பயனர் அனுபவம் – ஒரு அறிமுகம்

ue

இண்டெர்நெட் மிகப் பரவலாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் தினசரி எத்தனையோ வலைத்தளங்களில் புழங்க ஆரம்பித்துவிட்டோம். இணையத்துக்குள் பொடி நடையாகப் போய்வர நமக்கும் ஏதாவது காரணங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. ரயில்-பஸ்-விமான டிக்கெட் புக்கிங், டாக்ஸி புக்கிங், ஆன்லைனில் பொருள்கள் வாங்குதல், செய்திகள் படித்தல், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிளில் தகவல்கள் தேடுதல், மின்கட்டணம் செலுத்துதல், வங்கிப் பரிமாற்றங்கள், மின்னஞ்சல் தொடர்பு, பொழுதுபோக்கு, சினிமா இன்னபிற சமாச்சாரங்கள்எல்லாவற்றிற்கும் இப்போது இணையம்தான்.
நம் வாழ்க்கையை இணையம் நிரப்பத் தொடங்கிவிட்டது. சொல்லப்போனால் புரட்டிப் போடத் துவங்கிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். ஸ்மார்ட் ஃபோன்கள் வந்துவிட்ட பிறகு இணையம் பாக்கெட்டுக்குள் அடங்கிவிட்டது.இதன் மூலம் ’ஆன் தி கோ’ என்று எங்கும் நகர்ந்துகொண்டே, பிரயாணப்பட்டுக்கொண்டே, இருக்குமிடத்திலிருந்தே தேவையானதைச் சாதிக்கலாம் என்கிற நிலை வந்துவிட்டது. இணையமானது இன்றைய தேதிக்கு நமக்கு உடல், பொருள், ஆவி என எல்லாமுமாய் நிறைந்து கிடக்கிறது.
இணையத்தில் பலவருடங்களுக்கு முன்பு, அதிகபட்சம் வெறும் படங்களாக மட்டுமே (JPG, GIF) வைத்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த, 800×600 Resolution –அளவில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுக்கொண்டிருந்த, திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டிருந்த வலைத்தளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி கண்டு, இப்போது எல்லா வகையான உபகரணங்களிலும் (Desktop, Laptop, Mobile, Tablet) இயங்கக்கூடியதும், முன்னேறிய தொழில்நுட்பம் காரணமாக விரைவாகத் திறக்கக்கூடியதும், டைனமிக்காக கட்டுப்படுத்தப்படுவதும் ஆக உருமாறியிருக்கின்றன.
உலமகெங்கிலும் உள்ள வணிக நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நிறுவனமும் தனது சேவைகளைக் காட்சிப்படுத்த, சந்தையில் கவனிக்கப்பட, தனக்கான அடையாளத்தை, தனது சேவைகளை, தனித்தன்மையை உலகிற்குப் பறை சாற்ற என எல்லாவகையிலும் ஒரு வலைதளத்தை உருவாக்கி அதை பராமரிப்பது மிகவும் கட்டாயமான விஷயமாகிவிட்டது.
இவ்வாறு அதிகரித்திருக்கும் வலைதளங்கள், மற்றும் அவைகளை உபயோக்கும் பயனர்களுக்குமிடையே நடக்கும் மனித-கணினி தொடர்பு பரிமாற்றங்களைச் (Human-Computer Interaction), சார்ந்து பல வருடங்களாக நடைபெற்ற ஆராய்ச்சிகளின் விளைவாக, இப்போது “பயனர் அனுபவம்” (User Experience), பயன்பாட்டுத்திறன் (Usability) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
uxஅதாவது நீங்கள் ஒரு வலைதள பயனர் (User) என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இப்போது ஒரு வலைத்தளத்தை முதன் முதலாக உபயோகிக்க வருகிறீர்கள். எனில் உங்களால் அவ்வலைதள சேவையை நீங்களாகவே எளிதாகக் கற்றுக்கொண்டு, மிக விரைவாக இயக்க முடிகிறதா?. தவறுகள் செய்யாமல், தடுமாறாமல், தெளிவாக உபயோகிக்க முடிகிறதா? மேலும் மறுமுறை அதே வலைதளத்தைப் பயன்படுத்தும்போது,அதன் வடிவமைப்பையும், அதன் நேவிகேஷன் (Navigation) அம்சங்களையும் தெளிவாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறதா? அப்படியெனில் அது ஒரு பயன்பாட்டுத்திறன் வாய்ந்த (Usabile Website) வலைதளம்.
