ஈராக்கில் ஜனநாயகம்

Iraq_Democracy_Freedom

எங்கள் கம்பெனியின் பாக்தாத் கிளையை கவனித்துக்கொள்ளும் லூவாயி இப்ரஹீம் என்ற ஓர் ஈராக்கியுடன் காரில் கடந்த மூன்று தினங்களாக அலுவல் வேலையாக பாக்தாத் நகரத்திற்குள் சுற்றவேண்டியிருந்தது. பாக்தாத்தின் போக்குவரத்து என்பது எப்போதும் ட்ராஃபிக் ஜாம்தான் என்பதால், கார் ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது
பேசுவதற்கு நிறையவே நேரமிருந்தது.
எப்படி இருக்கு ஈராக் நிலவரமெல்லாம், இந்த புதிதாய் கிடைத்த ஜனநாயகம் உங்களுக்கு நிச்சயம் நிறைய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்குமே எனக் கேட்டேன். மிக நாகரிகமான வார்த்தைகளில் பொங்கிவிட்டார்.
“ஜனநாயகம் வரும்வரை, அதாவது அமெரிக்கா உள்ளே புகும் முன்னர், ஒரு சில உதிரிக்குழுக்கள் தவிர பலருக்கு ஷியா மற்றும் ஸுன்னி பிரிவினர் எதிரிகள் என்பதே தெரியாது. சதாமின் இரும்புப் பிடியில் ஈராக்கியர்களுக்கு மதப்பிரிவுசண்டை போடக்கூட நேரமில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பிழைத்திருக்கவும், குடும்பத்தைப் பட்டினியின்றி வைத்திருக்கவுமே ஓடிக்கொண்டிருந்தபோது பிரிவினைகளை பற்றி சிந்திக்க நேரமிருக்கவில்லை. ஷியா, ஸுன்னிகள், கிறிஸ்தவர்கள், அசிரியர்கள், துர்க்மான்கள் (துர்க்மெனிஸ்தானில் இருந்து வந்தவர்கள்) இன்னும் சில பிரிவுகள் என எல்லோரும் ஒற்றுமையாய்த்தான் இருந்தோம். நாட்டில் வளமிருந்தும் எங்கள் கைகளில் காசில்லாமல் இருந்ததாலும், அடிப்படைவாதத்தைத்தான் குரான் சொல்லிக்கொடுக்கிறது என்பதை எங்கிருந்தோ புதிதாய் வந்தவர்கள் (எகிப்தியர்கள் மற்றும் ஈரானியர்கள்) எங்கள் சமூகத்தில் புகுத்தாதவரை, ஒருவருக்கொருவர் உதவியாகவும், இறைவனுக்குப் பயந்தவர்களாகவும் இருந்தோம், வழிகாட்ட ஊரில் பெரியவர்களும், நல்லவர்களும் இருந்தார்கள். அவர்களும் யாருக்கும் எந்தப் பிரிவினையையும் போதிக்கவில்லை.
”ஆனால், இன்றைக்கு எந்த ஈராக்கியும் சக ஈராக்கியை நம்பத் தயாராயில்லை. சமூகம் சீரழிவதை, மதச் சண்டையால் ஒருவருக்கொருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் கொன்றுகொள்வதை பார்த்த நல்லவர்களெல்லாம் வெளிநாடுகளில், நாகரிகமான இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.
”இன்றைக்கு ஈராக்கில் இருக்கும் கூட்டத்தில் 99 சதவீதத்தினர் சுயநலமிகள். காசுக்காக நாட்டையும், தன் இனத்தையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்கள், என்னையும் சேர்த்துத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவ்வளவு கொடுமைகளையும் கண்டபின்னரும் ஏதும் செய்ய இயலாமல் பார்த்துக்கொண்டுதானே இருக்க முடிகிறது” என்றார்.
