‘திரிசூலத்துக்கு முன்னாடி லெப்ட்ல வெயிட் பண்ணு, கரெக்ட் ஒன்பதரைக்கு வந்துடுவேன்…’
‘எதுக்குடா இந்த வேலை.. பொண்டாட்டிக்கு பயந்தவனால எந்த காரியத்தையும் செஞ்சு முடிக்கவே முடியாது.. ஊர் சுத்தப்போறேன்னு தைரியமா சொல்ல வேண்டியதுதானே..’
‘போடா.. பொண்டாட்டிக்கும் தெரியாம, ஆபிசுக்கும் கட் அடிச்சுட்டு, இமேஜை டேமேஜ் பண்ணிக்காம காரியத்தை முடிக்கிறதுதான் புருஷ லட்சணம்.. நீ ஓவரா பேசாம, வண்டியை எடுத்துட்டு மீனம்பாக்கம் தாண்டி, திரிசூலம் பக்கமா ஓரங்கட்டு. நான் பைக்கை மவுண்ட் ஸ்டேஷன்ல விட்டுட்டு, டிரெயினை பிடிச்சு திரிசூலத்துல இறங்கிட்டு கால் பண்றேன்…’
‘சரிசரி, மறக்காம ஐடி கார்டை எடுத்துக்கோ… அங்கேயே வெச்சுட்டு மாட்டிக்காதே..’
‘அட, ஆமால்ல.. நல்லவேளை மறந்தே போயிடுச்சு. ஐடி கார்டை வீட்டுல வெச்சுட்டு ஆபிஸ் போறதா சொன்னா வட்டத்துல உள்ளே போய் செட் ஆவறது மாதிரி. நல்லவேளை உஷார் பண்ணினான். நண்பேன்டா!’
இரண்டு நாட்கள் எங்கேயாவது லாங் டிரைவ் போய்ட்டு, வாய்க்கு ருசியா வாணியம்பாடி பிரியாணி, குத்து பரோட்டோ விட்டு, ஆபிஸ் டாஸ்க்கையெல்லாம் மறந்துவிட்டு கொஞ்சமாய் அரசாங்கத்து டாஸ்மாக்கில் நீராடி வருவதுதான் திட்டம். போன மாதம் ஜவ்வாது மலை என்ற பெயரை கேள்விப்பட்டதும், மனது ஜிலுஜிலுவென்று ஆகிப்போனது. கூப்பிட்டால் போதும் சந்துரு வந்துவிடுவான். கொஞ்சம் தொண, தொணவென்று பேசிக்கொண்டே வருவான். மத்தபடி வேறு பிரச்னையில்லை. கோபு, பேட்டையின் பேச்சுலர். ஸ்டியரிங்கை பிடித்தால் ஜீகல் பந்திதான். காரையும், நம்மையும் பத்திரமாக அழைத்துச் செல்லும் கச்சிதமான பார்ட்டி. இதற்கு மேல் அவுட்டிங் போக என்னதான் வேண்டும்?
முதலில் ஜவ்வாது மலை எங்கே இருக்கிறது, எந்த ரூட் சரியானது, என்னவெல்லாம் பார்க்கலாம், தங்குவதற்கு வசதியுண்டா… போன வார முட்டு சந்து சந்திப்பில் பரபரவென்று கேள்விகளை வீசிவிட்டு, வழக்கம் போல் பதிலை எதிர்பார்த்தேன்.
‘ஏன் பாஸ், உங்க பிஎம்பி புத்தியை காட்டிட்டீங்களே… நீங்கதான் சொன்னீங்க.. ஜாலியா ஒரு லாங் டிரைவ் போகலாம்னு.. இப்போ ஏகப்பட்ட கேள்வியா அடுக்குறீங்களா…இதையெல்லாம் வெச்சு ஒரு பிபிடி போட்டு லெக்சர் குடுப்பீங்களோ?’ வழக்கம்போல் சந்துருதான் கச்சேரியை ஆரம்பித்தான்.
எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது. டாய்லெட்டுக்கு போவது கூட ஒரு பிராஜெக்ட்தான். அதைப் பொது ஜனம் புரிந்து கொள்வதில்லை. பிராஜெக்ட் என்றாலே பீதியாகி ஓடுகிறார்கள். பிராஜெக்ட் மேனேஜர் என்றாலே பவர் இல்லாவிட்டாலும் பவர் பாயிண்ட் காட்டுபவர்கள் என்கிற கருத்தியல் படு ஸ்ட்ராங்காக ஆகிவிட்டது. கோயிஞ்சாமியும் பிராஜெக்ட் மேனேஜ்மெண்ட் பிஸ்தா கிடையாது.
ஒரு நாள் அதிகாலை எழுந்ததும் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிவிடுவது என்று கோயிஞ்சாமி முடிவு செய்தான். ஆறு மாதத்திற்குள் தன்னுடைய கேரியரில் அடுத்தக் கட்டத்தை எட்டிவிடுவது, அப்படியொரு அசுர முன்னேற்றத்திற்கான ஒரே வழி, பிராஜெக்ட் மேனேஜ்மெண்ட்! வேறு வழியில்லை, குண்டு புஸ்தகத்தில் இருந்ததையெல்லாம் முதலில் கரைத்துக் குடித்துவிடவேண்டும். பிராஜெக்ட் என்றால் என்னவென்று படிக்க ஆரம்பித்தான். கேள்விகளுக்கான பதில்கள் எழுதிப் பார்த்தான். தினமும் 3 மணி நேரம் பயிற்சி செய்தான். புதிய திறமைகளை வளர்த்துக்கொண்டான். பிராஜெக்ட் மேனேஜ்மேண்ட் எக்ஸாம் எழுதி, தேர்ச்சி பெற்றான். அதற்கேற்ற பதவியை அடைந்தே தீர்வதென்று தீர்மானித்து, வெறிக் கொண்டு வேறு வேலை தேட ஆரம்பித்தான். இண்டர்வெல்! கோயிஞ்சாமியின் செயல்திறனும், புத்திசாலித்தனமும் சுருட்டியிருந்த சிவப்புக் கம்பளங்களை விரித்துப் போட்டன. வாய்ப்புகள் அவனைத் தேடி வர ஆரம்பித்தன. நல்லதொரு பணி கிடைத்தது. பிராஜெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்து, பிஎம்ஓ கட்டமைத்து, பின்னர்ச் சிஇஓவாகப் பதவி உயர்வு பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தான். அவ்வளவுதான்!
இதெல்லாம் விக்ரமன் படத்தின் மோசமான திரைக்கதை போல் தோன்றலாம். நாற்பதை தாண்டிய எல்லாத் தகவல் தொழில்நுட்பத் துறை மனுஷ ஜென்மங்களின் மண்டைகளை உடைத்துப் பார்த்தால் இந்தக் கனவுதான் எந்நாளும் ஓடிக்கொண்டிருக்கும்!
கோயிஞ்சாமியின் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்ததா என்று கேட்டால் இல்லைதான். இண்டர்வெலுக்கு முன்னால் படமே முடிந்துவிட்டது.
பிராஜெக்ட் என்பதன் ஸ்பெல்லிங் கூடத் தெரியாத நிலையில்தான் கல்லூரிக்குள் இடது காலை வைத்து உள்ளே நுழைந்தான் கோயிஞ்சாமி. ஒரு சில மாதங்களில் ஸ்பெல்லிங் தெரிந்தது, ஆனால் அர்த்தம் தெரியவில்லை. ஒரு பிராஜெக்ட் செய்ய வேண்டுமென்றால் அதற்குத் தேவை ஒரு கம்ப்யூட்டர், ஒரு டேபிள், ஏசி ரூம், சின்ன நோட்புக் குறிப்பெடுப்பதற்காக. எட்டு சி புரோகிராம் தாள்களை இணைத்துவைத்தால் அதுவொரு பிராஜெக்ட். ஒரு எச்எடிம்எல் பேஜ் வைத்து, ஜாவா சர்வெல்ட்டில் ஏதாவது கோடிங் எழுதினால் அதுவொரு பிராஜெக்ட்.
