பங்களாதேஷ் பயணம் – 2

coxs-bazar-bangladesh

முந்தைய பகுதி: பங்களாதேஷ் பயணம்

“சில்ஹெட் பகுதியிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள் தங்கள் தனித்தன்மையுடன் இன்றும் இருக்கிறார்கள்” என்று சொல்வனத்தில் எழுதியிருந்ததை பங்களாதேஷி நண்பர் ரசூல் மறுத்திருந்தார். “சிட்டகாங், டாக்கா, காக்ஸ்பஜார் பகுதியிலிருந்தும் பெருமளவு குடியேறியிருந்தார்கள். அவர்களில் பலர் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டனர். இன்று இங்கிலாந்தில் இந்திய உணவகம் என்ற பெயரில் நடக்கும் பல ஓட்டல்கள் இந்த பங்களாதேஷிகளால் நடத்தப்படுபவை. அதில் பிரியாணி வகைகள் பலவும் மேற்கு பாக்கிஸ்தானி வகை”, என்றார். இவர்களில் பலர் மேற்குப் பாகிஸ்தானில் சமையல் , எடுபடி வேலைகளில் இருந்தவர்கள் அங்கு அவர்களை இரண்டாம்தரக் குடியேறிகளாக நடத்தியதில், பலர் இங்கிலாந்துக்கு சென்றனர். பங்களாதேஷ், பாக்கிஸ்தான் கலாச்சார இணைவுடன் அவர்கள் உருவாக்கிய அந்த உணவுவகை சற்றே வேறானது. ஆரம்பகாலத்தில் இங்கிலாந்தில் இந்த உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாகிஸ்தானியர்தாம்,” என்றார்.
இதற்கான ஆதாரங்களை அவரிடம் கேட்டிருந்தேன். இதுவரை வரவில்லை. அவர் என்று இல்லை. பொதுவாகவே பங்களாதேஷிகளின் புலம்பெயர்வு குறித்தான ஆவணங்கள் அதிகம் கிடைப்பதில்லை. மக்கள் வெளியேறினால் போதும் என்று அரசாங்கமும் நினைத்திருக்கிறதோ, என்று எண்ண வைக்கிறது. பெரும்பாலான புலம்பெயர்வு மறைமுகமாக இந்திய , பர்மா எல்லைகளில் நிகழ்கிறது. அஸாமில் குடியேறியவர்கள் பலரும் அங்கு நில உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகளும் இந்த ஊடுருவலைக் கண்டுகொள்ளவில்லை. அஸாமில் இன்று நடக்கும் இனவெறுப்பு வன்முறைகளுக்கு இந்த ஊடுருவல்கள் முக்கிய காரணம்.
ஏப்ரலில் நான் மீண்டும் டாக்காவும் சிட்டகாங்கிற்கும் போகத் தீர்மானமாயிருந்தது. தற்போது நடக்கும் வன்முறைகளால், பயணத்தைத் தள்ளிப்போட்டு விட்டேன். சிட்டகாங் போய் அங்கிருந்து காக்ஸ் பஜார் என்ற கடற்கரை நகரில் விற்பனைத்துறையின் கூட்டம் நடத்த முடிவாயிருந்தது. இப்போது அதுவும் தள்ளிப் போடப்பட்டு விட்டது.
உலகின் மிக நீளமான, தொடர்ந்து நீண்டிருக்கும் கடற்கரை என்று புகழ் பெற்றது காக்ஸ்பஜார் 120 கிமீ நீளத்திற்கு அழகிய மணல் பரப்பும், பொன்னான சூரியோதய, அஸ்தமன காட்சிகள், அருமையான மக்கள் என்று டாக்காவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். Beautiful Bangladesh என்ற அடைமொழியுடன் அரசு எப்படியும் அதனை தாய்லாந்தின் பட்டாயா, இலங்கையின் கால்லெ போல சுற்றுலா வரும் வெளிநாட்டவர் குவியும் இடமாக்க வேண்டுமென நினைக்கிறது.