”சரி, சதாம் காலத்தில் எப்படி இருந்தது என்றால், தொழுகையோ, பிரார்த்தனையோ, சர்ச்சிற்கு செல்வதோ, அவரவர்களுக்குப் பிடித்த வகையில் அவரவர் வழியில் போய்க்கொண்டிருந்தனர். இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தனர். கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர். ஒருவருக்கொருவர் வீட்டிற்குச் சென்றுவரும் அளவு நட்பு இருந்தது. கொடுக்கல், வாங்கல் இருந்தது. சில கலப்புத் திருமணங்கள்கூட நடந்திருக்கிறது. எல்லோரும் அவர்களை ஆச்சரியமாக பார்த்தார்களேயன்றி கொல்ல வேண்டும் எனத் துடித்ததில்லை.
”பொழுதுபோக்குக்கென இடங்கள் இருந்தன, மக்கள் பொது இடங்களில் கூடினார்கள். பார்கள், நடன அரங்குகள், நாடக அரங்குகள் இருந்தன. கலையையோ, இசையையோ யாரும் ஹராம் எனச் சொன்னதில்லை. இன்றைக்குப் பாருங்கள், சதாம் ஹுசைன் ஆட்சி போய் இன்றைய ஜனநாயகம் என ஒன்று வருவதற்குள் எங்களின் இரு பிரிவுகளுக்குள்ளேயே அடித்துக்கொண்டு லட்சக்கணக்கில் செத்துக்கொண்டிருக்கிறோம்.”
இதில் ஷியா, ஸுன்னி இருவருக்கும் பொதுவான இலக்கு, கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா, ஸுன்னி அல்லாத எவரும். சதாம் ஆட்சி நீங்கியவுடன் அமெரிக்கர்கள் நுழைந்ததும் அவர்கள் செய்த அநியாயங்களால் வெறுப்பிலிருந்த ஈராக்கியர்கள் அமெரிக்கப் படைகள்மீது காட்ட முடியாத கோபத்தையெல்லாம் கிறிஸ்தவர்கள் மீதுதான் காண்பித்தார்கள். கற்பழிப்புகளும், தனியாக சிக்கினால் கொல்வதும், கூட்டமாகச் சென்று குடும்பத்தோடு அழித்துவிட்டு கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடுவதும் என அராஜகங்கள் நிகழ்ந்தன. இதையெல்லாம் செய்தது முதல்நாள்வரை அருகருகே வாழ்ந்தவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் கிறிஸ்தவர்களைக் குறிவைப்பது குறைந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் முன்னாள் பிரதமர் நூர் அல் மாலிக்கி. அனைத்துத் தரப்பும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதும், அதை வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லாமல் கிறித்தவத் தலைவர்களைச் சென்று சந்திப்பதும், அவர்களை அழைத்துக் குறைகளை கேட்டபடியும் இருந்தார். ஒருங்கிணைந்த ஈராக் என்பதை முன்வைத்தார். மேலும், தேவாலயங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்தார். இன்றும் ஆயுதம் தாங்கிய போலிஸ் பட்டாலியன் எல்லா தேவாலயங்களின் வாசலிலும் நிற்பதைப் பார்க்கலாம். தற்போதைய பிரதமர் ஹைதர் லப்பாதி இன்றுவரை இதுவிஷயமாக ஏதும் செய்ததாக தெரியவில்லை. ஆனால், தேவாலயப் பாதுகாப்பு அப்படியேதான் இருக்கிறது.
கண்டிஷன்ஸ் அப்ளை என்பதுபோல தனக்கேற்ற வகையில் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தார் சதாம் ஹுசைன். ஷியாக்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தார். தீவிர ஸுன்னி இஸ்லாமியரான அவர், நாட்டின் பெரும்பான்மையான ஷியா முஸ்லிம்களை அசிங்கம் பிடித்தவர்கள், இஸ்லாத்தைக் களங்கப்படுத்த வந்தவர்கள் என்பதாகத்தான் கருதினார். அதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் காண்பித்துக்கொண்டிருந்தார். அதன் வெளிப்பாடாக அரபயின் (இமாம் ஹுசைன் இறந்த தினத்திலிருந்து அடுத்து வரும் 40 நாட்கள்) வரும் காலங்களில் அவர்களை (ஷியா பிரிவு இஸ்லாமியர்களை) கெர்பலாவுக்குச் செல்ல ஏகப்பட்ட தடைகளை விதித்தார். சைத்தானை வணங்கச் செல்லும் வழிதவறியவர்கள் என்பது ஷியாக்கள் குறித்த அவரது கருத்து. ’உங்கள் இமாம் ஹுசைனை வணங்குவதைவிட என்னை நீங்கள் வணங்க வேண்டும், அதுவே உங்களுக்கு நல்லது’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவது தவறெனச் சொன்ன ஷியா மதத்தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் கொன்றழித்தார்.