‘இந்த ரேடியோ பட்டனை செலக்ட் பண்ணிட்டுச் சப்மிட் பண்ணினா, சர்வலெட் இன்வோக் ஆகும் ஸார்… Fibonacci series எல்லாம் அப்படியே டிஸ்ப்ளே ஆகும் ஸார்….’
பிராஜெக்ட் கைடு நிமிர்ந்து பார்த்து, சொன்ன வார்த்தை ஒரு லட்சம் அணு குண்டுவுக்குச் சமம்.
‘சரி, இதை வெச்சு என்ன பண்றது?’
*
பிராஜெக்ட் என்பது ஒரு செயல் முறை.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
ஒன்றரை வரியில் திருவள்ளுவர் சொல்லி முடித்துவிட்டார். இதனை விளக்குவதற்கு ஓராயிரம் பக்கங்கள் தேவைப்படலாம். பிராஜெக்ட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பொருளை உருவாக்குவதோ, அல்லது ஒரு பொருள் உருவாக்குவதற்கான உதவிகளைச் செய்வதோ அல்லது தலைபோகும் பிரச்னைக்கு ஒரு முடிவை தேடித்தருவதேயாகும். புதிதாக ஒரு கார் தயார் செய்வது ஒரு பிராஜெக்ட்தான். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காருக்குப் பெயிண்ட் அடிக்கும் பணியைச் செய்வதும் ஒரு பிராஜெக்ட்தான். விபத்துக்குள்ளான காரை, மீட்டெடுத்து இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி என்கிற பிரச்னைக்கு ஏஸி ரூமில் உட்கார்ந்து வழிமுறை கண்டறிவது கூட ஒரு பிராஜெக்ட்தான். ஆக, பிராஜெக்ட் என்பது வரையறை செய்யப்பட்ட இலக்கை எட்டுவதற்கான ஒரு செயல்முறை. எப்போது ஆரம்பிப்பது, எப்போது முடிப்பது என்கிற சரியான திட்ட வரையறையை அடங்கியிருக்கவேண்டும். அதைச் செய்யப்போவது திருவாளர் பிராஜெக்ட் மேனேஜர்!
பிராஜெக்ட் vs புரோகிராம் இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கிவிட்டு, மேலே போவதுதான் சம்பிரதாயம். எந்தவொரு பிராஜெக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய கட்டுரையிலும், புத்தகங்களிலும் தவறாமல் இடம்பெறும் விஷயம். நாமும் அதை விட்டுவைக்காமல் தொட்டுக்கொள்வோம். பிராஜெக்ட் என்றாலே தற்காலிக செயல்முறைதான். குறிப்பிட்ட நாளில் ஆரம்பித்துக் குறிப்பிட்ட நாளுக்குள் இலக்கை எட்டுவது. புரொகிராம் என்பது தினந்தோறும் நடைமுறையில் உள்ள செயல்முறை. இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது அவசியம். பிராஜெக்ட் என்பது உங்கள் ப்ளாட்டிற்குப் பெயிண்ட் அடிப்பது; புரோகிராம் என்பது உங்கள் அபார்ட்மெண்டிற்குப் பெயிண்ட் அடிக்கும் திட்டம்.
ஒரு பிராஜெக்டை எப்போது ஆரம்பிக்கவேண்டும்? அதற்கான திட்டமிடுவதிலேயே பிராஜெக்ட் ஆரம்பமாகிவிடுகிறதா என்று கேட்டால் ஆம், அப்போதே ஆரம்பமாகிவிடுகிறது. இலக்கை எட்டுவதற்காக ஒரு சின்னப் பேப்பரை எடுத்து, என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துக்கொள்ள ஆரம்பிக்கும் நொடிதான் பிராஜெக்ட்டின் ஆரம்பம். செய்ய வேண்டியவற்றைச் சின்னச் சின்னப் பணிகளாகத் திட்டமிட்டு, அதற்கேற்றபடி செயல்பட ஆரம்பிப்பதற்கே சில காலமாகும். அதுவொரு நீண்ட நெடிய பயணம். இந்தப் பயணத்தில் கடைசிவரை உடனிருக்க வேண்டியவர்தான் பிராஜெக்ட் மேனேஜர். சிலர் வருவார், சிலர் போவார். ஆனால் பிராஜெக்ட் மேனேஜர் மட்டுமே கடைசிவரை இருந்தாகவேண்டும். வெற்றியோ, தோல்வியோ கடைசியில் உருளப்போவது இவரது தலைதான்.
