ஹலோ பார்பி!

SAMSUNG CSC
“பொம்மை பொம்மை பொம்மை பார், புதிய புதிய பொம்மை பார் ” எனத் தொடங்கி கையை வீசும் பொம்மை, கண்ணை சிமிட்டும் பொம்மை என எல்லா அளவிலும் எல்லா நிறத்திலும் விதவிதமாக பொம்மைகளை நாம் பார்த்துவிட்டோம். பெரும்பான்மையான  பெண்குழந்தைகளின் கைகளில் காணப்படும், அன்பாய் அரவணைத்துக்கொள்ளப்படும் முக்கிய அந்தஸ்து பெற்றவை பார்பி பொம்மைகள். அவர்களால் ஆடை அணிவிக்கப்பட்டும், அலங்கரிக்கப்பட்டும் ஒரு தோழியைப் போல் இவை கொண்டாடப்படுகின்றன.  இதிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்  ‘ஹலோ பார்பி’ என்ற புது ரக பொம்மைகள் குழந்தைகளிடம் அன்பாக பேசப் போகின்றன. அப்படியா என உங்கள் ஆச்சரியமும், எப்படி என்ற உங்கள் கேள்வியும் நன்றாகவே  புரிகிறது.

‘சிறி’ என்பது நாம் அனைவரும் அறிந்த ஆப்பிளின் ஒரு பிரபலமான பயன்பாடு. நாம் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்திலிருந்து பதில்களைத் தேடி எடுத்து வழங்கவும், நம் சிறு ஏவல்களைப் புரிந்து கொண்டு அதனை இணைய சேவைகள் மூலம் செயல்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இயல்பான மொழி வடிவங்களை புரிந்து கொண்டு, மீண்டும் மீண்டும் சேகரிக்கப்படும் தகவல்களையும் வைத்து, உபயோகிப்பவரின் விருப்பத்திற்கேற்ப ஒரு உதவியாளரைப் போல் செயல்படுகிறது. இந்த ‘சிறி’ பயன்பாட்டை உருவாக்கி 2010ல் வெளியிட்ட போது,  முதலில் சிறி நிறுவனம் (Siri Inc.) ப்ளாக்பெர்ரி  மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதள கைப்பேசிகளில் உபயோகிக்கலாம் என்று கூறியிருந்தாலும், ஆப்பிள் நிறுவனம் இதனைப் பெற்றுக்கொண்ட பின், ஆப்பிள் அல்லாத இயங்குதளத்தில் இவற்றை இயக்குவதற்கான  உருவாக்கப்பணிகள்  கைவிடப்பட்டன. 2011ல் ஆப்பிள் ஐபோன்4Sஐ வெளியிட்டதிலிருந்து  IOSன் ஒருங்கிணைந்த பகுதியாகவே  சிறி பயன்பாடு விளங்குகிறது. பெரியவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் சிறியின் தொழில்நுட்பம் குழந்தைகளுக்கும் எவ்வாறு பயன்பட முடியும் என்பதற்கு ஒரு உதாரணமே  ‘ஹலோ பார்பி’.