’ஆனால் நடப்பது தலைகீழ்,’ என்றார் ரசூல். கடற்கரை அருகிலேயே கன்னாபின்னாவென கட்டிடங்கள், ஓட்டல்கள், மோட்டல்கள், கழிப்பிட வசதியின்மை, குப்பை சேர்தல் என்று அது நாளுக்கு நாள் அசிங்கமாகி வருகிறது என்றார் அவர். அத்தோடு லோக்கல் ரவுடிகள், பிச்சைக்காரர்கள் தொந்திரவு, மெத் போதைப்பொருள் விற்பனை என்று பயமுறுத்துவதில், வெளி நாட்டவர் இவ்வருடம் வரவேயில்லை என்றார். கடற்கரையில் உடைந்த பீர்புட்டிகள், மணலில் எறிந்த போதை ஊசிகள் எனக் கால்வைக்கவே ஆபத்தாகிவிட்டது என்று குறைபட்டார். சற்றே மிகையாகச் சொன்னார் என்று மற்றொரு நண்பர் பின்பு கூறினாலும், பலரிடம் கேட்டதில் அதில் உண்மை இல்லாமல் இல்லை என்று அறிந்தேன்.
காக்ஸ்பஜாரின் அழகிய நீண்ட கடற்கரை இப்போது மெத் எனப்படும் போதைப்பொருள் நுகர்வோரின் சந்தையாக மாறிவருவது அந்நாட்டிற்கு ஒரு தலைவலி. மயன்மாரிலிருந்து தாய்லாந்து செல்லும் வழிகள் பெருமளவில் இராணுவத்தாலும் , சிறப்புப் படைகளாலும் காக்கப்படுவதால், மெத் நிலமார்க்கமாக பங்களாதேஷ் வந்து, அங்கிருந்து கடல் வழி மூலமும்,வடகிழக்கு இந்திய எல்லைகள் மூலமும் பரவுகிறது. தாய்லாந்தில் சில கடற்கரை நகரங்கள் போலவே, பாலியல் தொழில் காக்ஸ் பஜாரில் ப்ரசித்தம். ஏழைப் பெண்கள் உள்நாட்டுப்பகுதியிலிருந்து காக்ஸ் பஜார் வந்து, வெளிநாட்டவரின் டாலர்களில் சிறிது பணம் சேர்க்க முயல்கிறார்கள். இயற்கையின் அழகின் குரூர மறுமுகம் காக்ஸ்பஜார். கோவாவின் ரஷ்ய மாஃபியா போலவே, இங்கும் மாஃபியாக்களின் பிடியில் பொழுதுபோக்குத் துறை சிக்கியிருக்கிறது.
காக்ஸ் பஜாரின் ஒரு வருட வருமானமாக அரசு அறிவித்திருப்பது ஒரு பில்லியன் டாலர்கள். நாட்டின் மொத்த சுற்றுலா வருமானம் 6.8 பில்லியன் டாலர்கள். இதற்கு மேல் பற்பல மடங்கு மெத் விற்பனையும், பாலியல் தொழில் வருமானமும் காக்ஸ் பஜாரில் இருக்கும் என்கிறார்கள்,அங்கு சென்று வந்தவர்கள்.
பங்களாதேஷின் சுற்றுலா வளராமல் போவதற்கு அங்குள்ளவர்களின் மனநிலையும் ஒரு காரணம் எனத் தோன்றுகிறது. நார்த் சவுத் யூனிவர்ஸிடி என்ற டாக்காவிலிருக்கும் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி ( 2010ல் நடந்த ஆய்வு), காக்ஸ்பஜாரில் சுற்றுலா பயணிகள் வருவதன் நன்மை, தீமைகளாக அங்குள்ள மக்கள் தெரிவித்ததைப் பதிவு செய்திருக்கிறது. அதில் நன்மை என்பதில் முதலில் ரோடு, குடிநீர் போன்ற உள்கட்டமைப்ப்புகளின் பெருக்கம், மின்சாரம் கிடைத்தல் என்று தொடங்கி.. ஐந்தாவதாக பெண்கள் வரதட்சிணை இன்றி திருமணம் செய்து கொடுக்க முடியும் என்று வருகிறது. இது ஒன்றுதான் பெண்களைப் பற்றிச் சொல்லியிருப்பது.
