எண்ணையும் தண்ணீரும்
எண்ணையும், தண்ணீரும் – திரு சுந்தர் வேதாந்தத்தின் அறிவியல் தொடர் (Rousing start) உற்சாகமூட்டும் விதத்தில் அற்புதமாக துவங்கியிருக்கிறது என்றால் நிச்சயமாக மிகையில்லை. விகடன் குழுமத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பாக பெற்ற மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சி என்பது -எழுத்தால் வானம் வசப்படும்- என்கிற சொற்றொடருக்கு ஏற்ப, சொல்லவரும் விபரத்தை சுவைபட சொல்வதற்கான அனுபவத்தை தந்திருக்கிறது.
மைய கடல்களில் எண்ணை தளங்களை பத்திரிகைகளில், படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதில் எவ்வாறெல்லாம் பணிகள் இருக்கும், எப்படிப் பணிபுரிகிறார்கள், வெற்றியினால் கிடைக்கும் மகிழ்ச்சி, தோல்வியின் போது எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்பதெல்லாம் இது போன்று அங்கு பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்தலை படிக்கும் போது நமக்கு நிச்சயம் கிடைக்கும். அறிவியலை தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சொல்வனம் தளம் அற்புதமாகப் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் இந்த தொடர் ஒரு மிகச் சிறந்த அனுபவத்தை வாசகர்களுக்கு தரும் என்றே எண்ணுகிறேன்.
“கச்சா எண்ணெய் எடுப்பது சம்பந்தமான வளர்ந்து மாறிவரும் தொழில் நுட்பங்களையும், அதனால் உலக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் இந்தத்தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதாக உத்தேசம். நிஜமான எண்ணையும் தண்ணீரும் மட்டுமின்றி, ஒன்றோடு ஒன்று சரியாக பொருந்தாத ஆனால் சேர்ந்து எண்ணையும் தண்ணீருமாய் எப்படியாவது செயல்பட வேண்டிய அவசியமுள்ள பல நிறுவனங்கள், நாடுகள் மற்றும் சமூகங்களையும் போகிற வழியில் சந்திப்போம்!”
நிச்சயமாக அத்தகைய சந்திப்புகளைப் படிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறோம். தொடரட்டும்.. வாழ்த்துக்களுடன்
எஸ்.சம்பத்
கட்டுரையாளர், சட்ட மொழிபெயர்ப்பாளர்,
தொழிற்சங்க நிர்வாகி
oOo
2ம் பகுதியில் ஏராளமான தொழில்நுட்ப விபரங்கள், ஆயினும் அது அலுப்புத் தட்டாமல் தொடர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிற எழுத்து நடை, இறுதியில் அடுத்தபகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கும் வண்ணம் ஒரு சிறு முடிச்சுடன் முடித்திருக்கும் பாங்கு அனைத்தும் சிறப்பு, தம்பி சுந்தர் வேதாந்தம். எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய பல தகவல்களுடன் கூடிய சிறப்பான தொடர் – வாழ்த்துக்கள்
எஸ்.சம்பத்,
கட்டுரையாளர், சட்ட மொழிபெயர்ப்பாளர்
மதுரை
oOo
இது நல்ல ஆரம்பம் . அந்த நாட்களில் நீங்கள் பகிர்ந்த சில விஷயங்கள் அப்படியே அச்சில் ஏறியதை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு பெரிய பாராட்டு…
raji.
oOo
மிக அழகான ஆரம்பம். சுந்தரின் இந்த தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கிரீஸ் என்பதற்கு பதில், ‘பிசுக்கு’ என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
சில சின்ன சந்தேகங்கங்கள்:
1. எண்ணை ரிக்கிற்கு 21 நாட்களுக்கு ஒரு முறை பொறியாளர்கள் பயணிக்கிறார்கள் என்று சொல்லியுள்ளீர்கள். அந்த ரிக்கிற்கு தேவையான உணவு மற்றும் பொறியியல் பொருட்களை வாரம் ஒரு முறை கப்பல் மூலம் அனுப்பி வைப்பார்களா? கப்பலிலிருந்து ரிக்கிற்கு எவ்வாறு சாமான்கள் ஏற்றிச் செல்லப்படும்? அல்லது, அனைத்தும் ஹெலிகாப்டர் மூலமே அனுப்புகிறார்களா?
