பர்மாவின் செட்டியார்கள் கட்டுரைக்கு எதிர்வினையும் ஆசிரியர் பதிலும்
அன்புள்ள நெற்குப்பை காசிசுவாமிநாதன்,
என் கட்டுரை குறித்த உங்களது விரிவான கடிதத்தைப்படித்தேன்.
உங்கள் முதல் பாயிண்டைப் படித்தால், மார்வாரிகள் குறித்து நான் எழுதியதை நீங்கள் சரியாகப்படிக்கவில்லையோ என்கிற ஐயம் எழுகிறது. செட்டியார்களைப்போல் சாதிக்கட்டுமானம் இருந்த குழுவாக மார்வாரிகள் இருந்தாலும், செட்டியார்கள் போல் பர்மாவில் அவர்கள் ஏன் பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்ற கேள்விக்கு நான் சொன்ன பதில்: கடல் கடக்க வேண்டிய வியாபார நிலை அவர்களுக்கு அன்று இல்லை. அவர்களது முதலீட்டிற்கு உள்நாட்டிலேயே போதிய லாபம் கிடைத்தது. அந்த நிலை இல்லாத செட்டியார்கள், அதனையே பர்மா, மலேசியா போன்ற நாடுகளில் காலூன்ற வாய்ப்பாக்கிக் கொண்டார்கள்– இதுதான் நான் எழுதியது. மார்வாடிகளுக்கு கடல் கடக்க ஏற்கனவே வடநாட்டுத் துறைமுகங்கள் இருந்தன – என்றெல்லாம் நான் எழுதவே இல்லை. மார்வாரிகள் கடல் கடப்பது பற்றிய கட்டுரையுமல்ல இது. மீண்டும் ஒருமுறை கட்டுரையை நீங்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
பிரிட்டிஷ்காரர்களை செட்டியார்கள் பின்தொடரவில்லை என்பது வரலாற்று ரீதியாக சரியான பார்வையல்ல. பிரிட்டிஷ்காரர்களை பின்தொடர்ந்தே செட்டியார்கள் பர்மாவில் கால் வைக்கிறார்கள். சரியாகச்சொன்னால், முதல் பிரிட்டிஷ்–பர்மிய போரில் பிரிட்டிஷ் இந்திய துருப்புகளுடன் சேர்ந்து பயணம் செய்தே அவர்கள் பர்மாவைச் சென்றடைகிறார்கள். (ஷான் டர்னல்). பிரிட்டிஷ்காரர்களுடன் நகரத்தார்களுக்கு இருந்த வணிகப்பிணைப்பும் பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஒன்றே. பிரிட்டிஷ்காரர்களை அண்டி அரசியல் செய்த நகரத்தார்கள் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் வழியாக தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கவும் செய்தார்கள்.
அதேபோலத்தான் கோவில் சார்ந்த வியாபரங்களும். கோவில்கள் வியாபார மையங்களாகவும் விளங்கின. எனவே கோவில்களை வளர்ப்பது வணிகத்தை வளர்ப்பதுதான். ஆனால் வணிக உடனடி லாபத்தை மட்டும் முதன்மையாக்கி செட்டியார்கள் அந்தக்கோவில்களை வளர்த்தெடுக்கவில்லை. அதேசமயம் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு கோவில் வரவு செலவு நிர்வாகத்தில் முக்கியப்பங்கு இருந்தது என்பதும் கோவிலும், அதன் திருவிழாக்களும்– அவை சார்ந்து அந்த ஊரின் வியாபாரங்களும் வளர்ந்தபோது நகரத்தார் வியாபாரமும் வளர்ந்தது என்பதும் உண்மைதான். கோவில், ஊர் மக்கள், வணிகம், பொருளாதார வளர்ச்சி இவை ஒன்றையொன்று சார்ந்திருந்த அந்நாட்களில், இது இயல்பான ஒன்றே. (சொல்லப்போனால், இப்படிப்பட்ட சமூகப்பிணைப்பு மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றின் மையமாக கோவில்கள் விளங்கியதால், 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலனிய அரசின் பிரிட்டிஷ் கலெக்டர்கள் இந்து கோவில்களின் அறக்கட்டளை நிர்வாகிகளாகவும் சில இடங்களில் தர்மகர்த்தாக்களாகக்கூட இருந்திருக்கிறார்கள்.ஆனால் இந்துக்கோவில்களில் கிறித்துவ அரசியின் பிரதிநிதிகள் பங்கெடுப்பதா என்று கிறித்துவ மிஷனரிகள் அழுத்தம் தரத்தொடங்கியதன் விளைவாக, பிற்காலத்தில் இவர்கள் நிர்வாகத்திலிருந்து விலகத்தொடங்கினர் ).
