மாயத்தோற்ற ஊக்கிகள்

psychedelic_smoke_art-1920x1200

 
ஒரு குறிப்பிட்ட மனநிலையில், புலன்களின் தூண்டுதல் இல்லாமல் மனம் உருவெளிக் காட்சிகளை தோற்றுவிப்பதை மாயத்தோற்றம் எனலாம். மரணத்தின் அருகாமையில் சென்று மீண்டு வந்தவர்கள், தாம் மரணத்தை எதிர்கொண்ட அனுபவங்களைக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த அனுபவங்கள் ஒருவகையில் மாயத்தோற்றங்களே. தியானப் பயிற்சிகளை கற்பவர்கள், அவர்கள் முதல் தியான அனுபவத்தைக் கூறுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இந்த தியான அனுபவங்கள் பெரும்பாலும், அவர்கள் புருவமத்தியில் ஒரு ஒளி தோன்றி அவர்கள் தியானத்தை வழிநடத்தியது. அல்லது அவர்கள் மூலாதாரச் சக்கரத்தில் அசைவை உணர்ந்தது, அல்லது இவற்றைப்போன்ற சில அனுபவங்களாக இருக்கும். இப்படி அனுபவங்களாகக் கூறப்படுபவையும் ஒருவகையில் மாயத்தோற்றங்களே. இவை அனைத்தும் மூளையினால், மூளைக்குள் உருவாக்கப்படும் இயக்கங்கள். அந்த இயக்கங்களின் உணர்வுகள் மாயத்தோற்றங்களாக உணரப்படுகின்றன.
சில வகையான வேதிப்பொருட்களை உட்கொள்ளும்போது, அவை மூளையை அடைந்து கிட்டத்தட்ட இதேவகையான மாயத்தோற்றங்களை உருவாக்கும் இயக்கங்களை மூளையினுள் தூண்டுகின்றன. இவ்வகை வேதிப்பொருட்கள் மாயத்தோற்ற ஊக்கிகள் (Hallucinogen\ psychedelic) எனப்படுவன. 1960-களின் தொடக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில், இவை மருத்துவத்தில் வலி நிவாரணியாகவும், மனநோய் சிகிச்சைக்கு மருந்தாகவும் உபயோகப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதன் காரணமாக, தொடங்கப்பட்ட விரிவான ஆராய்ச்சிகள், எழுதப்பட்ட கட்டுரைகள் போன்றவை இந்த வேதிப்பொருட்களை மக்களிடம் பரவலாக அறிமுகப்படுத்தின. இவை அளிக்கும் மாயத்தோற்ற அனுபவத்துக்காக, அக்காலகட்டத்து இளைஞர்களிடம் போதைப்பொருட்களைப்போல இவை பரவின.
இவை இரு வகையான மனவிளைவுகளை ஏற்படுத்துகின்றன எனக் கூறப்படுகிறது. முதல் வகை, மகிழ்ச்சி, அன்பு, கருணை, அழகிய காட்சிகள் போன்ற உணர்வுகளை உருவாக்கும் விளைவு. இதை உபயோகிப்பவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இந்த நேரான விளைவுகளை நற்பயணம் (Good Trip) என்று அழைத்தார்கள். இன்னொரு வகை விளைவு, பயம், வெறுப்பு, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தியது. இந்த எதிர் விளைவுகளை பிழைப்பயணம் (Bad Trip) எனப் பெயரிட்டார்கள். இந்தஊக்கிகளால் ஒருவருக்கு ஏற்படும் விளைவுகள், பெரும்பாலும் அவற்றை உட்கொள்ளும்போது அவர் இருக்கும் மனநிலையைப் பொறுத்து அமையும். அவர் நேரான மனநிலையில் இருக்கும்போது உட்கொண்டிருந்தால் நற்பயணமாகவும், எதிர்மறை மனநிலையில் இருக்கும்போது உட்கோண்டிருந்தால் பிழைப்பயணமாகவும் அமையும் – இவை அவற்றை உட்கொள்ளும்போது இருக்கும் மனநிலையைப் பூதாகரமாக ஆகத் தூண்டுகின்றன எனலாம்!