தீமைகளாக அவர்கள் கருதுவதில் முதலில் ‘லோக்கல் கலாச்சாரம் அழியும்” என்று சொல்லி மூன்றாவதாக “பெண்கள் முகத்திரை பர்தா அணிவது குறைந்து போகும்” என்று பட்டியல் நீள்கிறது. பெண்களைப் பற்றியும், தங்கள் கலாச்சாரம் பற்றியும் அங்குள்ள மக்கள் நினைப்பதில் மத உணர்வு சார்ந்த கலாச்சார மயக்கம் தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலை மாற, அரசும், அங்குள்ள லோக்கல் நிர்வாகமும் அடியெடுத்து வைத்ததாக இன்றும் தெரியவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை மிகவும் குறைந்திருப்பதே இதற்குச் சான்று.
”அதெல்லாமில்லை. இங்கே மூன்று மாதங்களாக எதிர்க்கட்சிகளின் போராட்டம் நடந்துவருகிறது. அதனாலேயே மக்கள் வரத் தயங்குகின்றனர்,” என்றார் ரஹ்மான் என்ற நண்பர். அவர் சிட்டகாங் அருகே இருந்து டாக்காவில் குடிபெயர்ந்தவர். மயன்மார் போதைப்பொருளால் பங்களாதேஷுக்கு கெட்ட பெயர் என்று கோபமாகச் சொன்னார். இந்தக் கருத்தை பலரும் சொன்னதாக நினைவு கூர்கிறேன். மயன்மாருடன் ஒரு இறுக்கமான உணர்வை பங்களாதேஷிகள் கொண்டிருக்கின்றனர். மயன்மார் மக்களால் அவர்களது வருமானம் தடைப்படுவதாகவும், பொருளாதார வளர்ச்சியில் ஒரு தேக்கமும் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அடிப்படையில் பங்களாதேஷின் வறுமைக்கும், முன்னேற்றத்தடைக்கும் அவர்களது அரசியலும், மனப்பாங்குமே முக்கிய காரணமென்பதை ஒத்துக்கொண்டாலும், புகார் என்று முன்வைப்பதில் அண்டைநாடுகளையே பெரிதும் சுட்டுகின்றனர்.
’பங்களாதேஷிய கலை வளர்ப்பில் இந்தியா அதிகம் ஆர்வம் காட்டவில்லை’ என்றார் ஓட்டலில் தங்கியிருந்த ஒருவர். அவரது உறவினர் ஒருவர் நல்ல ஓவியர் என்றும் அவரது படைப்புகளை பங்களாதேஷ் ஆர்ட் காலரி , ஷேக் முஜிப் சரணி, கல்கத்தாவில் காட்சியாக வைப்பதில் இருந்த அரசியல் தடைகளையும் , மக்களின் அசிரத்தையையும் பெரிதாகக் கூறினார். “ ஏன் பிரான்ஸு போன்ற கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பிற நாடுகளை நீங்கள் சொல்லுவதில்லை? “ என்றதற்கு ”இந்தியாவே இதில் அக்கறை காட்டவில்லை , பெங்காலிகளே அக்கறை காட்டுவதில்லை.” என்று தொடங்கி “ படா பாய் சோட்டாபாய்..” என்று புலம்பினார். தங்களுக்கு வேண்டிய அளவில் இந்தியா உதவவேண்டும், அது அவர்கள் உரிமை என்ற அளவில் சிந்தனை பரவியிருப்பதாகத் தோன்றுகிறது.
