகளைப் பார்த்ததும் அசந்துவிட்டாள்.உடனே போய் ஒரு இலை மடிப்பைக் கொண்டு வந்தாள்.அவனிடம்
“எப்பா,பதமாப் பாத்து, எடுத்து, உரிச்சி இந்த இலையில கட்டிவை.வீட்டுலப்போய் தின்னுக்கலாம்.அஞ்சாறு வேணுமின்னா,வாயிலப் போட்டுக்க.எல்லாந்திங்காத.கெடாக்கரிச்சோறு திங்கனுமில்ல” என்றாள்
சின்னா நாக்கில் எச்சிலூற “சரிம்மா” என்றான்.
பூஜை முடிந்து பந்தி ஆரம்பித்தபொழுது சின்னா ஒவ்வொரு உருண்டையாக குச்சியால் எடுத்து மேலே போட்டுக் கொண்டிருந்தான்.வைக்கோல் பரப்பி,வைக்கோலில் நீர் தெளித்து ஒவ்வொரு உருண்டையையும் பிளந்து முட்டைகளை சேகரித்தான்.சேகரித்த முட்டைகளை கழுவிக்கொண்டு அங்கிருந்த வேம்பினடியில் வைக்கோல் பரப்பி அமர்ந்தான்.முதல் முட்டையை உரித்து வாயில் போட்டுப் பதம் பார்த்து தன்னைத் தானே மெச்சிக் கொண்டான். ஒவ்வொரு முட்டையாக உரித்து இழைத் தடுக்கில் வைக்க ஆரம்பித்தான்.மொத்தமும் உரித்த பொழுது,எப்படியும் அரைப் படி தேறும் என்று தோன்றியது அவனுக்கு.அம்மா வந்து அவனைக் கூப்பிட்டாள்.திரும்பிப் பார்தத பொழுது கடைசி பந்தி ஆரம்பித்திருப்பது தெரிந்தது.சின்னா சென்று இலை முடிப்பினை அம்மாவின் கையில் கொடுத்தான்.அம்மாப் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் கேட்டாள்
“எங்கப்பா கெடச்சது?”
“தேரக்குட்டய்லமா”
“கௌதாரித்தானே?”
“ஆமாம்மா”
“சரி இத நான் வச்சிருக்கேன்.நீப் போய் நம்ம சனங்களைக் கூட்டியா” என்றாள்.
சின்னா உடனே காவட்டாங் காட்டை நோக்கி ஓடினான்.ஓடி அங்கிருந்த மேட்டில் நின்று அவர்களுக்குக் கேட்கும்படி கத்தினான்.
”பெரியப்போவ்,தாத்தோவ்,மாமா,பெரியண்ணோவ் எல்லாரும் வாங்க. சாப்பிடக் கூப்புட்றாங்க”
உடனடியாக அங்கே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ள,அனைவரும் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மல்லப்பிள்ளையார் கோயிலை நோக்கி வந்தார்கள்.கங்காணிப் பெரியப்பா இவனிடம்
“என்னடா நீ தின்னாச்சா ?கறி எதுவும் மிச்சம் வச்சிருக்கீயா இல்லயா?” என்று பரிகாசம் பண்ணினார்.அந்தப் பரிகாசத்திலும் கூடப் பசியே தெரிந்தது.வேம்பின் கீழ் அனைத்து கால் நடைகளையும் இளைப்பாற விட்டுவிட்டு ,அறைகுறையாக கை கால் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தார்கள்.சின்னாவின் அம்மாதான் அனைவருக்கும் இலையிட்டு நீர் கொடுத்தாள்.சோற்றைக்கொண்டுவந்து பரிமாறியதும்,குழம்பு கொண்டுவர சென்றாள்.அப்பொழுது ஏதோ கச முசாச் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க,அங்கே சின்னாவின் அம்மா விஷேஷ வீட்டம்மாளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு இறுகிய முகத்துடன் சின்னாவின் அம்மா குழம்பு வாளியுடன் வந்து அனைவருக்கும் குழம்பு ஊற்ற ஆரம்பித்தாள்.அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை.அனைவரின் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது.அம்மாவிடம் கங்காணிப் பெரியப்பாதான் ஏதோ கேட்க,அம்மா “ இதத் தான் மாமா ஊத்தச் சொன்னாங்க “ என்றாள்.யாரும் சாப்பாட்டில் கை வைக்காமல் இருக்க, சின்னா மட்டும் காவட்டைக்குள் இருக்கும் கௌதாரியை நினைத்துக்கொண்டு வேக வேகமாக அள்ளித் திங்க ஆரம்பித்தான்.
விஷேஷ வீட்டுக்காரர் வந்து பொத்தாம்படையாக
“எப்பா,எல்லாரும் கோவிச்சுக்க வேணாம்.கறியெல்லாம் தீந்து போச்சி.காய் கொழம்புதான் இருக்கு.எதையும் மனசுல வச்சுக்காம போட்டத தின்னுங்க.அடுத்த விஷேஷத்துல நால்லாவே கவனிக்கிறன் ” என்றுவிட்டு ஆகவேண்டிய காரியங்களைப் பார்க்க போய்விட்டார்.அனைவரும் முணுமுணுக்க அம்மாதான் ,
”ஏன் எல்லாரும் ஒருத்தர் மொகத்த ஒருத்தர் பாத்துக்கிட்டே ஒக்காந்துருக்கீங்க.தின்னுங்க.இது ஒன்னும் நமக்கு புதுசில்லயே.ஏதோ இந்த மட்டுமாவது கவனிக்னும்னு தோணிச்சே அவுங்களுக்கு ” என்றவுடன் அனைவரும் குனிந்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தனர்.
சின்னாவின் அம்மா ஏதோ ஒரு யோசனையுடனேயே பரிமாறிக்கொண்டிருந்தாள்.திடீரெனப் போய் அந்த இலை முடிப்பை கொண்டு வந்தாள்.சின்னாவுக்குப் புரிந்தது.முடிப்பை விரித்து முட்டைகளை அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்ததும் அனைவரின் முகத்திலும் ஒரு மெல்லிய பிரகாசம் வந்தது.மெல்ல கறிக்குழம்பை மறந்து விட்டு ஒருவரையொருவர் பரிகாசம் செய்துகொண்டு வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.சின்னாவின் அம்மா முகத்தில் ஒரு நிறைவும் மகிழ்வும் நன்றாகத் தெரிந்தது.
இன்னொரு முடிப்பையும் கொண்டு வந்திருக்கலாமோ என்று எண்ணினான் சின்னா.

2 Replies to “கிடா வெட்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.