நேற்று நினைத்தேன் – ஜெயகாந்தன்

jayakanthan2
 நான் விரதங்கள், வைராக்கியங்கள் எல்லாம்  மேற்கொள்வதில்லை. அந்த மாதிரிப் பிடிவாதங்கள் என்னைப் பற்றிவிடலாகாது என்கிற ஜாக்கிரதை உணர்ச்சியை நான் வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் என்னைச் சோதித்துக் கொள்வதே இல்லை. தனக்கு உண்மையாக இருக்கிற அன்பான மனைவியைச் சந்தேகித்துச் சோதித்து அறிகிற காரியம் எவ்வளவு அநாகரிகமோ, கொடுமையோ, அதைவிடச் சற்றும் குறைந்த கொடுமையல்ல – ஒருவன் தன்னைத்தானே சோதித்துக் கொள்வது.

ஒரு தடவை ஜே. கிருஷ்ணமூர்த்தி சொன்னார் : “What is that experiment with truth? nonsense” என்று.

 உண்மைகளைச் சோதிக்கிறவன் அவற்றைப் பொய்யாக்குகிறவரை திருப்தியடைய மாட்டான்.

விளக்கை ஏந்தி எவரும் வெளிச்சத்தைத் தேடுவது உண்டோ?

இந்த வாழ்க்கை என்பது ஓர் அனுபவம் என்பதைத் தவிர, எனக்கு வேறொன்றும் தெரியவில்லை. இதைச் சோதித்துப் பார்க்கவும் நேரமில்லை.  இது பொய்யா – மெய்யா? என்று புரிந்து கொள்ளவும் அவசியமில்லை. இப்படிப்பட்ட முயற்சிகள் எல்லாம் வாழ்க்கை என்கிற அனுபவத்திற்கு இடையூறுகளாகவே ஆகின்றன.

நான் கடவுளைத் தனியாகப் புகழ வேண்டுமா? ‘இந்த இலை எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்று வியக்கிறேனே அது போதாதா?

நான் கடவுளைத் தனியாகப் பிரார்த்தனை செய்ய வேண்டுமா? என் குழந்தை சுகமாக மகிழ்ந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறேனே, அது போதாதா?

நான் தனியாகத் தவம் புரிய வேண்டுமா? என் மனைவிக்குச் சுகம் தந்து மகிழ்விக்கிறேனே, அது போதாதா?

நான் கடவுளைத் தனியாகத் தூஷணை செய்ய வேண்டுமா? சில சமயங்களில் ‘நாசமாய்ப் போக!’  என்று என்னையோ, பிறரையோ நொந்து கொள்கிறேனே , அது போதாதா?

நமது சங்கீதம் நம் செவிகளிலும், நமது வெளிச்சம் நம் கண்களிலும் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்கிறவர்களே கடவுள் நம் உள்ளே இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளுவார்கள்.

நேற்று நான் நினைத்தேன்; இந்தக் காற்று மண்டலமான பூமியிலேயே ஒரு நாள் என் சுவாசத்துக்குக் காற்றில்லாமல் நான் மரித்துப் போவேன். அப்போது புயற்காற்று என் உடலைப் புரட்டி அலைக்கழித்தாலும் எனது சுவாசகோசங்களை இயக்க முடியாதே !

மறைந்த பெரும் எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் தன் சொற்களிலேயே தன் வாழ்வைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சொன்னவற்றைப் பிரசுரிப்பதே அவருக்குச் செய்யும் பெரும் மரியாதை என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களில் பலரை அவர்களது பதின்ம வயதிலிருந்து வழி நடத்திய ஒரு எழுத்து அவருடையது. ஜெயகாந்தனின் மறைவுக்குச் சொல்வனம் பதிப்புக் குழு தன் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.