கோடிக்கணக்கான பணம் புரளும் ஒரு பிராஜெக்ட், ஒரு தனிநபரை சார்ந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். ஒரு பிராஜெக்டின் தலையெழுத்து, மேனேஜரால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை, அவரது பாஸ், இவரைப் பாஸ் ஆக ஏற்றுக்கொண்ட கடைக்கோடி ஊழியன் என எல்லோராலும் நிர்ணயிக்கப்படுகிறது. பிராஜெக்டுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர்களால் கூடப் பிராஜெக்ட் பெரிய டேமேஜ் ஆகக்கூடும். ஒரு நல்ல பிராஜெக்ட் மேனேஜரின் வேலை என்பது சம்பந்தமில்லாதவர்கள் என்று நம்பப்படுபவர்களைப் பிராஜெக்டுடன் சம்பந்தப்படுத்திக்கொள்வதுதான். அதெப்படி?
ஸ்டேக் ஹோல்டர் மேனேஜ்மெண்ட்!
சந்துரு இதில்தான் அவ்வப்போது சறுக்கி விழுவான். சொல்ல வேண்டியதை யாரிடமும சொல்ல மாட்டான். சொல்லக்கூடாததை எல்லோரிடமும் சொல்லிவிட்டு வழிந்து நிற்பான். பிராஜெக்ட் என்பதை ஸடேக் ஹோல்டரை மையப்படுத்திப் புரிந்துகொள்ளலாம். ஒரு பிராஜெக்டின் ஸ்டேக் ஹோல்டருக்கு என்ன வேண்டுமோ, என்ன எதிர்பார்ப்போ அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை ஒரு பிராஜெக்ட் பிளான் கொண்டிருக்கவேண்டும். அவ்வளவுதான். இதைச் செய்து முடித்தாலேவெற்றிக்கு கியாரண்டி!. அதாவது ஸ்டேக் ஹோல்டர் என்பது கிளையண்ட், பாஸ், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த சமூகம். எனவே ப்ராஜெக்ட் அல்லது ப்ராஜெக்டின் குறிக்கோள்/பலன் யாரையெல்லாம் பாதிக்கிறதோ, யாரெல்லாம் ப்ராஜெக்டை, ப்ராஜெக்டின் குறிக்கோளை/பலனைப் பாதிக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே ஸ்டேக் ஹோல்டர்கள் தான். அவர்கள் எனில் தனி மனிதர், ஒரு குழு, ஒரு நிறுவனம் எல்லாமும் அடங்கும்.
இவர்களையெல்லாம் சமாளித்துக்கொண்டு ஜாண் ஏறினால் முழம் சறுக்கும். சிலர் கைதட்டி உற்சாகப்படுத்துவார்கள். இன்னும் சிலர் காலை பிடித்து இழுத்து கவிழ்த்து விடுவார்கள். இவர்களையெல்லாம் சமாளித்துக்கொண்டு முன்னேற வேண்டும்.வேறு வழியில்லை, பிராஜெக்ட்டை செய்து முடிக்க வேண்டுமானால் தடைகளைத் தாண்டி, மாலைகளில் மயங்கிவிடாமல் முன்னேறி, நகர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
சரி, ஸ்டேக் ஹோல்டர்களை எப்படிச் சமாளிப்பது? முதலில் யாரெல்லாம் ஸ்டேக் ஹோல்டர்கள் என்று தெரிந்தால்தானே சமாளிப்பதற்கென ஒரு திட்டத்தைத் தட்டி வைக்கலாம். அந்த லிஸ்ட் தெரியாமல் என்ன செய்வது? ஆக, ஒரு பிராஜெக்டடின்ஸ்டேக் ஹோல்டர்கள் யார் என்று கண்டுபிடித்து, பட்டியலிடுவதே ஒரு பிராஜெக்ட்தான். ஆக, ஒரு பிராஜெக்டுக்குள் இன்னொரு குட்டி பிராஜெக்ட்.
