‘பதின்வயதுகளில் அவரது எழுத்துகளைப் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அவர் என்னோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். இனியும் உரையாடுவார். மரணத்தின் மூலம் நிச்சயமாக எங்கள் உரையாடல் தடைபடாது’.
ஜெயகாந்தனின் மரணச்செய்தி கிடைத்த நிமிடத்தில் என் மனதில் தோன்றியது இதுதான். செய்தி கிடைத்த அரைமணிநேரத்தில் நானும், நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜேகே இல்லத்தில் இருந்தோம். உள்ளே சென்று கண்ணாடிப் பெட்டிக்குள் கண் மூடி படுத்திருந்தவரை சில நிமிடங்கள் பார்த்து விட்டு வெளியே வந்து நின்று கொண்டோம். மனநல மருத்துவர் ருத்ரன், கவிஞர் இளையபாரதி உட்பட ஒரு சிலரே அங்கிருந்தனர். ஜெயகாந்தனை ‘அப்பா’ என்றழைக்கும் நண்பர் அன்பு அவர்களில் ஒருவர். ஒன்றிரண்டு ஊடகத் தோழர்கள் வந்தனர். ராமகிருஷ்ணனிடம் பேசச் சொல்லி மைக்கை எடுக்க முனைந்த போது ‘வேண்டாம்’ என்று மறுத்தார், ராமகிருஷ்ணன்.
‘ஏன் ராமகிருஷ்ணன்? பேச வேண்டியதுதானே! ஜே.கேயப் பத்திப் பேசறதுக்கு எவ்வளவோ இருக்கே?’
‘இல்லீங்க. எங்கெ வச்சு பேசறதுன்னு இருக்குல்ல! இந்த இடத்துல அவர் பேசித்தானே நாம கேட்டிருக்கோம்! இன்னிக்கு அவர் போயிட்டாருன்ன உடனே நாம பேசலாமா? வேண்டாம்’ என்றார்.
சில நிமிடங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். நாகூர் ஹனீஃபாவின் உடலுக்கு மரியாதை செய்து விட்டு வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஜே.கேயின் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தவரை நோக்கி, தயாராக நின்ற மைக்குகள் நீட்டப்பட்டன. மங்கிய குரலில் சம்பிரதாயமான சில வார்த்தைகள் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.
‘நெக்ஸ்ட் யார் வருவாங்கன்னு தெரியலியே! அதுக்குள்ள இந்த பைட்ஸை அனுப்பிடலாம்’.
‘காலைல ஹெவி ஒர்க் இருக்கு. நெறய கவர் பண்ணனும்.’
‘என்னாலல்லாம் ஃபுல் நைட் ஸ்பென்ட் பண்ண முடியாதுடா. சொன்னேன்ல, நாளைக்கு என்ன ப்ரோக்ராம்னு!’
‘மச்சான்! ஒரு டீ அடிச்சுட்டு வந்திரலாமா?’
ஒரு ஆட்டோவில் வந்திறங்கிய ஒரு மூதாட்டியை கையைப் பிடித்து அழைத்து வந்தனர். ஆட்டோவிலிருந்து இறங்கியதிலிருந்தே ‘காந்தா காந்தா! இனிமெ ஒன்ன நான் எங்கெ பாப்பேன்’ என்று கதறி அழுதபடியே வீட்டுக்குள்ளே சென்ற அந்த அம்மாள், ஜெயகாந்தனின் சகோதரியாக இருக்கலாம். உள்ளே சென்ற அந்தப் பெண்மணியின் அழுகைக் குரல், வெளியே இருந்த அனைவரையும் கலங்கடித்தது.
நள்ளிரவில் ஜே.கே வீட்டு வாசலில் நின்றபடியே பேசிக்கொண்டிருந்த என்னையும், ராமகிருஷ்ணனையும் பார்த்து ஜே.கேயின் இளையமகள் தீபா, ‘எவ்ளோ நேரம் ஸார் நின்னுக்கிட்டு இருப்பீங்க? இந்தாங்க, முதல்ல டீ சாப்பிடுங்க’ என்று நாற்காலிகளை எடுத்துப் போட்டார். நான் ‘தவறுகள் குற்றங்கள் அல்ல’ பற்றியும், ராமகிருஷ்ணன் ‘எங்கோ, எப்போதோ, யாருக்காகவோ’ பற்றியும் பேசிப் பேசி நள்ளிரவைக் கழித்தோம். இளையபாரதி, அவருக்கும், ஜெயகாந்தனுக்குமான உறவைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தனது அபிமானி ஒருவருக்கு தன் தலைமையில் திருமணம் செய்து வைத்து, மணமக்களை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார வைத்து ஜெயகாந்தனே அந்த சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டி வந்தது உட்பட இன்னும் பல சம்பவங்களை நினைவு கூர்ந்தார், இளையபாரதி.