போதைப்பொருட்களைப் போலவே, இந்த ஊக்கிகளும் புற மனதை (Conscious Mind) மந்தமடையச் செய்கின்றன. பிற போதைப்பொருட்கள் பெரும்பாலும் புறமனதை மந்தமடைய செய்வதுடன் நின்று விடுகின்றன. மாயத்தோற்ற ஊக்கிகள், புறமனதை மந்தமடைய செய்வதுடன் அகமனதையும் (SubConscious \ UnConscious Mind) தூண்டுகின்றன. அகமனதின் தூண்டுதல்களே அவை அளிக்கும் மாயத்தோற்றங்கள். தொடக்க காலத்தில் இவற்றை உபயோகித்தவர்கள், அகமன அனுபங்களுக்காகவே இவற்றை உட்கொண்டிருக்கிறார்கள். இவற்றை உபயோகித்த சிலர், இவை அளித்த அகமன அனுபவங்களைப் பிடித்துக்கொண்டு ஆன்மீகப் பாதைக்குத் திரும்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இந்தப் பின்னணியில், மாயத்தோற்ற ஊக்கிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும எந்தியோஜென் (Entheogen) என்னும் பெயரும் குறிப்பிடத்தக்கது. இது ‘தெய்வானுபவத்தை ஏற்படுத்துவது’ எனப் பொருள்படும்.
1960-களின் நடுப்பகுதியில், மாயத்தோற்ற ஊக்கிகள் மிக அதிகமாக உபயோகிக்கப்பட்டன. இவை இளைஞர்களை அடிமையாக்கவும் தொடங்கின. இவை வெறும்போதைப்பொருட்களை போன்று இல்லாமல், அகமன அனுபவத்தையும் அளித்தது உண்மைதான். ஆனால், புறமனதை மந்தமடையச்செய்ததன் மூலம் அவர்களின் புறவாழ்வு அல்லது லௌகீக வாழ்வை அழிக்கவும் முற்பட்டன.. ஒருவேளை, அகமன பயணத்தைத் தன்னறமாகக் (Path of Self) கொண்டவர்களுக்கு லௌகீக வாழ்வு தேவையற்றதாக இருக்கலாம். ஆனால், மாயத்தோற்ற ஊக்கிகளை உட்கொண்டு அகமன அனுபவங்களை அடைபவர்களுக்கு, அவற்றை விலை கொடுத்து வாங்கும் பொருளாதார தேவைகளுக்காகவாவது, லௌகீக வாழ்வில் இருந்தாக வேண்டும். லௌகீகத் தேவைகள் இருந்து, ஆனால் லௌகீக வாழ்வில் ஈடுபட முடியாதவர்களாக முற்றிலும் தம்மை மாற்றிக்கொள்பவர்கள், ஒரு சமூகத்தின் நோய்க்கிருமிகளாகி விடுகிறார்கள். இத்தகைய இளைஞர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியதும் விழித்துக்கொண்ட அரசாங்கங்கள், 1960-களின் இறுதியில் இந்த ஊக்கிகளின் விற்பனைக்கும் உபயோகிப்புக்கும் தடை விதித்தன. அத்துடன் அவை குறித்த ஆராய்ச்சிகளும் தற்காலிகமாக முடிவுக்கு வந்தன.