பிராஜெக்ட்டின் இலக்கான தீர்வை யார் பாதிக்கக்கூடும் என்று யோசித்தாக வேண்டும். தனிநபர், குழுக்கள், நிறுவனம் எல்லாவற்றையும் லிஸ்டடில் சேர்த்தாகவேண்டும். பிராஜெக்ட் நிறைவேறும் பட்சத்தில் யாருக்குச் சாதமாகும், யாருக்குபாதகமாகும் என்பதைக் குறித்துக் கொள்ளவேண்டும். உதாரணத்திற்குக் கிண்டி ரயில்வே ஸ்டேஷன் வாசலில் ஒரு பொரி உருண்டை கடை ஆரம்பித்தால் அது யாருக்குச் சாதகமாக இருக்கும், யாரெல்லாம் கடைக்கு வாங்க வருவார்கள், வரப்போகும்நபர்களின் எண்ணிக்கை, அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மை, நமக்குக் கிடைக்கப்போகும் நன்மை என்கிற பாஸிடிவ் அப்ரோச் மிகவும் முக்கியம். டாஸ்மாக் பக்கத்தில் இருக்கும் கடையில் பொரி உருண்டையோடு சிப்ஸ் பாக்கெட்டும்வைக்கலாம் என்று அட்டகாசமான ஐடியா தருவார்கள். சின்ன ஐடியாதான், ஆனால் உங்களைக் கோடீஸ்வரராக்க இவைதான் உதவும்.
அதே நேரத்தில் சண்டைக்கோழிகளைக் கண்டுகொள்வதும் முக்கியம். யாரெல்லாம் கடைக்கு வரமாட்டார்கள், யாரெல்லாம் கடைக்கு வந்து பிரச்னை செய்வார்கள், கடை ஆரம்பிக்கப்பட்டடால் யாருக்குப் பாதமாக இருக்கும் என்கிற நெகடிவ்அப்ரோச் அவசியம். இவர்கள் நிச்சயமாகப் பிரச்னை செய்வார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால், பிடிச்சு உள்ளே போடு! அவர்களும் நமது பிராஜெக்டின் அங்கத்தினர்களே… அவர்களும் நம்முடைய ஸ்டேக் ஹோல்டர்கள்தான். அவர்கள்சொல்வதையும் நாம் கேட்டாகவேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் சொல்லவருவதைக் குறித்துக்கொள்ளவாவது வேண்டும் (point to be noted)
அந்தாளு பிரச்னை பண்ணுவான்பா.. அவன் கிட்ட ஏன் இதையெல்லாம் சொல்லிட்டு… கடைசியா பார்த்துக்கலாம். இப்பவே சொன்னா, நம்மளை ஒரு வேலை செய்ய விடமாட்டான்.. அவனுக்குப் பதில் சொல்லியே பிராணணை போயிடும்..
உண்மைதான். சொல்லாவிட்டாலும் நம் பிராணணை போய்விடும். பிரச்னையை என்றாவது ஒரு நாள் சமாளித்தாக வேண்டும். அதை இன்றே, இப்போழுதே, இந்த நொடியே சமாளிக்கலாம்…
கோயிஞ்சாமி, சந்துருவை விடப் பெரிய தவறைச் செய்தான். சொல்ல வேண்டியவர்களுக்குச் சொல்லாமல்… பிராஜெக்ட் எக்ஸிகியூஷன் ஆரம்பமானது. திரிசூலத்தில் இருந்து கிளம்பி, திருவண்ணாமலை வழியாக ஜவ்வாது மலைக்குப் போகும்போது செஞ்சியில் சற்றுநேரம் நின்றபோது அவனுக்குப் புரிந்துவிட்டது.
சூப்பர். அருமையான தொடக்கம். தொடர்ந்து முழுமையாக எழுதுங்கள்.
ப்ராஸஸ் குரூப், க்னாலேஜ் ஏரியாஸ் எல்லாவற்றையும் எழுதுங்க. படித்துக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.