‘வீட்டுக்குப் போயிட்டு சட்டையை மாத்திட்டு வந்திரலாம்’.
கிளம்பும் முன் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ஜே.கே உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் சொல்லாமல் சென்று வந்து விடலாம் என்றுதான் தோன்றியது.
காலையில் சென்றபோது எதிர்பார்த்த மாதிரியே ஜெயகாந்தன் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைய முடியவில்லை. வாசலை மறைத்தபடி மைக்குகள், கேமராக்கள். அரசியல் கட்சித்தலைவர்கள் அணிவகுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், ரங்கராஜன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்(அதுதானே?) தலைவர் ஜி.கே.வாசன், பீட்டர் அல்ஃபோன்ஸ், திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பலர் வந்தனர். ஜெயகாந்தனை வாழ்நாளெல்லாம் திட்டித் தீர்த்தவர்கள் உட்பட, அதுவரை பார்த்தறியாத பல முகங்களைப் பார்க்க முடிந்தது. முதுபெரும் எழுத்தாளர் கோவி மணிசேகரன் வந்து கதறி அழுதார். கவிஞர் நா. காமராசன் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டார். கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, பழநிபாரதி வந்தனர். நேருக்கு நேராக முதன்முறையாக கவிஞர் போகனைப் பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நானாகப் பேசியிருக்கலாம். ஆனால் அந்த இடம் முதல் சந்திப்புக்கான இடமாகத் தோன்றவில்லை. தவிர, பார்த்த மாத்திரத்தில் ஜெயகாந்தனை மறந்து விட்டு ஜெயமோகனைத் திட்டுகிற அவரது அன்றாடப் பணியைச் செய்து விட்டால் எப்படி சமாளிப்பது என்கிற யோசனையும் அவரிடம் பேசவிடாமல் தடுத்தது. திரைப்பட இயக்குனர்கள் லிங்குசாமியும், சீனு ராமசாமியும் வந்தனர். சீனு கூட்டத்துக்குள் என்னைப் பார்த்து, ‘அண்ணே! நீங்களும் கூட வாங்க’ என்று இழுத்துச் சென்றான். கோவையிலிருந்து சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா வந்திருந்தார். ‘பெசன்ட் நகர்ல தகன ஏற்பாடுகள கவிஞர் செஞ்சுக்கிட்டிருக்காரு’ என்றார். சொல்கிறவர் மரபின் மைந்தன் என்பதால் அவர் சொன்ன ‘கவிஞர்’ ‘கவிப்பேரரசு வைரமுத்து’ என்று புரிந்து கொண்டேன். ஜெயகாந்தனின் பதிப்பகத்தார் விஜயா பதிப்பகம் வேலாயுதம், கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் மற்றும் காந்தி கண்ணதாசன் போன்றோர் வந்திருந்தனர். தி ஹிந்துவில் ஜெயகாந்தனுடனான தனது அனுபவங்கள் குறித்து கட்டுரைத் தொடர் எழுதி வருகிற பி.ச.குப்புசாமி ஐயா அதிகாலையிலேயே திருப்பத்தூரிலிருந்து வந்திருந்தார். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் முகத்தில் கலக்கமில்லை. ஜே.கேயை நல்ல படியாக அனுப்பி வைக்க வேண்டுமே என்கிற கவலையும், பொறுப்பையும் மட்டுமே அவரிடம் பார்க்க முடிந்தது. குப்புசாமி ஐயாவிடம் மட்டுமல்ல. ஜே.கேயின் நெருக்கமான நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த கே.எஸ், மணி, கணையாழி இதழின் ஆசிரியர் மா.ராஜேந்திரன் போன்றோரிடமும் இந்த உணர்ச்சிதான் தென்பட்டது. ஜே.கேயின் தீவிர அபிமானியான கலை இயக்குனர் ஜே.கே தன் குடும்பத்துடன் வந்திருந்தார்.
திடீரென்று சஃபாரி உடையணிந்த ஒரு சிலர் வந்து கையில் இஞ்ச் டேப்புடன் ஜே.கேயின் வீட்டுக்குள் செல்லும் நடைபாதையின் நீளம், அகலத்தை அளந்தனர். சிறிது நேரத்தில், மரத்தினாலான தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. தனது மகள் கவிஞர் கனிமொழியுடன், கலைஞர் கருணாநிதி வந்தார். ஜெயகாந்தனின் உடலருகே கலங்கிய முகத்துடன் சிறிது நேரம் இருந்து விட்டுக் கிளம்பிச் சென்றார்.