இணையத்தை உபயோகிப்பவர்களில் இருபது முதல் அறுபது வரை எல்லா வயதினரும் உண்டு. அவர்களில் மெத்தப் படித்தவர்கள் இருப்பார்கள். சிலர் இணைய தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அல்லது அவர்கள் வெறும் குறைந்த பட்சக் கல்வி கற்றவர்களாகவோ, கல்வியறிவு அற்றவர்களாகவோ கூட இருக்கலாம்.இணையத்தை அவர்கள் உபயோகிப்பதும் வெவ்வேறு இடங்களிலிருந்துதான். ஆகவே எல்லோரும் ஒரே மாதிரியாக வலைதளங்களை உபயோகிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு வலைதளம் புதிய பயனர் (New user) மற்றும் வல்லுநர் (Expert User) இருவருமே சரியான விதத்தில் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்படவேண்டும்.பயனர் யாராக இருந்தாலும், குறிப்பிட்ட வலை தளமானது கற்றுக்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிதாக இருப்பது அதி முக்கியம்.
மேலும் நீங்கள் அவ்வலைதளத்தைப் பயன்படுத்தும்போது என்னவெல்லாம் நடக்கிறது என்பது தேவைப்பட்ட இடங்களில் அவ்வலைதளம் தெரிவிக்கவேண்டும். இல்லையேல் குழப்பம்தான் மிஞ்சும். உதாரணமாக நீங்கள் ஒரு வலைதளத்தில் லாகின் செய்யும்போது தவறான கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி லாகின் (Login) பட்டனை அழுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திரையில் ஒன்றுமே நடக்கவில்லை. உள்ளேயும் நுழையவில்லை. அதே பக்கத்திலேயே நீங்கள் இருப்பதாகக் காட்டுகிறது. ஒரு தகவலும் இல்லை. மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், என்ன பிரச்சனை என்று புரியாமல் “ஙே” என்று விழித்துக் கொண்டிருப்பீர்களா இல்லையா? அல்லது அதே தவறான கடவுச்சொல்லையே திரும்பத் திரும்ப உபயோகித்துக்கொண்டிருப்பீர்கள்.
மாறாக, அந்த வலைப் பக்கத்தில் நீங்கள் உபயோகித்த கடவுச் சொல் தவறு என்று சிவப்பு நிறத்தில் ஒரு அறிவிப்பு வந்தாலோ, அல்லது உங்களுக்கு மறந்துபோன கடவுச்சொல்லை மீட்டெடுக்க வழிவகை செய்யப்பட்டு இருந்தாலோ, அந்த வலைதளம் சரியான பயன்பாட்டுத்திறனைப் பெறுகிறது. ஆக நீங்கள் செய்த தவறை சரி பண்ணிவிட்டு மேற்கொண்டு வலைதளத்தை தொடர்ந்து தடங்கலின்றிப் பயன்படுத்த இயலும். இங்கே கூறப்பட்டிருக்கிற உதாரணம் வெறும் எளிமையான, அடிப்படையான ஒரு விஷயம் மட்டுமே. பெரும்பாலான வலைதளங்களில் நீங்கள் இதைப் பார்த்திருப்பீர்கள்.
இதுபோல ஒரு பெரிய web application – ஐ (பயன்பாட்டு வலைதளம்) உருவாக்கும்போது இதுபோல எண்ணற்ற விஷயங்களை கருத்தில்கொண்டு, பயனருடைய மனநிலை மாதிரிக்கு (mental model) ஏற்ற வகையில் வலைத்தளத்தை வடிவமைப்பது அவசியமாகிறது. பலவகையான பரிமாற்றங்கள் நடைபெறும் ஃப்ளிப்கார்ட்மாதிரியான பெரிய ஆன்லைன் வர்த்தக வலைதளமாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கிற வங்கியின் வலைத்தளமாக இருந்தாலும் சரி, இதன் செயல்பாடுகள் எல்லாம் கொஞ்சம் சிக்கலானவை. பயனரின் பணத்தோடு தொடர்புடையவை. கோடிக்கணக்கான மக்கள் புழங்கும் இம்மாதிரியான வலைத்தளங்களில் ஒரு சின்னத் தவறு நடந்தாலும் அது பிரச்சனையாகிவிடும். ஆகவே இம் மாதிரியான வலைதளங்கள் உபயோகிக்க எளிமையாகவும், பயன்பாட்டுத்திறன் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் உபயோகிப்பவருக்குத் திருப்தியை அளிக்கும் வகையிலும், நம்பகத்தன்மையுடனும் கூட இருக்கவேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யப்படுகிறது?