மறு எல்லையில், மாயத்தோற்ற ஊக்கிகள், வலிநிவாரணியாகவும், வலிமிகுந்த நோய்களால் மரணத்துக்கு அருகில் இருப்பவர்கள் மரணத்தை அமைதியுடன் எதிர்கொள்ள உதவும் ஊக்கிகளாகவும், மனநோய்களுக்கு மருந்தாகவும் அமையக்கூடிய சாத்தியங்களை உடையவை. முறையற்ற உபயோகத்தால் இந்த ஊக்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள், இந்த சாதகமான பயன்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கும் தடையாக மாறிவிட்டன. ஆனால் மிகச் சமீபத்தில், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பின், தேவையான அனுமதிகளுடன் மீண்டும் இவை குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எல்எஸ்டி(LSD) என சுருக்கமாக அழைக்கப்படும் லைஸர்ஜிக் ஆசிட் டைஎத்தில்அமைட் (Lysergic Acid Diethylamdide), ஸிலோஸைபின்(Psilocybin), பெயோட்டி (Peyote), பிசிபி (PCP) போன்றவற்றைப் பொதுவாக மாயத்தோற்ற ஊக்கிகளாக, மேலைநாட்டு மருத்துவம் வகைப்படுத்தியுள்ளது. இவை தவிர மேலும் பல இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் மாயத்தோற்ற ஊக்கிகளாக பயன்படுவதாகத் தெரிகிறது. உதாரணமாக கஞ்சா செடியின் இலை மற்றும் காய்ந்த இலையிலிருந்து பெறப்படும் புகை போன்றவை வலிநிவாரணிகளாக இந்திய மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. சில ஆன்மீகக் குழுக்கள், கஞ்சாவை ஆழ்மனதுக்குள் ஊடுருவும் வாகனமாக பயன்படுத்துகின்றன. சிலோசைபின், சிலவகை காளான்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. கஞ்சா போன்று, இந்த காளான்களும் நேரடியாக உட்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. எல்எஸ்டி, ஒரு வகை பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது செயற்கையாக, ஆய்வக வேதிவினைகள் மூலமும் தயாரிக்கப்படுகிறது. இப்படி, இயற்கையாகவும், செயற்கையாகவும் தற்காலத்து ஊக்கிகள் கிட்டுகின்றன.
இந்த ஊக்கிகளைக் குறித்துத் தெளிவு பெற, குறைந்தபட்சம் மூன்று திசைகளில் அறிதல் அவசியமாக இருக்கலாம். முதலாவதாக மாயத்தோற்ற ஊக்கிகளை உட்கொள்ளுவாதால் ஏற்படும் விளைவுகள். இரண்டாவதாக, மாயத்தோற்றங்கள் தியான அமர்வுகளின் அனுபவங்களை ஒத்திருப்பதாக கூறப்படுவதால் தியானம் குறித்த பொதுவான ஒரு அறிதல். மூன்றாவதாக, இந்த அனுபவங்களை நிகழ்த்தும் மூளையின் நியூரான்களின் பொதுவான கட்டமைப்பு.
அகமனதைத் தரிசிக்க விரும்புபவர்களுக்கு முதல் தடையாக இருப்பது, புறமனதில் கட்டற்று அலைபாயும் எண்ணங்கள். நம் வாழ்வுக்கும், செயல்களுக்கும் இந்த எண்ணங்கள் இன்றியமையாதவை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதும் இந்த புறமன நிகழ்வுகளான எண்ணங்களே. ஒவ்வொரு செயல்களும் நடைபெறுவதற்குப் புறமன எண்ணங்களே காரணம். சாதாரண நிலையில் பெரும்பாலும் நம்மால் இந்த எண்ணங்களின் மேல் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடிவதில்லை. நாம் இதுவரை அடைந்த அறிவிற்கேற்ப, இந்த எண்ணங்கள் தன்னிச்சையாக உருவாகி, பின் நம் இயல்பிற்கேற்ப தகுதியானவை செயல்வடிவம் பெறும். முன்பே கூறியபடி, மாயத்தோற்ற ஊக்கிகள் இந்த புறமன இயக்கங்களை மந்தமடையச் செய்து, எண்ணங்களை இல்லாமல் செய்கின்றன, அல்லது எண்ணங்களின் அடர்வை மிகவும் குறைத்து விடுகின்றன. அத்துடன் அகமன இயக்கங்களை தூண்டவும் செய்கின்றன. இப்போது புறமனம் இயங்காமல் இருப்பதால், மாயத்தோற்ற ஊக்கிகளை உட்கொண்டவர்களுக்கு அகமன இயக்கங்களை உணர முடிந்திருக்கலாம். அகமனம் தூண்டப்பட்ட திசைக்கேற்ப, அந்த அகப்பயணம் நற்பயணமாகவோ பிழைப்பயணமாகவோ உணரப்படலாம்.