காரைக்குடி செட்டியார்கள் என்று சொல்வது ஒரு குறியீடாகத்தான். நீங்கள் சொல்வது போல் தொண்ணுற்றாறு ஊர்களில் இருந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களே இதில் குறிப்பிடப்படும் குழுக்கள் ஆகும். அதே சமயம், 18-19-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் செட்டியார்கள் வணிகம் குறித்த வரலாறு – செட்டியார்கள் செவிவழிக்கதைகள் தவிர – தெளிவாக எங்கும் இல்லை. நகரத்தார்கள் என்பதே நாட்டுக்கோட்டை செட்டியார்களை மட்டுமே குறிப்பதா என்பதே உறுதி செய்யப்பட முடியாத ஒன்றுதான். ஆனாலும் நகரத்தார்கள் என்றே இவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதால் நானும் அவ்வழக்கையே கட்டுரையில் பயன்படுத்தி இருக்கிறேன். மற்றபடி செட்டியார்கள் குறித்த எந்த சாதிக்குறிப்பும் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கிய வரலாறுகளிலோ எனக்குத்தெரிந்து இல்லை. எனவே தொல்காப்பிய வழிநடந்தார்கள் என்றெல்லாம் சொல்வது பிற்காலத்தில் உருவான செட்டியார் சாதி அரசியலின் பகுதியான ஒரு பார்வை மட்டுமே. என் கட்டுரை பர்மாவில் செட்டியார்கள் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், அதில் அவர்களது சாதிக்கட்டுமானம், பாரம்பரியம், இவற்றின் நீட்சியாய் இருந்த குழு குணங்களின் பங்களிப்பு ஆகியவற்றை மையமாக்கிப்பேசுவது. நகரத்தார்களின் சாதிப்பெருமையை மையமாக்கிப்பேசும் கட்டுரை அல்ல இது.
இந்து தெய்வ நம்பிக்கை மிகுந்த நகரத்தார்களில் ஒரு பகுதியினரே இந்து தெய்வங்களை இழிவுறுத்திப் பரப்புரை செய்த திராவிட இயக்கத்தில் சென்று பிற்காலத்தில் விழுந்தார்கள் என்பதுதான் இதில் உள்ள முரண் நகை. நாணயத்திற்கு பெயர் போன இந்தச் சாதியினர், ஜஸ்டிஸ் கட்சி, திராவிட அரசியல் என்று அதிகாரப்போட்டியில் புகுந்ததில், திராவிட அரசியலுக்கே உரித்தான அத்தனை களங்கங்களுக்குள்ளும் சேர்ந்தே கால் வைத்தனர்.
காங்கிரஸ் எதிர்ப்பையும் பிராமண எதிர்ப்பையும் மையமாக்கி பிரிட்டிஷாருக்கு வால் பிடிக்கும் கட்சியாக –காந்திஜியின் காங்கிரஸிற்கு எதிர் தரப்பாக – ஜஸ்டிஸ் பார்ட்டி உருவானபோது எம்.ஏ. முத்தையா செட்டியார் அதன் முக்கிய தலைவரானார். திராவிட ஆரிய பிரிவினை வாதத்திற்கு தூபம் போட்ட பிரிட்டிஷ் அரசு இவருக்கு ராஜா சர் பட்டம் வழங்கியது. திராவிட பிரிவினைவாத அரசியலில் ஊறிய ஜஸ்டிஸ் பார்ட்டி பிரமுகரான முத்தையா செட்டியார், ஆட்சி அதிகாரம் பெற பணத்தை லஞ்சமாய் வாரி இறைத்தார் என்று அன்றைய ஜஸ்டிஸ் பார்ட்டியின் நண்பரும் மெட்ராஸ் கவர்னருமான ஜான் எர்ஸ்கைனின் கடிதத்தை ஆதாரமாக்குகிறார் டேவிட் ருட்னர். ஜஸ்டிஸ் பார்ட்டி அரசியலின் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது, பிராமண எதிர்ப்பு, தனித்தமிழ் தேசியம், திராவிடப்பிரிவினை ஆகியவற்றை மையமாக்கி, மொழியை அரசியல் கருவியாக்கி வளர்ந்தது. அதே சமயத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு வால் பிடிக்கும் அந்தப் பிரிவினைவாத அரசியலை எதிர்த்த செட்டியார்களும் இருக்கத்தான் செய்தனர். அவர்கள் ஒன்றுகூடி முத்தையா செட்டியாரது அரசியல், செட்டியார் சமூகத்தின் உண்மையான அரசியல் உணர்வுகளைப்பிரதிபலிக்கவில்லை என்று தீர்மானம் போட்டனர். முத்தையா செட்டியார் தனது அரசியல் அதிகாரத்தினை , கோவில்களையும், வியாபார சந்தைகளையும் தன் வசதிக்கேற்ப வளைக்க உபயோகிக்கிறார் என்று ஊழியன் பத்திரிகை குற்றம் சாட்டியது. ஆனால் இது எதனாலும் முத்தையா செட்டியாரின் திராவிட அரசியலும், அதிகார வேட்கையும், பிரிவினைவாதமும் குறையவில்லை.. இதன் உச்சகட்டமாக 1942-இல் க்ரிப்ஸ் மிஷன் இந்தியா வந்த போது ஈவேராவுடன் சேர்ந்து ஸ்டாஃபோர்டு க்ரிப்ஸை சந்தித்து திராவிட நாடு என்று தனிநாடாகப்பிரிவினை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் முத்தையா செட்டியார். மக்கள் ஆதரவோ ரெஃபரண்டமோ இல்லாமல் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று கிரிப்ஸ் அவர்களைத்திருப்பி அனுப்பினார்.