‘இந்த மனிதரை நமக்குப் பிடிக்கலாம். பிடிக்காம போகலாம். ஆனா, ஆயிரந்தான் சொல்லுங்க. இந்த மாதிரியான அடிப்படையான மரியாதைகள்ல இந்தாள அடிச்சுக்க முடியாதுங்க’.
பின்னால் அமர்ந்திருந்த யாரோ சொல்வது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அந்தக் குரலுக்கான முகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நொடிகளில் அந்தக் குரல் என்னுடையது போலத் தோன்றியது.
திரைப்பட நடிகர்களில் நான் பார்த்தவரைக்கும் நாசர், பிறகு சிவகுமார், அப்புறம் கமலஹாசன் போன்றோர் வந்தனர். சிவகுமார் அஞ்சலி செலுத்த வந்த போது, ‘நெறய ஃபுட்டேஜ் குடுப்பாருப்பா. நல்ல மனுஷன்’ ஊடகத் தோழர்கள் மத்தியில் அத்தனை திருப்தி.
ஜெயகாந்தனின் வீடு அமைந்திருக்கும் தெரு ஓரங்களில், சுவர்களில் பல சிறுவர்கள், இளைஞர்கள்.
‘ரஜினி வருவாராடா?’
‘ஏன்டா? கமல் வந்தா, ஒடன்னே ரஜினியும் ஒனக்கு?’
‘விஜய் வருவாருன்னு சுந்தர் சொன்னான் மச்சான்’.
‘விஜய் சேதுபதி வந்தா ஃபோட்டோ எடுக்கலான்டா’.
‘டேய்! இவனப் பார்றா. அமலா பால் கூட ஃபோட்டோ எடுக்கணுமாம்’.
தொடர்ந்த வேடிக்கைப் பேச்சுகள், சிரிப்பு.
ஊடகத்தில் இருக்கும் இளைஞர்கள் சிலரே இந்த அளவில்தான் இருக்கிறார்கள். ‘இவர் யார் ஸார்? இவர் யார் ஸார்?’ என்று வரிசையாக ஒவ்வொருவரையாகக் காட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் ஊடக இளைஞரிடம், ‘பிரதர்! உங்களுக்கு ஜெயகாந்தன் யாருன்னு தெரியுமா?’ என்று கேட்டேன். ‘ஸார். ஃபிராங்கா சொல்றேன்.ரைட்டர்னு தெரியும். அதுக்கு மேல எதுவும் தெரியாது’ என்றார்.
திரைப்பட நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு, வழக்கறிஞர் சுமதி, எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, இரண்டு தலைமுறையாக ஜெயகாந்தனுடன் உறவாடி வரும் படத்தொகுப்பாளர் பி.லெனின், எழுத்தாளர் திருமதி சிவகாமி, கவிஞர் இளம்பிறை போன்றோரும் வந்து ஜே.கேயின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
நண்பர் ஜெயமோகனால் வர இயலவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். முதல் நாள் இரவு எனக்கு செய்தி கிடைத்த உடனேயே அவருக்கு தகவல் சொல்லியிருந்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் யாராவது வந்து மரியாதை செய்தார்களா என்று தெரியவில்லை. பரவலாக அறியப்படாத எத்தனையோ எழுத்தாளர்களைத் தேடிப் பிடித்து கௌரவித்து விருதளிப்பதைக் கடமையாகச் செய்கிற அவர்கள், ‘ஆசான்களின் ஆசான்’ ஜெயகாந்தனுக்கு மரியாதை செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
வெற்றிமாறன் ஃபோன் பண்ணினான்.
‘அண்ணே! இப்பதாண்ணே எனக்குத் தெரியும். அங்கெதான் இருக்கீங்களா? கிளம்பி வரட்டுமா?’ என்றான்.
‘3 மணிக்கு எடுப்பாங்க. அதுக்குள்ள வா’ என்றேன்.