இவ்வளவு கொடுமையிலும் பழைய சர்ச்சுகளையெல்லாம் இன்றுவரை அப்படியேதான் விட்டு வைத்திருக்கிறார்கள் என்றார். வாராவாரம் என்றில்லாமல் அவ்வப்போது விசேஷங்களுக்கு கிறித்துவர்கள் கூடுகிறார்கள், திருமணம் நடத்த சர்ச்சுக்கு வருகிறார்கள், அரசாங்கமும், ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அளிக்கிறது.
இனி ஈராக் அதன் பழைய பெருமையை எப்போது மீட்டெடுக்குமென நினைக்கிறீர்கள் என அந்த ஈராக்கியைக் கேட்டேன், ஒழுங்கான தலைமை அமைந்து, மக்கள் எல்லோரும் முறையான, தரமான கல்வி கற்றால் இப்போதிருந்து மூன்றாம் தலைமுறை அந்தப் பழைய பெருமையை மீட்டெடுக்கும் என நம்புகிறேன் என்றார். இன்னும் இரு தலைமுறைகள் காத்திருக்க வேண்டுமா என்ற எனது ஆச்சரியத்திற்கு, ’இன்றைக்கு இருக்கும் ஈராக்கிய சமூகம் அழுகிப்போன ஒன்று. நியாயம், நேர்மை, சக மனிதனை மதித்தல், உயிரை மதித்தல் என்ற எந்த அடிப்படை மனித குனங்களும் இன்றி மிருகமாக அலைகிறார்கள். எங்கு பார்த்தாலும் காச. பார்த்தீர்கள்தானே, கடந்த இரு நாட்களாக எந்த அலுவலகத்திலாவது ஏதாவது நம்மால் சாதிக்க முடிந்ததா’ எனத் திருப்பிக் கேட்கிறார். (எங்களின் கம்பெனியின் பாலிஸிப்படி லஞ்சம் கொடுக்கக்கூடாது.)
”இன்றைக்கு தாஷ் (ஐ எஸ் ஐ எஸ்) வந்ததும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வது அடியோடு நின்று போயிருக்கிறது எனச் சொல்ல முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட 90 சதவீதம்வரை தீவிரவாதம் குறைந்திருக்கிறது, நம்மைவிட பெரிய பூதம் ஒன்று வந்திருக்கிறது என அரண்டு போயிருக்கின்றனர். இருந்தாலும், இந்தக் கூட்டத்தில் தாஷுக்கு ஆதரவளிக்கும் கூட்டமும் இருக்கிறது என்பது இவர்கள் இஸ்லாத்தை புரிந்துகொண்ட விதத்திற்கும், மனிதத்தன்மை என்பது ஈராக்கில் எவ்வளவு இழிநிலையை அடைந்திருக்கிறது என்பதற்கும் எடுத்துக்காட்டு” என்றார்.
கடந்த ஏப்ரல் 12, 2015ல் எங்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அன்று பாக்தாத் பல்கலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 10 பேர் மரணமடைந்திருந்தனர். அதற்கு அருகில்தான் எங்களுக்கான ஹோட்டல். புறப்படும் அன்று 14ம் தேதி காலையில் யார்முக் என்ற இடத்திலுள்ள அரசு மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 15 பேர் பலி. 30 முதல் 40 பேருக்கு படுகாயம்.