தியானம், எந்த ஊக்கிகளின் துணையும் இல்லாமல் மனதின் அடிஆழம்வரை செல்லும் நிகழ்வு. இங்கு தியானம் பற்றி கூறும்போது, மிஸ்டிக் (Mystic) என்னும் மறைஞானத்தைச் சற்று ஒதுக்கி வைக்கலாம். எனில், அகமனம் தூண்டப்பட்டு, அதனால் மனதினுள் நிகழும் நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகளின் உணர்வுகளையும் தொகுத்துத் தியானம் எனலாம். அதாவது, தியானம் என்பது நம்மால் செய்யப்படுவதில்லை. ஒருவகையான மனநிலையை அடையும்போது, அறியாத ஒரு கணத்தில் அகமனம் தூண்டப்பட்டு, அங்கு தியானம் நிகழும். நாம் செய்யும் தியானப்பயிற்சிகள் என்பவை அனைத்தும், தியானம் நிகழ்வதற்கான மனநிலையை அடையும் பயிற்சிகளே. தியானத்தின் போதும், புறமனம் சற்றே ஓய்வில் இருக்கும், அல்லது முற்றிலும் இயக்கமற்று இருக்கலாம். ஆனால் மந்தமாக்கப்படுவதில்லை. அது பயிற்சியின் மூலம் புறமனதைக் கடந்து செல்லுதல். தேவையெனில் புறமனம், முன்பைவிட அதிகச் செயலூக்கத்துடன் இயங்க முடியும். தியானப்பயிற்சி எனக்கூறப்படுவது உண்மையில் புறமனதைக் கடந்து செல்வதற்கான பயிற்சி. புறமனதைக் கடந்து செல்லும்போது, அகமனதை உணர்வதற்கான தடைகள் அங்கு இல்லை.
நம் எண்ணங்களும் மனநிலைகளும் செயல்களும், மூளையில் உள்ள நியூரான்களால் முடிவு செய்யப்படுகின்றன. மனித மூளையில் சுமார் 14 பில்லியன் (1400 கோடி) நியூரான்கள் முதல் 100 பில்லியன் நியூரான்கள்வரை உள்ளதாக வெவ்வேறு தரவுகள் கூறுகின்றன. நியூரான்களில் டென்ட்ரைட் (Dendrite) என்னும் பகுதி அவற்றின் ஏற்பிகள (Input) ஆகும். ஆக்ஸான் (Axon) என்னும் வால் பகுதி, அவற்றின் வெளியீட்டு (Output) உறுப்பாகும். ஒரு நியூரானில் ஏறத்தாழ 200,000 ஏற்பிகள் வரை உள்ளன. எல்லாவிதமான டிஜிட்டல் மின்னணு சாதனங்களும் ‘0’ மற்றும் ‘1’ என்னும் எண்களை மட்டும் கொண்ட ‘பைனரி’ எண்களின் அடிப்படையில் இயங்குவதை நாம் அறிவோம். இங்கு ‘0’ என்பது, மின்சாரத்தால் தூண்டப்படாத நிலை. ‘1’ என்பது தூண்டப்பட்ட நிலை. மூளையில் உள்ள நியூரான்களும் கிட்டத்தட்ட இதே அடிப்படையில்தான் இயங்குகின்றன. எல்லா நியூரான்களும் எப்போதும் தூண்டப்பட்ட நிலை அல்லது தூண்டப்படாத நிலை என்னும் இருநிலைகளில் ஒன்றில் இருக்கும். மின்னணு கருவிகளின் இயக்கம், மின்சார ஓட்டத்திற்கு காரணமான ‘எலக்ட்ரான்’களால் தூண்டப்படுகிறது. மூளையின் நியூரான்கள், அங்கு இருக்கும் மின்வேதி அணுக்களால் (Ions) தூண்டப்படுகின்றன.