பங்களா மொழியில் புத்தகங்கள் கொண்டு வர தீவிரமாக முயல்கிறார்கள். போன மாதம் புத்தக விழா ஒன்று , இத்தனை கலவரங்களுக்கும் நடுவே நன்கு நடைபெற்று முடிந்தது. சிறுவர்களுக்கான புத்தகங்கள் இந்த வருடம் பல வந்திருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார். பத்திரிகைச்செய்தி ஒன்று , புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் மட்டும் எட்டாயிரம் புதிய புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தது. கால்பந்து, கிரிக்கெட், பாலிவுட் சினிமா என்பது தவிர ஆரோக்கியமான புத்தகங்கள் குறித்த உரையாடல்களும் சரளமாக அலுவலகங்களி நடக்கின்றன. இது படித்தவர்கள், உயர் மத்திய வர்க்கத்தவர்கள் என்ற நிலையில் மட்டுமன்றி சற்றே மத்தியதர வர்க்கத்திலும் கண்டிருந்தேன். புத்தகங்களின் தரம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. பார்த்த அளவில் ஜிகு ஜிகு அட்டைகள், அதிலிருக்கும் சிறு குறிப்புகள் பரபரப்பான துப்பறியும் கதைகள் , மசாலா என்று காட்டுவதுபோலிருந்தன. மதக் கொள்கைகளைப் பரப்பும் எளிய புத்தகங்கள் மிக மலிவு விலையில் ,அல்லது இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். நற்கொடை மற்றும் பொதுநலச் சேவை செய்யும் மதம் சார்ந்த நிறுவனங்கள் பல இடங்களிலும் டாக்காவில் இருப்பதைக் கண்டேன். இவை தவிர பிற நாட்டிலிருந்து வரும் கொடைப் பணத்தில் புத்தகங்கள் மலிவு விலையில் பெருமளவில் அச்சிடப்படுகின்றன. அடிப்படை அறிவியல், வரலாறு போன்றவற்றை விளக்கும் சில புத்தகங்கள் வந்திருப்பதாக செய்தித்தாளின் குறிப்பு கூறியது. இது ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்கு அடிகோல இயலும்.
மூன்று மாதங்கள் முன்பு பங்களாதேஷ் குறித்த எனது மதிப்பீடுகள் மாறிய நிலையில் அடுத்த பயணத்திற்கான அழைப்பையும், விசாவையும் காத்திருக்கிறேன், இம்முறை, அதிக ஆர்வத்துடன்…

0 Replies to “பங்களாதேஷ் பயணம் – 2”

  1. பங்களாதேஷிகள் புலம்பெயரக் காரணம் வறுமை அளவுக்கு அதிகமான மக்கட்தொலை பெருக்கம். சிறிய நாட்டின் மக்கள் அடர்த்தி மிகவும் அதிகம். இந்தியாவின் அஸாம் பகுதியில் இந்தியவாசியாகிவிட்டனர் பலர். பெரும்பான்மையான இடங்களில் எல்லை காவலில்லாமல் இருக்கிறது. மேற்கு வங்க அரசும் இவர்களை ஓட்டு இயந்திரமாகப் பார்க்கிறது. அதுபோலவே மியான்மார் நாட்டில் பங்களாதேஷிகள் கள்ளக்குடியேறிகளாக சென்று இன்று “ரோஹிஞ்ஜா” எனும் பெயரில் சில பகுதிகளில் உரிமை கொண்டாடுகின்றனர். கடந்த தேர்தலில் நடந்த முறைகேடு. ஜமாத்தா இஸ்லாமியின் கடும் இஸ்லாமியவாதப் போக்கு மிகச் சமீபத்திய போர்க் குற்றவாளிகள் (பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் போர்) தூக்கிலிடப்பட்டது என நாடு நெருக்கடி நிலையிலே இருக்கிறது. 2013-ல் டாக்கா சென்று அங்கிருந்து ரயிலில் (மே ட்ரீ எக்ஸ்பிரஸ்) கொல்கத்தா செல்லலாம் என முடிவெடுத்தேன். விசா நஹி.. இத்தனைக்கும் சிட்டகாங், நாராயண்கஞஜ் மற்றும் குமிலா பகுதி நண்பர்கள் அதிகம் எனக்கு உண்டு. மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடில் பங்களாதேஷ் அதன் அண்டைநாடுகளுடன் நட்புறவு கொள்வது இயலாத ஒன்று. கட்டுரையில் சொல்லியதுபோல வெளிநாடுவாழ் பங்களாதேஷிகள் சொற்ப சம்பளத்தில் வாஉம் கூலித் தொழிலாளர்களே. பல வருடங்களாக நாட்டிற்கே செல்லாத பங்களாதேஷிகளை வளர்ந்த நாடுகளில் பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.