பிரிட்டிஷ் ஆதரவால் காங்கிரஸ் கட்சிக்கெதிராக மொழி அரசியல் செய்யும் விதமாக அமைக்கப்பட்ட அண்ணாமலைப்பல்கலைக்கழகம் தொடர்ந்த ஊழல் குற்றச்சாட்டுகள், மேலாண்மைகோளாறு ஆகியவற்றால் 2013-இல் திவால் நிலையில் வந்து நின்றது. ஒருகாலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், திராவிட அரசியல், இந்தியன் பேங்க்– இவை அனைத்தையும் இணைத்து ஓடிய ஒரு மாயக்கூவம் இருந்தது. அது நறுமணம் கமழும் ஒன்றல்ல, நாணயம் மிக்க சமூகம் என்று அறியப்பட்ட சமூகத்திற்குப் பெருமை சேர்ப்பதும் அல்ல என்றுமட்டும் சொல்லி அதைத்தாண்டிச்செல்கிறேன்.
இதைச்சொல்லக்காரணம் பிராமணக்காழ்ப்பு, பிற மொழி விலக்கத்தையே தமிழ் மொழிப்பற்றாகக்காட்டுவது, ஆரிய திராவிட இன வாதம், தமிழ் தேசியவாதம், சாதி மேட்டிமைத்தனம் –இப்படிப்பட்ட எதிர்மறைப்போக்குகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் சரடு இன்றும் நகரத்தார்களில் ஒரு பிரிவில் இருக்கிறது என்பதைச்சுட்டிக்காட்டத்தான். சமூகத்தில் செல்வாக்கு வாய்ந்த சில புலம்பெயர்ந்த நகரத்தார்களிடமும் இது காணப்படுகிறது. உங்கள் கடிதத்தில் மார்வாரிகளைப்பேசும் விதத்திலும், ”வடுக அயலார்” என்று குறிப்பிடும் விதத்திலும், நான் காண்பது இந்தச் சரடின் ஒரு பகுதியைத்தான்.
நாயக்க மன்னர்களின் ஆதரவில் செட்டியார்கள் வியாபாரம் வளர்த்தபோது அயலார்கள் என்கிற சிந்தனை வரவில்லை உங்களுக்கு. கன்னட பலிஜா நாயுடு வகுப்பு என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஈவேராமசாமி நாயக்கருடன் கைகோர்த்து பிரிட்டிஷ் ஆதரவு அரசியல் செய்தபோது அயலார்கள் குறித்த சிந்தனை எழவில்லை. அதே பிரிட்டிஷ் அயலார்களிடத்தில் போய் நின்று பாரதத்திலிருந்து துண்டாக்கி தனிநாடு வேண்டும் என்று மனுப்போட்ட போது அயலார் சிந்தனை எழவில்லை. இன்று ஒன்றிணைந்த சுதந்திர இந்தியாவில் வடுக அயலார் என்று ஒரு மக்களைக்குறிப்பிட்டுப்பேசும் உங்களது சாதி மேட்டிமைவாதத்தின் மேல் எனக்கு உள்ளது கடுமையான நிராகரிப்பு மட்டுமே. இப்படி சொந்த நாட்டு மக்களையே அயலார் என்று விலக்கும் நீங்கள், “அயலார்” என்று சொல்லி பர்மா உங்கள் முன்னோர்களின் சொத்துக்களைப்பிடுங்கிக்கொண்டு விரட்டியதை எப்படிப்பார்ப்பீர்கள் என்று யோசிக்கிறேன்.
காலனிய பர்மாவில் வியாபாரத்தில் வெல்ல சாதிக்கட்டுமானத்தை அன்று நகரத்தார்கள் உபயோகித்தது ஒருவகை. ஆனால் இன்றைய நிலையில் திராவிட இனவாத வெறுப்பிற்கும் தனித்தமிழ் தேசியம் பேசும் பிரிவினை அரசியலுக்கும் துணைபோகும் கருவியாய் அது ஆகிவிடக்கூடாது.
வியாபாரத்தை வாழ்வாதாரமாககொண்டு வாழும் தமிழக ஜாதிகளுள் இவர்கள் விநோதமானவர்கள்தாம். அதாவது ஆதிகாலத்திலிருந்து தொடரும் வாழ்க்கை பாரம்ப்பரியம்.
அருமை அருணகிரி!