ஒவ்வொரு நியூரானின் ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகள், பல ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நியூரானின் வெளியீட்டு உறுப்பு, வெவ்வேறு நீளங்களால் பிற நியூரான்களுடன் தொடர்புறுத்தப்பட்டுள்ளது. அந்த நீளத்திற்கேற்ப வெவ்வேறு நேரங்களில் அடுத்த நியூரான்கள், முதல் நியூரானிடமிருந்து தூண்டுதலை பெறுகின்றன. ஒரு நியூரான், அதன் ஏற்பிகளால் இணைக்கப்பட்டுள்ள பிற நியூரான்களிடமிருந்து பெறும் தூண்டுதலிற்கேற்ப மூளையின் அந்த நேரத்து செயல்பாடு இருக்கும். தூண்டப்படும் நியூரான், அதன் வெளியீட்டு உறுப்பு வழியாக மின்வேதி அணுக்களை வெளியிடுகிறது. நியூரான் ஒருமுறை மின்வேதி அணுக்களை வெளியிட்டுச் செலவிட்டால், அடுத்தமுறை தூண்டப்படுவதற்கு, மீண்டும் அந்த மின்வேதி அணுக்களை பெற்றாக வேண்டும் அல்லது உற்பத்தி செய்தாக வேண்டும். இதற்கு கிட்டத்தட்ட 1 மில்லிசெகன்ட் அளவுக்கு நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு வினாடியில் சுமார் 1000 முறைகள் ஒரு நியூரான் தூண்டப்படலாம்.
ஒவ்வொரு நியூரானின் ஆயிரக்கணக்கான ஏற்பிகளும், வேறு நியூரான்களின் வெளியீட்டு உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நியூரான் பல ஆயிரக்கணக்கான வேறு நியூரான்களிடமிருந்து தூண்டுதலைப்பெறலாம். இந்த தூண்டுதல்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு நியூரான் பெறும் ஒட்டுமொத்தத் தூண்டுதல்களின் கூட்டுத்தொகை, ஒரு குறைந்தபட்ச அளவை விட (Threshold) அதிகமாக இருந்தால், அந்த நியூரான் தூண்டப்படும். மேலே கூறப்பட்ட எண்ணிக்கைகளும் சாத்தியங்களும், மனித மூளையும் அந்த மூளையால் இயக்கப்படும் மனிதர்களும் எத்தகைய அதிசயம் என்பதை உரக்கக் கூறுகின்றன. துரதிர்ஷ்டவசமாக நாம் அதிசயங்களை நமக்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நியூரான்களின் இயக்கத்தைப் பொறுத்து, நம் மனதின் இயக்கம் இருக்கும். மாயத்தோற்ற ஊக்கிகளும், தியானமும் நியூரான்களின் இயக்கங்களை எவ்வாறு வழிநடத்துகின்றன என்பதைப் பொறுத்து, அவற்றால் பெறப்படும் அக உணர்வுகள் அமையும். மாயத்தோற்ற ஊக்கிகள், நம் உடலுக்கும் மூளைக்கும் அந்நியமான வேதிப்பொருட்கள். அவை மூளையை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன என்பதை அளவிடுவதற்கான கருவிகள் இன்னும் மருத்துவத் துறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலே கூறப்பட்ட மூளையின் சிக்கலான இயக்கங்களை ஒப்பிடுகையில், அவற்றின் ஒரு சிறிய அளவு இயக்கத்தை அளவிடும் கருவிகள் கூட உடனடி எதிர்காலத்திலும் உருவாகச் சாத்தியங்கள் இல்லை.
ஆனால் மருந்து என்னும் தகுதியில், மாயத்தோற்ற ஊக்கிகள், மனித இனத்துக்கு வரப்பிரசாதமாக அமையக்கூடும். அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தி, உயிரினங்கள் வாழும் சூழலை மிக வேகமாக அழித்துவரும் மனித இனம், எதிர்காலத்தில் எத்தகைய நோய்களுக்கு ஆட்படக்கூடும் என்பதைக் கண்கூடாக அறிந்து வருகிறோம். மாயத்தோற்ற ஊக்கிகள் வரைமுறைப் படுத்தப்பட்டு, அவற்றின் மருத்துவ உபயோகங்களும் வரைமுறை செய்யப்பட்டால், குறைந்த பட்சம், நோய்களால் அடையும் மரணத்தை மனதளவில் எளிதாக எதிர்கொள்வதாவது மனிதருக்குச் சாத்தியப்படலாம்!

0 Replies to “மாயத்தோற்ற ஊக்கிகள்”

  1. இந்த பிரபஞ்சத்தை நான்கு விசைகள்(strong force,week force,electromagnetic force and gravitational force) இயக்குவதாக அறிவியல் கூறுகிறது.உயிரை இயக்கும் விசையாக இராசயான விசையை(chemical force)
    கருதலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.