2. அரபிக் கடலில் மான்சூன் காலத்தில் பயங்கர மழை பெய்யுமே. எப்படி இந்த ப்ளாட்ஃபாரம் தாக்கு பிடிக்கிறது? கடல் அலைகளை அதிகம் சமாளிக்க வேண்டியிருக்காது என்று நினைக்கிறேன். கனடாவில் PEI மற்றும் New Brunswick மாநிலங்களையும் இணைக்கும் பாலம் (confederation bridge) கடல் மீது 10 கி.மீ. நீளம் கொண்டது. குளிர் காலத்தில் கடல் நீரும் உறைந்து விடும். மேலே உள்ள பனி கட்டிகளும், அதன் கீழே உள்ள கடல் அலைகளும் பாலத்தை தகர்த்தும் சக்தி கொண்டவை. இந்த இயற்கை பிரச்னையை மிக அழகாக பொறியியல் மூலம் சமாளித்துள்ளார்கள்.
நன்றி
ரவி நடராஜன்
oOo
கட்டுரையைப் படித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு என்னை ஊக்குவிக்கும் வாசக அன்பர்களுக்கு நன்றி.
ரவி சொல்லியிருப்பது போல் கிரீஸ் என்பதற்கு பதில், ‘பிசுக்கு’ என்று எழுதியிருக்கலாம்தான். முன்னொரு கட்டுரையில் Virtual Pipeline Technology என்பதை தமிழில் “மெய்நிகர் குழாய் வழியமைப்பு தொழில்நுட்பம்” என்று நான் எழுதியிருந்ததை பார்த்துவிட்டு பல நண்பர்கள் அடிக்க வந்தார்கள். 🙂 எனவே படிக்கச் சுலபமாக இருக்க வேண்டும் என்று கொஞ்சம் அடக்கி வாசிக்க முயன்றிருக்கிறேன்.
1. ஆமாம், சரக்குக் கப்பல்கள் பிளாட்பார்ம் பராமரிப்புக்குத் தேவையான உபகரணங்கள், சமையல் பொருட்கள் போன்றவற்றை வாராவாரம் வந்து டெலிவரி செய்வது வழக்கம். பிளாட்பார்ம்/ரிக்கில் உள்ள கிரேன் வழியே சாமான்களை தூக்கி எடுத்துக்கொள்வோம்.
2. இந்த பிளாட்பார்ம்களை உருவகிக்கும்போது அவை எங்கே நிறுவப்படப் போகின்றன, எவ்வளவு வேகமான காற்று மழை முதலியவற்றை எத்தனை வருடங்கள் அவை தாங்க வேண்டியிருக்கும், சுனாமி, நிலநடுக்கம் முதலிய விஷயங்களை சந்திக்க வேண்டியிருக்குமா என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வது மிக அவசியம். நான் பணிபுரிந்த வருடங்களில் மான்சூன் மாதங்களில் எக்கச்சக்க மழை பெய்வதை பார்த்திருக்கிறேன். மற்றபடி சூறாவளி போன்ற விஷயங்கள் அரபிக்கடலில் கரையிலிருந்து 100 மைல் உள்ளே அவ்வளவு சக்தி வாய்ந்தவையாக இருந்ததில்லை.
நிறைய மறுவினைகளைப் பார்ப்பது கட்டுரையாளர்களுக்கு பெரிய ஊக்கமருந்து. எனவே எல்லா வாசகர்களையும் அடிக்கடி தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யக்கோருகிறேன்.
– சுந்தர் வேதாந்தம்
oOo
நேரத்தில் – In Time: காலமும் காரல் மார்க்சும்
அஸ்வத்தாமன் சிரஞ்சீவி மட்டுமல்ல, முதுமை அடையாதவன். அப்படியே அலைகிறான் யுக யுகமாக. மார்க்கண்டேயன் சிரஞ்சீவி, நிரந்தர பதின்மன். அனுமனும் முதுமை வராத சிரஞ்சீவி. இப்படிச் சிலர் புராணத்தில் உடலால் முதுமை எய்தாத சிரஞ்சீவிகளே.
நாம் immortality என்பதை சாமானியமாகவே ‘literal’ஆக எடுத்துக்கொள்வதில்லை. எல்லா மதங்களும் வேதாந்தங்களும் immortalityஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், physical immortalityஐ பற்றி அல்ல.
புராணம் என்கிற வாழ்வனுபவத் தொகுப்பு- வரலாற்றை விட மேம்பட்ட இலக்கிய நயமும், ரசனையும் உள்ள எழுத்து முறை- அதை தத்துவத் தேடலோடு சேர்த்துக் குழப்பினால் பின்னது ருசி கெட்டுப் போகும். தெவசப் பத்தியச் சமையலை ஆட்டுப் பிரியாணியோடு ஒப்பிட்டால் எப்படி இருக்கும்? மிளகு சீரா ரசத்தை ஸ்விஸ் சீஸ் ஃபான்ட்யூவோடு ஒப்பிட்டால் எப்படி சரியாக இருக்கும்?
