கவிதைகள்

கரையான் தீண்டாத நினைவுகள் . . . !
சிகரெட் அட்டைகள் தான் என் அம்மாவின் கிரடிட் கார்டு…!

Photo Courtesy: V. S. Anandha Krishna
Photo Courtesy: V. S. Anandha Krishna

கிழிந்த சீட்டும், வளைந்த ஹாண்டுபேரும் கொண்ட ஓட்டை சைக்கிள் தான்
என் அப்பாவின் ஜெட் வாகனம்!
அதிகமாக இல்லை,
வாரத்திற்கு ஏழு நாட்கள் மட்டும் காலை டிபனாக பழையசோறு!
மெல்லிய புன்னகை கூட மெலிந்து காணப்பட்டாலும்,
மெட்ரிகுலேஷன் பள்ளியில்
என்னை படிக்க வைக்கவேண்டுமென்பது அப்பாவின் ஆசை!
சீருடை சுடிதாரில் பின்னப்பட்டிருந்த நூல்களெல்லாம்,
ஒன்றிற்கு ஒன்று விவாகரத்து செய்து பிரிந்துபோனதால்,
பாதிக்கப்பட்டிருந்தது எந்தன் மானம்!
வயதாகி முதுகு வளைந்திருந்தாலும்,
என் மானத்தை காப்பதில்
மும்முரமாய் ஈடுபட்டிருந்தது துருபிடித்த ஊக்குகள்!
தலைக்கு எண்ணெய் வைக்க தலையை தான் அடமானம் வைக்கவேண்டுமென்பதால்,
வீட்டு வாசலில் சொட்டிக்கொண்டிருந்த கார்பரேஷன் தண்ணீர் ,
எண்ணெய்க்கு மாற்றுவழி ஆனது…!
சூ போடவில்லையென மாஸ்டர் மைதானத்தில் ஓடவிட்டபோது,
இழுத்து வைத்து தைத்திருந்த செருப்பும் பிய்ந்து இல்லாமல் போனது…!
சக மாணவர்கள் உயரமாக வளர காம்பிலான் குடிக்கையில்,
நான் வளர்ந்துவிட்டால் புது சீருடை வாங்க
பெற்றோர்கள் சிரமப்படுவார்களே என
வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது என் குழந்தை மனசு…!
வறுமை கைகொட்டி சிரித்துக்கொண்டிருந்தாலும்,
பாசம் அமைதியாய் பந்தி பறிமாரிக்கொண்டுதான் இருந்தது எங்கள் வீட்டில்…!
கரையான் தீண்டாத என் பாலிய வயது நினைவுப் புத்தகங்களை,
மனம் புரட்டிக்கொண்டிருக்கின்றது…
பள்ளியிலிருந்து பேரனை அழைத்து வர,
என் மகன் கார் கொண்டு சென்றிருக்கையில்….!