முன்பெல்லாம் ஒரு வலைதளத்தை உருவாக்க ஒரு வடிவமைப்பு வல்லுநர் (டிசைனர்) மற்றும் ஓரிரு டெவலப்பர்கள் மட்டுமே போதும் என்கிற நிலை மாறி இப்போது usability engineers, user experience designer, user experience architect, Visual designer, Interaction designer என பல வகையான வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். User Experience என்பதும் Usability என்பதும் இப்போது பரவலாக புழக்கத்தில் உள்ள சொற்களாக மாறிவிட்டன. மேலும் முன்பெல்லாம் வெகு அலங்காரமாக டிசைன் செய்யப்பட்டு வந்த வலைதளங்கள் அந்த ட்ரெண்டை விட்டு விலகி இப்போது பயனர் அனுபவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் விதமாக வடிவமைக்கப்படுகிறது. அதாவது அலங்காரத்தைவிடவும், கண்ணைப் பறிக்கும் நிறங்களை விடவும், எளிமையான வடிவமைப்புக்கும், அதன் செயல்திறனுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு ப்ரச்சனை. வலைதளத்தை உருவாக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு இது செலவு வைக்கிற விஷயமாக இருப்பது.
எளிமையாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கவெண்டுமென்றால் அதை ஃபோட்டோஷாப்பில் டிசைன் செய்துவிட்டு, பிறகு அதை செயல்படவைக்கும் நிரலி (HTML, CSS, JS உபயோகித்து) எழுதி வலையேற்றம் செய்யப்பட்டுவிட்டால் தீர்ந்தது. இதில் பெரிதாக செலவு ஒன்றும் இல்லை. சில ஆயிரம் ரூபாய்களில் முடிந்துவிடும். அதிக வேலையும் இல்லை. ஆனால் ஒரு பெரிய வலைதளத்தில் உள்ள தகவல்களை பயனுள்ள வகையில், சரியான வடிவில் கட்டமைக்கவும், அதிலுள்ள தகவல் பக்கங்கள் பயனரால் எளிதாய் அணுகும் வகையில் வடிவமைக்கவும் வேண்டும் என்றால் இத்துறை சார்ந்த வல்லுநர்களின் உதவி தேவை. நிறுவனங்களுக்கு இதற்கு ஆகும் செலவு அதிகம்.
இன்று இணையத்தில் புழக்கத்திலிருக்கும், லட்சக்கணக்கான மக்களால் உபயோகப்படுத்தப்படும், பெரிய வலைதளங்கள் இதுபோல பல வல்லுநர்களின் உழைப்பில்தான் உருவாக்கப்படுகின்றன. இதற்காக, வணிக உத்திகளை முடிவு செய்தல் (Business Strategy) பயனர் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், (User Research), பயனர் விவரங்களைத் தயார் செய்தல் (User Profile), ஒரு பயனர் மாதிரியை (Persona) தயார் செய்தல், தகவல் கட்டமைப்பை உருவாக்குதல் (Information Architecture) போன்ற பல நிலைகளைக் கடந்தபிறகுதான் டிசைன் வேலைகள் துவங்குகின்றன.
இந்தக் கட்டத்தில் ஒரு பயனர் அனுபவ வடிவமைப்பாளரின் (User Experience Designer) –ன் பங்களிப்பு தூக்கலாக இருக்கும். வலைதளத்தின் நேவிகேஷன் கட்டமைப்பு (Navigation Structure) எப்படியிருக்கவேண்டும்?ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள தகவல் உள்ளடக்கம் (Content) எப்படி இருக்கவேண்டும்? பயனர் அந்த வலைதளத்தை உபயோகிக்கும்போது அதனுடன் தொடர்புகொள்ளும் முறை எப்படியிருக்கவேண்டும் (Interaction) போன்றவற்றிற்கு சில வழிமுறைகள் உள்ளன. இதையெல்லாம் ஆராய்ந்து, கவனித்து, செயல்படுத்தி வலைதளத்தை வடிவமைக்க வேண்டுமென்றால் நிச்சயம் இத்துறைக்குப் பரிச்சயமான, அனுபவம் கொண்ட வல்லுநர்களால்தான் அது முடியும்.
ஆகவே இவர்களை வேலையில் அமர்த்தவும், ஆராய்சிகள் மேற்கொள்ளவும் ஆகும் செலவு அதிகம். ஆனால் இவ்வகையில் செலவு செய்து உருவாக்கப்படும் வலைத்தளமானது நிச்சயம் பயனர் உபயோகிக்கத்தக்க வகையில் எளிதாகவும், செயல்திறன் வாய்ந்ததாகவும் இருக்கும் என்ற வகையில் இதற்காக போடப்பட்ட முதலீட்டைப் பன்மடங்கு திரும்பப் பெறமுடியும் (Return On Investment).