1945ல் தொடங்கப்பட்டு ,கலிபோர்னியாவின் எல் செகாண்டோவைத் (El Segundo) தலைமை இடமாக கொண்ட பிரபல மட்டேல்  (Mattel Inc.) என்ற விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்,  ‘ஹலோ பார்பி’ என்ற இந்த வகை பேசும் பொம்மைகளை, டாய்டாக் (ToyTalk Inc.) என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மட்டேலின் பிஷேர்ப்ரைஸ் (FisherPrice), ஹாட்வீல்ஸ் (HotWheels) போன்ற விளையாட்டு சாதனங்கள் குறிப்பிடத்தக்கவை. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இவர்களின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. 2011ல் பிக்ஸர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் தொடங்கப்பட்ட டாய்டாக், குழந்தைகளுக்கேற்ற திரைச்சித்திரங்களை உருவாக்குவதில் பல்வேறு விருதுகளைப் பெற்ற ஒரு பொழுதுபோக்கு நிறுவனம். இவர்களின் உருவாக்கமான ‘தி வின்ஸ்டன் ஷோ ‘(The Winston Show ), ‘ச்பீக்கஜூ’ (Speakazoo) , ‘ச்பீகலெஜெண்ட்’ (Speakalegend) போன்றவை குழந்தைகளிடையே மிகப் பிரபலம். இவை அனைத்தும் ஆப்பிளின் ஆப்ஸ்டோரில் (AppStore) பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. இவை தவிர  ‘செசமே ஸ்ட்ரீட்’ஐ (Sesame Street)’ உருவாக்கிய  ‘செசமே வொர்க்ஷாப்’ (SesameWorkshop) நிறுவனத்தோடு இணைந்து , டாய்டாக்  நிறுவனத்தின் தனியுரிம தொழில்நுட்பமான ‘புல்ஸ்டிரிங்’ (PullString) எனப்படும் குரல் அங்கீகார மென்பொருள் முறையைக் கொண்டு குழந்தைகளின் பேச்சு வடிவங்களைப் புரிந்து கொண்டும், செயற்கை நுண்ணறிவு உத்தியைப் பயன்படுத்தியும், பதிலளிக்க அல்லது உரையாட வல்ல பயன்பாடுகளின் மூலம் சிறுகுழந்தைகளுக்குக் கற்பிப்பதை, குறைந்த செலவில் மிக எளிதாகச் செய்யும் வழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 
இது போன்ற தொழில்நுட்பத்தை பார்பி பொம்மைகளில் பொருத்தி உருவாக்கப்படும் ‘Hello Barbie’ பொம்மைகள், Wi-fi மூலம் இணைய இணைப்பை மையமாக வைத்தும், குரல் அங்கீகார மென்பொருள் முறையைக் கொண்டும் குழந்தைகளுடன் பேசுவது சாத்தியமாகிறது. குழந்தைகளின் மொழி உச்சரிப்பையும், அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்களையும் புரிந்துகொள்ள முடியும் என்பது தான் இவற்றின் சிறப்பம்சம். இது போன்ற தனிப்பயனாக்க பொம்மைகளை வைத்து விளையாடும் குழந்தைகளின் புரிந்துகொள்ளும் திறன், சாதாரண பொம்மைகளை வைத்து விளையாடும் குழந்தைகளின் புரிதலை விட அதிகமாகவே இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றால் குழந்தைகளின் மொழியை புரிந்து கொண்டும் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடல்களை நினைவில் கொண்டும் (மீண்டும் மீண்டும் சேகரித்தத் தகவல்களைப் பயன்படுத்தி) அவர்களின் சிநேகிதத்தை எளிதில் பெறமுடிகிறது. இதனால் குழந்தைகள் பெரிதளவில் இதனுடன் நேரம் செலவு செய்ய ஆர்வம் காட்டுவர் என்பது நிச்சயம். 
சமீபத்தில் நியூயார்க் மாநகரத்தில் நடந்த ஒரு பொம்மைக் கண்காட்சியில், இந்த ஹலோ பார்பி பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனுடன்  உரையாடிய பெண்மணி, இதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் ஒரு பொத்தான் மூலம் இதனை இயக்கி நியூயார்க் நகரத்திற்கு வரவேற்றார். அதன்பின் சில கேள்விகளும் உரையாடல்களும் இவ்விருவரிடையே பரிமாறப்பட்டன. பொம்மையிடமிருந்து பெண்மணியின் பேச்சை நினைவில் கொண்டதை நிரூபிக்கும் வகையில் பதில்களும் கிடைத்தன.

இவ்வாறான சிறப்பம்சங்கள் ஒருபுறமிருக்க பாதகங்கள் என முக்கியமாக நாம் கருதுவது, வழக்கம் போலவே, பெறப்படும் தகவல் எவ்வளவு பாதுகாப்பாக கையாளப்படுகிறது என்பது தான். “என்ன மாதிரியான தகவல் பதிவு செய்யபடுகின்றன? அவை எவ்வளவு நாட்கள் பாதுகாக்கப்படுகின்றன? இதை வேறு யாரெல்லாம் அறிய முடியும்?” என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன. 