அரசாங்கம் இதில் என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள் எனக்கேட்டால், ’அரசாங்கம் என்பது முழுதாய் செயல்படும்போதுதான் அவர்களால் ஏதும் செய்ய இயலும். 5 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது அரசாங்கம் என ஒன்றிருப்பதை நாங்கள் உணர்கிறோம். மருத்துவம் செய்துகொள்ள வெளிநாட்டுக்குச் செல்ல உதவி கேட்டால் கிடைக்கிறது. ரேஷன் ஓரளவு நேரத்துக்கு வருகிறது. தீவிரவாதத்தையும் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். தாஷை ஈராக்கிய மிலிட்டரி வெல்லும் என நம்பிக்கை வந்திருக்கிறது. இனி அவர்கள் (அரசாங்கம்) மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவோரை அடக்கினாலே பழைய சுமுக நிலை திரும்பலாம் என நம்புகிறேன்’ என்றார். யார் யாரெல்லாம் தூண்டுகிறார்கள் என நினைக்கிறீர்கள் என்ற எனது கேள்விக்கு ’யாரை எனச் சொல்வது? எல்லாம் சுமுகமாகப் போகிறது என நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஒருநாள் மசூதியில் குண்டு வைக்கிறார்கள். பிடிபடுபவன் பெரும்பாலும் ஈராக்கியனாகவே இருப்பதில்லை. பாக்கிஸ்தானிகளும், பெங்காலிகளும்கூட சிக்குகிறார்கள். மதவெறியைக் கணக்கில் அடங்காத தொலைக்காட்சி சேனல்கள் தூண்டுகின்றன, மதத்தைப் பற்றி பேசுகிறோம் என்ற போர்வையில். ஆளுக்கொரு சேனல். என்ன பேசுகிறார்கள் என்பதை யார் கவனிக்கிறார்கள்? இண்டர்நெட்டிலும் தலையை வெட்டி அதன் மீது பயங்கரவாதிகள் ஏறி நிற்பதை பெருமையுடன் பகிர்ந்துகொண்டு, கொடூரமான அந்த தீவிரவாதிக்கு அல்லா துணை நிற்க வேண்டும் என எழுதுகிறார்கள். அதையெல்லாம் கேட்க, கட்டுப்படுத்த இங்கு ஏதுமில்லை. இதையெல்லாம்தான் அரசாங்கம் கவனிக்க வேண்டும். நாங்களெல்லாம் வளர்ந்துவிட்டோம், இனி அடுத்த தலைமுறையையாவது நல்ல கல்வியுடன் நல்ல குடிமக்களாய் மாற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதற்கு பள்ளிக்கூடங்களும், நல்ல கல்வி கற்ற ஆசிரியர்களும் வேண்டும். கிராமங்களில் போய்ப்பாருங்கள், ஒரு வாக்கியம்கூட ஆங்கிலத்தில் பேசத்தெரியாதவர் ஆங்கில ஆசிரியராக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இன்னும் மதக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் வீட்டில் அதைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதற்கு பதிலாக இவர்கள் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கலாம். இன்னும் நிறைய மாற்றங்கள் வேண்டும். மாற்றம் நிச்சயம் வரும் என நம்புகிறேன்’ என்றார்.
அவருடன் இருந்த மூன்று நாட்களும் அராபிய விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. தேர்ந்தெடுத்த உணவகங்களில் உணவு வாங்கிக்கொடுத்து, எனக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுத்து, போக வேண்டிய இடங்களுக்குக் கூடவே வந்திருந்து, விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைப்பதுவரை அனைத்தையும் செய்தார்.
மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மட்டுமே பழக்கமாய் இருந்தவர் இன்றைக்கு நல்ல நண்பராகி இருக்கிறார்.
இத்தனை கொலைகள், கொடூரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அல்லா திடீரென்று ஜனநாயகத்தின் மீது எங்கிருந்து கருணை கொண்டுவிடப் போகிறார் என்ற அவநம்பிக்கை வெளியில் இருந்து பார்க்கும் நமக்கிருந்தாலும், விரைவில் ஈராக் அதன் சிக்கல்களில் இருந்து விடுபட்டு நல்ல ஒரு ஜனநாயக நாடாக மாற அந்த அல்லா அருள் புரியட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.