பயனர் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக் கட்டங்களையெல்லாம் தாண்டியபிறகு அந்த வலைதளமானது எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக பயன்பாட்டுத்திறன் சோதனைகள் (Usability Testing) மேற்கொள்ளப்படுகின்றன. இதில் உண்மையான பயனர்கள் தனித்தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தச் சோதனையின்போது எதற்காக அந்த வலைதளம் உருவாக்கப்படுகிறதோ அதன் நோக்கம் நிறைவேறுகிறதா என்பது கண்டறியப்படுகிறது. அதை உபயோகிக்கும்போது பயனர்கள் எங்கேயாவது தடுமாறுகிறார்களா? அல்லது ஏதாவது புரியாமல் விழிக்கிறார்களா? என்ன மாதிரியான தவறுகள் செய்கிறார்கள்?எதுவெல்லாம் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது, அல்லது இன்னும் வேறு ஏதாவது எதிர்பார்க்கிறார்களா என்பதெல்லாம் தெரிந்துகொள்ளப்பட்டு வலைதளம் மேலும் சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்படுகிறது (IterativeDesign). தவறுகள் களையப்படுகின்றன. இதுபோல பலமுறை சோதனை செய்யப்பட்ட பிறகே, எல்லாம் சரியாக இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அந்த வலைத்தளமானது பயனர்கள் உபயோகிக்க வலையேற்றம் செய்யப்படுகிறது.
இந்த மாதிரி சோதனைகள் செய்வதற்கும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்தச் சோதனைகளை Usability Lab என்றழைக்கப்படுகிற பயன்பாட்டுத்திறன் ஆய்வகங்களிலும் செய்யலாம். அல்லது தொலைதூரசோதனையாகவும் செய்யலாம். அதாவது எங்கெங்கோ இருக்கிற பயனர்களை உபயோகித்து கம்யூட்டர் / இணையம் மூலம் தொடர்புகொண்டு ஒருங்கிணைத்து, Webex போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தியும் இச்சோதனைகளைச் செய்யலாம்.
ஆக, வலைதள வடிவமைப்பு என்பது இன்றைய தேதிக்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற மாதிரியான சமாச்சாரமல்ல. பல்துறை வல்லுநர்கள் (Multi-Disiplinary) எல்லோரும் கூடி விவாதித்து, வழிவகுத்து, சோதித்துச் செய்கிற ஒரு வேலை. இதை அ முதல் ஃ வரை கனகச்சிதமாகச் செய்து முடிக்கும்போது மேம்பட்ட பயனர் அனுபவத்துக்கு (User Experience) கியாரண்டி. தற்போதைய இந்தியச் சந்தையில் இது கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக்கொண்டு வருகிறது. பல இந்திய மென்பொருள் நிறுவனங்களும் மெல்ல இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு இதை ஒரு பயிற்சியாக மேற்கொள்ளவும், இதற்கென பெரிய பட்ஜெட் ஒதுக்கவும் முன்வர ஆரம்பித்துவிட்டன. இதுவரை வெறும் வலைதள வடிவமைப்பு நிபுணர்களாக (Web Designers or User Interface Designers) மட்டுமே இருந்து வந்தவர்கள் இந்தத் துறையில் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொண்டு, சந்தைத் தேவைகளுக்கேற்ப தங்களை ஒரு பயனர் அனுபவ வடிவமைப்பாளராக (User Experience Designer) நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த பயனர் அனுபவம் என்பது தற்காலத்தில் வெகுவாகப் புழக்கத்தில் இருக்கும் அலைபேசி செயலிகளின் (Mobile Apps) வடிவமைப்புக்கும் பொருந்தும்.
ஆகவே அடுத்தமுறை நீங்கள் ஏதாவது வலைதள சேவையை உபயோகிக்கும்போது, அதில் உங்களுக்கு வேண்டிய தகவல்கள் உடனுக்குடன் கிடைத்தாலோ, அவ்வலைதளத்தில் நீங்கள் செய்ய வேண்டிய பணியை சடுதியில் செய்து முடித்தாலோ, நீங்கள் செய்த முடித்த பணிக்கு சரியாக ஒப்புகை (Acknowledgement) கிடைத்தாலோ, இவைகளால் உங்கள் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை உதித்தாலோ “குட் யூசர் எக்ஸ்பீரியன்ஸ்” என்று மனதிற்குள் ஒருமுறை சொல்லிக்கொள்ளுங்கள்.

0 Replies to “பயனர் அனுபவம் – ஒரு அறிமுகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.