தவிர ராவணன், பஸ்மாசுரன் போன்ற பலரும் இப்படி உடலால் அழிவில்லாத நித்திய இளமையையும் சிரஞ்சீவித்தனத்தையும்தான் நாடிக் கடும் தவம் செய்ததாகப் புராணம் சொல்கிறது. கிட்டவில்லை, அவர்கள் தந்திரத்துக்கு வீழ்ந்தார்கள் என்று எதிர் கட்சி சொல்லும், ஆனால் தெரிந்துதான் வீழ்ந்தனர் என்று சொல்லலாம்.
பாட்டாளிகள் வாழும் ஊர் பெயர் டேய்டன். அந்தப் பெயர் ஏன் அப்படி அமைந்தது என்று சிறிது யோசித்திருந்தால் அதை எளிதில் மறக்க முடியாது.
Day town என்பதின் உரு மலிந்த பெயரா அது என்று நாம் கொஞ்சமாவது யோசிக்கலாம். பகல் முழுதும் உழைக்க நேரும் ஊர், தொழிலுக்கான நகரம்.
தவிர டேய்டன் என்பது ஒஹையோ மானிலத்தில் உள்ள ஊர்தான். நியூ க்ரீன் விச்சும் ஒரு வகையில் குறியீடுதான். புதிது மட்டுமல்லாமல், அது பசுமை கொழிக்கும் ஊர். பசுமை என்பது இங்கு நிரந்தர இளமையோடு மனிதர் இருப்பதைச் சுட்டும்.
”இன் டைம்” கதையும் இந்தியப் புராணிக மரபுக்குப் புதிதில்லை. யயாதி என்கிற மன்னன் சாபத்தால் முதுமை எய்தும் போது தன் மகன் புருவிடமிருந்து இளமையைக் கடன் வாங்கி வாழ்ந்து அனுபவித்து விட்டுப் பின் மரிக்கிறான். விக்கிரமாதித்தனும் சாபத்துக்குப் பரிகாரமாக காடாறு மாதம், நாடாறு மாதமாக வாழ்ந்து தன் ஆயுசையும் ஆட்சியையும் நீட்டித்துக் கொள்கிறான். கொஞ்சம் தேடினால் இப்படிப் பலரின் காலச் சங்கிலியை இளக்கிய கதை கிட்டும்.
யயாதியின் கதையை இந்திய இடது சாரிக் கொலைஞர்கள் பலர் அடிக்கடி கடன் வாங்கி ஏதேதோ எழுதிப் பார்த்திருக்கிறார்கள்.
நம் மரபில் காலத்தைப் பற்றி அழகான அற்புதமான கதைகள் இருக்கின்றன. ஆனால், அங்கும் ஞானம் அடைந்தவர்களே, அமரத்துவம் அடைகிறார்கள், அதில் அமைதியும் காண்கிறார்கள். அஸ்வத்தாமனுக்கு இறுதியில் அவன் சாவின்மை சாபமாகவே முடிகிறது என்று நினைக்கிறேன். பொதுவாக நமக்கு உடல் என்பது களைந்துவிட்டு போக வேண்டிய ஒன்றாகவே சொல்லித்தரப்படுகிறது. புகழ்/ஆன்மா அமரத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
இந்த வகைக் கல்வி, நம்மை இந்த படத்தை அணுகக் கஷ்டப்படுத்துகிறது.
ஹிரண்யகசிபுகூட சாவின்மைக்காக மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டு, தன் சாவைத் தானே ‘define’ செய்துகொண்டுவிட்டான். அதுபோல வில்லனின் விழைவுகளிலிருந்தே ஒரு எதிர்பாராத முடிவு படத்தில் இருந்திருந்தாலும், மரபான முறையில் படம் முழுமையாகியிருக்கும். அப்போ, சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போல ஆகியிருக்குமோ என்னவோ 🙂 அறிவியல் புனைவு என்றால் ரொம்பதான் கஷ்டப்பட வேண்டியிருக்கு…
ஞானம் என்பது ‘நான்’ அழிதல். அதுவே அமரத்துவமும், அமைதியும். அவை ஒன்றே. ஒரு பொருட் பன் மொழி. அவை ஒன்றன் பின் ஒன்று நிகழ்வனவல்ல.
– மைத்ரேயன்