ஆங்கில இலக்கியம் படித்த வெற்றிமாறனுக்கு ஜெயகாந்தன் மேல் பெரிய மரியாதை வரக் காரணமாக இருந்தவர், அவனது தாயார். கூடவே ஜே.கேயின் தீவிர வாசகரும், நண்பருமான வாத்தியார் பாலுமகேந்திரா. தான் காலமாவதற்கு சில தினங்களுக்கு முன், ‘ஜே.கேயைப் பாக்கணும் போல இருக்கு. என்னைக் கூட்டிட்டுப் போயேன்’ என்று கேட்டிருந்தார். அவர் கேட்டு என்னால் செய்ய முடியாமல் போனதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தேன். இப்போது ஜே.கேயே வாத்தியாரைப் பார்க்கக் கிளம்பிச் சென்று விட்டார்.
தனது இறுதி யாத்திரைக்கு ஜே.கே கிளம்பியபோது, வாசலுக்கு அவர் மனைவியும், கௌசல்யா மாமியும் அழைத்து வரப்பட்டனர். மாமியின் முகத்தில் உணர்ச்சியில்லை. ‘பத்திரமா போயிட்டு வாங்க, ஜே.கே’ என்று சொல்வது போல அமைந்திருந்தது அவரது முகம்.
பெசன்ட் நகர் மின்மயானக்கட்டிடத்தின் வாசலிலேயே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செந்தில்நாதன் உட்பட அதன் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். ஜே.கேயின் நெருங்கிய நண்பரான தேவபாரதியை இரண்டு பேராகச் சேர்ந்து பிடித்தபடி அழைத்து வந்தார்கள். மின்மயானத்துக்கு ஜே.கேயின் மகள்கள் இருவரும் வந்தனர். கவிஞர் வைரமுத்து அங்கே ஏற்கனவே வந்துக் காத்திருந்தார். ஜே.கே யின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு ஓரமாகக் கைகட்டி நின்று கொண்டார். வழக்கறிஞர் அருள்மொழி, பவா செல்லத்துரை, ஷைலஜா, பாரதி கிருஷ்ணகுமார் போன்றோரும் வந்து சேர்ந்தனர். ரஷ்யன் கான்ஸலேட்டிலிருந்து சூட் அணிந்த ஒருவரும், ஒரு பெண்மணியும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். மின் தகனத்துக்கு ஜே.கே தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் உரத்த குரலில்
‘வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே’
என்று சிவபுராணம் பாடிக் கொண்டிருந்தார்.
எல்லா சடங்குகளையும் படம்பிடித்துக் கொண்டிருந்த கேமராக்கள் மின் தகனத்துக்குச் செல்ல இருக்கும் கடைசி நிமிடத்தையும் சுற்றி நின்று பதிவு செய்து கொண்டிருந்தன. மின் மேடைக்கருகே ஒரு சிலர் கடைசியாக ஜே.கேயின் முகத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் ஏறினர்.
‘நாமளும் போகலாமா?’ என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டேன்.
‘வேண்டாம். நமக்குத் தாங்காது’ என்றார் ராமகிருஷ்ணன்.
‘சரிதான். வாத்தியார் விஷயத்துல இதுதான் ஆச்சு’.
அங்கேயே நின்று கொண்டோம். பி.ச. குப்புசாமி ஐயாவை லண்டனிலிருந்து ஜே.கேயின் அபிமானியும், ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் எழுதிய கதைகளை அழகாகத் தொகுத்து சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டவருமான டாக்டர் ராம் கைபேசியில் அழைத்தார். ‘வணக்கம். . . ஆமா . . . ஜே.கே கிளம்பிட்டார். . . இப்பதான் புறப்பட்டு போனார்’ என்றார், குப்புசாமி ஐயா. அத்தனை நேரம் ஜே.கேயின் மரணத்தை எளிதாக எடுத்துக் கொண்டு உறுதியாக இருந்த என்னை பி.ச.குப்புசாமி ஐயாவின் இந்த வார்த்தைகள் அசைத்து விட்டன. உள்ளே பெரும் கூக்குரல்கள் கிளம்பின. ஒரு வயதான இஸ்லாமியர் கண்களைத் துடைத்துக் கொண்டு கதறி அழுதபடியே வெளியே வந்தார். எனக்கு கண்கள் கலங்கத் துவங்கின. ‘ராமகிருஷ்ணன். இனி நம்மால தாக்குப் பிடிக்க முடியாது. வாங்க வெளியே போயிருவோம்’ என்று சொல்லியபடி, சட்டென்று வெளியே வந்து விட்டேன்.