குழந்தைகள், இதை ஒரு பொம்மை என்பதைத்  தாண்டி உயிருள்ள உற்ற தோழியாகவே பாவித்து, தங்கள் அடிமனதில் உருவாகும் உணர்ச்சிகளை வேறு எவரும் கேட்கவில்லை என்ற நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்வர். இந்த உணர்ச்சிபூர்வமான பகிர்தல் அடுத்த நொடியில் வலைதளத்தில் எங்கோ சேமிக்கப்படுகின்றன.
ஆனால் குழந்தைகளின் தனிமையையும் அந்தரங்கத்தையும் பாதுகாக்கும் வகையில் தகவல் சேகரிப்பு நடக்கிறதா? ஒருவேளை பாதுகாக்கப்பட்ட இந்த தகவல் திருடப்பட்டு, தவறான முறையில் இணையத்தளத்தில் அவை வெளியிடப்பட்டால் என்னவாகும்? இதனால் மனதளவில் குழந்தைகளுக்கு நேரும் பாதகங்கள் என்ன? மேலும் குழந்தைகளின் கற்பனை சக்தியும், தனித்துவமும், சுயசிந்தனையும் இதனால் பாதிக்கப்படுமா என்பதும்  கேள்விக்குறியே. 
இவை தவிர ஒருவேளை புதிதாக ஒரு நிறுவனத்திடம் இத்தகவலை கையாளும் உரிமை கைமாறினால், அந்த நிறுவனமும் இதே நிலையில் நிற்பார்களா என்பதும் அச்சுறுத்தலாகவே உள்ளது. மேலும் குழந்தைகள் என்ன மாதிரியான விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் , இவர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் இந்த பொம்மைகளுடன் அன்றாடம் செலவிடும் நேர அளவு என்பன போன்ற தகவல் விற்கப்பட்டால், அதை எவ்வாறு தடுப்பது? 
இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக “இந்த தகவல் பரிமாற்றத்தைக் கட்டுபடுத்துவதில் பெற்றோர் பங்கேற்க முடியும். சேகரிக்கப்படும் தகவலை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது , தகவல் பாதுகாப்பே பிரதானமானதாக கருதப்படுகிறது” என்பது மட்டேல் தரப்பு வாதம். இதன்படி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதனைப் பயன்படுத்த, பெற்றோர் அனுமதியை மின்னஞ்சல் மூலம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தேவைப்பட்டால் சேகரிக்கப்பட்ட தகவலை பெற்றோரால் நீக்கவும் முடியும். இவை போன்ற வாக்குறுதிகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாய் வழங்கப்பட்டாலும், இதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பது தான் உண்மை. தனிமனிதனின் வங்கிக் கணக்கு விவரங்களில் ஆரம்பித்து அவனை மகிழ்விக்கும் திரைப்படங்கள் வரை, இது போன்ற தகவல் திருட்டுகளால் ஏற்படும் பிரச்சனைகள் நமக்கு புதிதல்ல என்பதும், இதனால் எந்த அளவில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படுகிறது என்பதும் நாம் அறிந்ததே.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும், நொடியிலும் தொழில்நுட்பத்தின் ஊடுருவல் அதிகரித்துக்கொண்டேப் போகிறது. நாம் உலகின் எந்த இடத்தில் இருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், எதை தேடி விரும்பிப் படிக்கிறோம், என்ன உணவை விரும்பி உண்கிறோம், என்ன பொருள்கள் வாங்குகிறோம் என தொடங்கி அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஆப்பிளின்  மூலமும் கூகுளின் மூலமும் நம் கட்டுப்பாடின்றியே நம் விஷயங்கள் பிறரால் அறியப்படும் நிலை எந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதாய் உள்ளது. இனி இந்நிலை பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளையும் விட்டு வைக்கப் போவதில்லை எனும் போது  நம்மால் யோசிக்காமல் இருந்து விட முடியாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.