பவா செல்லத்துரையின் தலைமையில் அங்கேயே ஓர் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே பேசுவதற்கு மறுத்து வந்த ராமகிருஷ்ணன் அப்போதும் பேச மறுத்தார். பாரதி கிருஷ்ணகுமாரும் மறுத்தார். ‘கெளம்பலாம்’ என்றார், ராமகிருஷ்ணன். நாங்கள் கிளம்ப இருக்கையில், பெயரறியா ஒரு தோழர் வந்து, ‘அரசாங்கம் என்ன செய்யுது தோழர்? ஞானபீடம், பத்மபூஷன் வாங்கினவரு. மத்த மொழிக்காரங்கக்கிட்ட நமக்கான மரியாதைய ஏற்படுத்திக் குடுத்தவரு. பாருங்க. இங்கே நாம எத்தனை பேரு இருக்கோம்! நெஞ்சு கொதிக்குது தோழர்’ என்றார்.
யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அவராகப் பேசிக் கொண்டிருந்தார்.
தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊர்க்காரனான தம்பி மாரி செல்வராஜ் அருகில் வந்தான். ‘என்ன ஸார்! கூட்டமே இல்ல?’ என்றான். தோழரின் ஆதங்கத்தை ஒத்திருந்தது மாரியின் குரல்.
மாரி செல்வராஜ் கேட்டது வாஸ்தவம்தான். அஞ்சலிக் கூட்டத்தில் இருப்பவர்களையும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களையும் சேர்த்து மொத்தமாக அந்த இடத்தில் நூறு பேர் இருந்திருப்பார்கள்.
‘இதென்ன கேரளாவாடே! தமிள்நாடுல்லா!’ என்றேன்.
இப்படி விரிவாக ஒரு வருகைப் பதிவேடு போட்டமைக்கு நன்றி. அதற்குள் ஒரு வரி சாகித்ய அகதாமி சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டதையும் சொல்லியிருக்கலாம். விளம்பரத்திற்காக அல்ல. ஒரு பதிவுக்காக. இதற்காக நான் உங்களைக் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் என் மகன் பெயரும் சுகன். அழைப்பது சுகா!
கூட்டம் கூடி என்ன ப்ர்யோஜனம் .JK எந்திச்சு வர முடியுமா. அவருக்கான இறுதி மரியாதையை மரியாதையான நீங்கள் செஞ்ச்சதே போதும்.
படிக்கும்போது ஜெயகாந்தனின் இறுதி யாத்திரையில் கலந்துகொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது – கண்ணன் ஏவிஎம்
If I had the powers I would have given him a gun salute! What an year! First it was Mandolin Srinivas! Now it is Jayakanthan! May his soul rest in peace!
I post here what I wrote in Thinnai on the same subject:
தமிழ் எழுத்தாளனின் வீச்சு (ரேஞ்ச்) குறுகிய வட்டமே. 1 கோடிக்கும் மேலான மக்கட்தொகை கொண்ட சென்னையில் 100 பேர் இலக்கிய உலகைச்சார்ந்த எழுத்தாளருக்குக் கூடினார்கள் என்றால், அவ்வெழுத்தாளருக்கும் மக்களுக்கும் எவ்வளவு தூரம்? அதே சமயம், கண்ணதாசனுக்கு அஞ்சலி செலுத்தும் ஊர்வலத்தில் மக்கள்கூட்டம் அலை மோதியது: காரணம் கண்ணதாசனின் பாடல்கள் குடிசைகளுக்குள்ளெல்லாம் நுழைந்தன. ஓஹோவென்று உயர்த்தித் தூக்கப்படும் ஜெயகாந்தனின் கதைகளைக்கூட ஒரு குறிப்பிட்ட இலக்கிய நுகரும் பூஜ்வாககளே படிக்க முடியும் என்பது நிதர்சனம். இலக்கியத்தின் எல்லை மிக குறுகியது. அதைப்புரிந்து கொண்டு இலக்கியவாதிகளும் அவர்களது பக்த கோடிகளும் மவுனம் காத்து, தங்கள் உலகிலேயே சஞ்சரித்துக்கொண்டு வாழ்ந்து மடிதல் அவர்களுக்கும் அவர் இரசிகர்களுக்கும் நல்லது. கருநாடக சங்கீதமும் இரசிகர்களும் போல. இவர்கள் உலகத்தையே பிடித்துத் தங்களில் காலடிகளில் வைத்துவிட்டதாக நினைத்துக்கொள்ள முடியுமா? இலக்கியத்தால் ஓர் ஏழைக்கு ஒருகவலம் சோறு கிடைக்குமா? உழைத்தால்தானே முடியும்?
உழதுண்டு வாழ்வாரே வாழ்வர்; மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல்வர்.
எனவே ஒரு நூறுபேர் வந்ததே பெரிய விசயம் என்று நிம்மதியடையுங்கள்!